28

விடுமுறை முடிந்து கல்லூரி ஆரம்பமாகியிருந்தது. அவளை வலுக்கட்டாயமாக கல்லூரிக்கு தள்ளி விட்டிருந்தான் பார்த்திபன்.

“மாமூ… போயே ஆகணுமா?” தூக்கக் கலக்கத்தில் மது சிணுங்க,

“ஆமான்டி பொண்டாட்டி… காலேஜை கட் அடிக்கற வேலை மட்டும் வேண்டாம். சொல்லிட்டேன்… எந்திருச்சு ஒழுங்கா கிளம்பற வழிய பாரு…” ஷேவ் செய்து கொண்டே பார்த்தி மிரட்ட, கணவனுக்கு அழகு காட்டினாள்.

“மாமூ… ப்ளீஸ்…”

“நோ… எந்திரி…”

“மாமூஉஉஉஊஊ…” ஹஸ்கியாக இழுத்தாள்.

“நீ எவ்வளவுதான் இழுத்தாலும் வேலைக்காகாதுடி…” குறும்பாக அவன் கூற,

“ஏன் மாமூ இப்படி இருக்க?” சலித்துக் கொண்டாள். இப்போதெல்லாம் அடிக்கடி மரியாதையை கைவிட்டு விடுகிறாள். பார்த்திபனுக்கு அதுதான் பிடித்திருந்தது. மரியாதையாக அழைத்தால் சற்று தள்ளி நிற்பது போல தோன்றும் அவனுக்கு!

“வேற எப்படி இருக்க சொல்ற?”

“ஷப்பா இந்த லாக் புக்கை நான் கட்டிக்கிட்டு…” என்று நீட்டி முழக்க,

“ம்ம்ம்… கட்டிக்கிட்டு?” குறும்பாக அவன் கேட்க,

“ம்ம்ம்… கட்டிக்கிட்டு என்ன பண்றது? நானும் இன்னொரு சாமியாராக வேண்டியதுதான்…” என்று உதட்டை சுளிக்க,

“வேண்டாம்… இன்னைக்கும் நைட் வரும்…” குறும்பாக அவன் கலாய்க்க,

“வந்தா மட்டும்… இப்ப எதுவும் வேலைக்காகலையே!” சலித்துக் கொண்டாள்.

“நீ எவ்வளவுதான் என்னை கவுக்க டிரை பண்ணாலும் இங்க ஒண்ணும் வேலைக்காகாது… ஒழுங்கா காலேஜ் கிளம்பற வழிய பாரு…” என்றவன், அவளது பெட்ஷீட்டை உருவ முயல,

“ஹய்யோ… வேணா… நானே எழுந்துக்கறேன்…” பயந்து எழுந்தாள், கூச்சம் வேறு அவளை பிடுங்கி தின்றது.

“ம்ம்ம்… சீக்கிரம்…” என்று அவன் விரட்ட,

“அங்கங்க கல்யாணம் பண்ணமா, எஞ்சாய் பண்ணமான்னு இருப்பாங்க… எனக்கும் வந்து சேர்ந்து இருக்கே… பக்கி பக்கி…” என்று திட்டியபடியே எழுந்து குளிக்க போனவள், அந்த மூட் மாறாமலே பானுமதியையும் சகுந்தலாவையும் கடிக்க,

“ஏன்டி எண்ணைல போட்ட அப்பளம் மாதிரி குதிக்கற?” பானுமதி கடித்தார்.

“ம்ம்ம்… உன் தம்பி கிட்ட கேளு… ஏன்னு?”

“ஏன் அவன் என்ன பண்ணான்?” என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான் பார்த்திபன்.

முழுக்கை சட்டையை மடித்து விட்டபடி அவன் இறங்கும் அழகை பார்த்து மனம் தடுமாறினாலும், ‘அடேய்… என்னை காலேஜ் போக சொல்லிட்டல்ல…’ என்று கடுப்படித்தது.

“ம்ம்ம்… அவளை லீவ் போட கூடாதுன்னு சொல்லிட்டேனாம்…” என்று கூறிக் கொண்டே காலை உணவுக்காக அவன் அமர, சண்டையிட்டாலும், இருவரது முகத்திலிருந்த ‘பளிச்’ சொன்னது விஷயத்தை.

பார்க்கும் போதே சகுந்தலாவுக்கும், பானுமதிக்கும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

இனி பெண் சுதாரித்து விடுவாள் என்பதில் அவ்வளவு ஆனந்தம்!

“இனிமே பாருங்க… நீங்களா லீவ் போடுன்னு என் கால்ல விழுந்து கெஞ்சினாலும் நான் லீவ் போடவே மாட்டேன்… இது என்னை பெத்த ஆத்தா மேல சத்தியம்…” என்று சூளுரைக்க,

“அடிப்பாவி… அவசரப்பட்டு என் மேல சத்தியம் பண்ணாத…” என்று பானுமதி அலற,

“நோ முடியாது… ஒரு வாட்டி நான் டிசைட் பண்ணிட்டா, என் பேச்ச நானே கேக்க மாட்டேன்…” என்று அவள் மீண்டுமொரு பஞ்ச் அடிக்க,

“இப்ப நீ கிளம்பறியா… இல்லைன்னா நான் கிளம்பட்டா?” கறாராக பார்த்திபன் கேட்க,

“வர்றேன்…” என்றவள், கடுப்பாக அவனை பின் தொடர்ந்தாள்.

இருவரும் ஜோடியாக போவதை பார்க்கையில் உயிர் நிறைந்தது பானுமதிக்கும் சகுந்தலாவுக்கும்!

காரிலும் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க,

“மதுக்குட்டி… கிளாஸ்ல கவனம் சிதற கூடாது… நோ டிஸ்ட்ராக்ஷன்ஸ்…” குறும்புப் புன்னகையோடு அவன் கூற, திரும்பி அவனைப் பார்த்து முறைத்தாள்.

“முறைக்காத மதுக்குட்டி…” மீண்டும் அவன் புன்னகைக்க,

“டேய்… அடங்கு…” கோபமாக அவள் கூற, ஜெர்க்கானான் அவள் கணவன்.

“ஏய் என்னடி…” என்று அதிர்ந்தாலும், அந்த டேய் அவனுக்கு மிகவும் பிடித்தது. கல்லூரி வந்திருந்தது.

“பின்ன என்ன? காலேஜ்க்கு பாக் பண்ற… அப்புறம் என்ன நோ டிஸ்ட்ராக்ஷன்ஸ்? இன்னும் என் வாயை கிளறாதடா…” கடுப்பாக கூறியவள், பட்டென கதவை திறந்து இறங்க முயல, சட்டென அவள் கையை பற்றியவன்,

“லவ் யூ டி குட்டி…” என்று காதலாக கூற, அப்படியே அமர்ந்து கொண்டாள், ‘இவனிடம் இந்த வார்த்தையை வாங்க எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது’

உதட்டை சுளித்து முகத்தைத் திருப்ப, அவளது வலது கையை கையிலெடுத்து தன்னோடு பிணைத்து வைத்துக் கொண்டு,

“என்னோட அப்ரோச் உனக்கு கஷ்டமா இருக்கலாம் மது… ஆனா இதுதான் நம்ம கிட்ட இருக்க டிஃபரென்ஸ்… நான் மெச்சுர்ட், நீ ஸ்டில் இன் டீனெஜ்…” என்று நிறுத்த, அவள் மறுத்துக் கூற முயன்றாள்.

“நான் ஃபினிஷ் பண்ணிடறேன் மது…” என்றவன், “எனக்கு பெரிய விஷயமா தெரியறது உனக்கு பெருசா தெரியாது. இதுவே உனக்கு பெருசா தெரியறது, ரொம்ப சின்ன விஷயமா தெரியும். எனக்கு இந்த டிபரன்ஸ் புரியுது. ஆனா உனக்கு தான் எப்படி புரிய வைக்கன்னு தெரியல…” என்று இடைவெளி விட்டவன், “இப்ப உனக்கு படிப்பு ரொம்ப முக்கியம். இன்னும் கொஞ்ச நாள் கஷ்டப்பட வேண்டியிருக்கும்… ஒரு டிகிரி கூட முடிக்காட்டி நம்ம பிள்ளைங்களே உன்னை கிண்டல் பண்ணுவாங்கடி…” பொறுமையாக எடுத்துக் கூற,

“நான் படிக்க மாட்டேன்னா சொல்றேன்?” ஆதங்கமாக அவள் கேட்க,

“ம்ம்ம்.. அப்புறம்?”

“ரொம்ப டயர்ட்டா இருக்கு மாமூ… அதான் லீவ் போடறேன்னு சொல்றேன்…” உச்சஸ்தாயில் ஆரம்பித்து லோ வால்டேஜில் முடிக்க, அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை, கூடவே வெட்கத்தையும்!

ஆண்களின் வெட்கம் இன்னுமழகு!

நிமிர்ந்து அவனை பார்க்க கூட முடியவில்லை அவளால்!

“சரி… சீக்கிரமாவே வந்து பிக் அப் பண்ணிக்கறேன்… ஈவினிங் எங்கயாவது போலாம்…” என்று அவளது புறங்கையில் முத்தமிட்டவனை,

“ஒண்ணும் வேணாம்… நான் நல்லா தூங்கணும்…” என்று அவனை தள்ளி விட்டவள், கோபித்து கொண்டு இறங்க,

“சரி வா… வீட்டுக்கே போலாம்…” இறங்கி வந்து அழைத்தான்.

“வேணாம் லாக் புக்… நீ உன் வேலைய சின்ஸியரா பாரு… நான் கிளாஸ்ல தூங்கிக்கறேன்…”

“ஏய் வாலு… அப்படி ஒண்ணும் நீ கிளாஸ் போக வேண்டாம்… வா போலாம்…” உண்மையில் இப்போதுதான் அவனுக்கு பாவமாக இருந்தது. இரவு உறங்க வெகு நேரமாகி விட்டது என்பதை அவனும் தான் உணரவில்லை! ஏதோ வேகத்தில் மனைவி என்ற உரிமை எடுத்துக் கொண்டது தவறோ?

அவன் முகம் மாறியதை கவனித்து விட்டாள் மது. அந்த மாற்றம் அவளுக்கு பிடிக்கவில்லை. அவளது மாமூவின் மனம் சங்கடப்படுவதை அவள் விரும்பவில்லை.

“எனக்கு மூடு மாறிடுச்சு மாமூ…” என்று கண்ணடித்தவள், “ஐ வில் மேனேஜ்…” என்று புன்னகைத்தாள்.

“எனக்கும் மாறிடுச்சு… வா போலாம்…” சிரித்தபடி அவளை அழைக்க,

“போய்யா போ…” ஜெயம் சதாவை மிமிக் செய்தவளை பார்த்துக் காதலாக புன்னகைத்தவன்,

“ஏய் பொண்டாட்டி…” என்று நிறுத்தி, “பாத்துக்க…” என்று புன்னகைத்தவனுக்கு அவளும் ஒரு பெரிய புன்னகையை பரிசளித்து விட்டு, வகுப்பறையை நோக்கிப் போக, அவளை பார்த்து கொண்டே இருந்தவன், காரை கிளப்பிக் கொண்டு போனான்.

மதுவின் முகத்தில் புன்னகை உறைந்திருந்தது!

சுற்றியிருந்த உலகம் மிக அழகாக இருப்பது போல தோன்றியது!

எல்லோரும் அவளை மட்டுமே பார்ப்பதாகக் கூட தோன்றியது.

அவளை காட்டிலும் அதிர்ஷ்டம் செய்தவர்கள் வேறு யாருமில்லை என்றும் எண்ணத் தோன்றியது!

செல்பேசி அழைக்க, எடுத்துப் பார்த்தாள் புன்னகையோடு!

பார்த்திபன் தான் அழைத்தது!

“ஏய்.. ரொம்ப முடியலன்னா சொல்லுடி… வீட்டுக்கு போயிடலாம்…”

“மாமூ… இப்ப நான் ரொம்ப சின்சியராகிட்டேன். நீ தான் பேட் பாய் ஆகிட்ட…” என்று கேலியாக கூற,

“யெஸ்… நான் ரொம்ப பேட் பாய் ஆகிட்டேன்… எல்லாம் உன்னால தான்டி பொண்டாட்டி…” என்று வம்பு வளர்க்க,

“அடப்பாவி…” என்று வாய் மூடியவள், “இங்க பப்ளிக்ல இருக்கேன். அடக்கி வாசிக்க வேண்டியிருக்கு…” என்றவள், “ஓகே மாமூ… பாய்… கிளாசுக்கு டைமாச்சு…” என்று வகுப்பறைக்குள் நுழையப் போக,

செல்பேசி மீண்டும் அழைத்தது.

‘டேய் மாமூ…’ என்று நினைத்தவள், பேசியை எடுத்துப் பார்க்க, உறைந்தாள்!

ரதீஷின் எண்!

எதிர்பார்க்கவில்லை!

கொஞ்சமும் நினைத்தும் பார்க்கவில்லை.

அவன் அழைப்பானென!

இரண்டு முறை அழைத்து ஓய்ந்தது!

எதற்காக அழைக்கிறான்?

ஏன்? அவன் சிறையிலிருந்து வந்து விட்டானா? அப்படியென்றால் சஞ்சய்?

மூன்றாவது முறையாக, சஞ்சய் எண்ணிலிருந்து அழைப்பு வர, இப்போது மதுவுக்குள் நடுக்கம்!

ஓய்ந்து போய் வராண்டாவில் அமர்ந்து கொண்டாள்!

அவளது மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.

நான்காவது முறையாக ரதீஷின் எண்ணிலிருந்தே அழைப்பு வர, வருவது வரட்டும் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு அழைப்பை எடுத்தாள்.

“சொல்லு…”

“ஹாய் ஸ்வீட் ஹார்ட்.. என்ன கால் எடுக்க இவ்வளவு நேரம்?” நக்கலாக ரதீஷ் கேட்க,

“சொல்றதை சொல்லிட்டு வை…” இறுக்கமாக மது கூற, அதற்கு மறுபுறத்தில் சிரித்தான்.

“அதெப்படி உன்னை அப்படியே விட்டுடுவேன் டார்லிங்? மிஸ்ஸான ஒரே டார்கெட் நீ தான்…”

“டேய் பொறுக்கி… இன்னொரு தடவை ஜெயிலுக்கு போகனுமா?” அவளது கோபம் ஏறிக் கொண்டிருந்தது.

“ஒரு தடவை போகத்தான் ஒரு மாதிரியா இருக்கும் ஸ்வீட் ஹார்ட்… இனிமே நோ இன்ஹிபிஷன்ஸ்… இன்பாக்ட் ஒருத்தியாவது எங்களுக்கு எதிரா சாட்சி சொன்னாளுங்களா? முடியாது. சொல்லிட்டு உயிரோட இருக்க முடியாது…” என்று அவன் கொக்கரிக்க,

“நீ பாவத்தை சேர்த்துட்டு இருக்க…” பொருமினாள் மது.

“ஹூ கேர்ஸ்? பண்றது பாவம் தான். தெரியாம பண்றோமா? இல்லையே… அவ்வளவும் தெரியும்…”

“மாமா கிட்ட சொன்னேன்னா நீ செத்த…” தன்னால் முடிந்தளவு மிரட்டினாள்.

“சொல்லித்தான் பாரேன்…” என்றவன், “என்ன பண்ண முடியும் அந்த…” என்று ஆரம்பித்தவன், பார்த்திபனை விதவிதமான அர்ச்சனை வார்த்தைகளால் திட்டி விட்டு, “என்ன வேன்னாலும் புடுங்க சொல்லுடி உன் புருஷன! இப்ப பாக்கலாம், அவனா நாங்களான்னு…” வெகுவாக தைரியம் வந்திருந்தது அந்த இருவருக்குமே!

ஒருமுறை சிறை சென்று வந்த அனுபவம். இனி பார்க்க என்ன இருக்கிறது என்ற அலட்சியம். எப்படிபட்ட கேசாக இருந்தாலும் தங்களை காப்பாற்ற பெற்றோர் இருக்கும் திமிர். அதை தாண்டி இருவரையும் தோற்கடித்த பார்த்திபனை பழிவாங்கும் குரூரம். ஒருமுறையேனும் மதுவை அனுபவிக்க வேண்டும் என்ற வெறி, அனைத்துமாக வந்து நின்றார்கள் இருவரும்!

அவளால் அவன் பேசுவதை கேட்க முடியவில்லை.

“யூ ஸிகௌன்ரல்… பொறுக்கி நாயே… இன்னொரு தடவை எனக்கு போன் பண்ண… நேரா கமிஷ்னர் ஆஃபீஸ் தான் போவேன்… வைடா ஃபோனை…” என்று கத்திவிட்டு ஃபோனை வைக்கப் போக,

“போ… நல்லா போ… இன்னும் நான் அனுப்பியிருக்க போட்டோஸை எல்லாம் கொண்டு போய் காட்டு…” என்றவன் அழைப்பை துண்டிக்க, மதுவுக்கு உடல் வெளிப்படையாக நடுங்கியது.

கைகள் தடதடவென நடுங்க, ஃபோனை இயக்கி வாட்ஸப்பை திறந்தாள்.

ரதீஷின் எண்ணிலிருந்து மெசேஜ் வந்திருக்க, எச்சிலை கூட்டி விழுங்கியபடி அதை திறந்தாள்.

பத்து புகைப்படங்களை அனுப்பியிருந்தான்!

அத்தனையிலும் அவளது முக்கால்வாசி உடை காணாமல் போயிருந்தது!

திடுக்கிட்டு போனவள் சரிந்து அமர்ந்தாள்!

எப்படி இது சாத்தியம்?

தலை சுற்றியது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது! வாய் மேல் கைவைத்து கேவலை அடக்கினாள். வகுப்புகள் ஆரம்பித்து விட்டதால் யாரும் இல்லை அவளை கவனிக்க!

கண்களில் கண்ணீர் வெள்ளம்!

இப்படியொரு நிலையை அவள் நினைத்தும் பார்க்கவில்லையே!

“கடவுளே…” தலையில் அறைந்து கொண்டவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்ற குறைந்தபட்ச அறிவும் கூட வேலை செய்யவில்லை.

அதீத அதிர்ச்சி இது!

பார்த்திபனின் கண்களில் இந்த புகைப்படங்கள் பட்டால்? அதிலும் இப்போதுதான் மலர்ந்திருக்கும் இந்த உறவு மொட்டிலேயே கருகி விடுமே!

செல்பேசி மீண்டும் அழைத்தது. அவனே தான்!

பேசியது சஞ்சய்!

“என்னடி முன்னாள் காதலி… ரொம்ப சந்தோஷமா இருக்கியா?” நக்கலோடு அத்தனை கோபம் தெறித்தது அவனது அந்த காதலியில்!

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை!

“பேசுடி… இப்பத்தான் அப்படி கொதிச்ச… இப்ப கொதி பாக்கலாம்…” பழி வெறி!

“வேண்டாம் சஞ்சய்… என்னை விட்டுடு…” நடுக்கத்தில் குரல் வெளிவரவில்லை. ஆனாலும் முயன்று கூறினாள்.

“விடறதா? எப்படி? இல்ல எப்படிங்கறேன்? உன்னை எவ்வளவு லவ் பண்ணேன்… எவ்வளவு கெஞ்சினேன்டி…”

“ச்சீ… நீ பண்ணதுக்கு பேரு லவ்வா? வெக்கமா இல்ல?” மதுவால் அடக்க முடியவில்லை. வெடித்தாள்!

“வெக்கந்தான.. இப்ப நீ பட்டுக்க… போட்டோஸ் எல்லாம் எப்படி? ஹெச்டில சிறப்பா வந்துருக்கா?”

“நீயெல்லாம் மனுஷனா?”

“இல்ல… மனுஷனே இல்ல தான்… ராட்சசன் தான்… ஆனா எனக்கு நீ வேணும்…”

“என் புருஷனுக்கு மட்டும் இது தெரிஞ்சா உங்க ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டுடுவாங்கடா…” உள்ளுக்குள் நடுக்கத்தை மறைத்துக் கொண்டு அவள் மிரட்ட,

“ஓ மை கடவுளே… நான் பயந்துட்டேன்… நான் ரொம்ப சின்ன புள்ளை மது… இப்படியெல்லாம் பூச்சாண்டிய காட்டி என்னை பயமுறுத்தாத…” என்று நடித்துக் காட்டியவன், “மொதல்ல அவன் கிட்ட இந்த பிக்ஸ காட்டுடி… அப்பத்தான் அவனுக்கு நான் செருப்படி கொடுத்தா மாதிரி இருக்கும்…” என்று எள்ளலாக கூற,

“இப்ப என்னதான் உனக்கு வேணும்?” பொறுமை பறந்து போய் அவள் கத்தினாள்.

“உன்னோட கண்ணீர்…” என்று நிறுத்தியவன், “அழு… அழு… இன்னும் நல்லா அழு… உன்னோட வாழ்க்கை இனிமே எங்க கைல… இனிமே நீ நிம்மதியா இருக்க முடியாதுடி. ஓட ஓட விரட்டுவோம். ஒய்ஞ்சு போய் கடைசியா நீயா என்னைத் தேடி வரணும். அப்ப உனக்கு காட்டறேன்டி நரகத்த…”

கொக்கரித்தான்… கொதித்தான்… கொதித்து அவள் மேல் கொட்டினான்!

“இது தப்பு சஞ்சய்… வேண்டாம்…” நடுக்கத்தோடு அவள் கூற, அதை அலட்சியமாக புறந்தள்ளினான்.

“இதையெல்லாம் நியாயம் தர்மம்ன்னு பேசுவான் பாரு உன் புருஷன். அவன் கிட்ட சொல்லு…” என்றவன், “சரி இதையெல்லாம் விடு… இன்னைக்கு ஈவினிங் புரூக் ஃபீல்ட்ஸ் போற போல…” என்று கூற, அவள் புரியாமல் விழித்தாள்.

“உளராத…”

“இப்ப தான் எஸ்பிஐல உன் புருஷன் உனக்கும் அவனுக்கும் டிக்கெட் புக் பண்ணிருக்கான். அனேகமா உனக்கு கால் பண்ணுவான்…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவளது பேசிக்கு பார்த்திபனிடமிருந்து அழைப்பு வர, அதிர்ந்து பார்த்தாள் மது.

“என்ன பேச்சையே காணோம்? உன் புருஷன் செக்கண்ட் லைன்ல வரானா?” என்று நக்கலாக கேட்க, மதுவால் பதில் கூற முடியவில்லை. அவளுக்கே தெரியாத ஒன்றை இவன் கூறுகிறான் என்றால், இவன் அந்தளவுக்கு கண்காணித்துக் கொண்டிருக்கிறானா?

வியர்த்துக் கொட்டியது!

“என்னதான்டா உன்னோட பிளான்? ஏன் இப்படி என்னை டார்ச்சர் பண்ற?”

“அது உன் விதி… வேற வழி இல்ல…” என்று நிறுத்தியவன், “ஈவினிங் அவனோட வெளிய போக கூடாது…” கறாராக கூற, இவள் திகைத்தாள்.

“ஏன்?”

“ஏன்னா இனிமே லைஃப்ல எந்த சந்தோஷமும் உனக்கு கிடைக்காது… கிடையாது…”

முழு சைக்கோவாக மாறி இருந்தான் சஞ்சய்!

அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது!

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!