PuthuKavithai 14

PuthuKavithai 14

அத்தியாயம் 14

அவளுக்கும் தெரிந்தது தான். ஆனால் சஞ்சயின் வாயாலேயே இதை சொல்லிக் கேட்பது என்பது அவளை சுக்கல் சுக்கலாக உடைத்தது.

“சஞ்சய்…” அவனை நம்ப முடியாமல் பார்த்தாள். அந்த பார்வை விவரிக்க முடியாத  வலியை சுமந்திருந்தது.

அவள் புகழ் வெளிச்சத்திற்காக ஏங்குகிறாள் தான்! ஆனால் அதற்கான விலையாக அவளேவா?

அதையும் சஞ்சய் வாயாலேயே கேட்கும் போது பூமி பிளந்து விடாதா என்று தோன்றியது!

வேறு யார் கூறியிருந்தாலும் இந்த உணர்வு தோன்றியிருக்குமா என்பது சந்தேகமே! ஆனால் தான் விரும்பும் சஞ்சயிடமிருந்து இந்த வார்த்தைகளை அவள் எதிர்பார்க்கவில்லை.

எதிர்பார்க்கவே இல்லை!

“சஞ்சு… நீயா சொல்ற?” நம்ப மாட்டாமல் அவள் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள கேட்க, “எஸ் மது…” அவன் அமைதியாக கூறினான்.

“ஐ நெவர் எக்ஸ்பெக்ட்டட் இட் சஞ்சு…” என்று அதிர்வு நீங்காமல் கூறியவள், “நெவர் எக்ஸ்பெக்டட்…” என்று தனக்குள்ளாக கூறிக் கொண்டாள்.

“ஓவர் ரியாக்ட் பண்ணாதே மது… இரும்பு இளகியிருக்கும் போதுதான் அடிக்க முடியும்…” என்று ஆங்கிலத்தில் கூறியவன், “வாய்ப்பு வரும் போது யூஸ் பண்ணிக்கணும்…” என்று சற்று எரிச்சலாக கூற,

“ஆனா நீ சொல்ற அந்த ஹிட்டன் க்ளாஸ் உனக்கு ஒப்புதலா?” கண்களில் கடைசி நம்பிக்கையை தேக்கி அவள் கேட்க,

“இதென்ன மது? ஏன் கிராமத்து பொண்ணாட்டம் ரியாக்ட் பண்ற? முன்னேறத்துக்கு ஒரு வாய்ப்பு … ஒருத்தர் ஒன்னை பண்றாங்கன்னா பிரதிபலன் இல்லாம பண்ணுவாங்களா?” நேரமாகிக் கொண்டிருக்கிறதே என்று அவனுக்கு கோபம் வந்தது. இந்த சுபாஷ் கோயல் வேறு பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருப்பவன். இவனை தங்கள் பக்கம் பிடித்து வைப்பதே பெரிய விஷயம் எனும் போது, இப்போது வெட்டியாக பேசிக்கொண்டிருக்கும் மதுவை என்ன செய்வது என்று எரிச்சலாக நினைத்துக் கொண்டான்.

“நான் உன்னை கேட்கிறேன் சஞ்சு… உன்னை மட்டும் தான் கேட்கிறேன்….”

“எனக்கென்ன? மிஸ் இந்தியா எனக்கு மனைவியாக வந்தால் கசக்குமா? நீ மிஸ் இந்தியாவாகி விட்டால் என்னுடைய பிரான்ட் நீதானே…” வெகு சுலபமாக முடித்து விட்டவனை உணர்வில்லாமல் பார்த்தாள்.

“பிரான்ட்…” என்றவளின் உதட்டில் கசப்பான ஒரு புன்னகை நெளிந்தது.

“பிராண்ட் என்று எதை கூறுகிறாய் சஞ்சய்? உன்னுடைய எதிர்கால மனைவியை, இந்நாள் காதலியை பிரான்ட்டாக பார்ப்பாயா?” அதே கசப்போடு அவள் கேட்க,

“மது… பேச இப்போ டைம் இல்ல… நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போகுது… இதுக்காக எத்தனை பேரிடம் லாபி செய்து இவரை ஒப்புக்கொள்ள செய்து இருக்கிறோம் தெரியுமா? யாருக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காத வாய்ப்புடா… கற்பு அது இதென்று கற்கால பெண்ணாக பேசி வாய்ப்பை கெடுத்துக் கொள்ளாதே… அப்படியே என்றாலும் அதைப் பற்றி கவலைப் படவேண்டியவன் நான்… நானே சொல்றேனே…. ப்ளீஸ் கண்ணம்மா…” சற்று உருக்கமாக அவளை சமாதானப்படுத்த முயன்றான்.

இவர்களது சம்பாஷணைகளை அருகிலிருந்து எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் ரதீஷ் பார்த்துக் கொண்டிருக்க, இதுவரை சஞ்சய் மேல் தான் கொண்ட நம்பிக்கை சீட்டுக் கட்டை போல பொலபொலவென சரிய, அவளால் அந்த ஏமாற்றத்தை தாள முடியவில்லை.

கால்கள் நிற்க முடியாமல் தள்ளாடியது.

தன்னுடைய குடும்பத்தின் பெருமை என்ன? பெற்றோர் தன் மேல் கொண்ட நம்பிக்கை என்ன?

பார்த்திபன் எத்தனை அறிவுரை கூறியிருப்பான்? இப்படித்தான் வெற்றி பெற்றதாக தெரிய வந்தால் தன்னால் அவன் முன் நிற்கத்தான் முடியுமா?

வெட்டிப் போட்டுவிடுவான் என்று ஒரு மனம் கூற, மறுமனமோ அதற்கு முன்னரே உன் உயிர் போய்விடுமே, என்று கூறியது.

அதிலும் பாட்டியை கண்கொண்டு பார்க்க முடியுமா?

எவ்வளவு கௌரவமாக ஊர்போற்ற வாழ்பவர்களுக்கு முன், தனக்கு இப்படியொரு நிலை தேவையா?

மதுவினால் சஞ்சய்யை பார்க்க முடியவில்லை. கண்ணீர் திரை அவனை மறைத்தது.

அதுவரை மெளனமாக இருந்த ரதீஷ்,

“சஞ்சு… இவ இதுக்கெல்லாம் சரிப்பட மாட்டான்னு அத்தனை முறை சொன்னேன்… கேட்டியா நீ? இவளுக்காக லாபி பண்ண நேரத்துல ஷிவானியையாவது நாம ப்ரொமோட் பண்ணியிருக்கலாம்… நாம சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுவா அவ…”

நேரடியாக அவளது சுயமரியாதையை சீண்டிவிட்டான் ரதீஷ்.

ஆண்களுக்கு இது கைவந்த கலை. இரண்டு பெண்களுக்கு நடுவில் இப்படி ஒரு போட்டியை ஏற்படுத்தி விட்டு, சற்று சுயமரியாதையை சீண்டி விட்டால் ஆயிற்று. இரண்டு பக்கமும் போட்டிப் போட்டுக்கொண்டு அவர்கள் எதிர்பார்ப்பதை செய்து முடித்து விடுவர்.

இதை அறியாத அந்த பெண்களுக்கிடையில் தீராத பகையே தோன்றிவிடும்.

அதை உபயோகப்படுத்த நினைத்தான் ரதீஷ்.

அவன் கூறுவதை கேட்டபோது உள்ளுக்குள் கோபம் கொப்பளித்தது. ஆனாலும் தன்னைத் தானே நிதானப்படுத்திக் கொண்டாள்.

“ராஷ்… நீ கொஞ்சம் சும்மா இரு…” என்று அவன் புறம் திரும்பி அடக்கிய சஞ்சய்,

“யோசிக்க டைம் கிடையாது மது… இட் இஸ் ரன்னிங்… சீக்கிரமா சைன் பண்ணிட்டு ரெடியாகு…” என்று சற்றும் நேரம் கொடுக்காமல் அவசரப்படுத்தினான்.

அவளை பொன் முட்டையிடும் வாத்தாக மாற்றி விடும் அவசரம் அவனுக்கு.

நிமிர்ந்து நின்றவள், தன்னுடைய கண்களை நாசூக்காக கைக்குட்டையால் ஒற்றியெடுத்தாள். தன்னருகில் நின்றுக்கொண்டிருந்த இருவரையும் வெற்றுப் பார்வை பார்த்தவள், சற்று தள்ளி நின்று இவளையே வெறித்துக் கொண்டிருந்த சுபாஷ் கோயலை கூர்ந்து பார்த்தாள்.

வெளியே அறிவிப்பாளர், பேசுவது ஸ்பஷ்டமாக காதில் விழுந்தது.

இன்னும் சில நொடிகளில், கேட் வாக் செய்ய தயாராக வேண்டும்.

அங்கு செல்லவேண்டுமென்றால் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

விருப்பமா?

தேவையா?

தேவை என்பது வேறு… விருப்பம் என்பது வேறு!

விரும்பி ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த வாழ்க்கையை வாழ முடியும். தேவை என்பதோ விருப்பங்களுக்கு இடமில்லாமல் வாழ்ந்தேயாக வேண்டுமென்பது.

சஞ்சய் வலியுறுத்துவது தேவை!

இவளுடையது விருப்பம். அதில் சில ரிசர்வேஷன் இருக்கலாம். விருப்பம் இல்லாவிட்டால் தூக்கி போட்டுவிட்டு போய்விடலாம்.

அவனது இப்போதைய தேவை, இவளது விருப்பம்.

அவளது முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன மது யோசிக்கற? உனக்காக பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போய்டும்… கம்மான் சைன் இட்…”

“இல்ல சஞ்சய் கிருஷ்ணா…” அவனது முழு பெயரை சொல்லி மறுத்தவள், “நான் சைன் பண்ண விரும்பலை…”

சஞ்சய் அதிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

அப்பட்டமான ஏமாற்றத்தோடு, கோபமும், எரிச்சலும், ஆற்றாமையும், தெறித்தது அவனது விழிகளில்.

“வாட்… கம் அகைன்…”

நிமிர்ந்து நின்று இருவரையும் பார்த்தவள், “நான் சைன் பண்ண மாட்டேன்…” உறுதியாக மறுத்தாள்.

அதுவரை அமைதியாக இருந்த ரதீஷ், “ஏய் என்ன விளையாடுறியா?” கோபமாக முன்னே வர, சற்றும் பின்னடையாமல்,

“நான் விளையாடலை ரதீஷ்…” முகத்தில் எந்தவிதமான உணர்வையும் அவள் காட்டவில்லை. ஆனால் உறுதி சற்றும் குறையவில்லை.

“ இத்தனை நாள் உனக்காக நாங்க வொர்க் பண்ணிருக்கோம்… கொஞ்சமாவது அதுக்கு மதிப்புக் கொடு மது…” பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கேட்க,

“என்னுடைய உழைப்புக்கு இல்லாத மதிப்பு, வேறே எதோ ஒண்ணுக்குத்தான் தான் இருக்குன்னா, இந்த டைட்டில் எனக்கு வேணாம்…” சற்றும் தயங்கவில்லை அவள்!

“ஏய்… என்ன நினைச்சுட்ட இருக்க? இதெல்லாம் தெரியாம தான் இந்த பீல்டுக்கு வந்தியா? என்னை என்ன கேனையன்னு நினைச்சுட்டு இருக்கியா?” என்றவன் அவளது கழுத்தைப் பிடிக்க போக, சட்டென்று நகர்ந்துக் கொண்டாள். ஆனால் முகத்தில் சற்றும் அச்சமில்லை.

எந்த நிலை என்றாலும், யார் என்றாலும் என்னால் சமாளிக்க முடியும் என்ற அவளது தன்னமிக்கை சற்றும் குறையவில்லை.

“எல்லாரும் எல்லாத்தையும் அக்செப்ட் பண்ணிப்பாங்கன்னு எந்த தைரியத்துல முடிவு பண்ணிருக்க ரதீஷ்? எனக்கு என்னோட சுயமரியாதையும், என்னோட ஒழுக்கமும் ரொம்ப முக்கியம்… இதை விட்டுட்டு நான் எதை சாதிக்க போறேன்?” வெகு தெளிவாக அவள் கேட்க, ரதீஷால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

‘எத்தனை பேரை சமாளித்து, இவளை ப்ரொமோட் செய்தால், முட்டாள் பத்தாம்பசலித்தனமாக உளறிக் கொண்டிருக்கிறாளே’ என்ற கடுப்பு அவனுக்கு.

“இந்த விஷயத்தை ஏன் ஒழுக்கத்தோட சம்பந்தப்படுத்தி பார்க்கற மது? நம்ம லட்சியத்தை அடையனும்னா சில விஷயங்களை விட்டுக் கொடுத்துத்தான் ஆகணும்… அது கூட தெரியாத முட்டாளா நீ?” ரதீஷுக்கு பதிலாக சஞ்சய் கிட்டத்தட்ட கத்தினான்.

‘நேரம் வேறு போய்க்கொண்டே இருக்கிறதே! இந்த சுபாஷ் வேறு மனம் மாறிவிட்டால் என்னாவது?’ என்ற தவிப்பு அவனுக்கு!

“நான் முட்டாளாவே இருந்துட்டு போறேன் சஞ்சய்… ஆனா இந்த விஷயத்துக்கு நான் ஒப்புக்க முடியாது…” தீர்மானமாக அவள் கூற,

“உன்னோட கேரீரை ஒரே செக்கன்ட்ல நான் காலி பண்ணிடுவேன் மது… இனிமே ஜென்மத்துக்கும் மாடலிங் சைட் நீ வரவே முடியாது…” இருவராலும் முடியவில்லை என்றவுடன் மிரட்ட ஆரம்பித்தான் ரதீஷ்.

ஒரு கணம் கண்களை மூடித் திறந்தாள் மது.

அவள் சிறு வயது முதற்கொண்ட லட்சியம்….

அவள் கண்முன்னே காணாமல் போய்விட போகிறது!

தான் சொல்லும் அடுத்த வார்த்தை, வாழ்க்கையின் போக்கையே திசை மாற்றிவிட போகிறது!

இனி மாடலிங்கை பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா?

மிஸ் சென்னை என்ற பட்டம், இனி கானல் நீராக போகிறது.

அத்தனையையும் நினைத்தவளுக்கு, கண்ணோரம் நீர்த் துளி!

மனதை கல்லாக்கிக் கொண்டாள். இனி திரும்பிப் பார்க்க முடியாது.

கூடாது !

அப்படி இந்த விஷயங்களுக்கெல்லாம் தகைந்துப் போய் தான் தான் கொண்ட லட்சியத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் அப்படிப்பட்ட வாழ்க்கை தனக்கெதற்கு?

உனக்கு இந்த பீல்டை பற்றி தெரியாது என்று பார்த்திபன் கூறிய போதெல்லாம் அலட்சியப்படுத்திய தன்னுடைய முட்டாள்த்தனத்தை நினைத்த போது சிரிப்பாக வந்தது.

தனது புகழ் திக்கெட்டும் பரவப் போகிறது என்று அவனிடம் சவால் வேறு!

மனம் பிசைந்தது. இத்தனை நாட்களாக தான் கொண்ட கனவு இல்லையென்று ஆகும் அந்த நொடிகளை அவளால் அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியும் என்று தோன்றவில்லை.

கண்களை திறந்த தீர்க்கமாக ரதீஷை பார்த்தாள்.

“எனக்கு கவலையில்லை ரதீஷ்…” என்றவள், திரும்பி சஞ்சய்யை பார்த்து, “குட் பை சஞ்சய்…” என்றுக் கூறிவிட்டு, ரெஸ்ட் ரூமை நோக்கிப் போனாள்.

அதுவரை சஞ்சய் அதிர்ச்சி மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் நகரவும் தான் சுய உணர்வை அடைந்தான்.

“இங்க என்ன நடக்குது? இமோஷனல் டிராமாக்கு இது இடமுமல்ல… நேரமும் எனக்கு இல்ல…” சுபாஷ் கோயல் ஒரு பக்கம் கோபமாக கூற, அவரை பார்த்த சஞ்சய்,

“சர் ப்ளீஸ்… ஒரு பைவ் மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க… ஷி வில் சைன்…” என்றவன், அவள் பின்னால் “பேபி… ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இரு…” என்று கெஞ்சியதோ… அவள் பின்னே ஓடியதோ எதுவுமே அவளது உணர்வுகளை அடையவில்லை.

சற்றும் உடையாமல் ரெஸ்ட் ரூமுக்கு சென்று மேக்அப் பை கலைத்தவள், உடை மாற்றி தன்னை திருத்தப்படுத்திக் கொண்டு, தன்னுடைய பொருட்களை எடுக்க வர,

“கொஞ்சம் பொறுமையா இரேன் மது…” ஷாலினியும் கூட கூறினாள்.

“சாரி ஷால்… யு கேரி ஆன்…”

“சரி வேண்டாம்ன்னு சொல்லிட்ட… ஆனா ஜஸ்ட் காம்படிஷன்லையாவது கலந்துக்கலாமே மது?” ஷாலினி ஆற்றாமை தாங்க மாட்டாமல் கேட்க,

“இல்லடி… ஐ கான்ட்…” என்றவள், அவளுக்கு முகத்தைக் கூட காட்டாமல், தனது பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு,

“ஆல் தி பெஸ்ட் ஷாலினி…” என்றவள், ஷிவானியின் பக்கம் திரும்பி, “ஆல் தி பெஸ்ட் ஷிவானி…” என்றுக் கூறிவிட்டு விடுவிடுவென்று வேறு பக்கமாக வெளியேறினாள்.

திரும்பி யாரையும் பார்க்கவில்லை. தன்னை எவ்வளவுதான் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாலும் முகம் கலக்கத்தை சுமந்துக் கொண்டிருந்தது. யாரும் அதை பார்க்கவோ, அவளது சுயதீர்மானத்தை விமர்சனம் செய்யவோ, மாற்ற இடம் கொடுக்கவோ அவள் சற்றும் விரும்பவில்லை.

அவள் கிளம்பும் போதே பார்த்திபனுக்கு அழைத்த ஷாலினி சுருக்கமாக நடந்தவற்றை கூறிவிட்டு,

“அவ பேக் சைட்ல கிளம்பிட்டா  பார்த்திபன்… கொஞ்சம் அவளை பாருங்க… ஷி இஸ் இன் வெரி டிஸ்டர்ப்ட் ஸ்டேட்…”

“ஓஓ…” என்று கேட்டவனுக்கு எந்த மாதிரி அதற்கு ரியாக்ட் செய்வது என்று கூட தெரியவில்லை. அவனைப் பொறுத்தவரை நல்ல விஷயம் என்று எண்ணினாலும், இது அவளது லட்சியம்!

இலட்சியங்கள் உடையும் போது மனம் படும் பாட்டை அவனும் அறிவானே!

அந்த நொடியில் வாழ்க்கையை வெறுக்காமல் இருந்தால் ஆச்சரியம் அல்லவா?

அந்த நிமிடங்களை கடக்கும் நொடியில் இறந்தல்லவா பிழைக்க நேரிடும். உயிரை பிரித்து எடுத்துவிட்டால் கூட அந்த சிரமத்தை அனுபவிக்க நேராது.

அந்த நேரத்தில் ஒருவராவது தோள் கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் எழுமே?!

சட்டென்று எழுந்து கொண்டான் பார்த்திபன்.

“என்ன பார்த்தி?”

இயல்பாக பானுமதி கேட்க, “ஒன்னுமில்லக்கா… கொஞ்சம் வெளிய வரைக்கும் போய்ட்டு வரேன்…” என்று நகரப் பார்க்க,

“ஆரம்பிக்க போகுது பார்த்தி… மது வந்துடுவா… ப்ளீஸ் அப்புறமா அந்த வேலையை பாரேன்…” என்று அவர் கெஞ்சுதலாகக் கூற, அவரிடம் நடந்தவற்றை சட்டென்று கூற முடியவில்லை.

ஆனால் இப்போது மது தான் முக்கியம் என்று எண்ணிக்கொண்டவன்,

“ஒன் மினிட்ல வந்துடறேன் …” என்றவன், ஹோட்டலின் பின் பக்கத்தை நோக்கி விரைந்தான்.

பெட்டியை தள்ளிக்கொண்டு போனாள் மது. அத்தனை நிமிர்வாக!

அது நேர்மையின் நிமிர்வு!

துணிச்சலின் நிமிர்வு!

வெளிப்படைத் தன்மையின் நிமிர்வு!

“மதுக்குட்டி… கொஞ்சம் நானும் தள்ளிட்டு வரட்டா?” எதையும் காட்டிக் கொள்ளாமல் மதுவோடு நடந்துக் கொண்டே பார்த்திபன் கேட்க, அதிர்ந்து, பின் நின்று பார்த்திபனை திரும்பிப் பார்த்தாள்.

பேலசோ மற்றும் கிராப்ட் டாப் தான் அணிந்திருந்தாள். கண்களுக்கு ஒரு கறுப்புக் கண்ணாடி. முடியை தூக்கி வாரி தீபிகா படுகோனேவை போல டாப் நாட்டாக கட்டியிருந்தாள். முகம் சிவந்து வெளுத்திருந்தது.

அவளது கண்களிலிருந்த கண்ணாடி அவளது உணர்வுகளை வெளிப்படையாக காட்ட வில்லை. மிகவும் சாதாரணமாகத் தான் இருந்தாள். உணர்வுகளை இவளால் இவ்வளவு மறைக்க முடியுமா? அல்லது மது இதை சகஜமாக எடுத்துக் கொண்டாளா?

பார்த்திபன் லேசான குழப்பத்தோடு அவளைப் பார்க்க, அவளோ மெளனமாக காருக்குள் அமர்ந்தாள்.

“யாருமில்லாத இடமா பார்த்து கூட்டிட்டு போங்க மாமா…. யாருமே இருக்கக் கூடாது… யாரும் இப்ப வேண்டாம் எனக்கு… ப்ளீஸ் மாமா…” என்றவள் கண்ணாடியை கழற்றி விட்டு, கைகளால் முகத்தை மூடியவள், சப்தமே இல்லாமல் அழுகையில் குலுங்கினாள்.

பார்த்துக் கொண்டிருந்த பார்த்திபனுக்கு வலித்தது.

தனியாக அழுதவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவனது கண்களும் கலங்கிவிடும் போல இருந்தது.

இரும்பாலான இதயம் அவ்வளவு சீக்கிரத்தில் இளகிவிடுமா என்ற நிலை மாறி, அந்த இதயமும் பாசத்தில் இளகிக் கொண்டிருந்தது.

error: Content is protected !!