Puthu Kavithai 9

Puthu Kavithai 9

  • admin
  • January 24, 2020
  • 0 comments

9

மதுவந்தி கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. பிகாம் எடுத்திருந்தாள், வைஷ்ணவா கல்லூரியில்!

எஞ்சினியரிங் எடுக்கலாமே என்று அனைவரும் கூறியபோது எனக்கு இதுதான் வசதி என்று தெளிவாக முடித்துவிட்டாள். பின் என்ன பேச முடியும்? அவளிஷ்டம் என்று வினோதகன் விட்டுவிட, பானுமதி தான் பொருமித் தீர்த்து விட்டார்.

“அப்பாவுக்கு ஹெல்ப் பண்றதுக்காவது ஒழுங்கா எஞ்சினியரிங் சேரலாமே மது! அப்படி இல்லைன்னா வேற ஏதாவது ப்ரொபஷனல் கோர்ஸ்ஸாவது படிக்கலாமே. காமர்ஸ் எடுத்து என்னடி பண்ண போற?” என்று அவளை உலுக்கியவரை,

“ம்மா… ஏன் காமர்ஸ்க்கு என்ன? கெட்ட சப்ஜெக்டா? எல்லாரையும் மாதிரி நானும் எஞ்சினியரிங்ல சேர்ந்துட்டு, நாலு வருஷம் அடிமையாட்டம் உக்கார்ந்து படிக்க முடியாது. எனக்கு என்ஜாய் பண்ணி படிக்கணும். படிக்கறதே தெரியாம! அதுக்கு இது போதும்…” அவளது பதில் பானுமதியை இன்னும் தான் புலம்ப விட்டது.

“உனக்கு மாடலிங் பண்ண ஃப்ரீயா இருக்கனும்ன்னு உண்மையைச் சொல்லிட்டு போயேன்! எதுக்கு அதையும் இதையும் பேசிட்டு இருக்க?” கடுப்பாகக் கூறினார். அவர் இதுபோலக் கூறாதவர் தான். பெண்களின் சுதந்திரத்தை பேணுபவர் தான். ஆனால் பார்த்திபன் கடிந்து விட்டுப் போனபிறகு, அவனை எதிர்த்துச் செயல்பட அவருக்குத் தயக்கமாக இருந்தது.

அவன் மாடலிங் வேண்டாம் எனும்போது, இந்தப் பெண் அதைத் தான் செய்வேன் என்று கூறுவதை அவரால் ஆமோதிக்க முடியவில்லை. இப்போதெல்லாம் மதுவின் செயல்பாடுகளைச் சற்று உற்றுநோக்கிக் கொண்டுதான் இருந்தார். ஆனால் அந்தச் சமூகத்தில் பழகிப் போன பானுமதிக்கு எதுவும் தவறாகத் தெரியவில்லை.

“உனக்கு உன் பொண்ணு முக்கியமா? இல்லன்னா பொதுச் சேவை முக்கியமா? அவ என்ன பண்றான்னு முதல்ல பாரு…” என்று கடுகடுத்துவிட்டு போனவனின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவரது காதில் ஒலித்தது.

எப்படி இருந்தாலும் தனது சகோதரனின் ஆதரவு தனக்குத் தேவை என்பதில் பானுமதிக்கு சந்தேகம் இல்லை. அதுவும் இல்லாமல் இத்தனை நாட்களாக இல்லாமல் இப்போதுதான் கசப்புகளை மறந்து விட்டுத் தனது சகோதரன் தன்னிடம் பேசுவதும் கூட. அதைக் கெடுத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.

மதுவின் உடை விஷயத்திலும் சற்றுக் கறாராகத்தான் இருந்தார். ஆனால் அவரைச் சமாளிப்பது என்பது மதுவுக்கு கைவந்த கலையாகிவிட்டது.

மது தெளிவாக இருந்தாள். படிப்பையும் அவள் விட விரும்பவில்லை. தனது எதிர்காலத்துக்குப் படிப்பும் அவசியம் என்ற தெளிவோடு இருந்தவள், மாடலிங் தனது தொழில் என்பதை வரையறுத்துக் கொண்டாள். அதற்காகத் தன்னுடைய தகுதிகளை வளர்த்துக் கொள்ளும்போது படிப்பில் ஆழ்ந்து போக முடியாது என்ற உறுதியை அவள் கைவிடவே இல்லை.

சகுந்தலா அவளிடம் பேசிப் பார்த்தார். ‘அம்மாச்சி’ என்ற அவளது ஒரே வேண்டுதல் குரலில் அவர் அடங்கி விட்டார். பானுமதி முடிந்தளவு அவளிடம் போராடிப் பார்த்துவிட்டு, பார்த்திபனுக்கு அழைத்துக் கூறிவிட்டார். அவனும் கூடப் பேசியில் சற்று பொறுமையாகவே பேசினான்.

“ஏய் பொடுசு… எத்தனையோ பேரை நாம எஞ்சினியரிங் படிக்க வைக்கிறோம்! ஆனா நீ என்னன்னா காமர்ஸ் எடுக்கறேன்னு சொல்ற?”

“மாமா… எல்லாரும் எஞ்சினியரிங் படிச்சா, நாமளும் படிக்கனும்ன்னு என்ன அவசியம் இருக்கு? எனக்கு அதுல இன்ட்ரஸ்ட் இல்ல மாமா…”

“இந்த வயசு அப்படி மது! நாம செய்யறதுதான் சரின்னு தோணும். நானும் அந்த வயசை தாண்டிதான் வந்திருக்கேன். உன்னுடைய பீலிங்க்ஸ் புரியுது. ஆனா லைப்ல பெரியவங்க சொல்றதும் சரிங்கறது இன்னும் கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறம் தான் புரியும்…” வெகுபொறுமையாக அவன் கூற,

“ஹலோ… நீங்க என்னமோ கிழவன் ரேஞ்சுல பேசறீங்க. என்னைவிட லெவன் இயர்ஸ் தான் அதிகம்! அதுக்குள்ள நூத்து கிழவன் மாதிரி இவ்வளவு அட்வைஸ் பண்றீங்களே மாமா…” என்று அவள் கிண்டலடிக்க, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாலும் அவளிடம் சற்று கறாராகப் பேசினான் பார்த்திபன்.

“ஒய் பொடுசு… என்ன இருந்தாலும் நான் உன்னைவிட ரொம்பப் பெரியவன்! என்னுடைய அனுபவமும் உன்னுடைய அனுபவமும் ஒன்னு கிடையாது! ஒழுங்கா மரியாதையா சொல்ற பேச்சைக் கேள்! இல்லைனா வாயைத் தச்சு வெச்சுடுவேன்…”

“வாயைத் தைப்பீங்களா? எப்படி மாமா? அந்த மெத்தடை எனக்கும் சொல்லித் தாங்களேன்…” அதே குறும்புக்குரலில் அவள் கேட்க,

“உனக்கு வெச்ச அடி பத்தாதுடி! ரொம்ப ஓவரா வாயை வளர்த்து வெச்சு இருக்க… சென்னைக்கு வரும்போது இருக்கு உனக்கு மையார் பூசை…” கேலியாக அவன் மிரட்ட,

“ம்ம்ம்… எங்க கை மட்டும் என்ன பூப்பறிச்சுட்டு இருக்குமா? எங்களுக்கும் அடிக்கத் தெரியும். ஜாக்கிரதை…” சிறு பிள்ளைபோல எச்சரித்தாள்.

“அச்சோ பொடுசு… நான் பயந்தே போய்ட்டேன். என்ன நீ இப்படி எல்லாம் மிரட்டுற?” பயந்தவனைப் போல நடிக்க,

“ம்ம்ம் அது… அந்தப் பயம் எப்பவும் இருக்கணும்…” என்று அவள் சிரித்தாள்.

மணி இரவு எட்டாகி ஐந்து நிமிடங்களைக் கடந்திருந்தது.

காரிலிருந்து இறங்கியவாறே அவளுக்கு அழைப்பு விடுத்திருந்தவன், தோட்டத்திலிருந்த கல்லிருக்கையில் அமர்ந்தபடி அவளிடம் பேசிக்கொண்டிருந்தான். அருகில் மூங்கில் கழிகளால் வேய்ந்திருந்த முல்லைப் பந்தலிலிருந்து சுகந்தமான வாசம் வீசியது.

முல்லைப்பூ வாசம்!

அருகிலேயே செண்பகமும், பாரிஜாதமும், ஜாதி மல்லியும், பவளமல்லியும்!

ஆழ்ந்து ஒருமுறை சுவாசித்தான்.

பானுமதி மதுவை அழைத்துக்கொண்டு வந்தபோதெல்லாம், மது இந்த தோட்டமே கதியென்று தான் இருப்பாள். சொட்டு நீர் பாசன குழாய்கள் இருந்தாலும் அவள் கையால் நீர் ஊற்றினால் தான் அவளுக்குத் திருப்தி.

அடுத்தமுறை விடுமுறைக்கு மது வரும் வரை, முல்லையும் மல்லியும் காத்திருப்பதாக அவனுக்குத் தோன்றும்.

பேசாவிட்டாலும் இருவரையும் அவ்வபோது இப்படித்தான் அவன் கவனித்துக் கொள்வது!

சமையல்கட்டிலிருந்து அவன் வருவதைக் கவனித்திருந்த செல்வி, அவசரமாகத் தண்ணீரையும் காபியையும் சின்னதம்பியிடம் கொடுத்து விட்டாள்.

சில்லென்ற தென்றல் தீண்ட, பூக்களின் வாசத்தோடு வெகுநாட்களுக்குப் பிறகு அந்தச் சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருந்தான். பேசிக்கொண்டிருந்தாலும் பௌர்ணமி நிலவும், பசுந்தோட்டமும், இரவுநேர தென்றல் காற்றும் அவனை அந்தச் சூழ்நிலையை ரசிக்கும் ரசிகனாக்கி இருந்தன.

காபியை எடுத்துக் கொண்டவன், நின்றுகொண்டிருந்த சின்னதம்பியை கேள்வியாகப் பார்க்க, “டிஃபனுக்கு…” என்று தயங்கினான் சின்னதம்பி.

காதிலிருந்து செல்பேசியை, “ஒரு நிமிஷம் மது…” என்று கூறிவிட்டு எடுத்தவன், “எனக்கு டிபன் வேண்டாம். நீயும் செல்வியும் கிளம்புங்க…” என்று கூறிவிட்டு, மீண்டும் செல்பேசியைக் காதுக்குக் கொடுத்தான், தனதறைக்குப் போய்க் கொண்டே!

சகுந்தலா உறவினர் திருமணத்திற்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர், இன்னும் வரவில்லை!

“இந்த ஆத்தா வேற இன்னும் காணோம்…” என்று செல்வி தவிக்க, காபியை கொடுத்துவிட்டு வந்தவன், “சின்னவர் டிபன் சாப்பிட்டுட்டாராம் செல்வி. உன்னையும் என்னையும் வீட்டைச் சாத்திட்டுக் கிளம்பச் சொன்னாரு…” என்று அவளது வயிற்றில் பாலை வார்த்தான்.

விட்டால் போதும் என்று செல்வி தப்பித்து ஓடியதைப் பார்த்தபோது சின்னதம்பிக்கு மட்டுமல்ல, பார்த்திபனுக்கும் கூட முகத்தில் புன்னகை மலர்ந்தது. வேடிக்கையாகக் கூட இருந்தது.

‘நானென்ன அவ்வளவு கொடூரமாகவா இருக்கிறேன்’ என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டவன், சிரித்தவாறு செல்பேசியை மீண்டும் காதுக்குக் கொடுத்து, விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பித்தான்.

“மது… ஜோக்ஸ் அப்பார்ட்… நீ நல்ல பொண்ணுதான். ஆனா தேவையில்லாத ப்ரெண்ட்ஷிப், தேவையில்லாத பழக்கம், தேவையே இல்லாத வேலை. இதெல்லாம் எதுக்கு?” சற்று இடைவெளி விட்டு,

“நல்ல பிள்ளையா படிச்சமா. பிசினஸ பார்த்தமா, இல்லைன்னா வேலைக்குப் போனோமா… பேரன்ட்ஸ் பார்த்து வைக்கிற பையனைக் கல்யாணம் பண்ணினோமான்னு பிரச்சனை இல்லாம இருக்கறதுல உனக்கென்ன கஷ்டம்? கான்றவர்சி அதிகமா இருக்கப் ஃபீல்ட்தான் வேணும்ன்னு அடம் பிடிக்கற…”

“எந்தப் ஃபீல்ட்ல தான் கான்றவர்சி இல்ல? எங்க போனாலும் நமக்கு முன்னாடி ஒரு பிரச்சனை சம்மணம் போட்டு உட்கார்ந்து இருக்கும் மாமா…”

“இருக்கலாம். ஆனா இந்தப் ஃபீல்ட் உனக்கு வேண்டாம். அவ்வளவுதான் சொல்ல முடியும்! ஒழுங்கா பேச்சைக் கேளு மது…” அவனுக்குப் பொறுமை போய்விடும் போல இருந்தது.

ஆனாலும் இந்தப் பெண் இவ்வளவு பேச வேண்டாம் என்று தோன்றியது. ‘புத்திசாலி… ஆனால் புரிந்து கொள்ள மறுக்கும் புத்திசாலி’ என்று அவனது மனமே அவளுக்குச் சான்றிதழ் கொடுத்தது.

அறையில் அணிந்திருந்த உடையை மாற்றிக்கொண்டே, அவளிடம் பேசினான். பேன்ட் ஷர்ட்டை கழட்டி அந்த மர உடைத்தாங்கியில் மாட்டியவன், கைலிக்கு மாறி மேலே லூசான பனியனோடு முற்றத்தின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் நீளமான ஹாலில் நடை பயின்று கொண்டே செல்பேசியைத் தனது காதுக்குக் கொடுத்திருந்தான்.

“அப்படீன்னா நீங்களும் வழிக்கு வாங்க மாமா. உங்க மேரேஜ் ப்ரோபோசலை ஓகே பண்ணுங்க. நானும் நீங்க சொல்ற மாதிரி கேட்கறேன்…” என்று அவனைக் கிடுக்கிப் பிடி அவள் போட, அவன் மௌனமானான்.

அவளுக்குத் தெரியும். அவனால் இதை ஒப்புக்கொள்ள முடியாதென்று. ‘நூற்றில் ஒரு பங்காக ஒப்புக்கொண்டு விட்டால்’ என்று மனசாட்சி கேட்க, அதை ‘அப்புறமா பார்த்துக்கலாம்’ என்று அடக்கினாள்.

“ஹலோ… என்ன மாம்ஸ்? சவுண்டே காணோம்? லைன்ல தான் இருக்கீங்களா?” என்று கேட்க,

“ஏய் நான் என்ன சொல்றேன்? நீ என்னடி சொல்ற?” கடுப்பாக அவன் கேட்க, போகிற போக்கில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறும் சாத்தியம் நிறைய இருந்த காரணத்தால் சற்று நிதானித்தாள். ஆனாலும் அவளது உறுதியை மாற்றிக்கொள்ளவில்லை.

“மாமா… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆம்பிஷன் இருக்கு. தாட் ப்ராசஸ் இருக்கு. எல்லாத்தையும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்துட முடியாது. நம்ம லைஃபை நாம தானே வாழனும். மத்தவங்களுக்காக நாம வாழ முடியுமா?” வெகுதெளிவாக அவள் கேட்க, பார்த்திபனுக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

‘எங்கிருந்து இதையெல்லாம் பேசக் கற்றுக்கொண்டாள்?’ ஆனால் அவளது பேச்சில் இருந்த உறுதி அவனை அசைத்துப் பார்த்தது.

“உன்னை மத்தவங்களுக்காக வாழச் சொல்லலை மது. உன்னுடைய வாழ்க்கையை வீணாக்கிடாதேன்னு தான் எல்லாருமே சொல்றோம். நீ புத்திசாலி. புரிஞ்சுக்கிட்டா பொழச்சுப்ப…” என்றவன் சற்று இடைவெளி விட்டு,

“என்னுடைய வாழ்க்கையை நான் வாழணும்ன்னு நினைச்சு இருந்தா, குடும்பத்தை அம்போன்னு விட்டுட்டு, அஞ்சலியோடு அமெரிக்கா போய்ச் செட்டிலாகி இருப்பேன். ஆனா அதைப் பண்ண முடியலையே! எனக்கென்னன்னு விட்டுட்டு போக முடியலை. அப்பா இறந்தப்ப கழுத்தளவு கடன். நம்ம மில் கூட நம்ம கையை விட்டுப் போற நிலைமை தான் மது. எனக்குன்னு தனிப்பட்ட இலட்சியத்தையோ கனவையோ நான் அப்ப வெச்சுட்டு பிடிவாதமா இருந்திருக்க முடியுமா?” என்று மௌனமாகியவன்,

“ஆனா இப்ப நான் என்ன குறைஞ்சு போயிட்டேன்? நம்ம மில் இப்ப சவுத்ல பெரிய அளவுல இருக்கு. இன்னும் பெரிய பெரிய ப்ராஜக்ட்ஸ் இருக்கு. இன்னும் பெரிய அளவுக்குக் கொண்டு போகணும். நான் என்னுடைய கனவை, லட்சியத்தை விட்டுக் கொடுத்ததினால் கெட்டு போய்டல. நம்ம வாழ்க்கையில் லட்சியங்கள் எல்லாம் முக்கியம் தான். ஆனா அது மட்டும் தான் வாழ்க்கைன்னுட்டு ஆகிடாது மது. அதைத் தாண்டி இயற்கை நமக்காகத் தேர்ந்தெடுக்கிற வாழ்க்கை இன்னும் நல்லாவே இருக்கும்…” என்று அவன் முடிக்க, அதை கேட்ட மது, சற்று நேர மௌனத்திற்குப் பின்,

“மாமா… ஆனாலும் உங்க கனவையும் இலட்சியத்தையும் நீங்க விட்டுக்கொடுத்திருக்கக் கூடாது. என்ன இருந்தாலும் இப்ப பாருங்க, அந்தக் காயம் இத்தனை நாள் கழிச்சும் இருக்கே…” அஞ்சலியை குறிப்பிட்டு மெல்லிய குரலில் மது கூற,

“நம்மளை நம்பி ஐந்நூறு குடும்பத்தில் அடுப்பு எரிஞ்சுட்டு இருந்துது மது… நான் ஒருத்தன் பெருசா? இல்ல அந்த ஐந்நூறு குடும்பம் பெருசா?” என்று கேட்டவன், “அதுவும் இல்லாம எனக்கிருக்கிறது தோல்வியால் உண்டான காயம் இல்ல. முதுகில் குத்துபட்ட காயம். துரோகம்! அது ஆறாது! ஆறவும் வேண்டாம்! அந்தக் காயங்களை நான் கடைசி வரைக்கும் மறக்கக் கூடாது!” உறுதியாகக் கூறினான்.

அதைக் கேட்ட மது, “அப்படீன்னா அஞ்சலியை மறந்துட்டு அம்மாச்சி சொல்றதை கேளுங்க! கல்யாணத்துக்கு ஒத்துக்கங்க!” என்று கூற, சும்மா இருந்தவனை அவளே தூண்டி விட்டது போலானது.

“ஏன்டி! பொண்ணுங்க எல்லாம் ஒரே மாதிரி தான் இருப்பீங்களா? நீங்க நினைக்கறது மட்டும்தான் நடக்கணும். நாங்க எதைச் சொன்னாலும் கேட்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு தான் பேசவே ஆரம்பிப்பீங்களா?” கடுப்பாக அவன் கேட்க, மதுவுக்கும் சற்றுக் கோபம் வந்தது.

“மாமா… பொண்ணுங்க பொண்ணுங்கன்னு பொதுப்படையா பேசாதீங்க. என்ன விஷயமோ… அதை மட்டும் சொல்லுங்க…”

“பின்ன என்ன? நான் எதைப் பத்தி பேசிட்டு இருக்கேன்? சம்பந்தமே இல்லாம கல்யாணம் கல்யாணம்ன்னுட்டு. லைப்ல அந்தக் கர்மத்தை தவிர வேறெந்த எழவுமே இல்லையா? நான் ஒருத்தன் கல்யாணம் பண்ணலைன்னா இந்த உலகமே அழிஞ்சு போய்டுமா? அது ஒண்ணுதான் வாழ்நாள் லட்சியமா? அதைத் தாண்டி என்னைப் பெத்தவளும், உன்னைப் பெத்தவளும் தான் யோசிக்க மாட்டாங்கன்னா உனக்கும் அதே பேச்சு. ச்சே…” கோபத்தில் கன்னாபின்னாவென்று அவன் கடிக்க, மறுபுறத்தில் மது ‘ஸ்ஸ்ஸ்’ என்று நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

‘சும்மா இருந்த சிங்கத்தைச் சொரிஞ்சு விட்டுட்டோமே…’

“இங்க பார் மது… முடிவா சொல்றேன். நீ தேர்ந்தெடுத்து இருக்க ஃபீல்ட் சரி கிடையாது. அது உனக்கு வேண்ணா பெரிய விஷயமா தெரியலாம். ஆனா அங்க அசிங்கங்கள் அதிகம். சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உன்னோட இஷ்டம்…” என்று பொறுமையாகத்தான் பேசுவதாக நினைத்துக்கொண்டான். ஆனாலும் வார்த்தைகளில் சூடு தெறித்தது. அவனது வேகத்தைக் குறைக்க முடியவில்லை. ஆனால் இவளிடம் கோபப்பட்டுக் காரியம் ஆகப்போவதில்லையே!

இவ்வளவு பொறுமையே அவனைப் பொறுத்தவரை அதிகம். ஊரில் கட்டப் பஞ்சாயத்துகளும் கூட, அவனது தலைமையில் தான் பெரும்பாலும் நடக்கும். இரண்டு பக்கமும் அவனை எதிர்த்துப் பேசியதில்லை. அதிலும் முடிவாக ஒன்றை இவன் கூறிவிட்டால் அதற்கு எதிர்ப்பு எழுந்ததும் இல்லை.

ஆனால் மதுவுக்காகத் தான் அவன் அவ்வளவு பொறுமையாகப் பேசினான். கோபத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துப் பேசினான். அதாவது அவனே அவ்வாறு நினைத்துக் கொண்டான்.

முற்றத்தில் காய்ந்து கொண்டிருந்த நிலவு அவனது கோபத்தைச் சற்று ஆற்றியது. எப்போதும் பக்கவாட்டுத் திண்ணையில் கிடக்கும் தூளிநாற்காலியை யாரோ முற்றத்தில் இழுத்துப் போட்டிருந்தனர்.

நீளமான கைகளை வைத்த தேக்கமர சாய்வு நாற்காலி அது. தாத்தா, இருந்தவரை அதில் தான் பெரும்பாலும் அவரது ஜாகை. அதன் பின் தந்தைக்கு!

அவர் இறந்த அன்றைக்கும் கூட அதில் தான் அமர்ந்திருந்தாராம். திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியில் மயங்கியவர்தான், எழவில்லை.

அவனுக்கு நன்றாக நினைவிருந்தது. அன்று தான் அமெரிக்க விசா கிடைத்த மகிழ்ச்சியை நண்பர்களோடு கோவை குற்றாலத்தில் கொண்டாடி விட்டு வந்திருந்தான்.

வினோதகனுக்கும் தந்தைக்கும் ஏதோ வாக்குவாதம் என்பது மட்டும் தான் அவன் அறிந்தது.

தந்தையின் நாற்பத்து ரெண்டாவது வயதில் பிறந்தவன் என்பதால் செல்லம் சற்று அதிகம். செந்தில்நாதன், அதாவது பார்த்திபனின் தந்தை, அவனைச் சற்று அதிகமாகத்தான் கொண்டாடினார். தொழில் நுணுக்கங்கள் பற்றிப் பேசுவாரே தவிர, ‘நீயும் இதைத்தான் செய்ய வேண்டும்’ என்ற பிடிவாதம் கொஞ்சமும் இல்லாதவர்.

‘பறக்கும் வரை பறந்து விட்டுக் கூட்டுக்கு வந்து விடு மகனே’ என்பதுதான் அவரது வேண்டுகோளாக இருந்தது. அவன் அமெரிக்க வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆசைப்படுகிறான் என்றவுடன் மறுபேச்சே பேசாமல் அவனது வேலையை ஒப்புக்கொண்டார்.

நிராசையாக இருந்தாலும் கடைசி வரை காட்டிக்கொள்ளவே இல்லை.

‘எங்களுக்கு இருப்பது நீ ஒருவன் தான்… எங்களை விட்டுச் செல்லாதே’ என்றும் உணர்ச்சிவசப்படவில்லை. அவனை அன்பெனும் தளையில் கட்டி வைக்க நினைக்கவில்லை.

அவரைப் பொறுத்தவரை பார்த்திபன் அவரது தோழன். அவனது சகலத்தையும் எந்தவிதமான தயக்கமுமின்றி ஏற்றுக் கொண்டவர் அவர்!

அப்படிப்பட்டவரை பிணமாக இதே முற்றத்தில் பார்த்த காட்சியை அவன் இப்போதும் மறக்கவில்லை.

மறக்கமுடியவில்லை!

என்றுமே மறக்க முடியாது!

அதனாலோ என்னவோ, தன்னால் சமாளிக்க முடியாத பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் இந்தத் தூளிநாற்காலியை தேடி வருவான். அதில் அமர்ந்து கொள்வதென்பது தந்தையின் மடியில் துயில் கொள்வதைப் போல இருக்கும்.

இரும்புக்கழிகளின் சிறையில் அகப்பட்டு இருக்கும் நிலவைப் பார்க்கும் போதும், நட்சத்திரங்களைப் பார்க்கும் போதும், தந்தை விண்ணில் நட்சத்திரமாகி தன்னைப் பார்ப்பது போலத் தோன்றும்.

அடுத்த நாளே முன்பு எப்போதும் இல்லாத உயிர்ப்போடு சவாலைச் சந்திக்கக் கிளம்பிவிடுவான்.

அவனது பவர் ஹவுஸ், இந்தத் தூளி நாற்காலி!

இப்போதும் அந்தத் தூளி நாற்காலியில் சாய்ந்து கொண்டான்.

தந்தையின் வாசம் இன்னும் அதில் மிச்சமிருப்பதாகத் தோன்றியது அவனுக்கு!

மதுவின் தீர்மானமான குரலைக் கேட்டான் அவன்.

“மாமா… இப்பவும் நான் கேட்கறது ஒன்னே ஒண்ணுதான். எந்தப் பிரச்சனையும் இல்லாத ஏதாவது ஒரு பீல்டை சொல்லுங்க. என்னைப் பாதுகாக்கறதா நினைச்சுட்டு என்னுடைய முன்னேற்றத்தைத் தடுக்காதீங்க. எனக்கு என்னைப் பாதுகாத்துக்க நல்லாவே தெரியும்…” என்று முடித்து விட்டவளிடம் மேற்கொண்டு என்ன பேச? சற்று யோசித்தவன்,

“சரி… அப்படீன்னா மூணு விஷயத்துக்கு நீ ஒத்துக்கணும்…” என்று கொடுக்கல் வாங்கலை போலக் கேட்டபோது மதுவின் மனம் துணுக்குற்றது.

“என்ன சொல்லுங்க…” என்று அவள் கேட்க,

“ஃபர்ஸ்ட்… நோ லேட் நைட் பார்டீஸ்…” உறுதியான குரலில் அவன் கூற,

“வாட்? அதில் என்ன மாமா தப்பிருக்கு?” என்று அவள் கொதிப்பாகக் கேட்டாள். அதை அவன் கண்டுகொண்டால் தானே?

“செகன்ட்… ஸே நோ டூ லிக்கர்… வாட் ஸோ இட் மே பி…” என்று கூற, அவளது உடலில் ஒரு வித நடுக்கம் ஓடியது. பார்த்திபன் வெளிப்படையாக அவளிடம் இதைப் பற்றிப் பேசியதில்லை. ஆனால் இப்போது வெளிப்படையாகக் கேட்கவும் நடுங்கித்தான் போய்விட்டாள்.

தன் மேல் தவறில்லாத பட்சத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் விவாதிக்க முடியும் அவளால்! ஆனால் தவறு இருக்கும் பட்சத்தில்?

“மா… மா… நான்…ன்… எனக்கு… அந்தப் பழக்கம் கிடையாது… ஃப்ரெண்ட்ஸ்… சொன்னாங்கன்னு…” என்று இடைவெளி விட்டவள், “அன்னைக்கு ஒரே ஒரு நாள் தான்…” என்று முடிக்கவே தயங்கினாள்.

“ஃப்ரெண்ட்ஸ்னா… அந்தச் சஞ்சய் தானே?” என்று பார்த்திபன் நறுக்கென்று கேட்க, அவளது நடுக்கம் இன்னும் அதிகமானது.

“ம்ம்ம்… ஆமா…” தயக்கமாக இருந்தாலும் ஒப்புக்கொண்டாள். அவள் என்றுமே பொய் கூற விரும்புவதில்லை.

“அதுதான் என்னுடைய அடுத்தக் கண்டிஷன். அந்த சஞ்சய்யை முழுசா நீ மறந்துடணும். எந்த விதமான அஃபெர்ஸ்ஸும் இருக்கக் கூடாது…” தயவு தாட்சண்யம் பார்க்காமல் அவன் கூற, மதுவால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இவன் யார்? என்னுடைய வாழ்க்கையை நிர்ணயம் செய்ய? யார் கொடுத்தது இந்த அதிகாரத்தை!

பார்த்திபனே தொடர்ந்தான். “என் வீட்டுப் பொண்ணை யாரும் தப்பா பேசறது எனக்குப் பிடிக்காது. அதுவுமில்லாம இந்த மாதிரி வீணா போனவனோடு பழக்கம் இருந்தா கண்ட பழக்கமும் தான் வரும். அதனால… இதையெல்லாம் விட்டுட்டா நானே உன்னை அந்தப் ஃபீல்ட்க்கு போம்மான்னு அனுப்பி வைப்பேன் மது…” என்று முடிக்க,

“மாமா… நீங்க பண்றது ரொம்பவே அட்ராஷியஸ். நீங்க என்னோட விஷயத்தில் தலையிடாதீங்கன்னு நான் சொல்ல மாட்டேன்னு நினைச்சீங்களா?” சூடாக மது கேட்க,

“கண்டிப்பா நீ சொல்வன்னு தெரியும்…” அமர்த்தலாக அவன் கூற,

“பார்டீஸ் போறது என்னுடைய உரிமை, சோசியல் டிரிங்கிங் ஒரு தப்பே கிடையாது. நான் ஒன்னும் மொடா குடிகாரி கிடையாது. இந்தப் ஃபீல்ட்ல ஜஸ்ட் எ சிப் இஸ் காஷுவல். தென் சஞ்சய் என்னோட பாய்ப்ரென்ட். அவன் என்னோட பாய் ப்ரெண்டா இல்லையான்னு நான் தான் டிசைட் பண்ணனும். நீங்க இல்ல…” படு சூடாகப் பதில் கூறியவளுக்கு மூச்சிறைத்தது.

“கூல்… கூல்… இப்படித்தான் சொல்வன்னு தெரியும். அதான் சொல்றேன். உனக்கு இந்தப் ஃபீல்டே வேண்டாம். என்னை மீறி மதிக்கா எப்படி விடறான்னு நான் பார்த்துடறேன்…” சவால் தொனியில் அவன் கூற, மதுவுக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது. தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டாள்.

எத்தனை வருடங்களான கனவு! ஒரு நொடியில் கெட்டுப் போவதா?

பார்த்திபன் கூறும் தடைகள் எல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை. ஆனால் தனது தாய்த் தடுத்தால் அவளால் அதை எதிர்த்து ஒரு காரியத்தைச் செய்ய முடியாது. சொல்பேச்சுக் கேளாமல் பல விஷயங்களைச் செய்பவள் தான், ஆனால் தாயை எதிர்க்கும் அளவு திமிர்த்தனம் அவளிடம் கிடையாது.

“மாமா… டூ யு நோ அபௌட் ‘டேமிங் ஆப் தி ஷ்ரு’?” மெல்லிய குரலில் அவள் கேட்க, அவன் சட்டென்று பதில் கூறவில்லை. கூற முற்படவில்லை. அந்தக் கேள்வி அவனது மனதை ஏனோ அழுத்தியது.

“ம்ம்ம்…” என்றவன், சற்று பெரிய இடைவெளி விட்டு, “ஷேக்ஸ்பியரோட டிராமா…” என்று கூறியவன், “அதுக்கு இன்னொரு அர்த்தமும் இருக்குன்னு தெரியும் மது…” என்று ஆழ்ந்த குரலில் கூற, இந்தப் பக்கத்தில் மதுவின் கண்களில் நீர் கோர்த்தது.

“அதே தான்… ஏன் மாமா? ஒரு பொண்ணு சுதந்திரமா வாழனும், முடிவெடுக்கனும்னு நினைக்கிறது அவ்வளவு பெரிய தப்பா? அவளை நல்வழிப்படுத்த, கீழ்ப்படிய வைக்க, இந்த ஆண்களெல்லாம் ஒரே மாதிரி தான் சிந்திப்பீங்களா? ஒன்னு மிரட்டணும், இல்லைன்னா அடிக்கணும், அதை விட்டா…” என்று ஆரம்பிக்க,

“மது…” கிட்டத்தட்ட கோபமாக அவன் கத்தினான்.

“ஜஸ்ட் சும்மா சொன்னேன் மாமா…” என்றவள், “உலகத்தில் இருக்க எல்லா மொழிகள்லையும் பண்பாடா மாறிட்ட ஒரு விஷயம். பொண்ணுக்குன்னு ஒரு வரைமுறையைப் போலியா வெச்சுட்டு, அதுக்குள்ளே பெண்களுடைய அறிவை அடைச்சு வைக்க நினைக்கிறதுதான் கண்ணியமா மாமா? அதுக்காக எப்படி வேணும்னாலும் டார்ச்சர் பண்ணுவீங்க இல்லையா…” அவளது கேள்வியில் மிகுந்த நிதானமடைந்தான்.

‘இது வயது கோளாற்றில் வந்த ஆர்வமே இல்லை. மிகவும் தெளிவாகத்தான் முடிவெடுத்து இருக்கிறாள்’

“உன்னுடைய லைஃப் கெட்டுட கூடாதுன்னு நினைக்கிறதுக்குப் பேர் டார்ச்சர்ன்னு நீ நினைச்சா என்ன பண்ண முடியும் மது?” என்று கேட்டவன், “அதனால இன்னொரு தடவை இந்த உதாரணம் சொல்லாதே. நிஜமாவே இன்னொரு முறை அறைஞ்சுடுவேன்…” என்று கோபமாகக் கூறியவன்,

“அடக்குமுறை வேற, நீ நல்லா இருக்கனும்ன்னு நினைக்கற அக்கறை வேற… சுயசிந்தனையும் முற்போக்கான சிந்தனையும் நல்லதுதான். ஆனா நீ அதிகப்படியா சிந்திக்கற…” என்றவன் செல்பேசியை வைக்கப் போக,

“மாமா… ஒன் மினிட்…” என்று அவசரமாக அழைக்க, செல்பேசியைக் காதிலிருந்து இறக்காமல் அவளைக் கவனித்தான். உள்ளுக்குளிருந்த கோபம் அவனைப் பேச விடாமல் தடுத்தது.

“மாமா… இருக்கீங்களா?”

“ம்ம்ம்… சொல்லு…”

“பார்டீஸ் மோஸ்ட்லி அவாய்ட் பண்ணிடறேன் மாமா. அன்ட் தென் லிக்கர் கண்டிப்பா எடுக்கமாட்டேன். ப்ராமிஸ் பண்றேன்…” சிறிய குரலில் அவள் கூற, அவன் பல்லைக் கடித்தான்.

“என்ன திடீர்ன்னு?”

“சொல்லனும்ன்னு தோனுச்சு மாமா…” என்றவள் இடைவெளி விட, அவனது முகத்தில் கோபத்தை மீறி ஒரு மெல்லிய புன்னகை. ‘ஆனால் சஞ்சய்?’ என்று மனம் கேள்வி கேட்டாலும், அவன் கேட்கவில்லை.

“ம்ம்ம்…” என்று வெறுமனே அவன் ம்மிட,

“ஆனா சஞ்சய்…” என்று அவள் தயங்க, இளகியிருந்த அவனது முகம் இறுகத் துவங்கியது.

“ம்ம்ம்…” அவனது இம்மிலேயே கோபம் தெரிய,

“எப்படி மாமா அவனை விட்டுக்கொடுக்க முடியும்? நான் அவனை லவ் பண்றேனே…” என்று தயக்கத்தோடு கூற, பார்த்திபன் பதிலேதும் பேசவில்லை.

“மாமா…” அவளது குரலே வெளிவரவில்லை. மனதுக்குள் பயமாக இருந்தது.

“ம்ம்ம்…”

“நான் ரொம்பக் கெட்டப் பொண்ணாயிட்டேன்ல?”

அவளது அந்தக் கேள்வி அவனை உலுக்கியது. ‘மது கெட்டப் பெண்ணா? ச்சே ச்சே’ என்று தலையை உலுக்கியவன், அவளைச் சாதாரணமாக்கும் பொருட்டு,

“என்னடா மதுகுட்டி? நீ இப்படி உண்மையை ஒத்துக்குவன்னு நான் நினைக்கவே இல்லையே…” என்று முயன்று கேலியாகக் கூற, அவள் பிடித்து வைத்த மூச்சை இழுத்து விட்டாள். பார்த்திபனது இந்தக் கேலி இல்லாமல் அவளுக்கு எதையோ இழந்தது போலிருந்தது.

“ம்ம்ம்… நாங்களாச்சும் உண்மையை ஒத்துக்குவோம்… ஆனா ஒவ்வொருத்தங்க, தான் தான் உலகத்துலையே நல்லவன், வல்லவன், உலகத்தையே திருத்த போறவன்னு சீனை போடுறாங்க…” என்று அவளும் கேலியில் இறங்க,

“சரிடி அப்படியே வெச்சுக்க…” என்று சிரித்தபடி கூறிவிட்டு வைக்கப் பார்க்க,

“மாமா…”என்று மீண்டும் அழைத்தவள், “லவ் யூ மாமா…” என்று ஆழமான குரலில் கூறினாள். அது அவளது மனதிலிருந்து வந்த வார்த்தைகள். பார்த்திபன், என்னதான் அவளை அடக்க நினைத்தாலும், கோபப்பட்டாலும் இந்த நேரத்தில் அவனை அவ்வளவு பிடித்தது மதுவுக்கு!

பத்து வயது வரையுமே அவனது தோளைத் தொங்கிக் கொண்டே திரிந்தவள்! தாத்தா இறக்கும் வரை, அதாவது மதுவுக்கு சடங்கு வைக்கும் வரையுமே பார்த்திபனின் விளையாட்டுப் பொம்மை அவள்தான்! அதன் பின் நடந்த சில கசப்பான சம்பவங்களினால் தான் அவன் விலகியது. அந்தச் சம்பவங்களைப் பற்றி மது அறிந்ததில்லை. ஆனால் ஏதோ குடும்பச் சண்டையில் மாமன் தன்னையும் அவனது தமக்கையையுமே கூட உதறி விட்டான் என்பதை மட்டுமே அறிந்திருந்தாள்.

அவனது பத்து வயதில் அவனது தாய், “டேய் பார்த்தி, உன் அக்கா மகளைப் பாரு…” என்று குட்டி பூக்குட்டியாக அவனது கரத்தில் மதுவை வைத்தது முதல், அவளைத் தன்னுடனே தூக்கிக் கொண்டு அலைவான்.

அவ்வளவு பாசம்!

மைதா பொம்மை போல இருந்த மது அவனது இணை பிரியாத தோழி!

அவன் சற்று பெரியவனாகி, பத்தாவதை தாண்டிய பின் தான் சற்று விலகினான். தனது நண்பர்கள் முன்னிலையில் தன்னைப் பெரியவன் என்று காட்டிக்கொள்ளும் ஆர்வம்! சின்னக்குட்டியோடு அலைவது அவனது ஈகோவுக்கு இழுக்காகப் பட்டது.

நண்பர்கள் எதிரில், “மாமா…” என்று மது வந்துவிட்டால் உள்ளுக்குள் கோபமாக வரும். அந்த வாண்டோடு அவனையும் சேர்த்து வைத்து கிண்டலடிக்கும் நண்பர்களின் பார்வையில் மது தென்படுவதை அவன் விரும்ப மாட்டான்.

“ஏய் என்னடி… எப்பப்பாரு மாமா மாமான்னு… இனிமே நீ மாமான்னு கூப்பிட்ட மண்டைய உடைச்சு போடுவேன்…” என்று முழுப்பரிட்சை விடுமுறையில் வந்தவளை ஒருநாள் அவன் மிரட்டிவிட, ‘ஓஓஓவென்று’ அவள் அழுதுக்கொண்டே அவள் தனது தாத்தனிடம் வத்தி வைக்க, அவனது தந்தை அவனை முறைத்த முறைப்பில் பார்த்திபனுக்கு சகலமும் ஆடிவிட்டது.

பேத்தி முன்பு எதுவுமே அவருக்குப் பெரிதில்லை… தனதருமை மகனாக இருந்தாலும் சரி!

“ப்பா… பசங்க முன்னாடி இவ மாமா மாமான்னு கொஞ்சிகிட்டே இருக்கா… எல்லாரும் கிண்டலடிக்கறாங்க…” என்று தலைகுனிந்து கொண்டே அவனும் பிராது சொல்ல,

“ஏன்? சின்னக்குட்டிக்கு நீ மாமா தானே பார்த்தி?” என்று அவர் கேட்க,

“இருக்கலாம்ப்பா… ஆனா…” என்று அவன் தயங்க, அவர் பார்த்திபனை ஆதரவாக அணைத்துக் கொண்டார்.

“நம்ம வீட்டுப் பிள்ளைங்களுக்குப் பெத்த அப்பன் கூட அடுத்தப் படிதான் பார்த்திபா… தாய்மாமன் தான் முதல்ல! அவனுக்குத் தான் முதல் உரிமைங்கறது மட்டுமில்ல… அதே அளவு கடமையும் இருக்கு! அப்பன் விட்டுட்டுப் போன பிள்ளைங்களைக் கூடத் தாய்மாமன் விட்டுட மாட்டான்… கூடாது!

நம்ம நிலத்துல விளையுறதுல முதல் பங்கும் பொண்ணுக்குத்தான்… எந்த விசேஷமா இருந்தாலும் முதல் மரியாதையும் நம்ம பொண்ணுக்குத்தான். அதே மரியாதையைதான் நம்ம வீட்டுக்கு வர்ற பொண்ணுக்கும் கொடுக்கணும் பார்த்தி!

நாம தலைமுறை தலைமுறைக்கும் ஆல போல வளர்ந்து அருகு போல வேரூன்றி இருக்கணும்ன்னா நம்ம வீட்டு பொண்ணுங்க சந்தோஷமா இருக்கணும். நம்ம வீட்டுல பிறந்த பொண்ணுங்க கண்ணீர் வடிச்சா நம்ம தலைமுறைக்கே ஆகாது பார்த்திபா. நம்ம வீட்டுக்கு வர்ற பொண்ணுங்க கண்ணீர் வடிச்சா ஏழு தலைமுறைக்கும் ஆகாது. அதை மட்டும் என்னைக்குமே மறந்துடாதே. பின்னாடி உனக்குக் கல்யாணமானாலும் உன்னோட அக்காவும் சின்னக்குட்டியும் உன்னோட பொறுப்புத்தான். கடைசி வரைக்கும்…”

தனதருகே அமர வைத்து, பொறுமையாகத் தந்தை கூறியது இப்போதும் அவனது காதில் ரீங்கரித்துக் கொண்டிருந்தது.

வினோதகனின் மேல் கொண்ட கசப்பால், அவர்கள் அனைவரிடமிருந்தும் இவன் ஒதுங்கியிருந்தாலும், தாயை அப்படி இருக்க விட்டதில்லை. மெலிதாகச் செய்ய வேண்டியதை சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவான்.

இப்போது வரைக்குமே இப்படித்தான் அவன் இருந்தது.

தந்தையின் வார்த்தைகள் அப்போதும் நினைவுக்கு வர, ‘ம்ம்ம் பார்த்துக் கொள்ளலாம்… மது ஆசைப்படுவதை செய்யட்டும்… பறக்கும் வரை பறக்கட்டும்… ஆசுவாசத்திற்கு கூட்டிற்கு திரும்பத்தானே வேண்டும்…’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

“லவ் யூ டூ குட்டிம்மா…” என்றவன், “குட் நைட்…” என்று அவன் முடிக்க,

“குட் நைட் மாமா…” என்று கூறிவிட்டு அவளும் செல்பேசியை வைத்தாள்.

செல்பேசியைக் கீழே வைக்கத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தான் பார்த்திபன்.

வெகுநேரம் நிலவொளி பரவியிருந்த அந்த முற்றத்திலேயே அமர்ந்திருந்தான். பௌர்ணமி நிலவின் ஒளி அங்கணம் வரை பரவியிருந்தது. பின் கட்டுத் திண்ணைக்கு அப்பாலிருந்த மாட்டுத் தொழுவத்திலிருந்து முன்தினம் கன்றீந்த லக்ஷ்மி ‘ம்மா…’ என்றழைத்தது.

பசியா? கன்றைத் தேடிய பாசமா?

புரியவில்லை.

அதுபோலத்தான் பெண்களின் மனதும் போல. ஒரு பதினெட்டு வயது பெண்ணுக்கு, இந்த அறிவும் தெளிவும் ஆச்சரியம் தான். அதிலும் அடுத்த மாதம் தான் அவளுக்குப் பதினெட்டே நிறையப் போகிறது, என்னும்போது என்ன சொல்வது?

ஆனால் புத்திசாலிகள் பலர் அவர்களது அதிகப்படியான அறிவாலேயே காயப்பட்டு அவன் பார்த்திருக்கிறான்.

‘இக்னரன்ஸ் இஸ் எ ப்ளிஸ்’ என்றும் சொல்வார்களே! ஒன்றும் அறியாமல் இருப்பது கூட பல நேரங்களில் வரம்!

மதுவின் இந்தத் துடுக்குத்தனமும் அழகும் அறிவும் அபூர்வமானது. ஆனால் அது நல்ல இடத்தில் சென்று சேரவேண்டுமே என்ற தவிப்பு இப்போது புதிதாகப் பார்த்திபனை ஆக்கிரமிக்கத் துவங்கியது.

ஒரு பெருமூச்சோடு செல்பேசியை எடுத்து பானுமதிக்கு அழைத்தவன், கூறிவிட்டான்.

“அவ சொல்ற மாதிரி காமர்ஸ்ல சேர்த்து விட்டுடு மதிக்கா…” என்று அவன் கூறியபோது பானுமதிக்கு ஆச்சரியம்.

“நிஜமாவா பார்த்தி சொல்ற?”

“ம்ம்ம் ஆமா… இவ்வளவு நேரம் பேசிப்பார்த்துட்டேன்… ரொம்ப தெளிவா இருக்காக்கா…” என்று சற்று பெருமையாகக் கூற, பானுமதிக்கும் அந்த பெருமைத் தொற்றிக்கொண்டது.

“ரொம்பத் தெளிவுதான்… ஆனா அடாவடி…” என்று சிரித்தவர், ‘உன்னை மாதிரியே…’ என்று நினைத்துக் கொண்டார்.

“ஐயோ… அதை நீ சொல்லாதக்கா… உனக்கும் ஷேக்ஸ்பியர் டிராமான்னு லெசன் எடுத்துற போறா!” என்று அவன் அலற,

“அடடா… தம்பிப்பையனையே அலற வெச்சுருக்கான்னா… பெரிய விஷயம் தான்…” என்று அவர் சிரிக்க,

“சொல்லுவ சொல்லுவ…” என்று சிரித்தபடி வைத்து விட்டான்.

பார்த்திபனை ஒப்புக்கொள்ள வைப்பதென்பது ஆகாத ஒன்று. ஆனால் அவன் மட்டுமே அறிந்த ஒன்று என்னவென்றால், அவளைத் தடுக்க வேண்டும் என்று அவன் நினைத்திருந்தாலோ, செய்ய வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தாலோ எப்படி வேண்டுமானாலும் மிரட்டி உருட்டிக் காரியத்தைச் சாதித்திருப்பான்.

ஆனால் மதுவின் தெளிவு அவளுக்குரிய மரியாதையைக் கொடுக்கச் சொன்னது. அதனால் நிதானமாகப் பேசிவிட்டு, அவளையும் பேச விட்டான்.

ஆக, அவளுக்குத் தடையில்லா சான்றிதழ் கிடைத்தது போலத்தான்!

அதுவரை பள்ளி மாணவியாக இருந்தவள், இப்போது கல்லூரி செல்லும் பட்டாம்பூச்சியாகப் பறந்தாள்.

பானுமதியும் வினோதகனும் மீண்டும் அதே போலத்தான். மீண்டும் நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தனர். இருவருக்குமே மதுவுடன் நேரம் செலவிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவர்களது வேலை அதற்கு ஒத்துழைப்பதில்லை.

நடுவில் பார்த்திபன் இரண்டு முறை சென்னை வந்திருந்தான், அவனது வியாபார விஷயமாக! அவனது திருமண விஷயம் அப்படியே தொங்கலில் தானிருந்தது.

அவன் வாய் திறவாத காரணத்தால், சக்ரவர்த்தியிடம் சகுந்தலா அது இதென்று சொல்லி ஒரு மாதத்தை ஓட்டி விட்டார்

அன்று கல்லூரி விடுமுறை என்பதால், காலையிலேயே ராஸாவுக்கு சென்றிருந்தாள் மது. நடனப் பயிற்சியோடு அந்த வார இறுதியில் நடக்கும் ஃபேஷன் ஷோவுக்கான ஒத்திகையும் நடந்து கொண்டிருந்தது. அதோடு அந்த மாத இறுதியில் மிஸ் சென்னை அழகிப் போட்டியும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கண்டிப்பாக அவளுக்கு கலந்து கொண்டாக வேண்டும்!

அதற்கான தீவிரமான பயிற்சிகளில் இருந்தாள். அவ்வப்போது மாடலிங் வாய்ப்பும் வந்துகொண்டு தான் இருந்தது. இந்த ஃபேஷன் ஷோ மூலம் இன்னும் நிறைய பேரை சென்றடையலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

அவள் சென்ற ஒரு மணி நேரத்தில் பார்த்திபன் பானுமதியை அழைத்தான்.

“க்கா… மது இருக்காளா?” எடுத்த எடுப்பில் மதுவை அவன் கேட்க,

“டான்ஸ் கிளாஸ்ல இருப்பா பார்த்தி. என்ன விஷயம்?” என்று அவர் கேட்க,

“ம்ம்ம்… எதோ ஃபுட் மேளா போல. ரெண்டு நாளா என்னை நச்சரிச்சுட்டு இருந்தா. சென்னை வந்தா கூப்பிட்டுப் போகச் சொல்லி. அதான் கேட்டேன்…” என்று கூற,

“ஓ சென்னைல தான் இருக்கியா பார்த்தி?” சற்று ஏமாற்றத்தோடு அவர் கேட்க,

“ம்ம்ம்… ஆமா. காலைல தான் வந்தேன்…” என்று பதில் கூறியவனை நினைத்தபோது இன்னமும் ஆற்றாமையாகத்தான் இருந்தது.

உடன் சகுந்தலா வந்தாலாவது பெசன்ட் நகர் பக்கம் இவனது தலைத் தென்படும். இல்லையென்றால் அதுவும் இல்லை! எப்போதும் போல ஹோட்டலில் தான் ஜாகை!

“அப்பவும் இந்தக் கழுதைக்குப் புத்தி போற போக்கைப் பாரேன் பார்த்தி. திங்கற ஐட்டம் தான் கண்ணுக்குத் தெரியுது போல…” என்று சிரிக்க, அவனும் வாய்விட்டுச் சிரித்தான்.

“விடுக்கா… சின்னப் பிள்ளை…” என்று அவன் பரிந்து கொண்டு வர,

“அடப்பாவி… இந்த மேளாவுக்கு பதிலா ஏதாவது ஜுவல் எக்ஸிபிஷன் மாதிரி அவ உன்னை இழுத்துட்டு போனாலாவது ஏதாவது பெருசா தேத்தலாம். அதை விட்டுட்டுப் ஃபுட் மேளாவுக்கு போனா என்னடா தேறும்?” என்று அவர் கேலி பேச,

“அடடா… உன் பொண்ணுக்கு ஒன்னும் தெரியாது. நீ ட்ரைனிங் கொடு… சரி அட்ரெஸ் கொடு! நான் அங்க போய்ப் பிக் அப் பண்ணிக்கறேன்…” என்று கேட்க,

ராஸா ஸ்டுடியோ முகவரியைப் பார்த்திபனுக்கு கொடுத்தார் பானுமதி!

error: Content is protected !!