Ramachandran Usha’s Udupi sri durga bavan, karama, dubai

2

வெங்கட், கண்ணியில்  அனுப்ப வேண்டிய  மின் அஞ்சல்களை அனுப்பிக்கொண்டு இருக்கும்பொழுது சோமாவின் வழக்கமான மெல்லிய  கதவு தட்டல் .

தோட்ட வேலைக்கு ஏஜன்சி ஆள் வந்திருப்பதாக சொன்னதும்,  அவர்களுக்கு  மாடித் தோட்டத்தைக் காட்டுமாறு சொல்லிவிட்டு, அவசர மின் அஞ்சல்களை அனுப்பிவிட்டு, கண்ணியை மூடிவிட்டு மாடிக்கு விரைந்தார்.

பெக்கர்  என்ற ஹாலந்துக்காரனுக்கு  கன்சல்டட் என்று யாரும் இல்லாமல், அருமையாய் பூத்துக்குலுங்கிக்கொண்டு இருந்த  வெங்கட்டின் தோட்டத்தைப் பற்றி அவனுக்கு வியப்பான வியப்பு.மழலை ஆங்கிலத்தில் புகழ்ந்து தள்ளினான்.

அறுபது வயதான, ஊர் தோட்டக்காரரைப் பற்றி சொல்ல ஆரம்பித்தவர், இனி அவர் துபாய் திரும்ப மாட்டார் என்பதால், ஏஜென்சியில் தோட்ட வேலைப் பார்க்க ஆள் தேடியதாய் சொன்னார் வெங்கட்.

மண் இல்லாத விவசாயம் ஹைட்ரோ போனீக்ஸ் (hydroponis) விசாரிக்க ஆரம்பித்தார்.

“ எனக்கு அதிக செலவு மண்ணுக்குத்தான்.   இந்த பாலைவன மணலில் எதுவும் வளராது. மண் இந்தியாவில் இருந்துதான் அதிகம் கப்பலில் வருகிறது. க்ரீன் நெட் போட்டு, டெம்பரேச்சர் கண்ட்ரோல் செய்து அத்தனை பூ, காய்கறிகள் உற்பத்தி செய்கிறார்கள் தெரியுமில்லையா” என்றதும்,

“தெரியும் தெரியும்! நிஜமோ பொய்யோ  ஹாலந்துக்கு ரோஜா பூவை இங்கிருந்து எக்ஸ்போர்ட் ஆகுது  என்று சொன்னார்கள்”  பெக்கர்  சிரித்துக்கொண்டே.

அக்ரிமெண்டில் முழுக்க இயற்கை விவசாயம் என்பதை குறிப்பிட்டு, வாரம் ஒரு முறை வரும் தோட்ட கவனிப்பாளருக்கு, ஸ்பெஷலிஸ்டுக்கு, இடு பொருள்கள், விதை, செடிகளுக்கு என்று தனிதனியான கட்டணங்களை சரிப்பார்த்து கையெழுத்து இட்டு, முதல் தவணைக்கான  காசோலையை தந்தார்

அவனை அனுப்பிவிட்டு, மீண்டும் தன் வேலையைத் தொடங்கியவரின் கண்ணியில் டொய் என்ற சத்தத்துடன், மகளின் மின் அஞ்சல்.

எடுத்துப் பார்த்தால் நல விசாரிப்புடன், ஏகப்பட்ட புகைப்படங்கள் பார்க்க பார்க்க அவர் கண்கள் விரிந்தன. சோமாவை அழைத்து, காந்தி தூங்குகிறாளா  என்று பார்க்க சொன்னார்.

சில நிமிடங்களில் காந்தி அறைக்கு வந்தாள்

“மாத்திரை போட்டும் தூங்கலையா?” கேட்டு விட்டு, பதிலுக்கு காத்திராமல், “ஆர்த்தி போட்டோ அனுப்பியிருக்கா. பார்த்தியா?”

 “ஆங்…. உன்கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன். ஸ்மார்ட் போன் ன்னு ஒண்ணு வந்திருக்கு, எரிக்சன் பிராண்ட்  நல்லா இருக்குன்னு சொன்னாங்க . போன முறையும் நேரமில்லாமல் போச்சு, இந்த முறையும் தான். உனக்கு தெரியுமில்லே, அந்த போனிலேயே நெட் யூஸ் பண்ணலாம், மெயில், போட்டோ ஷேரிங் எல்லாம் பண்ணலாம் காமிராவும் இருக்கும், போட்டோ எடுத்து அனுப்பிக்கலாம். உனக்கு, ஆர்த்திக்கு, எனக்கு ன்னு மூணு போன் வாங்கிடலாம் இப்ப துபாயிலேயே கிடைக்குது” என்றார்

காந்திமதி எந்த பதிலும் சொல்லாமல், தலையை குனிந்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். வரிசையாய் போட்டோவை காட்டிக்கிட்டு வந்தவர்,

“என்ன ஆச்சரியம்!  அப்படியே எங்கம்மா மாதிரியே இருக்கா! அதே சுருட்ட முடி, நிறம் , உயரம் இந்த கருப்பு டிரஸ் போட்டோ  பார்க்கும்பொழுது என்னால நம்பவே முடியலை  ஒரு முறை நவராத்திரின்னு  நினைக்கிறேன் அம்மா கருப்பு வெல்வெட்டில் பிளவுஸ் தெச்சி போட்டிருந்தா, தங்கச்சிகளுக்கு சிவப்பு வெல்வெட்டில் சட்டை, பட்டு பாவாடை ஊரே கண்ணு வெச்சிது.  

எங்க வீட்டுல தாயம்மான்னு ஒருத்தி வேலை செஞ்சிக்கிட்டு இருந்தா  ஒன்பது நாளும் மூணு பேரையும் உட்கார வைத்து திருஷ்டி சுத்திப் போடுவா.  ஒரு நாள் கருப்பு  வெல்வெட் பிளவுஸ், ஒரு மாதிரி யெல்லோல பட்டு புடைவை, கழுத்துல அட்டிகை, செயின். இந்த கைல ஒரு டஜன் , அந்த கையில ஒரு டஜன் தங்க வளையல்கள். மகா ராணி மாதிரி இருந்தா  .இன்னும் கண்ணுலேயே இருக்கு”

ஏதோ கனவுலகில் பேசுபவர் போல, சொல்லிக்கொண்டு போக, சட்டென்று எழுந்த காந்தி, எதுவும் சொல்லாமல், விருட்டென்று அறையை விட்டு வெளியேறினாள்

4

பாபு அப்படியே உட்கார்ந்திருந்தான் . சட்டென்று எழுந்து கையிருப்பை எண்ணிப் பார்த்தான் . விசா முடிவதற்குள்  வேலை கிடைக்கவில்லை என்றால் திரும்ப ஊருக்குப் போக டிக்கெட்டுக்கு தேவையான பணத்தை ஒரு காகிதத்தில் சுற்றி தனியாய், பெட்டியின் கீழே பக்கம் வைத்திருந்த சின்ன பர்ஸ்சில் வைக்கும்பொழுது, அம்மா கிளம்பும்பொழுது கொடுத்த பேப்பர் கன்ணில் பட்டது

அவளுக்கு வாங்க வேண்டிய வளையல்களின் அளவு, செயின் ஆறு பிடி இருக்க வேண்டும், வளையல், செயின் மாதிரி என்ற விவரங்கள். கோபமும் எரிச்சலும் வர, பந்தாய் சுருட்டி மூலையில் எரிந்தான்

நினைவு தெர்ந்த நாள் முதல், பைத்தியம் போல் பொழுதுக்கும் கத்திக் கொண்டு இருப்பாள், முகமே சூன்யக்கார கிழவி போல என்று சொல்லிக்கொள்வான், ஒரு முறை கீதாக்காவிடம் சொல்ல, யாருக்கும் தெரியாமல், சூகா என்றே அவர்களுக்குள் அம்மாவை சொல்லிக் கொள்வார்கள் . ரொம்ப நாள் கழித்து லதாக்காவுக்கு தெரிந்து கண்டித்தும், அவர்களுக்குள் இன்றும் எப்பொழுதாவது சூகா சொல் வரும்.

லதாக்காவுக்குத்தான் அடி அதிகம் விழும்,  எந்த முகபாவமும் காட்டாமல் அப்படியே நின்றுக் கொண்டு இருப்பாள் கீதாக்கா அடிக்கும்பொழுது கோபமாய் முறைத்துக்கொண்டு நிற்பாள். என்றோ ஒரு நாள்,  ஒரு கை உப்புமாவை தெரு நாய்க்கு போட, துணி உலர்த்தும் குச்சியால் விளாசிவிட்டாள். வலி தாங்காமல் கதறும் பொழுது, வேலை முடிந்து உள்ளே நுழைந்த அக்கா, அதே குச்சியை பிடிங்கி அம்மாவை அடிக்க ஓங்கியவள், இனி மேல் யார் மேலாவது கை வைத்தால், உனக்கு கை இருக்காது என்று உறுமியதும்தான் அம்மாவும் அடி அராஜகம் நின்றது. ஆனால் கத்தல் , அப்பா சாகும்வரை நிற்கவில்லையே?

பத்து வயதில் இருந்தே ஸ்கூல் விட்டதும், அப்பா வேலை செய்யும் ஹோட்டலுக்கு போவதன் முக்கிய காரணம், சாப்பிட ஏதாவது கிடைக்கும் ஏதாவது சின்ன வேலைகள் செய்துவிட்டு, விளக்கு வைக்கும் நேரத்துக்குத்தான் வீட்டுக்கு போவது.

மிக சரியாய், பத்தாவது பரிட்சை முடிந்த நாலாவது நாள், கீதாக்காவின் காதல் விஷயம் தெரிந்து அம்மா கத்த ஆரம்பித்து, அப்பாவை திட்டுவதில் முடித்தாள். மறு நாள் காலை அப்பாவால் எழுந்துக்கொள்ள முடியவில்லை . ஸ்ரோக்..அதற்கு பிறகு அப்பாவின் நிலைமை1 பாபுவால் பெருகும் கண்ணீரை தடுக்க முடியவில்லை

வீடே நரகமானது. லதாக்கா கர்ம்யோகி!  எந்த வித உணர்வும் காட்டாமல் டீச்சர் வேலையும் பார்த்துக்கொண்டு மேலே படித்துக்கொண்டும், அப்பாவுக்கு சிசுருஷை செய்துக்கொண்டும்….நினைக்க நினைக்க பழய நினைவுகள் அவனை அழைக்கழித்தது.

லதாக்கா  என்று வாய் விட்டு தேம்பினான்.

கீதாக்கா வழக்கப்படி தன் அலங்காரங்கள், குமாருடனான காதல், தன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வேலை என்று தன் பாட்டைப் பார்த்துக்கொண்டு இருந்தாள் . வீடே நரகமானது. ஹோட்டல் முதலாளி சுந்தரேச ஐயர், அப்பாவை பார்க்க வந்தவருக்கு வீட்டின் நிலைமை புரிந்துப் போனது கிளம்பும்பொழுது, யாரும் பார்க்காதப் பொழுது, ஹோட்டல் பக்கம் வா என்று ஜாடை காட்டிவிட்டுப் போனார்.

வீட்டில் சத்தான சாப்பாடு இல்லாவிட்டாலும், உடல் வாகும், கிணற்றில் நீர் இறைப்பதுப் போன்ற வேலைகள் செய்து பழகியதால், பதினைந்து வயதில் இருபது வயது இளைஞனாய் இருந்தது, ஒரு வகையில் செளகரியமாய் போனது . மறு நாளே ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்துவிட்டான்.

படிப்பை விட்டது லதாக்காவுக்கு இன்று வரை வருத்தம். வீட்டு சூழ்நிலை என்பதை பாபு எவ்வளவு சொல்லியும் அவளால் ஒத்துக் கொள்ள  முடியவில்லை உண்மையான காரணம், அப்பாவை அம்மா இருபத்தி நாலு மணி நேரமும் திட்டிக்கொண்டு இருப்பதுதான்  அப்பா நரக வேதனையை அனுப்பவிப்பதை பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை.

எத்தனை அருமையான மனுஷன், அதிகம் பேச மாட்டார். ஆனால் அம்மாவைப் பற்றி புகார் சொல்லும்பொழுது மட்டும், அம்மாவின் கோபத்துக்கு காரணம் என்று பழைய கதைகளை ஆரம்பிப்பார்.

இரண்டே மாதத்தில் அப்பாவின் மரணம்.. பாபுவின் தொண்டையில் இருந்து கேவல் எழுந்தது.

அதற்கு பிறகு அம்மாவின் கத்தலும் வெகுவாய் குறைந்தது. கீதாக்காவுக்கு கூட வேலை செய்த குமாருடன் , வட பழனி கோவில் வைத்து கல்யாணம் ஆனது.  அக்காவுக்கு , கல்யாணம் ஆகாமால், தான் கல்யாணம் செய்துக்கொள்வதில் துளிக்கூட வருத்தமோ, வெட்கமோ இல்லாமல்  தனக்கு வேண்டியதை, கேட்டு கேட்டு வாங்கிக்கொண்ட கீதாக்காவை நினைக்க நினைக்க கோபமும், எரிச்சலும் எழுந்தது பாபுவுக்கு

ஆனால்   லதாக்காவின்  நல்ல குணம் தெரிந்து , ஆரிஃப் பெண் கேட்டு வந்ததும், அம்மா ஒரு வார்த்தை சொல்லாமல் ஒத்துக்கொண்ட பிறகே குடும்பம் ஓரளவு நிம்மதிக்கு வந்தது .  அப்பாவின் நண்பரான சையதுபாய்   ஆரிஃப்பின் பெரியப்பா ,அதனால் இருபக்கமும் பேசி கல்யாணத்தை நடத்தி வைத்தும், அவனுக்கு துபாய் வேலை வாங்கிக்கொடுத்ததும், அம்மா மேலும் அமைதியானாள்.

ஆனால் இனி…மனம் முழுக்க எதிர்க்கால குழப்பங்கள்,  முடிந்துப் போன சோகங்கள். மூடிய அறை தந்த தைரியத்தில் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான் பாபு.

பிறந்தது முதல் பார்க்கும் தரித்திரத்துக்கு விடிவு காலமே வராதா/? இன்னொரு வேலை கிடைக்கா விட்டால், வாங்கிய கடனை அடைப்பது எப்படி? தான் வெறும் கையுடன் திரும்பி வந்ததை அம்மாவால் ஜீரணிக்க முடியுமா?

மதிய சாப்பாடு செய்ய பிடிக்கவில்லை .   ப்ரீஜ்ஜில் மீதம் இருப்பதை வைத்து ஓட்டிவிடலாம் என்று நினைத்து, அறையை சாத்திவிட்டு, ஷட்டரை தூக்கி வெளியே வந்தால், ஜார்ஜ் கடை வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்தவன்,  பாபுவைப் பார்த்ததும்  அருகில் வந்தான்

விஷயத்தைச் சொன்னதும், பாவம் என்பதைப் போல உச்சுக்கொட்ட, மேலும் இரண்டொருவர் வர, பாபுவுக்கு வேலை போன விஷயம் பரவியது

ஜார்ஜ், அன்று அவனும் மதியம் சாப்பிட அழைத்தான்  அவனுடன் சென்று சாப்பிட்டு முடித்து, அங்கிருந்தவர்களிடமும் விஷயத்தை சொல்லிவிட்டு தன் அறைக்கு வந்த அப்படியே படுத்தான்.

லதாக்காவுடன் பேசணும் என்று பாபுவின் மனம் துடித்தது . பத்து  திராம்ஸ் போன் கார்ட் வாங்கி, அருகில் இருந்த பொது தொலைபேசியில் இருந்து அழைத்தான்.

விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் பேச முடியாமல் அவனுக்கு தொண்டையை அடைத்தது

“விடுபா, பார்த்துக்கொள்ளலாம். நம்ம முயற்சியை விடாமல் செய்யலாம் அப்புறம் விதி விட்ட வழி நாம பார்க்காத கஷ்டமா என்றவள், “ டிக்கெட் காசு எடுத்து வெச்சிடு. விசா முடிஞ்சி அங்க இருந்து வர முடியாம போனா, ஜெயில்ல போட்டுடுவாங்க. தெரியுமில்லே, ஜாக்கிரதை இப்ப அம்மாக்கிட்ட எதுவும் சொல்லாதே, நானும் ஒண்ணும் சொல்ல போவதில்லே. ஏதையாவது சொல்லி வெச்ச அவ புலம்பல் சகிக்காது. கீதாக்கிட்டையும் ஒண்ணும் சொல்லிக்காதே”.

“கீதாக்கா என்னைக்கு கஷ்டங்களை காதுக்கொடுத்து கேட்டு இருக்கா?” பாபு சொன்னதும், ‘ விடு விடு என்றவள் , பாபு!  நீ என் மூத்த பிள்ளைடா!  மனச போட்டு உழப்பிக்காம இரு ஏதோ ஒரு வழி பிறக்கும்ன்னு நம்பிக்கையா இரு. ரொம்ப முடியலைன்னா கிளம்பி வந்துடு பார்த்துக்கலாம் போனை செச்சிடவா” என்றதும், உம் கொட்டு விட்டு போனை கட் செய்தான் பாபு

லதாக்காவின் அன்பும் அக்கரையும் கொண்ட  பேச்சு அவனை  நெகிழ வைத்தது. மனதில் இருந்த பாரம் எல்லாம் குறைந்து ஒரு நிறைவு பெற்ற தாய்க்கூட ஒரு நாளும் இப்படி பாசத்துடன் பேசியதில்லையே?. மனபாரம் குறைந்த நிலையில் மனம் ஏனோ தழும்பியது.

அறைக்கு திரும்பியவன், மடமடவென்று தன் பொருட்களை எடுத்து வைத்து, இடத்தை சுத்தம் செய்தான்

அறையை பூட்டிவிட்டு, தன் பெட்டியையும் இரண்டு பிளாஸ்டிக் பைகளையும் எடுத்து வெளியே வைத்து ஹட்டரை பூட்டினான். ஜார்ஜ் வர, பேசிக்கொண்டு இருக்கும்பொழுது, சலீம் வந்தான்.

ஒரு வார்த்தை பேசாமல், சாவியை வாங்கி கடையை திறந்து உள்ளே சென்றவன், வெளியே வந்து வா என்பதுப் போல் தலையை ஆட்டினான்

வண்டி, சையதுபாய் இருக்கும் பர்துபாய்க்கு சென்றது.

உங்களது கருத்துக்களை தெரிவிக்க Comments

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!