Puthukavithai20

Puthukavithai20

20
இறுக்கமான அமைதி சூழ்ந்திருந்தது அந்த அறைக்குள். செல்பேசியை வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தவனுக்குள் கோபம் கொந்தளித்துக் கொதித்துக் கொண்டிருந்தது. வினோதகன் பல்லைக் கடித்துக் கொண்டு நெருப்பின் மேல் அமர்ந்திருப்பதை போல அமர்ந்திருந்தார்.
ஜெயசந்திரன் என்ன பேசினார் என்பதை ஸ்பீக்கரின் வழியாக அத்தனையும் கேட்டவர்களுக்கு அத்தனை அவமானமாக இருந்தது.
மகன் தான்தோன்றித்தனமாக பொறுக்கித்தனம் செய்வானாம், அதற்கு அவனது தந்தை ஒத்து ஊதுவாராம். எப்படி இருக்கிறது நியாயம்? இவர்களது ஈகோவுக்கு பலி தான் பெற்ற மகளா என்ற ஆத்திரம் அவருக்கு!
அதே எண்ணத்தில் தான் பானுமதியும் அமர்ந்திருந்தார். அவரால் அழுகையை அடக்க முடியவில்லை. உதடு துடித்தது. மூக்கை விடைத்துக் கொண்டு சப்தம் வராமல் இருக்க கை வைத்து வாயை மூடிக் கொண்டார்.
அழுகையில் குலுங்கியது அவரது தேகம்.
அருகில் அமர்ந்திருந்த வினோதகன் பானுமதியின் தோளோடு அணைத்துப் பிடித்துக் கொண்டார். அவருக்குத்தான் அதீத ஆதரவு தேவைப்பட்டது அப்போது. அதை உணர்ந்து கொண்ட பானுமதி அவரது கைகளோடு இறுக்கமாக பிணைத்துக் கொண்டார்.
பெண்கள் மென்மையானவர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். நினைக்கும் போதெல்லாம் அழுகிறாயே என்றும் கூட அவர்களை கேலி பேசலாம். ஆனால் தாள முடியாத பிரச்சனைகள் என்று வரும் போது அதை எதிர்கொள்ள பெண்களுக்கு இருக்கும் தைரியமும் துணிச்சலும் தெளிவும் ஆண்களுக்கு இருப்பதில்லை.
பானுமதி அழுகையில் கரைந்தாலும் அவரை காட்டிலும் உள்ளுக்குள் வெகுவாக உடைந்து கொண்டிருந்தார் வினோதகன். அவர் தன்னுடைய மகளின் மேல் வைத்த ப்ரியம் அத்தகையது.
விநோதகனின் ஒன்று விட்ட அக்கா தான் சகுந்தலா. அதனால் தான் திருமணத்திற்கு பின் செந்தில்நாதன் அவரை நம்பி நிறைய பொறுப்புக்களை கொடுத்ததும். அவர் இருந்தவரை வினோதகன் சரியாகத்தான் இருந்தார். ஆனால் செந்தில்நாதனின் திடீர் மறைவுக்கு பின் மனம் உடைந்து கிடந்த குடும்பத்தின் சூழ்நிலையை உபயோகப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு துரோகம் செய்திருந்தாலும், பானுமதியை பொறுத்தவரை அவர் மிக நல்ல கணவர். மகளின் மேல் உயிரையே வைத்திருக்கும் தந்தை.
மது மேல் கொண்ட பாசம் எத்தகையது என்றால், அவளை மற்றவர்கள் கண்டிப்பதை கூட கண்டிக்கும் அளவு ஒரு குருட்டுத்தனமான பாசம் அவளின் மீது. அது சரியா தவறா என்று கூட அவர் யோசித்ததில்லை. ஒரு சில சமயங்களில் பானுமதியாக கண்டித்தபோதும் கூட, அதை வினோதகன் வரவேற்றதில்லை. தன்னால் அவளுக்கு நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வில், அவர் கொடுத்த அளவுக்கு மீறிய சலுகைகள் அவளது பாதையை மாற்றும் என்பதை உணராத தந்தை அவர்.
அந்த குற்ற உணர்வு இப்போது அவரை கொன்றது. பார்த்திபனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. ஒரு தோல்வியுற்ற தந்தையாக அவன் முன் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.
ஆனால் ஜெயச்சந்திரன் பேசியதையும் அவரால் ஏற்க முடியவில்லை.
அவரை பொறுத்தவரை இன்னமும் அவளொரு குழந்தை. வளர்ந்த குழந்தை.
ஒரு தந்தையின் பார்வை என்பது அதுதான். குழந்தைகள் எவ்வளவு பெரியவர்களானாலும் அவர்கள் குழந்தைகள் தான். ஆனால் உலகம் அப்படி பார்ப்பதில்லையே… சஞ்சய், ரதீஷின் செயலை விட ஜெயச்சந்திரன் அதை நியாயப்படுத்தி பேசிய வார்த்தைகள் அவரை கொதிக்க செய்திருந்தது.
“ஏன் பார்த்தி சைலண்ட்டா இருக்க?” அமைதியாக அமர்ந்து மதுவை பார்த்துக் கொண்டிருந்த பார்த்திபனை வினோதகன் கேட்க,
“என்ன சொல்றது?” முகத்தை அழுந்த துடைத்தபடி அவன் கேட்க,
“எனக்கும் புரியல பார்த்தி… பிள்ளை தப்பிச்சுட்டா. ஆனா இப்படி ஒரு சம்பவத்துக்கு அப்புறம் எப்படி அவ தன்னோட லைஃப்பை ஃபேஸ் பண்ணுவான்னு நினைச்சா பயமா இருக்கு. அவளுக்கு ஒரு செக்யுரிட்டி வேணும்ன்னு தோணுது. மற்ற எதுவுமே தோணலை…” மனம் திறந்து தன்னுடைய பயத்தை வெளிப்படுத்திய வினோதகனை ஆழ்ந்து பார்த்தான் பார்த்திபன்.
மது இருக்கும் நிலை அவனை ரொம்பவும் வருத்தப்படுத்திக் கொண்டிருந்தது. கோபத்தில் கொதிக்க வைத்திருந்தது.. தனது வாழ்க்கையில் வினோதகன் ஏற்படுத்திய நஷ்டங்கள் ஏராளம்.
தனது மகளின் வாழ்க்கைக்காக துடிக்கும் இவருக்கு பார்த்திபன் என்றால் அவ்வளவு எளிதாகி விட்டானா? அவனுடையது மட்டும் என்ன யார் வேண்டுமானாலும் வந்து விளையாடும் விளையாட்டு திடலா?
தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிமுகப்படுத்திய அஞ்சலியிடம் இவர் பேசியதனைத்தும் அவனது கண் முன் வந்து போனது!
“மாமா இறந்துட்டாங்க. மில்லை இப்ப நான் தான் பார்த்துக்கறேன். அதும் பேர்ல கிட்டத்தட்ட அறுபது கோடி ருபாய் கடன் இருக்கு அஞ்சலி. ரோலிங் மில் நஷ்டத்துல போயிட்டு இருக்கு. இப்ப மாப்ள அமெரிக்கா போறதுன்னா மில்லை வித்துட்டு தான் போகணும். என்ன சொல்றம்மா?” கோவையில் அஞ்சலியை அறிமுகப்படுத்தி வைத்தபோது அக்கா கணவராக வினோதகன் கூறிய வார்த்தைகள் இவை.
அவள் எதுவும் கூறாமல் பார்த்திபனை பார்க்க, அவனுக்கோ அவரது வார்த்தைகளை கேட்டதில் பகீரென்றது. சூழ்நிலை சற்று சிரமமாக இருப்பது உண்மைதான். ஆனால் அவை யாவும் சமாளிக்கக் கூடியவை என்று தான் அவன் நினைத்திருந்தான்.
எப்போதும் போல விநோதகனே மில்லை பார்த்துக் கொள்ளட்டும் என்பதில் அவனுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் ஏன் இப்படி சொல்கிறார் என்று முதலில் புரியவில்லை அவனுக்கு.
“மாமா… இப்ப இந்த விஷயம் தேவையா?” புரியாமல் கேட்டாலும் அழுத்தமாகவே கேட்டான் அப்போது.
தந்தை இறந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்திருந்த நேரமது. பொறியியல் முடித்த பின் யூ எஸ்ஸில் தான் வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக தலைகீழாக நின்று அங்கு செல்லவிருந்தான். அதற்கு முன் சென்னையிலேயே ஒரு மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்தான். அவர்கள் பார்த்திபனை எச்1b விசாவில் யூஎஸ் அனுப்ப இருந்தனர். அவனது குறிக்கோளே அதுதானே! அங்கு சென்று சிறிது நாள் கழித்து வேறு அமெரிக்க நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளலாம் என்பது பார்த்திபனின் திட்டம். எச்1b விசாவில் அதை செய்து கொள்ள முடியும். அவன் அங்கு செல்லும் தைரியத்தில் அஞ்சலி துணிச்சலாக திருமணத்திற்கு தயாராகி இருந்தாள்.
பார்த்திபனுக்கும் அவளுக்கும் இருபத்திரண்டு வயது என்பது திருமண வயது இல்லைதான்… ஆனாலும் யூஎஸ் போய்விட்டால் அவன் மாறிவிடுவானோ என்ற பயத்தில் தான் அஞ்சலி அவனை திருமணத்திற்கு நெருக்கியிருந்தாள்.
“நீ இல்லைன்னா எனக்கு இந்த உலகமே இல்ல எஸ்பி…” அவனை அணைத்து, அவனது கைகளில் தவழ்ந்து, அவனோடு முத்துக் குளித்து, காதோரம் அஞ்சலி முணுமுணுத்தபோது மயங்கி போயிருந்தான் பார்த்திபன். உலகையே வென்ற கர்வம் அவனது முகத்தில் மின்னியது. கல்லூரியின் அழகுப் புயல் அவனிடம் மையல் கொண்டிருக்கிறதே!
அந்த மயக்கம் தான் அவளோடான திருமணத்திற்கு அவனை தூண்டியது. அஞ்சலியை பொறுத்தவரை, அவனின் வசதியான பின்னணியும், அவனது அமெரிக்க வெறியும் தான் அடிப்படை தகுதிகள்.
வினோதகன் இப்படி சொல்கையில் முதல் தகுதியே அடிபட்டு விட்டதாக முடிவு செய்து கொண்டாள்.
ஆனால் அவனிடம் எதுவும் கூறவில்லை.
அஞ்சலியின் வீட்டில் அவளை விட்டுவிட்டு, காரமடை வீட்டை அடைந்தபோது அவனுக்கு காத்திருந்தது, அவன் சற்றும் எதிர்பாராதது!
“தம்பி… நீ சொல்றதெல்லாம் சரிதான். ஆனா பார்த்தி அப்பா போகும் போது மில்லு மேல இவ்வளவு கடன் கிடையாதே. அதுவுமில்லாம எப்பவுமே இருக்க ஆர்டர் எல்லாம் எங்க?” இரண்டு மாதத்துக்கு பின் ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டு சகுந்தலா வினோதகனை கேள்வி கேட்க, பதில் சொல்ல வராமல், அவர் கன்னாபின்னாவென கோபத்தில் கொதிக்கவாரம்பித்தார்.
“நான் தான் கடன் பண்ணி வெச்சுட்டேன்னு சொல்றீயாக்கா?” எடுத்த எடுப்பில் அதிரடியாக வினோதகன் கேட்க, சற்று நிதானித்தார் சகுந்தலா.
அப்போதெல்லாம் அக்காள் தம்பி உறவில் எந்தவிதமான சங்கடமும் வந்ததில்லை. கணவன் மனைவி இருவருமே வரவிட்டதில்லை. ஒன்று விட்ட தம்பிக்குதானே பெண்ணை கொடுத்திருக்கிறோம் என்பதில் ரொம்பவுமே நிம்மதியாகத்தான் இருவரும் இருந்தனர். செந்தில்நாதனுக்கு அதுவே மிகப்பெரிய நிம்மதி.
தன் பெண், தன் கண் முன்னே இருக்கிறாள் என்பதில் ரொம்பவுமே சந்தோஷம் அவருக்கு.
அதனால் எதிலுமே அவர் கணக்கு பார்த்து செய்ததில்லை. இடமோ, தோட்டமோ எதுவானாலும் பார்த்திபனுக்கு ஒன்றென்றால், பானுமதிக்கு ஒன்று என்பதில் வெகு தெளிவாக இருப்பார்.
பானுமதிக்கு எவ்வளவு நகை செய்தார்களோ, அதே அளவு பார்த்திபனின் மனைவிக்கும் செய்து வைத்திருந்தார்கள்.
இருவருமே சமம் என்பதில் குறிப்பாக இருந்தவர் அவர்.
அந்த அளவு பார்க்கும் போது, திடீரென இவ்வளவு கடன் இருக்கிறதென வினோதகன் சொன்னபோது, சகுந்தலா நம்பவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு நம்பிக்கை தம்பியின் மீது!
“அப்படி இல்ல தம்பி… அவர் இருக்க வரைக்கும் நானும் தான மில் கணக்கு வழக்க பார்த்துக்கிட்டேன்… எனக்கு தெரியாதா? இவ்வளவு கடன் இல்லையே…” என்று உண்மையை வெள்ளந்தியாக கூறிக் கொண்டிருக்க, அதை உணர்வை துடைத்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் பார்த்திபன்.
“அதாவது அந்த பணத்தையெல்லாம் நான் அடிச்சுட்டேன் சொல்ல வர்ற… இல்லையாக்கா?” இடக்காக இவர் கேட்க,
“நான் எதுக்கு தம்பி அப்படி சொல்ல போறேன்? எல்லாம் உங்களோடதுதான்… பானுமதிக்கு பாதி… பார்த்திக்கு பாதி… இதுல நீங்க என்ன பண்ணிட போறீங்க?” என்று அப்போதும் வெள்ளந்தியாக கூற, மிதப்பாக பார்த்துக் கொண்டார் வினோதகன்.
“சரி அப்படீன்னா ஒன்னு பண்ணலாம்…” என்று ஒரு விடையை அவரே கண்டுபிடிக்க,
“சொல்லுங்க…” என்று கேட்பதற்கு தயாரானார் சகுந்தலா.
“எப்படியும் பார்த்திக்கு இந்தியா மேல இன்ட்ரஸ்ட் இல்ல…” என்று அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்த பார்த்திபனை பார்த்தபடி வினோதகன் கூற, அவர் கூறி முடிக்கட்டும் என்ற பார்வையோடு அவரை பார்த்தபடி நின்றிருந்தான் பார்த்திபன்.
“மில்லு மேல இவ்வளவு கடனை வேற மாமா வாங்கி வெச்சு இருக்காங்க…” என்றவுடன், மறுக்கவாரம்பித்த சகுந்தலாவை கையமர்த்தினான் பார்த்திபன்.
“இரும்மா மாமா சொல்லி முடிக்கட்டும்….” என்று கூறியவனின் வார்த்தைகளில் அத்தனை அழுத்தம். அவர் கூற வருவதை புரிந்து கொண்டான். அதை கண்டும் காணாமல் வினோதகன் தான் சொல்ல வந்ததை சொல்லிக் கொண்டிருந்தார்.
“மில்லை நானே வாங்கிக்கறேன் க்கா… ஒரு மில்லோட இன்னொன்னா பாக்கறது எனக்கொண்ணும் பிரச்சனை இல்ல. கடனை நான் பாத்துக்கறேன். பார்த்தியும் கவலை இல்லாம யூஎஸ்ல இருக்கலாம்…” ரொம்பவும் பெரிய மனதோடு கூறிய விநோதகனை எந்த உணர்வும் இல்லாமல் பார்த்தவன்,
“அப்படீன்னா மில்லுக்கு நீங்களே விலைய சொல்லிடுங்க மாமா…” என்றான். முழு பூனையும் வெளியே வரட்டுமே!
“அதான் கடனை நான் ஏத்துக்கறேன் இல்லையா பார்த்தி? அதுக்கு மேல எப்படி நான் விலைய கொடுக்க?” வெகு சாதரணமாக கூறியவரை பார்த்தபோது கோபம் கொந்தளித்தது.
தந்தை மறைந்து இரண்டு மாதங்களே கழிந்த நிலையில், திடீரென முளைத்த அறுபது கோடி கடனும், அதற்கு ஈடாக மில்லை கேட்கும் வினோதகனின் சாதுர்யத்தையும் பார்த்திபனால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா?
ஆனால் இதில் தனது தமக்கையும் கூட்டா?
கணவன் செய்யும் தவறை தட்டிக் கேட்க முடியாத மனைவி என்ன வகை?
அவ்வளவு கோபமாக இருந்தது.
அப்போது முடிவு செய்தான். தனக்கு யூஎஸ் தேவையில்லை என்று! வெறும் இரண்டு மாதத்துக்கே இப்படி என்றால்… இவரை நம்பி விட்டுப் போனால்? பணம் போனால் போகிறது… ஆனால் இப்படி துரோகம் புரிந்தவரை நம்பி எப்படி தாயை விட்டு செல்வது?
தன்னுடைய எதிர்காலம் இங்கு தான் என்று அவன் முடிவு செய்ததும் அந்த கணம் தான். அப்போது அவனது நினைவில் அஞ்சலி இல்லை. காதலும் இல்லை. அமெரிக்க கனவு இல்லை. அவன் நினைவில் இருந்ததெல்லாம் தந்தையின் உழைப்பும், தாயின் நிற்கதியான நிலையும் தான்.
“நீங்க கடனை ஏத்துக்கவே வேண்டாம் மாமா…” என்று பார்த்திபன் நிறுத்த, வினோதகன் எதிர்பார்ப்போடு அவனை பார்த்தார்.
“ஏன் அப்படி சொல்ற பார்த்தி?”
“நாளைலருந்து நான் மில்லுக்கு வர்றேன். நான் பாத்துக்கறேன். மில்லை பாக்கற கஷ்டமான வேலை உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கே ரொம்ப வேலை இருக்கு இல்லையா?” எதையும் காட்டிக் கொள்ளவில்லை அவன்.
எப்படி இருந்தாலும் இவர் அக்காவின் கணவர். அந்த உறவை பாதுகாக்க முயன்றிருந்தால் இப்படி செய்திருக்க மாட்டார். ஆனால் தானும் அப்படி இருக்க முடியாது. நல்லவளோ இல்லையோ, தமக்கையின் வாழ்க்கையை தான் வீணாக்க முடியாது. நஷ்டமானவை எல்லாம் செலவு கணக்கில் போகட்டும். இனி ஏமாற முடியாது என்று தீர்க்கமாக முடிவெடுத்தவனின் பார்வையிலும் தெளிவு மட்டுமே!
அதன் பின் எப்படியெல்லாமோ வினோதகன் பேசிப் பார்த்தாலும், தன்னுடைய முடிவிலிருந்து பார்த்திபன் மாறவில்லை.
அவன் சொன்னதை போலவே மில்லை அவனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தான். கணக்கு பார்த்தபோது வினோதகன் செய்திருந்த தகிடுதத்தங்கள் அனைத்தும் வெட்டவெளிச்சமாகியது.
தனியே விநோதகனை அழைத்து கேட்ட போது முழுவதுமாக மறுத்தவர், கோபப்பட வேறு செய்ய, அதுவரை பொறுமையாக இருந்த பார்த்திபன், நாற்காலியை தள்ளிவிட்டு கொதித்தெழுந்தான்.
“இந்த வேலைய செய்ததுக்கு உங்க மேல கேஸ் கொடுக்கலாம்… இன்னும் என்ன வேண்ணா பண்ணலாம். ஆனா மதிக்காவுக்காக உங்களை விடறேன். இன்னமும் உங்க மரியாதையை குறைச்சுக்காதீங்க மாமா…” என்று கொந்தளித்தவனை பார்க்கையில் வினோதகனுக்கு உள்ளுக்குள் படபடத்தது தான் உண்மை.
எதுவும் பேசாமல் வெளியேறியவர் செய்த குள்ளநரித்தனத்தை, அதன் பின் இரண்டு நாட்கள் கழித்துதான் உணர முடிந்தது.
அஞ்சலி அமெரிக்கா பறந்திருந்தாள். வெறுமனே பறக்கவில்லை… அத்தனை கடனை வைத்திருப்பவன், அதற்காக இந்தியாவிலேயே இருக்க முடிவு செய்தவன் தனக்கு தகுதியானவன் அல்ல என்று முகத்துக்கு நேராக சொல்லி சென்றாள். உபயம்: வினோதகனை அன்றி வேறு யாராம்?
வாழ்க்கை வெறுத்துப் போனது. வாழ்க்கையின் லட்சியம் கண் முன்னே கானலாகிப் போன வெறுமையோடு, உனக்கெல்லாம் காதல் தேவையா என்று கேட்டு சென்றவளின் வார்த்தைகள்… அவனை வெறியேற்றியது!
முதல் ஒரு மாதம் பித்துப் பிடித்தவன் போலதான் இருந்தான். அதற்கு பின் வாழ்க்கை பிடிபட்டது. யாரும் சொல்லித் தரவில்லை. அறிவுரையும் தர ஆளில்லை. யாரையும் அவனால் நம்பவும் முடியவில்லை. நம்பிக்கைக்குரியவர்கள் என யாரையும் அவனால் ஏற்க முடியவில்லை.
அவனாக ஒவ்வொன்றாக கற்றான். விழுந்தான்… எழுந்தான்… வளர்ந்தான்!
விஸ்வரூபமாக நின்றான்!
இன்று அவனிடம் ஒரு வார்த்தை விட வினோதகனே யோசிப்பார். அவர் என்ன… யாராக இருந்தாலும் யோசிக்கத்தான் வேண்டும்… ஏனென்றால் இப்போது இருப்பவன் வெறும் பார்த்திபன் அல்ல…
காரமடை பார்த்தி!
கேஎம் ஸ்டீல்ஸின் முகம்!
அத்தனை பேருக்கும் தேவைப்பட்ட முகம் அது… அந்த முகத்தை பகைத்துக் கொள்ள யாருமே யோசிக்கத்தான் வேண்டும்!
அப்படி இருக்கும் போது, யாரோ ஒரு ஜெயச்சந்திரனுக்கு இந்த தைரியமா?
அவனது வீட்டுப் பெண் என்ன கிள்ளுக்கீரையா?
கையில் வைத்திருந்த செல்பேசியை தூக்கியடிக்க வேண்டும் போல ஆத்திரம் வந்தது. நீள மூச்சுகளை இழுத்து விட்டான். மனம் சமன்பட்டது!
தனது பெண்ணின் வாழ்க்கையை பற்றிய பயத்தோடு தன் முன்னே நடுக்கத்தோடு அமர்ந்திருந்த வினோதகனை மெளனமாக பார்த்தான்.
வாழ்க்கை, தானொரு வட்டம் என்பதை சில நேரங்களில் முரட்டுத்தனமாக புரியவைத்து விடுகிறது.
அவர் நடந்து கொண்டது போல, நம்பியவர்களுக்கு துரோகம் செய்தது போல தானும் செய்ய முடியாது.
எங்கோ பார்த்தபடி, “என்னன்னாலும் பார்த்துக்கலாம்… நான் விட்ற மாட்டேன்…” என்றவனின் குரலில் அத்தனை அழுத்தம். நான் இருக்கிறேன் நிழலாக என்று தைரியம் கொடுத்தவனை குற்ற உணர்வோடு பார்த்தார் வினோதகன்.
“சாரி மாப்ள…” தலை குனிந்து கொண்டு சிறு குரலில் கூறியவரை திரும்பி ஆழ்ந்து பார்த்தான்.
“என்ன சாரி?”
“எல்லாத்துக்கும் பார்த்தி…” என்றவரின் குரலில் அத்தனை வேதனை!
“ஒரு சாரி யாரோட வாழ்க்கையையும் திருப்பி கொடுத்துடாது, எந்த துரோகத்துக்கும் விளக்கம் கொடுத்துடாது…” சொன்னவனின் வார்த்தைகளில் உணர்வுகளில்லை.
“தெரியும் பார்த்தி…” என்றவருக்கு அதற்கும் மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. தான் செய்த தவறின் வீரியம் மிகத் தீவிரமாக தெரிந்தது.
“ஆனா அந்த நேரத்துல தான் என்னால உண்மையானவங்களை அடையாளம் தெரிஞ்சுக்க முடிஞ்சது… இல்லைன்னா லைஃப்ல நான் ஏமாந்து போயிருப்பேன்… அஞ்சலியையும் சேர்த்துத்தான் சொல்றேன்…” என்றவனை நிமிர்ந்து பார்த்தவரின் முகம் சிறுத்திருந்தது.
எதுவும் பேசாமல் மெளனமாக தலைகுனிந்து அமர்ந்திருந்தவரின் கைகளை ஆதரவாக பிடித்தவன், “இந்த பேச்சை விடுங்க… இப்ப மதுவ தான் பாக்கணும்… ரெட்ரோஸ்பெக்டிவா பேசறதுல இப்ப அர்த்தமே இல்ல…” என்று கூறும் போதே மது வலியில் உடலை முறுக்க, பானுமதி பதறி அவளது கையை பற்றினார்.
மதுவின் கைகளிலும் விரல்களிலும் சிறு ப்ராக்ச்சர் ஆகியிருந்தது. கைகளை அவர்கள் முறுக்கியபோது ஆகியிருக்கலாம் என்பது அவனது ஊகம். அதனால் அதற்கு கட்டு போடபட்டிருந்த்து. வலி குறைவதற்கான மருந்து கொடுக்கப்பட்டிருக்க, அதன் தாக்கம் குறைந்ததில் அவள் அந்த வலியை உணர்ந்திருக்க வேண்டும்.
மது வலியில் முனக ஆரம்பிக்கும் போதே வேகமாக சகுந்தலா உள்ளே நுழைந்தார்.
“அம்மா…” கதறியபடி தாயை கட்டிக் கொண்டார் பானுமதி. சகுந்தலாவின் கண்களிலும் கண்ணீர் கொட்டியது.
பேசியில் பார்த்திபன் ரொம்பவும் விளக்கவில்லை. கொஞ்சமாக கூறியிருந்தான். ஆனால் என்ன நடந்தது என்பதை மறைக்கவுமில்லை. மறைத்து என்ன ஆக போகிறது? தாய்க்கும் தெரிந்துதானேயாக வேண்டும்.
“அதான் மதுக்குட்டி சமாளிச்சுட்டால்ல மதி… இப்ப நீ அழுதா குழந்தை பயந்துடுவாடி…” தன்னை சமாளித்துக் கொண்டு சகுந்தலா பானுமதிக்கு தைரியம் கூறினாலும், அந்த நிலையில் மது எத்தகைய துன்பத்தை அடைந்திருப்பாள் என்பதை நினைக்கையில் அவரது மனம் பகீரென்றது, அதிலும் கைகளில் கட்டு போட்டிருந்த அந்த நிலையை பார்த்தபோது அவருக்கு தன் உயிரே தன்னிடம் இல்லை எனும் அளவு அதிர்வு!
அவரது ஒரே பேத்தி… தான் உயிரையே வைத்திருக்கும் பேத்தியல்லவா!
“புரியுதும்மா… பண்றதையும் பண்ணிட்டு அந்த சஞ்சயோட அப்பா என்ன சொன்னார் தெரியுமா?” என்று கேட்டு, திருமணம் செய்து வைப்பதாக அவர் கூறியதை கூற, கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தவருக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ… கோபம் கொந்தளிக்க பார்த்திபனை பார்த்தவர்,
“பார்த்தி, இவன் யாரு நம்ம மதுவோட வாழ்க்கையை தீர்மானிக்க? நாம சும்மா இருந்தா சாதாரணமா விட்டுடுவோம்ன்னு நினைச்சாங்களா? ஒன்னே ஒன்னு மட்டும்டா… நம்ம பிள்ளய இப்படி படுக்க வச்சவனுங்கள சும்மா விட்டுடாத……” ரவுத்திரமாக கூற, பார்த்திபனும் அதை ஆமோதித்தான்.
“கண்டிப்பாம்மா… இப்போதைக்கு போலீஸ் கஸ்டடில இருக்கானுங்க… அவனுங்க அங்க இருந்து வெளிய வரட்டும்… நான் யாருன்னு காட்றேன்… எங்க கை வெச்சு இருக்கானுங்க… சாதாரணமா நினைச்சுட்டானுங்க… மினிஸ்டரா இருந்தா என்ன… பெரிய மயிரா இருந்தா என்ன? எந்த புடுங்கியும் என்னை புடுங்க முடியாது…” என்றவனின் முகத்தில் கோபாக்னி தெறித்தது.
சுருண்டு படுத்த மதுவை பார்த்தவர், ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தார்.
அதே பார்வையோடு மகளையும் மருமகனையும் பார்த்தவர், பார்த்திபனை நேருக்கு நேராக பார்த்து,
“அதுக்கு முன்னாடி நீ ஒரு வேலை பண்ணனும் பார்த்தி…” என்று நிறுத்த, என்னவென்று பார்த்தான் பார்த்திபன்!
மற்ற இருவரின் முகத்திலும் அதே கேள்வி!
நிதானமாக அவனை பார்த்தவர், தீர்மானமாகக் கூறினார்,
“மதுக்குட்டி கழுத்துல நீ தாலி கட்டனும்…”

error: Content is protected !!