PuthuKavithai 4

PuthuKavithai 4

அத்தியாயம் 4

கண்களில் பொறிப் பறந்தது போலிருந்தது மதுவுக்கு. காது அடைத்துக் கொண்டு ஜிவ்வென்றது. மண்டைக்குள் ஹெலிகாப்டர் பறக்கும் உணர்வு. அவளையுமறியாமல் கண்கள் உடைப்பெடுக்க, கன்னத்தைப் பற்றிக்கொண்டு நிமிர்ந்து பார்த்திபனை பார்த்தாள்,

அவனது கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது.

பானுமதிக்கும் சகுந்தலாவுக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை.

இருவருமே அதிர்ந்து மற்ற இருவரையும் பார்க்க, பார்த்திபன் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

அவனைப் பொறுத்தமட்டில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

அதில் மாற்று கருத்தில்லை!

என்றும் தன்னை மாற்றிக்கொண்டதுமில்லை!

“வெட்டி பொலி போட்டுடுவேன் பார்த்துக்க… என்ன ஆடிப் பார்க்கலாம்ன்னு நினைக்கறியா? பிச்சு போடுவேன் பிச்சு… இந்த மாதிரி வேலைத்தனத்தையெல்லாம் மூட்டை கட்டிடு…”

ருத்ரமூர்த்தியாகத் தன் முன்னே நின்று கொண்டு பேயாட்டம் ஆடியவனைப் பார்க்கும் போதே உள்ளே குலை நடுங்கியது. அதுவரை இறுக்கமான பார்த்திபன், கறாரான பார்த்திபனைத்தான் பார்த்திருக்கிறாள். பார்த்திபனின் இந்த அவதாரம், அதிலும் அவளிடம் இந்த அவதாரம் புதிது!

இதுவரையில் யாருமே அவளை அடித்ததில்லை. கடுமையாக ஒரு சொல் கூடக் கூறியதில்லை. அது போல மதுவும் நடந்துக்கொண்டதும் இல்லை. ஆனால் அவற்றுக்கெல்லாம் மாறாக பார்த்திபனிடம் அவள் வாங்கிய அடியை நினைத்து நடுங்கினாள். அவன் நின்ற தோரணையைப் பார்க்கும் போது ஒற்றை அடியோடு நிறுத்துபவன் போலத் தெரியவும் இல்லை.

பயந்து போய்ப் பின்னடைந்தாள்!

உள்ளுக்குள் இவன் எப்படி அடிக்கலாம் என்ற கோபம் கனன்றது.

“அடேய்… சின்னபிள்ளைக் கிட்டயா உன்னோட இந்த முரட்டுத்தனத்தைக் காட்டுவ?” அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்த சகுந்தலா தன்னைச் சுதாரித்துக்கொண்டு அவசரமாக அவர்களை நோக்கி வர பார்த்திபன் அவரைப் பார்க்கவும் இல்லாமல் கையைக் காட்டி நிறுத்தினான்.

“அங்கேயே நில்லு ம்மா… இதுல தலையிடாதே… அடிச்சு வளர்க்க ஆளில்லாத கன்னுகுட்டி துள்ளிட்டு திரியுது… யாராச்சும் அடிமாட்டுக்கு அடிக்கறதுக்கு முன்னாடி நம்ம வீட்டு புள்ளைய நாம காபந்து பண்ண வேண்டாம்ன்னு சொல்றியா?”

கோபத்தில் உறுமியவனை என்ன கூறினாலும் சமாதானப்படுத்த முடியாது என்பது அவருக்குத் தெளிவு!

கையைப் பிசைந்து கொண்டு பானுமதியை நோக்க, வினோதகன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்!

சகுந்தலாவுக்கும் பானுமதிக்கும் தூக்கி வாரிப் போட்டது!

உள்ளே வந்த வினோதகனை சற்றும் கண்டுக்கொள்ளாமல் மதுவை ஆழமாகப் பார்த்தவன்,

“எத்தனை நாளா இந்தப் பழக்கம்?” தன் முன் கண்களில் நீரோடு தலைகுனிந்து கொண்டு கன்னத்தை இறுக்கமாகப் பற்றியபடி நின்றிருந்த மதுவிடம், முகத்தைக் கல் போல வைத்துக்கொண்டு கேட்க, அவள் பதில் கூறவில்லை.

கூற முடியவில்லை!

முற்படவும் இல்லை!

ஒரு புறம் இவனென்ன கேட்பது என்ற கோபம்!

தான் செய்த தவறின் வீரியம் புரிந்த நேரம்!

தன் அம்மாச்சியின் மனமும் தாயின் மனமும் வேதனைப்படுமே என்ற குற்ற உணர்வு!

இவனிடமிருந்து தப்பவே முடியாது என்ற கழிவிரக்கம்!

அத்தனை உணர்வுகளும் அவளை அப்போது ஆட்டிப்படைக்க அந்த இடத்திலேயே காணாமல் போய் விட்டால் தான் என்ன என்று தோன்றியது தன் முன்னே கோபாவேசமாக நின்று கொண்டிருந்த பார்த்திபனை காணும் போது!

“சொல்லு மது… எத்தனை நாளா இந்தப் பழக்கம்?” குரலை சற்று உயர்த்த,

“வாங்க… எப்ப வந்தீங்க?” மாமியாரை வரவேற்ற வினோதகனின் குரல் கேட்டுத் திரும்பினான் பார்த்திபன்.

சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் மதுவந்தி. ஆனால் தந்தையைக் கண்டவுடன் பயம் மேலும் அதிகமாகியது. இது போன்ற தவறுகளில் சிக்காதவளுக்கு அன்றைக்கென்று இத்தனை சோதனைகள் வர வேண்டுமா என்று உள்ளுக்குள் ஒரு குரல்! ஆனால் இந்த முரடனுக்குத் தன் தந்தை எவ்வளவோ மேல் என்ற நிம்மதி அவளுக்குள் தோன்றாமலில்லை.

வரவேற்றவரின் குரலில் இருந்த இயந்தரத்தன்மை அவனுக்குப் புரிந்திருந்தது. திரும்பிப் பார்த்தவனின் செய்கையில் எந்த மாற்றமும் இல்லை.

உயிர்ப்பும் இல்லை… உணர்வும் இல்லை… அதற்கும் மேல் உறவும் இல்லை!

ஆனால் பார்வை மட்டும் வினோதகனை நோக்கியது!

சகுந்தலா பேசவில்லை… எப்போதும் போலக் கை கூப்பி வணக்கம் தெரிவித்தவர், மரியாதையோடு வினோதகனுக்கு தலையசைத்தார்! அவருக்கு அங்கே நடந்தவை எதுவும் தெரியவில்லை. ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டுமே உணர்ந்தார் வினோதகன்.

அவரைப்பொறுத்தவரை பார்த்திபன் தனது தமக்கையின் வீட்டிற்கு வந்தது ஒரு அதிசயம்! எத்தனையோ ஆண்டுகட்குப் பிறகு வந்திருப்பவனைப் பார்த்து முகத்தைத் திருப்புவது சரியல்ல என்பதை மட்டும் தான் அப்போது அவர் நினைத்தார். அதனால் அவனுக்கு முன் தன்னுடைய மகள் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நிற்பதும் கூடத் தெரியவில்லை!

ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவர்,

“வா மாப்பிள்ளை… எப்படி இருக்க?” என்று கேட்க, அவருக்கு என்ன பதில் தருவது என்று சற்று யோசித்தான் பார்த்திபன்…

பதில் கூற விருப்பம் இல்லை அவனுக்கு!

ஆனால் அது இங்கிதமும் இல்லையே!

வந்திருப்பது தமக்கையின் வீட்டிற்கு!

ஆயிரம் முறை யோசித்துத் தான் வந்ததும்! இன்னும் எத்தனை நாட்களுக்கு அவரைத் தவிர்ப்பாய் என்று சகுந்தலா அடி மேல் அடி வைத்ததால் இந்தக் கற்பாறை நகர்ந்திருந்தது. காரமடையிலிருந்து நகர்ந்த கற்பாறை அதற்கும் மேல் சென்னையில் நகர்வேனா என்று அழுச்சாட்டியம் செய்து கொண்டிருந்தது.

சகுந்தலாவும் பானுமதியும் பதிலளிக்காமல் பார்த்துக்கொண்டிருந்த பார்த்திபனை பார்க்கும் போது பதட்டமாக இருந்தது. வினோதகனுக்கு பதில் கூற முற்படும் போது,

“ம்ம்ம்… நல்லா இருக்கோம்…” என்றவன் அதற்கும் மேல் உங்களிடம் எனக்குப் பேச்சுவார்த்தை இல்லை என்பது போல மதுவின் புறம் திரும்பினான்.

“கேட்ட கேள்விக்குப் பதில் வரணும் மது…” முன்பை விட இறுக்கமாக அவன் கேட்க, அவள் தந்தையையும் மாமனையும் மாற்றிமாற்றிப் பார்த்து திணறினாள். தந்தைக்கு முன் கேட்கிறானே என்ற வெட்கம் பிடுங்கி தின்றது!

என்னவாயிற்று என்று மதுவந்தியை கேள்வியாகப் பார்த்தார் வினோதகன்.

“அ… அது… வந்து…”

“எத்தனை நாள் பழக்கம் இது?”

“இ… இன்னைக்கு… தா…”

“பொய் சொல்ற நீ?” என்றவன் மீண்டும் கையை ஓங்கினான். மதுவந்தி கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு கன்னத்தைப் பிடித்துக் கொண்டு விட, விரைந்து அருகில் வந்த வினோதகன் அவசரமாக பார்த்திபனின் கையைப் பிடித்தார்.

“இது என்ன மாப்பிள்ளை பழக்கம்?”

அதிர்ந்தவர் அவனைப்பார்த்து கேட்க, அவரது கையை உதறியவன், அவரை ஏளனமாகப் பார்த்தான்.

“ஒழுங்கா பொண்ணை வளர்க்க தெரியுதா உங்களுக்கு? அவ என்ன பண்றான்னு கொஞ்சமாவது தெரிஞ்சு வெச்சு இருக்கீங்களா?”

அவனது கேள்வியில் இருந்த நியாயத்தை ஏளனமென்று வினோதகன் பதம் கொண்டு விட, அவரது அட்ரனலின் மிக வேகமாக உற்பத்தியாகத் துவங்கியது. யார் வீட்டில் வந்து யாருடைய பெண்ணின் வளர்ப்பு சரியில்லை என்று இவன் கூறுவது என்ற கோபம்!

“பார்த்தி…”…”தம்பி…” என்ற பதட்டமான குரல்கள் கேட்டாலும், கோபத்தோடு நிமிர்ந்து நின்ற வினோதகன்,

“யார் பொண்ணை யார் குறை சொல்றது? அவ என் பொண்ணு…” தலை நிமிர்ந்து அவர் கூறிய பதில் மதுவின் குற்ற உணர்வை அதிகரித்தது. ஆனால் கல் போல நின்றிருந்த பார்த்திபனின் மனதுக்குள் இவர் செல்லும் திசை சரியில்லை என்று எச்சரிக்கை மணியடித்தது.

பார்த்திபன் கூறுவது நியாயமே என்றாலும் அதை இனிப்புத் தடவிக் கூற தெரியாதவன் அவன். பட்டென்று முகத்துக்கு நேராக எதையும் கூறிப் பழக்கப்பட்டவனுக்கு யாரிடமும் சொல்ல பயந்ததும் இல்லை, தயங்கியதும் இல்லை.

“உங்க பொண்ணு செய்த காரியத்துக்கு நானா இருந்தா இந்நேரம் வெட்டி பொலி போட்டிருப்பேன். உங்க பொண்ணுங்கறதுனால தான் இவ்வளவு பொறுமையா பேசிட்டு இருக்கேன்…” பல்லைக் கடித்துக்கொண்டு அவன் கூற, இவனுடைய பொறுமையே இதுவென்றால் என்று அதிர்ந்து அவனைப் பார்த்தாள் மதுவந்தி.

கண்களில் கண்ணீர் நிற்கவில்லை!

அவனுக்கு முன் நிற்க பயந்துக்கொண்டு, “அப்பா…” என்று வினோதகனை நோக்கி அழுதுக்கொண்டே போக, தன் பெண்ணைத் தன்னோடு அணைத்துக் கொண்டார் அவர்.

உள்ளுக்குள் கொதித்து அவருக்கு, அவளது கன்னத்தைப் பார்த்து! ஒற்றைக் கன்னம் கன்றிப் போயிருந்தது. எவ்வளவு திண்ணக்கம் இருந்தால் இப்படி அறைவான் இந்த முரடன்!

முரடன் என்பதை உணர்த்துகிறான். பூப்போன்ற தன் பெண்ணைக் கை நீட்டி அடிக்க எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? கேட்க ஆளில்லையா?

மதுவந்தி இதுபோல அழுது அவர் பார்த்ததே இல்லை. அழுவதைப் போல அவர் வைத்ததும் இல்லை. கேட்பதற்கு முன் எதுவொன்றையும் கொடுத்துப் பழக்கப்பட்டவர்.

பானுமதியையும் அதுபோலத்தான் பழக்கி வைத்திருந்தார்.

அவரைப் பொறுத்தமட்டிலும் மதுவந்தி ஒற்றைப் பெண்.

இருக்கின்ற அத்தனையும் அவளுக்குத் தானே தவிர வேறு யாருக்கு என்ற எண்ணம்!

அது எவ்வளவு மோசமான விளைவை தருமென்றேல்லாம் நினைக்க அவருக்கு நேரமில்லை. தன்னுடைய நேரத்தை கொடுக்க முடியாத அந்தத் தந்தை செல்லத்தை வாரி வழங்கினார்.

“என் பொண்ணுன்னு தெரியுதுதானே பார்த்தி… நான் பார்த்துக்கறேன்…” வெட்டிவிட்டார் போல அவர் கூற, பானுமதி,

“என்னங்க இப்படிப் பேசறீங்க? பார்த்தி ஒன்னும் தப்பால்லாம் பண்ணிடலை… மதுவ விசாரிச்சான்… அவனுக்கு இல்லாத உரிமையா மதுப்பா?” கணவரிடம் தன் சகோதரனுக்காகப் பரிந்து கொண்டு வந்த பானுமதியை எரித்துவிடுவதைப் போலப் பார்த்தார்.

“அதான் விசாரிச்ச லட்சணம் தெரியுதே… அவன் அடிக்கறதை வேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்க நீ?”

பானுமதியிடம் அவர் எகிற, அவருக்குச் சுறுசுறுவெனக் கோபம் வந்தது.

“என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன்னு சொல்றீங்க? அப்படியே அடிச்சாலும் தான் என்ன? நாம கண்டிக்காததை அவன் செய்யறான்… அதுல என்ன தப்பு மதுப்பா?”

“கண்டிக்க அவன் யாருடி? மது ஏதாவது தப்பு செஞ்சா நான் தான் கண்டிப்பேன்… நானே என் பொண்ணைக் கை நீட்டுனதில்லை… உன் தம்பிக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்… என் பொண்ணைக் கை நீட்டி அடிக்க…”

மது நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பார்த்தாள்… பார்த்திபனை! பார்த்தாயா என்னுடைய தந்தையை என்ற கர்வம் அவளது முகத்தில்!

பிள்ளை கர்வம்!

தன்னுடைய தந்தையைத் தவிர வேறு யாருமே உயர்த்தி இல்லை என்று நினைக்கும் அந்தப் பிள்ளை கர்வம்!

“அவன் யாருன்னு எப்படி நீங்க கேட்கலாம்? அவன் என்னோட தம்பி… மது தப்பு பண்ணினா அதைக் கேட்க மட்டுமில்ல, நேராக்கவும் அவனுக்குத் தான் உரிமையிருக்கு…”

“தேவையில்ல… அவன் நேராக்கற அளவு என் பொண்ணு தப்பு பண்ண மாட்டா… நீ பேசாதே பானு…”

“அதெப்படி… நீங்களும் உங்க பொன்னும் தாய்மாமன் உறவே வேண்டாம்ன்னு வெட்டி விடுவீங்களா? எதுவொன்னுக்கும் அவன் தாங்க வரணும்…” எப்படியாவது அவரது தரப்பு நியாயத்தைக் கணவருக்குப் புரிய வைத்துவிடும் நோக்கத்தில் மூச்சு விடாமல் அவர் வாதாட, வினோதகன் அலட்சியமாகத் தோளைக் குலுக்கினார்.

“தேவையில்லை… என் பொண்ணைக் கஷ்டப்படுத்தற எதுவும் எனக்குத் தேவையில்லை…”

“அவ எனக்கும் பொண்ணுதான் மதுப்பா… உங்களுக்கு நானும் பேசக்கூடாது… என் தம்பியும் பேசக்கூடாது… அப்படித்தானே…” கோபமாக அவர் கேட்க,

“ஆமா… பேசக் கூடாது… யாரும் இப்படிப் பேசற அளவு என் பொண்ணை நான் வளர்க்கலை… அவ ராணிடி… மகாராணி… அவ யார்கிட்டவும் தலை குனிச்சு நிற்கக் கூடாது… நிற்க மாட்டா… அப்படி நிற்கற அளவு நானும் வைக்க மாட்டேன்…”

“வேண்டாம் மதுப்பா… இது அகம்பாவம்… பணம் இருக்க ஆணவம்… எல்லாரையும் வெட்டி விட்டு பேசச்சொல்லுது அந்த ஆணவம்…” பானுமதி மனைவியாகவும் தாயாகவும் உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டு எச்சரித்தார்.

வினோதகனை போல இந்தச் செல்வ வாழ்க்கையில் முழுவதுமாக ஆழ்ந்து விட்டவர் அல்ல அவர். எந்த அளவு வசதிகள் இருந்தாலும் மனம் அதில் செல்லக் கூடாது என்று பணிவொன்றே தேவை என்றும் போதிக்கப்பட்டு சகுந்தலாவால் வளர்க்கப்பட்டவர்.

சென்னையில் வினோதகனின் மேல்தட்டு வாழ்க்கை முறையில் சற்று ஊன்றி இருந்தாலும் அடிப்படை குணம் எப்போதும் அவரை விட்டு போனதில்லை.

அந்தக் குணம் தான் வினோதகனின் இந்த ஆணவத்தை எதிர்க்க சொன்னது.

முதலிலேயே எதிர்த்திருந்தால் சகோதரனின் வாழ்க்கையைக் காத்திருக்கலாமே என்றும் மனசாட்சி அவ்வப்போது கூறுவதுண்டு.

அவையெல்லாம் சேர்ந்துக்கொண்டு இப்போது பானுமதியை பேச வைக்க, தம்பதியரின் இந்த வாக்குவாதத்தைப் பதட்டத்தோடு பார்த்தார் சகுந்தலா. தங்களால் தானே இந்தப் பிணக்கு!

“ஆமா ஆணவம் தான்… என்னை மீறி… என்னோட அந்தஸ்தை மீறி… என்னோட பணத்தை மீறி என்ன நடந்துடும்? எதுன்னாலும் நான் பார்த்துக்குவேன்…”

அந்த நேரத்தில் வினோதகனின் நாவில் சனி வந்துதான் அமர்ந்திருக்க வேண்டும். வீட்டு நிலை வாசல் படியில் வாஸ்து புருஷன் உறங்கிக்கொண்டிருப்பானாம். அவன் திடீரென உறக்கம் கலைந்து எழுந்து ‘ததாஸ்து’ என்று கூறுவானாம். அதாவது அப்படியே ஆகட்டுமென்று அர்த்தமாம்!

அப்படி வாஸ்து புருஷன் உறக்கம் களைந்த நேரத்தில் தான் வினோதகன் கூறியதும்.

‘ததாஸ்து’

அவன் ஆசீர்வதித்தானோ அல்லது சபித்தானோ?

யார் அறிய முடியும்?

வினோதகன் கொதித்துக் கொட்ட, அவரைச் சலனமில்லாத பார்வை பார்த்தான் பார்த்திபன். மீண்டும் பேச வாயெடுத்த பானுமதியை முறைத்தான் அவன்.

அதில் பேசாதே என்ற தொனியிருந்தது. பேசி பயனிலாத இடங்களில் வார்த்தைகளை விரயம் செய்யக்கூடாதே! ஒவ்வொன்றுமே நம்மை நோக்கி திரும்பி வரும் அஸ்திரங்கள் அல்லவா!

“பணம் எப்பவுமே ஒருத்தரை ஒழுக்கத்தோடு வாழ வைத்ததா சரித்திரம் கிடையாது. பணம் மட்டும் தான் வாழ்க்கைன்னு நினைச்சவங்க எத்தனையோ பேர் மண்ணோடு மண்ணா போயிருக்காங்க. உங்களுக்கு எப்பவுமே பணத்தைத் தாண்டி யோசிக்கத் தெரியாது. மனுஷங்களுக்கு ஒழுக்கம் தான் முக்கியம். நமக்கு பின்னாடி பணம் வந்து பேசாது. அந்த ஒழுக்கம் தான் வந்து பேசும். அதுக்கப்புறம் உங்க விருப்பம்…”

நிதானமாகக் கூறியவன், சகுந்தலாவை நோக்கி,

“ம்மா… நாளைக்கு ஈவினிங் அஞ்சு மணிக்கு வர்றேன்… ஆறு மணிக்கு பொண்ணு வீட்டுக்கு போகணும்… உன் பொண்ணை ரெடியா இருக்கச் சொல்லு… வேற யாருக்கு சொல்லணுமோ சொல்லிக்க…”

வரிசையாகக் கூறிவிட்டு பதிலை எதிர்பாராமல் திரும்பி நடந்தான்.

அவன் எப்போதுமே அப்படிதான். யாருக்கும் பணிந்து பழக்கமில்லை. நியாயம் என்று பட்டுவிட்டால் உயிரையும் கொடுப்பான். ஆனால் நியாயமில்லை என்று தோன்றிவிட்டாலோ அவனை மாற்றவே முடியாது. உலகமே அழிந்தாலும் கூட!

ஊரில் பல கட்டபஞ்சாயத்துகளும் கூட இவன் தலைமையில் நடப்பதுண்டு!

‘பார்த்திபன் சொன்னா சரியா இருக்கும்’ என்ற பெயரும் உண்டு!

இரண்டு தரப்புகளுமே இவன் கூறிவிட்டால் போதுமென்று கூறிவிடுமளவு அவனுக்கு ஒரு அந்தஸ்து இருக்கிறது!

இத்தனைக்கும் அத்தனை பேரை விடவும் இளையவன் அவன்!

அத்தகையவனுக்கு இனி இந்த இடத்தில் பேசி உபயோகமில்லை என்று தோன்றியது!

திரும்பவும் பேசக்கூடாது என்று கிளம்பிப் போனான். அப்படிதான் அவன் நினைத்துக் கொண்டான்.

ஆனால் விதி வேறுவிதமாக இருக்குமென்று அவன் நினைக்கவில்லை!

*****

ஐந்தாவது முறையாகச் செல்பேசி அழைத்து ஓய்ந்திருந்தது.

முதல்முறை அழைத்த போது உண்மையிலேயே மது குளியலறையில் இருந்தாள்.

அடித்து ஓயும் போதுதான் அவள் வந்தது!

இரண்டாவது முறை செல்பேசியின் அருகில் தான் இருந்தாள், ஆனால் எடுக்கப் பிடிக்கவில்லை.

சஞ்சய் தான் அழைத்துக் கொண்டே இருந்தான்.

விடாமல் அவன் அழைத்த முறையில் சற்று எரிச்சல் கூட வந்தது. இரவு அத்தனை பிரச்சனை ஆனதுக்குக் காரணம் என்று சஞ்சய்யை தான் அவள் மனதுக்குள் வறுத்துக் கொண்டிருந்தாள்.

அவன் தானே மோஜிட்டோவை கொடுத்து அருந்த சொன்னது… பார்ட்டியில் தாமதப்படுத்தியது…

காரணம் அனைத்தையும் அடுத்தவர் மேல் சுமத்திவிட்டால், தான் அப்பாவி என்று யார் சொன்னது மது என்று மனசாட்சி கேள்வி எழுப்பியது. ஆனாலும் அவன் மேல் மட்டும் குற்றத்தை ஏற்றிவைத்து அவனைத் துண்டாடிக்கொண்டு இருந்தது.

‘அவன் கொடுத்தான் என்றால் உனக்கு எங்கே போனது அறிவு? ஊர் சுற்ற கிளம்பிவிட்டதா?’ என்ற கேள்வியையும் மனசாட்சி கேட்டு வைக்க, அவன் இருபத்தி ஐந்தாவது முறையாக அழைத்த போது ஏற்றாள் மது!

இரவு தன் தந்தை கூறியது வேறு காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

பார்த்திபன் அப்போது கிளம்பிப் போய்ச் சற்று நேரமாகிவிட்டது, தாயும் அம்மாச்சியும் படுக்கச் சென்றுவிட்டார்கள். பானுமதியின் வெறுமையான பார்வை வேறு அவளைச் சுட்டுப்பொசுக்கியது!

தாயை என்றுமே அவள் விட்டுக்கொடுத்ததில்லை. காயப்படுத்தியதும் இல்லை. தாயும் தந்தையும் அவளைப்பொறுத்தவரை இரு கண்கள்.

எந்தக் கண் அழுதாலும் அவளுக்கு வலிக்கும்!

ஆனால் அவர் பிடிவாதமாகத் தன் சகோதரனை நம்புவது மட்டும் தான் அவளுக்கு உறுத்தியது. அப்படியென்ன பாசம்? பெற்ற பெண்ணை அடிக்க விடுமளவு என்ற குழந்தைத்தனமான கோபம் அவளுக்கு.

ஆனால் ஊர்பக்கங்களில் எல்லாம் தந்தையைக் காட்டிலும் தாய் மாமனுக்குத் தான் அதிக உரிமை, மரியாதை என்றெல்லாம் கொண்டாடுவது அவளறியாதது.

மெளனமாக அவளறைக்கு அழைத்துச் சென்ற அவளது தந்தை, நிதானமாக,

“என்ன ஆச்சுன்னு கேட்க மாட்டேன் மது…” என்று ஆர்பாட்டமில்லாமல் கூற, அவளுடைய குற்ற உணர்வு மேலும் அதிகமாகியது…

“இல்லப்பா… அது வந்து…” என்று ஏதாவது விளக்கம் கொடுத்தாக வேண்டுமே என்று அவள் தடுமாற, கையைக் காட்டி அவளை நிறுத்தினார்.

“வேண்டாம் டா… நான் கேட்கவே இல்லை…”

“அப்பா…”

“ஆனா உன் பக்கம் ஏதோ தப்பிருக்குன்னு மட்டும் தெரியுது…” எங்கோ பார்த்துக்கொண்டு அவர் கூற, அதிர்ந்தாள் அவள்!

“ப்பா…”

“இல்லைன்னா பார்த்தி இவ்வளவு கோபப்பட மாட்டான்… அவனுக்குத் தப்பை தப்புன்னு தான் சொல்ல தெரியும்… சரின்னு சொல்ற அளவு நல்லவன் கிடையாது…” உணர்வை துடைத்த முகத்துடன் அவர் கூற, அவரது வார்த்தைகளில் மேலும் அதிர்ந்தாள். தனக்காக மாமனிடம் அவ்வளவு வாதிட்டு விட்டாலும் பார்த்திபனை இவர் புரிந்து வைத்திருந்த பாங்கு அவளை ஆச்சரியப்படுத்தியது.

“இந்தளவு கோபப்படறான்னா ரொம்பப் பெரிய தப்பா இருக்கணும் மதுக்குட்டி…” என்றவரது குரல் தேய்ந்து சிறிதாகியது.

“ப்பா…” அவளுடைய குரல் மேல் எழும்பவே இல்லை.

“அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நீ தான் பெருமைய வாங்கித்தரனும் குட்டி… யாரும் பேசிட கூடாது… பார்த்தி எதுக்காக உன்னை இந்தளவு பேசினான்னு இனியும் கேட்க மாட்டேன்… அவனும் உன்னைக் கேட்காத மாதிரி பார்த்துக்க…” என்றவர் பக்கத்தில் இருந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று அருந்தினார். பதட்டத்தையும் சேர்த்தே விழுங்குவது போல!

“ப்பா… இல்லப்பா… புரியுதுப்பா…” அவளால் வேறெதையும் கூற முடியவில்லை.

“நீ என் பொண்ணுடா…” என்று அவளது தலையைத் தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டவர், “இனிமே அப்பா உன்கூட டைம் ஸ்பென்ட் பண்றதுக்கு ட்ரை பண்றேன்டா…” என்று குற்றமிழைத்த தொனியில் கூற,

“ப்பா… என்னப்பா நீங்க… அப்படியெல்லாம் ஒன்னுமில்லப்பா…” என்றாள் அவரைச் சமாதானப்படுத்த!

“இல்ல மதுக்குட்டி… பார்த்தி சொல்றது நியாயம் தான்… உன்னை இப்ப சரியா கவனிக்கலையோன்னு தோணுது… நீ இன்னமும் சின்னக் குழந்தைன்னே நினைச்சுட்டு இருக்கோம்… அது தப்புன்னு அவன் முகத்துல அறைஞ்சுட்டுப் போறான்… அவன் சரியாத்தான் இருக்கான்… நாங்க தான் கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்துட்டோம்…”

இந்நேரம் வரை பார்த்திபனிடம் தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசிய தந்தையின் உண்மைமுகம் அவளுக்குத் தன் குற்றத்தை மிகவும் பெரிதாக்கி காட்டியது.

அந்தக் கோபத்தில் தான் சஞ்சயின் போன்காலை கண்டுக்கொள்ளவில்லை!

“சொல்லு சஞ்சு…” சிறியதாகிவிட்ட குரலில் அவள் கூற,

“என்ன ஆச்சுன்னு என்னோட காலை எடுக்கவே மாட்டேங்கற மது? நான் ரொம்பப் பயந்துபோயிட்டேன் தெரியுமா?” பதட்டமாக அவன் கேட்க…

“நைட் வீட்ல பிரச்னையாகிடுச்சு சஞ்சு…”

“என்னன்னு?”

“ட்ரிங்க் பண்ணிட்டு வந்ததுக்கு மாமா அடிச்சுட்டாங்க…” அவளது குரல் அவளுக்கே கேட்கவில்லை…

“வாட்… ரப்பிஷ்… யார் அந்த மாமா?”

“அம்மாவோட தம்பி…”

“அது உன்னுடைய பர்சனல் ரைட்ஸ் மது… ஹவ் டேர் ஹி இஸ்… அவன் எப்படி அடிக்கலாம்?”

அவன் மரியாதையைக் கைவிட்டு அவன் இவனென்று கூற, மதுவுக்கே அது சரியாகப் படவில்லை. தந்தையும் தாயும் அவ்வளவு மரியாதை வைத்திருக்கும் தன் மாமனை இவன் மரியாதையில்லாமல் அழைப்பதா என்று சுறுசுறுவென்று இருந்தது. அதைக் கூறவும் செய்தாள்.

“சஞ்சு… அவர் உன்னைவிடப் பெரியவர்… மரியாதையா கூப்பிடு…”

“உன்னை அடிச்சு இருக்கான்… ஆனா அவனை நீ மரியாதையா கூப்பிட சொல்ற? ப்ச்… டோன்ட் பி ய பூல்… அவன் கூடாதுன்னு சொன்னா நீ அப்படித்தான் செய்வேன்னு இன்னமும் செஞ்சு காட்டனும்… அவன் முகத்துல கரிய பூச வேண்டாமா?” கோபத்தில் அவன் கூறுவது தெரிய,

“ம்ஹூம் இப்படிப் பேசாதே சஞ்சு… வேண்டாம்… என்னோட பேரன்ட்ஸ்க்கு பிடிக்காது…”

“சரி எப்படியோ போ… இன்னைக்கு ஏன் டான்ஸ் ப்ராக்டிஸ் வரலை?” காரியத்தில் கண்ணாக அவன் கேட்க…

“இன்னைக்கு ஒரு நாள் எனக்குப் பர்மிஷன் வேணும் சஞ்சு… இன்னைக்கு எங்களுக்கு வேற வேலையிருக்கு…”

“அப்படி என்னம்மா எனக்குத் தெரியாம வேலை?” கிண்டலாக அவன் கேட்க,

“மாமாவுக்கு அலையன்ஸ் பார்க்க போறோம்…”

“ஆமா அந்தக் காட்டானுக்கு அது ஒன்னு தான குறைச்சல்…” என்று கடுப்படித்தவனை,

“லுக் சஞ்சு… என்கிட்டே பேசும்போது இப்படிப் பேசாதே… மாமாவை ரெஸ்பெக்ட் இல்லாம… ஐ டோன்ட் லைக் இட்…”

“ஓகே ஓகே… டன்…” என்று வழிக்கு வந்தவன், “டான்ஸ் ப்ராக்டிஸ் தான் வரலை… அட்லீஸ்ட் நாம மீட் பண்ணலாம் மது… எனக்கு உன் ஞாபகமாவே இருக்குடி…” குரலின் தொனி மாறியிருக்க, போதையாக அவன் கூறியது அவளுக்குள் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது.

“ஹல்லோ என்ன டி ன்னு எல்லாம் சொல்ற?” அதட்டுவது போலக் கேட்டாலும் அதில் இருந்த காதலை அவன் புரிந்து கொண்டான்.

“ஏன் உன்னை நான் டி சொல்லக் கூடாதா? நான் அப்படித்தான் சொல்லுவேன்… என்னடி பண்ணுவ?” உரிமைக்குரல் எழுப்பியவனை ரசித்தாள் மது.

“கொழுப்பு ஒன்னரை டன் இருக்கு…” என்று அலுத்துக் கொள்ள,

“சரி… இன்னைக்கு மீட் பண்றதை பத்தி பேச மாட்டியே?”

“இன்னைக்கு வேலை இருக்குன்னு சொல்றேனே சஞ்சு…”

“ஓகே… ஈவினிங் தானே போறீங்க… மார்னிங்… ஓகே வா?”

“ஹே இப்பவே மணி ஒன்பதாச்சு…”

“இட்ஸ் ஓகே… ட்வெல்வ்க்கு… ஹோட்டல் பார்க்… ஓகே வா?”

அவசரமாக அவன் திட்டமிட, மது சிரித்துக்கொண்டாள். அவளுக்குக் கர்வமாக இருந்தது.

“ம்ம்ம்ம்… ஓகே… டன்…”

அவளது சம்மதத்தைத் தெரிவித்துவிட, விதி தனது அடுத்தப் புள்ளியை வைத்தது.

error: Content is protected !!