Puthu Kavithai 25

25

முக்கியமான திருமண நிகழ்ச்சிக்காக காரமடை வந்திருந்தனர் மதுவும் பார்த்திபனும்! வீடு அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.

திருமணத்திற்கு பின் இருவருமாக சேர்ந்து போகும் முதல் நிகழ்ச்சி. படித்துக் கொண்டிருப்பதால் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அவன் அழைத்துக் கொண்டு வந்ததில்லை. முதலில் சொல்லிப் பார்த்த சகுந்தலாவும் இப்போதெல்லாம் அவனது விருப்பதிற்க்கு விட்டு விட்டார்.

ஆனால் அவனே விடுமுறை என்பதால் ஒன்று விட்ட தம்பியின் திருமணத்திற்கு மதுவோடு வருவதாக கூறியபோது சகுந்தலாவுக்கு தரையில் கால் பாவவில்லை.

ஒரு புறம் சமையல்… மறுபுறம் பெருமை பீற்றல் என்று வெகு பிஸி அவர்! இன்னும் விழாவன்று பேத்தியை அலங்கார பூஷிதையாக அழைத்துப் போவதை பற்றிய கனவு வேறு!

“அம்மாச்சி… சேலையெல்லாம் கட்ட முடியாது…” பிடிவாதமாக மது மறுத்தபோது தான் அவர் வலுக்கட்டாயமாக கீழிறங்கினார்.

“மதுக்குட்டி தங்கமில்ல… சேலை கட்டியே ஆவோனும் கண்ணு… நம்ம பங்காளிங்க… நாம தான வான்னு எல்லாரையும் முன்ன நின்னு கூப்பிடணும்?”

வேறு வழி தெரியாமல் மருமகளோடு பேத்தியுமாகிய மதுவிடம் கெஞ்சத் துவங்கியிருந்தார்.

“இல்ல அம்மாச்சி… எனக்கு சேலை இடுப்புலையே நிக்காது. அதோட கட்டறது ரொம்ப கஷ்டம்…” மதுவும் அவள் பங்குக்கு கெஞ்ச, அதை பார்த்துக் கொண்டிருந்த செல்வி,

“பாப்பாவுக்கு நான் கட்டிவிடறேன் பெரியாத்தா…” என்று வான்ட்டடாக தலையை கொடுக்க, மது அவளை முரைத்தாள்.

‘அடியே…’ என்று எண்ணிக் கொண்டு!

“பாரு… செல்வி கூட அழகா கட்டி விடுவா… சீக்கிரம் போய் ரெடியாகு!” என்று மதுவை விரட்ட, முணுமுணுவென்று முணுமுணுத்தபடி போனாள்.

அனைத்தையும் மாடியிலிருந்து சின்ன சிரிப்போடு பார்வையிட்டுக் கொண்டிருந்தான் அவளது கணவன்.

கோவையிலிருப்பது போல, காரமடையில் தனித்தனி அறையிலிருக்க முடியாது என்பதால், இருவரும் ஒரே அறையில் தான் இருந்தனர்.

“என்ன சிரிப்பு?” கோபம் மாறாமல் மது கேட்க, தலைக்கு ஹேர்ஜெல் அப்ளை செய்தபடியே, “ஒரு சாரி கூட கட்டத் தெரியாம, என்னா வாயி…” தலையை கையால் கோதிக் கொண்டு, நக்கலடிக்க,

“ம்ம்ம்… கட்டிப் பாருங்க அப்புறம் தெரியும்…” என்றவள், உடைமாற்றுமறைக்கு சேலையை எடுத்துக் கொண்டு போக,

“ம்ம்ம்… கட்டிட்டாப் போச்சு…” தயாராகியபடியே அவன் குரல் கொடுக்க,

“விளையாட்டா? போங்க… போய் புள்ளக் குட்டிய படிக்க வைங்க…” உள்ளிருந்தபடியே குரல் கொடுக்க,

“கண்டிப்பாக… நிச்சயமாக…” என்று சிரித்தான்.

“என்ன கண்டிப்பா?” என்றபடி உள்ளிருந்து வந்தவளை பார்த்தவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரு மாதிரியாக அள்ளி முடிந்து கொண்டு வந்திருந்தாள் மது.

“இப்படியேத்தான் வர போறியா மது?” சிரிப்பை அடக்கிக் கொண்டு இவன் கேட்க,

“உங்களுக்கு சிரிப்பா இருக்கா?” ஒரு கையில் புடவையை வாரிப் பிடித்தபடி கேட்க,

“இப்படி நின்னுட்டு கேட்டா…” என்று அருகில் வந்தவன், அவளது கையிலிருந்த புடவையை கீழே வழிய விட்டு, சேலை நுனியை கையிலெடுத்தான்.

அதுவரை இயல்பாக இருந்த மதுவுக்கு, மனதுக்குள் படபடப்பு!

“என்ன பண்றீங்க?” சிறிய குரலில் கேட்டவளை நிமிர்ந்து பார்த்தவன்,

“சேலை கட்டிவிட வேண்டாமா?” என்று கேட்க,

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்… செல்விய மட்டும் வர சொல்லுங்க…” என்று அவனது கையிலிருந்த சேலையை வாங்க முயல, அவளிடம் கொடுக்க மறுத்தவன்,

“நான் கட்டி விடறேன்டி… நல்லா இல்லைன்னா சொல்லு… செல்விய வர சொல்றேன்…” என்று மிகவும் தீவிரமான குரலில் கூற, அதற்கு பதில் கூறவில்லை மது.

சேலையை வாங்கிவிட்டானே தவிர, அவனுக்குள் தொம் தொம்மென்று இருதயம் மத்தளமடித்துக் கொண்டிருந்தது.

வெண்வாழைத் தண்டாக கைகள், பளிங்கு இடை என்று அவனை சோதிக்க எத்தனையோ! அத்தனையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மிகவும் நல்லவனாக சேலையை மட்டும் கட்டி விட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டான்.

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்

அடடா பிரம்மன் கஞ்சனடி

சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்

ஆஹா அவனே வள்ளலடி

கையை குறுக்காக வைத்து மறைத்துக் கொண்டு நின்றவளின் இடையில் சேலையின் ஒரு நுனியை அவன் சொருக, மதுவுக்குள் நடுக்கம்! அதிலும் நெருக்கமாக அவனை பார்க்கும் போது மனம் தத்தளித்தது.

ஆனால் கட்டிவிட்டுக் கொண்டிருந்தவன், தன்னுடைய உணர்வுகளை எல்லாம் மறைத்துக் கொண்டு, ஒன்றுமறியாதவன் போல அவனது வேலையை பார்த்துக் கொண்டிருக்க, ஆங்காங்கே கை பட்டதில் மது நெளிந்தாள்.

“வேணாம் மாமா… செல்விய வர சொல்லுங்க..” திக்கித் திணறி அவள் கூற, மடிப்பை சரிபார்த்துக் கொண்டே,

“முடிச்சாச்சு… கொஞ்சம் வெயிட் பண்ணு…” என்றவன், “இதை இங்க சொருகு…” என்று அவளது கையில் வயிற்றில் சொருக வேண்டிய மடிப்பை தர,

“அதையும் நீங்களே பண்ணிடுங்களேன்…” கேலியாக கேட்டாள்.

“போனா போகுதுன்னு கட்டி விட்டா, அதை பண்ணு… இத பண்ணுன்னு சொல்றியா?” என்று கேட்டு தலையில் கொட்ட,

‘ஷப்பா… இந்த மாமாவை வெச்சுட்டு நான் என்ன தான் பண்ணப் போறேனோ?’ என்று நினைத்துக் கொண்டு தலையிலடித்துக் கொண்டவள்,

“ஆமா… இவ்வளவு சூப்பரா கட்டி விடறீங்களே? என்ன விஷயம்? எனக்கு தெரியாம செக்கண்ட் சேனல் ஓட்டிட்டு இருக்கீங்களா?” என்று கேட்க,

“இருக்க ஒரு சேனலையே பாக்காம இருக்கேனாம்… இதுல ரெண்டாவது வேற?” என்று முணக,

“சத்தம் கேக்கல…” சிரித்தவள், “மாம்ஸ்… யாருக்காவது கட்டி விட்டு இருக்கீங்களா? இவ்வளவு பெர்ஃபெக்ட்டா பண்றீங்க?” குரலில் கேலி விரவ கேட்க,

“அப்கோர்ஸ்… காலேஜ் படிக்கும் போது இது பார்ட் டைம் ஜாப்டி பொண்டாட்டி…” என்று பார்த்திபன் சிரிக்க, மது, வாய் மேல் கைவைத்து மூடிக் கொண்டாள்.

“அடப்பாவி நீ நல்லவன்னு ஊரே நம்புது மாமா…”

“டிராமால பசங்களுக்கு சாரி கட்டி விட்டா கெட்டவனா?” நமுட்டு சிரிப்போடு, சேலையை கீழே சரி செய்தபடி அவன் கேட்க,

“அதான பாத்தேன்… நீயாவது திருந்த போறதாவது?” முனகினாள்.

“ஓகே… ஃபினிஷ்ட்…” என்றவன், தள்ளி நின்று மதுவை பார்த்தான். அரைகுறையாக தெரிந்ததை வைத்து அவன் கட்டி விட்டதிலேயே அத்தனை அழகாக இருந்தாள்.

மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து

ரவிவர்மன் எழுதிய வதனமடி

நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்

சிற்பிகள் செதுக்கிய உருவமடி

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்

நீதான் நீதான் அழகியடி

இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து

என்னை வதைப்பது கொடுமையடி

பார்த்திபனுக்குள் ஹரிஹரன் சொல்லாமல் வந்தமர்ந்து கொண்டு பாட துவங்கியிருந்தார், ‘அன்பே அன்பே கொல்லாதே’ என!

மெல்லிய மேக்அப், தளர்வாக பின்னிய கூந்தல் என அத்தனை அழகாக இருந்தவளை பார்க்கும் போது ஏதேதோ செய்யத் தோன்றியது. அவள் ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து வலம் வந்ததையும் பார்த்திருக்கிறான். அப்போதும் கூட எந்த நினைவும் தோன்றியதில்லை. ஆனால் இப்போது சேலையில் பார்க்கும் போது, அத்தனை அழகாக தோன்றினாள், அவனது கண்களுக்கு!

அவனது மனத் தடைகள் எல்லாம் விலகி நிற்பது போல தோன்றியது.

அவனது தடுமாற்றத்தை உணராமல், நகைகளை அணிந்தவள், கண்ணாடி வழியாக, அவனை பார்த்து,

“எல்லாம் ஓகேவா மாமா?” என்று கேட்க, அவன் பதில் கூறத் தெரியாமல் கண்ணாடி வழியே தெரிந்த அவளது பிம்பத்தை பார்த்தான்… பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவனுடைய மனைவி!

முற்றிலும் உரிமையான மனைவி!

“ம்ம்ம்… ஓகே…” என்றவனுக்கு அதற்கும் மேல் அங்கிருக்க முடியவில்லை. அடுத்ததாக இன்னொரு அடி எடுத்து வைத்து விடலாம். ஆனால் அவள் இன்னும் சிறு பெண் என்ற நினைவு எங்கேயோ ஒட்டிக் கொண்டிருந்தது போல, “சரி… ரெடியாகிட்டு கீழ வா…” என்று கூறிவிட்டு பதில் எதிர்பாராமல் வெளியேற, அதுவரை அவனது கண்களிலிருந்த மயக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த மதுவுக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது.

பிடிக்காமல் தான் விழுங்கி விடுவதை போல பார்த்தானா?

பிடிக்காமல் தான் இழைந்து இழைந்து சேலை கட்டி விட்டானா?

பிடிக்காமல் தான் இத்தனையும் செய்கிறானா?

பிடித்திருக்கிறது. ஆனால் தள்ளியே நிற்கிறான் என்றால் என்ன காரணமாக இருக்கக் கூடும்?

அவளுக்கு புரியவில்லை. ஆனால் அவன் ஏன் அவளை நெருங்க வேண்டும் என்று நினைக்கிறாள் என்பதும் தெரியவில்லை. வெறுமனே பானுமதிக்காகவா?

அவளுக்கே அந்த தெளிவில்லாதபோது அவனை என்னவென்று கேட்பது.

கணவன் என்பதற்காகவோ, மனைவி என்பதற்காகவோ காதலித்தேயாக வேண்டும் என்பது கட்டாயமா என்ன? ஆனால் அவளிடமிருந்து பார்த்திபன் ஏன் தள்ளி நிற்கிறான் என்ற காரணத்தை தெரிந்து கொண்டாக வேண்டும்!

வெளிப்படையாக அவனது கண்களில் மயக்கத்தை பார்த்தபிறகு, மதுவுக்கு தவித்தது. அவனது சட்டையை பிடித்து,

‘நீ என்னை லவ் பன்றியா.. இல்லையா மாமா?’ என்று கேட்க வேண்டும் போல!

விட்டால் அவனை காதலித்தேயாக வேண்டும் என்று கழுத்தில் கத்தி வைத்து விடுவாள் போல… அந்தளவு தவிப்பு!

ஏன் இவ்வளவு தவிக்க வேண்டும்?

அப்படியென்றால் நீ உனது கணவனை காதலிக்கிறாயா என்று மனசாட்சி கேள்வி கேட்டது.

காதலா?

தானா?

அதுவும் பார்த்திபனையா?

அந்த வார்த்தைக்கே அர்த்தம் சரியாக புரியாத வயதில், காலத்தில், காதலென்ற பெயரில் கயவனொருவன் ஏமாற்றியதை என்ன சொல்வது?

அது காதலென்றால் இப்போது இவள் உணர்வது?

அவளுக்கு புரியவில்லை.

மஞ்சள் கயிறு மேஜிக் நடந்துதானாக வேண்டும். வேறு வழியில்லை என்று தான் இந்த பந்தத்துக்குள் அடியெடுத்து வைத்தாள். மஞ்சள் கயிறு மேஜிக் நடக்க இருவருக்கும் காதல் அவசியமா? தேவையில்லையே!

ஒரு ஆண்… ஒரு பெண்!

பயாலஜிக்கல் கனக்ஷன் அவ்வளவுதானே!

இதற்காக உறவுகளை ஏன் ரொம்ப அதிகமாக ரொமான்டிசைஸ் செய்ய வேண்டும்?

இயல்பாக எடுத்துக் கொண்டு போகலாமே!

மனதுக்குள் எக்கச்சக்கமான குழப்பம்.

ஆனால் அவள் அறியாதது ஒன்று உண்டென்றால், அது காதல் இதுபோன்ற புத்திசாலித்தனங்களுக்கு அப்பாற்பட்டது என்பதுதான்! காதல் வயபட்டுவிட்டால் அதி புத்திசாலி கூட அடி முட்டாள் தான்.

அந்த முட்டாள்தனங்களுக்கு அளவும் எல்லையும் இல்லை என்பதும்… அந்த முட்டாள்தனமான காதல் எதை செய்யவும் தூண்டும் என்பதையும் இவள் அறியவில்லை! அது எந்த வகை காதலாக இருந்தாலும் அப்படித்தான்!

***

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பார்த்தி அவனது தொழில் நிமித்தமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்க, இம்முறை பானுமதியை மதுவின் துணைக்கு இருத்தி விட்டு சென்றிருந்தான்.

தன்னை தனியாக விட்டு சென்ற பார்த்திபன் மேல் அத்தனை கோபம்!

அவனுடனே அத்தனை நாட்களை கழித்தவளுக்கு, தனியாக இருக்க முடியவில்லை. அவனது கேலியாகட்டும், குறும்புத்தனமாகட்டும், அதை அனுபவித்து பழகி விட்டவள், அவை எதுவும் இல்லாமல் களையிழந்து போனாள். அவன் இல்லாமல் அவளது உலகம் சோபையிழந்து போனது. அவன் இல்லாத நாட்களில் மனம் தவித்தது.