Rainbow kanavugal-10

10

அடுத்த நாள் முழுக்க எப்போதும் போல தன் அலுவல்களை மேற்கொண்டாலும், மதுவின் மனம் ஒருவித சஞ்சல உணர்வை தேக்கியிருந்தது.

அவள் வீட்டில் நேற்றிரவு முழுக்க அஜயின் புகழுரைகள்தான். போதாக்குறைக்கு பழைய விஷயங்களை எல்லாம் பேசி மேலும் அவளை படுத்தி எடுத்தனர்.

அஜயை பற்றி பேசும் ஒவ்வொரு வரியிலும், “இவங்க ரெண்டு பேரும்” என்று அவள் பெயரும் இணைந்திருந்தது.

சில நினைவுகள் காலத்தின் ஓட்டத்தில் மறந்து போயிருக்க, அதெல்லாம் மீண்டும் வண்ணமயமான வானவில்லாக அவள் மனவானில் விரிந்தன. ஆனால் இந்த கனவு நிலையில்லாதது என்று சொல்லியபடி அவள் ஒருவாறு தன் மனதை சுதாரிக்க செய்துவிட்டாள்.

பருவ பெண்கள் போல் அவள் காதல் வானில் இறக்கை கட்டி பறக்கவில்லை. தேவையில்லாமல் ஒரு டூயட் பாட்டும் பாடவில்லை. அவள் வேலையில் அவள் கண்ணும் கருத்துமாக இருந்தாள். அநியாயத்தை தட்டி கேட்கும் பேர்வழி என்று ஊர் வம்பு ஒன்றை இழுத்து கொண்டு வந்திருந்தாள்.

‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பது போல அவள் செய்து வைத்து வம்பும் விவாகரமும் அவளுக்கு முன்னதாக வீடு வந்து சேர்ந்திருந்தன.

“என்ன பண்ணி வைச்சுருக்க மது?” என்று அவள் வந்ததும் வாரததுமாக நந்தினி உலுக்கி எடுக்க,

“என்ன பண்ணி வைச்சுட்டாங்க?” என்று அலட்சியமாக கேட்டு கொண்டே அவள் அறைக்குள் நுழைய எத்தனிக்கும் போது அவளை வழிமறித்து நின்றார் நந்தினி!

“இதுவரைக்கும் நீ செஞ்சதெல்லாம் வேற… ஆனா இப்போ ஒரு அரசியல்வாதி பையன் மேல கை வைச்சிருக்க… அதோட நிற்க்காம ஒரு போலிஸ்காரனை அடிச்சிருக்க” என்றவர் அதிர்ந்தபடி சொல்ல,

“அவன் போலிஸ்காரன் மாதிரியா நடந்துக்கிட்டேன்… ஸ்கூல் படிக்கிற பொண்ணுகிட்ட அந்த ஸ்கூல் கரஸ்பான்டன்ட் பையன் தப்பா நடந்துக்கிட்டிருக்கான்… அதுவும் முதல் தடவை இல்ல… அடிக்கடி

அந்த பொண்ணு டிப்ரஸாகி சூசைட் அட்டண்ட பண்ணி இப்ப உயிருக்கு போராடிட்டு இருக்கா… அந்த பையன் மேல கேஸ் கொடுத்தா எடுத்துக்க மாட்டங்களாம்…

அவன் பெரிய அரசியல்வாதியோட பையனாம்… அந்த இன்ஸ்பெக்டர் என்கிட்டயே எவ்வளவு தெனாவட்டா பேசுனா தெரியுமா… ப்ளடி பாஸ்டர்ட்… அதுவும் என்கிட்டயே தப்பு தப்பா பேசுறான்…

விடுவேனா… லைவ் வீடியோ போட்டுட்டேன் இல்ல… யார் கிட்ட… அவனுக்கு இந்நேரம் சஸ்பென்ஷன் ஆர்டர் போயிருக்கும்ல” என்றவள் பெருமையாக சொல்ல நந்தினிக்கு அடிவயிரெல்லாம் கலங்கியது.

“ஐயோ! மது… அவனுங்க எல்லாம் ரொம்ப மோசமானவனுங்க… உன்னை எதாச்சும் பண்ணிட போறாங்க” என்று நந்தினி அச்சத்தோடு சொல்லி கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் நுழைந்தபடி,

“மது” என்று அலறினார் தாமு.

“ஐ! தாமு சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுச்சு” என்று சொல்லி கொண்டே அவள் வெளியே வர, அவர் முகத்திலும் கவலை ரேகைகள் படர்ந்திருந்தன.

“ஏன்? மதுமா… எது செயற்தா இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்ய கூடாதா?” என்று கேட்க,

“நீயுமா தாமு… இப்படி கேட்கிற?” என்றவள் தந்தையை பார்த்து அதிர்ச்சியானாள்.

“இல்ல கண்ணு… உனக்கு ஏதாச்சும் பிரச்சனை வந்துடுமோன்னு” என்று தாமோதரன் குரலை தாழ்த்தி சொல்ல கண்கள் அச்சத்தை பிரதிபலித்தது.

 “அதையேதான் நானும் இவகிட்ட சொல்லிட்டு இருக்கேன்” என்று முன்னே வந்து நின்றார் நந்தினி!

“நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி பேசுறீங்க? எனக்கு புரியல… தப்பு செஞ்சா யாரா இருந்தாலும் தட்டி கேட்கணும்னு நீதானே தாமு எனக்கு சொல்லி கொடுத்தா…

உன் கண்ணில இப்படி பயத்தை பார்க்க எனக்கு சுத்தமா பிடிக்கல” என்று சொன்ன மது,

“போதும்… இதை பத்தி இனிமே பேசாதீங்க” என்று அந்த விஷயத்திற்கு அப்போதைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்துவிட்டாள். இள ரத்தம் பயமறியாது என்பார்கள். மதுவின் செய்கையும் அப்படிதான் இருந்தது.

நந்தினியும் தாமுவும் சாதரணமான நடுத்தர குடும்ப பெற்றோர் வகையறாக்களை சேர்ந்தவர்கள் கிடையாது. மகளுக்கு நாட்டு பற்று, நேர்மை, நியாயம், போன்ற தேவையில்லாத பலவற்றை கற்பித்திருந்தார்கள். அவர்கள் அன்று விதைத்தவைதான் மதுவின் மனதில் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. அதவே அவளின் செயல்கள் அனைத்திலும் அப்பட்டமாக பிரதிபலிக்கவும் செய்கிறது.

மது செய்த பிரச்சனைதான் அனைத்து தொலைக்காட்சிக்கும் தீனியாக மாறியது. கூடவே அந்த காவல் ஆய்வாளரின் இடைக்கால பணிநீக்கம் குறித்த செய்தி கீழே முக்கிய செய்தியாக மின்னின.

நந்தினி அந்த நொடியிலிருந்து மகளை வீட்டு வாசற்படியை கூட தாண்டவிடவில்லை. தாமுவும் அவளிடம் அதையே வலியுறுத்திய காரணத்தால், மதுவும் வேறுவழியில்லாமல் வீட்டிலேயே அடைந்துகிடந்தாள்.

இரண்டு நாட்கள் கழித்துதான் அவளுக்கு வெளியே போகவே அனுமதி கிடைத்தது. அது கூட ரேகாவின் பிறந்த நாள் என்பதால் அவள் வீட்டிற்கு போக மட்டும்!

“போயிட்டு சீக்கிரம் வந்திரு மது… வேறெங்கயும் போகாதே… பொழுதொட வந்திரு” என்று ஒரே விஷயத்தை வேற வேற மாடுலேஷன்களில் நந்தினி எச்சரிக்கை செய்து வழியனுப்ப, தான் சொன்ன பொயிற்கு எத்தனை மணி நேரம் ஆயுளிருக்கும் என்று தெரியாமல் தன் ஸ்கூட்டியில் பறந்துவிட்டாள் மது.

அவள் செல்வது கமிஷனர் அலுவலகம் என்று சொன்னாள் நிச்சயம் அவளுக்கு அனுமதி கிடைக்காதே! ஆனால் நல்ல வேளையாக அவள் சென்ற வேலை விரைவாக முடிந்திருக்க, அவள் வீடு திரும்பிய போது தாமுவும் நந்தினியும் முகப்பறையில் அமர்ந்து எதை பற்றியோ தீவிரமாக அளவளாவி கொண்டிருந்தனர்.

‘அய்யய்யோ! நம்ம போன விஷயம் தெரிஞ்சிடுச்சா?’ என்றவள் பயந்து கொண்டே உள்ளே வர,

நந்தினி அவளை பார்த்த நொடி, “ஆமா உன்னை நான் சீக்கிரம்தானே வர சொன்னேன்… என்ன பண்ணிட்ட இருந்த இவ்வளவு நேரம்… ஏன் போன் பண்ணாலும் எடுக்கல?” என்று கேள்விகளை அடுக்க, கமிஷனர் அலுவலகம் உள்ளே செல்லும் போதே தன் பேசியை சைலன்ட் மோட் போட்டு உள்ளே வைத்துவிட்டாள். வேலை முடிந்த சந்தோஷத்தில் வீட்டிற்கு சீக்கிரம் வர வேண்டுமே என்று வேகமாக வந்தும் சேர்ந்துவிட்டாள்.

“அது வந்தும்மா” என்றவள் சமாளிக்க காரணம் யோசிக்கும் போதே,

“ப்ரெண்ட்ஸோட இருந்தா உனக்கும் எதுவும் தெரியாதே” என்று நந்தினி சொல்ல, “விடு நந்து… அவ கவனிச்சிருக்க மாட்டா” என்று தாமு மகளுக்கு பரிந்து கொண்டு வந்தார்.

அவர்கள் பேசுவதை பார்த்தால் தான் சென்ற விஷயம் அவர்களுக்கு தெரியாது போலும் என்று எண்ணி பெருமூச்செறிந்துவிட்டு, “அங்கே நடந்த அரட்டையில போன் அடிச்ச சத்தமே கேட்கல” என்றாள்.

“ஆனா எனக்கு பயமா இருக்கு இல்ல” என்று நந்தினி ஒரு அம்மாவாக தன் பயத்தை சொல்ல, “சாரி நந்து” என்று தாயை ஆதரவாக கட்டி கொண்டாள்.

நல்ல வேளையாக அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்ற நிம்மதியோடு தன் அறைக்குள் சென்று உடைமாற்றி வந்தவள்,

“நந்து பேபி… இன்னைக்கு என்ன டிபன்?” என்று கேட்டு கொண்டே தரையில் உணவு உண்ண தயார் நிலையில் சம்மேளம் போட்டு அமர்ந்தாள்.

“பேபி ன்னு கூப்பிடாதன்னு உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது” என்று சொல்லி கொண்டே நந்தினி தலையில் கொட்ட, “ஆ… வலிக்குது… போ எனக்கு டிபனும் வேணாம் ஒன்னும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவள் கோபமாக எழுந்திருக்க,

“சரி போ” என்று சொல்லிவிட்டு நந்தினி இரவு உணவிற்கு பூரி உருளைகிழங்கு மசாலாவை எடுத்து வந்து வைத்தார்.

மது மீண்டும் அமர்ந்து கொண்டு, “சரி சரி விடு… நீ  அடிச்சதை நான் மன்னிச்சுட்டேன்” என்று சொல்லி கொண்டே பூரிகளை வேகமாக தன் தட்டில் வைத்து உள்ளே தள்ள, “வாலு” என்று மீண்டும் நந்தினி தலையில் இடிக்க மது அதையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை.

பூரி சாப்பிடுவதே தன் பிரதான கடமையாக எண்ணி அவள் அதனை ரசித்து ருசித்து உள்ளே தள்ளிய அதேநேரம் அவள் தந்தை தாமோதரன் ஏதோ யோசனையில் உண்ணாமல் அமர்ந்திருப்பதை கவனித்தாள்.

அதுவல்லாது நந்தினி தாமுவின் பார்வைகள் இரண்டும் ஏதோ ரகசிய சம்பாஷணைகள் மேற்கொண்டிருந்தன. அவர்கள் இருவருக்கிடையில் இப்படியாக நிறைய காதல் சம்பாஷணைகளை அவள் பார்த்திருக்கிறாள்தான். ஆனால் இது ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே!

அவர்களையே கேட்டுவிடுவோம் என்றெண்ணியவள், “என்ன நந்து? தாமுகிட்ட இருந்து உனக்கு ஒரே ரொமண்டிக் லுக்கா பாஸாகுது” என்று கிண்டலாக கேட்க,

கடுப்பான நந்தினி, “வாய் வாய்… உன்னை” என்று அவள்  முதுகில் தட்டினாள்.   

“இப்ப எதுக்கு அடிக்கிற… நான் சொன்னது உண்மையில்லைனு சொல்லு பார்ப்போம்” என்று மது கோபமாக பார்க்க,

“ஐயோ! அது உங்க அப்பா உன்கிட்ட ஏதோ பேசணுமாம்” என்று நந்தினி தாமுவை வகையாக சிக்க வைத்துவிட்டார்.

‘என்ன நந்து?’ பரிதாபமாக தாமு மனைவியை பார்க்க, ‘சொல்லுங்க’ என்று நந்தினி கணவனிடம் ரகசியமாக கண்காட்ட,

“ரெண்டு பேரும் கண்ணால பேசறதை நிறுத்திட்டு கொஞ்சம் என்கிட்ட பேசுறீங்களா?” என்று மது உண்டு கொண்டே கேட்க, தாமு பேச ஆரம்பித்தார்.

 “அது வந்து… நான் அபீஸ்ல…” என்று அவர் தட்டு தடுமாறி, “என்னாச்சு? என்ன அபீஸ்ல? எதாச்சும் பிரச்சனையா?” என்று மதுவின் முகம் தீவிரமாக மாறியிருந்தது.

“சேச்சே! அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்று தாமு மேலும் அதிகமாக தடுமாற,

 “ஐயோ! நீங்க சும்மா இருங்க… நான் சொல்றேன்” என்று நந்தினி மதுவிடம்,

“மது… நம்ம அஜய் அப்பா பாஸ் அண்ணன் இல்ல… உங்க அப்பா ஆபீஸுக்கு காலையில வந்திருந்தாராம்” என்றார்.

“ஆமா ஆமா வந்தாரு” என்று தாமு மனைவுக்கு ஆமாம் சாமி போட,

“ஏ! சூப்பர் தாமு… உன் பழைய ப்ரெண்டை பார்த்து உனக்கு ஒரே குதூகலம் ஆகியிருக்குமே” என்று முறுவலித்தாள்!

“அதெல்லாம் ஆச்சு… ஆனா” என்றவர் யோசனையாக நிறுத்தினார்.

“ஆனா என்ன?” மது புரியாமல் புருவத்தை சுருக்க,

“அவரு என்கிட்ட ஒரு விஷயம் கேட்டிருக்காரு” என்று மேலும் பீடிகை போட்டார் தாமு. “விஷயமா? என்ன அது?” மது குழம்ப,

“இப்ப எதுக்கு சுத்தி வளைச்சிட்டு இருக்கீங்க… நேரடியா சொல்றதை விட்டுட்டு” என்ற நந்தினி சற்று நிதானித்து,

“பாஸ் அண்ணன் உங்க அப்பாகிட்ட உன்னை அஜய்க்கு கல்யாணம் பண்ண கேட்டிருக்காரு” என்றதும், “வாட்?” என்று அவள் அதிர்ந்தாள்.

அவள் ருசித்து ரசித்து உண்ட பூரி தொண்டையில் அப்படியே சிக்கி நிற்க, திடீரென்று இப்படி ஒரு விஷயத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சில நொடிகள் அவள் மெளனமாக யோசனையில் ஆழ்ந்துவிட தாமுவும் நந்தினியும் மகளிடம் மேலே என்ன பேசுவது? எப்படி பேசுவது? என்று திணறினர்.

அதேநேரம் மதுவாக தன் மௌனத்தை கலைக்கட்டும் என்று அவர்கள் மௌனம் காக்க, தன் பெற்றோர்கள் இருவரையும் ஒரே சேர பாரத்தவள், “உங்க முடிவு என்ன?” என்று நேரடியாக கேட்டுவிட,

“என்ன மது இப்படி கேட்டுட்ட? இது உன் வாழ்க்கை மது… உன் முடிவுதான் மது எங்க முடிவும்?” என்று தாமு சொல்ல,

“ஆனா அஜய் ரொம்ப நல்லவன் மது… வேண்டான்னு சொல்ல நமக்கு ஒரு காரணமும் இல்ல… இன்னும் கேட்டா உங்க இரண்டு பேரோட சின்ன வயசுலயே நானும் ரேவதி அக்காவும் இப்படி நடந்த நல்லா இருக்கும்னு பேசி இருக்கோம்” என்று நந்தினி பூடகமாக எங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம்தான் என்பதை உரைத்துவிட்டார்.

மது மௌனமாக தன் தாயை ஏறிட்ட பார்க்க தாமு உடனே, “சும்மா இரு நந்து… இதுல மது விருப்பம்தான் முக்கியம்… அதுவுமில்லாம உன் கல்யாணத்துக்கு நீ உங்க அம்மா பேச்சை கேட்டியா என்ன?” என்று சந்தடி சாக்கில் மனைவியை அவர் வார,

“ம்ம்ம்… கேட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்னு இப்ப தோணுது” என்று நந்தினியும் பதிலுக்கு கணவனை வாரிவிட்டார்.

“அடிப்பாவி!” என்று தாமு அதிர்ச்சியாவது போல் நடிக்க, மது அந்த குழப்பமான மனநிலையிலும் கொல்லென்று சிரித்துவிட்டாள்.

அவர்களின் இரவு உணவு முடிந்து படுக்கைக்கு செல்லும் வரை இருவரும் அஜய் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. ஆனால் எல்லோர் மனதிலும் அதே சிந்தனைதான்.

எல்லோரும் எப்போதும் ஒரே அறையில் உறங்குவதுதான் வழக்கம். வீட்டில் இன்னொரு படுக்கையறை இருந்த போதும் ஒரே மகளை தனியாக படுக்க வைக்க அவர்களுக்கு விருப்பமில்லை.

எதுவும் பேசாமல் அவள் அமைதியாக படுக்கையில் அமர்ந்திருக்க தாமு அவளிடம், “மது கல்யாணம் விஷயத்தை பத்தி நீ பொறுமையா யோசிச்சு சொல்லு… ஆனா” என்று நிறுத்த, அவள் அவரை ஏறிட்டு என்னவென்று கேட்டாள்.

“பாஸ் நம்மல எல்லாம் நாளைக்கு வீட்டுக்கு லஞ்சுக்கு கூப்பிட்டு இருக்காரு… போயிட்டு வந்திருவோமா?” என்று தயக்கமாக வினவ, மதுவின் முகம் இன்னும் குழப்பமாக மாறியது.

“நீ ஒன்னும் யோசிக்காதே மது… கல்யாண விஷயத்துக்கு இதுக்கும் சம்பந்தமில்ல… இது சும்மா ஒரு கெட் டூகெதர் மாதிரி” என்று தாமு சப்பை கட்டு கட்ட,

“அவ கிட்ட என்ன இதுக்கு கூட பெர்மிஷன் கேட்கணுமா? எல்லா அவ வருவா… எனக்கு ரேவதி அக்காவை அனனன்யாவை எல்லாம் பார்க்கணும் போல இருக்கு… அஜய் புடிச்ச கேரட் அல்வாவை நான் நாளைக்கு செஞ்சி எடுத்துக்க போறேன்… அப்புறம் அன்னன்யா பாப்பாவுக்கு டிரஸ் எடுத்துக்கணும்” என்று நந்தினி ஒரு பெரிய அட்டவணையே போட்டு கொண்டிருந்தார். அவர்களையெல்லாம் பார்க்க வேண்டுமென்ற ஆவலை அவர்கள் இருவரின் உரையாடலும் அப்பட்டமாக காட்டி கொடுத்திருந்தது.

ரொம்ப வருடங்களுக்கு முன்பாக தொலைத்த ஓர் அழகான நட்பை மீண்டும் மீட்டெடுக்கும் ஆர்வம்! ஆனால் அதில் அவள் வாழ்க்கையின் அதிமுக்கியமான முடிவு சிக்கி கொண்டிருக்கிறது.

நாளைய சந்திப்பில் அஜயை பார்த்து தெளிவாக பேசிவிட வேண்டுமென்று யோசித்து கொண்டே படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை.

சத்தமில்லாமல் பேசி கொண்டிருந்த தன் அம்மா அப்பாவின் சம்பாஷணைகள்தான் கேட்டன.

“எப்படியாச்சும் பேசி மதுவை சம்மதிக்க வைச்சிருங்க தாமு… அஜயை தவிர வேற யாராலையும் மதுவை சரியா புரிஞ்சிக்க முடியாது… பார்த்துக்கவும் முடியாது…

அதுவும் இப்ப இருக்க பிரச்சனையில அவ அஜய் பக்கத்தில இருக்கிறதுதான் பாதுக்காப்பு” என்று நந்தினி சொல்லி கொண்டிருக்க தாமு அமைதியாக இருந்தார்.

அந்த மௌனமே அவர் எண்ணமும் அதுதான் என்று தெரிவித்தது. அஜய் தனக்கு அருகிலிருந்தால் பாதுக்காப்பு என்ற நந்தினியின் கூற்று உண்மை என்பதை அவளாலும் மறுக்க முடியாது.

சிறு வயதில் அஜய் எங்கு போனாலும் அவனை பின்தொடர்ந்து போய்விடுவாள். அப்போது கிரிகெட் விளையாட அவன் சென்ற போது அவளும் உடன் சென்று அங்கே ஒருவன் இவளிடம் தகராறு செய்ததும் அஜய் அவனை வெளுத்து வாங்கியதும் நினைவு வந்தது.

ஆனால் அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதற்கு பிறகு அஜய் கிரிகெட் விளையாட போகவேயில்லை. இப்போதும் அது அவளுக்கு வியப்புக்குரிய ஒன்றாகவே தோன்றியது.

அவன் தனக்காக எதையும் விட்டு கொடுப்பான். ஆனால் தன்னை ஒருநாளும் யாரிடமும் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டான். அவள் ஒரு சாதரணமான பெண்ணாக மட்டுமே இருந்திருந்தால் அதுவே காதலுக்கும் திருமணத்திற்குமான பெரும் தகுதியாக அவள் கருதியிருக்க கூடும்.

ஆனால் அவளின் சமூக வாழ்க்கையில் அவள் எதிர்ப்பார்ப்பது கொஞ்சம் அதீதமான சுதந்திரத்தை? அது அஜயிடம் கிடைக்கும் என்பது சந்தேகம்தான். நேற்று அவர்களுக்கிடையில் நிகழ்ந்த வாக்குவாதமும் இதே காரணத்தினால்தானே!

அவனை காதல் செய்யலாம்? ஆனால் திருமணம் செய்யலாமா? இப்படி ஒரு விசித்திரிமான கேள்வி அவள் மனதை குத்தி குடைந்தது.

அவள் யூகம் சரியாகவே இருக்கும். அவனிடம் அள்ள அள்ள குறையாத காதல் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம் அந்த காதல் அவளுக்கு கை விலங்காக மாறும் என்பதிலும் சந்தேகமில்லை.