PuthuKavithai 15
PuthuKavithai 15
அத்தியாயம் 15
ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்திருந்தவன், பக்கவாட்டில் சற்று முன்னே வந்து அவளது தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் வெடித்து கிளம்பியது.
அதுவரை கலங்கிய தனது முகத்தையே யாருக்கும் காட்ட விருப்பப்படாதவள், அவனது தோளில் சாய்ந்து அழுது தீர்த்தாள். மதுவை பொறுத்தவரை அவளது கண்ணீரை யாருமே காண அனுமதித்தில்லை. அது என்னவோ சிறு வயது முதலான அப்படியொரு பிடிவாதம் அவளுக்கு. ஒரு வேளை அவளோடு உடன் பிறந்தவர்கள் இருந்து வளர்ந்திருந்தால் இந்த பிடிவாதம் இருக்காதோ என்னவோ? தனியாகவே வளர்ந்ததினால் தன்னுடைய உணர்வுகளையும் பொதுவில் அவள் வைக்க பிரியப்பட்டதில்லை. அது ஒருவிதமான ஈகோ! தன்னுடைய கண்ணீர் யாருடைய பார்வைக்கும் அல்ல என்ற பிடிவாதம்!
ஆனால் இப்போதோ அந்த நொடி வரை தான், தன்னுடைய தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழுத்து பிடித்து வைக்க முடிந்தது. அவனது தோளில் சாய்ந்த பின், ஆதரவு தேடும் பூனைக்குட்டியாக அவனது மார்பில் ஒண்டிக்கொள்ளத்தான் முடிந்தது.
ஒண்டிக் கொண்டாள்!
கழுத்தை இறுக்கமாகப் கட்டிக்கொண்டு அழுகையில் கரைந்துப் போனாள்.
என்னவென்று அவளும் சொல்லவில்லை. ஏனென்று அவனும் கேட்கவில்லை. மென்மையாக முதுகை வருடிக் கொடுத்தவனுக்கு அவளது உணர்வு தெளிவாக புரிந்திருந்தது. அவள் விளக்கித்தான் புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே!
பார்த்திபனை பொறுத்தமட்டில் மேலோட்டமாக ஷாலினி கூறினது மட்டுமே! அவளாக எதையுமே அதுவரைக் கூறவில்லை.
கேட்கவும் தோன்றவில்லை பார்த்திபனுக்கு!
இப்போது மதுவுக்கு தேவை தோள் மட்டுமே! எந்த நிலையாக இருந்தாலும், விஷயமாக இருந்தாலும், எதிர்ப்பாக இருந்தாலும் அவள் சமாளிப்பாள்! அவளுக்கு அந்த திறமை கண்டிப்பாக உண்டு… அவள் டீனேஜ் பெண் என்பதையும் தாண்டி, அவளது தன்மையை அறிந்திருந்தான்.
அவ்வளவு தெளிவான பெண் இவள் என்ற தைரியம் பார்த்திபனுக்குள் வந்து நாட்களாகி இருந்தன! அதை இன்று அவன் மனப்பூர்வமாக உணர்ந்தும் விட்டான்.
அப்படி சமாளிக்க முடியவில்லை என்றால் அவன் இல்லையா?
இந்த பார்த்திபன் சமாளிப்பான்…எத்தனை பிரச்சனையாக இருந்தாலும் அது மதுவை அணுக வேண்டும் எனில், அது தன்னைத் தாண்டி தான் என்பதை மிகவும் உறுதியாக எண்ணிக் கொண்டான்.
அழும் வரை அழட்டும் என்று விட்டவன், சற்றே மட்டுப்பட்ட போது,
“என்ன மதுக்குட்டி? இப்ப ஓகேவா?” முதுகை வருடிக் கொண்டே அவன் கேட்க, நிமிர்ந்து அவனை பார்த்தவள், மெளனமாக தலையாட்டினாள்.
அதை ஆமென்று கொள்வதா? இல்லையென்று கொள்வதா? ஆனால் அவளை இந்த நிலையில் மேலும் கேள்வி கேட்காமல்,
“உள்ள போகலாமா மது?” என்று நிகழ்ச்சி நடைபெறும் ஹாலை கைக் காட்டி அவன் கேட்க, அவள் தீர்மானமாக மறுத்துத் தலையாட்டினாள்.
“ம்ஹூம்… வேண்டாம்…” கண்களை துடைத்துக் கொண்டு சற்று தள்ளி அமர்ந்தவள், வாட்டர் கேனை எடுத்து கதவைத் திறந்து முகத்தில் நீரை வாரியடித்தாள்.
சில்லென்ற நீர் முகத்தில் தெறிக்கையில், மனதுக்குள் இருந்த துயரம் கரைந்துப் போனது போல ஒரு தோற்றம்.
ஒரே நேரத்தில் காதலும் பொய்த்து, லட்சியமும் பொய்த்து போன ஆற்றாமை அவளுக்கு!
“மது… இங்க பார்…” என்றவன், அவளை பிடித்து தன் பக்கம் திருப்ப, கைப்பையிலிருந்த டிஸ்யுவை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டே,
“சொல்லுங்க மாமா…” என்றவளது முகம் வெகுவாக தெளிந்திருந்தது கண்டு அவனது மனம் திருப்திக் கொண்டது.
“பூனை கண்ணை மூடிக்கிட்டா பூலோகமே இருண்டு போச்சுன்னு நினைக்க முடியுமா மது?” என்று அவன் கேட்க, பதில் கூறாமல் அவனைப் பார்த்தாள்.
“சஞ்சய்யோ ரதீஷோ… அவங்க உன்னோட உலகம் கிடையாது… அவங்களை தாண்டியும் இந்த உலகம் இயங்கிட்டுத்தான் இருக்கு…” என்றவனை,
“நீங்க சொல்ல வர்றது புரியுது… ஆனா…” அந்த ஹாலுக்குள் செல்ல அவளுக்கு பிடிக்கவில்லை.
அதிலும் தான் ஆசைப்பட்ட விஷயத்தை இன்னொருவருக்கு தூக்கிக் கொடுப்பதை பார்க்க, தனக்கு பெரிய மனமெல்லாம் இல்லை என்று நினைத்துக் கொண்டாள்.
“ஓடி ஒளிஞ்சுகிட்டா லைப்ல ஜெய்க்க முடியுமா மது? எந்த விஷயமா இருந்தாலும் நேருக்கு நேரா பேஸ் பண்ணனும்… பிரச்னையை பார்க்காம ஓடிட்டா மறுபடியும் அதை பார்க்க மாட்டியா?” என்று அவன் கூற, மது எதுவும் கூறாமல் அவனைப் பார்த்தாள்.
“நாளைக்கே நாம இப்படி பண்ணிருக்க கூடாதோன்னு நினைக்க தோணும்… சஞ்சய்யை மிஸ் பண்ணிட்டமோன்னு சந்தேகம் வரும்… அப்ப தேவையில்லாம உனக்கு இன்னொரு குழப்பம் வரும்… இது தேவையா? எதுவா இருந்தாலும் இப்பவே கிளியர் பண்ணிக்க…” என்று அவன் உறுதியாக கூற,
‘இவனுக்கு அதற்குள் விஷயம் வந்துவிட்டதா? எவ்வளவு தூரம் இவனுக்கு தெரியும்? எப்படி?’ குழப்பமாக பார்த்திபனை பார்த்தாள்.
“ஷாலினி தான் சொன்னாப்ல…” என்று அவளது புருவத்தை நீவி விட்டவன், அவளது கன்னத்தில் தனது உள்ளங்கையை வைத்து அழுத்தினான். அந்த அழுத்தம் அவளுக்கு உள்ளுக்குள் நூறு யானை பலத்தை தருவது போல இருந்தது.
பார்த்திபன் எப்போதும் தொட்டு பேசுபவன் அல்ல. எப்போதுமே ஒரு ஒதுக்கம் அவனிடத்தில் இருக்கும். அவனும் ஒதுங்கி யாரையும் அருகில் கூட அண்ட விட்டவனில்லை.
மதுவுடன் இந்த சில காலங்களில் தான் பேச்சுவார்த்தை கூட சற்று முன்னேற்றமே தவிர, அத்தனை நாட்களில் பேச்சும் கூட அரிதுதான். அவளாக தொட்டுப் பேசினால் கூட தள்ளி நின்றவன். அதுவும் அவன் காரியமாகவே தள்ளி நின்றதில்லை. அது அவனது இயல்பு, அவனது குணம், அவனது பழக்கம். பழக்கத்தை கூட மாற்ற முடியும், இயல்பான குணத்தை மாற்ற முடியுமா?அதிலும் இப்படி செய்யாதே, அப்படி செய்யாதே என்ற ஆதிக்கம் தான் அவனது வார்த்தைகளில் பெரும்பாலான நேரங்களில் இருக்கும். மதுவை எரிச்சல்படுத்துவதும் அது போன்ற உத்தரவுகள் தான்.
ஆனால் அந்த நேரத்தில், அவளது நிலை புரிந்தவனுக்கு, தள்ளியே நிற்க முடியவில்லை. ஏனென்றால் இந்த நிலைகளை கடந்து வந்தவன் தானே அவனும்.
இலட்சியங்கள் கண் முன்னே காணமல் போகும் வலி என்னவென்று அவனுக்கு தெரியும். அதே நேரத்தில் காதலும் காணலாகி, பின் கனலாகி உயிரை எரிக்கும் வலியையும் அனுபவித்தவன் என்பதால், அதே நிலையில் நின்றிருந்த மதுவை அவனையும் அறியாமல் தன் மேல் தாங்கிக் கொண்டான்.
“இப்ப நீ என்னோட உள்ள வர்ற… எல்லாருமா சேர்ந்து ப்ரோக்ராமை பார்க்கறோம்… அப்புறமா ரெஸ்டாரன்ட் போய் நல்லா சாப்பிடறோம்… அப்புறம் கொஞ்ச நேரம் பீச்ல டைம் ஸ்பென்ட் பண்றோம்… அப்புறமா உன்னை வீட்ல விட்டுட்டு நானும் உன் அம்மாச்சியும் கிளம்பறோம்… சரியா?” என்று கேட்க,
“ம்ம்ம் எல்லாம் சரி… நீங்க வேண்ணா ப்ரோக்ராம் பார்த்துட்டு வாங்க… நான் வரலை…” அவள் பிடிவாதமாக கூற, அவளது மனம் எதனால் சங்கடப்படுகின்றது என்பதை நன்றாகவே உணர்ந்தான் பார்த்திபன். ஆனால் மதுவை அப்படியே விட்டுவிடவும் மனம் வரவில்லை.
“என் மேல உனக்கு கொஞ்சமாவது நம்பிக்கை இருந்தா வா மது…” அதற்கும் மேல் அவள் பேசவில்லை. சம்மதமாக தலையாட்ட, அவளது கையை பிடித்துக் கொண்டு உள்ளே சென்றான்.
பார்த்த மாத்திரத்தில் இந்த மேடை இன்று தனக்கு சொந்தமாகிருக்கலாம் என்ற ஒரு நினைப்பு சட்டென்று அவளது மனதுக்குள் ஓடியது.
நினைக்கும் போதே உள்ளிருந்து ஒரு கேவல் எழும் போல இருந்தது.
தைரியமாக மறுத்துவிட்டு வந்திருக்கலாம் ஆனால் அத்தனை நாட்களாக சேகரித்து வைத்த கனவு ஒரு நொடியில் ஆவியானதை அவளால் அவ்வளவு இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.
அத்தனை நாட்களும் இதை தவிர அவள் வேறு எதையும் எண்ணியதில்லை. ஒவ்வொரு நொடியும் அவளது லட்சியத்தை பற்றிய கனவு மட்டுமே. ஆனால் இப்போது அதை விட்டுக் கொடுத்து, அதை இன்னொருவர் கைப்பற்ற போவதையும் தான் சாட்சி பூதமாக இருந்து பார்க்க போவதை பற்றி நினைத்தால் மனம் குமுறியது.
ஒரு வேளை கலந்து கொண்டு தோற்று போயிருந்தால் கூட இந்த வலி கண்டிப்பாக இருக்காது. ஆனால் கலந்து கொள்ள முடியாமல் வலுக்கட்டாயமாக கைவிட வேண்டிய சூழல். அந்த சூழலை அவ்வளவு இயல்பாக கடந்து விட முடியும் என்று தோன்றவில்லை.
பார்த்திபனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
இல்லை… இனி நினைக்கக் கூடாது! நினைக்கவே கூடாது!
நினைத்தால் தன்னையும் அறியாமல் தோன்றும் ஆற்றாமையால் தனது இயல்பு மாறிவிடக் கூடும். வேறெதையும் காட்டிலும் கண்ணியம் மிக முக்கியம்.
அந்த கண்ணியமில்லாத வெற்றியும் அதற்கான வழிமுறைகளும் தனக்கு தேவையற்றது!
பெரிதாக மூச்சை வெளியே விட்டு, தீர்மானமாக நினைத்துக் கொண்டவள், பார்த்திபனின் இடது கையை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு மேடையை நேராக பார்க்குமாறு பின்னால் நின்று கொண்டாள்.
மனம் மெதுவாக சமன்பட துவங்கியது.
ஓரக்கண்ணால் மதுவை பார்த்த பார்த்திபனுக்கு தெளிந்த அவளது முகம் வெகுவான திருப்தியை கொடுத்தது.
நடுங்கும் கரங்களால் தன்னுடைய கையை இறுக்கமாக பற்றியிருந்தவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
எப்படியும் அவளை வெளியே கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. அவள் இந்த ஆற்றாமையிலிருந்து வெளிவந்து விட்டால் மதுவின் எண்ணப்போக்கை மாற்றுவதும் அவளை மடைமாற்றுவதும் பெரிய வேலையாக இருந்துவிடாது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை!
யாருடைய செல்பேசியோ டைமிங்காக பாடியது.
பார்த்திபன் மதுவின் தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, மதுவுக்கு ஏனோ பலம் கூடியது போல தோன்றியது. மேடையின் பின்புறமிருந்து சஞ்சய் தங்களை பார்ப்பதை உணர்ந்தவள், பார்த்திபனோடு இன்னும் நெருங்கி நின்று கொண்டாள்.
சஞ்சய்க்கு உள்ளுக்குள் கொதித்தது. திரும்பியும் பார்க்காமல் சென்றவளை அப்போதே சமாதானப் படுத்தி இருக்கலாம். ‘ஆனால் ஷோ ஆரம்பிக்க சில நிமிடங்களே இருக்கும் போது அதை விடுத்து காதலியை சமாதானப்படுத்த போக முடியாதே’ என்று அப்போது பல்லைக் கடித்துக் கொண்டான்.
இப்போது பார்த்திபனோடு அவளை சேர்த்துப் பார்த்தவனுக்கு நரம்புகள் தீப்பிடித்து விடும் போல இருந்தது. பார்த்திபனால் தான் அத்தனையும் என்ற அவ்வளவு கோபம்!
அவளை ரதீஷ் காட்டி கேலியாக சிரித்தது வேறு உள்ளுக்குள் கோபத்தை பலமடங்கு அதிகப் படுத்தி இருந்தது.
சஞ்சய்க்கு மதுவை மிக மிகப் பிடிக்கும். அவனைப் பொறுத்தமட்டில் அது காதல்!
காதலுக்கு அவன் கொண்ட விளக்கமும் பெஞ்ச் மார்க்கும் வேறு!
மது கொண்ட விளக்கமும் பெஞ்ச் மார்க்கும் வேறு!
அதை அவன் உணரவில்லை. இவன் இப்படித்தான் என்பதை அவளும் உணரவில்லை. வயதுக் கோளாறு என்பதை தாண்டி சொல்ல வேறு என்ன இருக்கிறது?
இப்போது பார்த்திபனோடு நின்றுக் கொண்டிருந்த மதுவை பார்க்க பார்க்க கோபம் எல்லை மீறிக் கொண்டிருந்தது. அவ்வளவு தெளிவாக நின்று கொண்டிருந்தாள், முகத்தில் சிறு தயக்கமும் வருத்தமும் இல்லாமல்!
அருகில் நின்றவனது முகம் தான் சற்று இறுகியிருந்தது. அவன் எப்போதுமே அப்படித்தானே என்று நினைத்துக் கொண்டான் சஞ்சய்.
“சஞ்சய் என்ன பண்ணிட்டு இருக்க? எல்லாம் ரெடியான்னு பாரு…” கோ ஆர்டினேட்டர் தான்யா கொடுத்த குரலில் மனதின் குழப்ப எண்ண குவியலிலிருந்து மீண்டான்.
‘இவளை இப்படியே விட்டுவிட முடியாது.’ என்று அவனது மனம் பிடிவாதம் பிடித்தது.
‘எப்படி விட முடியும்? இத்தனை நாட்களாக தன் கைகளில் இருந்த காதலியை விட்டு விட முடியுமா? அது தன்னால் ஆக கூடிய ஒன்றா? அவள் இல்லாமல் இருக்க முடியுமா? அவளுக்கு தான் அறிவில்லாமல் பெரும்பாடு பட்டு கிடைத்த சந்தர்ப்பத்தை தூக்கி எறிந்து விட்டு செல்லும் அளவு புத்தி மழுங்கி விட்டதென்றால் அவளை அப்படியே விட்டு விட முடியுமா?’
உள்ளுக்குள் கோபம் கனன்றது சஞ்சய்க்கு. ஆனால் அந்த நேரத்தில் அவனால் எதையும் பேச முடியவில்லை. ரதீஷ் வேறு ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டே இருந்தான்.
மதுவுக்கு பதிலாக ஷிவானி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட மகிழ்ச்சியை அவன் கொண்டாடிக் கொண்டிருந்தான். எப்படியும் ஷிவானியை ட்ரம்ப் கார்டாக்கி நிறைய விஷயங்களை சாதித்துக் கொள்ளலாமே.
எத்தனையோ விஷயங்களுக்கு அவள் கண்டிப்பாக பிள்ளையார் சுழியாக இருப்பாள் என்பதில் ரதீஷுக்கு சந்தேகம் இல்லை. தன்னுடைய லாபி வீணாகி விடவில்லை என்பதில் அவனுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி.
மதுவுக்கு பதிலாக ஷிவானியை இங்கு வேண்டுமானால் களமிறக்க முடியும். ஆனால் வாழ்கையில்?
நினைத்துப் பார்த்த சஞ்சய்க்கு உள்ளுக்குள் வெப்பம் பற்றி எரிந்தது.
அது அவனை மட்டுமல்ல, அவளையும் சுட்டு பொசுக்கப் போகும் வெப்பம் என்பதை அவன் அறியவே இல்லை.
மாடல்கள் ஒவ்வொருவருவராக மேடையில் பூனை நடை பயின்று வர, அதை பார்த்த சஞ்சய்க்கு உள்ளுக்குள் கோபம் கொதித்தது. இத்தனை நாட்களாக எவ்வளவு சிரமப்பட்டு இந்த நிலை வரை கொண்டு வந்துவிட்டு, பெரிதாக கலாச்சாரமென்று மறுத்து விட்டு போனவளை நினைத்து வந்த கோபம் அது.
மேடையின் பின்னால் இருந்து பார்த்திபனோடு நின்று கொண்டிருந்த மதுவை பார்க்க பார்க்க அவனுக்கு பற்றி எரிந்தது.
விட முடியாது!
அவளை விடவே முடியாது!
எந்த காலத்திலும், நேரத்திலும் அவளை விட்டு விட முடியாது!
அவளை சிறை எடுத்தாவது தன்னருகில் கொண்டு வந்தே தீர வேண்டும்!
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ விதச்ச
அடி தேக்கு மரக்காடு பெரிசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
அவளருகில் தான் மட்டுமே இருக்க வேண்டும்… தான் அனுமதித்தால் மட்டுமே மற்றவர்… ஆனால் பார்த்திபன் இருக்கக் கூடாது!
இருக்கவே கூடாது!
வெறியோடு சஞ்சய் மதுவை பார்க்க, அதை உதட்டோர விஷமப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான் ரதீஷ்.
இதை அவன் எதிர்பார்த்திருந்தான். இந்த நிலைக்கு சஞ்சயாக வராவிட்டாலும் ரதீஷ் வர வைத்திருப்பான். இப்போதும் என்ன? பின்னணியில் அவனது தூண்டுதல் இல்லாமலா இருந்தது?
நேரடியாக கொலை செய்தால் தான் கொலையென்று சட்டம் சொல்லலாம்… ஆனால் அந்த சட்டமும் கூட கொலைக்கு தூண்டியவனுக்கு தண்டனை அதிகமென்று தான் கூறுகின்றது. ஆனால் தூண்டி விட்டதையும் எதிராளி அறிய முடியாமல் காரியமாற்ற முடியும் என்றால் அது ரதீஷை போன்றவர்களால் தான் முடியும்.
ரதீஷ் அவனது விளையாட்டை ஆரம்பித்து இருந்தான். சஞ்சய் அவனது கைப்பாவையாகி இருந்தான்.
“அன்ட் தி வின்னர் இஸ் ஷிவானி சக்ஸேனா…” மேடையில் அறிவிப்பாளர் ஆரவாரமாக அறிவிக்க, ரதீஷின் முகத்தில் வெற்றிக் களிப்பு.
ஷிவானி அவனது கருவியாகியிருந்தாள்.
ஷாலினி உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஷிவானியின் முகமோ மகிழ்ச்சியில் விகசித்தது. வெற்றி தரும் களிப்பு அவளது அழகை பன்மடங்காக்கியிருந்தது. எதிர்பாராமல் கிடைத்த பொக்கிஷமல்லவா இந்த வெற்றி.
பார்த்திபனை இன்னும் ஒட்டி நின்ற மதுவுக்கு உடல் நடுங்கியது.
கண் முன்னே வாழ்க்கை பறிபோய் விட்டதாக தோன்றியது அவளுக்கு!
ஆனால் இனிதான் வாழ்க்கை அதன் ஆடுபுலி ஆட்டத்தை ஆடப் போவதை அவள் அறியவில்லை.
உண்மைக்கு மாற்று எதுவுமில்லை. இடம் பொருள் ஏவலில்லை. கசப்பாகத்தான் இருக்கும். விழுங்கித்தானாக வேண்டும். வேறு வழியில்லை. பொய்யையும் போலித்தன்மையையும் விழுங்குவதை விட அது மேலானது.
அடுத்த நாள் ஷிவானி அவளைத் தேடி வந்தாள்.