RAINBOW KANAVUGAL-26

26

அந்த இரவு நேரத்திலும் அந்த அரசு மருத்துவமனையில் ஓயாத நடமாட்டங்கள் கூக்குரல்கள் அழுகைகள் என்று கேட்டு கொண்டிருந்தன.

ஆனால் அப்படியான சூழ்நிலையிலும் இரண்டு மனங்கள் மட்டும் அமைதி நிலையை எய்தியிருந்தன. முந்தைய தினங்களின் தவிப்புகள் வேதனைகளிலிருந்து கொஞ்சமாக மீண்டு வந்ததினால் ஏற்பட்ட நிம்மதி.

இந்துதான் அன்று இரவு சரவணனுடன் மருத்துவமனையில் தங்கியது. அவள் உடன் இருக்கட்டும் என்று சொன்னதும் சரவணன்தான். மகன் சொன்னதை கேட்டு துர்காவின் உள்ளம் கொதித்தது,

‘அப்படி என்ன நேற்று வந்தவள் முக்கியமாக போய் விட்டால் அவனுக்கு… அதுவும் அவள் செய்த வைத்திருக்கும் வேலைக்கு’ என்றவர் மனதில் பொறுமினாலும் மகனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை.

துர்காவின் கணவன் மறித்த பின் சரவணன்தான் அந்த வீட்டை தூணாக தாங்கி பிடித்தவன். தன் சந்தோஷம், படிப்பு, ஆசை என்று எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு தன் குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைத்தவன். குடும்பத்திற்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றும் செய்தவன்.

அவன் முடிவை எப்படி அவர் மறுத்தோ அல்லது எதிர்த்தோ பேச முடியும். ஒருநாளும் அது அவரால் முடியாது.

வீட்டிற்கு வந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்று அமைதியாக ஒப்புக்கொண்டார்.

சரவணன் அதோடு அல்லாது இந்துவின் மாற்று உடைகளை பாலாவிடம் கொடுத்து அனுப்ப சொல்லியிருந்தான். ‘இதெல்லாம் தேவையா?’ என்று துர்கா புலம்பி கொண்டேதான் சென்றார்.

சரவணனுக்கு இந்துவை தனியாக வீட்டிற்கு அனுப்ப மமைல்லை. தன் வீட்டார்கள் அக்கம்பக்கத்தினர் அவளை காயப்படுத்த கூடும் என்று எண்ணித்தான் சரவணன் அந்த முடிவிற்கு வந்ததே!

இதெல்லாம் ஒருபுறமிருக்க முன்னமே இந்துவின் பிறந்த வீட்டில் இந்த பிரச்சனை எதுவும் தெரியப்படுத்திவிட கூடாது என்று தீர்க்கமாக சொல்லிவிட்டிருந்தான்.

பாலாவின் மூலமாக இந்துவிற்கு இது தெரிய வந்த போது அவள் நெகிழ்ந்து போனாள்.

அவனின் ஒவ்வொரு செய்கையிலும் தன் நலனுக்காக யோசிக்கிறான் என்பது புரிய புரிய அவள் மனம் அவனிடம் மொத்தமாக சாய்ந்திருந்தது.

இத்தனை நாள் அவனை புரிந்து கொள்ளாமல் ஒதுக்கி வைத்த தன் முட்டாள்தனத்தை எண்ணி மனதளவில் நொந்து கொண்டாள். அவனிடம் நிறைய பேச வேண்டும் என்று அவள் மனம் தவித்த போதும் அந்த மருத்துவமனை சூழ்நிலை அவளுக்கு ஏதுவாக இல்லை.

ஒரு வழியாக அடுத்த நாள் மாலை சரவணனின் கால் கட்டினை பிரித்து அவனை வீட்டிற்கு அனுப்பியிருந்தார்கள்.

மகன் வீட்டிற்கு வந்ததில் துர்கா மனம் நிம்மதி அடைந்த அதேநேரம் மருமகளிடம் தன் கோபத்தை ஒவ்வொரு விஷயத்திலும் குத்தி குத்தி காட்டி கொண்டிருந்தார்.

முக்கியமாக தன் மகனுக்கு தான்தான் எல்லாம் செய்வேன் என்று முந்தி கொண்டு செய்தார். சரவணனுக்கான எந்த பணிவிடைகளையும் அவளை செய்ய விட கூடாது என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார்.

அவனருகிலேயே அவளை செல்ல விடாமல் அவளுக்கு வேறு ஏதாவது வேலைகள் சொல்லி அவனை விட்டு பிரித்துவைப்பதே அவரின் முக்கிய பணியாக இருந்தது.

இத்தனை நாளாக சரவணனை விட்டு விலக வேண்டுமென்ற எண்ணியிருந்த இந்துவிற்கு இப்போது அவனிடம் ஒரே ஒரு வார்த்தை பேச மாட்டோமா? என்று ஏக்கமாக இருந்தது.

அவனிடம் மட்டுமே தன் மனபாரத்தை இறக்கி வைக்க முடியுமென்று தவித்த அவள் உள்ளத்திற்கு அதற்கான வாய்ப்பு அத்தனை சுலபமாக கிட்டவில்லை.

அப்போது பாலா தமையனுக்கு மருந்து போட்டுவிட சென்றதை பார்த்த இந்து அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள எண்ணி,

“நான் அவருக்கு மருந்து போட்டுவிடுறேனே! ப்ளீஸ் பாலா” என்று இறைஞ்ச,

“இல்ல அண்ணி! அம்மா திட்டுவாங்க” என்றான் அவன் தயக்கத்தோடு!

“ப்ளீஸ் பாலா! அத்தை கிட்ட சொல்ல வேண்டாம்” என்று கண்ணீரோடு நின்றவளை பார்க்க அவனுக்கு பரிதாபமாக இருந்தது. அந்த மருந்துகளை அவளிடம் தந்துவிட்டு அவன் சென்றுவிட இந்து தன் அறைக்குள் நுழைந்தாள்.

சரவணனுக்கு காலிலிருந்த கட்டு பிரிக்கப்பட்டிருந்த போதும். வலது கை மற்றும் உடல் முழுவதும் அடித்த காயங்கள் இருந்தன.

பாலாவை எதிர்பார்த்து அமர்ந்திருந்த சரவணனுக்கு இந்துவின் நுழைவு குழப்பமாக இருக்க, அவன் கண்கள் பாலாவை தேடின.

அவள் கதவை மூடிவிட்டு அவனை நெருங்கவும், ‘tதம்பி எங்கே?’ என்பது போல் அவன் தேடலாக பார்க்க,

“பாலா வெளியே போயிருக்கான்” என்று சொன்னவள் மருந்தினை போட்டுவிட எடுக்கவும், சரவணன் சங்கடமாக அவளை பார்த்து தானே போட்டுக் கொள்வதாக ஜாடை செய்தான்.

“ஏன் மாமா? நான் போட்டுவிட கூடாதா?” என்றவள் வாஞ்சையான பார்வையோடு கேட்க, அவன் தயக்கம் அப்போதும் நீங்கவில்லை.

தவிப்போடு அப்படியும் இப்படியுமாக நெளிந்து கொண்டிருந்தான். “ஏன் இவ்வளவு தயக்கம்? மனைவியா வேண்டாம்… என்னை ஒரு நர்ஸா பாருங்களேன்” என்று அவள் சொன்ன போதும் அவனால் ஏற்க முடியவில்லை.

வேண்டாம் என்பது போல பார்வையை சுருக்கி மருந்தை தன்னிடம் தர சொல்லி, அவன் கேட்க அவள் முகம் வாடி போனது.

“நான் நம்ம பர்ஸ்ட் நைட்ல உங்களை தொட கூடாதுன்னு சொன்னேன்… அதை மனசுல வைச்சிக்கிட்டுதானே இப்படி பண்றீங்க?” என்று அதற்குள்ளாக குழாய் திறந்துவிட்டது போல அவள் கண்களிலிருந்து கண்ணீராக வழிந்தோடியது.

இல்லை இல்லை என்பது போல அவன் அவசரமாக கையசைத்து மறுத்தவன் அவள் மருந்து போட்டுவிட அந்த நொடியே சம்மதமும் சொன்னான்.

அவள் உடனடியாக தன் முகத்தை துடைத்து கொண்டு அவனுக்கு மருந்து போட்டுவிட ஆர்வமாக இறங்க, அவனுக்குத்தான் வயிற்றிருக்கும் தொண்டைக்கும் இடையில் பெரிதாக ஏதோ உருண்டது.

ஆனால் அவளோ எந்தவித தயக்கமுமின்றி அவனின் அடிப்பட்ட காயங்களின் மீது மருந்து பூச, இதுவரை அவன் உணர்ந்திராத அவள் ஸ்பரிசத்தை வாசம் கூட அவனுக்குள் ஏதேதோ செய்தது.

ரொம்பவும் மென்மையாக அவள் விரல்கள் காயங்களின் மீது மருந்திட்டு கொண்டே, “வலிக்குதா மாமா?” என்று கனிவாக கேட்க, அவனோ வலியெல்லாம் மறந்து வேறு சில உணர்வுகளுக்கு ஆட்பட்டிருந்தான்.

அவன் முகம் தவிர மற்ற காயங்களுக்கு மருந்து ஒற்றி முடித்தவள் அவன் உதட்டினோரம் மற்றும் நெற்றியிலிருந்த காயங்களுக்கு மருந்து போட அவன் விழிகளுக்கு நேராக பிராகசித்த ஒளி பொருந்திய அவள் நிலா முகமும் பிறை நுதலும் சிவந்த அந்த மலரிதழ்களும் அவனை வெகுவாக சலனப்படுத்தியது.

அதுவும் உஷ்ணமாக அவனை தீண்டி தீண்டி அவன் உள்ளத்தில் மோகத்தீயை மூட்டி கொண்டிருந்த அவள் மூச்சு காற்று அவனுக்குள் பெரும் காதல் புயலையே வீச செய்தது. ஒரே அறையில் ஒன்றாக இத்தனை நாட்கள் கழித்த போதும் அவனுக்குள் எழும்பாத உணர்வுகளெல்லாம் ஒரே மொத்தமாக இன்று தலையெடுத்து அவனை வாட்டி வதைத்தது.

அவன் நெற்றியில் மருந்திட்டு கொண்டிருந்த சமயம் அவன் உணர்ச்சி மேலிட அவளின் மிருதுவான கன்னங்களை தன் கரத்தால் தொட்டு வருடவும் அவள் திகைத்து போனாள்.

“மாமா” என்று அவள் தயங்கும் போதே அவளை இறுக அணைத்திருந்தான். தாபத்தோடு அவளை ஆழ்ந்து அனுபவித்து ஸ்பரிசித்தன அவன் கரம்

அவளோ அவன் நெருக்கத்திலும் அணைப்பிலும் கசிந்துருக இயலாமல் நெருப்பின் மீது நிற்பது போல் தத்தளித்து கொண்டிருந்தாள்

தன் இல்லாளின் தவிப்பை உணராமல் அல்லது உணர இயலாமல் தன்னுடைய உணர்வில் மதி மயங்கி கிறங்கி போகும் போது, “மாமா ப்ளீஸ் மாமா… உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும் மாமா” என்று அழுகை தொனில் ஒலித்த அவள் குரல் அவன் தாப மயக்கத்திலிருந்து அவனை இயல்பு நிலைக்கு தடாலடியாக இழுத்து வந்தது.

கணநேரத்தில் அவளை சுற்றி வளைத்திருந்த தன் கரத்தை விலக்கி கொண்டவன் அவள் சம்மதமின்றி அவளை அணைத்து கொண்டதை எண்ணி தன் மீதே கோபம் கொண்டான்.

அவளை எதிர்கொள்ள முடியாமல் அவளை விட்டு விலகி எண்ணி எழுந்த போது உண்டான தடுமாற்றத்தில் பாதங்கள் சரிய போனவனை, “மாமா பாத்து” என்று அவனை  அவள் தாங்கி பிடித்து கொள்ள, அவன் உள்ளத்தின் தவிப்பும் தாபமும் இன்னும் இன்னும் அதிகரிக்க, அவள் கரத்தை விலக்கிவிட்டு மெல்ல அவனே படுக்கையில் அமர்ந்து கொண்டான்.

அவன் கண்கள் அவளை நிமிர்நது பார்க்க முடியாமல் தவிக்க அவள் மெதுவாக அவனிடம் பேச துவங்கினாள்.

“சாரி மாமா… நான் உங்களை ரொம்ப கஷ்டபடுத்துறேன்” என்றதும் அவளை அவன் ஏறிட்டு பார்க்க, அவள் கண்ணீர் தளும்பிய விழிகளோடு அவனை பார்த்திருந்தாள்.

அவன் கண்ணீரை அவன் துடைக்க முற்பட்ட போது, “வேண்டாம் மாமா… நான் அழனும்… என மனசுல இருக்கிறதெல்லாம் உங்ககிட்ட கொட்டி அழனும்” என்றபடி விலகி வந்தவள்,

“நான் உங்க மனசை புரிஞ்சிக்காம உங்களை விலக்கி வைச்சு ரொம்ப பெரிய தப்பை செஞ்சிட்டேன்… உங்க மனசுலயும் எவ்வளவு ஆசை கனவெல்லாம் இருந்திருக்கும்… அதெல்லாம் நான் கொஞ்சம் கூட யோசிக்காம என் சுயநலம் என் விருப்பம்னு உங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு காயப்படுத்திட்டேன்” என்று அவள் கண்ணீரோடு அவனை நிதானமாக ஏறிட்டு,

“உங்ககிட்ட நிறைய பேசணும்னுதான் நான் தம்பி கிட்ட இருந்த மருந்தை வாங்கிட்டு வந்தேன்… ஆனா எப்படி ” என்றவள் தயக்கமாக நிறுத்த, அவன் பார்வை அவளை வியப்பாக நோக்கியது.

அவள் மேலும், “நான் நடந்த எல்லா விஷயத்தையும் உங்ககிட்ட ஒன்னு விடாம சொல்லணும்… அப்பத்தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்றாள்.

அவன் அவளை ஆழ்ந்து பார்த்திருக்க பட்டென்று அவன் கரத்தை எட்டி பிடித்து கொண்டவள், “நான் எல்லாத்தையும் சொன்ன பிறகு என்னை வெறுத்திட மாட்டீங்களே” என்று கேட்ட நொடி அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“யார் என்னை வெறுத்து ஒதுக்கினாலும் நீங்க இப்ப போல அப்பவும் என் கூட எனக்காக இருப்பீங்கதானே மாமா?” என்று குரல் தழுதழுக்க இறைஞ்சிய பார்வை பார்த்த பெண்ணவளின் கேள்வியும் உணர்வும் அவனுக்கு குழப்பத்தை விளைவித்தது.

“நான் தெரிஞ்சு தெரியாம சில தப்பெல்லாம் செஞ்சிருக்கேன்… அதெல்லாம் தெரிஞ்ச பின்னாடி உங்களால என்னை மன்னிக்க முடியாட்டியும் என்னை ஒதுக்கிடாதீங்க மாமா” என்று அவன் கையை அழுந்த பற்றி முகத்தில் ஒற்றி கொள்ள, அவன் எந்த மாதிரி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.

அவன் மனம் புரியாத தவிப்பில் ஆழ எந்த உணர்வுமின்றி அவன் சிலையாக சமைந்திருந்தான்.

“ஆனா நான் வேணும்டே எதையும் செய்யல மாமா… எல்லாமே அதுவா நடந்து போச்சு… ஊர்ல நான் காதலிச்சவரை திரும்பியும் இங்க சென்னையில பார்ப்பேன்னு சத்தியமா நினைக்கல” என்று சொன்ன நொடி அதிர்ச்சியாக அவளை நோக்கினான்.

அவள் சொன்னதை கேட்டு அவனுக்கு உள்ளுர நொறுங்கிய உணர்வு. அவளின் அந்த வார்த்தைகளில் அவள் மீது கொண்டு ஆழமான நம்பிக்கை அடிவாங்கியது.

திருமணத்திற்கு முன்பான அவள் வாழ்க்கையை பற்றி அவனுக்கு எந்தவித கேள்விகளும் கிடையாது. ஆனால் திருமணத்திற்கு பின்பு அவள் உறவை அவன் ஆழமாக நேசித்தான். அவளிடமிருந்து அன்பும் நேசமும் கிடைக்காத போதும்… என்றாவது ஒரு நாள் அவளாகவே தன் காதலை  புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான்.

ஆனால் அந்த இன்று நம்பிக்கை உடைகிறதோ? புரியவில்லை அவனுக்கு! அவன் உள்ளத்தில் ஒரு கரிய இருள் பரவியது!

அதுவும் அவன் அவள் மீது கொண்ட நம்பிக்கையை யாரும் உடைக்கவிடாமல் அந்தளவு பத்திரமாக பாதுக்காத்து வந்திருக்கிறான். இப்போது அதை அவளாகவே சுக்குநூறாக நொறுக்கிவிடுவாளோ என்றவன் மனதில் அச்சம் தொற்றி கொண்டது.

இந்த உலக வாழ்கையில் அவனுக்கென்று பெரிதாக சித்தாந்தங்கள் கொள்கைகள் எல்லாம் கிடையாது. யாருக்கும் மனதாலும் தீங்கு நினைத்தல் கூடாது. எல்லோரிடமும் அன்பாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

மற்றபடி எல்லோரையும் போல சாதாரணமான உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் கொண்டவன்தான் அவனும். தன் மனைவியின் உரிமையும் காதலும் தனக்கானது மட்டுமே என்று எண்ணும் சராசரியான கணவன்தான்.

தன் மனைவியானவள் துரோகம் செய்ய இல்லை. அப்படி செய்ய மனதால் நினைத்திருந்தாலும் அதை ஒருநாளும் அவனால் மன்னிக்க முடியாது. முடியவே முடியாது.

நடந்த நிகழ்வுகளை பற்றி அவனிடம் சொல்ல ஆரம்பித்தவளிடம் உணர்வற்ற பார்வையோடு நோக்கியவன்,

‘என் நம்பிக்கையை மட்டும் உடைச்சிராதே மதி’ என்றான். யாருக்கும் கேட்காத அவன் குரலில்!