Puthu kavithai 22 (1)

Puthu kavithai 22 (1)

அத்தியாயம் 22

மது, மருத்துவமனையிலிருந்து வந்து ஒரு வாரமாகி இருந்தது. அவளை சென்னை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் காரமடைக்கு அழைத்து வந்திருந்தார் சகுந்தலா, மதியும் மறுபேச்சு பேசாமல் தாயுடனும், மகளுடனும் காரமடை வந்திருந்தனர்.

மது மருத்துவமனையில் இருந்த போதே, கமிஷனர் விசாரணைக்கு வருவதாக கூற, பார்த்திபன், அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

“நான் எல்லாத்தையும் சொல்றதுக்கு ரெடியா தான் மாமா இருக்கேன்…” மது தெளிவாக கூறினாள்.

“இல்ல… இந்த விஷயத்தை வேற மாதிரி நான் கொண்டு போய்க்கறேன்…” என்று அவளது முகத்தை பார்க்காமல் முடிக்க பார்க்க, மது கோபத்தில்,

“நான் எதுக்குமே பயப்படல… அவனுங்களுக்கு பனிஷ்மெண்ட் கிடைக்கணும். ஆனா நீங்க என்னை சொல்ல விடாம இருக்கறத பார்த்தா அந்த பொறுக்கிங்க தப்பிக்க நீங்களே ஹெல்ப் பண்ற மாதிரி இருக்கு…” என்று கடுமையாக கூற, அவளை பாராமல் முறைத்து பல்லைக் கடித்தவன்,

“அவுங்களுக்கு பனிஷ்மென்ட் கிடைக்கும். அவ்வளவுதான். அது எப்படி கிடைக்கும்ன்னு யாரும் ஆராய வேண்டாம்…” என்று எங்கோ பார்த்தபடி பார்த்திபன் கூறிவிட்டு எழ, இருவரின் பனித் திரையை கண்ட பானுமதிக்கு அய்யோடா என்றிருந்தது.

திருமணம் செய்து கொள்ள தயார் என்று பார்த்திபன் கூறிய போதிருந்தே அவன் இப்படியாகத்தான் இருக்கிறான். மதுவின் முகத்தை கூட பார்ப்பதில்லை. அவளிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றாலும், அவளை தவிர்த்து விட்டு வேறெங்கோ பார்த்தபடி தான் அவன் கூறுவது.

இவ்வளவிற்கும் மது அப்போதே பெரியவர்களிடத்தில் கூறிவிட்டிருந்தாள், “தேவையில்லாம மாமாவை இந்த விஷயத்துக்குள்ள இழுக்காத அம்மாச்சி…” என்று தீர்மானமாக கூறியவளை முறைத்தனர், பாட்டியும் அவளது தாயும்!

“உன் கிட்ட இப்ப யாரும் சஜஷன் கேக்கல மது…” கறாராக மதி கூற, மதுவின் முகத்தில் கோபம், அதோடு சேர்ந்த உடல்வலி வேறு!

இந்த நிலையில் இவர்கள் இதையெல்லாம் பேச வேண்டுமா என்று முறைத்தாள். அதே கோபத்தொடு பேச வாயெடுக்க, அவள் சற்றும் எதிர்பார்த்தே இராத அவளது தந்தையின் கோபத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

“மது… இத்தனை நாள் உன் இஷ்டப்படி தான் இருந்த… நீ செய்ய நினைச்ச மாடலிங் தான் பண்ண, நீ பண்ண நினைச்ச கோர்ஸ் தான் பண்ண. உன்னோட ஆசைக்கு நாங்க யாருமே குறுக்க நிக்கல. ஆனா இப்ப இருக்க சிச்சுவேஷனை உன்னால ஹேண்டில் பண்ண முடியாது. சொல்றதை கேட்டுத்தான் ஆகணும் மது…” தந்தை தீர்மானமாக கூறிய பின் அவளால் எதுவுமே பேச முடியவில்லை.

“இந்த நேரத்துல பார்த்திபன் தான் எனக்கு கடவுளா தெரியறாப்ல… உன்னை அவர் கிட்ட பிடிச்சு கொடுத்துட்டா போதும் மதுக்குட்டி… எனக்கு வேற கவலை இல்ல…” உணர்ந்து கூறிய தந்தையை கண்களில் கண்ணீர் பூக்கப் பார்த்தாள் மது.

“ஒருத்தர் பாவப்பட்டு வாழ்க்கை தர வேண்டிய நிலைல நான் இருக்கேன்ல ப்பா…” என்றவளின் குரலில் அத்தனை வலி இருந்தது.

“மதுக்குட்டி… யாரோ ஒருத்தனா அவன்? உன்ர மாமனில்லையா? நல்லதுக்கும் கெட்டதுக்கும் அவன் தான் கண்ணு கடமப்பட்டவன்…” அவளது தலையை கோதிக் கொடுத்த சகுந்தலா, தனது பேத்தியை சமாதானப்படுத்த முயல, மளுக்கென்று வழிந்தது கண்ணீர்!

எந்த சூழ்நிலையிலும் அவள் அழுதவளில்லை.

அது எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அதை எதிர்கொள்ளும் துணிச்சல் அவளுக்கு இருந்தது. அந்த சூழ்நிலைகள் அவளது கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆனால் இந்த திருமணம்?

பார்த்திபனை கணவனென்ற கோணத்தில் அவள் நினைத்தும் பார்த்ததில்லை. அவன் மேல் மிகுந்த மரியாதையுண்டு. அவன் பால் பாசமும் உண்டு. அவன் மட்டுமே மது செய்யும் தவறுகளை எல்லாம் கண்டிக்கும் நிலையிலிருந்ததால் அவன் மேல் மிகவும் கோபம் கொண்டிருந்ததும் உண்டு. ஆனால் அவனை புரிந்து கொண்ட பின் அவனிடம் மட்டுமே பாதுகாப்புணர்வை உணர்ந்ததும் உண்டு.

ஆனால் இதுவரை அவன் மேல் காதல் என்ற உணர்வு தோன்றியிருக்கிறதா என்று கேட்டால் கட்டாயம் இல்லை. இனி தோன்றுமா? அதற்கு சாத்தியம் இருக்கிறதா என்று நினைத்துப் பார்க்கவும் அவளுக்கு தைரியம் இல்லை.

அந்த காதல் என்ற உணர்வு தோன்றாமல் எப்படி திருமணம் செய்வது?

மனதுக்குள் இவ்வளவு குழப்பம் இருந்தாலும் அவளால் அதற்கும் மேல் எதுவும் பேச முடியவில்லை. அதுவரை அவளது முடிவுகளுக்கு துணை நின்றவர்களின் மன நிம்மதிக்காக அதை செய்தேயாக வேண்டிய கட்டாயத்திற்கு தான் ஆளாகி விட்டதை உணர்ந்தாள் மது!

அதன் பின் எதுவும் நிற்கவில்லை.

கமிஷனரிடம் எழுத்துப்பூர்வமாக பார்த்திபன் புகார் தெரிவிக்கவில்லை. ஜெயச்சந்திரனிடம் கூட புகாரை முன்னெடுத்துக் கொண்டு செல்லவில்லை என்று கூறியிருந்தான். அதனால் அவரும் சற்று அவரது பிடியை தளர்த்தியிருந்தார். ஆனால் பார்த்திபன், அவனது வேலையை பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.

அவன் புகார் தெரிவித்தால், கண்டிப்பாக மது விசாரணைக்காக வந்தாக வேண்டும். இப்போதே சற்று கசிந்த செய்திக்காகவே நிருபர்கள் மருத்துவமனையை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அவன் அறிந்திருந்தான்.

இந்த விஷயத்தில் இனிமேலும் மதுவின் பெயர் இழுபடுவதையோ, அவள் எங்கும் இருப்பதையோ இனியும் அவன் அனுமதிக்க முடியாது.

ஆனால் அந்த இருவரையும் அப்படியே விட்டு விடவும் முடியாது.

இதை உணர்வுபூர்வமாக அணுகுவதை விட புத்திசாலித்தனமாக அணுக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தான்.

என்ன செய்வது என்று யோசித்தவனின் கைகளில் தட்டுபட்டது, ரதீஷ் மற்றும் சஞ்சய்யிடம் கைப்பற்றிய செல்பேசிகள்!

****

கட்டு போடப்பட்டிருந்த காலை, டீபாய் மேல் வைத்தபடி சோபாவின் மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டு செல்வி கொடுத்த எலும்பு சூப்பை குடித்தபடி தொலைகாட்சியின் மேல் பார்வையை பதித்திருந்தாள் மது. அவளது உடல் பழையபடி சரியாக வேண்டும் என்று அவளுக்கு அத்தனையும் செய்தபடி இருந்தார் சகுந்தலா. வினோதகன் சென்னையில்தான் இருந்தார். மகளின் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை அங்கிருந்தபடி கவனித்துக் கொண்டிருந்தார் அவர். காரமடையில் தான் திருமணம் என்பதால் பானுமதி இங்கிருந்தபடி கவனித்தார்.

கூடுமானவரை சகுந்தலாவை எதற்கும் அலைய விடாமலிருக்க வேண்டும் என்பதுதான் பார்த்திபனின் எண்ணமும். அதனால், என்ன வேண்டுமென்றாலும் பானுமதி அவனைத்தான் அணுகுவார்.

என்னதான் திருமண வேலைகளை பார்த்தாலும், பார்த்திபனால் அதில் ஒட்ட முடியவில்லை. ஆர்வமும் இல்லை. கடமைக்கென்று அவன் செய்யும் வேலை எவ்வளவு தவறானது என்று அவனது மனசாட்சி அவனை குத்திக் காட்டிக் கொண்டே இருந்தது.

ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தால் அழுதே கரையும் தமக்கை, தாய் என இருபக்கமும் இடி வாங்கியபடி எதுவும் பேசாமல் திருமண வேலைகளுக்கு ஒத்துழைத்தான் பார்த்திபன்.

“கல்யாணம் முடிஞ்சு காரமடைக்கு வர்றியா இல்ல கோயம்புத்தூர்ல இருக்கியா சாமி?” பேச்சுவாக்கில் கேட்டு வைத்த தாயை முறைத்தான் பார்த்திபன்.

“ஏன் அத வெச்சு எதாச்சும் ப்ளான் பண்றியா?” பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்திபன் கேட்க,

“இல்ல கண்ணு… பாப்புக்குட்டிய பிஎஸ்ஜில கூட சேர்த்து விட்ரலாம்… இங்கன்னா கஷ்டம்ல…” தன்னுடைய கேள்விக்கு அவர் காரணத்தை கூற, பார்த்திபனுக்கு அனல் மேல் நிற்பது போலிருந்தது.

“ஏன்? படிப்ப முடிக்கற வரைக்கும் சென்னைலையே இருக்கட்டும்…” என்று அவன் முடிக்கப் பார்க்க, சகுந்தலா விடுவேனா என்றார்.

“அதெப்படி சாமி? பாப்பா அங்கிருக்க, நீ இங்கிருக்க அது சரியா வராது தங்கம். நீ கோயம்புத்தூர் கூட்டிட்டு போய்டு. அங்கன மதுக்குட்டி படிக்கட்டும். உன்கூட இருந்த மாதிரியுமாச்சு. படிப்ப விடாத மாதிரியுமாச்சு…” என்று முடித்த தாயை எரித்து விடுவது போல பார்த்தான்.

“சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா ம்மா?” கடுப்படித்தவனை கண்டுகொள்ளாமல்,

“மதி… நீயும் மாப்பிள்ளையும் அந்த வீட்டுக்கு போய் என்னல்லாம் செய்யனும்ன்னு பார்த்துக்க. செய்ய வேண்டியத குறிச்சுகிட்டு வந்திரு. அப்புறம் புள்ளைக்கு அது இல்ல, இது இல்லன்னு பொலம்ப கூடாதாக்கும் சொல்லிட்டேன்…” மகளிடம் கறாராக பேசுவதாக கணக்கு செய்து கொண்டு அந்த இடத்தை காலி செய்து விட்டார் சகுந்தலா.

பானுமதியும் தோழியின் வீட்டிற்கு போவதாக கூறிவிட்டு நழுவி விட்டார்.

இருந்தால் அவனிடம் யார் பாட்டை வாங்குவது?

இவை எதையும் கண்டும் காணாமல் தன் போக்கில் இருந்தாள் மது!

கண்டும் காணாதது போல இருந்தாலும் உள்ளுக்குள் வெகுவாக பதட்டமாக இருந்தது அவளுக்கு.

அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் தவிர்க்கும் பார்த்திபன் அவளுக்கு புதியவன்!

முன்பும் தவிர்த்து இருக்கிறான் தான், ஆனால் அது அவளது பெற்றோரின் மேலுள்ள கோபத்தால். ஆனால் மாமனென்ற உறவோடு நன்கு பேசி பழகி, அவனது பாசம், அக்கறை, கோபம் என்று அனைத்தையும் அனுபவித்தபின் அவனது இந்த முகம் திருப்பல் அவளுக்கு வெகு ஏமாற்றமாய் இருந்தது, கோபமாகவும் இருந்தது.

திருமணம் வேண்டாமென்று இவளும் மறுத்துவிட்டாள் தான்… ஆனால் பிடிவாதமாக இருக்கும் பெரியவர்களிடமல்லவா இந்த கோபத்தை காட்ட வேண்டும்?! தன்னிடம் காட்டி என்ன புண்ணியம் என்று தான் கேட்க தோன்றியது.

அவன் சற்று ஆறுதலாக இருந்திருந்தாலாவது இந்த திருமணத்தை எதிர்கொள்ள அவளுக்கு தைரியம் இருந்திருக்கும். அந்த தைரியம் மதுவிடமிருந்து முற்றிலுமாக விடை பெற்று இருந்தது அப்போது!

 

error: Content is protected !!