30
மதுவின் உயிர்ப்பு மறைந்து விட்டது! திருமணத்துக்கு முன் அவளிருந்த குழப்பமான நிலையை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருந்தாள். பார்த்திபனுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
பார்த்திபனுடன் மலர்ந்த அந்த அழகான உறவு அதோடு கலைந்து போனது. அவன் அருகில் வந்தாலே பயந்து விலக ஆரம்பித்தாள்.
அவளது விலகலுக்கான காரணம் என்னவென அறியாமல் அவன் இன்னும் குழம்பினான்.
மாமூ மாமூவென தன்னையே சுற்றி வந்தவளுக்கு என்னானது?
புரியாத புதிராக இருந்தது.
ஆனால் மது அனுபவித்துக் கொண்டிருந்த சித்தரவதையை யார் அறிவார்? அந்த நாளுக்கு பின் தினமும் இருவரும் போன் செய்து அவளை விதவிதமாக டார்ச்சர் செய்யத் துவங்கினர். இன்னும் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி அவளை மனதளவில் அவளை பலகீனப்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் அவள் இறந்து பிழைத்தாள். இதை கணவனிடம் சொல்லி விடலாம் தான். ஆனால் அந்த நிர்வாணப் படங்களையும் காட்ட வேண்டுமே!
அவளுக்கு இறந்து விடலாம் போல இருந்தது!
அதே குழப்பத்தில் இரவுணவை முடித்து விட்டு மொட்டை மாடியில் நிலவை வெறித்துக் கொண்டிருந்தாள் மது. சகுந்தலா காரமடைக்கு சென்றிருந்தார். பானுமதி சென்னை கிளம்பிவிட்டிருந்தார். பார்த்திபன் ஹாலில் அமர்ந்து அமேசான் பிரைமில் அப்போதுதான் வெளியாகியிருந்த புதிய படத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
கண்கள் தான் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் நினைவு முழுக்க மது தான்!
அருகில் போனாலே அவனைத் தவிர்த்து ஒடுபவளை எப்படி சரி செய்வது? பிரச்சனை இதுதான் என கூறாமல் அவளாக ஏன் இப்படித் தவிக்க வேண்டும் என்ற கவலை. அதிலும் இப்போதெல்லாம் அதிகம் தனிமையை நாடுகிறாள். அவளது கவனம் எதிலுமில்லை. எல்லாம் அவனுக்கு புரிந்து இருந்தது.
ஆனாலும் என்ன செய்வது என்று புரியவில்லை. அவளாக வெளியே வரட்டும் என்று காத்திருந்தான்!
மதுவினால் மாலை நடந்ததை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதுவரை போனில் மட்டும் தான் அழைத்து மிரட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் அன்று கல்லூரியிலிருந்து வெளிவந்த போது, மிக நெருக்கமாக அந்த கார் வந்து நிற்க, இறங்கியவர்களை கண்டு அதிர்ந்து போனாள்.
சஞ்சய்யும் ரதீஷும்!
இப்போதெல்லாம் பார்த்திபனோடு அவள் வீட்டுக்கு போவதில்லை. ஏன் என்று கேட்டால் படிப்பதாக பெயர் பண்ணிக் கொண்டிருந்தாள். அவளாகவே பஸ் பிடித்து வீட்டுக்கு வரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்.
அது போலவே போவதற்காக பஸ் ஸ்டாப்பை நோக்கி போனவளை தடுத்து நிறுத்தியவர்களை பார்த்தபோது கால்கள் வெளிப்படையாக நடுங்கியது.
கார் கதவை திறந்து விட்ட ரதீஷ், “ஏறு…” என்று மிரட்ட, அவள் வேகமாக மறுதலித்தாள்.
“முடியாது… நான் மாட்டேன்…” என்று அவள் பின்னடைய, அவளது கையைப் பிடித்து இழுத்தான்.
“ஒழுங்கா ஏறினா நாங்களும் ஒழுங்கா இருப்போம். இல்லைன்னா இந்த வீடியோவ இப்பவே பார்ன் சைட்ஸ்ல அப்லோட் பண்ணிடுவோம். என்ன சொல்ற?” கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அவன் கூற, அந்த வீடியோவை பார்த்து அதிர்ந்தாள். அவளுக்கு அவன் முன்னமே அனுப்பிய அவளது நிர்வாணக் குளியல் வீடியோ!
‘கடவுளே’ கால்கள் தள்ளாடியது.
சுற்றிலும் பார்த்தாள்!
அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தனர். வேகமாக பயணிக்கும் உலகம். இதில் மற்றவர்களை கவனிக்க நேரமேது?
ஸ்லிங்க் பேகின் பிடியை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாதே!
“வேணா ரதீஷ்… ப்ளீஸ் என்னோட லைஃபை வீணாக்காத. ஐ பெக் யூ…” கண்களில் கண்ணீர் நிற்கவா ஓடவா என்று கேட்டது.
“அப்படீன்னா எங்க லைஃபை காலி பண்ணானே உன் புருஷன், அதுக்கு எப்படி பழி வாங்கறது?”
“அதுக்காக என்னை இப்படி டார்ச்சர் பண்ணனுமா?” அழுகையில் துடித்தது அவளது உதடுகள்!
“இந்த டார்ச்சர் எல்லாம் வெறும் டீசர் தான் கண்ணு. இனிமே தானா மெயின் பிக்சரை பாக்க போற…” அலட்சியமாக சொன்ன சஞ்சயை பயமாக பார்த்தாள் மது.
“எஸ்… இப்ப நீ எங்க ரெண்டு பேரோட கெஸ்ட் ஹவுசுக்கு வர்ற…” என்று ரதீஷ் குரூரமாக கூற,
“நோ… முடியாது…” இன்னும் பயத்தோடு பின்னடைந்தாள்.
“வரலைன்னா வீடியோ அப்லோட் ஆகிடும். என்ன சொல்ற?” செல்பேசியை காட்டி அவன் அலட்டாமல் கூற,
“வேணா…” தடதடவென நடுங்கியது அவளுக்கு!
“எங்களுக்கு நீ வேணும்…” மிக இயல்பாக காய்கறி கடையில் இந்த காய் வேண்டும் என்று கேட்பதை போல ரதீஷ் கேட்க, சுற்றியும் பார்த்தாள். கூட்டம் சற்று குறைந்திருந்தது. ஆனாலும் இத்தனை பேர் முன்னமும் இவர்களுக்கு இவ்வளவு தைரியம் என்றால், தனிமையில் அவர்களிடம் மாட்டினால்? நினைக்கும் போதே மயக்கம் வரும் போல இருந்தது.
அடுத்து என்ன சொல்லி இவர்களிடமிருந்து தப்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு கார் அவர்கள் பக்கத்தில் வந்து நின்றது.
வந்தது, நந்தினி!
இப்போது அவள் கோவை கலெக்டர்!
பார்த்திபன் அறிமுகப்படுத்தியதால் நல்ல பழக்கம்!
“ஏய் மது… இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” இயல்பாக இறங்கி வந்து அவள் கேட்க,
“இல்லக்கா… பஸ்ஸுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இவங்க வழி கேட்டுட்டு இருந்தாங்க…” என்று அவசரமாக அவள் புறம் போனாள். எப்படியாவது தப்பித்தாக வேண்டுமே!
நந்தினி அவர்கள் இருவரையும் நோக்கி,
“என்ன தம்பி? என்ன விஷயம்?” என்று கேட்க, ஒன்றுமில்லையென மறுதலித்தனர்! அவளது மாவட்ட ஆட்சியர் என்ற அடையாளம் அப்போது அவர்களை மௌனிக்க செய்திருந்தது.
“மது… வீட்டுக்குத்தான போகணும்?” என்று நந்தினி கேட்க,
“ஆமா நந்தினிக்கா…”
“சரி… கார்ல ஏறும்மா. நானே டிராப் பண்ணிடறேன்!” என்று நந்தினி அழைக்க, அவசரமாக ரதீஷையும் சஞ்சயையும் பார்த்தவள், காரில் ஏறினாள்.
அப்போதைக்கு அவள் தப்பினால் போதும் அவளுக்கு! நந்தினி வராவிட்டால் கண்டிப்பாக அவர்களை மீறி தான் ஏதும் செய்திருக்க முடியாது. இதே நந்தினி இடத்தில் வேறு யாராக இருந்தாலும் ரதீஷோ, சஞ்சயோ அவர்களை மதித்திருக்க மாட்டார்கள். நந்தினியின் பதவி, அதன் மேல் கொண்ட சிறு பயம் மட்டுமே!
அப்போது அவள் தப்பியது, மிகப்பெரிய சாதனை தான்!
“மது… ஏதோ குழப்பத்துல இருக்க போல…” மௌனமாக வந்தவளை பார்த்து நந்தினி கேட்க,
சங்கடமாக நெளிந்த மது, “இல்லக்கா… ஒண்ணுமில்ல…” என்று கூறினாள்.
ஆனால் எத்தனையோ பெண்களின் வாழ்க்கையை பார்த்தவள் நந்தினி. சித்ராவின் வாழ்வில் நடந்த அத்தனைக்கும் உயிருள்ள ஆதாரமாக இருந்தவள் அவள். சித்ராவை போன்ற பெண்களை காப்பாற்ற வேண்டியே இப்போது பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறாள். அத்தனைக்கும் உடன் நிற்கும் பார்த்திபனின் மேல் அவளுக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு.
சக்திவேலின் மேல் எவ்வளவு மரியாதை இருக்கிறதோ, அதே அளவு மரியாதை பார்த்திபனின் மேலும் உண்டு!
இருவருமே வித்தியாசமான ஆண்கள்!
மதுவின் பிரச்சனை பற்றி பார்த்திபன் மேலோட்டமாக கூறியிருந்தான். யோசனையாக பார்த்தாள்! மதுவின் முகம் இன்னும் தெளியவில்லை.
“மது… என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தி இருக்கா… அவ பேர் சித்ரா…” என்று ஆரம்பித்தவள், அவளது கதையை பொறுமையாக கூறி முடித்தாள்.
“இந்த மாதிரி சிச்சுவேஷன் பெண்களுக்கு எப்ப வேணுமானாலும் வரும். ஆனா அதுக்காக முடங்கிட கூடாது மது…” என்று இடைவெளி விட, மது தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.
அவளது நிலையும் அதுமாதிரியான ஒரு நிலை தானே?
என்ன… கணவன் இங்கு மிக மிக நல்லவன்!
அவனிடமிருந்தால் எத்தகைய நிலையையும் சமாளிக்க முடியும். இந்த தைரியம் தோன்றியவுடனேயே, தனது புகைப்படங்கள் இணையத்தில் பரவிவிட்டால்?
நினைத்துப் பார்க்கவே கூசியது, நடுங்கியது!
“எதுவா இருந்தாலும் தைரியமா பேஸ் பண்ணனும் மது. எதுக்குமே பயந்துட கூடாது. நம்ம பயம், நம்ம அழுகை, நம்ம கஷ்டம், இதுதான் நம்ம எதிரிகள் நம்ம கிட்ட எதிர்பாக்கற ஒண்ணு. அதுக்கு நாம இடம் தரவே கூடாது.” என்று நிறுத்தியவள்,
“நாம செமயா வாழ்ந்து காட்றதுதான், நாம வாழவே கூடாதுன்னு நினைக்கறவங்களுக்கு நாம கொடுக்கற தண்டனை…” என்று முடிக்க, மதுவின் இதழ் கடையோரம் புன்னகை மலர்ந்தது.
சிறு புன்னகை… சிறு நம்பிக்கை!
“என்ன சினிமா பஞ்ச் டையலாக் மாதிரி இருக்கா?” என்று நந்தினி சிரிக்க, இல்லையென்று தலையாட்டினாள் மது!
“தேங்க்ஸ் க்கா…” என்று அதே புன்னகையோடு கூற, மதுவின் தலையை தடவிக் கொடுத்தாள் நந்தினி!
அந்த நினைவில் மது நிலவை வெறித்துக் கொண்டிருக்க, பார்த்திபன் அருகில் வந்து நின்றான்.
மெல்லிய தென்றல் வீசிக் கொண்டிருந்தது. பௌர்ணமி நிலவு வானில் காய்ந்து கொண்டிருந்தது.
நிலவிலும் சிறு களங்கங்கள்!
ஆனால் அந்நிலவை பிடிக்காதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா?
இரவு வானின் ராணி அவள், நிலவு!
இவளும், இவனது ராணி தான்… மதுவை எதற்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டானே!
“ஹேய் பொண்டாட்டி…” அந்த குரலில் அமைதியிருந்தது, அழகிருந்தது, குறும்பிருந்தது, காதலிருந்தது, ஆசையிருந்தது, பாசமிருந்தது, அக்கறை எல்லையில்லாமலிருந்தது!
அத்தனையும் உணர்ந்தவளுக்கு அவளது குற்ற உணர்ச்சி இன்னும் பெருகியது. இத்தனை காதலோடு இருப்பவனுக்கு தான் பொருத்தமே இல்லையென்று மருகினாள். அதிலும் அவனது ‘ஏய் பொண்டாட்டி’ என்ற விளிப்பு… உருக்கியது அவளை!
அவளையுமறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் வழிய, அதை கண்டவனுக்கு பதறியது!
“ஏய் என்னடி?”
“இல்ல மாமூ… உனக்கு நான் மேட்சே இல்ல. நீ இவ்வளவு நல்லவனா இருக்காத…” அழுகையோடு அவள் கூற,
“இப்ப இதுதான் ரொம்ப பெரிய இஷ்யுவா? படுத்தாதடி..”
“மாமூ ப்ளீஸ்…” என்றவள், முகத்தை மூடிக் கொண்டு அழுகையில் கரைந்தாள்!
“தெரியும் மது…” அமைதியாக அவன் கூற, அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“நீயா சொல்வன்னு பாத்தேன். ஆனா என்கிட்ட ஷேர் பண்ற அளவுக்கு நாம இன்னும் குளோஸாகல போல!” என்று அலுங்காமல் அவளது மனதுக்குள் ஆட்டம் பாமை எறிய, லேசாக துளிர்த்த கண்ணீர், அருவியாக கொட்டியது!
“சாரி மாமூ…” என்று அழுகையில் குலுங்கியவளை, இழுத்து அணைத்துக் கொண்டான், அவளது கணவன்!
வேண்டுமட்டும் அழட்டும் என்று எந்த குறுக்கீடும் செய்யவில்லை.
மனதுக்குள்ளிருக்கும் துக்கத்தை இப்படியாவது வெளியேற்றட்டும் அவள்! இத்தனை நாட்களாக சேர்த்து வைத்த துயரம்!
கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறியவளை முதுகில் தடவிக் கொடுத்தான். அவளது அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஆசுவாசமானது!
“ம்ம்ம்ம்… இப்ப ஓகேவா?” அழுகை கொஞ்சம் அடங்கியவுடன் அவன் கேட்க, மெல்ல தலையாட்டினாள்.
“ஐ லவ் யூ டி பொண்டாட்டி. அது எப்பவும் மாறவே மாறாது…” அவளது முகத்தை நிமிர்த்தியவன், அவளது கண்களை நேராக பார்த்துக் கூற, விட்ட அழுகை இன்னும் அதிகமானது!
“இப்ப அழறத நிறுத்த போறியா இல்லையா?” சற்று இறுக்கமாக கடுப்பாக கூறினான்.
பின் எவ்வளவு நேரம் தான் அழுவது? அழுதால் பிரச்சனை தீர்ந்து விடுமா? அழுவது என்பது மனச் சுமையை கரைக்கலாம். ஆனால் அதுவே தீர்வாகாது. பிரச்சனைகளுக்கு தீர்வுகளை தான் யோசிக்க வேண்டுமே தவிர, அழுது கொண்டிருந்தால் தீர்வு கிடைக்கப் பெற்று விடுமா?
அவனது அந்த அணுகுமுறை வேலை செய்தது.
“இல்ல… அழல…” என்றவளால் அப்போதும் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பார்த்தான்… அவளது முகத்தை வளைத்து இதழ்களை சிறை செய்தான்!
முதலில் சற்று முரண்டினாலும், அந்த ஆழமான முத்தத்தில் தொலைந்து போனாள். தன்னை மறந்து அவனில் தொலைந்தாள் அவள்.
வளையாமல் நதிகள் இல்லை,
வலிக்காமல் வாழ்க்கை இல்லை.
வரும் காலம் காயம் ஆற்றும்!
நான் என்றால் நானேயில்லை
நீதானே நானாய் ஆவேன்!
கொஞ்சம் கொஞ்சமாக அவளது அழுகை குறைந்து, தேம்பலும் குறைய, மதுவை விடுவித்தான்.
“என்ன… இன்னமும் அழுகை வருதா?” குறும்பாக பார்த்திபன் கேட்க, அவளது மனவேதனை யாவும் மறந்து போனது!
“மாமூ…” சிணுங்கினாள்!
‘இவனிருக்கும் போது தான் எதற்காக வருந்த வேண்டும்?’ மனதுக்குள் தெம்பு வந்த அடுத்த கணமே, ‘அய்யோ அந்த புகைப்படங்கள், வீடியோக்கள்’ என்று நடுங்கியது மனது!
“சரி இப்ப பேசு…” என்று அவன் ஊக்கப் படுத்த, ஒரு பெரிய மூச்சை இழுத்து வெளியே விட்டவள், இனியும் மறைக்க வேண்டாம் என்று பேச முடிவு செய்தாள். சொல்வதை சொல்லி விடலாம். அதன் பின் வாழ்வதும், வாழ வேண்டாம் என்று முடிவு செய்வதும் அவன் தான் என்று முடிவெடுத்துக் கொண்டவளுக்கு மனதில் தெளிவு பிறந்தது.
எந்த கணவனுக்குக் தான் தன்னுடைய மனைவியின் மரியாதை காற்றில் பறக்க பிடிக்கும்? எப்படியும் சஞ்சயும் ரதீஷும் சும்மா இருக்கப் போவதில்லை. கண்டிப்பாக தன்னுடைய வாழ்க்கை அவ்வளவுதான் என்று அவளாகவே ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
“சஞ்சயும் ரதீஷும் வெளிய வந்துட்டானுங்க…” என்று கூறியவள், அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்க, அவனது முகம் எந்த விதமான மாற்றத்தையும் காட்டவில்லை!
“தெரியும் மது. அந்த கேஸ்ல சம்பந்தப்பட்ட ஒரு பொண்ணு கூட சாட்சி சொல்ல வரல. எவ்வளவோ ட்ரை பண்ணோம். ஆனா எங்க வாழ்க்கை முக்கியம்ன்னு கெஞ்சற பொண்ணுங்களை எப்படி கொண்டு வர்றது? அதான் விட்டுட்டோம்…” என்று இயல்பாக கூற,
“ஏன் மாமா விட்டீங்க? அவனுங்களை எல்லாம்…” என்று ஆத்திர மிகுதியில் பல்லைக் கடித்தபடி கூறியவள், உதடுகள் துடிக்க, “என் கையாலயே கொன்னு போடணும்ன்னு ஆத்திரம் வருது..” என்று கூற, அவளது முதுகை இதமாக தடவிக் கொடுத்தான்!
“புரியுதுடா…” என்றவனின் குரலில் அழுத்தம்., “மேல சொல்லு…”
“போன் பண்ணி மிரட்டறானுங்க…” நிலத்தை பார்த்தபடி அவள் கூற,
“தெரியும் மது…” அதற்கும் இயல்பாகவே பதிலாக கூறியவனை நிமிர்ந்து அதிர்வாக பார்த்தாள்.
“எப்படி மாமா? எப்படி தெரியும்?”
“எதுவா இருந்தாலும் என்னைத் தாண்டி தான் வரணும் மது!”
“ஆனா தெரிஞ்சுகிட்டே எப்படி மாமா அவனுங்களை விட்டீங்க?” அவளால் தாள முடியவில்லை.
“என்னோட பொண்டாட்டிக்கு எதுனாலும் சமாளிக்க தெரியனும்ன்னு நினைக்கறது தப்பா?” என்று கேட்க, அவளுக்குள்ளே புதிய ரத்தம் பாய்ந்தது!
“சமாளிப்பேன் மாமூ. ஆனா அவனுங்க ரொம்ப ரொம்ப கேவலமான பிறவிங்க. கண்ட மாதிரி போட்டோஸ் எடுத்து வெச்சு…” என்று ஆரம்பித்தவள், முடிக்க முடியாமல் திணறி நிறுத்த,
“நெட்ல போடறதுன்னா போட்டுக்கன்னு போய்ட்டே இருக்க வேண்டியதுதானே மது?”
“ஆனா அதெல்லாம்….” என்று ஆரம்பித்தவளால் முடிக்க முடியவில்லை.
“நியூட் போட்டோஸ். ஸ்பை கேமரா வெச்சு எடுத்தது…” என்றவனை முழுவதுமாக அதிர்ந்து பார்த்தாள். அவளால் அந்த அதிர்ச்சியை தாள முடியவில்லை. கணவனுக்கு இந்த விஷயம் தெரியும் என்பதையே தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதில் இதுவுமே தெரியும் என்றால்? நெஞ்சு வலிக்கும் போல இருந்தது. இதயத்தை ஏதோவொன்று பாரமாக அழுத்துவது போல!
“எப்… எப்படி உ… உனக்கு தெரியும் மாமூ?” குரல் பிசிறடித்தது!
“நம்ம மேரேஜுக்கு முன்னாடியே தெரியும்… அவனுங்களை அரெஸ்ட் பண்ணும் போது, அந்த போன் என்கிட்ட தானே இருந்தது. நான் தான் அவனுங்க போட்டோஸ் எல்லாம் மீடியாவுக்கு கொடுத்தேன். அப்ப உன்னோடதை எல்லாம் டெலீட் பண்ணிட்டேன் மது… ஆனா இப்ப அதை வெச்சு மிரட்டறதை பார்த்தா, கிளவுட்ல சேவ் பண்ணியிருக்கணும்…” என்றவன், மென்மையாக அவளை அணைத்துக் கொண்டான். “நான் இருக்கேன்டி பொண்டாட்டி…” என்று அவளது காதில் மெதுவாக உரைக்க, மது உறைந்துப் போயிருந்தாள். பேச முடியாமல் ஊமையாகி இருந்தாள்.
“அ… அதெல்லா…ம் பாத்தியா மாமூ?” நடுங்கியது அவளது குரல்!
அவளது முகத்தை கையிலேந்தியவன், நெற்றியில் இதமாக முத்தமிட்டு,
“அதெல்லாம் ஒரு விஷயமே இல்லடி…” என்று கூற,
“ஏன் பாத்த? ஏன் மாமூ பாத்த?” பைத்தியக்காரியை போல பிதற்றினாள்!
“ஒண்ணுமில்ல மது… நான் இருக்கேன்ல…”
“இல்ல… நீ பாத்துருக்க கூடாது…” அவளால் அழக் கூட முடியவில்லை, பிதற்றலையும் நிறுத்தவில்லை.
“சரி… ஓகே… அதை விடு… அடுத்து என்ன பண்றதுன்னு யோசி மது…”
“மாமூ… உனக்கு நான் தேவையா? இவ்வளவு கெட்டப் பொண்ணு தேவையா மாமூ?” சுயநினைவு இல்லை அவளுக்கு. அவளது நினைவில் அவளது மாமூ பார்க்கக் கூடாததை பார்த்து விட்டானே என்ற துக்கம் மட்டுமே நின்றது.
“தேவை தான்டி. ரொம்ப ரொம்ப தேவை. ஐ அம் இன்கம்ப்லீட் விதௌட் யூ மது. ஐ அம் இன் லவ். இன் லவ் வித் யூ. மேட்லி இன் லவ் வித் யூ. நீ இல்லைன்னா நான் இல்ல. என்னோட உயிரே இப்ப நீதான் மது. நீ மட்டும் தான்…” அவளது முகத்தை அழுத்தமாக பிடித்து அவளை சுய நினைவுக்கு கொண்டு வர, உலுக்கினான்!
அவனுக்கு பயம் பீடித்துக் கொண்டது!
“மாமூ… நான் உனக்கு வேணா…” என்றவள் மடங்கி அமர்ந்து கதற, அவனால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
“இல்லடி… நான் இருக்கேன்ல பாத்துக்கறேன்…”
“இன்னைக்குக் கூட அந்த போட்டோஸ் வெச்சுத்தான் என்னை மிரட்டினானுங்க. கெ… கெஸ்ட்.. கெஸ்ட் ஹவுஸ் வரலைன்னா நெட்ல போட்டுவேன்னு…” முடிக்க முடியாமல் இன்னும் கதறல் அதிகமாக, அவனது முஷ்டி இறுகியது.
“சரி. என்ன பண்ணலாம்ன்னு நினைக்கற?” என்று அவன் கேட்க, அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.
அவனது முகம் கோபத்தில் ஜ்வலித்தது.
அழுகையை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தியவள், “போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கப் போறேன்…” திடமாக, உறுதியாகக் கூற,
“சரி அப்புறம்?”
“போலீஸ் அவனுங்களை புடிச்சு உள்ள போடட்டும்…”
“சரி… அப்புறம்?”
“கேஸை நடத்தலாம் மாமூ…”
“பின்வாங்க மாட்டல்ல?”
“அப்பவே நானும் வர்றேன்னு தான் சொன்னேன். நீங்க தான் கேக்கல…” என்று அவள் கூற, அவனால் மறுத்துப் பேச முடியவில்லை. அன்னைக்காக, அக்காவுக்காக என்று சொல்லிக் கொண்டாலும், தன் மனைவியின் பெயர் பொதுவெளியில் அடிபடுவதை அவன் விரும்பவில்லை.
அதுதான் நிஜம்!
இப்போது அவளது உறுதி அவனை அசைத்துப் பார்த்தது!
“கோர்ட்ல கிராஸ் எக்ஸாமினேஷன் நடக்கும் மது…”
“சோ வாட்? நான் ஃபேஸ் பண்றேன்…”
“அசிங்கமா கேள்வி கேப்பானுங்க. உன்னோட மனஉறுதியை டெஸ்ட் பண்ண நிறைய நடக்கும்…”
“பரவால்ல மாமூ…” என்றவள், “அதனால உனக்கு கஷ்டமா?” என்று பரிதாப முகத்தோடு கேட்க, அவனுக்கு உருகிப் போனது.
“ச்சே… இல்லடா… எதுன்னாலும் நான் கூட நிற்பேன்…” என்றவன், “நீ சொன்னாலும் சரி… சொல்லாம இருந்தாலும் சரி…” என்று கூறி அவளது முகத்தைப் பார்த்தவன், “நந்தினி அந்த சமயத்துல எப்படி அங்க வந்தாங்கன்னு உனக்கு தெரியாதுல்ல?” என்று கேட்க, ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.
“மாமூ…”
“நீ எங்க இருந்தாலும் என்னோட கவனம் முழுக்க உன் மேல தான் இருக்கும் மது…” என்றவனை, “மாமூ…” என்று கதறியபடி கட்டிக் கொண்டாள்.
இங்கிவனை யான் பெறவே, என்ன தவம் செய்து விட்டேன்?
“உன்கிட்ட அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கப்பவே எங்களுக்கு நியூஸ் வந்துடுச்சு. ஆக்சுவலா இங்க வந்ததுல இருந்தே ஷாடோ உனக்கு போட்டிருக்கேன் மது. எப்ப இருந்தாலும் யார் மூலமா வேணா பிரச்சனை வரும்ன்னு கணக்கு போட்டிருந்தேன். ஆனா ஷாடோ போட்டது தெரிஞ்சா நீ பயப்படுவன்னு தான் நான் உன்கிட்ட சொல்லலை. இல்லைன்னா உன்னை தனியா பஸ்ல வான்னு சொல்வேனா?” என்று புன்னகைக்க, அவள் ஆச்சரியமாக பார்த்தாள்.
“எனக்கு அவங்க உன்னை காண்டாக்ட் பண்ணது தெரியும். ஆனா நீயா என்கிட்ட வந்து சொல்வன்னு எதிர்பார்த்தேன் மது…”
“அந்த போட்டோஸ பாத்ததுல மண்டை ஃபிரீஸ்ஸாகிடுச்சு மாமூ. அதைப் போயி நான் எப்படி உன்கிட்ட காட்டுவேன்?” என்று திணறியவள், “அவ்வளவு அசிங்கமா இருந்துச்சு” என்று மருகினாள்.
அவளது முதுகை மெதுவாக தட்டிக் கொடுத்தான் பார்த்திபன்.
“இந்த தயக்கத்தை தான் இந்த மாதிரி ஆளுங்க யூஸ் பண்ணிக்கறாங்க. எந்த விஷயமா இருந்தாலும் வீட்ல சொல்லணும். என்ன கொஞ்சம் சண்டை வருமா? வந்துட்டு போகுது. இந்த மாதிரி ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு வாழ்க்கையே தொலைக்கறதுக்கு சின்ன சண்டை ஒண்ணும் பெருசு கிடையாதுடி…” என்று கூறியவனை குறுகுறுவென பார்த்தவள்,
“ஓகே மாஸ்டர்…” என்று கலாய்க்க,
“மாஸ்டரா? உடம்பு முழுக்க கொழுப்புடி உனக்கு…”
“ம்ம்ம்… அப்புறம்…” என்று கேட்க,
“அப்புறம்… வேறென்ன? இத்தனை நாளா என்னை அலைய விட்டல்ல… அதுக்கெல்லாம் காம்பன்ஸேட் பண்ணு…” என்று அவளை அள்ளிக் கொண்டான்.
வெகு நாட்களுக்கு பிறகு, அன்றுதான் அவளால் அமைதியாக உறங்க முடிந்தது! ஆனால் அவனது உறக்கம் பறிபோனது!
நடு இரவில் எங்கேயோ சென்று விட்டு, விடியற்காலையில் வீடு வந்து சேர்ந்தான்!
****
அன்று மதுவின் முகம் மிகத் தெளிவாக இருந்தது. காலையிலேயே குளித்து முடித்து, பார்த்திபனுக்கு பிடித்த அந்த சிகப்பு நிற புடவையை உடுத்திக் கொண்டு தயாராகி இருந்தாள்.
டிஃபன் சாப்பிட கீழே வந்தவனுக்கு ஆச்சரியம். கல்லூரி போக, புடவை உடுத்தியதில்லை அவள்!
“ஏய் என்னடி… புடவைல கலக்கற?” என்று கேட்டபடி இருக்கையில் அமர, அவனுக்கு பரிமாறிவிட்டு, தானும் அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.
இப்போது மனைவிக்கு பரிமாறுவது கணவனின் முறையானது!
“போலீஸ் ஸ்டேஷன் போலாம் மாமூ…” நிர்சலனமான முகத்தோடு அவள் கூற,
“அப்படியா…” என்றவன், குறும்புப் புன்னகையோடு, கையிலிருந்த ரிமோட்டை கொண்டு டிவியை ஆன் செய்ய, பிரேக்கிங் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது.
“ரதீஷ், வயது 26, சஞ்சய் வயது 25. இருவரின் மேலும் இருந்த கற்பழிப்பு குற்றசாட்டை விசாரிக்க வேண்டி காவல்துறை அவர்களை காவலில் எடுத்து இருந்தது. போலீசாரிடமிருந்து தப்பிக்க நினைத்து, அவர்களிடமிருந்து துப்பாக்கியை பறித்து அவர்களை சுட்டதால், வேறு வழியின்றி, காவல் துறை அதிகாரிகள், அவர்களின் சொந்த பாதுகாப்புக்காக அவர்களை சுட்டுக் கொன்றனர்.
இதில் சஞ்சய் அமைச்சர் ஜெயச்சந்திரனின் மகனாவார். சமீபத்தில் நடந்து முடிந்த, கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் சாட்சி கூற யாருமில்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கை நேரடியாக கண்காணித்த மாவட்ட ஆட்சியர் நந்தினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது! டிவிட்டரில் ஹாஷ்டாக் நந்தினி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.”
சேனலில் செய்தியை படித்து முடித்தப் பிறகு, “இந்த ரெண்டு பேரையும் என்கவுன்ட்டர் பண்ணது சரியா தப்பா?” என்ற கேள்விக்கு,
“இவனுங்களையெல்லாம் அங்கேயே சுட்டுத் தள்ளனும் சார். எதுக்கு விசாரணை எல்லாம்? அந்த வீடியோல பாத்தப்பவே ரத்தம் கொதுச்சுது. ஒவ்வொரு பொண்ணும், அண்ணா என்னை விட்டுடுங்க அண்ணான்னு கதறினப்ப இவனுங்க இரக்கம் காட்டினானுங்களா? இல்லையே! அந்த கேசையே இல்லாம ஆக்கிட்டாணுங்களே. கேஸ் போட்டு சட்டம் தன் கடமையை செய்யும்ன்னு பொறுமையா இருக்கறது வேஸ்ட். அப்பப்பவே தண்டனை கொடுக்கணும். இப்ப கலெக்டர் சரியான ஆர்டர் கொடுத்து இருக்காங்க. இனிமே இன்னொரு பொண்ணை தொடனும்ன்னு நினைக்கறவன் கதறனும்…” ஒரு பெண் ஆவேசமாக கூற, சுற்றி இருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர்.
இது போலவே மற்ற அனைவரின் கருத்துக்களும் இருக்க, அந்த அந்த ராட்சசர்களின் இறப்பை தீபாவளியாக கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
உறைந்துப் பார்த்துக் கொண்டிருந்த மதுவின் முகத்தில் அத்தனை சந்தோஷம். அத்தனை மகிழ்ச்சி. முகம் விகசிக்க பார்த்துக் கொண்டிருந்தவளின் கையை பிடித்து, எதையோ கொடுத்தான் பார்த்திபன்.
கையை விரித்து பார்க்க, அது பென்டிரைவ், சிம் கார்டுகள்!
“கிளவுட்ல இருந்ததை எல்லாம் நந்தினி டெலீட் பண்ணியாச்சு. இது மாஸ்டர் காப்பி. வேற எங்கயாவது ஸ்டோர் பண்ணி இருக்கானுங்களான்னு அவங்க பெர்சனலா பார்த்துட்டு இருக்காங்க.” என்று வெகு இயல்பாக கூற, அவனை ஆச்சரியமாக பார்த்தாள். கண்களில் ஆனந்த கண்ணீர்!
“நேத்து உன்னை கூட்டிட்டு வந்தப்பவே, போலீஸ் ஸ்க்வாட் அவனுங்களை தூக்கிடுச்சு. நைட் நானும் ஸ்பாட்டுக்கு போனேன் மது…” என்று அவன் கூறுகையில் ஆச்சரியம் தாளவில்லை அவளால்.
“பென்டிரைவ், போன் மட்டும் நான் எடுத்துட்டு வந்துட்டேன். மத்ததை எல்லாம் நந்தினி டிஸ்போஸ் பண்ணிட்டாங்க..”
“நந்தினி ரொம்ப கிரேட் மாமூ. ஷி இஸ் என் இன்ஸ்பிரஷன்…”
“எஸ்..”
“ஆனா எப்படி மாமூ? இப்படி இருக்கீங்க?” முகம் விகசிக்க அவள் கேட்க,
“உன்னை அழ வெச்சவனை நான் சும்மா விடுவேனாடி பொண்டாட்டி?” என்று புன்னகைத்தான்!
சாப்பிடுவதை விட்டு, எழுந்தவள் கை கழுவ,
“ஏய் சாப்பிடுடி…” என்று புன்னகையோடு பார்த்திபன் கூற,
“எனக்கு பசிக்கல மாமூ. எல்லாமே நிறைஞ்சு போச்சு…” என்று கண்ணீரோடு கூறியவள், “ஆனா இந்த மிருகங்களுக்கு இந்த பனிஷ்மெண்ட் தான் சரி…” தனக்குள்ளாக கூறினாளா, கணவனிடம் கூறினாளா? அவளே அறியவில்லை. ஆனால் மனம் நிறைந்திருந்தது!
பார்த்திபன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“ஐ லவ் டா மாமூ…”
“ம்ம்ம்… எனக்கு கேக்கல…”
“ஐ லவ் யூ…” இன்னும் கொஞ்சம் சப்தமாக கூற,
“ம்ஹூம்… கேக்கல…”
“ம்ம்ம்.. போடா பக்கி…” என்றவள், தப்பித்து ஓட முயல, அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன், முரட்டுத்தனமாக அவளது இதழ்களை கைப்பற்றினான்.
பார்வை போகிற தூரம் நீ இன்றி யார் வேண்டும்!
பாவை ஊன் உயிர் எங்கும் உன்னோடு ஒன்றாகும்!
ஒரு கரை நீயாக மறு கரை நானாக –
கரை புரண்டே ஆறாகினோம்!
*****
“பார்த்தி… கிணத்துக்குள்ள நீ மட்டும் இறங்கு… புள்ளய இறக்கி வுற்றாத… புரியுதா?”
தோட்டத்திலிருந்த கிணற்றுக்கு குளிக்க போகிறேன் என்று பார்த்திபன் கூறியதிலிருந்து நான்காவது முறையாக கூறிவிட்டார் சகுந்தலா.
அவருக்கு பயம்!
இந்த பெண்ணுக்கு பயம் என்பதே கிடையாது என்பது தெரியும். மனைவிக்கு என்றால் பார்த்திபன் நன்றாகவே ஜால்ரா தட்டுவான் என்பதும் தெரியும். அதை கொண்டு, மது கிணத்துக்குள் இறங்கி வைத்துவிட போகிறாளோ என்று பயந்து கொண்டுதான் கூறினார்.
இருவருமாக தோட்டத்துக்கு போவதாக கூறியதிலிருந்து தான் இந்த ராமாயணம். முதலிலெல்லாம் அவனுடைய செட் பையன்கள் எல்லாம் சேர்ந்து கொள்வார்கள்! அதில் மாமன் மச்சான், அண்ணன் தம்பி என்று அனைவரும் அடக்கம். எல்லாருமாக சேர்ந்து போகும் போது, கச்சேரி களை கட்டும்.
இப்போதெல்லாம் இருவர் மட்டும் தனியாக!
தான் மட்டும் போவதாக கூறியபோதும், பிடிவாதமாக தானும் வந்தேயாக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று சாதித்துக் கொண்டாள் மது!
“நீ பம்பு செட்ல வேணா குளி. என்கூட கிணத்துல இறங்கிடலாம்ன்னு கனவு காணாத…” சகுந்தலா முன்னே அவளைக் கடித்தாலும், அவளில்லாமல் பார்த்திபன் கிணத்துக்குள் இறங்கி விடுவானா என்ன?
குறும்பாக கண்ணை சிமிட்டியவள், உதட்டை மடித்து புன்னகைக்க, அவளது கணவனுக்கு கிறுக்குப் பிடித்துக் கொண்டது.
அவள் இப்படி செய்யும் போதெல்லாம் அவன் பாடு திண்டாட்டம் தான்!
திருமணமாகி ஒரு வருடம் முடிந்து விட்டது ஆனாலும் அந்த மயக்கமும் கிறக்கமும் சற்றும் மாறவில்லை இருவருக்குள்ளும்!
மது படித்துக் கொண்டிருந்தாள்.
நடுவே மாடலிங்கும் போய்க் கொண்டிருந்தது. அவளுக்கு மிகவும் பிடித்த விளம்பரங்களை மட்டும் ஒப்புக் கொண்டு செய்து கொடுப்பாள். மற்றபடி, ராம்ப் வாக்கை தவிர்த்து விட்டாள் அவளாகவே! அவளது எதிர்காலத் திட்டம் ஒரு விளம்பர கம்பெனி. அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாள். கண்டிப்பாக செய்து விடுவாள் என்ற தைரியம் அவளுக்கு இருக்கிறதோ இல்லையோ… அவளது கணவனுக்கு இருந்தது.
காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவிலும் கைக்கொடுத்தாக வேண்டுமா என்ன? அவனும் அவளுக்கு கொடுக்கலாமே!
கைக்கொடுத்தான்… கொடுக்கிறான்… இனியும் கொடுப்பான்!
ஷாலினி இப்போது விஸ்காம் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளால் மாடலிங்கில் எதிர்நீச்சல் போட்டு ஜெய்க்க முடியவில்லை. ஆனால் அவளுக்கு ஏமாற்றங்கள் ஏதுமில்லை. அவளது திட்டம், ஒரு மென்பொருள் நிறுவனம் ஒன்றை துவங்க வேண்டும். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் போராடலாம். அவளும் போராடுவாள்!
ஷிவானி இப்போது பிரபலமான நடிகை, டாப் மாடலும் கூட! இவளை போன்ற நரிகள் தங்கள் இருப்பை எப்படியாவது தக்க வைத்துக் கொள்வார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று ஒரு பெரிய சுற்றாக சுற்றிக் கொண்டிருக்கிறாள். பத்தொன்பது வயதிலேயே தனக்கு இதுதான் தேவை என்று முடிவு செய்து கொண்டு, அதற்கு எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுத்து போகலாம் என்று அவள் முடிவெடுத்த பின், சரி தவறென்று யார் கூறுவது?
நந்தினிக்கு இப்போது சென்னையில் போஸ்டிங். வருடத்துக்கு ஒருமுறை மாற்றல் வருவது வாடிக்கையாகி இருந்தது. காரணம் அவளது நேர்மை! அவளுக்கு என்ன பிரச்சனை என்றாலும் தோள் கொடுக்க சக்திவேலோடு, இப்போது தோழனாக பார்த்திபனும் இருக்க அவளுக்கென்ன கவலை?
அவளது வாழ்க்கை சக்திவேலோடு மிகப் பிரமாதமாக போய்க் கொண்டிருந்தது. ஜெயசந்திரன் தான் அவள் மேல் வஞ்சம் வைத்து காத்திருந்தார். ஆனால் பின்னால் இருப்பது பார்த்திபன் என்று அறிந்தவுடன் மனிதர் மௌனமாகி விட்டார். முதலிலேயே அவனிடம் எவ்வளவோ கெஞ்சித்தான் மகனை காப்பாற்ற முடிந்தது. இப்போது அதை அறியாமல் மீண்டும் மது மேல் கைவைத்ததால் மகனுக்கு வந்த நிலை என்பதை தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டார்.
பார்த்திபன் கிணத்துக்குள் குதிக்க தயாராகிக் கொண்டிருக்க, அவனது செல்பேசி அழைத்தது. எப்போதும் போல அவனை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மது!
உடற்பயிற்சியால் இறுகிய உடல். நரம்புகள் புடைத்த கைகள். அந்த கைகளுக்குள் சிக்கிய கணங்களெல்லாம் அவளது நினைவில் வந்து போக, முகம் சிவக்க அவனைப் பார்த்தாள்.
செல்பேசிக்கு காதை கொடுத்திருந்தவன், கண்களை மனைவி மேல் வைத்திருக்க, அவனது முகம் யோசனையால் சுருங்கியது!
பேசி முடித்தவன், அவளருகில் வர, அம்மாச்சி
“என்ன மாமூ? என்னாச்சு?” என்னவாயிற்று என்ற பயம்.
“ஒரு பெரிய ஆர்டர். இனிமே கொஞ்சம் பிஸியா இருப்பேன். அதான் என்ன பண்றதுன்னு தெரியலடி பொண்டாட்டி..!”
“ஷப்பா நான் ஃப்ரீயா இருப்பேன்…” கேலியாக கூற, அவளுக்கு நெருக்கமாக வந்தவன், அவளது இடையை வளைத்து தன்னோடு சேர்த்து கொண்டான்.
“ஸ்ஸ்ஸ்ஸ்… மொரட்டு கை… விடு மாமூ…” அவனது கையை விலக்க முயல… அவனது பிடி இன்னமும் இறுகியது.
“ஏன்டி ஃ பிரீயா விடறதுக்கா உன்னை கட்டுனேன்?”
“பின்ன வேற எதுக்காம்?” குறும்பாக உதட்டை சுளிக்க, அவளது உதட்டை பற்றியவன்,
“இப்படி பண்ணியே என்னை உசுப்பேத்தி விட்டுட்டு இருக்க…” என்றபடி அவளிடம் இன்னும் கொஞ்சம் நெருங்க முயல, அவனை அவசரமாக தள்ளிவிட்டவள்,
“யோவ் மாமா… உனக்கு பப்ளிக்ல ரொமான்ஸ் கேக்குதா?” என்று சிரித்தபடி தப்பிச் செல்ல,
“ஒழுங்கா வந்துடு… இல்லைன்னா உனக்குத்தான் சேதாரம் அதிகம்…” கொஞ்சுவதை கூட மிரட்டலாக செய்யும் முரடனவன்!
“பேபிக்கு ஓகே சொல்லு… நான் வர்றேன்…” அவனிடம் பேரம் பேசியவளை, காதலாக பார்த்தவன்,
“ஓகே…” என்று புன்னகையோடு கூற,
“யாஹூஊஊஊ…” பாய்ந்து சென்று பார்த்திபனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள், மது!
‘க்கிட்ட கவிதை மரபுக் கவிதை
இவள் மரபுகளை மீறிய புது கவிதை!’
அந்த கவிதைக்கு சொந்தக்காரன் இவன்!
இனியெல்லாம் சுகமே!