Puthu Kavithai 24

Puthu Kavithai 24

  • admin
  • February 9, 2020
  • 0 comments

24

திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியிருந்தது. பார்த்திபனை பொறுத்தமட்டில் எதுவும் மாறவில்லை. வாரம் ஒரு முறை காரமடை வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். கோவை அவனுக்கு வசதியாக இருந்தது.

மது சென்னையில் படித்த படிப்பை கோவைக்கு மாற்றிக் கொண்டாள்.

திருமணம், விருந்துகள், குலதெய்வ வழிபாடு, கறிவிருந்து என்று அனைத்தும் முடிந்து மதுவை சென்னையிலிருந்து கோவைக்கு மாற்ற மேற்கொண்ட முயற்சிகள் என்று ஒரு மாதம் போனதே தெரியாமல் பறந்தது.

இவற்றை தவிர அவர்களின் வாழ்வில் வேறு எந்த மாற்றமும் வந்துவிடவில்லை.

மது தனது மனைவி என்பதை அவன் மறுக்கவில்லை, மறக்கவில்லை.

பூஜா கூறியது அவனுக்கு நியாயமாகவே பட்டது. தன்னால் மதுவை மனைவியாக ஏற்கவே முடியாது என்ற சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் இந்த திருமணம் கண்டிப்பாக மன்னிக்கவே முடியாத ஒரு தவறு என்பது அவனுக்கு நன்றாக புரிந்திருந்தது.

அவள் சொன்ன அந்த கோணத்தில் மதுவை மனதில் இருத்தி, நினைத்துப் பார்த்தான்.

அவளை மனைவியாக நினைப்பதில் அவனுக்கொன்றும் அத்தனை பெரிய சிக்கலிருப்பதாக அந்த நேரத்தில் தோன்றவில்லை. எதிர்காலத்தில் தோன்றாமலிருக்க வேண்டுமே என்ற பயம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

முகத்தில் மெல்லிய புன்னகை படர்ந்தது. உள்ளே ஒரு இதமான சிலிர்ப்பு. கண்களை மூடி அந்த சிலிர்ப்பை முழுவதுமாக அனுபவித்தான்.

மது அவனுக்காக பிறந்தவளா? இந்த வாழ்க்கை தனக்கு என்ன வைத்திருக்கிறது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அஞ்சலியை ஒரு காலத்தில் ஆத்மார்த்தமாக விரும்பியதாக எண்ணினான். கண்டிப்பாக விரும்பினான். ஆனால் அவளது தேவை வேறு என்று புரிந்த பின்னர், மனம் மென்மையான உணர்வுகளை தொலைத்து விட்டது.

அவள் திருமணமாகி, ஒரு குழந்தைக்கும் தாயாகிய பின்னரும் தன்னால் இன்னொரு பெண்ணிடம் மனதை செலுத்த முடியுமென்று தோன்ற முடியாத காரணத்தால் தான் திருமணத்தை தள்ளிப் போட்டதும்.

ஆனால் இப்போதைய நிலைமை வேறு! மதுவை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம்! ஆனால் அவனாக மதுவை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் தன்னுடைய வாழ்க்கையோடு மதுவின் வாழ்க்கையும் அல்லவா பாதிக்கப்படும்.

அது மாபாதகம்! சரி செய்யவே முடியாத பாவமும் கூட!

இப்போது அவனால் எதிர்காலத்தில் மதுவை மனைவியாக நினைக்க முடியும் என்று தோன்றிய பின் தான் முழுமையாக தன்னை இந்த திருமணத்தில் ஈடுபடுத்திக் கொண்டான்.

ஆனால் யாரிடமும் பெரிதாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

முன்பு ஈடுபாடு இல்லாமல் செய்த வேலைகளை, மனம் தெளிவான பின் ஈடுபாட்டுடன் செய்ய முடிந்தது.

அப்போதும் எதிலும் எட்டத்தான் நின்றான்.

அவனது தாய்க்கும் தமக்கைக்கும் திருமணம் வரை இவன் ஏதும் பிரச்சனை செய்து விடக் கூடாதே என்ற வேண்டுதல். அவர்கள் தயக்கத்துடன் இவனது முகம் பார்க்கும் போதும் கூட எந்த உணர்வையும் காட்டாமல் வேலையை பார்த்துக் கொண்டு போவதைதான் வழக்கமாக கொண்டிருந்தான்.

திருமணம் முடிந்த பின் மற்ற சடங்குகள் என்று இருவருமாக ஆரம்பிக்க, அவன் முறைத்த முறைப்பில் இருவருமே தப்பித்தோம் பிழைத்தோம் என்று காணாமல் போயினர்.

பார்த்திபனின் உணர்வுகள் வினோதகனுக்கு புரிந்தது. அவன் மனைவியாக ஏற்றுக் கொண்டவளை கண்டிப்பாக கைவிட்டு விட மாட்டான் என்று அவருக்கு தெரியும். ஆனால் மற்ற இருவருக்கும் பொறுமை கொஞ்சம் குறைவாக தான் இருந்தது.

விட்டால் பார்த்திபனையும் பிடிக்க முடியாது. மதுவையும் பிடிக்க முடியாதோ என்ற பயம் அவர்களுக்கு.

திருமணம் முடிந்து காரமடை வீட்டிற்கு வந்தவன், மதுவை அவளது அறையில் உறங்க சொல்லிவிட்டு, எப்போதும் போல அவனது மாடியறைக்கு சென்று விட்டான்.

அவனது இயல்பு மாறாத அணுகுமுறை உண்மையில் மதுவுக்கு நிம்மதியாக இருந்தது தான் உண்மை.

திருமணம் என்று முடிவானது முதல் எக்கச்சக்க குழப்பத்தில் இருந்தாள். பூஜாவின் ஆலோசனைகள் மதுவுக்கு சற்று தெளிவை தந்தாலும், பார்த்திபனுடனான திருமணத்தை அவளுக்குள் இன்னுமே குழப்பத்தை ஏற்படுத்தியது.

முதலில் இந்த திருமணத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவளது மறுப்புக்கும் மதிப்பில்லை என்ற மாதிரியான சூழ்நிலை. வெகு வருடங்களுக்கு பிறகு தன்னுடைய பெற்றோருக்கு பார்த்திபனுடனான உறவு சீரடைந்ததால் அவன் பலிகடா ஆக்கப்பட்டு விட்டானோ என்ற குற்ற உணர்வு வேறு!

பார்த்திபன் இந்த திருமணத்தை ஏற்கிறானா அல்லது அவனுக்கு தேவையில்லாத சுமையாக தான் இருக்க போகிறோமா என்ற கவலை அவளை தின்றது.

தான் செய்த தவறுக்கு தண்டனை தான் இந்த திருமணம் என்ற ஆற்றாமை வேறு! இந்த குழப்பத்தில் ரதீஷ், சஞ்சய் பின்னுக்கு போனதுதான் உண்மை!

இத்தனை குழப்பத்தோடு இருக்கும் தன்னுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கேள்வி அவள் முன் மிகப் பெரிதாக தோன்றியது.

அந்த கேள்வியோடு தான் திருமண வாழ்க்கையில் தன்னவனோடு அடியெடுத்து வைத்தாள் மது!

வீட்டிற்கு வந்து விளக்கேற்றியவுடன் அவன் கூறிய முதல் வார்த்தை மிகவும் இயல்பாக, “நீ போய் உன்னோட ரூம்ல இருந்துக்க மது…” என்று கூறிவிட்டு மாடிக்கு போக முயல,

“இன்னைக்கு நாள் நல்லா இருக்குன்னு ஜோசியர் சொன்னாப்ல தம்பி…” சகுந்தலா, மகனை பார்த்து தயங்கியபடியே கூற, அவரை முறைத்தவன்,

“அதெல்லாம் எதுவும் வேண்டாம்…” பல்லைக் கடித்தபடி மேலே போக முயல,

“என்னம்மா சொல்றான்… வேண்டாங்க்றான்…” அவசரமாக அவரது காதை கடித்தார் பானுமதி.

“ஒரு நிமிஷம் பொறுமையா இரு மதி. நான் என்னன்னு பேசி பாக்கறேன்…” என்றபடி மகனை நோக்கி தயங்கியபடியே போனார் சகுந்தலா.

இத்தனை நாட்கள் கழித்து மகன் திருமணம் முடிந்தும் கூட, அந்த சந்தோஷத்தை கூட அனுபவிக்க விட மாட்டேன் என்கிறானே இவன் என்ற கோபம் சகுந்தலாவுக்குள் இருந்தாலும், அதை அவரால் காட்ட முடியாது. மீண்டும் அவன் முருங்கை மரம் ஏறிவிட்டால் இறங்குவானா என்று கூட அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

பிடிவாதக்காரன்!

“இல்ல தம்பி… நல்ல நாளை விட்டுட்டா அப்புறம் கஷ்டம்டா…” மாடியேறிக் கொண்டிருந்தவனிடம் இழுத்தார் சகுந்தலா.

“ம்மா…” என்று பல்லைக் கடித்தவன், “எதுவா இருந்தாலும் நான் பாத்துக்கறேன்… நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருந்தா போதும்…” என்று கடிக்க, வினோதகன் சங்கடமாக தலைகுனிந்து கொண்டார்.

“தம்பி… முறைன்னு ஒண்ணு இருக்குப்பா…” தயவாகவே பானுமதி கூற,

“நீயும் அம்மாவும் ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வெச்ச மாதிரியே, எல்லா விஷயத்துலையும் பண்ணிடலாம்ன்னு நினைக்காதக்கா. நானும் ஒரு மனுஷன் தான். மெஷின் இல்ல. மது என் பொறுப்பு… அதோட விட்டுடு…”

பார்த்திபனுக்கு இதையெல்லாம் பேச அவ்வளவு சங்கடமாக இருந்தது. தயக்கமாக கூட. மனைவியாக ஏற்க முடியும் என்று முடிவு செய்து விட்டானே தவிர, அவனது மனம் இன்னமும் அந்த தயக்கத்திலிருந்து விடுபடவில்லை. மது இருக்கும் சூழ்நிலையில் தான் ஏதாவது தவறாக பேச, அது அவளை மன ரீதியாக இன்னமும் பாதித்து விட்டால் என்ன செய்வது என்ற பயமும் வேறு. இப்படி சூழ்நிலையில் எப்படியெல்லாம் இந்த பெண்கள் யோசிக்கிறார்கள் என்று கோபம் அவனுக்கு!

இந்த விவாதங்களை பார்த்த மதுவுக்குள் இன்னமும் குற்ற உணர்வு அதிகமாகியது. எப்படி பார்த்திபனால் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியும் என்று அவளது மனம், அவனுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தது. சஞ்சய் மற்றும் ரதீஷ் மனதின் மூலைக்கு சென்றிருந்தனர்.

அவளது முகம் போன போக்கைப் பார்த்த பார்த்திபன், “மது… நீ உன்னோட ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு…” என்று அவளை விரட்ட, வேகமாக தலையாட்டி விட்டு அறைக்கு சென்றாள்.

வந்திருந்த விருந்தாளிகள் எல்லாம் கிளம்பியிருந்தனர். இவர்கள் மட்டும் தான் என்பதால் அவனும் சற்று ஆசுவாசமாகி இருந்தான்.

“தம்பி…” என்று பானுமதி மீண்டும் இழுக்க, “அக்கா… தயவு செஞ்சு என்னோட போக்குல விடு…” கறாராக கூறியவனை என்ன செய்வது என்று அவருக்கு புரியவில்லை.

“மாப்பிள்ளைய விடும்மா… ரொம்ப முறுக்காத… ஏன் இவ்வளவு அவசரப்படற? நல்லது கெட்டது தெரியாதவரா நம்ம மாப்ள?” வினோதகன் இதை சொல்லியே ஆக வேண்டியிருந்தது. ஒரு ஆணால் மட்டுமே ஒரு ஆணை புரிந்து கொள்ள முடியும். பெண்களால் அது முடியாது.

பானுமதி அமைதியாக, அதை கண்ட பார்த்திபன், “நான் நாளைக்கு கோயம்பத்தூர் போறேன்…” என்றும் அறிவிக்க,

“இதெல்லாம் உனக்கே நல்லாருக்கா பார்த்தி?” சகுந்தலா தான் கேட்டார்.

“இதுல என்னம்மா நல்லா இல்ல?”

“பங்காளிங்க வீட்டுக்கு விருந்துக்கு போவணும்… கறிவிருந்து போடணும்… குலதெய்வ கோவிலுக்கு போய் பொங்க வைக்கோனும்… மறுவீட்டு அழைப்பு கூட முடியாம இதென்ன சாமி?” சகுந்தலா கிட்டதட்ட புலம்பினார் தான். வேறென்ன செய்ய, ஒவ்வொருவரையும் ஏதாவது ஒன்றை கூறி அடக்கி, அரட்டி வைக்கிறானே?!

“சரி… இதெல்லாம் ஒரு வாராத்துல முடிஞ்சுருமா?” இப்படி கேட்பவன் இவன் ஒருவனாகத்தான் இருப்பான்.

“ஒரு வாரத்துல எப்படி சாமீ முடியும்? ஒரு பத்து பாஞ்சு நாள் வீட்ல இருந்து மதுவ அங்கயிங்க கூட்டிட்டு போனாதான…” என்று அவர் பொறுமையாக எடுத்துக் கூறுவதாக நினைத்துக் கொள்ள,

“சரி பத்து நாள் இருக்கேன். பதினோராவது நாள் நான் கிளம்பிடுவேன்…” என்றான் பிடிவாதமான கறார் குரலில்.

“அப்ப மது?” பானுமதி அவசரமாக கேட்க,

“இப்ப சென்னை போயிட்டு வரும் போது காலேஜ்ல டிசி வாங்கிடலாம். பிஎஸ்ஜி இல்லைன்னா கிருஷ்ணம்மாள்ல சேர்த்துடறேன். அங்க படிக்கட்டும்…” என்று முடித்து விட, பெண் கோவையில் அவனுடன் தான் இருப்பாள் என்பதில் அந்த இருவருக்கும் சற்று நிம்மதியாக இருந்தாலும் இப்படி பிடிவாதமாக இருப்பவனுடன் மதுவின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற பயம்!

ஆனால் அவர்கள் அறியாதது என்னவென்றால், இப்படி பிடிவாதமான பார்த்திபனை கட்டாயப்படுத்தி நிச்சயமாக திருமணம் முடிக்கவே முடியாது என்பதுதான். மனதால் அவனாக ஏற்றுக் கொண்ட பின் தான் திருமணத்திற்கு சம்மதித்தான் என்பதும், மனதால் ஏற்று கொள்ள முடியாது என்று அவன் நினைத்திருக்கும் பட்சத்தில் தலைகீழாக நின்றிருந்தாலும் அவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்க முடியாது என்பதும் இருவருமே உணரவில்லை.

இப்போது அவன் காத்திருப்பது மதுவின் மன மாற்றத்திற்காக… அவளது சம்மதத்திற்காக… அவளுடைய காதலுக்காக! கடந்த கால கசப்புகள் யாவையும் மறந்து, அவளாக அவனை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பார்த்திபனை இந்த குடும்ப வாழ்க்கைக்குள் பிணைத்து வைக்க முடியும் என்பதே இப்போதைய அவனது நிலை!

“தம்பி…” என்று பானுமதி இழுக்க,

“அக்கா… இந்த மேரேஜை பிடிவாதமா நடத்தும் போதே, இதையெல்லாம் நீ எக்ஸ்பெக்ட் பண்ணி இருக்கணும். நான் ரோபோ இல்ல. நீ கல்யாணம் பண்ணுன்னா பண்ணனும்… குடும்பம் நடத்துன்னா நடத்தனுமா? அது என்னால முடியாது. மதுவோட பொறுப்பை நான் எடுத்துக்கிட்டேன். அதோட விட்டுடு. இதுக்கு மேலயும் எல்லாத்தையும் கட்டாயப்படுத்தி நடத்தலாம்ன்னு கனவு கண்டுகிட்டு இருக்காத… மது இப்போதைக்கு நல்லா படிக்கட்டும். பியூச்சர்ல அவ எடுக்கற டெசிஷன் பொறுத்து தான் எது ஒண்ணுமே… இதுக்கு மேல நீ இதுல தலையிடாத. இதே தான் அம்மாவுக்கும்…”

கறாரான குரல். தெளிவாக கூறினான். இதற்கும் மேல் எதிலும் யாரும் தலையிட வேண்டாம் என்று அவ்வளவு பிடிவாதமாக அவன் கூறிய பின் இவர்கள் என்ன பேசுவது?

அதுவுமில்லாமல் மது எடுக்கும் முடிவு தான் தன் முடிவு என்கிறானே… அவளுக்கு இதில் என்ன முடிவெடுக்க தெரியும் என்ற குழப்பம் அந்த இருவருக்கும்.

விதி விட்ட வழி… என்று பெருமூச்சு விட்டவர்கள், அதற்கும் மேல் எதுவும் பேசவில்லை.

பத்து நாட்களில் அனைத்து விசேஷங்களையும் முடித்துக் கொண்டு பதினோராவது நாள், மதுவையும் அழைத்துக் கொண்டு கோவை சென்று விட்டான், உடன் வர இருந்தவர்களையும் மறுத்து விட்டு!

*****

திருமணம் முடிந்து ஆறு மாதம் கழிந்த நிலையில் மது சூழ்நிலையோடு பொருந்திக் கொள்ள துவங்கினாள்.

செல்வி மதுவந்தி என்பது மாறி திருமதி மதுவந்தி பார்த்திபன் என்றானது மட்டுமேயான மாற்றம் எந்த நிலையில் அவளால் நிறைய யோசிக்க முடிந்தது. கட்டுப்பாடற்ற சுதந்திரமுமில்லை. அதே சமயத்தில் அவள் ஒரு சரிவை சந்தித்தபோது எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்த தாயின் அணுகுமுறையும் இல்லை.

வீட்டு வேலைகளுக்கும் சமையலுக்கும் செல்வியையும் சின்னதம்பியையும் அனுப்பியிருந்தார் சகுந்தலா.

எப்போதும் போல தினமும் காலை கல்லூரி. மாலையில் வீட்டுக்கு அருகிலேயே பரதப் பயிற்சி மற்றும் கம்ப்யூட்டர் கோர்ஸ்கள். சிறிய மாற்றம் என்னவென்றால் திருமணத்திற்கு முன் தினசரி உணவுக்கு அவள் திட்டமிட்டதில்லை. சென்னையில் அவளது அன்னை பார்த்துக் கொள்வார் என்றால், காரமடையில் அவளது பாட்டி பார்த்துக் கொள்வார்.

இப்போது தினசரி உணவை மட்டும் அவள் திட்டமிட வேண்டியிருந்தது. முதலில் அவளுக்கு என்ன செய்வது என்பது புரியாமலிருந்தது. காலையில் என்னென்ன செய்வது என்று செல்வியிடம் கூறிவிட்டால், அன்றைய சமையல் முழுவதையும் அவளே பார்த்துக் கொள்வாள்.

நாட்கள் போக போக, அவளுக்கு அந்த வாழ்க்கை பழகிப் போனது.

அவன் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுவதை வழக்கமாக கொண்டிருக்கிறான் என்பதையே கொஞ்ச நாட்கள் கழிந்த பின் தான் உணர்ந்தாள்.

காலையில் அவனது முதல் வேலை வீட்டுக்கு அருகிலிருந்த ஜிம்முக்கு போவதுதான் என்பதையும் தாமதமாக தான் தெரிந்து கொண்டாள்.

கோவை வீட்டுக்கு எப்போதோ ஓரிரு முறை வந்தது தான். அதுவும் சிறிய வயதில். அப்போது பார்த்திபன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் என்று நினைவு. காரமடை அளவுக்கு இல்லையென்றாலும் இதுவும் பெரிய வீடுதான். காரமடை வீடு பழைய தொட்டி கட்டு வீடு என்றால் கோவை வீடு சற்று நவீனம்.

சுற்றிலும் தோட்டத்தோடு கூடிய அழகான வீடு. மது எழ ஏழாகி விடும். எழுந்து, கொஞ்சம் யோகா செய்துவிட்டு கையில் காபியோடு தோட்டத்தை சுற்றி வரும் போதுதான் பார்த்தி ஜிம்மிலிருந்து வருவான்.

ஆரம்பத்தில் அவள் பேச யோசித்ததெல்லாம் கூட நடந்தது.

ஆனால் அவன் அப்படி விடாமல், ஜிம்மிலிருந்து வந்த கையோடு,

“குட் மார்னிங் மதுக்குட்டி…” என்று எப்போதும் போல ஆரம்பித்து,

“நல்லா தூக்கம் வந்துச்சா? மாத்திரை ஒழுங்கா சாப்ட்றியா? கிளாஸ்லாம் எப்படி போகுது?” என்று வரிசையாக கேட்பான். முதலில் கொஞ்சம் தயக்கம் இருந்தது. வாய்ப்பூட்டு திறவாமல் சண்டித்தனம் செய்தது.

அதற்கும், “மது… இது நீயா? ஒரு செக்கண்ட்க்கு நூறு வார்த்தை பேசுவ… இப்ப என்னடா இப்படி அமைதியா இருக்க?” என்று அதற்கும் கிண்டலாக கேட்க,

“ஒண்ணுமில்ல மாமா…” என்பதையே அத்தனை தயக்கத்தோடு தான் கூறினாள்.

அவன் எகிறியது எல்லாம் தாயிடமும் அவனது தமக்கையிடமும் மட்டும் தான். அவளிடம் ரொம்பவும் பார்த்து பார்த்துத்தான் பேசுகிறான் என்பதும் அவளுக்கு புரிந்தது.

“கேசுவலா இருடா…” என்று அவளது தலையைப் பிடித்து ஆட்டிவிட்டு வீட்டுக்குள்ளே சென்றான்.

உள்ளே சென்ற பார்த்திபனையே பார்த்துக் கொண்டு நின்றாள் மது.

காலையில் கொஞ்சம் பேச்சு, இரவு அவன் வீட்டிற்கு வந்ததும் கொஞ்சம் பேச்சு. ஏழரை மணிக்கு அவன் வந்தானென்றால்,

“ம்ம்… இன்னைக்கு என்ன மேடம் நடந்தது?” இரவுணவை எடுத்துக் கொண்டு சோபாவில் அவளருகே அமர்ந்து, அன்று நடந்த அத்தனையும் ஒப்பிக்க செய்து விடுவான்.

“ஆடு, மாடு, கோழி எல்லாமே தான் நடந்தது மாமா…” என்று அவள் சிரிக்க, ஒரு நொடிக்கும் மேல் அவள் மேல் அவனது பார்வை நிலைத்தது.

“அந்த ஆடு மாடு… கூட நீயும் நடந்தன்னு சொல்லு…” பதிலுக்கு அவன் கிண்டலடிக்க,

“நான் இல்ல… நீங்கதான்…” அவளும் விடவில்லை.

“சரி… சரி… அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…” என்று அவன் சிரிக்க, உடன் அவளும் சேர்ந்து சிரித்தாள்.

பார்த்திபனின் இயல்பான குணத்தை அறிந்து கொண்டது இது போன்ற நேரங்களில் தான்.

வெளியில் இறுக்கமாக இருப்பதை போல அவன் காட்டிக் கொண்டாலும், இயல்பில் அவன் அப்படி கிடையாது என்பதை அவள் திருமணத்திற்கு முன்னரே உணர்ந்திருக்கிறாள். இப்போது திருமணமான பிறகு, அதை இன்னமும் உறுதி செய்து கொண்டாள்.

“இன்னைக்கு கிளாஸ்ல…” என்று ஆரம்பித்தால், அனைத்தையும் ஒப்பித்து விடுவாள்.

கல்லூரி கதை, டான்ஸ் கிளாஸ் கதை, கம்ப்யூட்டர் கிளாஸ் கதை என அனைத்தும் இப்படித்தான் அவனை வந்து சேரும்.

அவனும் தன்னுடைய அன்றைய அனுபவங்கள் அனைத்தையும் அவளிடம் கூறுவான். அவள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை விட, அவளுடைய தினசரி நடவடிக்கைகள் அவனுக்கு தெரிந்தாக வேண்டும் என்ற எண்ணம் தான். அதையும் அவள் அறியாமலே நடத்திக் கொள்வான்.

கொஞ்சம் கொஞ்சமாக மது தன்னுடைய இயல்பை மீட்டெடுத்தாள்… அதாவது பார்த்திபன் அவளை மீட்டெடுக்க செய்தான், எதுவும் செய்யாமலே, இயல்பாக, இயற்கையாகவே அவள் பழையபடி மாறுமாறு பார்த்துக் கொண்டான். முக்கியமாக பழைய விஷயங்களை, நடந்த நிகழ்வுகளை அவன் பேசுவதே இல்லை. மற்றவர்களையும் பேச விட்டதில்லை. தனிமையில் அவள் இருக்க அவன் அனுமதித்ததுமில்லை.

கல்லூரி முடிந்தால் நடனம், நடனம் முடிந்தால் கம்ப்யூட்டர் வகுப்பு, அவ்வப்போது நீச்சல், யோகா, ஜூம்பா என்று அவளாகவே சுற்றுமாறு பார்த்துக் கொண்டான்.

அவள் தனியாகத்தான் போவாள் என்றாலும், கூடவே அவனது நம்பிக்கைக்குரிய டிரைவர் இருந்தார்.

ஒவ்வொரு வகுப்புக்கு சேர்த்து விடும் போது மட்டும், பார்த்திபன் நேரே வருவான். முழுவதுமாக அவன் ஆராய்ந்த பின்னர் மட்டுமே அவளை அந்த வகுப்பில் சேர அனுமதிப்பான்.

ஆனால் அதற்கு பின்னர் எங்கும் அவன் வந்ததில்லை. ஆனால் டிரைவர் துணையில்லாமல் எங்கும் அவள் போனதில்லை.

திருமணத்திற்கு முன் அவளது தினசரி செயல்கள் என்னவோ, அது எதுவும் இல்லாமலில்லை என்ற அளவுக்கு இருந்தது. நடுவில் சற்று அபஸ்வரமாகிதால் எதுவும் முடிந்து விடவில்லை என்று அவளாகவே உணர செய்தான். அவளது குற்ற உணர்விலிருந்து வெளிவர அவனால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்தான் பார்த்திபன்.

அனைத்துமாக இருந்தான்… கணவன் என்பதை தவிர!

******

அன்று கல்லூரி விடுமுறை நேரம். திருமணத்திற்கு பின் வந்த முதல் விடுமுறை. வெளி வகுப்பை எல்லாம் முடித்து விட்டு மது வீடு வந்து சேர்ந்த போதே பார்த்திபன் வீட்டிலிருந்தான், அவனுக்கு விருப்பமான நெட்ப்ளிக்ஸோடு! இரவு வெகு நேரம் அமேசான் பிரைம், நெட்ப்ளிக்ஸ் என்று நேரத்தை ஓட்டுவது பார்த்திபனின் வாடிக்கை.

இரவுணவை இருவருமாக உண்டு விட்ட பிறகு சற்று நேர பேச்சு. அவ்வளவுதான். அதன் பின் அவளது அறைக்கு சென்று விட்டால் திரும்பவும் காலை தான் பார்ப்பாள்.

இந்த நிரலை பார்த்திபனும் மாற்றவில்லை.

அந்த இடைவெளியை மதுவுக்கு தர வேண்டியது அவசியம் என்று அவனது மனதுக்கு பட்டது.

“என்ன மாமா… இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டீங்க போல இருக்கே…” என்றபடி சமையலறைக்கு சென்றாள்.

செல்வி சமைத்து வைத்து விட்டு செல்வதை, மேஜையில் அடுக்குவது இவள் வேலை.

பார்த்திபனுக்கு பரிமாறியபடி உணவுண்பது அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகி இருந்தது.

“கொஞ்சம் டயர்ட்டா இருந்துது மது… அதான் வந்துட்டேன்…” என்று கொட்டாவி விட்டவனை பார்க்கும் போது அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

தேவையா இவனுக்கு? இப்படியொரு வாழ்க்கை வாழ வேண்டுமா?

அவளது மனதில் எப்போதும் தோன்றும் கேள்வி.

இப்போதும்!

மேஜை மேல் ஹாட்பாக்ஸை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள், அதை விடுத்து, அவனருகில் வந்து, “உடம்பு சரியில்லையா?” என்று கேட்டபடி அவனது நெற்றியில் கை வைத்துப் பார்க்க, அவளது கையை விலக்கி விட்டான்!

“ஒண்ணுமில்ல மது… ஜஸ்ட் கொஞ்சம் டயர்ட்… அவ்வளவுதான்…” என்று கூற, அவனை முறைத்துப் பார்த்தாள் மது!

“ஏன்? இப்ப நான் தொட்டுப் பாக்க கூடாதா?” அவளது கையை விலக்கிய அவனது செய்கையை கண்டு அவளுக்கு கோபமாக இருந்தது.

புன்னகைத்தான்.

“நீ கவலப் படற அளவுக்கு எல்லாம் பெரிய விஷயமில்ல… போய் டிபன் எடுத்து வை மது… பசிக்குது…” என்று அவளை அனுப்ப முயல, அவனை முறைத்தபடியே மேஜையை நோக்கிப் போனாள்.

“ஏன்? நான் தொட்டுப் பார்த்தா என்ன? காய்ச்சலா இருக்கான்னு தான பாக்கறேன். அப்படியே கற்பு பறிபோய்டுமா இந்த கற்புகரசருக்கு… ரொம்ப பண்ணாதீங்க…” தொம் தொம் மென்று பாத்திரத்தை வைத்தபடியே கத்த,

‘அடப்பாவி… என்னது… கற்பா?’ ஜெர்க்கானது அவனுக்கு! பேசாமல் புன்னகையோடு மேல் பார்வையாக அவளை பார்த்தபடி, இன்னொரு கண்ணை ஸ்க்ரீனில் வைத்திருக்க, அவளது எரிச்சல் இன்னும் கொஞ்சம் அதிகமானது.

“கத்திட்டு இருக்க நான் என்ன லூசா?”

“அது எனக்கு எப்படி தெரியும் மதுக்குட்டி?” கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் கூற, கரண்டியை எடுத்துக் கொண்டு அவன் முன்னால் வந்து நின்றாள் காளி தேவியாக!

“என்ன சொன்னீங்க?” என்று மிரட்ட, எழுந்து நின்றவன்,

“இந்த பொண்டாட்டிங்களுக்கு மட்டும் எப்படித்தான் இந்த மாதிரி வெப்பன்ஸ் மாட்டுமோ?” என்று சிரித்தவாறு, அவளது கரண்டியை அவளறியாமல் வாங்க, அவளும் அதை கொடுத்தாள், இவன் என்ன கூறுகிறான் என்ற குழப்பத்தோடு!

“ஓய் பொடுசு… உக்கார போறியா? இல்லைன்னா நின்னவாக்குலையே சாப்பிட போறியா?” என்றவனின் குரலில் கேலி விரவிக் கிடந்தது.

“என்னது? பொடுசா?” என்று கொதித்து எழுந்தவள், “வேணா… வம்பு பண்ணாதீங்க…” என்று ஒற்றை விரலை நீட்டியபடி சிறு பிள்ளையாக மிரட்ட,

“அப்படித்தான் பண்ணுவேன்… என்னடி பண்ணுவ?” வேண்டுமென்றே அவளை இன்னமும் வம்பிழுத்தான் பார்த்தி.

“எல்லாம் கொழுப்பு… உடம்பு முழுக்க திமிரு…” பல்லைக் கடித்துக் கொண்டு அவள் கூற,

“செம செம… அதே தான்…” என்று இன்னமும் அவளது கோபத்தில் எண்ணையூற்ற, அவளுக்கு முன்னே இருந்த டம்ளரை அவன் மேல் வீச குறி பார்த்தாள்.

“பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்… நோ வயலன்ஸ்…” வடிவேலுவின் பாணியில் இன்னமும் அவளை கிண்டலடிக்க, அந்த டம்ளரை நங்கென்று மேஜை மேல் வைத்துவிட்டு எழுந்தவள், அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த பார்த்திபனின் தலைமுடியை கற்றையாக பற்றியபடி,

“ஒழுங்கா இருக்கீங்களா?” என்று ஆட்ட, இந்தளவுக்கு எதிர்பாராதவன், அவளிடமிருந்து தப்பிக்க முயன்றபடி, எழ, அவளோ விடாமல், “சொல்லுங்க…” என்று ஆட்ட,

“அடியே… நான் ஒழுங்கா தான இருக்கேன்?” என்று வலியில் கத்த,

“லொள்ளு பேச மாட்டேன்னு சொல்லுங்க…” இன்னும் கொஞ்சம் சேர்த்து ஆட்ட, சட்டென, மதுவின் கையை இறுக்கமாக வளைத்துப் பிடித்தவன், முதுகொடு இழுத்து அணைத்தபடி அவளது கைகளை சிறை செய்தான்.

ஒரே நொடியில் நிகழ்ந்து விட்ட இந்த நிகழ்வில் அதிர்ந்தாள் மது!

வம்பிழுப்பதும், வழக்காடுவதும் திருமணத்துக்கு பின் எப்போதும் நிகழும் நிகழ்வென்றாலும் இந்த நெருக்கம் புதிது.

அதிர்ந்து விழித்தவளின் கண்களை பார்த்தவன், அவளது கைகளை விட்டுவிடாமல்,

“இப்ப என்ன சொல்ல வர்ற?” என்று கேட்க, உடல் நடுங்க எச்சிலை விழுங்கினாள் மது.

“இ… இல்ல… எ… என்ன சொல்ல?” திணற, அவளது அந்த திணறலை ரசித்துப் பார்த்தான்.

“என்னமோ சொல்லிட்டு இருந்த?” அவளை விடாமல் கேள்வி கேட்க, அவன் என்ன கேட்கிறான் என்பதே மறந்து போனது மதுவுக்கு!

“என்ன?” என்று சத்தமாக யோசித்தாள். எதற்காக அவனிடம் கத்திக் கொண்டிருந்தோம் என்பதே மறந்து போய் இருந்தது.

“என்ன… என்ன?” வேண்டுமென்றே தான் அவளிடம் வம்படித்துக் கொண்டிருந்தான். அவனது கேலி புரியவும், தன்னை சுதாரித்துக் கொண்டு,

“ஒண்ணுமில்ல…” என்று உதட்டை வளைக்க,

“ஒண்ணுமில்லாமயா இவ்வளவு நேரம் கத்தின?” என்று புன்னகையோடு சற்று நிறுத்தியவன், “பொண்டாட்டி…” என்று முடிக்க,

“அடடா… அதிசயம் தான்…” இப்போது கேலி செய்வது அவளது முறையாயிற்று, அதுவும் அவனின் கைவளைவில் நின்று கொண்டு தான்.

“என்ன அதிசயம்?”

“இல்ல… என்னை உங்க பொண்டாட்டின்னுலாம் ஞாபகம் வெச்சு இருக்கீங்கல்ல.. பெரிய விஷயம் தான் மாமா…” உண்மையில் அவளுக்கு சற்று வருத்தம் தான். அவனது மனைவியாக கடமையை செய்ய வேண்டும் என்ற உறுத்தல் சில நாட்களாக அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் அவளது தாயும் கூட!

அவருக்கு மகள் குடும்பம் நடத்தும் அழகை பார்த்து கன்னாபின்னாவென கோபம்! ஒரு வாரம் முன்பு வந்தவர், கோபம் தாளாமல் மகளை தனிமையில் கடியோ கடியென்று கடிந்து வைத்தார் பானுமதி!

“என்ன மது… உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?” எடுத்த எடுப்பிலேயே அவர் இப்படி கேட்கவும், முறைத்தாள் மது.

“ஏம்மா? உனக்கு ஸ்டாக் இல்லையா?” என்று அவள் கேட்க,

“இந்த கிண்டலுக்கொன்னும் குறைச்சலில்ல… இதெல்லாம் உனக்கே நல்லாவா இருக்கு?”

“ம்மா.. சொல்றதை தெளிவா சொல்லும்மா…”

“நீயென்ன சின்ன பிள்ளையா மது?”

“ஷப்பா… முடில…” அலுத்துக் கொண்டாள் அவள்.

“அவன் தான் பிடிவாதக்காரன்… ஒதுங்கியே இருக்கான்னா, நீயும் இப்படியே இருப்பியா?” கோபமாக அன்னை கேட்க, மது பதில் கூறத் தெரியாமல் விழித்தாள். “என்ன மது… பதிலே பேச மாட்டேங்க்ற?” அதற்கும் இடி வாங்கினாள்.

உண்மையில் பார்த்திபனுடனான இந்த வாழ்க்கை இதுவரை அவளுக்கு எளிதாக இருந்தது ஆனால் சில நாட்களாக உறுத்தல்! படிக்க ஏதுமில்லை… நடன வகுப்பு மற்றும் சில வகுப்புகள் மட்டுமே. அதனால் சிந்திக்க அதிக நேரமிருந்தது. பார்த்திபனுக்கு இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்ற எரிச்சலில் இருந்தவளுக்கு தாயின் குத்தல் மொழிகளை கேட்டு இன்னமும் எரிச்சலாக இருந்தது.

“இப்ப என்ன பண்ணனுங்கற?”

“நான் என்ன சொல்றது? இப்படியே தத்தி மாதிரி இருந்து உன்னோட வாழ்க்கைய வீணாக்காத பாப்பா. அதை தான் நான் சொல்ல முடியும்…”

“இதுல நான் என்ன பண்ண முடியும்? தேவை இல்லாம மாமா தலைல என்னை கட்டி, அவரோட லைஃப் தான் இப்ப வீணாச்சு. எல்லாம் நீங்க பண்ணிட்டு என்னை ஏன் குவஷின் பண்றீங்க?”

ரொம்பவுமே எரிச்சலாக இருந்தது.

“சரிம்மா எதுவும் கேக்கல… நீயும் இப்படியே இரு… அவனும் இப்படியே இருக்கட்டும்… ரொம்ப அழகா விளங்கிரும் குடும்பம்…”

அவர் கடுப்படித்தது இன்னமும் அவளை மிரட்டிக் கொண்டிருந்தது! அந்த எரிச்சலில் தான் தன்னை மனைவியாக கூட நினைக்கிறானா, அதிசயம் தான் என்று கேட்டு விட்டாள். ஆனால் பார்த்திபனுக்கு எது தன்னை தடுக்கிறது என்பது புரியவில்லை.

“அதனால தான் வெப்பன்ஸ தூக்கிட்டியா?” என்று சிரித்தபடி கேட்டவன், அவளை தன்னிலிருந்து பிரித்தபடி,

“சாப்ட்டுட்டு போய் சீக்கிரம் படுடி.. லேட்டாகுது…” என்று தட்டை நோக்கிப் போக, அவனை எரிச்சலாக பார்த்தாள்.

“அது எனக்கு தெரியும்…” கடுகடுவென்று கூறியவள், அதே கடுப்பில் இரவு டிபனை முடித்து விட்டு அறையை தஞ்சமடைந்தாள்.

தங்தங்கென்று அதிர்ந்து நடந்தபடி சென்ற அவனது மனைவியை பார்க்கையில் அவனுக்குள் ஏதோவொரு சொல்ல முடியாத உணர்வு. அதிலும் அவனது கைவளைவிற்குள் நின்றவளை பார்த்தபோது அந்த உணர்வு உச்சத்தை எட்டியிருந்தது.

இதுவரை அந்த உணர்வை அனுபவித்ததில்லை.

இப்போது சுகமாக அனுபவிக்க தோன்றியது!

இதற்கு பெயர் தான் காதலா?

காதல் தான்…

அவனது மனைவியை காதலித்துக் கொண்டிருந்தான் அவன்! இதனால் தான் காதல் தோன்றியது என்று வரையறுத்துக் கூற முடியாவில்லை. இதனாலெல்லாம் காதல் பூக்கும் என்று உறுதிமொழியும் கொடுக்க முடியவில்லை. ஆனால் காதல் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருப்பது உண்மை!

அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே!

error: Content is protected !!