27
கண்ணாடியில் தெரிந்த அவனது பிம்பத்தை பார்த்துக் கொண்டே இருந்தவளை, நிதானமாக அருகில் வந்த பார்த்திபன் ஏற இறங்க பார்த்தான்.
அவனுக்கு அந்த மது மிகவும் புதிதாக தெரிந்தாள். இருபது நாட்களில் இத்தனை மாற்றம் வந்து விடுமா?
முழுதாக இருபது நாட்கள்!
நானூற்று எண்பது மணி நேரங்கள்!
இருபத்தி எட்டாயிரத்து எண்ணூறு நிமிடங்கள்!
இத்தனை நாட்களாக இந்த வாழ்க்கை சரியாக அமையுமா என்ற சந்தேகம் அவனை வாட்டிக் கொண்டிருந்தது. ஆனால் இந்த பிரிவு அவனது மனதை அவனுக்கே வெளிச்சம் போட்டு காட்டியது.
எப்படி என்று தெரியவில்லை. ஆனால் மது அவனது மனதுக்குள் நீக்கமற நிறைந்திருந்தாள். அஞ்சலி இருந்த இடத்தில், அவள் வேண்டாமென்று மறுத்துவிட்டு போன இடத்தை மது கைபற்றியிருந்தாள்.
மனைவி என்பதற்காக கடமைக்காக அவளோடு அவனால் குடும்பம் நடத்திவிட முடியாது. அன்பு வேண்டும்… அனுசரணை வேண்டும்… பாசம் வேண்டும்… ஆனால் இவையெல்லாவற்றுக்கும் மேல் ஆசையும் காதலும் மோகமும் வேண்டும்!
அவள் இல்லாமல் நானில்லை என அவனும் உணர வேண்டும். அவன் இல்லாமல் அவளில்லை என்று அவளும் உணர வேண்டும்.
இந்த ஆறுமாதத்தில், மது ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த குடும்ப வாழ்க்கை என்று எத்தனையோ முறை உடன்பிறந்தவளிடமும், பெற்றவளிடமும் முகத்தில் அறைந்தார் போலவே கூறியிருக்கிறான். தயங்கியபடியே கேட்ட வினோதகனிடமும் மென்மையாக இதை கூறி முடித்திருக்கிறான்.
அப்போதெல்லாம் இந்த தவிப்பை அவன் உணரவில்லை. மதுவை பார்த்தேயாக வேண்டும் என்று மனம் கிடந்து துடித்ததில்லை. ஆனால் இன்று முழுவதுமாக உணர்ந்தான்.
முதலிரண்டு நாட்கள் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் நாட்கள் ஒவ்வொன்றாக கழிய, அவனது நினைவெல்லாம் அவளாகினாள்.
அதற்காகவே தோன்றும் போதெல்லாம் அழைத்து விடுவான்.
இத்தனை தவிப்பதற்கு பேசாமல் அழைத்து வந்திருக்கலாமே என்று கூட தோன்றியது. ஆனால் எப்படி அழைத்து வருவது?
இத்தனை நாட்களில் மதுவை அது போன்றதொரு தொனியில் அழைத்ததேயில்லை. காரமடைக்கு அழைத்து சென்றிருக்கிறான். அதை விட்டால் சென்னை.
அதை தவிர்த்து இரு குடும்பமும் சேர்ந்து போகும் கோவில்கள்!
அவ்வளவுதான் இருவருமாக வெளியே சென்றது, அதுவும் குடும்பத்துடன் மட்டுமே!
தினமும் அவளுக்கு கல்லூரி இருக்கும். கல்லூரி வேலைகளிருக்கும். பெரும்பாலும் அந்த வேலைகளை மட்டுமே பார்ப்பாள் மது. அதை விடுத்தால் அவளது மற்ற தினசரி நடைமுறைகள்.
அதை தாண்டி இருவருமே வர நினைத்ததில்லை.
அப்படி இருக்கும் போது அவனாக எப்படி அழைத்து போக முடியும்?
தயக்கம் அவனை எல்லை தாண்ட விடவில்லை.
வயது வித்தியாசம் சற்று குறைவாக இருந்திருந்தால் அவனது அணுகுமுறை கண்டிப்பாக வேறாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அந்த வயது வித்தியாசம், என்னதான் எல்லாரும் தவறில்லை என்று கூறினாலும், அவனால், அதை கடந்து வர முடியவில்லை. பதினோரு வயது வித்தியாசம் என்பதும், மது அவனது தமக்கையின் மகள் என்பதும் தான் அவனுக்கு மிகப்பெரிய தடைக் கல்லாக இருந்தது.
இவையெல்லாம் அவனாக கற்பித்துக் கொண்ட காரணங்கள் தான் என்பதை, அவன் இந்த இருபது நாள் பிரிவில் புரிந்து கொண்டான்.
ஒவ்வொரு நாளும் அவனது தவிப்பும், துடிப்பும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அதற்காகவே வேலைகளை விரைவாக முடித்துவிட்டு பறந்து வந்திருந்தான்.விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு வரும் நேரம் கூட நீண்டதாக தோன்றியது.
எதிர்கொண்டு வரவேற்ற தாயும் தமக்கையும் அவனது கண்களுக்கு படவில்லை. உண்மையிலேயே!
வெளியே நிற்காமல் என்ன செய்கிறாள் என்ற கோபம் வந்தது. என்னவோ காலம் காலமாக உடனிருந்து வழியனுப்பி, வீடு வந்த கணவனை இன்முகத்தோடு வரவேற்கும் மனைவியாக அவளையும், மனைவியின் முகம் பாராமல் இருக்க விரும்பாத கணவனாக அவனையும் நினைத்துக் கொண்டான் போல. அடேய் கொஞ்சம் அடங்குடா என்று அவனது மனசாட்சி கூட அவனை கேலி செய்தது. ஆனால் அதையெல்லாம் ஐயா கண்டுகொண்டால் தானே?
அவர்களை தாண்டி மதுவின் அறையை திறந்து கொண்டு அவசரமாக வந்தால், கண்ணாடி முன் நடுவகிட்டில் குங்குமமிட்டபடி அவனது மனைவி!
அதிலும் அந்த சிவப்பு நிற சேலையில் அவள்!
பின்னலை முன்னே இட்டிருந்தாள் போல… வெண்மையான முதுகும் வாளிப்பான இடையும் சொல்லாமல் அவனது கண்களுக்கு விருந்தானது. சேலை அவளது பட்டு மேனியில் நிற்காமல் நழுவ பார்க்க, கண்ணாடி வழியாக அவனை பார்த்தபடியே நின்றிருந்தாள் மது.
இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டது.
அந்த நேரத்தில் அவள் மது என்பதும் அவன் பார்த்திபன் என்பதும் மறந்து போனது. அவன் அவளது கணவன். அவள் அவனுடைய மனைவி என்பதை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.
இத்தனை நாள் பிரிவையும் ஈடு செய்ய வேண்டாமா!
கணவனை பார்த்த சந்தோஷத்தில் உறைந்து நின்றவள், மெல்ல உயிர் பெற்றாள். குங்குமம் இட்டுக் கொண்டிருந்த கை அப்படியே அங்கேயே நின்றது. அருகில் வந்தவன், அந்த கையை பற்றி, தன்னுடைய கையையும் சேர்த்து, அவளது தோளில் அவன் தாடையை பதித்து, வகிட்டில் குங்குமமிட, மதுவுக்கு நடுக்கத்தில் உடல் நடுங்கியது.
மயக்கத்துடன் கிறக்கமாக கண்களை மூடிக் கொண்டாள்!
வார்த்தைகள் கூறாத சம்மதத்தை, அந்த ஒரு செயல் அவனுக்கு கூறிவிட, அவனும் பேசவில்லை.
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்!
அந்த மௌனம் அத்தனை அழகாக இருந்தது இருவருக்குமே! அதை உடைக்க இருவருமே பிரியப்படவில்லை.
வெற்றிடையில் அவன் கை பதிக்க, அவளது கால்கள் தள்ளாடியது. அவளது நடுக்கத்தை குறைப்பதாக நினைத்து அவளது இடையை இறுக்கி அணைத்து அவனோடு சேர்க்க, அவனது கையை இறுகப் பற்றிக் கொண்டாள் மது.
“ஏய் பொண்டாட்டி…” மதுவின் காதில் பார்த்திபன் கிசுகிசுக்க, அவளது உடல் கூசி சிலிர்த்தது.
“ஹும்ம்…” அவளது குரலில் மயக்கம்.
“சாரில செமயா இருக்க…” அதே கிசுகிசுப்புதான். அவளுக்குத்தான் சிலிர்ப்பு தாள முடியாமல் அவஸ்தையாக இருந்தது.
“பிடிச்சிருக்கா?” கண்களை மூடியவாறே பின்னோடு அவனோடு இழைந்தபடியே அவள் கேட்க,
“ரொம்ப…” என்று அவன் இறுக்கிக் கொண்டான்.
“அப்புறம் ஏன் என்னை விட்டுட்டு போனீங்க?”
“இப்படி நின்னுட்டு கேட்டிருந்தா நான் போயிருப்பேனா?”
“ஐ மிஸ்ட் யூ மாமூ…” கொஞ்சலாக அவள் கூற, அவளை திருப்பி அவனை பார்த்தவாறு நிறுத்தி, அவளது கண்களை பார்த்தான்.
“உங்கம்மா ரொம்ப திட்டிட்டாங்களா மது?” அவளது தோளில் கைபோட்டு தன்னை நோக்கி இழுத்தபடி பார்த்திபன் கேட்க,
“ஹும்ம்… அவங்களுக்கு என்ன? எப்ப பார்த்தாலும் என்னை திட்டனும்…” உதட்டை சுளித்தபடி அவள் கூற, அந்த உதட்டை விரல்களால் பற்றியவன், அதை இழுத்துப் பிடித்து,
“ரொம்ப சுளிக்காதடீ…” என்று கூற, “இஸ்ஸ்ஸ்ஸ்… வலிக்குது மாமூ…” சிணுங்கினாள் மது.
“வலிக்கறதுக்கு தான்டீ இழுக்கறது…” என்று மீண்டும் அவளது உதட்டில் கைவைக்கப் போக, பட்டென்று அவனது கையை தட்டி விட்டாள்.
“ரவுடி…” என்றவள், “ரொம்ப போராடிச்சுது மாமூ… அதோட உங்கக்காவோட நொச்சு வேற… இனிமே நான் லீவ்ல இருந்தா என்னையும் கூட்டிட்டு போங்க…” சலுகையாய் அவனது தோளில் சாய்ந்து கொள்ள, அவளை சுவரோடு சேர்த்து நிறுத்தினான் பார்த்திபன்.
“அக்காவோட மிரட்டல் தாங்காம நம்ம பக்கம் வந்துட்ட போல இருக்கு…” சின்ன சிரிப்போடு அவன் கேட்க, அவனது கேள்வி எதற்கு என்பதை புரிந்து கொள்ளாமல்,
“ஹும்ம்… அதோட நானும் ரொம்ப கில்டியா ஃபீல் பண்றேன் மாமூ…” சிறிய குரலில் கிசுகிசுப்பாக அவள் கூற, அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் பார்த்திபன்.
“கில்டியாவா? ஏன்?” அவனது புன்னகை மாறவில்லை. ஆனால் நெருக்கம் சற்று குறைந்து விட்டதோ என்று மதுவுக்கு தோன்றியது.
“இல்ல… உங்க லைஃப் என்னால ஸ்பாயிலாகிடுச்சோன்னு தான்…” என்று அவளிழுக்க,
“இப்படியெல்லாம் யோசிக்குதா உன்னோட குட்டி மூளை?” அவளது தலையில் தட்டிச் சிரித்தான் பார்த்திபன்.
“மாமூ…” சிணுங்கினாள்.
“என்னடீ?” அவளை வேண்டுமென்றே கலாய்க்கும் குரலில் அவனும் பதிலுக்கு இழுக்க,
“கிண்டல் பண்ணாதீங்க மாமூ…”
“வேற என்னதான்டீ பண்றது? அதையும் நீயே சொல்லிடேன்…” விஷமச் சிரிப்போடு அவன் கேட்க, அவளது முகம் வெட்கத்தில் சிவந்தது. ஆனால் இதுவரை அவனிடம் இது போன்று பேசாததால் இவ்வளவெல்லாம் பேசுவானா என்ற வியப்பு வேறு!
“மாமூ…” மீண்டும் அவள் சிணுங்க, அந்த வெட்கமும், கூச்சமும் சிணுங்கலும் அவனை வேறொரு உலகதிற்கு கூட்டிச் சென்றது. தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டவன், அவளது தோளில் கைபோட்டுக் கொண்டு,
“உங்க அம்மா திட்றாங்க, ஆட்டுக்குட்டி திட்றாங்கன்னு எல்லாம் அவசரப்படாத மது… நமக்கு எவ்வளவோ டைம் இருக்கு…”
“அதெல்லாம் அப்படியொன்னுமில்ல…” ரோஷமாக அவள் கூற, அவளை இன்னும் நெருக்கமாக தன்னோடு இழுத்துக் கொண்டான்.
“எப்படியொன்னுமில்ல?” அவனது விஷமம் புரிந்து அவனிடமிருந்து தள்ளி நிற்க முயல, அவளால் முடியவில்லை. உடும்புப் பிடியென பிடித்திருந்தான். இரும்பு பிடிக்கும் கையல்லவா!
“ஹும்ம்…”
“அப்படீன்னா உனக்கு நான் ஓகே வா?” விடாமல் அவன் கேட்க,
“ஏன் இப்படி கேக்கறீங்க?” உண்மையில் அவளுக்கு புரியவில்லை.
“சும்மா சொல்லுங்க பொண்டாட்டி மேடம்…” தன் முன்னே கொண்டு வந்தவன், அவளது தோளில் கை போட்டபடி கேட்க, அவனது மீசையை பிடித்து இழுத்தவள்,
“ஓகே தான்…” என்று கிசுகிசுப்பாக கூறினாள்.
“ஏன்?” அவளை விட்டுவிட மாட்டேன் என்று உறுதி எடுத்திருப்பான் போல… அவனை முறைத்தாள்.
“இதென்ன கேள்வி? நீங்க என்னோட ஹஸ்பண்ட்…” என்று கூற,
“ஹஸ்பண்ட்னா?” இப்போது அவனது கேள்வி இன்னுமே அவளை குழப்பியது. ஒரு காலத்தில் அவனை கேள்விகளாக கேட்டு குழப்பியடித்தவள் தான். இப்போது அவள் குழம்பி போனாள்.
“புரியல…”
“லைசன்ஸ் இருக்கறதால உன்னோட கடமையை செய்யனும்ன்னு நீ நினைக்கிறியா மது?” இதைவிட வெளிப்படையாக அவளிடம் பேச அவனால் இன்னுமே முடியவில்லை.
அவளால் பதில் கூற முடியவில்லை. ஒருவேளை அதுதான் உண்மையோ என்று மனம் கேள்வி கேட்க, அதிர்ந்து அவனை பார்த்து,
“அதெல்லாமில்ல… நீங்க ரொம்ப யோசிக்கறீங்க…”
“நான் கொஞ்சம் பேராசைக்காரன் மது… எனக்கு டன் டன்னா லவ் வேணும். ஆனா அது கடமைக்காக இல்ல…”
இடுப்பில் கைவைத்துக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தவள், பல்லைக் கடித்துக் கொண்டு,
“யோவ்…” என்று கோபமாக அழைக்க, அவனுக்கு ஜெர்க்கானது.
“என்னடீ… யோவ்ன்னு எல்லாம் கூப்பிடற?”
“பின்ன? வெறும் சிங்கிளா இருந்தா பரவால்ல… இப்படி மொரட்டு சிங்கிளால்ல இருக்க?”
“என்னது மொரட்டு சிங்கிளா? அப்படீன்னா?” என்றவனுக்கு சிரிப்பு பொங்கினாலும், நம்ம பொண்டாட்டி என்னதான் சொல்கிறாள் பார்ப்போம் என்று அவன் அவளது முகத்தைப் பார்த்தான்.
“பிகர் எதுவும் மடங்காம…” என்று நிறுத்தியவள், “அதாவது அவனுக்கும் மடங்காம… எந்த பிகரையும் கரெக்ட் பண்ண தெரியாதவன் சிங்கிள்டா மாமூ… ஆனா இந்த மொரட்டு சிங்கிள் இருக்கான் பாரு…” என்று நிறுத்தி, அவனது உதட்டைப் பிடித்து இழுத்து, “பிகரே வந்து நான் மடங்கிட்டேன்… மடங்கிட்டேன்னு சொன்னாக் கூட நான் சிங்கிள்டா… மிங்கிள் ஆகாத சிங்கிள்டான்னு தத்துவம் பேசறான் பாரு… அவன் மொரட்டு சிங்கிள்… அப்படிபட்ட ஒரு மொரட்டு சிங்கிள் தான்டா மாமூ என்ர புருசர்…” என்றபடி பட்டென உதட்டை விட,
“அடியே வலிக்குதுடீ…” என்று அவன் உதட்டை தேய்த்துக் கொள்ள,
“வலிக்கறதுக்கு தான்டா இழுக்கறது…” என்று அவனைப் போலவே சிரித்தபடியே கூறியவளின் இதழ்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், அதை வன்மையாக கொய்தான்.
அத்தனை வன்மை… சற்றும் மென்மையில்லாத வன்மை… முதலில் அவனிடமிருந்து விடுபட முயன்றவள், பின் அதை கைவிட்டு அவனோடு ஒன்றினாள். அவன் முரடன் தான். ஆனால் அவளுக்கு அந்த முரட்டுதனம் மிகப் பிடித்திருந்தது.
அவள் ஒன்ற, வன்மையை கைவிட்டவன் மென்மைமையாக அவளது இதழை ஒற்றி எடுக்க, அதுவரை கண்களை மூடி அவனுக்குள் ஆழ்ந்திருந்தவளுக்கு அந்த மெல்லிய இதழொற்றல் ஏதேதோ கதை சொன்னது.
“ஏய் பொண்டாட்டி…” இன்னமும் அவன் மேல் மயக்கமாக சாய்ந்திருந்தவளை கிசுகிசுப்பாக அழைத்தான் பார்த்திபன்.
“ஹும்ம்…” பேச முடியவில்லை அவளால்.
“வெளிய போலாமா?” அவளிடம் அனுமதி வேண்டினான் அவள் கணவன்.
“ம்ஹூம்…”
“ஏய்… ஒரு வார்த்தை கூட ஒழுங்கா பேசாம ரூமுக்கு வந்துட்டேன்…”
“ம்ஹூம்…” அவள் இன்னும் சிணுங்க, மீண்டும் அவளது இதழ்களை மென்று தின்று விட வேண்டும் என்பது போல பேரவா எழுந்தது.
“ஏன்?”
“கூச்சமா இருக்கு மாமூ…”
“சரி அப்படீன்னா என்ன பண்ணலாம்?” குறும்பாக அவன் கேட்க,
“ச்சசீ…” அவனை தள்ளி விட்டு போக முயல, அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் பார்த்திபன்.
கலைந்து, கலைத்து, களைத்து சலிக்கும் வரை இரவு நீண்டது!
அனைத்தும் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது, அந்த தொலைபேசி அழைப்பு வரும் வரை!