PuthuKavithai 11

PuthuKavithai 11

அத்தியாயம் பதினொன்று

“இட்ஸ் ரியலி எ சர்ப்ரைஸ்…” அவள் மகிழ்ச்சியில் குதிக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த சஞ்சயின் முகம் மட்டுமல்ல, ரதீஷின் முகமும் கறுத்தது.

அவளது மகிழ்ச்சியைப் பார்த்த பார்த்திபனின் முகத்தில் மெல்லிய விகசிப்பு! அதோடு கூடிய லேசான புன்னகை! தன்னை நோக்கி ஓடி வர இருந்தவளை, ‘ப்ராக்டிசை முடித்து விட்டு வா’ என்று சொல்வதற்காக எத்தனிக்க,

“மது… டோன்ட் யூ ஹேவ் எனி மேனர்ஸ்?” என்று கத்தியை வைத்துக் கிழித்தார் போலக் கூறியது சஞ்சய் அல்ல… ரதீஷ்!

திரும்பி அவனைப் பார்க்க, முகத்தில் அவ்வளவு ரவுத்திரம்!

‘இவனுக்கு என்னவாயிற்று?’

மேனர்ஸ் தெரியவில்லை என்று சொல்லுமளவு என்னவாகிவிட்டது என்று யோசித்தாள்.

புருவத்தைச் சுருக்கி, முகத்தைக் கோணலாக்கி ரதீஷை பார்த்தாள். இதுவரை அவனிடம் எதற்காகவும் திட்டு வாங்கியதில்லை. அவனது இயல்பு தெரிந்த காரணத்தால், அவன் என்ன செய்தாலும் அதிலிருந்து விலாங்கு மீன் போலத் தப்பிச்செல்லும் வழிமுறை அவளுக்கு அத்துபடியாகி இருந்தது. ஆனால் இப்போதென்ன? சற்றும் இங்கிதமில்லாமல் கத்துகிறான்?

“வாட்?”

“லிசன் மது… இங்க நான் உனக்கு மாஸ்டர்… என்னுடைய ஸ்டுடன்ட் நீ… அதை மனசில் வெச்சுக்கோ! என்கிட்டே பர்மிஷன் வங்கணும்ன்னு உனக்குத் தோணலையா?” என்று கடுகடுவெனக் கேட்க,

“சாரி மாஸ்டர்…” இறங்கிய குரலில் கூறியவள், கண்களால் பார்த்திபனை இறைஞ்சினாள்.

அவளுக்குக் கண்களாலேயே பதில் கூறிய பார்த்திபன் ரதீஷை ஆழ்ந்து பார்த்தான்.

அவனுக்கு ஏனோ ரதீஷிடம் நல்லதிருப்பதாகப் படவில்லை. முதல் பார்வையிலேயே அவனைப் பிடிக்காமல் போனது. காரணம் தெரியவில்லை.

ஒரு சிலரை முதல் முறையாகத்தான் பார்ப்போம் ஆனால் அவர்களோடு ஆண்டாண்டு பழகியதை போன்ற நெருக்கம் ஏற்பட்டு விடக் கூடும். ஆனால் ஒரு சிலரை பார்த்த கணமே, வெறுப்பின் எல்லை வரை செல்ல தோன்றும்.

இது ஏன் என்று யோசித்தால், நம் மனது நமது பார்வையையும் தாண்டி ஏதோ ஒன்றை உணர்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மனம் உணர்வது என்னவென்றால் அரூபமாகப் பயணிக்கும் இருவரின் எண்ணங்கள்!

அந்த எண்ணங்களை நாம் வெளிப்படுத்தாமலே மனம் உணர்ந்து கொள்கிறது.

“ஓகேடா மதுகுட்டி… நான் வெய்ட் பண்றேன்… நீ ப்ராக்டிஸ் முடிச்சுட்டு வா…” என்றவன், சட்டைக் கையை இழுத்துவிட்டுக் கால் மேல் காலிட்டுக் கொண்டு அங்கிருந்த வெய்டிங் சோபாவில் அமர்ந்து கொண்டான்.

அங்கிருந்த சஞ்சய் என்ற ஒருவனை அவன் திரும்பியும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. இருப்பதை அறிந்திருந்தான் தான். ஆனாலும் நட்பாகக் கூட அவனைப் பார்க்க முடியவில்லை.

ஏதோவொன்று தடுத்தது!

ஆனால் சஞ்சய்யோ பார்த்திபன் நுழைந்தது முதல் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். மது இருந்ததால் சற்று கட்டுப்பாடாக இருந்தாலும், அன்று ஹோட்டல் பார்க்கில் பார்த்திபன் இவனது கையை முறுக்கியது தான் நினைவுக்கு வந்தது.

மீண்டும் மீண்டும் அதே நினைவுகள் சஞ்சய்யை தாக்க, முகம் இறுகிப் போய் நின்றிருந்தான்.

“கம்மான்… கெட் ரெடி கைஸ்…” என்று ரதீஷ் கைகளைத் தட்டிக்கொண்டு அனைவரையும் தயாராக அழைக்க, அப்போதுதான் ஷாலினிக்கு உணர்வு வந்தது.

பார்த்திபன் உள்ளே வந்தது முதல் அவனது முகத்தில் மட்டுமே அவளது பார்வை பதிந்திருந்தது. அவளால் பார்வையை மீட்க முடியவில்லை. அவ்வளவு எளிதில் யாரையும் வெறித்துப் பார்த்துவிடக் கூடியவள் அல்ல!

மிகுந்த சுயக்கட்டுப்பாடு இருந்தாலும் விளையாட்டுத்தனமும் உண்டுதான்! தோழிகளோடு சேர்ந்து கொண்டு வெகு இயல்பாக ஆண்களை ரசிப்பவள் தான்.

இந்த மூவரின் தாரக மந்திரம் என்னவென்றால் ‘இப்ப இல்லைன்னா பின்ன எப்ப?’ என்பதால் அனைத்தையும் பார்த்துவிட வேண்டும் இந்த மூவருக்கும்!

ஷிவானியும் மதுவும் ஷாலினியோடு சேர்ந்து விட்டால், கையில் சிக்குபவர்களை ஒரு வழியாக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள்!

“ஏண்டி இப்படி அழும்பு பண்றீங்க? முதல்ல பசங்க தான் சைட் அடிக்கறோம்ன்னு செட் சேர்ந்துட்டு சுத்துவாங்க… இப்ப பொண்ணுங்களும் இப்படியா வம்பு பண்ணுவீங்க?” மூன்று பேரும் சேர்ந்து அடிக்கும் கூத்துகளைப் பார்த்துவிட்டு அவர்களது டியுட்டர் அவ்வப்போது அலுத்துக் கொள்வார்.

ஆனால் இவர்களது இந்த வால்தனம் எல்லாம் வெளியில் மட்டும் தான். வீட்டுக்குள் பொட்டிப்பாம்பாகி விடுவார்கள்.

இப்போது பார்த்திபனை பார்த்த நொடி, அவளது நெஞ்சம் படப்படத்தது. உடலில் ஒரு நடுக்கம்! இரத்த ஓட்டம் தலைகீழானது போன்ற உணர்வு! ஜிவ்வென்று பறப்பது போல வேறு இருந்தது. தடுமாறியவள், தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள அருகிலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டாள்.

மது அவனை ‘மாமா’ என்று அழைத்ததை அறிவாள். அதனால் பார்த்திபன் இவனாகத்தான் இருக்க வேண்டும் என்று தனக்குக் தானே முடிவு செய்து கொண்டாள்.

யாருடைய கருத்தையும் உறுத்தா வண்ணம் ஓரமாக நின்றிருந்தவள், பார்த்திபனை ஆழ்ந்து பார்த்தாள்.

‘ஆண் என்பதற்கான இலக்கணம்’

அத்தனை கம்பீரம்!

நிறம் சற்று குறைவாக, மாநிறம் என்று சொல்வார்களே, அந்த நிறத்தில் இருந்தாலும், அவன் அமர்ந்திருந்த தோரணையில் மனம் கன்னப்பின்னாவென ஆட்டம் கண்டது.

அதைக் காட்டிலும் அவன் மதுவை மட்டும் தான் பார்த்தானே தவிர, தவறியும் ஷாலினியையோ ஷிவானியையோ பார்க்கவே இல்லை. அதுவும் மதுவை பார்த்த பார்வையிலேயே அவனது பாசம் வெளிப்பட, அந்தப் பார்வை தன்னைக் காதலாகப் பார்க்காதா என்று கேட்க தோன்றியது!

ஒரே நொடியில் இந்தளவு எண்ண முடியுமா என்று சட்டென அவளுக்குள் கேள்வி எழுந்தது.

‘ச்சே நமக்கு வயது கோளாறு’ என்று தலையை உலுக்கிக் கொண்டாள். இந்த வயதில் யாரைப் பார்த்தாலும் இந்த விதமான உணர்வுகள் எழுவதை தடுக்க முடியாதுதான் ஆனால் வயதுக் கோளாறு என்பதை தாண்டி மனம் இவன்தான் என்னவன் என்பதை எப்படியும் உணர்ந்துக் கொள்ளும்!

அவனைத் தொடரும் கண்களை அவளால் தடுக்க முடியவில்லை.

அவ்வப்போது நிமிர்ந்து மது ஆடுவதைப் பார்வைட்டுக் கொண்டிருந்த பார்த்திபனின் முகம் கோபத்தில் சிவக்கத் துவங்கியது. கண்களிலும் அவ்வளவு எரிச்சல்… என்னவென்று புரியாமல் அவன் பார்வை போன திக்கை பார்த்தவள், புருவத்தை உயர்த்தினாள்.

ரதீஷோடு சஞ்சய்யும் சேர்ந்திருந்தான். மதுவின் இரு புறமும் இந்த இருவரும் ஆட, நடுவில் மது!

ஏற்கனவே ப்ராக்டிஸ் செய்த பாடல்தான். மதுவின் ஸ்டெப்ஸ் அனைத்தும் மாறாமல் தான் இருந்தன. அதைத் தான் அவளும் செய்தாள்.

ஆனால் சஞ்சய்யும் ரதீஷும் முழுவதுமாக வேறுபட்டிருந்தனர். மதுவே அறிய முடியாத அளவு, நெருக்கம்! பார்ப்பவர்களின் இதயத்தை ஒரு நொடி நிற்க வைத்துப் பின் துடிக்க விடுவதைப் போல இருந்தது. அதிலும் ஒருவன் மட்டுமல்ல… இருவரும்!

ஒருத்தியோடு ஒருவன் என்பதை ரசிக்க முடியும்… ஆனால் இருவர்?

பார்த்திபனுக்கு கூட்டத்தில் தனித்து நிற்பது போன்ற உணர்வு!

Odd one out!

அப்படித்தான் பார்த்திபனை உணர வைத்துக் கொண்டிருந்தனர் அந்த இருவரும்!

பார்த்திபனை எப்படியாவது காயப்படுத்த வேண்டும் என்று சொன்னது, சஞ்சய்குள் இருந்த கோபமும் வெறியும். அவனது கோபத்தையும் வெறியையும் துல்லியமாகக் கணக்கிட்ட ரதீஷ், அதை உபயோகப்படுத்திக் கொண்டான்.

என் கையையா உடைக்கப் பார்த்தாய்? இப்போது என்ன செய்வாய் பார்க்கலாம்… என்று அவனது செயல்பாட்டில் இருந்த சவாலை உணர்ந்தான் பார்த்திபன்.

அதை அறியாத மது, அவள் பாட்டிற்கு ப்ராக்டிஸ் செய்த ஸ்டெப்ஸ்சை ஆடிக்கொண்டிருக்க, பார்த்திபனின் முகம் சிவந்தது.

அதிலும் ஒரு நிலையில் மது குனிய வேண்டும், ரதீஷ் அவளைத் தூக்கி சுழற்றி நிற்க வைக்க வேண்டும். மது அவள் பாட்டிற்குக் குனிய, ரதீஷ் அவளை இடுப்பை பிடித்துத் தூக்குவதற்குப் பதிலாகச் சற்று கையை மேலே ஏற்றி, விஷமத்தனமாகத் தூக்க, அதைக் கவனித்த சஞ்சய்க்கு அது மாறுபாடாகத் தெரியவில்லை. ஆனால் மதுவுக்கு உடல் அதிர்ந்தது.

நடனப் பயிற்சியில் இது அவ்வப்போது விபத்தாக நிகழ்வதுதான் என்றாலும் ரதீஷின் இப்போதைய செய்கை, தெரியாமல் செய்ததாகத் தெரியவில்லை. திரும்பி சஞ்சய்யை அதிர்ந்த பார்வை பார்க்க, அவன் நடந்தவற்றை மாறுபாடாக உணராததால், பார்வை வேறுபாட்டை அவனில் மதுவால் காண முடியவில்லை.

ஆனால் மது உணர்ந்தாளே!

ரதீஷின் செய்கையில் இருந்த மாற்றத்தை உணர்ந்தாள்! கண்டிப்பாக உணர்ந்தாள்!

பார்த்திபன் வெய்டிங் சோபாவில் அமர்ந்து இருந்ததை மேல் பார்வையாக பார்த்தாள்.

இந்த நிலையில், அதுவும் அவன் முன்பு எதுவும் ரசாபாசமாக வேண்டாம் என்று ஒரு நொடியில் முடிவெடுத்தவள், அடுத்த அசைவுக்குச் சென்றுவிட,

“மது…” பார்த்திபன் கர்ஜித்தான்!

ஆடிக்கொண்டிருந்தவளும் அங்கிருந்தவர்களும் அதிர்ந்து பார்த்திபனை பார்க்க, அவனது முகம் கோபத்தில் கனன்று கொண்டிருந்தது.

“மாமா…” சிறியதாகிவிட்ட குரலில் மது பேச முயல, வலது கையை உயர்த்திப் போதுமென்றவாறு காட்டி,

“கிளம்பு மது…” அதே உச்ச ஸ்தாயில் அவன் கத்த, மது தன் மாமனை அதிர்ந்து பார்த்தாள்.

“இல்ல மாமா… இன்னும் கொஞ்சம் தான் ப்ராக்டிஸ் பாக்கி இருக்கு…” முடிந்தளவு குரலில் திடத்தைக் கூட்டிக்கொண்டு அவள் கூற,

“இன்னும் ஒரு செக்கன்ட் இங்க நீ இருந்தாலும், ஒரு கொலை விழும் மது… காருக்கு போ…”

அத்தனை கோபத்தை மது பார்த்ததில்லை. முன்னர் அடித்த போது கூட, அடக்கப்பட்ட கோபத்தில் தான் இருந்தான்.

ரதீஷும் சஞ்சய்யும் என்ன தான் இவன் செய்து விடுவான் என்பதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தனர். பயிற்சி என்ற பெயரில் தான் செய்த விஷமத்தனத்தை ரதீஷ் அறிவான். அறிந்து தான் அவன் செய்வது. ஆனாலும் பார்த்திபனால் என்ன செய்து விட முடியும் என்ற அலட்சியம்!

“மாமா… இந்த வீக் என்ட் ஷோ இருக்கு…” பலவீனமாக அவள் கூறியதை அவன் சற்றும் ஏற்கவில்லை. அவனது கோபம் எதனால் என்று அவள் அறிந்திருந்தாள். அதை அவளும் விரும்பாததால், இப்போது அனைவரின் முன்னும் அவளால் குரலை உயர்த்த முடியவில்லை. அதோடு மற்றவர் முன் பார்த்திபனை எதிர்த்து பேசிடும் நினைப்பும் அவளுக்குச் சற்றும் இல்லை.

“உன்னைக் காருக்கு போன்னு சொல்லி அஞ்சு நிமிஷமாகுது மது…” பற்களைக் கடித்துக் கொண்டு அவன் கூறியதை பார்த்தபோது மதுவுக்கு மட்டுமல்ல, ஷாலினிக்கும் உள்ளுக்குள் குளிர் பிறந்தது.

‘அப்ப்ப்ப்ப்பா இவ்வளவு கோபக்காரனா?’ என்ற நடுக்கம்!

ஆனாலும் அவன் மேல் அவள் கொண்ட ஈர்ப்பு குறையவில்லை!

அந்த ஹாலில் ஷாலினியின் கண்களுக்குப் பார்த்திபன் மட்டுமே தெரிந்தான்!

“மாமா… கண்ட்ரோல் யுவர்செல்ப்… தப்பா எதுவும் நடந்துடல…” அவனருகில் சென்றவள் சற்று கிசுகிசுப்பாகக் கூற, அவளை முறைத்தான்.

“இன்னும் என்ன நடக்கணும் மது? அவன் தப்பா தொடறான்னு உனக்குத் தெரியாதா? பளார்ன்னு அறையறதுக்கு என்ன?” பல்லைக் கடித்துக் கொண்டு அதே தொனியில் அவன் கேட்க,

“மாமா… இங்க இதெல்லாம் கொஞ்சம் சகிச்சுட்டு தான் போகணும்…” மற்றவர்கள் அறியவில்லை… அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று!

“பல்லு பேந்துரும்… அப்படிச் சகிச்சுட்டு போகற அளவுக்கு என்ன தேவை இருக்கு?”

“என்னுடைய ஆம்பிஷன்… என்னுடைய ஆம்பிஷன் எனக்கு முக்கியம் மாமா… இந்த வீக் என்ட் நடக்கப் போற ஷோ எனக்கு ரொம்ப முக்கியம்…”

“தேவையில்லை… இவனுங்க இப்படித் தொட்டுத்தான் உன்னோட ஆம்பிஷனை அடையனும்ன்னா அந்த ஆம்பிஷன் தேவையே இல்லை…” கோபத்தின் விளிம்பில் இருந்தான்.

“அதை எப்படி மாமா நீங்க சொல்வீங்க? அது என்னுடைய ஆம்பிஷன் மாமா…” கிசுகிசுப்பாகவே மது கூற, அவளைக் கண்ணால் எரித்தான்.

“இன்னும் ஒரு வார்த்தை இங்க நின்னுட்டு பேசிட்டு இருந்தா, நடக்கறதே வேற மது… என்னுடைய கோபத்தைக் கிளறாதே…” என்றவன், அவளது கையை இறுக்கமாகப் பிடித்தவன், வெளியே இழுத்துக் கொண்டு போக முயல, சஞ்சய் வந்தான்.

“நீங்க பண்றது சரியில்லை பார்த்திபன்… யூ ஆர் கிராசிங் யுவர் லிமிட்ஸ்…” அடிக்குரலில் அவன் எச்சரிக்க, மதுவின் கையை விட்டவன்,

“போய்க் கார்ல உட்கார் மது…” அழுத்தமாகக் கூற, அதை எதிர்க்க முடியவில்லை அவளால். பேசாமல் வெளியேறி காரை திறந்து கொண்டு அமர்ந்தாள்.

அவள் அமர்ந்ததைப் பார்த்தவன், திரும்பி, தன் சட்டையை முழங்கை வரை இழுத்து விட்டுக் கொண்டான்.

நிதானமாக அழுத்தமாக ரதீஷை நோக்கி வந்த பார்த்திபனின் முன் சஞ்சய் மீண்டும் வர, அவனை அலட்சியமாகத் தள்ளி விட்டவன், ரதீஷின் அருகில் வந்து,

“என்ன நினைச்சு நீ அப்படிப் பண்ணன்னு அவளுக்கு வேண்ணா தெரியாம இருக்கலாம், ஆனா நான் ஆம்பிளை! ஒரு ஆம்பிளை என்ன நெனச்சு இப்படித் தொடுவான்னு எனக்குத் தெரியாம போய்டுமா?”

வெகு இறுக்கமாக அவன் கேட்க, ரதீஷ் சுற்றிலும் பார்த்தான்.

பயிற்சிக்காக வந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

அனைவரையும் பார்த்தவன், “அவுட்…” என்று கத்த, அடுத்த நிமிடம் இடம் காலியானது!

நிதானமாகப் பார்த்திபனை பார்த்த ரதீஷ், சஞ்சய்யை மேல் பார்வையாகப் பார்த்துவிட்டு,

“எஸ்… யூ ஆர் ரைட் மிஸ்டர் பார்த்திபன்…” என்று எள்ளலாகக் கூற,

“அப்படீனா இண்டஷனலாத்தான் பண்ணியிருக்க…” அதே நிதானம் பார்த்திபனின் குரலிலும்! சஞ்சயின் முகத்தில் வெகு இறுக்கம்!

“எஸ்… உன்னால் என்ன பண்ண முடியும்?” என்று நிதானமாகக் கேட்க, அடுத்த நிமிடம் ரதீஷ் சுழற்றியடித்துக் கீழே விழுந்திருந்தான்.

பார்த்திபன் ரதீஷை அறைந்திருந்தான்!

“ஏய்… என்ன பண்ற நீ?” சஞ்சய் கோபமாகப் பார்த்திபனை நோக்கி வர, அவனை நோக்கி கையை நீட்டி எச்சரித்தான்.

“அவனுக்குச் சப்போர்ட் பண்ணிட்டு வந்த, இதே அறை உனக்கும் விழும்… என்ன சொல்ற நீ?” என்று அதீத கோபத்தில் கூறிய பார்த்திபனை பார்த்தபோது சற்றுக் கிலியாகத்தான் இருந்தது சஞ்சய்க்கு!

“ஹவ் டேர்…” விழுந்தவன் எழ முயல, வயிற்றிலேயே ஒரு உதை விட்டான் பார்த்திபன்.

வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டான் ரதீஷ். இவனைப் போன்றவர்கள் எதிர்ப்பவர்கள் இல்லாத வரையில் அவர்களுடைய திமிர்த்தனத்தைக் காட்டுவார்கள். ஆனால் பார்த்திபன் போன்றவர்களின் முன் அவர்களால் எதிர்த்து நிற்க முடிவதில்லை.

பல் உடைந்து அவன் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது!

வயிற்றில் விட்ட உதை கிட்டத்தட்ட அவனது உயிர் நிலையைத் தாக்கியிருந்தது. இரண்டே தட்டில் எழவே முடியாத அளவு இருந்தாலும், அவனது கண்ணில் ரவுத்திரம் மின்னியது.

அது எதிர்த்து நிற்க முடியாத குள்ளநரியின் ரவுத்திரம்!

“ஏன் சஞ்சய்? மது உன்னை எவ்வளவு நம்பறான்னு உனக்குத் தெரியுமில்லையா? அந்த நம்பிக்கைக்கு நீ உண்மையா இருக்கியா?”

சஞ்சய் நோக்கி திரும்பி நின்றவன், அவனைக் கேள்வி கேட்க,

“அதைப் பத்தி உனக்கென்ன?” எரிச்சலாகக் கேட்டான் சஞ்சய்.

“மது உன்னை லவ் பண்றா… நீயும் அவளை லவ் பண்றே… ஆம் ஐ ரைட்?”

“எஸ்… தெரியுதில்லை… அப்புறம் என்ன? உன் வேலையைப் பார்த்துட்டு போக வேண்டியதுதானே? எங்களுக்கு இடையில் ஏன் வர்ற?”

“நான் வர்றது இருக்கட்டும்… இவன் பண்ணின காரியத்தை நீயும் பார்த்த… நீ பார்த்ததை நானும் பார்த்தேன்… நான் பண்ணின காரியத்தை நீ தானே பண்ணியிருக்கணும்?”

பார்த்திபனை பொறுத்தவரை அதுதான் கண்ணியமான காதல்! காதலி அவமானப்படுவதை எந்தக் காதலனும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டான். அப்படிப் பொறுத்துக் கொண்டானென்றால் அவனுடையது காதலில்லை!

வெறும் காமம் மட்டுமே!

“ஆர் யூ எ மேட்? இந்தப் பீல்ட்ல இதெல்லாம் சகஜம்… ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட்… இதுக்கு மேல உனக்கு எதுக்கு விளக்கம் கொடுக்கணும்?”

“எது சகஜம் சஞ்சய்? தன்னுடைய காதலியை இன்னொருத்தனுக்கு விட்டுக்கொடுக்கறதா?”

“இம்பாசிபிள்… யூ டோன்ட் நோ யுவர் லிமிட்ஸ்… இந்தப் ஃபீல்டை பற்றி உனக்கெல்லாம் என்ன தெரியும்?” எரிச்சலாக அவன் கேட்க,

“எனக்கு இந்தப் ஃபீல்ட் பற்றித் தெரிய வேண்டாம்… ஆனா பேசிக் மேனர்ஸ் தெரியும்… பொண்ணுங்க கிட்ட கண்ணியமா நடந்துக்கணும்ன்னு தெரியும்… நீ எதையும் எனக்குச் சொல்லித் தர வேண்டாம்…” என்றவன், நிமிர்ந்து நின்று,

“இன்னொரு தடவை உன்னை மதுவோட சேர்த்துப் பார்த்தேன்… பாத்ததா கேள்விப்பட்டேன்னா கூட, தொலைச்சுடுவேன்… ஜாக்கிரதை… இவனுக்கும் சொல்லி வை…”

அவன் பேசுவதை எதுவும் கூறாமல் பார்த்துக் கொண்டிருந்த ரதீஷ், அவனை உறுத்துப் பார்த்து,

“அவளை லேசா தொட்டதுக்கா அடிச்ச?” என்றவன், கஷ்டப்பட்டு எழுந்து அமர்ந்துக்கொண்டு, “முழுசா தொட்டா என்ன பண்ணுவ?” என்று அதே நிதானத்தோடு கேட்க,

அவன் புறம் திரும்பிய பார்த்திபன், சட்டென்று அவனைத் தூக்கி நிறுத்தினான்.

“இன்னொரு தடவை சொல்லு…” கொலைவெறி தாண்டவமாட அவன் கேட்க, ரதீஷ் நிதானமாக மறுபடியும் அதைக் கூறினான்.

“முழுசா தொட்டா என்ன பண்ணுவ பார்த்திபன்?”

“அப்படி நினைச்சா கூடக் கொன்னுருவேன்…” என்றவன், சட்டென்று ரதீஷின் குரல் வளையைப் பிடிக்க, அதை அவன் எதிர்பார்க்கவில்லை.

இவனது பிடி இறுகிக் கொண்டே போக, அவனது மனதில் வஞ்சம் கூடிக்கொண்டே போனது!

error: Content is protected !!