PuthuKavithai 12

PuthuKavithai 12

 

அத்தியாயம் 12

பார்த்திபனின் கைகளில் பறந்தது அவனது கார்!

அவனது வேகம் அத்தனையும் அவனது கோபம்!

இந்த மதுவின் அலட்சியத்தின் மேல் கொண்ட கோபம். தனது லட்சியத்துக்காக அவள் விட்டுக் கொடுக்கும் விஷயங்களின் மேல் கொண்ட கோபம். அவளது உடைகளின் மேல் கொண்ட கோபம். அவளது நடன வகுப்பை எண்ணிக் கோபம். அழகிப் போட்டிகளை நினைத்து கோபம். பெற்ற பெண்ணை கவனிக்காமல் சேவையென்று திரியும் தன் தமக்கையின் மீதான கோபம்.

மகள் என்ன செய்கிறாள் என்பதை கூட அறியாமல் பணத்தை துரத்திக்கொண்டிருக்கும் வினோதகனின் மேல் கொண்ட கோபம். காதல் ஆசையை காட்டிக் கொண்டிருக்கும் சஞ்சயின் மீதான கோபம். எல்லாவற்றையும் மீறி, உன்னால் என்ன செய்ய முடியும் என்று சவால் விட்ட ரதீஷின் மீதான கோபம்!

அருகில் அமர்ந்திருந்த மதுவின் கண்கள் கலங்கியிருந்தன.

திரும்பி ஓரக்கண்ணால் பார்த்திபனை பார்த்தாள். அவன் வாகனத்தை செலுத்திய விதத்திலேயே அவனது அந்த கோபம் வெளிப்படையாக தெரிந்தது. வீட்டிற்கு போனால் நிச்சயம் தனக்கும் அடி உறுதி என்று எண்ணியபோது தன்னையும் அறியாமல் மனதுக்குள் பயம் வந்தது. அவனது அடிக்கு பயந்து அல்ல… தன்னுடைய ஆசைகளுக்கு இவனால் முற்றுப் புள்ளி வந்துவிடுமோ என்ற பயம்!

என்னதான் தன் தாயின் தம்பியாக இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கையை நிர்ணயிக்க இவன் யார்? எரிச்சலாக இருந்தது! மரியாதை இருக்கிறதுதான்… பாசம் வெகுவாக இருக்கிறதுதான்… அதற்காக தன்னுடைய லட்சியத்தை திசை மாற்றுவதை எல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன?

வகுப்பில் ரதீஷும் சஞ்சய்யும் ரொம்பவுமே அடி வாங்கியிருந்தனர். மது பெரும்பாடு பட்டுத்தான் ரதீஷை பார்த்தியிடமிருந்து காப்பாற்ற முடிந்தது.

ரதீஷ் எதுவும் சொல்லாமல் பார்த்தி கண்டிப்பாக அடித்திருக்க மாட்டான். ஆனாலும் அத்தனை பேர் முன்னும் பார்த்திபன் செய்த செய்கையால் அவள் தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. பார்த்திபனை இழுத்து வருவதற்குள் மது ஒருவழியாகி இருந்தாள்.

ரதீஷின் வாயில் வேறு இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. அதை பார்த்தபோது மனம் திக்கென்று அதிர்ந்தது. அதிலும் அவனது அந்த பார்வை!

கடவுளே! என்ன பார்வை அது? வேட்டைக்காக காத்திருக்கும் புலியின் பார்வையா? எப்படி ஏமாற்றலாம் என்று காத்திருக்கும் நரியின் பார்வையா? ஏதோ ஒன்று! ஆனால் உள்ளுக்குள் நடுங்கியது!

மது அவளது வயதுக்கு தெளிவான பெண் தான்! ஆனால் அவளது வயது? அந்த முதிர்ச்சியில்லாத தன்மை தெளிவில்லாத முடிவுகளை எடுக்க வைக்கும். நம்ப வேண்டியவர்களை நம்ப விடாது. நம்பக் கூடாதவர்களை நம்பச் சொல்லும்.

கண்களை துடைத்துக் கொண்டவள், கோபமாக காரை செலுத்திக் கொண்டிருந்த பார்த்திபனை நிமிர்ந்து பார்த்து,

“ஏன் மாமா? ஏன் இவ்வளவு ஹார்ஷா நடக்கறீங்க?” சற்று கோபமாக கேட்டாள்.

“நான் ஹார்ஷா நடக்கறேனா?” எரிச்சலாக அவன் கேட்க,

“பின்ன? அவன் வாய்ல அவ்வளவு ரத்தம்… ஏன் இப்படி பண்ணீங்க? எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்ல வேண்டியதுதானே… உங்களுக்கு நான் தானே பிரச்சனை… அதை விட்டுட்டு அவனை அடிச்சு… சஞ்சய்யை அடிச்சு… அவ்வளவு கலாட்டா பண்ணி… என்னால அங்க தலை நிமிர்ந்து கூட பார்க்க முடியல…” அவளால் தாள முடியவில்லை. அவன் அவளது மரியாதையை குலைத்து விட்டதாக கருதிக்கொண்டு அவன் மேல் குற்றம் சாட்ட, பார்த்திபனுக்கு எரிச்சலாக இருந்தது.

‘இந்த வாண்டுக்கு இத்தனை விளக்கம் சொல்ல வேண்டுமா? வேண்டாம் என்றால் சொல்பேச்சை கேட்கிற  மாதிரியா இந்த அக்கா வளர்த்து வைத்திருக்கிறாள்?’ என்று கடுப்பாக நினைத்துக் கொண்டு,

“நான் ஏன் இப்படி செஞ்சேன்னு எல்லார் கிட்டவும் விளக்கம்  சொல்லவெல்லாம் முடியாது… தப்புன்னா தப்புதான்… அதை ரைட்டுன்னு சொல்லவெல்லாம் என்னால முடியாது… அப்படி ஒன்னு நடக்கவும் நடக்காது…” படு கறாராகக் கூற, அவள் பார்த்திபன் புறம் நன்றாக திரும்பி அமர்ந்தாள்.

“அப்படியென்ன தப்பு  நடந்து போச்சு? ஜஸ்ட் ஒரு டான்ஸ் ப்ராக்டிஸ்… அவ்வளவுதானே…”

“என்ன தப்புன்னு கூட உனக்கு தெரியலையா? இல்லைன்னா தெரிஞ்சும் தெரியாத மாதிரி பேசறியா மது?” அவ்வளவு கோபமாக இருந்தது பார்த்திபனுக்கு. இவளை எல்லாம் என்ன செய்வது என்ற கோபம்.

“மாமா… எனக்குன்னு சுயமா அறிவு இருக்கு… எங்க எப்படி நடந்துக்கணும்ன்னு எனக்கும் தெரியும்… என்னை யாரும் எக்ஸ்ப்ளாய்ட் பண்ண முடியாது… நீங்க இப்படி என்னை டாமினேட் பண்றதை என்னால அலோ பண்ண முடியாது…”

“உன்னை யாரும் டாமினேட் பண்ணலை… ஆனா உன்னோட லட்சியத்துக்காக ரொம்பவே இறங்கி போறியோ? எல்லாம் தெரிஞ்சு தான் பேசிட்டு இருக்கியா மது?” படு கோபமாக அவன் கேட்டான்.

ஏனென்றால் ரதீஷ் நடத்திக் காட்டிய நாடகமும் சரி அவன் சொன்ன வார்த்தைகளும் சரி, பார்த்திபனை பொறுத்தமட்டில் மிகவும் வக்கிரமானவை. ஒப்புக்கொள்ள முடியாதவை!

ஆனால் இவளோ அவனை தடுத்தாண்டு பேசவும், கோபத்தில் வார்த்தைகளை கொட்டித் தீர்த்தான்.

ஊர்ப்பக்கம் எல்லாம் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை கருதி தான் சில விஷயங்களை செய்ய முடியும், என்பதும் சில விஷயங்களை வேண்டாம் என்பதும், என்பது அவனது வாதம். ஆனால் அது மதுவை பொறுத்தமட்டில் ஆணாதிக்கமாக தோன்ற, அவளால் அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.

“மாமா… ஒரு சில விஷயம் வெளிப்படையா பேச முடியும்… ஒரு சிலது முடியாது… அதுக்காக என்னை நீங்க கெட்ட பொண்ணா நினைச்சீங்கன்னா நான் ஒன்னும் பண்ண முடியாது…நான் இப்படித்தான்… ஆனா நான் என்னை பார்த்துப்பேன்…”

“அதே மாதிரிதான் நானும்… நான் ஹார்ஷா நடக்கறேன்னு நீ நெனச்சா அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது… அப்படித்தான் தான் நடக்க முடியும்… ஒரு சில விஷயம் அப்படி தான்… சொல் பேச்சை கேட்டுத்தான் ஆகணும்…” அவ்வளவு ஆங்காரமாக அவன் பதில் கூற, அவனை முறைத்துப் பார்த்தாள்.

“என்னவா வேணும்னா இருக்கட்டும்… அவனை அப்படி அடிக்க நீங்க யார்? அவங்க வீட்ல இருந்து பிரச்சனைக்கு வந்தா என்ன பண்ணுவீங்க?” இயல்பாக நடக்கக் கூடியதை அவள் கேட்க, முந்த வந்த வண்டிக்கு இடம் தராமல் காரை கட் அடித்து திருப்பினான் பார்த்திபன்!

மிகவும் அபாயகரமான கட் அது!

சட்டென்று வளைத்ததில் டயர்கள் இழுத்து வழுக்கிக் கொண்டு போனது… அந்த வேகத்திற்கு பிரேக்கை அழுத்துவது அந்தளவு சரியல்ல என்ற காரணத்தால் பிரேக்கை அழுத்தாமல் கியரை மட்டும் மாற்றி வேகத்தை சற்று கட்டுக்குள் கொண்டு வந்தான்.

அதுவும் சிட்டி லிமிட்டில்… நல்லவேளையாக வாகன நெரிசல் இல்லாத காரணத்தால் எந்தவிதமான விபத்துமின்றி இதுவரை போக முடிந்தது போல!

மதுவுக்கு உடல் நடுங்கியது.

கண்களை மூடிக்கொண்டாள்!

இவன் ஓட்டும் ஓட்டலுக்கு எப்படி இருந்தாலும் தான் வீடு சென்று சேர போவதில்லை என்று முடிவு செய்து கொண்டாள்.

என்னதான் தைரியமாக பேசினாலும், பயத்தை வெளிக்காட்டாமல் இருந்தாலும், மதுவால் நடுக்கத்தை குறைக்க முடியவில்லை.

ஆனால் அவனோ மிகவும் இயல்பாக, இது எப்போதும் நடக்குமொன்று என்பது போல அலட்டிக்கொள்ளாமல், “எவன் என்னை கேட்பான்? அவனுக்கும் செவுனிலியே நாலு கொடுப்பேன்…” என்று கூற, குரலில் அவ்வளவு உறுதி!

“கொடுப்பீங்க… நல்லா கொடுப்பீங்க! வர்றவங்களை எல்லாம் அடிச்சு துரத்துறதுலையே இருங்க… உங்களுக்கு கை ரொம்ப நீளம்… அதான் சட்டுன்னு ஓங்கிடறீங்க!”

எரிச்சலாக அவள் கூற, பதில் பேசாமல் திரும்பி அவளைப் பார்த்தான் பார்த்திபன்.

இவளது செய்கைகளை தமக்கை சரியாக கண்காணிவில்லை என்று அவனது மனம் குற்றம் சாட்டியது. இல்லையென்றால் நல்லது சொன்னாலும் அதை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறாளே என்று எரிச்சலாக நினைத்தான். அதாவது அவன் நினைத்தான். ஆனால் தான் அவளை அதிகாரம் செய்வது மட்டும் தான் மதுவுக்கு பிடிக்கவில்லை என்பதை அவனும் உணரவில்லை.

இந்த நிலையில் என்ன செய்வது என்று மனம் வேகமாக கணக்கிட்டது!

‘இந்த பெண் புரிந்து கொள்வது மிகவும் சிரமம். இவளுக்கு அவனை பற்றி எப்படி புரியவைத்து, இவளை அவர்கள் பக்கம் போக விடாமல் தடுப்பது?’ தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

ஆனால் அவளுக்கு எப்படியும் புரிய வைக்க முடியாது என்பது அவனுக்கு தெரியவில்லை. புரியாதவர்களுக்கு தான் புரிய வைக்க முடியும். புரியாதது போல நடிப்பவர்களுக்கு அல்ல.

அதிலும் அந்த ரதீஷ் கூறிய வார்த்தைகள்! அதை நினைத்த போதே அவனுக்கு ரத்தம் கொதித்தது. எவ்வளவு தைரியம் இருந்தால் பார்த்திபனிடம் இந்த வார்த்தையை கூற அவனுக்கு தைரியமும் தின்னக்கமும் இருந்திருக்க வேண்டும்.

இது யார் கொடுக்கும் இடம்?

இந்த பார்த்திபனை பார்த்து ஒருவர் கைநீட்டி பேசவே பயப்படும் போது, இந்த ரதீஷ் இப்படி சவால் விடுகிறானா?

அவனை அப்படியே விட்டுவிட, தானொன்றும் கையாலாகதவன் கிடையாதே!

ஆனால் அந்த ரதீஷ் எல்லாம் இந்த பார்த்திபனுக்கு ஒரு பொருட்டே அல்ல!

மதுவைத்தான் அவனால் வழிக்கு கொண்டு வர முடியுமா என்பதில் சந்தேகம் இருந்தது.

விஷயம் என்னவென்றால் மதுவை யாரும் மடைமாற்றவே முடியாது. அவள் கொண்ட லட்சியத்தின் இயல்பு அப்படி! சுயதீர்மானங்களின் விளைவை மொத்தமாக அறிந்து வைத்திருப்பவள்… அதை ஏற்றுக்கொண்டும் விளைவை சமாளிப்பவளாகவும் தான் தோன்றியது அவனுக்கு!

அப்படி ஸ்ட்ராங் பர்சனாலிட்டிகளை தன்னை வெறுமனே கலாசார காலவலனாகக் காட்டிக்கொண்டு அவர்களது முடிவுகளை மாற்ற முடியுமா என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டு, “ம்ப்ச்” என்று சலித்துக் கொண்டான்.

மது நன்றாக அறிந்திருந்தாள். ரதீஷை பற்றி! அவன்களிடம் எல்லாம் எப்படி விலாங்கு மீனாக நழுவிச் செல்வது எப்படி என்று அவள் அறிவாள்! அவளது எண்ணமெல்லாம், ‘இது போல ஆட்கள் அனைத்து இடத்திலும் தான் இருப்பார்கள்… அதற்காக, தன்னை காத்து கொள்வதற்காக இது போல சூழ்நிலைகளை தவிர்த்துக் கொண்டே போனால் எப்படித்தான் ஜெய்ப்பது? சமாளிக்கத்தான் வேண்டும்’ என்று தான் அவள் நினைத்திருந்தாள்.

ஆனால் ரதீஷ் எதற்கும் அப்பாற்ப்பட்ட ஆள் என்பதை அவளும் உணரவில்லை.

மதுவின் கணக்கிடுதல் தவறி, பார்த்திபனின் கணக்கிடுதல் சரியாகும் இடம் ரதீஷ் என்பதை மது உணரும் போது?

மதுவின் செல்பேசி அழைத்தது.

க்ளட்சிலிருந்த செல்பேசியை எடுத்துப் பார்த்தாள். ஷாலினி தான் அழைத்திருந்தது!

மதுவின் புருவம் சுருங்கியது. அங்கே ஏதாவது பிரச்சனையா? ஒரு வேளை ரதீஷின் பெற்றோர்களுக்கு விஷயம் தெரிந்து ஏதேனும் பிரச்சனையாகிவிட்டதா? உடனே அட்டென்ட் செய்யாமல் வாயடைத்து போய் அமர்ந்திருந்தாள்.

“ஏய்… என்ன போனையே வெறிச்சு பார்த்துட்டு இருக்க?” ஒற்றைக் கையால் டிரைவ் செய்து கொண்டே பார்த்திபன் கேட்க, அவனைப் பார்த்து முறைத்தாள்.

“ம்ம்ம்… வேண்டுதல்… போனையே வெறிச்சு பார்க்கனும்ன்னு…” என்று மூக்கை விடைத்துக் கொண்டு மது கூற, சற்றே இறுக்கம் நீங்கி பார்த்திபன் புன்னகைத்தான்.

“அட இந்த பொண்ணு இப்படியெல்லாம் வேண்டுதல் வைக்குதா?” என்று சிரித்தவன், அது என்னவோ பிரச்சனைக்குரிய அழைப்பு என்று நினைத்துக் கொண்டு  அவளது செல்பேசியை பறித்தான்.

“மாமா… இதென்ன இப்படி பண்றீங்க? என்னோட போனை குடுங்க…” எரிச்சலாக அவள் கேட்க, அவனது முகத்தில் புன்னகை. ஆனால் உள்ளுக்குள் வெகுவாக கணக்கிட்டுக் கொண்டிருந்தான்.

“ஒரு செக்கன்ட் இரு மது… உன்னோட போன் தான்… நான் எதுவும் பண்ண மாட்டேன்…” என்றவாறே யாரிமிருந்து கால் வந்தது என்பதை பார்க்க, மதுவுக்கு அவ்வளவு கோபமாக இருந்தது. தனது பேசி, தனது உரிமை அல்லவா!

இதென்ன ஆதிக்கம்?

ஆணாதிக்கம்!

வயதில் மூத்தவர் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என்று கோபமாக இருந்தது.

“நீங்க ஒன்னும் பண்ண தேவையில்லை… இப்ப கொடுக்க போறீங்களா இல்லையா?” என்று அவளது செல்பேசிக்காக கையை கோபமாக நீட்ட, அவன் ஒரு விரலை அவனது உதட்டில் வைத்து “உஷ்” என்று அடக்கிவிட்டு, செல்பேசியை ஆன் செய்தான்.

“ஹலோ…” அவனது அழுத்தமான, ஆழமான குரல் அந்த புறத்தில் படபடப்போடு காத்திருந்த ஷாலினியை அடைந்தது.

ஒரு நொடி அந்த நேரத்தை மூச்சை ஆழமாக இழுத்து விட்டு ஆழ்ந்து அனுபவித்தாள்.

மிகவும் பிடித்திருந்தது.

மென்மையான பூங்காற்று தன்னை தழுவியதை போல இருந்தது.

அவள் சுற்றிலும் இருந்த சுற்றுப்புறத்தை மறந்துவிட்டாள். வகுப்பை பாதியில் விட்டுவிட்டு போன ரதீஷையும் சஞ்சய்யையும் மறந்துவிட்டாள். வகுப்பு பாதியில் களேபரத்தில் முடிந்ததால் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, அருகிலிருந்த பாம்பே தந்தூரை தஞ்சமடைந்து தன் முன் இருந்த தன் தோழியரை மறந்துவிட்டாள். முக்கியமாக அவள் விரும்பி உண்ணும் சிக்கன் ப்ரான்கீயையும் மறந்துவிட்டாள்.

கண்களை மெல்ல மூடிக்கொண்டு அவனது குரலை காதுகளில் நிரப்பிக் கொண்டவளை ஷிவானி வித்தியாசமாக பார்த்தாள்.

அதற்குள்ளாக மேலும் இரண்டு முறை அழைத்து விட்டான்.

“ஏய்… ஷாலினி… போனை பண்ணிட்டு என்ன தூங்கற? பேசு…” என்று ஷிவானி உலுக்கவும் ஸ்மரணை வரப் பெற்றவள்,

“ஹலோ… நான் ஷாலினி… இப்ப கிளாஸ்ல பார்த்தீங்களே…” என்று அவசரமாக தன்னை அவனுக்கு பதிய வைத்துவிடும் நோக்கில் கூறிவிட்டு, “மதுக்கு தானே போன் பண்ணினேன்…” என்று இழுக்க,

“ஆமாம்மா… நான் பார்த்திபன் தான்… மதுவோட மாமா…” என்று இயல்பாக கூற,

‘அதுதான் தனக்கு நன்ன்ன்ன்றாக தெரியுமே…’ என்று நினைத்துக் கொண்டாள்.

“என்னம்மா விஷயம்?” என்று கேட்டவனுக்கு என்ன பதில் கூறுவது?

புரியவில்லை!

“இல்ல… மதுக்கிட்ட ஜஸ்ட் சும்மா பேசணும்…”

“இங்க மதுக்குட்டி கோபமா இருக்காங்களே…” என்று குரலை இழுத்துக் கொண்டு பேசியை ஸ்பீக்கரில் போட்டவன், லேசான புன்னகையோடு கூற, மது மேலும் முறைத்தாள்.

“இங்க பாருங்க… மேடம் இன்னுமே மலையிறங்க மாட்டேங்கறாங்க… உங்க கிட்ட பேச முடியாதாம்…” ஒன்றுக்கு பத்தாக கூறிவிட்டு குறும்பாக கண்ணை சிமிட்ட, மதுவுக்கு எரிச்சலாக இருந்தது.

இந்நேரம் வரை அவ்வளவு கோபமாக தாண்டவமாடிவிட்டு, இப்போது சிரித்து மழுப்புகிறானே என்ற எரிச்சல். இவன் எப்போது விட்டத்தில் பாய்வான்? எப்போது நட்டமாக நிற்பான்? என்பது தெரியாமல் அவள் விழித்தாள்.

“ஏய் இல்லடி ஷால்… மாமா பொய் சொல்றாங்க!” என்று அவசரமாக கூற,

“ஹேய் இதென்ன மதுக்குட்டி? ஷால்ன்னு ஒரு பேரா? ஏன் சுடிதார், ஜீன்ஸ் எல்லாம் கிடைக்கலையா?” என்று கிண்டலாக கேட்க, அந்த பக்கத்தில் ஷாலினி பல்லை கடித்தாள்.

‘இவளுக்கு பெயரை சுருக்க நேரம் காலம் இல்லையா? அதுவும் தன் மனம் கவர்ந்தவன் முன்பா இந்த டேமேஜை செய்ய வேண்டும்?’ என்று பல்லைக் கடிக்க, மதுவும் பல்லைக் கடித்துக் கொண்டு அவனிடம் பேசியது கேட்டது.

“அவ பெயர் ஷாலினி…” என்றவளை பார்த்து,

“ஓகே…” என்று இவளிடம் கூறியவன், ஷாலினியிடம் “என்னம்மா… அவனுங்க இன்னும் ஏதாவது பிரச்சனை பண்றானுங்களா? நான் வரணுமா? ஏதாவதுன்னா சொல்லும்மா…” எவ்வளவுதான் சாதாரணக் குரலில் கூற வேண்டும் என்று நினைத்தாலும், அவனால் அந்த கோபத்தையும் ஆங்காரத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

பார்த்துக் கொண்டிருந்த மதுவுக்கு தலையில் கை வைத்தேயாக வேண்டும் என்று தோன்றியது. இந்த ஷாலினி வேறு பிரச்னையை இழுத்து விட வேண்டுமா என்று மனதுக்குள் இவள் வறுக்க, எதைப் பற்றியும் பார்த்திபன் கவலைப்படவில்லை.

“இல்லைங்க… அதெல்லாம் ஒண்ணுமில்ல… க்ளாஸை முடிச்சுட்டு அப்பவே அவங்க போய்ட்டாங்க… நாங்க இங்க பாம்பே தந்தூர்ல இருக்கோம்… மது கிட்ட சும்மா பேசத்தான் கூப்பிட்டேன்…” மடமடவென அவள் சொல்லி முடிக்க, மது வெகுண்டு எழுந்தாள்.

“யூ யூ பிசாசே… என்னை விட்டுட்டு நீங்க மட்டும் போயிட்டு அதை சொல்றதுக்கு வேற என்னை கூப்பிடுறியா? உன்னை…” என்று குதிக்காத குறையாக மது புலம்ப, ஷாலினி சிரித்தாள்.

“மிஸ்டர் ஸ்மார்ட் வந்து உன்னை இழுத்துட்டு போனதுக்கு நாங்க என்ன பண்றது மது? அதுவும் ஃபைட் சீனெல்லாம் வேற நடந்துருக்கு…” என்று ஷாலினி கிண்டலடிக்க, மது பார்த்திபன் மேல் கொண்ட கோபத்தை மறந்து சிரித்தாள்.

“அடப்பாவிகளா! மிஸ்டர் ஸ்மார்ட்டா? யார்டி அது?” என்று பார்த்திபனை ஓரப்பார்வையாக பார்த்தபடி கேட்க, “ஓய்  பொண்ணே… அது நான் தான்…” என்று கண்ணை சிமிட்டியவன், காலரை தூக்கி விட்டு கெத்து காட்டினான்.

அவனது பேச்சு சப்தம் அந்த பக்கம் கேட்டத்தில், “யாரா? ஏய்… போன் என்ன ஸ்பீக்கர்ல இருக்கா?” அப்போதுதான் ஷாலினிக்கு அந்த சந்தேகமே தோன்றியது.

“பின்ன…” என்று கிண்டலாக மது கேட்க, மறுபுறத்தில் உண்மையிலேயே தலையில் கைவைத்துக் கொண்டாள் ஷாலினி.

“ஸ்டுப்பிட்… இடியட்… அறிவிருக்கா உனக்கு? லூசே… சொல்லித் தொலைக்கறதுக்கு என்ன? எருமை…” வரிசையாக ஷாலினி மதுவை திட்ட, அவளோ வாய்விட்டு சிரித்தாள்.

ஸ்பீக்கரை அவசரமாக ஆப் செய்த மது, “நான் சொல்றது இருக்கட்டும்… உனக்கு ஏன் டேஸ்ட் இப்படி மட்டமா போச்சு?” என்று பார்த்திபனை பார்த்துக் கொண்டே கேட்க, வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவன், திரும்பி அவளது தலையில் கொட்டினான்.

அவன் கொட்டியது வலிக்க, தன் கை முஷ்டியை மடக்கிக் கொண்டு, கோபத்தையெல்லாம் வெளிப்படுத்தியபடி அவனது தலையில் நங்கென்று ஒரு கொட்டை வைத்தாள் மது. அவள் கொட்டியது வலிக்க, தலையை ஒற்றைக் கையால் தடவிக் கொண்டே மதுவை பார்த்து, ‘நீ பேசி முடி… உனக்கு இருக்கு…’ என்று சைகையால் கூறி பத்திரம் காட்ட, அவளோ ‘அஹஹா’ என்று சிரிப்பு காட்டினாள்.

“மட்டமா? ஓஓய் மது… நீ நாளைக்கு காலேஜ் வருவல்ல… அப்புறம் பேசிக்கலாம்…” என்று ஷாலினி  முடிக்க பார்க்க, மது சிரிப்பை தாங்க முடியாமல் வாயை மூடிக்கொண்டாள்.

“கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…” என்று பாட ஆரம்பித்தவள், மீண்டும் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…” என்று சிரித்துக் கொண்டே பாட, பார்த்திபன் புரியாமல் பார்த்தான்.

மதுவோ விடாமல் “நிஜமாவே யூ ஹேவ் எ வெரி பேட் டேஸ்ட் மச்சி…” என்று சிரித்துவிட்டு போனை வைத்தாள்.

பேசிவிட்டு நிமிர்ந்தவள், வண்டியை செலுத்திக் கொண்டிருந்த பார்த்திபனை பார்த்தாள். இருவரின் கோபமும் மாறிவிட்டிருந்தது.

“மாம்ஸ்…” குறும்பாக அழைத்தவளை, திரும்பிப் பார்த்து புருவத்தை மட்டும் உயர்த்தி ‘என்ன’வென கேட்க,

“இப்படி ஒரு விஷயத்தை நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல…” என்று மொட்டையாக அவள் கூற, அவன் புரியாமல் பார்த்தான்.

“உங்களையெல்லாம் கன்னாபின்னான்னு ஒருத்தி சைட் அடிக்கறா… இப்படி சம்பவம் எல்லாம் எப்படி நடக்கலாம்? உலக மகா குத்தமில்லையோ?” என்று சிரிக்காமல் கலாய்க்க, “என்னோட பர்சனாலிட்டிக்கு என்னடி குறை? மண்டையிலேயே போட்டன்னா…” என்று அவளது தலையில் முந்தைய வஞ்சத்தையும் சேர்த்து வைத்து நங்கென்று கொட்டினான் பார்த்திபன்.

“ஸ்ஸ்ஸ்…” என்று தலையை தடவியவள், “வேணாம்… மாமாங்கற மரியாதைக்காக பார்க்கறேன்… என்னை ரொம்ப கொட்டறீங்க… அதுவும் உங்க உலக்கை கையை வெச்சுட்டு…” என்று குழந்தைத்தனமாக கடுப்படிக்க, அவன் சிரித்தான்.

“இது உலக்கையா?” தன் கையை காட்டியபடி அவன் கேட்க, ‘பின்ன’ என்பதைப் போல பார்த்தவள், “சாதா உலக்கை இல்ல… பேய் பிடிச்ச புளிய மரத்து உலக்கை…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூற, அவன் வாய்விட்டு சிரித்தான்.

“ஓய் வாண்டு… எனக்கு பேய் பிடிச்சுருக்கா?” மண்டையில் மீண்டும் அவன் கொட்ட, மது வலியில் முகத்தை சுருக்கினாள்.

“சாதா பேய் இல்ல… காட்டேரிப் பேய்…” என்று கிண்டலாக கூறிவிட்டு, “உங்களுக்கு ஏதாவது பிகர் செட் பண்ணி விடலாம்ன்னு பார்த்தேன்… விதி வலியது… கடைசி வரைக்கும் விநாயகர் மாதிரி ஆத்தங்கரைல உட்கார்ந்து தேவுடு காக்கற பிழைப்பு தான்னா மாத்தவா முடியும்?” உதட்டை சுளித்துக் கொண்டு அவனை கூறியவளை பார்த்து சிரித்தவன், அவளது செல்பேசிக்காக கையை நீட்டினான்.

“ஹலோ… என்ன?” நீட்டிய அவனது கையை பார்த்து அவள் கேட்க, “போனை கொடு…” என்று அவன் சாலையை பார்த்தவாறே கேட்டான்.

“எதுக்கு?”

“ஒரு நிமிஷம் கொடுன்னு சொல்றேன்ல…” என்றவன், பொறுமை பறந்து போய், அவளிடமிருந்த பேசியை வலுக்கட்டாயமாக பறித்தான்.

“மாமா… திஸ் இஸ் அட்ராஷியஸ்…” மீண்டும் கொதிக்க ஆரம்பித்தவளை,

“ஓய் வாண்டு… ரொம்ப சீனை காட்டாதே…” என்றவன், அவளது செல்பேசியில் ‘ஷாலினி’ என்ற பெயரை தேடி எடுத்து,

“இந்த பொண்ணுதானே இப்ப பேசினா?” என்று கேட்டவனுக்கு இவள் ‘ஆமென்று’ தலையையாட்ட, தனது வாட்ஸ்அப் நம்பருக்கு ஷாலினியின் எண்ணை காண்டாக்ட் ஷேர் செய்தான். அதை பார்த்தவள், தனது வாயை கைகளால் மூடிக்கொண்டு மலைத்தாள்.

கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது!

“மாமா… நீங்களா?” அதே வியப்போடு அவள் கேட்க, அவளை திரும்பிப் பார்த்து சிரித்தவன்,

“ஏதோ ஒரு பொண்ணு நம்மளை மிஸ்டர் ஸ்மார்ட்ன்னு சொல்லும் போது, அந்த பொண்ணோட நம்பர் நம்ம கிட்ட இல்லைன்னா என்னாகறது? கரெக்ட் பண்றதுக்கு?” என்று கண்ணை சிமிட்ட,

“வாட்? கரெக்ட் பண்றதா?”

இந்த விஸ்வாமித்ரனா இந்த வேலையை செய்வது? ‘அஞ்சலி’ என்ற ‘மேனகையை’ தாண்டி வேறு ஒரு பெண்ணை பார்க்க முடியாது என்றிவன் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருப்பதாகல்லவா இவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்? இப்படி ரம்பை திலோத்தமை எல்லாம் என்ட்ரி கொடுத்தால் என்னாவது?

‘அப்படியென்றால் லேகாவின் கதி?’ ஐயோவென மனம் அடித்துக் கொண்டது. ‘இவனென்ன லேகாவுக்கு சம்மதம் தெரிவித்தானா?’ என்று மனசாட்சி கேள்வி கேட்க, ‘அதனால் என்ன? எல்லோருக்குமே லேகாவை பிடித்து இருக்கிறதே!’ என்று மனம் கூப்பாடு போட்டது.

‘சாதரணமாக பெண்ணுடைய எண்ணை வாங்கினால் உடனே இவன் இப்படி என்று ஒரு முடிவுக்கு வந்துவிடுவாயா? இது ஜஸ்ட் ஒரு கியுரியாசிடியில் செய்வது…” என்று நடுநிலைமையாக ஒரு பக்க மனம் யோசித்தது.

ஆனால் கடவுளே… இந்த விஷயத்தை யாரிடமாவது சொல்லவில்லை என்றால் தன் தலை வெடித்து விடுமே! இதற்கு தகுந்த ஆள் யார் என்று யோசித்தது அவளது மனது.

சந்தேகமே இல்லாமல் பாட்டிதான் என்று முடிவு செய்து கொண்டாள். இந்த முரட்டு காளையை இந்த விஷயத்தை வைத்தே தான் அடக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பு குமிழிட்டது.

இவளது இந்த மனவோட்டத்தை அறியாமல் பார்த்திபன் “எஸ்…” என்று அலட்டாமல் கூற,

“அடப்பாவி மாமா…” என்று மீண்டும் வாயை கையால் மூடியவள், “நீங்க வில்லனா ஹீரோவா?” என்று கேட்டாள்.

நிஜமாகவே அவளுக்கு இந்த கேள்வியை கேட்க வேண்டும் போல தோன்றியது!

“வில்லன்னா என்ன, ஹீரோன்னா என்ன பாப்பா?” கிண்டலாக அவன் கேட்க,

“வாட் பாப்பாவா?” கண்களை விரித்து கோபமாக அவள் கேட்க,

“பின்ன நீ என்னவாம் பாப்பா? உன் வயசென்ன?” வேண்டுமென்றே அவளை சீண்டி விட்டவனை பார்த்து முறைத்தவள், எரிச்சலாக,

“மாமா… நான் சொல்றேன்… நீ ஹீரோ கிடையாது… சரியான வில்லன்… இந்த ஷாலு, உன்னை போய் சைட் அடிக்கறாளே! அவளுக்கெல்லாம்….” என்று மரியாதையை காற்றில் பறக்க விட்டு பல்லைக் கடிக்க,

“அதான் பாப்பா… ஷாலு பாப்பாவுக்கு நான் ஹீரோ… மது பாப்பாக்கு நான் வில்லன்… எப்படி? ஈக்வேஷன் சரியா வருதா?” என்று சிரித்தபடி வம்பை வளர்த்துக் கொண்டிருக்க,

“என்ன ஷாலுவும் பாப்பாவா?” விளக்கெண்ணையை குடித்தது போல மது கேட்டு வைக்க,

“மதுக்குட்டி, நீயே எனக்கு குட்டி பொண்ணுன்னா, உன் ப்ரென்ட் மட்டும் என்னவாம்?” என்று சிரித்தபடியே பார்த்திபன் கேட்க,

“அதானே… என்ன இந்த விஸ்வாமித்ரர் திருந்திட்டாரோன்னு ஒரு செக்கன்ட் தப்பா நினைச்சுட்டேன்…” என்று சிரித்தவள்,

“மாமா… உங்க விதி ஆத்தங்கரைதான்… தனி மரம் தான்…” கிண்டலாகக் கூறினாள்!

மீண்டும் செல்பேசி அழைத்தது.

இந்த முறை பார்த்திபனது பேசி!

கார் ஸ்பீக்கர் ப்ளூடூத்தில் ஆன் செய்தவன் வாகனத்தை ஓட்டிக்கொண்டே பேசினான்.

“ஹலோ…”

“நான் அஞ்சலி…”

கிசுகிசுப்பாக ஒலித்த அந்த குரல் யாருக்கு சொந்தம் என்பதை இருவருமே அறிவார்களே! பார்த்திபன் என்ன சொல்ல போகிறான் என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை. அஞ்சலியை வெறுத்தபடியும் பேசவில்லை, அதே சமயத்தில் அவன் விரும்பியும் பேசிப் பார்த்ததில்லை.

“ம்ம்ம்… எந்த அஞ்சலி?” மிகவும் இயல்பான குரலில் கேட்டவனை மீண்டும் ஆச்சரியப் பார்வை பார்த்தாள். அவன் “உஷ்” என்று உதட்டில் கை வைத்து எச்சரித்தான்.

“உங்களுக்கு எத்தனை அஞ்சலியை தெரியும் எஸ்பி?”

“எனக்கு எத்தனையோ அஞ்சலியை தெரியும்… பிட்வீன் யாரா இருந்தாலும் என் பெயர் பார்த்திபன்… இந்த ஷார்ட் பார்ம் சொல்லி கூப்பிடற வேலை வேண்டாம்… காட் இட்?” என்று சற்றும் இளகாமல் கூற, அந்த பக்கம் சற்று மௌனித்தது.

“உங்களுக்கு இன்னும் கோபம் போகலைன்னு நினைக்கறேன்…”

“எனக்கு எதுக்கு கோபம்? என்ன கோபம்? ஒண்ணுமே இல்லம்மா…”

“எஸ்பி ப்ளீஸ்…”

“கால் மீ பார்த்திபன்… பார்த்திபன் நெடுஞ்செழியன்…” அவ்வளவு கடுமையாக ஒலித்தது அவனது குரல்.

“ஓகே பார்த்திபன்…”

“ம்ம் சொல்லுங்க…”

“என்ன சொல்ல?” சற்று அயர்ச்சியாக ஒலித்தது அவளது குரல். மதுவுக்கே ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப் படாமல் அவன் ஸ்பீக்கரில் தான் பேசிக்கொண்டிருந்தான்.

“சொல்ல ஒண்ணுமில்லைனா எதுக்கு எனக்கு போன் பண்ணீங்க?” சுருக் சுருக்கென்று அவன் கேட்டு வைத்தான்.

“நான் உங்க கிட்ட பேசக் கூட கூடாது இல்லையா?” தழுதழுத்தாள்.

“சொல்ல வந்ததை சொல்லிட்டு வைங்க… எனக்கு வேலை இருக்கு… டிரைவ் பண்ணிட்டு இருக்கேன்… வெட்டியா பேச எனக்கு நேரமில்லை…” முகத்திலடித்தார் போல அவன் பேச, மது பயந்துதான் போனாள். என்னதான் இருந்தாலும் அவளும் பெண் இல்லையா? இன்னொரு பெண்ணை அவன் இப்படி எடுத்தெறிந்து பேசுவதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“….” மெளனமாக இருந்தாள் அஞ்சலி.

“சரி நான் வெச்சுடறேன்…” என்று அழைப்பை அவன் துண்டிக்கப் போக,

“எஸ்பி ப்ளீஸ்…” பரிதாபமாக ஒலித்தது அவளது குரல்.

“அப்ப… சொல்ல வந்ததை சொல்லுங்க…” என்று அவன் கறாராக கூற, அதுவரை அவன் அவளை பெயர் சொல்லிக்கூட அழைக்கவில்லை என்பதை அஞ்சலி கவனித்தாளோ இல்லையோ, மது கவனித்தாள்.

அதுதான் அவனது நிராகரிப்பு என்பதும் அவளுக்குப் புரிந்தது!

அவனது இந்த நிராகரிப்பை உணர்ந்த அஞ்சலியால் மனம் தாளவில்லை போல, அதே தொனியில்,

“உங்களை பார்க்கணும்… பேசணும்…” தீர்மானமாக அவள் கூற,

“பேசறதை எல்லாம் பேசியாச்சு… இன்னும் என்ன பேச இருக்கு?”

“என்ன இல்லை எஸ்பி? எவ்வளவோ இருக்கு… எட்டு வருஷத்து கதை இருக்கு… உங்க கிட்ட நான் சொல்லி அழ எவ்வளவோ துக்கம் இருக்கு… ஒரு ப்ரெண்டா அதை கூட ஷேர் செய்துக்க மாட்டீங்களா?” வலியோடு அவள் கேட்க, இவன், “ப்ச்” என்று மறுதலித்தான்.

“எனக்கு அவ்வளவு பெரிய மனசெல்லாம் கிடையாது… நான்  யாரோட துக்கத்தையும் ஷேர் செய்ய முடியாது… உங்க கஷ்டத்தையெல்லாம் உங்க ஹஸ்பன்ட் சந்தோஷ் கிட்ட ஷேர் செய்ங்க… எனக்கு வேலை இருக்கு…”

“நான் உங்க கூடத்தான் பேசணும்…” என்று சற்று வேகமாக கூறியவள், “ஐ நீட் யுவர் ப்ரெண்ட்ஷிப் எஸ்பி…” மெல்லிய குரலில் கூறிவிட்டு, “எப்படி எஸ்பி என்னால உங்களை மறக்க முடியும்?” என்ற கேள்வியை அவள் எதிர்பாராமல் கேட்டும் வைக்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த மது ஷாக்கடித்தது போல பேந்த பேந்த விழித்துப் பார்த்தாள்.

“வாட் டு யூ மீன்?” பார்த்திபனின் முகத்திலும் லேசான அதிர்வு!

“எஸ் ஐ மீன் இட்…” சற்றும் அசராமல் அவள் கூற, அவனது முகம் சுருங்கியது.

“என்னால உங்களை மறக்க முடியல… மிஸ் பண்ணிட்டேன்னு கோபமா வருது… நான் கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம்ன்னு இப்ப யோசிக்க சொல்லுது… மனசுக்குள்ள குற்ற உணர்வு அதிகமா இருக்கு எஸ்பி… அட்லீஸ்ட் ப்ரெண்ட்லியா நீங்க பேசினாலாவது என்னோட இந்த குற்ற உணர்வு போகுமான்னு யோசிக்கறேன்…” என்று அவள் பாட்டிற்கு சொல்லிக்கொண்டு போக, பார்த்திபன் அவசரமாக ப்ளூடூத் ஸ்பீக்கரை அணைத்தான், அருகில் மது இருப்பதை கவனத்தில் கொண்டு!

அதன் பிறகு எதுவும் பதில் கூறாமல் அவள் கூறுவதை எல்லாம் கேட்டவன், பெசன்ட் நகரில் தமக்கையின் வீட்டின் முன்பு காரை நிறுத்தியவாறே,

“லிசன்…” என்று சற்று இறங்கிய குரலில் அழைத்தவன், சிறு பெண்ணாக அருகிலிருந்த மதுவை மேல்பார்வையாக பார்த்துக் கொண்டு,

“ஜஸ்ட் கோ டூ ஹெல்…” என்று படு இறுக்கமாக முடிக்க, அந்த பக்கமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

“அவசரப்பட்டு பேசாதீங்க எஸ்பி…”

“உனக்கு இவ்வளவுதான் மரியாதை… இன்னொரு தடவை எனக்கு போன் பண்ணாதே… உனக்கு அழகா ஒரு குடும்பம் இருக்கு… அதை கெடுத்துக்காதே… இந்த மாதிரி ப்ரெண்ட்ஷிப்பை நான் விரும்பலை… அந்தளவு எனக்கு பெரிய மனசும் கிடையாது… எதுவா இருந்தாலும் சந்தோஷ் கிட்ட பேசு… அவ்வளவுதான்…” என்றவன் அதற்கும் மேல் பொறுமை இல்லாமல் பேசியை அணைத்தான்.

அஞ்சலி, லேகா, இப்போது ஷாலினி! வரிசையாக இவனுக்காக எத்தனைப் பெண்கள்?!

தான் அறிந்தே இத்தனை பெண்கள்! தானறியாமல்?

அத்தனை பேரையும் நிராகரித்துப் பார்ப்பதில் இவனுக்கு என்னதான் சந்தோஷம் கிடைத்துவிட போகிறது? இதென்ன இப்படியொரு ஆட்டிடியுட்?

அதை வாய்விட்டு கேட்டு விடவும் செய்தாள்.

“ஏன் மாமா? அவங்க உங்க ப்ரெண்ட்ஷிப் வேணும்ன்னு தானே கேட்டாங்க? அதுக்கு ஏன் இவ்வளவு மோசமா திட்டி வைக்கறீங்க?”

உடனே பதில் கூறாமல், மெளனமாக அருகிலிருந்த ரோஜாச் செடியை பார்த்தான். எல்லாரும் பூவை ரசிப்பார்கள் என்றால் பார்த்திபனுக்கு எப்போதும் அந்த பூவை பாதுகாக்கும் முட்கள் தான் பிரதானமாக தெரியும்!

பூவை பாதுகாக்கும் முள்ளிடம் எப்படி மென்மையை எதிர்பார்க்க முடியும்?

அது மென்மையாக இருந்தால் அழகான ரோஜாவை பாதுகாக்க முடியுமா என்ன?

அதுபோலத்தான் அவனும்.

ரோஜா முள் அவன்!

மென்மையான அணுகுமுறையை அவனிடம் எதிர்பார்ப்பது யார் தவறு?

“சொல்லுங்க மாமா!” மீண்டும் அவள் கேட்க, ஒரு பெருமூச்சோடு, “நீ சின்ன பொண்ணும்மா… உனக்கு புரியாது…” என்று அவன் முடிக்கப் பார்க்க, அவள் இடம் வலமாக தலையாட்டினாள்.

“இல்ல… நான் சின்ன பொண்ணு கிடையாது… எனக்கு பதினேழு முடிஞ்சு பதினெட்டாக போகுது… காலேஜ் சேர்ந்துட்டேன்… இன்னும் என்னை சின்ன பொண்ணா ட்ரீட் பண்ணாதீங்க…”

மூக்கை விடைத்துக் கொண்டு அவள் கூற, அவனது முகத்தில் மெல்லிய புன்னகை!

“ஆஹான்… அப்படியா பெரிய மனுஷி?” என்று அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்.

“மாமா… என்னை இப்படியெல்லாம் சொல்லி ஏமாத்தாதீங்க…”

“ம்ஹூம்… உன்னைப் போய் ஏமாத்த முடியுமா சின்னக் குட்டி?” என்று கிண்டலாகக் கூறியவனின் முகத்தில் கசப்பான புன்னகை படர்ந்தது.

அவள் மெளனமாக அவனைப் பார்த்தாள்.

“ப்ரென்ட் லவராகலாம்… ஆனா லவ் பண்ணின பொண்ணை மறுபடியும் ப்ரெண்டா ஏத்துக்க முடியாதுடா… அந்த அளவு எனக்கு பரந்த மனப்பான்மை கிடையாது…” என்றவன், சற்று குரலை தழைத்துக் கொண்டு, “எத்தனையோ விஷயம் இருக்கு மது… ஷேர் பண்ண முடியாத விஷயத்தையெல்லாம் யார்கிட்டயும் சொல்ல முடியாது… அதுவுமில்லாம அவ ப்ரெண்ட்ஷிப்ங்கற பேர்ல பக்கத்தில் வர பார்க்கறா… அவளோட இன்டன்ஷன் என்னன்னு எனக்கு தெரியும்… அது சரி வராது…”

“அதெப்படி மாமா… அவங்க இன்டன்ஷன் இதுதான்னு எப்படி உங்களால சொல்ல முடியும்? நீங்க தப்பாக் கூட நினைக்கலாம் இல்லையா? ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் தப்பா?”

“கிட்டத்தட்ட நாலு வருஷம் பழகி இருக்கேன் அவகிட்ட! அவ எந்த நேரத்தில என்ன பேசுவா… எப்படி நினைப்பாங்கறது முதற்கொண்டு எல்லாமே எனக்கு அத்துப்படி… அவ மட்டும் கிடையாது மது… தோல்வி எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்து இருக்கு…” என்று மௌனித்தவன்,

“எத்தனையோ பேர் கிட்ட பழகறோம் இல்லையா? இப்ப சஞ்சய்யை ஏன் நான் வேண்டாம்ன்னு சொல்றேன்? ஏன் ரதீஷ் சரியில்லைன்னு சொல்றேன்? அவங்க பார்வைல உண்மை கிடையாது… கள்ளத்தனம் இருக்கு… அதை நீயும் புரிஞ்சுக்கணும்… நான் பட்டு தெரிஞ்சுகிட்ட மாதிரி நீயும் தோற்றுப் போய் தான் வாழ்க்கையை நீ புரிஞ்சுக்கனும்ங்க்றது கிடையாது… அதுக்கு முன்னாடியே உஷாராகிக்க மது…”

தெளிவாக கூறியவன், காரிலிருந்து கீழே இறங்கப் பார்க்க,

“மாமா… இன்னொரு முறை அஞ்சலியோட ப்ரென்ட்ஷிப்பை கன்சிடர் பண்ணலாமே…” கடைசியாக ஒருமுறை கேட்டுப் பார்க்கலாம் என்று அவள் அவனது முகத்தைப் பார்க்க, அவனோ கல் போல முகத்தை வைத்துக் கொண்டு,

“என்னால துரோகிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் மன்னிக்கவே முடியாது மது… அது என்னோட பழக்கமில்ல…” என்று கூறியவன், இறுக்கமாகவே வீட்டிற்குள் நுழைந்தான்.

மது தான் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

error: Content is protected !!