Rainbow kanavugal-17

Rainbow kanavugal-17

17

மதி என்கிற இந்துமதி.

இராமநாதபுர மாவட்டம். கோட்டைமேடு கிராமத்தில் ஒரு சாதாரணமான விவசாயிக்கு பிறந்தவள். அவள் குடும்ப நிலைமை ஏழ்மை என்றும் சொல்லிவிட முடியாது. வளமை என்றும் சொல்லிவிட முடியாது. நேரத்திற்கு ஏற்றார் போல் அவர்கள் நிலைமை மாறி கொண்டேயிருக்கும்.

விவசாயம் என்ற ஆதி தொழிலின் இன்றைய பரிதாபகரமான நிலைமைதான் அவர்கள் குடும்பத்திற்கும்.

அவர்கள் வசிக்கும் ஊர் வானம் பார்த்த பூமி. வருண பகவானை நம்பி மட்டுமே இருந்தது அவர்களின் விவசாய வாழ்க்கை!

மழை பெய்தால்தான் விளைச்சல் என்ற நிலைமையில் ஒவ்வொரு வருடமும் வானவனை பார்த்து மழை வரும் என்ற நம்பிக்கையை பிரதானமாக கொண்டு விதை விதைப்பது அவர்கள் வழக்கம்.

அப்படியே வானவன் பொய்த்து போனாலும் அவர்களின் நம்பிக்கையும் முயற்சியும்  பொய்த்துவிடவில்லை.

நீராதாரம் குறைவாக தேவைப்படும் மானாவாரி பயிர்களை நம்பி தங்களையும் காப்பாற்றி தங்களின் விவசாய பூமியையும் தரிசாகவிடாமல் காப்பாற்றியிருந்தனர்.

இந்துமதியின் தந்தை ராசப்பனும் அத்தகைய தீவிர விவாசியிகள் ரகம். எந்த நிலைமையிலும் விவாசயத்தை அவர்கள் கைவிடுவதில்லை. விவசாயமும் இவர்களை கைவிடுவதில்லை.

விவசாயத்தின் மீது அந்தளவு ஆழமான நம்பிக்கை இருந்த போதும் அவர்களின் வாழ்க்கை அத்தனை சுலபமானதாக இல்லை.

ஒரு பொருளை உற்பத்தி செய்பவன்தான் அதன் விலையை தீர்மானிக்கிறான். ஆனால் விவசாயிகளின் நிலைமை அதுவல்லவே!

அவர்கள் வெயிலிலும் மழையிலும் காய்ந்து தேய்ந்து உற்பத்தி செய்யும் அந்த காய்கறிகள் மற்றும் பயிர்களுக்கான விலைகளை அவர்களால் நிர்ணயிக்க முடியாததால் விவசாயம் என்ற தொழிலும் விவாசாயி என்ற ஒரு இனமும் அழிவு நிலையை எட்டியிருந்தது.

இருப்பினும் ராசப்பன் போன்றவர்கள் மட்டுமே எந்நிலையிலும் உறுதியாக நின்று தங்கள் விவசாய பூமியை கைவிடாமல் இருந்தனர்.

வானம் பார்த்த அந்த பூமியில் வளர்ந்த இந்துமதிக்கு வானம் போல் எல்லைகளில்லா நிறைய நிறைய கனவுகள் உண்டு. அதில வண்ணமயமான வானவில் போல ஒரு அழகான காதலும் உண்டு. அது வானவில் போலவே குறுகிய காலகட்டத்தில் களைந்து போனதும் உண்டு.

ராசப்பன் செல்விக்கு இரண்டாவது குழந்தைதான் இந்துமதி. தலைமகன் இசக்கியப்பன் ஒரு தருதலை. அவனுக்கு படிப்பும் வரவில்லை. விவாசயமும் வரவில்லை. நன்றாக குடிக்க மட்டும் வந்தது. மதுபான கடைகளிலேயே  வாசம் செய்யும் அந்த நல்லவன், கைகளில் காசு தீரும் போதெல்லாம் வீட்டிற்கு வந்து அண்டா குண்டா என்று அவசரத்திற்கும் எதுவெல்லாம் கிடைக்கிறதோ அதையெல்லாம் அடகு வைக்க எடுத்து சென்றுவிடுவான்.

ஒருமுறை தங்கையின் நகைகளை அவன் திருடிவிட்டதால் அவனை அத்தோடு மனம் வெறுத்து போய் மகனை வீட்டை விட்டே விரட்டிவிட்டார் செல்வி.

இந்தமதி தன் தமையன் போல் அல்லாது நன்றாக படித்தாள். அரசு பள்ளியில் படித்தாலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று பன்னிரெண்டாம் வகுப்பும் தேர்ச்சி பெற்றாள்.

தமையனுக்கும் சேர்த்து அவள் படித்து தங்கள் பெற்றோர்களை பெருமிதப்படுத்தியவள் அருகிலிருந்த செவிலியர்களுக்கான கல்லூரியில் படித்து பட்டமும் பெற்றாள்.

ஆனால் ராசப்பனும் செல்வியும் அந்த சந்தோஷத்தை முழுவதுமாக  அனுபவிக்க முடியாமல் செய்தன இந்துமதியின் அடுத்ததடுத்த செய்கைகள்.

காதலனோடு அவள் ஓடி போக பார்த்து அது அந்த ஊர்மக்களுக்கு தெரிந்து அவள் படகூடாத அவமானத்தை எல்லாம் பார்த்தது பெரிய கதை!

ஈன்ற பொழுதினை பெரிதுவக்க வேண்டிய தம் பெற்றோர்களுக்கு அவள் தேடி தந்த பெருமை!

வானவில் போன்ற அந்த காதல் களைந்து போனதில் அவளுக்கு மிச்சம் இருந்தது களங்கங்களும் அவமானங்களும் மட்டுமே.

இராவணன் கடத்தி சென்ற கடவுளவதாரமான சீதையையே இந்த சமுதாயம் விட்டு வைக்காமல் தீ குளிக்க சொல்லியது என்றால் ஓடி போக எண்ணியவளை என்னவெல்லாம் செய்ய சொல்லும்?

நிறைய நிறைய அவமானங்கள் அடிகள் என்று அந்த இளம் வயதில் அவள் அனைத்து துன்பங்களையும் துயரங்களையும் கண்டு ஒருநிலைக்கு மேல் உணர்ச்சிகள் மறுத்து வெறுத்து மனதளவில் ரொம்பவும் இறுகி போனாள்.

அவள் எண்ணங்களை ஆசைகளை அவளுக்கான நியாயங்களை யாரும் காது கொடுத்து கேட்காத காரணத்தால் அவள் பேசுவதையே கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டிருந்தாள்.

பேச முடிந்தும் இந்த சமுதாயம் அவளை ஊமையாக்கி வைத்திருந்தது.

அவள் மீதான நம்பிக்கை மொத்தமாக தொலைந்து போனதில் அந்த வீடே அவளுக்கு சிறைவாசமானது. அவள் பெற்றோர்கள் அவளிடம் முகம் கொடுத்து சரியாக பேசவில்லை. இப்படியே மூன்றாண்டு காலம் கடந்து போனது. வீட்டை விட்டே வெளியே வராமல். அவள் படித்த படிப்பிற்கான வேலையை கூட செய்ய முடியாத பரிதாபகரமான நிலை.

அவள் யோசனையின்றி செய்த ஒரே ஒரு செயலுக்கான எதிர்வினை. ஆனால் எல்லா பிரச்சனைக்கும் ஒரு ஆரம்ப புள்ளி இருப்பது போல் முற்றுப்புள்ளியும் இருக்குமே!

அந்த புள்ளிதான் ராசப்பன் உடல் நிலை சரியில்லாமல் போனது. அவள் படித்த படிப்பின் உபயம். அவர் உடலுக்கு என்னவன்று ஓரளவு கணித்தவள் அவரை பெரிய அபாயத்திலிருந்து காப்பற்றினாள்.

அவரின் இரண்டு சிறுநீரகமும் பழுதடைந்த காரணத்தால் அவளே தன் தந்தைக்கு சிறுநீரகம் தானம் தந்தாள். மகளின் மீது மீண்டும் அன்பும் பாசமும் பெருகியது.

ஆனால் அதிலும் ஒரு பெரிய பிரச்சனை அவரின் மருத்துவ செலவு. அப்போதுதான் மகளின் நகைகளை மகனே விற்றுவிட்ட விஷயம் தெரிந்தது.

கஷ்டமும் நஷ்டமும் வரும் போதுதான் உண்மையான நட்புகளையும் உறவுகளையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

ஆபந்த்பாந்தவனாக வந்து நின்றது ராசப்பனின் தங்கை மகன் சரவணகுமார்தான். அவன் எந்த பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் தன் தாய்மாமனிற்கான சிகிச்சை செலவிற்கு பணம் செலுத்தினான்.

அவனின் அந்த உதவி செல்வியை குற்றவுணர்வில் திளைக்க செய்தது. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்ற குறளுக்கு ஏற்பவே அவனின் அப்போதைய உதவி தெரிந்தது.

சரவணனின் தாய் துர்கா ராசப்பனுக்கு ஒரே சகோதிரி. துர்கா தன் கணவன் மாதவனை இழந்து அவர் குடும்பமே கடனில் தத்தளித்த போது ராசப்பன் தன் உடன் பிறந்த தங்கை குடும்பத்திற்கே எதுவும் செய்யவிடாமல் தடுத்துவிட்டார் செல்வி.

ஆனால் இன்று அவர்கள் கஷ்டத்திலிருக்கும் போது சரவணன் வந்து நின்றான். அதுதான் மேன்மக்களுக்கும் மற்றவர்களுக்கான வித்தியாசம். அவனுக்கு ஆயிரம் கஷ்டம் நஷ்டங்கள் இருந்த போதும் தன் தாய்மாமனுக்காக செய்தான்.

அவர் உடல்நிலை சரியாகி வீட்டிற்கு திரும்பும் வரை அவன் ஒரு மகனாக உடனிருந்தான். ஆறு மாதங்கள் உருண்டோடியது. செல்விக்கும் ராசப்பனுக்கும் அந்த எண்ணம் உதித்தது.

தன் தங்கை துர்காவிடம் சரவணனை தன் மகளுக்கு கேட்டு பார்த்தால்தான் என்ன என்று தோன்றியது.

தமையனை பார்க்க வந்த துர்காவிடம் இது விஷயமாக சூசகமாக பேச்சை தொடங்கினார்.

“இந்துவுக்கு வரன் பேசலாம்னு” என்று ஆரம்பிக்க துர்கா ஆமோதிப்பாக தலையசைத்து, “நானே சொல்லணும்னு நினைச்சேன் மதனி… அவ ஏதோ வயசு கோளாறுல ஒரு தப்பு செஞ்சிட்டா… அதுக்காக வயசு புள்ளைக்கு கல்யாணம் பண்ணாம வீட்டுலேயே வைச்சுருக்க முடியுமா?” என்றவர் சொல்லவும்,

“அதெல்லாம் சரிதான்… ஆனா அவங்க அப்பாவுக்கு கிட்னி கொடுத்த விஷயம் வேற ஒன்னு இருக்கு” என்று செல்வி தயக்கத்தோடு பேசினார்.

“என்ன பண்றது மதனி… நானும் என் புள்ளையும் கூட டெஸ்ட் எடுத்துக்குட்டோம் ஆனா அவள்துதானே பொருந்தி போச்சு… ஆனா டாக்டரு அதனால ஒன்னும் இல்ல… கிட்னி கொடுத்தாலும் குடும்ப வாழ்கையில எந்த பிரச்சனையும் வராதுன்னு சொன்னாரு இல்ல”

“அது சரிதான்… ஆனாலும் எவன் ஒத்துக்குடுவான்” என்று செல்வி விரக்தியோடு சொல்ல தீவிரமாக யோசித்த துர்கா,

“அதுவும் இங்க எவனும் ஒதுக்கிட மாட்டானுங்க… புள்ள பேரு வேற ஊர்ல கெட்டு போய் கிடக்கு… பேசாம சென்னையில ஒரு நல்ல பையனா பார்ப்போம்… அங்கன எல்லாம் நல்லா படிச்சவங்க… இதெல்லாம் புரிஞ்சிப்பாங்க… நம்ம இந்துவும் சும்மா இல்லையே… நர்சிங் படிச்சிருக்கா இல்ல… அந்த தகுதிக்காச்சும் ஒரு நல்ல மாப்பிளை கிடைப்பான்” என்று சொன்னவரை பார்த்த செல்விக்கு தன் நாத்தனாரிடம் எப்படி தன் எண்ணத்தை சொல்லி புரிய வைப்பதென்றே தெரியவில்லை.

சில நொடிகள் மௌனமாக யோசித்தவர், “சரி நான் வெளிப்படையாவே கேட்குறேன்… உன் பையன் சரவணனுக்கு என் பொண்ணை கட்டி வைக்க ஒதுக்குடுவியா?” என்று கேட்ட நொடி துர்கா வாயடைத்து போய் அமர்ந்திருந்தார்.

சரவணனின் சிறுவயதில் உறவினர் ஒருவர் கேலியாக இந்துமதியை அவனோடு சேர்த்து வைத்து கிண்டலாக பேசிய போது, “அந்த ஊமை பையனுக்கு போய் என் பொண்ணா?” என்று கேட்டவர்தான் இந்த செல்வி.

அதனாலேயே துர்காவிற்கு ஒரு நாளும் தன் அண்ணன் மகளை சரவணனுக்கு கேட்க வேண்டுமென்று எண்ணம் தோன்றியதே இல்லை.

செல்வி கூட அப்படி கேட்டு விடுவார்களோ என்று பயந்துதான் இவர்களுடனான உறவை ஓரடி தள்ளியே வைத்து கொண்டார். இதெல்லாம் தாண்டி சரவணன் படிக்கவில்லை என்ற குத்தல் பேச்சுக்களும் உண்டு.

ஆனால் காலத்தின் அதிவேகமான ஓட்டத்தில் எல்லாம் அப்படியே தலைகீழாக மாறி விடுகிறது. வாழ்க்கையென்ற வட்டத்தில் யார் எப்போது மேலே போவார்கள் கீழே வருவார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது.

அவனவன் செய்த தவறுகளுக்கான பாடத்தை காலம் அவர்களுக்கு கற்று கொடுக்காமல் விடாது. செல்விக்கு நிறைய இந்த மாதிரியான பாடங்கள் கிடைத்துவிட்டது. நாம் பிறரை அவமானபடுத்தி தூற்றி சொல்லும் வார்த்தைகள் ஒரு நாள் நமக்கே திரும்பிவிடும் என்று பலரும் யோசிப்பதில்லை.

அந்த வார்த்தைகள்தான் இப்போது துர்காவை தயங்க செய்தது.

செல்வியிடம் எந்த பதிலையும் சொல்ல முடியாமல் துர்கா மௌனித்திருக்க, “என்ன துர்கா? இவ்வளவு நேரம் என்னெனவோ பேசிட்டு இப்போ எதுவும் பேசாம அமைதியா இருக்க… நீயும் இந்துவை பத்தி மத்தவங்க மாதிரி யோசிக்குறியா?” என்று வினவ,

“சேச்சே… கண்டிப்பா இல்ல மதனி… இதுல நான் எதுவும் சொல்ல முடியாது… சரவணன் முடிவுதான்” என்றதும் செல்வியின் முகம் பிரகாசமானது. எங்கே அவர் மறுத்துவிடுவாரோ என்ற பயம் ஓரளவு நீங்கியது.

“சரவணனை வர சொல்லு துர்கா… தம்பியை நேரடியா கேட்டுட்டா இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சிரும் இல்ல”: என்று செல்வி அவசரப்பட துர்காவால் மறுக்க முடியவில்லை.

உடனடியாக துர்கா தன் மூத்த மகள் வீணாவிடம் விஷயத்தை சொல்லியிருந்தார். அவளோ தன் இரண்டாவது பிரசவத்திற்காக தன் தாய் வீட்டில்தான் தங்கியிருந்தாள். இரண்டாம் பிரசவ செலவையெல்லாம் தம்பியின் தலையிலேயே போட்டுவிடலாம் இல்லையா?

அம்மா சொன்னதை கேட்டு வீணா சீற்றனமானாள். அவளுக்கு இதில் கொஞ்சமும் உடன்பாடில்லை.

“அந்த ஓடுகாளிக்கு உன்னை கட்டி வைக்கணுமாமா? இந்த அம்மாவுக்கு அறிவே இல்ல… முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே… தாய்மாமனா இதுவரைக்கும் அவர் என்ன செஞ்சிருக்காரு நமக்கு… அப்பா செத்து போய் நம்ம குடும்பம் எவ்வளவு கஷ்டபட்டிருக்கும்…

அப்பெல்லாம் மாமாவும் மாமியும் வந்து எட்டியாச்சும் பார்த்திருப்பாங்களா?” நியாயமான கேள்விதான் என்றாலும் அதில் கோபத்தை தாண்டி பழியுணர்வே பிரதிபலித்தது.

வீணாவிற்கு இந்துவை சுத்தமாக பிடிக்காது. எந்த குடும்ப விழாவிற்கு போனாலும் இவர்கள் வறிய நிலையிலிருந்த போது இந்துமதி நகையெல்லாம் அணிந்து அத்தனை செழிப்பாக இருப்பாள்.

வீணாவிற்குள் அந்த பொறாமை நீர்பூத்த நெருப்பாக உள்ளே இருந்தது. இப்போது அது நன்றாக பற்றி கொண்டுவிட்டது.

. அவள் தன் தம்பியிடம், “நீ ரொம்ப நல்லவன் சரவணா… பழசெல்லாம் மறந்து அவருக்கு உடம்பு சரியில்லன்னு ஏதோ உதவுனா… இப்ப பார்த்தியா? அவங்க நம்ம அடி மடியிலயே கையை வைக்க பார்க்கிறாங்க… நீ எந்த காரணத்தை கொண்டும் அந்த புள்ளைய மட்டும் கட்டிகிடவே கூடாது… சொல்லிட்டேன்” என்றாள்.

ஆனால் சரவணன் எதையும் காதில் வாங்கவில்லை. அவன் பாட்டுக்கு ஊருக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தான்.

“என்னடா நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்… நீ பாட்டுக்கு கிளம்பிட்டே இருக்க” என்று கேட்ட தமக்கையிடம்.

“அம்மா வர சொல்லி இருக்காங்க… போய்தான் ஆகணும்” என்று அவன் செய்கையில் சொல்ல,

“போடா போ… பலியாடு மாதிரி உன் கழுத்துல மாலையை போட்டு அறுக்க போறாங்க” என்றவள் சொன்னதை அவன் கண்டுகொள்ளவே இல்லை.

கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்திருந்த அவன் தம்பி பாலகுமாரன் திரும்பும் வரை காத்திருந்து,

“அக்காவையும் கடையையும் பார்த்துக்கோ… எங்கேயும் போகாதே… கணக்கெல்லாம் ஒழுங்கா எழுதி வை” என்று செய்கை செய்து சொல்லிவிட்டு  கடைசியாக, “அம்மா அவசரமா போன் பண்ணதால நான் ஊருக்கு போயிருக்கேனு மதுகிட்ட சொல்லிடு” என்றபடி கிளம்பி போய்விட்டான்.

அவனை வழியனுப்பிவிட்டு வந்த பாலா கடுகடுத்தபடி அமர்ந்திருந்த தன் தமக்கையிடம், “அண்ணன் கடைசியா இப்படி கை காட்டி ஏதோ சொல்லுச்சு… எனக்கு புரியல…  உனக்கு என்னன்னு புரிஞ்சுதா க்கா” என்று வினவ,

“எனக்கு ஒன்னும் புரியல… போடா” என்றவள் எழுந்து சென்றுவிட்டாள். பாலா, ‘அண்ணன் என்ன் சொல்லுச்சு?’ என்று யோசித்து கொண்டே கடைக்கு சென்றுவிட்டான்.

மதுவை தவிர வேறு யாராலும் சரவணனையும் அவன் சொல்ல நினைப்பதையும் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாது. ஏன்? அவன் தாய் துர்காவாலும் கூட முடியாது. அவனை இந்த உலகிலேயே சரியாக புரிந்தவள் மது மட்டும்தான். அடுத்த நிலையில் அவன் மனைவியாக வர போகிறவள் இருக்க வேண்டுமென்று சரவணன் ரொம்பவும் ஆசைப்பட்டான். ஆனால் அந்த ஆசை இந்துமதியால் நிராசையாகி போனது.

error: Content is protected !!