Riya-duecp-full

Riya-duecp-full

டேய், உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது?

அத்தியாயம் 1

“ஓம் கணத்தியாக்கஷாய நமஹ்”

பொன்மஞ்சள் வானம் மெல்ல, தனது இருளை நீக்கிக்கொண்டிருக்கும் அதிகாலை வேளை, மங்கள மேளங்கள் முழங்க, மாவிலை தோரணங்களும், வாழை மரங்களும் வாசலில் அலங்கரிக்க, அந்த திருமண மண்டபமே சுறுசுறுப்பாய், அன்றைய திருமணத்திற்காய் ரெடியாகி கொண்டிருந்தது.

“வெற்றிமாறன்  வெட்ஸ் கனிமொழி”

என்ற பெயர் பலகை வாசலில் வீற்றிருக்க, வரவேற்பில், இரு வீட்டு பெரியவர்களும், சந்தோஷத்தோடும், மனதில் நிறைவோடும் மணமக்களை வாழ்த்திட வருவோரை வரவேற்றுக்கொண்டிருந்தனர்.

ஐயர் கேட்ட பொருட்களை எடுத்து கொடுத்து, அவரின் தேவையை கவனிக்க என பலரும் மேடையில் உலாவி கொண்டிருக்க, மணமகன் அறையிலும், மணமகள் அறையிலும் எல்லா திருமணத்திலும் நடக்கும் அனைத்து வித கலாட்டாக்களும் நண்பர்களால் செவ்வனே அரங்கேற்றப்பட்டு கொண்டிருந்தது.

அங்கு நடக்கும் கலாட்டாக்கள் என்னை பாதிக்கவில்லை எனும் விதமாய் வெளியே தெரிந்த இருளை வெறித்தபடி நின்றிருந்த வெற்றியை நோக்கிய, அவனின் நண்பன் சதீஷ், மற்றவரிகளிடம், “டேய்! போதும் டா ஓவரா ஓட்டாதிங்க. அவன ரெடியாக விடுங்கடா!” என சொன்னவன், வெற்றியை நெருங்கி,

“வெற்றி! நீ, இந்த கல்யாணத்துக்கு முழு மனசோட தானே சம்மதம் சொன்ன?!” என கேட்க, எந்த வித தயக்கமோ, மறுப்போ சிறிதும் இல்லாது, திடமாய் “ஆமாம் …” என்றவனின் வார்த்தையில் மனம் குளிர, “அப்புறம் என்னடா, இப்படி நிக்கற. போ போய் ப்ரஷ்ஸா ரெடியாகி, சும்மா மாப்பிளை களையோட வா” என துண்டை கொடுத்து, பாத்ரூமினுள் அனுப்பிவிட்டு, அவன் மாற்ற வேண்டிய துணிகளை பொட்டியிலிருந்து எடுத்து வைத்தான், மற்றவர்களோடு வம்பு வளர்த்த படியே.

“சதீஷ், எங்கடா இன்னும் நம்ம டாக்டர் மச்சான காணோம்?!” என்ற ஒருவனின் கேள்விக்கு, “சார்! அவரும் நம்மள மாதிரி சோசியல் சர்வீசர் , எப்ப, எப்படி அழைப்பு வருமின்னு தெரியாது. வீட்டுல என்ன நடந்திருந்தாலும், அதபத்தி யோசிக்காம கடமைய முன்நிறுத்தி ஓடியே ஆகணும். எதாவது எமர்ஜென்சியா இருக்கும். கண்டிப்பா வந்திடுவான். நம்ம வெற்றியோட க்ளோஸ் ப்ரண்டாச்சே. மிஸ் பண்ண மாட்டான்” என்றவன்,

தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு, வெற்றி வெளிவந்ததும், தானும் ரெடியாகிட சென்றான். வெற்றி மணமகனுக்காய் எடுத்திருந்த வெண்பட்டு வேட்டி சட்டையில் சிறிதும் அவனின் கம்பீரம் குறையாது, மிடுக்காய் நிற்பதை பார்த்த நட்புகள் அனைவரும் வாயை பிளந்து பார்த்திருந்தனர் அவனின் அழகில்….

ஆறு அடிக்கும் மேல் ஆண்களே அன்னார்ந்து பார்க்கும் அசாத்திய உயரத்தில், தனது தொழிலை முன்னிட்டு, செய்யும் உடற்பயிற்சியால் வந்த சிக்ஸ்பேக்ஸ் பாடியோடு, கச்சிதமாய் இதழ் மேல் வீற்றிருக்கும் மீசையோடு, மாநிறமாய் இருந்தாலும் நம் நாட்டின் கலாச்சார உடைக்கே உரித்தான அழகோடு நின்றிருந்தவனை பார்த்து, “மச்சி! இன்னைக்கு பொண்ணு மயக்கம் போட்டு விழுறது கண்பார்ம். இவன பார்த்தா எனக்கே கட்டிபிடிச்சு கிஸ்ஸடிக்க தோணுதே!” என சொல்ல, மற்றவர்களும் அதை வழி மொழிந்து கலாய்க்க ஆரம்பிக்க, வெற்றி அதுவரை இருந்த விரைப்பு தன்மை நீங்க, மெல்லிய புன்னகையை படரவிட்டான் தன் இதழில்… அந்த புன்னகை மேலும் அவனின் வசீகரத்தை கூட்ட, “ஓ… !!!” வென மீண்டும் தங்களின் ஆரவார கலாட்டக்களை, தங்களுக்கே உரித்தான பாணியில் செயல்படுத்தி வெற்றியை திக்குமுக்காட செய்து கொண்டிருந்தனர்.

அவனை ஐயர் அழைக்க, அதை சொல்ல வந்த அவனின் தாய் சந்திரா, அவனின் மணமகன் கோலம் கண்டு, தனது நீண்ட நாள் கனவு, இன்று ஈடேறி இருப்பதை நினைத்து கண்ணில் ஆனந்த கண்ணிர் வழிய, தன் மகனின் முகம் பற்றி குனிய வைத்தவர், அவன் நெற்றியில் இதழ் பதித்து விலக, அவரை தன் தோளோடு அனைத்தவன், “இப்ப ஹேப்பியா அம்மா.. !!!” என கேட்க, மகிழ்ச்சியில் வார்த்தை வராது, கண்ணிரோடு தலையை, “ஆம்” என அசைத்தவர், “கண்ணா! ஐயர் கூப்பிடறார். சதீஷ், நீ உன் ப்ரண்ட மணமேடைக்கு கூட்டிட்டு போப்பா.. நா, போய் கனி ரெடியாகிட்டாளான்னு பார்த்துட்டு, அழச்சிட்டு வர்றேன்” என்றவர், மகனிடம் தலையசைத்து விட்டு வேகமாய் மணமகள் அறைக்கு சென்றார்.

மணமகள் அறையில், அழகோவியமாய் முழு அலங்காரத்தில், தனது தோழிகளிடம் வம்பளந்து கொண்டிருந்த கனியை பார்த்தவர், வேகமாய் கதவை அடைத்தவர், தனது மருமகளை நெருங்கி, “கனிம்மா! காரியத்த கெடுத்த போ.. அவன்கிட்ட என்னத்த சொல்லி கல்யாணத்துக்கு கரெக்ட் பண்ணி வச்சிருக்கோம். நீ பாட்டுக்கு இப்படி ஜாலியா கூத்தடுச்சிட்டு இருக்கறத பார்த்தா பயபுள்ள உசாராகிடுவான்” என பதட்டத்தோடு சொல்ல,

“அத்தம்மா, அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நா இப்படி தான்னு உங்க புள்ளைக்கு நல்லாவே தெரியும். பட்! அதுக்கு நம்ம சொன்ன ரீஷன் தான்…..  கொஞ்சம்..  ஓவரோன்னு தோணுது. விடுங்க , எவ்வளவோ பார்த்தாச்சு,  இத பார்க்க மாட்டோமா… கூலா போய், ஒரு ஜுஸ் கொண்டு வாங்க… குடிக்க.  பேசி பேசி வாய் வரண்டு போச்சு..”  என சொல்லி மீண்டும் தனது தோழிகளிடம் திரும்பி வம்பு பேசி சிரிக்கும் கனியை கனிவோடு பார்த்தவர், அவள் கேட்டதை கொண்டு வர  டைனிங் ஹால் நோக்கி சென்றார்.

கையில் ஜுஸோடு மீண்டும் மணமகள் அறைக்கு செல்லும் சந்திராவை, மணமேடையில் ஐயர் சொன்னதை செய்து கொண்டே கவனித்த வெற்றியின் முகத்திலும், அதே கனிவு வந்தது.. உண்மை தெரிய வரும் போது அதே கனிவு நிலைக்குமா?!

“நேரமாச்சு, பொண்ண அழச்சிட்டு வாங்க!” என்ற ஐயரின் குரலுக்கு, கனிமொழியை அழைத்துவர அவளின் தாய் செந்தமிழும் செல்ல, அங்கு தன் அத்தையோடு செல்லம் கொஞ்சிக் கொண்டு, ஜுஸ் அருந்தும் மகளை பார்த்தவர், ‘யாருக்கு கிடைக்கும் இப்படியொரு மாமியார், மாமனார்… ஆனால் புருஷன்???’ என்ற எண்ணம் வந்தாலும், தன் மகள் மீதான நம்பிக்கையில், அனைத்தும் சரியாகிடும் என மனதை தேற்றிக்கொண்டாலும்,

‘இவங்க எல்லாரும் சேர்ந்து போட்டுட்டு இருக்கற ட்ராமா மட்டும் மாப்பிள்ளைக்கு தெரிஞ்சா?!’ என நினைத்தவர், ‘ஆண்டவா! நீ தான் என் பொண்ணு வாழ்க்கையில, எந்த பிரச்சினையும் வராம பார்த்துக்கணும். அவ மட்டும் வெற்றி மேல ஆசபடாம இருந்திருந்தா, வேற யாருக்காச்சும் கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம். இவ கட்டுனா அவனத்தான் கட்டுவேன்னு பிடிவாதமில்ல பிடிச்சா. இதுல இவ அப்பா வேற பொண்ணு ஆசைக்கு ஜால்ரா தட்டவே, ஜென்மம் எடுத்த மாதிரி, எல்லாத்துக்கும் ஓவரா ஜால்ரா தட்டியே உசுப்பேத்தி, உசுப்பேத்தி இப்ப கல்யாணத்துல கூட, சிக்கல உருவாக்கி வச்சு, அவ பிடிவாதத்துல நடக்கற மாதிரி செஞ்சாச்சு.. ! ஹும்!’ என பெருமூச்சை வெளிவிட்டு,

“அண்ணி! கனிய மேடைக்கு வரசொல்றாங்க” என சொல்லிவிட்டு, “கனி!  உன் செல்லம் கொஞ்சற வேலைய அப்புறமா வச்சிக்கோ.. இப்ப கிளம்பு” என்றதும்,

 

 சந்திரா, “என்ன அண்ணி! குழந்த வாயெல்லாம் வறண்டு போச்சின்னு, இப்ப தான் ஆசையா கேட்டு குடிக்க போனா, ஒரு ரெண்டு நிமிஷம் லேட் ஆனா தப்பில்ல, ராஜாத்தி நீ குடுச்சிட்டு வாடா..” என்றவர், அவள், அதை குடித்து முடித்த பின்னரே, அழைத்து செல்ல அனுமதித்தார் மணமேடைக்கு….

வெற்றி, மணமகள் அறையிலிருந்து வெளிவந்த கனியை பார்த்தவன் மனது மிகவும் நிறைவாய் உணர்ந்தது. அவளின் மெல்லிய புன்னகையோடு கூடிய அழகு முகம் என்றும் வாடாமல் எப்போதும் இப்படியே மலர்ந்திருக்க தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என நிறைவாய் நினைத்தான். (ராசா இந்த முடிவு இன்னும் கொஞ்ச நேரத்துல ராக்கெட் பிடிச்சு பக்கத்து தேசத்துக்கு போக போகுதே அப்ப என்ன பண்ணுவே! )

வெற்றியருகே வந்து அமர்ந்த கனி, மெல்ல அவனின் முகம் பார்க்க, அவளையே கண் சிமிட்டாமல் பார்த்த, வெற்றியின் பார்வையில், முகம் சிவக்க, நாணத்தோடு தலைகுனிந்தவளின் செய்கையில், அவனின் புன்னகை விரிய அழகாய் இந்த நிகழ்வு புகைபடமானது.

கல்யாண சடங்குகள் தொடர, அதற்காக வளர்க்கப்பட்ட யாககுண்டத்து புகை, கனியின் கண்களில் நீரையும், இருமலையும் கொடுக்க, பதறி போன வெற்றி, “ஐயரே போதும்! இத கொஞ்சம் குறைங்க.. பாருங்க, அவளுக்கு எப்படி இருமல் வருதுன்னு!” என்றவன், தனது கைகுட்டை கொண்டு, அவளின் கண்ணிர் துடைத்து, “கொஞ்ச நேரம்டா, ஓகேவா!” என அக்கரையாய் சொல்ல,

 

அவனின் கரிசனத்தை பார்த்த நண்பர் படை… “வெற்றி இப்பவே இப்படியா…. ?!” , “நீயாடா இப்படி?!”  என ஆளாளுக்கு ஓட்டி எடுக்க, அதை சிறிதும் சட்டை செய்யாமல், ஐயரை அவசரபடுத்தி, மாங்கல்யத்தை வாங்கி அவள் கழுத்தில் நிறைவோடு, மூன்று முடிச்சிட்டு தனது சரிபாதியாய் ஏற்றுக்கொண்டான்.

அடுத்த அடுத்த சடங்குகளின் போதும், அவளிடம் “இப்ப ஓகேவா?!” .. “டையர்டா இல்லையே?!”.. “ரெஸ்ட் எடுக்கறையா?!” என கேட்டு கேட்டு செய்தவனை, கேலி செய்தே ஓய்ந்து   போயினர் அவனின் நண்பர்கள்.

திருமண சடங்குகள் முடிந்து, அடுத்து அவர்களின் உறவுகளும், நட்புக்களும் மேடை ஏற, வந்தவர்களிடம் பேசி புகைபடத்திற்கு போஸ் கொடுத்தாலும், கனிமொழிக்கு அவ்வப்போது எதாவது குடிக்க கொடுப்பது, சிறிது நேரம் அமர வைப்பது என செய்தவனை தூர இருந்து பார்த்த பெரியவர் நால்வருக்கும் மனதில் எழுந்த கேள்வி இது தான்… “பயபுள்ளக்கு உண்மை தெரிஞ்சா இதே ரியாக்க்ஷன் கொடுக்குமா?!” என்பதே!!!!!

அத்தியாயம் 2

வெற்றி, தனது தொழில் முறை, மேலதிகாரிகளின் வரவின் போது மட்டும், கனியிடம், தனது உபசரிப்பை காட்டாது, கடமை ஆற்றும் நல்ல ஊழியனாய் மாறி போனவனை பார்த்தவள், ‘அதானே! என்னடா, கஞ்சி சட்டை நம்ம துவைக்காமலே கந்தலாகிடுச்சோன்னு நினச்சேன். பயபுள்ள எப்பவும் போல தான் இருக்கு. ஏதோ சொன்ன பொய்யால இவ்வளவு தூரம் நம்மள பாக்குது பக்கி. இல்ல.. இவன கரெக்ட் பண்ணியிருக்க முடியுமா?? நோ ச்சான்ஸ்!’ என மனதோடு கடுப்பானவள், வந்திருந்தவர்களிடம் இன்முகமாகவே பேசி வழியனுப்பினாள். ‘அவன் தான் இப்படின்னா, வர்றதுங்க பூராவும் தனியா வருதுங்க. அப்புறம் பயபுள்ளைக்கு கல்யாண ஆசை எப்படி வரும் சொல்லு?!’ என மனதோடு காய்ந்தாள்.

ஏறக்குறைய அனைவரும் வந்து சென்றட, உறவினர்கள் மட்டுமே எஞ்சிய நிலையில், சிறிது ஓய்வாக மணமக்கள் அமர, வெற்றியின் அதீத அக்கரையால், அதிகமாய் அருந்திய ஜுஸ் மற்றும் ஏசி அறையின் குளுமை இயற்கை உபாதையை கனிக்கு கொடுக்க, அமர்ந்த வாக்கிலேயே நெளிய துவங்கினாள்.

அதை கவனித்த வெற்றி, “கனி என்ன பண்ணுது. எனி ப்ராப்ளம்?!” என பதட்டத்தோடு கேட்க,

 

 ‘அடேய்! நீ வேற இப்படி கேட்டு கேட்டே, எனக்கே நா நல்லா இருக்கனா? இல்லையான்னு? சந்தேகத்த வரவச்சிடுவ போலவே!’ என நினைத்தவள், வெளியே … “இல்லங்க மாமா, ரெஸ்ட்ரூம் போகணும் அதான்!” என இழுக்க,

 

“ஓ! போயிட்டு வாம்மா. இனி யாரும் வரமாட்டாங்க. முடுஞ்சா கொஞ்ச நேரம் அம்மாகிட்ட சொல்லிட்டு ரெஸ்ட் எடுத்துட்டே வா. நா என் ப்ரண்ட்ஸ் கூட இருக்கேன்” என்றவன்,

 

“மறக்காம டேப்லெட் எடுத்துக்கோ” என்றதும், “அது எதுக்கு?!” என கேட்டவள், சட்டென சுதாரித்து, சிறு அசட்டு சிரிப்போடு, “கண்டிப்பா மாமா போட்டுக்கறேன்” என்றவள் அங்கிருந்து மணமகள் அறையை நோக்கி சென்றாள். வெற்றி அன்று இருந்த மனநிலையில், கனியின் பதிலை சரியாக கவனிக்காமல், தனது நண்பர்கள் குழு இருக்கும் இடத்திற்கு சென்றான்.

நடக்க போகும் விபரீதம் புரிந்திருந்தால், கனி வெற்றியை விட்டு விலகி சென்றிருக்க மாட்டாளோ!

அறைக்கு செல்லும் வழியில், மண்டபத்திற்குள், ஓடி விளையாடிய குழந்தைகளில் ஒன்று தவறி கீழே விழ, அந்த இடத்திற்கு சரியாக வந்திருந்த கனி, அவசரமாய் அந்த குழந்தையை தூக்கி, சமாதானம் செய்து கொண்டிருந்த நொடி, அவளை கடந்து அவளையே பார்த்த படி சென்றவனை பார்த்திருந்தாள், வந்த வேலையை விட்டுவிட்டு அவனிடம் சென்றிருப்பாளோ..

குழந்தையை சமாதானம் செய்துவிட்டு, தனது அறைக்கு சென்றவள், தனது தேவையை முடித்து, வெற்றி சொன்னது போல அத்தம்மாவிடம் கேட்க, அவரும், “சாயங்காலம் தான்டா வீட்டுக்கு போகணும். இப்ப நேரம் சரியில்ல. அதான நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என்றதும் ஓய்வுக்காக அங்கேயே தங்கிவிட்டாள் கனி, அங்கொருவன் தங்களின் திட்டத்தையெல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டான் என்பதை அறியாமல்.

வெற்றி, நண்பர்கள் குழுவோடு சேர்ந்து அரட்டையில் மும்முரமாய் இருந்த நேரம், அவன் முதுகில் பட்டென விழுந்த அடியில் திரும்பியவன், “ரகு…..!”  என அழைத்தபடி சந்தோஷத்தோடு எழுந்து கட்டிக்கொண்டவன்,

 

அடுத்த நொடி, அவனை விலக்கி, “வாடா நல்லவனே! வர்ற நேரத்த பாரு. நேரம் சரியில்லன்னு மண்டபத்த காலி பண்ணாம இருக்கோம். இல்ல நீ வந்த நேரத்துக்கு நாங்க வீட்டுக்கே போயிருப்போம்” என ஆதங்கத்தோடு சொல்ல,

 

“டேய் வெற்றி சாரிடா! ஒரு எமர்ஜென்சி கேஸ்டா. குழந்தைக்கு ஆப்பரேஷன் உடனே பண்ண வேண்டி இருந்துச்சுடா. சோ லேட் ஆகிடுச்சு” என தனது தரப்பை கூற,

ஏற்கனவே, அவனின் மருத்துவ துறையில் வரும் இதுபோன்ற விசயங்களை நன்கு அறிந்த நண்பனாய் தோழனின் காலதாமதத்தை மன்னித்து, “எனக்கு புரியுதுடா. இருந்தாலும் நீ என் கல்யாணத்த மிஸ் பண்ணுட்டையேன்னு தான்..” என்றவன்,

 

“இப்ப தான், கனி ரூமுக்கு போனா, கொஞ்சம் வெயிட் பண்ணுடா, அவள கூட்டிட்டு வர்றேன்” என சொல்ல,

 

“உன் வெய்ப் தான் எனக்கு நல்லா தெரியுமே. அவங்களாவே வரட்டும். நீ உக்காரூ!” என்றவனை பார்த்தவன்,

 

“கொஞ்சம் நம்ம தனியா பேசலாமா?!” என கேட்ட வெற்றியை வித்தியாசமாய் பார்த்தாலும், மற்றவர்களிடம் தலையசைத்து விட்டு, அங்கிருந்த அறைக்குள் புகுந்தனர் இருவரும்…

செல்லும் போது சிறு குழப்பத்தோடு சென்ற ரகு, இப்போது மேலும் அதிகமாகவே குழம்பி போய் வெளிவந்தான். தன்னிடம் வெற்றி கேட்ட கேள்வியில் முதலில் அதிர்ந்தாலும், தன் நண்பனை நன்கு அறிந்தவனாய், அவனின் குழப்பத்திற்கு தன்னாலான பதிலை சொல்லிய போதும், அவனின் கேள்விக்கான காரணம் என்னவாய் இருக்கும் என்பது சுத்தமாய் விளங்கவில்லை அந்த மருத்துவனுக்கு…

அந்த அறைக்குள் வந்த நொடி, வெற்றி ரகுவிடம், “ரகு இந்த விசயத்த வெளியவே கேட்டிருக்கலாம். பட், இது எங்க ரெண்டு குடும்பத்துக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியமா இருக்கணுமின்னு தான்….!” என்றவனை புரியாத பார்வை பார்த்தவன், அவன் மூலமே விசயம் வெளிவரட்டும் என நினைத்தவன்,  “சரிடா, என்ன விசயம் சொல்லு?” என்றதும்,

 

“உனக்கு என்னோட வெய்ப் கனிமொழிய உன் ஹாஸ்பிட்டல் மூலமா தானே தெரியும்?!” என்றதும்,

“ஆமா, நா அங்க அடிக்கடி பார்த்திருக்கேன் அதுக்கு என்ன இப்ப?” என்று பதிலளிக்க,

“இல்ல அது சம்மந்தமா தான்…..” என ஆரம்பித்தவன், சிறு அமைதிக்கு பின், “அவளுக்கு க்யூர் பண்ணவே முடியாதுன்னு ரிப்போர்ட் சொல்லுதே. நானும் அங்க வந்து கேட்டேன். இருந்தாலும் மனசு ஆறலடா. அதான் கேட்கறேன். பாரின் போனா சரி பண்ண முடியுமா?!” என வெற்றி சொன்னதை கேட்ட ரகுவுக்கோ தலைசுத்தல் தான் வந்தது.

“டேய் புரியற மாதிரி பேச மாட்டியா? யாருக்கு?! என்ன ரிப்போர்ட்?! யாரோட ட்ரீட்மெண்ட் பத்தி கேக்கற?!” என வரிசையாய் கேள்விகளை அடுக்க,

“கனிக்கு தான்டா. அவளுக்கு ப்ளட் கேன்சர் லாஸ்ட் ஸ்டேஜ்!” என வருத்தத்தோடு சொல்லிட,

அதிர்ந்த ரகு, “வாட்! என்ன உளர்ற… ஷி ஈஸ் பர்பெக்ட்லி ஆல்ரெட். யார் சொன்னா இப்படின்னு?” என கடுப்பாய் கேட்க,

“ ரகு, என்கிட்ட அவளோட ரிப்போர்ட் எல்லாம் கொடுத்தாங்க அவங்க வீட்டுல. நானே  உங்க ஹாஸ்பிடல் வந்து உன்ன மீட் பண்ணி இதுபத்தி கேட்க நினச்சேன். நீ ஏதோ கேம்ப் போயிருக்கறதா சொன்னாங்க. அதனால நானே அந்த ரிப்போர்ட் காட்டி விசாரிச்சேன். அங்க தான் சொன்னாங்க, அது சரி செய்ய முடியாத நிலைமைய தாண்டிடுச்சுன்னு. அவளோட ஆசைய நிறைவேத்த, தான் இந்த கல்யாணமே நடந்துச்சு” என்றதும்

“வெற்றி, ஏதோ குழப்பம் நடந்திருக்கு. ப்ளட் கேண்சர் பேஷன்ட், எப்படிடா ப்ளட் டொனேட்டரா இருக்க முடியும்?! அவ எங்க ஹாஸ்பிடலோட ரெகுலர் ப்ளட் டொனேட்டர்” என்றதும், இப்போது அதிர்வது வெற்றியின் முறையானது.

“அவ மூனு மாசத்திற்கு ஒரு முறை, அங்க வந்து ப்ளட் கொடுக்கறது எனக்கு நல்லா தெரியும். அத வச்சு தான் சொல்றேன். அதுவுமில்லாம நாலு நாள் முன்னாடி தான், ஒரு எமர்ஜென்சிக்கு அவங்க ப்ளட் தேவைபடுதுன்னு, வந்து கொடுத்திட்டு போனாங்க. அங்க நானும் இருந்தேன். சோ, ஏதோ குளறுபடி நடந்திருக்கு!” என்றதும், வெற்றியின் முகத்தில் வந்த கோபத்தை உணர்ந்தவன், தன் நண்பன் திருமணத்தில் நாட்டம் இல்லாது இருந்ததும், அவனின் தாய் திருமணத்திற்கு கட்டாயபடுத்துவதும் நன்கு தெரிந்ததால்,

“வெற்றி பாஸ்ட் ஈஸ் பாஸ்ட், உண்மையோ பொய்யோ, உன் கல்யாணம் கனிமொழியோட நடந்திடுச்சு. இனி நீ நினச்சாலும் மாத்த முடியாது. அவங்களும் ரொம்ப நல்ல பொண்ணுடா. உனக்கு ஏத்த ஜோடி. சோ தேவையில்லாத குழப்பத்த விட்டு நல்லா வாழுற வழிய பாரு!” என சொல்லும் போதே அவனின் போன் அழைக்க,

அவன் ட்ரீட்மெண்ட் செய்த குழந்தையின் உடல்நிலையில் சிறிது சிக்கல் ஏற்பட்டதாய் தகவல் வர, அவசரமாய் விடைபெற்று, தான் கொண்டு வந்த கிப்ட்டை வெற்றியிடம் மட்டும் அளித்துவிட்டு சென்றான்.

அவன் சொல்லி சென்ற உண்மையால், தன்னை ஏமாற்றியவர்கள் மீதான கோபத்தை, மற்றவர் முன் காட்டிட கூடாதே ! என்பதை மனதில் கொண்டவன், வெளியே இயல்பாய் இருப்பதாய் காட்டி கொண்டிருந்தவன், உள்ளுக்குள் எரிமலையாய் தகித்துக்
கொண்டிருந்தான். அந்த தணலில் சிக்கி சிதைய போவது முதலில் யாரோ?!

‘அடியேய் என்னம்மா ஆக்ட் கொடுத்த நீ. வா உன்ன வச்சு செய்யல, நா வெற்றி மாறன் IPS இல்லடீ. எத்தனையோ கிரிமினல அசால்ட்டா கேண்டில் பண்ண என்னையவே, நீ ஏமாத்திட்ட இல்ல! உனக்கு இனி தான்டீ இருக்கு!’ என நினைத்தவன், வேகமாய், மணமகள் அறைக்கு சென்றான் கனியை உண்டு, இல்லை என ஆக்கும் எண்ணத்தோடு…

 

அங்கு சந்திரா, “கனிம்மா! இந்தாடா இந்த காபிய குடுச்சிட்டு ப்ரஸ்ஸாகுடா, நம்ம வீட்டுக்கு போலாம்” என கொஞ்சி கொண்டிருக்க,

 

அவரின் மடியில் தலை சாய்த்திருந்தவள், “சரி அத்தம்மா!” என எழுந்து, அவர் தந்த காபியை நல்ல பிள்ளை போல அருந்துவதை பார்த்தவனுக்கு, அதை பிடுங்கி அவள் தலையில் கொட்டும் எண்ணம் வர, கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்தி நின்றவன்,

“அம்மா!”  என அழைக்க, அதுவரை மருமகளை கொஞ்சுவதில் மகன் வந்ததை கூட கவனிக்காமல் இருந்தவர், மகனின் அழைப்பில் திரும்பி பார்த்து, “என்ன கண்ணா! என்ன வேணும்?!  நீயும் கொஞ்சம் ப்ரஸ்ஸாகிட்டு வந்தா, நம்ம கிளம்பலாம்” என சொல்லிக்கொண்டே செல்ல,

“அம்மா…. கொஞ்சம் கனிய விட்டுட்டு நீங்க வெளிய போறீங்களா?!” என கேட்ட நொடி,

 

“அடேய் ஏன்டா இப்படி அவசரபடுற… அதெல்லாம் நேரம் காலம் பார்த்து நாங்களே அனுப்புவோம். அதும் பட்டப்பகல்ல போய், சொந்தகாரங்க காதுல விழுந்தா, மானமே…. போயிடும்!” என சொன்னதை கேட்டவனுக்கு, முதலில் புரியாமல் பார்த்தவன், புரிந்ததும், “அம்மா! ஏம்மா… இப்படி… ?!”என கேட்டவன், “நா….” என ஆரம்பிக்க,

“டேய்! அவசரகுடுக்க, போ போய் வீட்டுக்கு போக ரெடியாகு. மத்தது எல்லாம்.. அப்புறம்… தான்!” என சொல்ல,

 

தன் நெற்றியில் அறைந்து கொண்டு வெளியே சென்றவன் காதில், “கனிம்மா! பார்ரா அவனோட அவசரத்த… என் ராசாத்தி நீ வந்த நேரம்!” என சொல்ல, “போங்க அத்தம்மா!” என்ற கனியின் சிணுங்கள் வார்த்தையும் விழ,

“அய்யோ! நா, அதுக்கு வரல. சண்டகட்ட தான் வந்தேன்!” என போய் சொல்லலாமா?! என நினைத்தவன், மீண்டும் போனால் தன் தாய் அதையும் சேர்த்து, எதாவது.. ஏடாகூடமாய் சொல்லி வைத்தாலும் ஆச்சர்யமில்லை என நினைத்து,

‘வாடீ.. ! எப்படியும் வீட்டுக்கு வந்து தானே தீருவே. தனியா சிக்காமயா போவ.. அப்ப இருக்கு..’ என முடிவு செய்தவன், வீட்டிற்கு செல்ல தயாராக சென்றான்.

காலையில் இருந்த நிறைவோ, அமைதியோ இல்லாது, காலையிலிருந்து  தன்னிடம் அக்கறை காட்டியவனின் ஒதுக்கம் சந்தேகத்தை கொடுத்தாலும், ‘எவ்வளவோ… பார்த்திட்டோம். இத பார்க்கமாட்டோமா?!’ என அசால்டாக சென்றவளுக்கு தெரியவில்லை அவனின் கோபத்தின் அளவு… அதையும் சமாளிப்பாளா வெற்றியின் கனி!!!

அத்தியாயம் 3

வீட்டிற்கு வந்தது முதல், தனியே கனியை சந்திக்க முயற்சி செய்த வெற்றியை, மற்றவர்கள் வேறு விதமாய் பார்க்க, தனது விதியை நொந்து கொண்டவன், “இப்ப அமைதியா இரு! நைட் எப்படியும் உன்னோட ரூமுக்கு வந்து தானே ஆகனும். அப்ப பார்த்துக்கோ..?!” என தனக்குள்லேயே முடிவு செய்தவன் அமைதியாய் அமர்ந்துவிட்டான் ஹாலில்….

மாலை முடிந்து, வெற்றி எதிர்பார்த்த இரவும் கனிந்திட, தனது இரையை எதிர்பார்த்திருக்கும் சிங்கம் போல, தனது அறையின் பால்கனியில் நின்றிருந்தவனின், உள்ளமோ உலையாய் கொதித்திருந்தது. ‘ஒரு போலீஸ்காரனையே ஏமாத்தி இருக்க இல்ல…!’ என மேலும் மேலும், தனது கோபத்திற்கு தூபம் போட்டு கொண்டிருந்தான் வெற்றி.

கனிமொழியை, அவளின் தாய் அவளின் விருப்பம் போல மிகவும் எளிமையான புடவையில் மெலிதான சிறு நெக்லஸ் மட்டுமே அணிவித்து, அலங்காரம் செய்ய, சந்திரா ஒரு பெரிய பெட்டியோடு வந்தவர், “அண்ணி! இதுல இருக்கற நகையெல்லாம் போட்டுவிடுங்க” என  கொடுக்க அதை பார்த்த கனியோ, “என்ன அத்தம்மா?!” என கேட்க, “அதுவாடா கனிம்மா! அதுல எங்க பரம்பரை நகை, அதோட எனக்கு வரப்போற மருமகளுக்காகவே, நா பாத்து பாத்து வாங்கி வச்ச எல்லாம் இருக்கு. அத எல்லாம் மாட்டி, உன்ன அலங்காரம் செஞ்சா, எப்படி இருப்ப தெரியுமா?! அப்படியே கோவில் உற்சவ சிலை மாதிரியே இப்படா அதான் …” என சொல்லி அதை எடுத்து காட்டிட,

 

“அத்தம்மா, உங்களுக்கு பத்து மாசத்துல பேரனோ, பேத்தியோ வேணாமா?!” என சம்மந்தமே இல்லாத ஒரு கேள்வியை திடீரென கேட்க, அவள் கேட்பதில் உள்ள அர்த்தம் விளங்கா விட்டாலும்,

 

“என்னடாம்மா, இப்படி சொல்லிட்ட?! அதுக்கு தானே, தவமா தவங்கிடக்கிறேன்” என்றவரை பார்த்தவள்,

 

“இதையெல்லாம் மாட்டிட்டு போனா, கழுட்டவே விடிஞ்சிடும்… அப்புறம் எங்க மத்தது நடக்கறது, நா, பத்து மாசத்துல புள்ள பெக்கறது!” என சீரியஸ் டோனில் சொல்ல, கேட்ட இரு அம்மாக்களும் அதிர்ந்து, வாய் மீது விரல் வைத்து நின்றனர் கனியின் விளக்கத்தில்…

 

அவர்களின் அதிர்ச்சியை கருத்தில் கொள்ளமால், “என்ன மசமசன்னு நிக்கறீங்க. போங்க, போய் சூடா பாதம், பிஸ்தா எல்லாம் போட்டு, நல்லா சுண்ட காய்ச்சின பால கொண்டு வாங்க. மாமா போய் எவ்வளவு நேரமாச்சு. இதெல்லாம் நானே பார்க்கணுமா?!” என கேட்டவளிடம்,

சந்திராம்மா கொடுத்த செம்பை வாங்கி கொண்டு அவரின் காலில் விழுந்து வணங்கியவள்,

 

“அத்தம்மா, போயிட்டு புள்ளையோட வர்றேன்!” என்றதும், “என்னதூ….!!” என சத்தமா சொல்லிவிட,

 

“ ச்ச … ச்ச … டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு, புள்ளைக்கு அஸ்திவாரம் போட்டுட்டு வர்றேன், வாழ்த்தி அனுப்புங்க!” என்றவள், ஹாயாய் அவனின் அறைக்கு செல்ல,

 

தமிழுக்கோ, ‘இவ பாட்டுக்கு இப்படி பேசறாளே, கொஞ்சமாவது கூச்சம், நாச்சம் பாக்கறாளா! என்ன நினைப்பாங்களோ!’ என சந்திரம்மாவை பார்க்க, அவரோ அப்படியே அகமகிழ்ந்து போய், நின்றிருந்தார்.

“அண்ணி, அவ ஏதோ விளையாட்டா பேசறா?!” என சொன்ன தமிழிடம்,

 

“கனிய பத்தி எனக்கு தெரியும் அண்ணி. அவ ஒரு விளையாட்டு புள்ள, குறும்புக்காரி ஆனா கள்ளம் கபடம் அறியாதவ, அவ பேசினது என்னோட சந்தோஷத்துக்காகவும், திருப்திக்காகவும் தான்னு எனக்கு புரியுது. போங்க, போய் நீங்களும் தூங்குங்க… காலைல வேலை நிறைய இருக்கு” என்றவர் மனதில், ‘எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும்’ என்ற வேண்டுதலோடு உறங்க சென்றார்.

கீழே இருவரிடமும் விளையாட்டாய் சொல்லி விட்டு வந்தாலும், அந்த நாளுக்கான இயல்பான படபடப்பும், பயமும், கூடவே கொஞ்சம் வெக்கமும் (அது அவளுக்கு இருக்கா கேட்க கூடாது) வர, தயக்கத்தோடு கதவை திறந்தவள் தலையை மட்டும் உள்ளே நீட்டி, வெற்றியை தேட, அறையில் அவன் இருப்பது போல தெரியாததால், யோசனையோடு உள்ளே வந்தவள், “எங்க போயிருக்கும் இந்த கஞ்சி சட்டை?!” என மெல்ல முனுமுனுக்க,

அவள் உள்ளே வருவதை பால்கனியிலிருந்து பார்த்திருந்தவன், அங்கிருந்து உள்ளே வரவும், கனி அதை சொல்லவும் சரியாய் இருக்க,

 

“ என்னடீ சொன்ன!” என தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று கேட்வனை பார்த்தவள், ‘நிறம் மட்டும் கொஞ்சம் கூட இருந்தா அப்படியே கருப்பன்னசாமி தான்!’ என தீவிர சிந்தனையில் அவன் முகம் பார்த்திருக்க,

ஏற்கனவே கடுப்பில் இருந்தவன், அவளின் இமை தட்டா பார்வையில் மேலும் கடுப்பாக, அவள் முகத்திற்கு நேராக சொடுக்கிட்டு அழைக்க, தூக்கத்திலிருந்து விழிப்பது போல விழித்தவளிடம்,

 

“என்ன நின்னுட்டே தூங்கற வியாதியா உனக்கு… இல்லையே, வேற ஏதோ சொன்னையே.. ஆ….. ப்ளட் கேன்சர் இல்ல. அதுவும் லாஸ்ட் ஸ்டோஜ் வேற….. ?!” என ஆராய்ச்சியாய் அவளை பார்த்தவாரே கேட்க, அவள் மனமோ, ‘இப்ப என்ன ஆராய்ச்சி பண்ண வேண்டிய நேரம், அவன் என்ன ஆராய்ச்சி பண்றான்!’ என மானசீகமாய் தலையில் அடித்து கொண்டது.

“கேட்டதுக்கு பதில் சொல்லமாட்டியா?!” என கொஞ்சம் சத்தமாக அதட்டலோடு கேட்க,

 

“எதுக்கு இப்படி கத்தறீங்க, பயந்து பொட்டுன்னு போயிட போறேன்” என சொல்ல, “யாரு? நீ !  பொட்டுன்னு போறவ.. ! இன்னமும் எத்தன பேர போக வைப்பையோ ?!” என சொன்னதும்,

 

“ ஹலோ யாரு நானூ..?!   சார், நா எத்தன பேர எமலோகத்துக்கு பார்சல் பண்ணத பார்த்தீங்க. அதெல்லாம் உங்க வேலை.. என்கவுண்டர்ங்கற பேர்ல போட்டு தள்ளறது…” என்றதும்,

“பித்தலாட்டகாரிக்கு என்னோட தொழில் பத்தி பேச தகுதி இல்ல” என சுள்ளென எரிந்து விழுந்தவன், “எப்படி எப்படி இன்னும் கொஞ்ச மாசத்துல செத்து போக போற ஆளு நீ.. இத ஒத்து ஊத என்ன பெத்த ஆத்தவும் கூட்டு, அப்படிதானே?!.

அவங்கள விடு, ஏன்டீ ! உங்க அப்பா அம்மாக்கு அறிவே இல்லையா?! இப்படி சொல்லி கட்டி வச்சா, நீ வாழாம வந்தா என்னாகுமின்னு யோசிக்க மாட்டாங்க. சரியான லூசுங்க” நக்கலும், கடுப்பும் கலந்து கேட்க,

தன்னை பேசியதை பொறுத்துக் கொண்டவள், தன்னை பெற்றவரை பேசியதும், “மாமா வேணாம், எதுவானாலும் பேச்சு நம்மோட இருக்கணும். வீணா அவங்கள இழுந்தா சரி வராது பாத்துக்கோங்க!” என சொல்ல

“அப்படி தாண்டீ இழுப்பேன். என்னடீ செய்வ. வீட்ட விட்டு போவியா?! போ, அதான் எனக்கும் வேணும். இதுவரை கல்யாணமே வேணாமின்னு இருந்தவன ஏமாத்தி, போர்ஜரி பண்ணிட்டு, கோபமும், ரோசமும் வேற… !” என முதலில் சத்தமாக ஆரம்பித்தவன், இறுதியாய் முனுமுனுக்க,

“நா, உனமேல வச்ச ஆசைக்காக தான், அவங்க வேற வழியில்லாம இப்படி செஞ்சாங்க. நானும் உன்ன பாத்த நாள்ல இருந்து எத்தன தடவ தான் கேட்டேன், “டேய்! உன்ன எப்படிடா கரெக்ட் பண்ணறதுன்னு. பதில் சொன்னியா மாமா. இல்லல்ல அதான் நாங்களே உன்ன கரெக்ட் பண்ண ப்ளேன் போட்டோம். இதுல என்ன தப்பு?!” என நியாயம் பேச,

‘நா சரியா தான் பேசிட்டு இருக்கனா?! என யாரிடமாவது கேட்கலாமா!’ என்ற யோசனைக்கு போய்விட்டான் அவளின் பதிலில்… 

 

“ஏய்! பேச்ச மாத்தாத, நீ ஏன் உனக்கு நோய் ன்னு என்ன ஏமாத்தின?” என்றதும், ‘சப்பா…வந்த சனியன் எதோ சடபின்னிட்டு போயிடுச்சி போலவே. சரி விடு சமாளிப்போம்!’ என மனதில் நினைத்தவள்,  நடந்து சென்று, அங்கிருந்த டீப்பாய் மீது பால் செம்பை வைத்துவிட்டு, நிதானமாக வந்து மெத்தையில் சம்மணம் போட்டு அமர்ந்தவள், “அத தானே மாமா உன்ன பாத்த நாள்ல இருந்து சொன்னேன், உன்ன கரெக்ட் பண்ண தான்!” என சொல்ல,

அவள் சொன்னதை கேட்டு, அவளை அடிக்க துடிக்கும் கரத்தை, தனது ஷாட்ஸ் பாக்கெட்டில் விட்டு அடக்கியவன்,

 

“சரி விடு, ப்ளான் போட்டிங்க சரி. அதெப்படி உன்னோட பேர்ல ரிப்போர்ட் வாங்குன, அதும் நா போய் விசாரிப்பன்னு தெரிஞ்சும் அத தைரியமா கொடுத்திருக்கன்னா, அங்க உனக்கு ஹெல்ப்புக்கு ஆள் வச்சியா?!” என நடந்ததை அறிந்து கொண்டே ஆகவேண்டும் என்ற நிலையில், அடுத்த கேள்வியை தொடுக்க,

“நா ஹெல்ப்புக்கு ஆள் பிடிக்கல மாமா, ஆண்டவன் தானே ஹெல்ப் பண்ணிட்டார்”  என்றதும், புரியாது நின்றவனை பார்த்தவள், “நா ஒரு தடவ ப்ளட் டோனேட் பண்ண போனப்ப, என்னோட ஏஜ் லிமிட் இருக்கற பொண்ணுக்கு ப்ளட்கேன்சர்ன்னு வந்திருந்தா. அவளோட பேரு கனிஷ்கா. அவகூட அப்ப பேசினத வச்சு, அவங்க ரிப்போர்ட் மட்டும் தான் அங்கிருந்து ஆட்டைய போட்டேன். அதோட முதல் பேஜ் மட்டும் மாத்தி தான் உன்கிட்ட கொடுத்தேன்.

இன்னொன்னு மாமா அந்த ஹாஸ்பிடல்ல பேஷன்ட் நேம விட அவங்களுக்கு கொடுக்கற நெம்பரையும், இப்ப புதுசா பார்கோட் செக்கிங் முறையிலையும் தான் டீட்டெய்ல்ஸ் சொல்வாங்கன்னு தெரியும். சோ, நீ நேம் சொல்லி கேட்டாலும், அவங்க அந்த பார்கோட ஸ்கேன் மட்டும் பண்ணிட்டு டீட்டெயில் சொல்லிடுவாங்க.

நீங்க ஒரு டம்மி போலீஸ் போல, அங்க போய் விசாரிக்கும் போது இதெல்லாம் யோசிக்கவே இல்ல…  அய்யோ… அய்யோ….. வடிவேல் சொல்ற மாதிரி சின்ன புள்ள தனமாவல்ல இருக்கு….” என சிரித்தவளை பார்த்தவன், தனது மொத்த பொறுமையும் பறக்க,

“அடுச்சு பல்லகில்லையெல்லாம் கழட்டிடுவேன் பாத்துக்கோ… !”என எகிற, “கழட்ட எத்தனையோ இருக்கு, இவருக்கு பல்லு தான் கிடச்சிது போல!” என ஒரு  பெருமூச்சோடு முனுமுனுக்க, அவனுக்கு தான், ஏன் தான் பேச போனோம் என்றானது.

“ச்சீ..!  பொம்பளையாடீ நீ . எப்படி பேசற?!” என முகத்தை அஷ்டகோணலாக்கி கேட்க, “நா பொண்ணா, இல்லையான்னு எனக்கு நல்லாவே தெரியும் மாமா, டவுட் உனக்கு தான்னா, செக் பண்ணிக்க வேண்டியது உன்னோட வேலை, இதெல்லாம் ரொமான்டிக்கா, நீ பேசி, நா கேட்கனும், விதி இங்க உல்டாவா நடக்குது!” என அவன் சொன்னதை, அவனுக்கே திருப்பிவிட்ட, தனது விதியை நொந்து கொள்வது தவிர வேறு வழியில்லாது போயிற்று வெற்றிக்கு…

 

‘இவள எப்படி இங்கிருந்து பேக் பண்ணலாம்?!’ என தீவிர யோசனையில் இருந்தவனை கலைத்தது கனியின் குரல்…

“கேள்வி, பதில் செஷன் முடுஞ்சுதுன்னா, லைட் ஆப் பண்ணிட்டு வந்து படுங்க” என்றபடி மெத்தயில் படுத்தவளை பார்த்தவன்,

 

‘இவகிட்ட படுக்கலாமா நம்பி?!’ என யோசிக்க ஆரம்பித்தான். அவனின் யோசனை அவளுக்கு எப்படி தெரிந்ததோ, “மாமா தைரியமா, வந்து படுங்க. உங்க கற்புக்கு நா கேரண்டி” என அசால்ட்டாய் சொன்னவள், கட்டிலின் ஒரு பகுதியில் படுக்க, வெற்றியின் மனசாட்சியோ, “பொண்ணு, அவளே தில்லா படுக்கறா. நீ மாத்தி கீழயோ அல்லது ஷோபாவிலோ படுத்தா, கோவலமா இன்னும் பேசுவா!’ என சொல்ல, வீராப்பாய் விளக்கை அனைத்தவன் கட்டிலின் மறுபுறம் வந்து படுத்திருந்தான்.

பல பல குழப்பங்கள், இருக்கும் சூழல் எல்லாம் அவனின் தூக்கத்தை கெடுக்க, அவன் கனியை சந்தித்த நிகழ்வில் முழ்கி போனான். என்ன தான் அவன் முன்பு தைரியமாய் பேசினாலும் தனது காதலை சுத்தமாய் ஒரு தூசியாய் கூட மதிக்காத இவன் மேல் காதல் கொண்ட தருணத்தை நோக்கி பயணப்பட்டாள் கனிமொழி…

அத்தியாயம் 4

“நீங்க கொடுத்த ஜாதகத்த நன்னா பார்த்தாச்சு.. ! இந்த ஜாதகத்திற்கு சொந்தக்காரர், அம்மா மேல பாசம் நிறஞ்சவரா இருப்பாா். அவங்க சந்தோஷம் முக்கியம் இவருக்கு” என்றதும்,

“அத நீங்க சொல்லி தான் தெரியணுமா ஜோசியரே! அவன பெத்தவ, எனக்கே தெரியுமே..! நீங்க அடுத்த விசயத்துக்கு வாங்க…” என்று ஆர்வமாய், தனது மகன் வெற்றிமாறனின் ஜாதகத்தை கணித்து, திருமண யோகம் குறித்து, ஏதாவது நல்ல செய்தி வராதா?! என சந்திரா ஆவலாக காத்திருக்க,  அவரின் ஆர்வத்தை உணராத அந்த ஜோசியரோ,

“அதோட இவரோட உத்யோகத்தையும், உயிரா நேசிப்பவரா இருப்பார்” என்றதும்,

 

“அச்சோ! அதான் எனக்கு தெரியுமே, அடுத்து?!” என கேட்க,

 

 “ரொம்ப பிடிவாதகாரன்” என சொன்னதும், “ஜோசியரே! அவன் வேலை, பிடிவாதம்,பாசம் எல்லாமே எனக்கு நல்லா தெரியும். அத பத்தி சொல்லி, நேரத்த வீணடிக்காம, நேரடியா பையனுக்கு கல்யாண யோகம் வந்திடுச்சா?! சொல்லுங்க!” என கேட்க,

“அத தான் சொல்ல வந்தேன்! இப்ப இந்த ஜாதககாரருக்கு, குரு உச்சத்துல இருக்கறதால, நிச்சயம் கல்யாணம் நடந்தே தீரும். என்கிட்ட கூட நல்ல நல்ல வரனெல்லாம் ரெடியா இருக்கு. உங்க தகுதிக்கு செய்யற இடம் கூட இருக்கு, பொண்ணு போட்டோ நாளைக்கி கொண்டு வர்றேன். நீங்க ஓகே சொன்னா, பொண்ணு ஆத்துல பேசி, காரியத்த முடிக்க நானாச்சி..!”  என சொன்னவரை பார்த்து,

 

“ஆஹா, நீங்க சொன்னது மட்டும் நடந்துட்டா உங்கள எ..ப்..ப..டி…..  கவனிக்க போறேன் தெரியுமா..?!” என சொன்ன தாயின் எண்ணத்திற்கு மாறாக, அந்த ஜோசியரை தலைகீழாய் கட்டி, நன்கு கவனித்துக் கொண்டிருந்தான் வெற்றி மனதின் உச்சகட்ட கடுப்புடன்….

“சார்! விட்டுடுங்க ப்ளீஸ்! தெரியா தனமா உங்க ஜாதகத்த பார்த்து சொல்லிட்டேன்… இனிமே உங்க தெரு பக்கமில்ல, இந்த ஊருலையே இருக்க மாட்டேன்.. ஏன் இந்த ஜோசியம் பார்க்கறதையே விட்டுடுறேன்… நேக்கு, குடும்பம், புள்ள குட்டி இருக்கு …!” என, தனது கண்கள் இரண்டும், ‘எங்கே இனி இப்படியே தொங்கிக்கொண்டிருந்தால் வெளியே வந்துவிடுமோ?!’ என்ற அச்சத்தில் அலறியவனை, சாவகாசமாக கீழே இறக்கி விட்டவன்,

“இனி ஒரு தடவ, எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு போட்டோ காட்டறேன், பொண்ணையே காட்டறேன்னு, வீட்டு பக்கம் பார்த்தா நீ காலி… ஓடு முதல்ல..” என மிரட்டி அனுப்பிவிட்டு, வீட்டிற்கு வந்தவனை சந்தோஷமாக எதிர்கொண்ட சந்திரா…

“கண்ணா! நா, ரொம்ப ஹேப்பியா இருக்கேன் !” என்றவர் ஜோசியருடனான பேச்சிவார்த்தையை சொல்ல, நமுட்டு சிரிப்போடு கேட்டவன்

 

‘என்னைய மீறி, எந்த கொம்பன், பொண்ணு வீட்ட காட்டிட போறான். நீங்களும் இப்படியே காத்திட்டு இருந்து, வெறுத்துபோய் விட்டுடுவீங்க!’ என்று மனதில் நினைத்தபடியே,  “உங்க இஷ்டம் போல செய்யுங்க.!” என்று சந்திராவிற்கு வாக்களிக்க,


மகனின் ஒப்புதலில் மனம் குளிர்ந்த சந்திராவோ, “எனக்கு வர்போற மருமக எங்க, எப்படி இருக்களோ…?!” என சொன்ன நேரம் ,

செந்தமிழ் தந்த, மாலை பலகாரத்தை மொக்கியபடி, டிவி பார்த்துக் கொண்டிருந்க கனிமொழிக்கு புரையோறியது.

“அடியேய்! சாப்பிடறது பார்த்து சாப்பிட மாட்டியா..?!” என்ற தமிழுக்கு,

 

“நீ, சமச்சத பார்த்தா..  எப்படிம்மா, சாப்பிட முடியும். கண்ண மூடிட்டு தள்ளுனாலே போக மாட்டிங்குது உள்ள… இதவேற பார்த்துட்டாலும்….!” என நக்கலடிக்க,

“இந்த வாய் இருக்கே, இது தாண்டி உனக்கு பெரிய குறை… போற வீட்டுல எவன்கிட்ட வாயிலயே,  இதுக்கு வாங்க போறையோ..?!” என சொல்ல,

“போற வீட்டுல, வேற யாரு..  என் புருஷன்கிட்ட மட்டும் தான் வாயில வாங்க முடியும்…! மத்தவங்க கிட்ட வாங்கினா தப்பு அம்மா…” என ஒற்றை கண்சிமிட்டி சொன்னவளின் செய்கையில், அவள் சொன்னதன் அர்த்தம் புரிய,

“கனி என்ன பேச்சு இது, இப்படி பேசினா உன்ன தப்பான பொண்ணுன்னு சொல்லிடுவாங்கடீ!” என ஆதங்கத்தோடு சொன்ன தாயின், பின்னிருந்து அணைத்து, தோளில் தன் தாடையை பதித்தவள்,

“அம்மா!பேசினா வாயாடி !பேசாட்டி ஊமச்சி ! வெளிப்படையா பேசினா வெவகாரமானவ ! ஒளிச்சுமறச்சு பேசினா வில்லங்கமானவ ! இப்படி எந்த மாதிரி இருந்தாலும், எதாவது ஒரு பேர் வரதான் செய்யும்.

சோ! அதல்லாம் நம்ம மனசுக்குள்ள ஏத்திக்காம நம்ம நம்மளா வாழனும். அந்த லைப் தான் நிம்மதியா இருக்கும். அதவிட்டு இத பேசினா தப்பாகிடுமோ?! அத பேசினா தப்பா நினைப்பாங்களோ?! ன்னு யோசிச்சே பேசினா, கடைசில நம்ம எத பேச போனோமின்னு மறந்திடும்” என நீண்ட விளக்கத்தை தந்தவளிடம்…

“என்னமோ போ, நாங்க அந்த காலத்துல ஒரு வார்த்தை பேச ஓராயிரம் தடவ யோசிக்கனும். அப்பா முன்னாடி நின்னு பேசவே முடியாது. எதுவானாலும் அம்மா மூலமா தான் சொல்லணும். இப்ப புள்ளைங்க எல்லாரும் அது மாதிரியா இருக்கீங்க?!” என கேட்க

“உண்மை தான் அம்மா.. ஆனா அதுக்கு காரணம் நீங்க தான், அதாவது உங்கள மாதிரியான பெத்தவங்க தான். அவங்க அனுபவித்த கஷ்டங்கள தன்னோட குழந்தை அனுபவிக்க கூடாது. எதுவானாலும் வெளிப்படையா, எங்ககிட்ட நேரடியா பேசனுமின்னு, உங்க அனுபவம் கத்து கொடுத்த பாடத்தோட விளைவு தான், எங்களோட இந்த சுதந்திரம்” என்ற கனியின் வார்த்தை முடியும் நேரம், கை தட்டும் ஓசை கேட்க, சத்தம் வந்த திசையை பார்த்த கனி , “டாடி..!”  என ஓடி சென்று கட்டிக்கொள்ள,

“பாத்தியா தமிழ்! என்னோட பொண்ண.. எவ்வளவு சரியா சொன்னா பாரு..” என பெருமையாய் சொல்லிட,

“க்கும்! நீங்க தான் மெச்சிக்கணும், உங்க பொண்ண… அவ செஞ்சு வைக்கற வேலைக்கு, போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுன்னு போய் வர்றதே வேலையா இருக்கு உங்களுக்கு.. இதுல பெருமை வேற?!” என தோளில், தனது தாடையை இடித்தபடி சொல்லிய தமிழிடம்,

“நிச்சயமா, எனக்கு பெருமை தான், அவ என்ன மத்த பசங்க மாதிரி எதாவது செஞ்சிட்டா இருக்கா.. அவளோட அவசர தேவையாள சில நேரம் ட்ராபிக் போலீஸ்ல மாட்டிக்கறா.. அதுக்காக பைன் கட்ட கோர்ட்டுக்கோ, போலீஸ் ஸ்டோஷனோ போறேன். அவ செய்யறது சேவைடீ… அத நம்ம தான் புருஞ்சு நடந்துக்கணும்.. நீயே இப்படி இருந்தா எப்படி?!” என கேட்ட பிரகாஷிடம்,

“எனக்கு நல்லா புரியுதுங்க.. ஆனா நாளைக்கி, கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுலையும், இவ செய்யறத பொறுத்துப்பாங்களா..! இவ எதாவது ஏடாகூடமா பேசினாலோ, செஞ்சாலோ பொறுத்து போற மாதிரி மனுஷங்களா இருந்தா பரவாயில்ல.. இல்லாட்டி … நம்ம பொண்ணோட வாழ்க்கை தானே பாதிக்கும்?!” என சராசரி தாயாய் தனது மனக்குறையை சொல்ல,

“அம்மா, டோண்ட் வொரி. நீ நினைக்கற மாதிரியே, நா செய்யற சேட்டைய பொறுத்துட்டு, என்னோட சேவை மனப்பான்மைக்கு, முழுசா ஒத்துழைப்பு கொடுத்து, உங்கள மாதிரியே பார்த்துக்க ஒரு ஆள் இருக்கு…”  என்றதும்..

“யாரடீ சொல்ற…?!” என்ற தமிழிடம்,

“நம்ம சந்திரா அத்தம்மா தான்!” என்றதும்…. “என்னடா, சொல்ற! சந்திராவ நீ பார்த்தியா…?!” என்ற கனியின் தந்தை பிரகாஷின் கேள்விக்கு,

 

“அப்பா, நா அத்தம்மாவ பார்த்தேன், பட் பார்க்கல…” என சொல்ல,

“என்னடீ குழப்பற…”  என்ற தமிழிடம்,

“அதாவது, நா அவங்கள பார்த்தேன், அவங்க யாருன்னு எனக்கு பார்த்ததுமே அடையாளம் தெரிஞ்சிடுச்சு.. பட் அவங்களுக்கு என்னை தெரியாதுங்கறதால பார்க்கல…” என சொன்னவளிடம்,

“நீ எங்க பார்த்த?!  எப்படி பார்த்த?! எதுக்காக அவங்கள பார்க்க போன?!”  என தொடர்ந்து கேள்வியை அடுக்கிய தமிழ், கனி சொன்ன பதிலில் அதிர்ந்து நின்றார் எனில், பிரகாஷ் யோசனையோடு நின்றார்.

தாயின் கேள்விகள் அனைத்தையும் புறம் தள்ளியவள், அவரின் இறுதி கேள்விக்கு மட்டும், “அதுவா, அவங்க பையன கரெக்ட் பண்ண போனப்ப பார்த்தேன்!” என சொன்னால் அதிராமல் என்ன செய்வார் ….

“வாட்… என்னடீ சொல்ற.. ஏங்க, என்னங்க இவ இப்படி சொல்றா?! எல்லாமே நீங்க கொடுக்கற செல்லம் தான்!” என விடாமல் பொறிந்த தமிழை கை காட்டி தடுத்த பிரகாஷ்,

“அம்மாடி, என்ன சொல்ற நீ அவரோட பையனுக்காகவா.. ஏன்..?!” என கேட்க,

“எஸ், அவரோட பையனுக்காக தான் அவங்கள பார்த்து கரெக்ட் பண்ணலாமின்னு போனேன் ப்பா.. அங்க போனா, அது நம்ம சந்திரா அத்தம்மா… அப்ப தான் தெரியும், நா கரெக்ட் பண்ண நினச்சது, நம்ம (மணி)மாறன் மாமா பையன் வெற்றி மாமாவைன்னு…!  சோ என்னோட வேலை ஈசியா முடியுமின்னு, ஜாலியா வந்திட்டேன்…” என்றவள் வெற்றியை சந்தித்த தருணத்தை சொல்ல துவங்கினால் தனது பெற்றோரிடம்…

 

அத்தியாயம் 5

அன்று வார இறுதியாலும், பள்ளி விடுமுறை என்பதாலும், சென்னையின் அந்த பிரபலமான மால், மக்கள் வெள்ளத்தால் மிதந்து கொண்டிருந்தது. எதிரில் வருவோர், போவார் எல்லாரும் ஒருவரை ஒருவர் இடித்தபடி செல்ல வேண்டிய நிலையிலும், தன் சேட்டையை செவ்வனே செய்த படி நின்று  கொண்டிருந்தாள் கனி தனது தோழியோடு….

“ஏ! கனி, இந்த கூட்டத்துல போய், K G F பார்த்து தான் ஆகனுமா?! இன்னொரு நாளைக்கி வரலாம்டீ… பாரு கூட்டத்த..” என சொன்ன தோழியின் வார்த்தையை காதில் வாங்காமல், கருமமே கண்ணாய் கையில் வைத்திருந்த பாப்கார்னை ரசித்து, சாப்பிட்ட படி சுற்றிலும் போவோர், வருவோரை பார்த்தபடி நின்றவளை கொலைவெறியோடு பார்த்தவள்,

“ஏன்டீ! உன்கிட்ட தானே பேசறேன். கண்டுக்காம யாரோ, யார்கூடவோ பேசற மாதிரி நிக்கற..யாராவது பார்த்தா தனியா லூசு, மாதிரி பேசறேன்னு நினைக்கவா..!” என கேட்க,

“இங்க பாரு, நா முடிவு பண்ணி வந்தாச்சு.. சோ! படம் பார்க்காம வரமாட்டேன்..”

“அதுக்கு வேற படமே கிடைக்கலையா?! இதுல அடிதடியா இருக்காமே.. ரத்தத்த பார்த்தாலே எனக்கு ஆகாது.. இதுல முழுக்க சண்டை தானாம். வேணாம்டீ! வேற படத்துக்கு போலாம்..” என்றதை காதில் வாங்காமல்,

“இந்த மாதிரி நல்ல ஃபைட் சீன் இருக்கற மூவில இருக்கற எனர்ஜி, வேற மூவில இருக்காது. வேற படத்துக்கு போய் தூங்கி வழிய சொல்றையா! நோ வே…! இந்த மூவி தான் போறோம்” என உறுதியாய் சொல்ல, கனியின் ரசனை தெரிந்தும், படம் பார்க்கும் ஆசையில், அவளோடு வந்த தன்னையே நொந்து கொண்டு அடுத்த காட்சி ஆரம்பிக்கும் வரை காத்திருக்க துவங்கினாள்.

அவர்கள் காத்திருந்த இடத்திற்கு, வெகு அருகாமையில் திடீரென ஏற்பட்ட சலசலப்பு, சட்டென தீவிரமாக கனி மற்றும் அவள் தோழியின் கவனம் அந்த பகுதிக்கு திரும்பியது.

அங்கு ஒரு நெடியவன், ஒரு சிறுவயது வாலிபனை போட்டு தனியாக அடித்து துவைத்துக்கொண்டிருக்க, அவனை சுற்றி நின்றிருந்த யாரும் விலக்கி விடாமல் வேடிக்கை பார்த்திருப்பதை, ஆர்வமாய் பார்க்க துவங்கிய கனி, முதுகு புறம் தெரிந்த அந்த நெடியவனின் அடியில், தனது தாய் மொழியாம் ஹிந்தியில், ஏதோ சொல்லி காலை பிடித்து கெஞ்சும், அந்த வாலிபனை கிஞ்சித்தும் விடாமல், தொடர்ந்து தனது கரம் கொண்டு தாக்கியவனை, காண காண கோபம் தலைக்கேற….

‘ஆள பார்த்தா அய்யனாரூ மாதிரி இருந்தா, இப்படி  போட்டு அடிப்பானா?!  அடி வாங்கறவன பார்த்தாலே தெரியுது அப்பாவின்னு.. பாரு! குழந்த புள்ள மாதிரி இருக்கான். சுத்தி நின்னு வேடிக்கை மட்டும் நல்லா பார்க்கறாங்க..  தட்டிக்கேட்க ஆள் இல்லன்னு தானே, நா யாருன்னு காட்டறேன்…!’ என மனதில் நினைத்தவள், கோபமாக தனது கரத்தில் இருந்த பாப்கார்னை அங்கிருந்த குப்பையில் அசால்ட்டாக வீசி செல்ல,

அவளின் செயலை அனுமானித்து, அவளிடமிருந்து அதை வாங்கும் முன்பு, அவள் வீசி சென்றிருந்ததை பார்த்தவள், ‘அடிப்பாவி ! இருக்கறதுலையே பெரிய சைஸ் வாங்கு வாங்குன்னு, உசிர எடுத்து வாங்கிட்டு, இப்படி ஒரு வாய் கூட என்னைய சாப்பிட விடாம செஞ்சிட்டு போயிட்டாளே!’ என்ற கோபத்தோடும் பாப்கார்ன் பரிபோன துக்கத்தோடு, ‘வடை போச்சே!’  எபெக்ட்டில், கனி செல்லும் பாதையை பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது அந்த தோழியால்….

அங்கிருந்த கூட்டத்தை விலக்கி, முன்னால் முண்டியடித்துக் கொண்டு சென்ற கனிக்கு, இப்போதும் அவனின் முதுகே தெரிய, “ஏய்! மிஸ்டர்..” என அழைக்க வாய் திறந்த நேரம்,

“எவ்வளவு தைரியமிருந்தா, அந்த குழந்தைய, என் கண்ணு முன்னாடியே தூக்க பார்த்திருப்ப..!” என்ற அவன் வார்த்தையில், தனது வார்த்தையை வெளிவிடாமல், வாயினுள் அடக்கியவள், நடக்கும் நிகழ்வை கவனிக்க துவங்கினாள்.

“சார், சார் ப்ளீஸ்..! தெரியாம செஞ்சிட்டேன். வயித்து பொலப்பு சார்!” என ஹிந்தியில் சொன்னவனின், காது மடல் கிழியும் வண்ணம் மீண்டும் அறைந்திருந்தான் அந்த நெடியவன். அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து நின்றாள் கனி, ‘இவனையா அப்பாவி!’ என நினைத்தோம் என்று…

“ஏன்டா, ஒரு குழந்தை பெத்து, வளத்து அத உயிரா நினச்சிருக்கறவங்க கிட்ட இருந்து தூக்கிட்டு போய், அடுத்தவனுக்கு விக்கறது, குழந்தைன்னும் பார்க்காம அத சீரழிக்கறது, கை கால ஒடச்சு பிச்சை எடுக்க விடுறது, பணம் கிடைக்குமின்னா ப்ளாக்மெயில் பண்ணறதுன்னு செய்யறது, உன்னோட வயித்து பொழப்புக்கா..

பெத்தவங்க, அந்த குழந்தைய காணாம போன நேரத்துல இருந்து, அதுக்கு என்ன ஆச்சோ?!  ஏதாச்சோன்னு?! பரிதவிப்போட சோறு, தண்ணி கண்ணுல காணாம, தவிக்கற, தவிப்ப பார்த்தா தான்டா தெரியும்… நாயே! உன்னையெல்லாம் லாக்கப்ல வச்சி லாடம் கட்டில, நா வெற்றி மாறன் இல்லடா …! இனி ஒரு குழந்தைய பார்க்கற துணிச்சல் கூட உனக்கு வர கூடாது…” என சொன்னவன்,

தனது போனிலிருந்து அழைத்த, சில நிமிடத்திற்குள் அங்கு வந்த காவல் துறையை சார்ந்த சிலர், அந்த நெடியவனுக்கு சல்யூட் வைக்க, அவர்களிடம் அந்த வாலிபனை ஒப்படைத்தவன், “லாக்கப்ல வைச்சு நல்லா கவனிங்க! நா, அப்புறமா வந்து வச்சுக்கறேன், இவன..!” என மீண்டும் ஒரு உதையோடு அவர்களுடன் அனுப்ப,

அந்த நேரம், அங்கு நான்கு வயதே இருக்கும் சிறு குழந்தையோடு, வந்த ஆண் பெண் இருவரும், அவனின் கரத்தை பற்றி, “ரொம்ப தேங்க்ஸ் சார்!  கொஞ்சம் அசால்ட்டா இருந்த நேரத்துல இப்படி ஆகிடுச்சு!” என்றதும், அந்த ஆணின் கன்னத்தில் யோசிக்கும் நேரத்தில் அறைந்தவன்,

“என்னது, அசால்ட்டா இருந்தையா! கொன்னுடுவேன். புள்ளைய பெத்துட்டா போதுமா?! ஒழுங்கா பாத்துக்க வேணாம். நீ பாட்டுக்கு தொலைஞ்சு போச்சுன்னு கம்பிளைன்ட் பண்ணிட்டு போயிடுவ.  ராத்திரி, பகலா அலஞ்சுட்டு இருப்போம், அதுக்குள்ள அந்த குழந்தைக்கு எதாவது ஆகிடுச்சுன்னா, நீ போலீஸ் மெத்தனமா இருந்ததால எங்க பிள்ளைய பரிகொடுத்துட்டோமுன்னு பேப்பர்காரங்களுக்கு, ஒப்பாறி வச்சு பேட்டி கொடுப்ப.. அவனுங்க, டீ ஆர் பீ ஏத்த, அதையே போட்டு போலீஸ்காரங்கள வேவலமா பேசுவாங்க. பெத்த அப்பன் நீயே, அத சரியா பார்த்துக்காம போனா அப்புறம் எப்படி…?!

குழந்தை வீட்ட விட்டு வெளிய போனா, எங்க போகுது என்ன செய்யுதுன்னு பார்க்கனும். நம்ம பழகறவங்க நல்லவங்களாவே இருந்தாலும், சந்தேகத்தோடவே வாழற மாதிரி இப்ப ஆகிடுச்சு. இதுல இவ்வளவு கூட்டத்துக்கு நடுவுல, ஜாலியா புள்ளைய விட்டுட்டு, பராக் பார்த்துட்டு இருந்தா, தூக்கிட்டு போகாம என்ன செய்வான்?!  நல்ல வேளை, அவன் மேல சந்தேகம் இருந்ததால, அவனோட நடவடிக்கைய நோட் பண்ணிட்டு இருந்தேன். இனிமே உங்க குழந்தைய, நீங்க முதல்ல சரியா பார்த்துக்கோங்க. அப்ப தான் குழந்தை கடத்தல குறைக்க முடியும்” என்று முடிக்கும் நேரம்…

“ஊய்…! ஊய்….!” என்ற விசில் சத்தம் பலமாக கேட்க, ‘யாருடா, இது !’  என திரும்பியவன், நிச்சயமாக அது ஒரு பெண்ணாக இருக்கும் என எதிர்பார்க்க வில்லை என்பது, அவனின் பார்வையிலேயே தெரிய, விசிலை ஊதி முடித்தவள், தனது கைகளை பலமாக தட்டியபடி,

“சபாஷ் பாஸ்! செம போங்க… கல்வெட்டுலையே பொறுச்சு வைக்கற மாதிரி சொல்லியிருக்கீங்க!” என சிரிப்போடு சொல்ல, அவளின் பாராட்டான செயல் கூட, அவளின் விளையாட்டான பேச்சு பாவனையால், நக்கலாக சொன்னதாக பட, அவளை முறைத்த படி விலகி சென்றவனின் பின்னாலேயே சென்றவள்,

“பாஸ், உங்க பேர் வெற்றி மாறனா?!” என கேட்க, நின்று, ‘உனக்கெப்படி தெரியும்?!’ என்பது போல பார்த்தவனின் பார்வையில் பொருளை உணர்ந்தவள், “அது.. அந்த கிட்னாப்பர.. அடிக்கும் போது சொன்னீங்களே…! பன்ச் டைலாக் ! அதுல நீங்க அந்த பேர் தான் சொன்னீங்க..!” என்றதும், மீண்டும் நடையை தொடர்ந்தவனிடம்,

“பாஸ், நீங்க போலீஸ்ஸா?!” என கேட்க,

“ஹலோ, யார் நீ ?! இப்ப, எதுக்கு என்ன இன்டர்வியூ பண்ணிட்டு இருக்க?!”

“அதுவா பாஸ், நீங்க அடிக்கும் போது பார்த்தேன், செம பாஸ். உங்க பேர் தெரிஞ்சிடுச்சு, அப்படியே மத்த டீட்டெயில்ஸ் சொன்னா…!”

“சொன்னா….!!!”

“வேற எதுக்கு பாஸ் கேட்பாங்க, உங்கள சைட் அடிக்க தான். பார்க்க நல்லா ஆறு அடியில, ஹீரோ மாதிரி இருக்கீங்க. சைட் அடிக்க ஏத்த பீஸ் தான் நீங்க…

அப்புறம் ஒத்து வந்தா லவ், அப்புறம் கல்யாணமுன்னு, ரூட் புடுச்சு போயிட்டே இருக்க தான்…” என்றவளை பார்த்தவன், ‘இவ என்ன லூசா?!’ என யோசிக்க,

“என்ன! இவ லூசான்னு யோசிக்கற மாதிரி இருக்கு.. நிஜமா பாஸ், எனக்கு இந்த மாதிரி ஃபைட் சீன், பன்ச் டைலாக் எல்லாமே ரொம்ப பிடிக்கும். இப்ப கூட பாருங்களேன்! நா ஃபைட் நிறைய வர்ற மூவிக்கு தான் வந்திருக்கேன்?!” என வாய் மூடாமல் பேசியவளை ,

“போடீ…! அராத்து.., லடாயீ…!” என்றபடி விலகி சென்றவனிடம், நின்ற இடத்திலிருந்தே, “டேய்! உன்ன எப்படி கரெக்ட் பண்ணறதுன்னு சொல்லிட்டு போடா!” என  கத்த,

“நாளைக்கி போலீஸ் ஸ்டேஷன் வா! நல்லா….. சொல்லி தர்றேன்!” என்றபடி, முறைப்போடு சென்றவனை பார்த்த படியே,

‘இவர இதுக்கு முன்னாடியே பார்த்து, பழகின மாதிரியே ஃபீல் ஆகுதே! எப்படி…?! எப்பவாவது மீட் பண்ணியிருக்கமா…?!’ என யோசனையோடு நின்றவளின், இத்தனை நேர ரகளையையும், எட்ட இருந்தே பார்த்த அவளின் தோழிக்கோ, பயத்தில் நாக்கு வரண்டு போனது தான் மிச்சம்.

வெற்றி அங்கிருந்து சென்ற நொடி, அவனின் பெயரையும், போலீஸ் என்பதையும் கொண்டு கூகுள் ஆண்டவரின் துணையோடு, அவனின் மற்ற தகவல்களை சேகரிக்கும், தனது தோழியை பார்க்க பார்க்க வயிற்றுக்குள் புல்டவுசர் ஓடியது போன்று படபடக்க,

“ஏய்! என்னடீ ஏழரைய கூட்டிட்டு இருக்க… அவர பார்த்தாலே டெரரா தெரியுது, நீ இப்படி கேட்டும், கம்முன்னு போனதே பெருசு… இதுல மறுபடியும், அவர போய் பார்க்கற மாதிரியும், நீ சொன்னத செய்யற மாதிரியும் இருக்கு, இப்ப நீ பண்ணற ஆராய்ச்சியெல்லாம்…!”

“மாதிரி இல்லடீ.. உண்மையாவே அவரு தான் எனக்குன்னு மனசுல பிக்ஸ் பண்ணிட்டேன். சோ, அவரோட ஃபுல் டீட்டெயில் கலெக்ட் பண்ணிட்டு, ஸ்கெச் போட்டு தூக்கறேன்…!”

“அடியேய், என்னடீ … அந்த புள்ள புடிக்கறவன் சொல்ற மாதிரி, ஸ்கெச்சு தூக்கறதுன்னு பயம் காட்டற… நா வரல இந்த ஆட்டத்துக்கு .. முதல்ல வா வீட்டுக்கு போகலாம்!” என பீதியில் அலற…

அவளின் பயத்தை கருத்தில் கொள்ளாமல், “அதும் கரெக்ட், எனக்கு என்னோட ரியல் ஹீரோவ பார்த்ததும், அந்த ஸ்கிரீன்ல வர்ற ஹீரோவ பார்க்க தோணல..!” என்ற படியே வெளியேறி, கனவிலேயே வீட்டிற்கு சென்றாள் அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிட்டபடி…

மாலிலிருந்து வெளியே வந்து, தனது வாகனத்தில் ஏறிய வெற்றியின் மனமோ, ‘ஆமா, உனக்கு இன்னைக்கி என்ன ஆச்சு?! அந்த புள்ள பாட்டுக்கு என்ன என்னமோ பேசுது ! இதே வேற யாராச்சும் பேசியிருந்தா, இப்ப ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகற மாதிரி, ‘ரைய்யின்னு…!’  ஒண்ணு விட்டுருப்ப..!

அவள, நாளைக்கி வா ன்னு சொல்லிட்டு வர்ற.. ஒருவேளை, அவ வரணுமுன்னு எதிர்பார்க்கறையோ?!’ என கேட்க, ‘அதானே! ஏன் கம்முன்னு வந்தேன்?! அவள அடிக்காம… அவள எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?!’ என யோசித்தவன், தனது மனம் போகும் போக்கை கண்டு…

‘வெற்றி தேவையில்லாத வேலை பார்க்காத, பீ ஸ்டெடி…!’ என சொல்லி, அவளின் நினைவை ஒதுக்கி, தனது பணியை பார்த்தவனுக்கு, ‘அவளின் நினைவு மறக்க முடியாத ஒன்று’ என்பதும், அவள் சொல்ல போகும் பொய் அவனை தடுமாற வைக்க போவதும் தெரியலையே….!!!

 

 

 

 

அத்தியாயம் 6

“வெற்றி மாமாவ இப்படி தான் மீட் பண்ணினேன் டாடி..!” என்ற மகளின் வார்த்தையில்,

“சுத்தம்! ஆரம்பமே ரணகளமா தான் ஆரம்பிச்சையா?! வாயே அடங்காதாடீ உனக்கு” என்ற தமிழின் வார்த்தையை காதுக்கு வெளியிலேயே, ‘எக்க்ஷிட் போர்ட்’ போட்டு நிறுத்திய கனி, “மாமாவ பார்த்தப்பவே எனக்கு டவுட் தான் டாடி… எங்கையோ…. பார்த்திருக்கோமேன்னு. அப்ப ஸ்ரைக் ஆகவே இல்ல…” என்றதும்,

“அப்ப எப்படி, வெற்றிய மாறனோட பையன்னு கண்டுபிடிச்ச?!” என கேட்ட பிரகாஷ்க்கு,

“அதுவா டாடி, மாமாவ பார்த்துட்டு, அவர பத்தி டீட்டெயில் கலெக்ட் பண்ணாலும், என்கூட வந்துச்சே, அந்த பயந்தாங்கோழி, அதால அவர போயி பார்க்க முடியாம இருந்தேன். நானா, தனியா போலாமுன்னு டிசைட் பண்ணி வச்சிருந்த நேரத்துல, அதுக்கு அவசியமே இல்லாம மாமாவ அத்தம்மாவோட ஒரு ட்ராப்பிக் சிக்னல்ல பார்த்தேன்.

அவங்கள பாலோ பண்ணி வீட்டையும் கண்டுபிடிச்சிட்டேன். அதுக்கு அப்புறம் அத்தம்மாவ தனியா மீட் பண்ண முடியாட்டியும், மாமாவ பாலோ பண்ணதுல சிலபல மேட்டர் தெரியவந்துச்சு” என்றவள், அவன் ஒவ்வொரு முறையும் தனது திருமணத்தை நடத்த அம்மா எடுக்கும் முயற்சிகளை எப்படியெல்லாம் தடுத்து நிறுத்தினான்.. இப்போது சமீபத்தில் ஜோசியரை தலைகீழாக கட்டி வைத்தது வரை, தனது சாதனையாய் எண்ணி கூறும் மகளை, வெட்டவா குத்தவா எனும் நோக்கில் தமிழ் பார்த்தார் எனில், பிரகாஷ் யோசனையோ வேறாக இருந்தது.

தனது மகளின் குணத்தை நன்கு அறிந்தவர் என்பதால் அவளின் எதிர்காலம் குறித்த பயம்  எப்போதுமே பிரகாஷிக்கு இல்லாமல் இல்லை. அவளின் செயலில் விளையாட்டுதனம் இருந்தாலும் நிச்சயம் அவள் தப்பாகவோ, அடுத்தவருக்கு வேதனையை தரக்கூடியதையோ செய்பவள் இல்லை.

அதே நேரம் தனக்கு தேவையானதை பிடிவாதமாக சரியாக நிறைவேற்றிக் கொள்ளவும் தெரிந்தவள் என்பதால், அவளை சிறுவயதிலேயே பார்த்து பழகியதால், சந்திராவின் குணத்திற்கும் தனது மகளுக்கும் நன்றாகவே ஒத்துபோகும். ஆனால் இதில் வெற்றியின் நிலை?? அதுவே அவரின் பெரும் யோசனை..

அவரின் அமைதியான யோசனை பாவத்தை பார்த்த கனி, “என்ன டாடி! யோசனை ரொம்ப பலமா இருக்கு. எப்படி அவன, இவகிட்ட இருந்து எஸ்கேப் ஆக வைக்கலாமின்னா!” என கேட்டவள்,

“அப்படி நினச்சிருந்தா மறந்திடுங்க. இந்த ஜென்மத்துல உங்களுக்கு வாய்ச்ச மருமகன் வெற்றி தான். சின்ன வயசுல என்னை அவ்வளவு பாசமா பார்த்திக்கிட்ட மாமா, இப்ப மட்டும் பார்த்துக்க மாட்டாரா என்ன.. ! அத்தம்மாவ மீட் பண்ணி பேசினா எல்லாமே சரியா இருக்கும்… அவருக்கு வேற பொண்ணு பார்த்து, அத்தம்மா கல்யாணம் செய்யணுமின்னா, அது அவரோட 60 வது கல்யாணமா கூட இருக்காது. அவ்வளவு தீவிரமா இருக்காரு, கல்யாணம் பண்ணாம எஸ்கேப் ஆகுறதுல” என கூறவும்,

தமிழ், “ஏன்டீ கனி, அவனுக்கே கல்யாணத்துல சுத்தமா ஆர்வம் இல்லாம இருக்கும் போது, வழிய போய் கட்டிக்க பார்க்கறையே, இது சரி வருமா?! உன்னோட வாழ்க்கையும் சேர்ந்து வீணா போயிடும். ஒரு வேளை அவருக்கு ஏற்கனவே காதல் கீதல் இருந்து அதனால கூட இப்ப கல்யாணம் வேணாமின்னு இருக்கலாம். எதையும் யோசிச்சு முடிவு செய்யலாம்” என்றதை கேட்டவள், “ஹா.. ஹா… “என சிரித்தபடியே,

“என்னதூ, அந்த விருமாண்டிக்கு லவ்வா. அது சரியான ரிஷிம்மா. அது போய் சைட் அடிச்சு பிகர கரெக்ட் பண்ணியிருக்குமா. சும்மா காமெடி பண்ணாதம்மா” என கூறிட,

“எது, நா பேசறது காமெடியா?! நீ தாண்டி, உன் வாழ்க்கைய காமெடியாக்கிட்டு இருக்க. சிரிச்சிட்டு மூடி வச்சிட்டுவர இது நீ படிக்கறையே நாவல் அது இல்ல, ‘லைப்’ ஒருதடவ தப்பா போனா, அத மாத்திக்க முடியாது” என்றதும்,

பிரகாஷிடம் திரும்பிய கனி சம்மந்தமே இல்லாது, “டாடி, இதுக்கு தான் நா சொன்னேன், செட்ஆஃப் பாக்ஸ்ல வர்ற சேனல் பேக்கேஜ்ல, சில சேனல்ஸ் வர்றத தூக்கிடலாமின்னு கேட்டீங்களா?!” என சொல்லிட, குழப்பமாய் பார்த்தவருக்கு விடையாக,

“இப்ப பாருங்க, அந்த சேன்ல்ஸ்ல வர்ற, ஒரு சீரியல் விடாம பார்த்துட்டு, அதுல வர்றங்க மாதிரியே, பக்கம் பக்கமா அட்வைஸ் கொடுக்கறாங்க!” என்றதும் அவரின் யோசனையை விடுத்து,

“கனிம்மா, அம்மா சொல்லறது சரி தானேடா! அவனுக்கு இஷ்டமில்லாம, இந்த கல்யாணம் சரி வருமா?!” என கூற,

“டாடி! நீங்க சொல்லறது புரியாத அளவு பேபியா நா. அன்னைக்கி, மாமா கண்ணுல இருந்த ஏதோ ஒண்ணு, என்னைய அவருக்கு பிடிக்க வைக்குமின்னு தோணுதுப்பா. அதோட, என்னோட சேவை மனப்பான்மைக்கு மாமா தான் கரெக்ட் சாய்ஸ். வேற யாரா இருந்தாலும், நா இப்படி நேரம் கெட்ட நேரத்துல கூட வெளிய போக, வர இருக்க முடியுமா?! அத்தம்மாவும் எனக்கு ஃபுல் சப்போர்ட்டா இருப்பாங்க. அதோட அவரோட வேலையும், எனக்கு நிச்சயமா பாதுகாப்பானதா இருக்கும்.

என்னோட லைப்பை, எப்பவும் தப்பா போக விடமாட்டேன். ப்ளீஸ், எனக்காக அத்தம்மாகிட்ட பேசுங்க, அப்புறம் மத்தத பார்க்கலாம்” என பேசி சரி செய்தவள், சந்திராவை மீட் செய்ய ஏதுவாக, அவர் எப்போதும் வரும் கோவிலை செலக்ட் செய்தாள்.

அவர்களின் நல்ல நேரம், எப்போதும் தாயை உடன் அழைத்து வந்து, கூடவே இருக்கும் வெற்றி, அன்று கோவில் வாசலுக்கு வரும் போதே, ஏதோ ஒரு அவசர அழைப்பு வர, “அம்மா முக்கியமான வேலை, நீ வா, நா வீட்டுல விட்டுட்டு போறேன்” என்ற வெற்றியிடம்,

“கண்ணா! கோவில் வாசல்வரை வந்துட்டு, உள்ள போகாம இருந்தா சரி வராதுடா. நீ போய் வேலைய பாரு. நா சாமி கும்பிட்டு, ஆட்டோல போயிக்கறேன் வீட்டுக்கு” என சொல்லிட,

“அம்மா, அது ரிஸ்க் ம்மா.. அதனால நானே……” என சொல்லிக் கொண்டிருந்தவனை முடிக்க விடாது,

“டேய்! ஏன்டா இப்படி இம்சை பண்ணற. ஸ்கூல் போற குழந்தைய விட, மோசமா இருக்குடா, நீ நடந்துக்கறது. அதெல்லாம் நா, பத்திரமா வீட்டுக்கு போயிடுவேன். நீ, உன் வேலைய போய் பாரு. ச்சும்மா, நொய்யி நொய்யின்னு” என பொறிந்து தள்ள,

விட்டு செல்ல மனம் இல்லா விட்டாலும், செல்ல வேண்டிய அவசியம் உணர்ந்து, ஆயிரம் பத்திரம் சொல்லி, வீட்டுக்கு சென்றதும் மறக்காமல் போன் செய்ய வேண்டும், என்ற கட்டளையோடு விடை பெற்ற வெற்றியை பார்த்த போது தான் நிம்மதியானது கனிமொழிக்கு…..

கோவில் பிரகாரத்தில் சந்திராவிற்காக காத்திருந்தவர்கள், அவர் தரிசனம் முடித்து வந்ததும், அவரிடம் செல்ல, பிரகாஷையும், தமிழையும் பார்த்ததும் நீண்ட வருடங்களுக்கு பிறகு பார்த்த சந்தோஷம் முகத்தில் தெரிய,

ஆதரவாய் தமிழின் கரம் பற்றியவர், அண்ணா, அண்ணி எப்படி இருக்கீங்க?! பார்த்தே ரொம்ப வருஷம் ஆகிடுச்சு!” என்று சொல்லும் போதே, கண்ணீல் நீர் நிறைய குரல் தழுதழுக்க பேசியவரின் பேச்சில், நீண்ட வருடம் கழித்து, தன் குடும்பத்தின் மீதும், தனது கணவர் மீதும் அன்பு கொண்டவரை பார்த்ததன் தாக்கம் தெரிய…

“சந்திரா, நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்க?! மாறன் போனதும், நீங்க உங்க பொறந்த ஊர் பக்கம் போனதால, சுத்தமா போக்குவரத்தே இல்லாம போச்சு. அதோட நாங்களும், அந்த ஏரியவுல இருந்து தொழிலுக்காக மாறி வந்துட்டோம். இத்தன வருஷம் கழிச்சு நம்ம சந்திக்கணுமின்னு இருந்திருக்கு” என்றவர், அவர்களின் கடந்தகாலத்தை பற்றி சிறிது நேரம் பேசியவர்களிடம், நினைவு வந்தவராக சந்திரா,

“அண்ணா, எங்க என்னோட மருமக?! சின்ன குழந்தையில அத்தம்மா, அத்தம்மான்னு முந்தனைய சுத்திட்டே பூனைக்குட்டி மாதிரி திரிவா.. மாமாவே என் பொண்டாட்டி, முந்தனையில எனக்கு பதிலா, உன்ன முடுச்சு வச்சிருக்காளா?! ன்னு  கேலி செய்யற மாதிரி செஞ்சிட்டு இருப்பா, துறுதுறுன்னு..  எப்பவும் ” என பழைய கனியை மனதில் இருத்தி கேட்க,

“அண்ணி, இப்ப அவ செய்யற சேட்டைய பார்த்தா, நீங்களே நாலு போடுவீங்க. அவ்வளவு குறும்பு. வாய தொறந்தா முடுறதே இல்ல!” என எப்போதும் போல தமிழ் கனியை பற்றிய குற்றப்பத்திரிகை வாசிக்க, அதுவரை அவர்களின் பாச பிணைப்பை தூரம் இருந்தே பார்த்து ரசித்த படி இருந்தவள், அவர் தன்னை பற்றி கேட்கவும் அவரிடம் வர, சரியாக தமிழின் பேச்சை கேட்டவள்,

“பாருங்க அத்தம்மா, நீங்க இல்லாம இந்த தமிழ் என்ன பத்தி இப்படியெல்லாம் சொல்லி, என் இமேஜ்ஜ டோமேஜ் பண்ணறதே வேலைய வச்சிருக்கு! எனக்கு சப்போர்ட் பண்ண, டாடி வந்தாலும் அவரையும் திட்டறாங்க” என சலுகையாக சொல்லி தோள் சாய்ந்த, கனியை வாஞ்சையோடு கன்னம் தடவியவர்,

“என் ராசாத்தி, நீ இருடா உன்னோட அத்தம்மா தான் வந்துட்டேனே, இனி யாராச்சும், என் மருமகள எதாவது சொல்லி பாருங்க, அப்புறம் என் பையன் கிட்ட சொல்லி தூக்கி உள்ள வச்சு முட்டிக்கு முட்டி தட்ட சொல்றேன். இப்ப ஓகே வாடா..”  என கேட்க,

கெத்தாய், தனது சுடிதாரின் காலரை தூக்கி விட்ட கனி, “எப்படி இனி வாய திறந்தா, நீ காலி தமிழூ…!” என தாயை மிரட்ட,

“அடிங்க பொட்ட கழுத, அடங்க மாட்டாம திரியறது, இதுல சப்போர்ட்டுக்கு ஆள் வரவும், பேர் சொல்லி வம்பிழுக்கற அளவுக்கு ஆகிட்ட…” என கையை ஓங்கிட,

“அண்ணி, எதுக்கு குழந்தைய அடிக்க வர்றீங்க, அவ ஏதோ விளையாட்டுக்கு சொல்லறா..! அத போய் பெருசா எடுத்துட்டு, பேர் சொன்னா என்ன தப்பு? ‘பேர் சொல்லும் பிள்ளை…’  கேள்விபட்டதில்ல” எனவும்,

“அப்படி சொல்லுங்க அத்தம்மா” என அவருக்கு, Hi-fi அடித்தவளை அணைத்துக்கொண்ட சந்திரா, “வாங்கண்ணா, அப்படி உக்காந்து பேசலாம்” என கூறி, ஒரிடத்தில் அமர,

‘தான் சொல்ல வந்ததை, எப்படி ஆரம்பிக்க?’ என யோசித்த பிரகாஷிக்கு, அந்த கஷ்டத்தை தராது, “அண்ணா, கனிய வெற்றிக்கு கல்யாணம் பண்ணி தர்றீங்களா?! உங்க பொண்ண கண்கலங்காம, என்னோட மகளா வச்சு பார்த்துக்கறேன்” என கேட்டுவிட,

“சந்திரா நாங்களும் அது விசயமா தான் பேச வந்தோம், அதுல ஒரு சிக்கல்!” என இழுக்கவும், பதட்டத்தோடு “என்ன அண்ணா, என்ன விசயம் ஒரு வேளை கனிக்கு ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்திட்டீங்களா?!” என கேட்க,

“ச்ச! ச்ச!,  அதெல்லாம் இல்லம்மா. அது வந்து .. அத எப்படி சொல்றதுன்னு தான்… இல்ல, எப்படி கேட்கறதுன்னு தான் யோசனை…” என தயக்கமான பிரகாஷின் பேச்சில்,

“என்ன…. கேட்கணுமா!  என்ன கேட்கணும்?!  தயங்காம கேளுங்க” என சொன்னதும்,

“வெற்றிக்கு கல்யாணம் செய்யறதுல எதனால இஷ்டம் இல்ல” என ஒளிவு மறைவின்றி பிரகாஷின் கேள்விக்கு,

“என்னது..  கல்யாணத்துல இஷ்டமில்லையா?! என்ன அண்ணா விளையாடுறீங்களா, அவனே என்கிட்ட கல்யாணம் செய்ய, ஓகே பொண்ணு பாருங்கன்னு, சொல்லி ஒரு வருஷம் ஆச்சு. சரியான இடம் அமையல. தரகர் வந்து, முதல் நாள் பொண்ணப்பத்தி நல்ல விதமா பேசிட்டு போவாரூ. அடுத்த நாள் போன் பண்ணினா, அந்த பொண்ணு வேற யாரையோ கல்யாணம் பண்ணிடுச்சு, இல்ல வேற பக்கம் முடிவாகிடுச்சுன்னு சொல்வாரூ. சிலர் வந்துட்டு போறதோட சரி, வரன் கொண்டுவர்றேன்னு… அடுத்து ஆளையே பார்க்க முடியல.. என்னால தான் அவனோட கல்யாணம் தள்ளி போயிட்டே இருக்கு. நாளைக்கே பொண்ண காட்டி கட்டு தாலின்னு சொன்னாலும் கட்டுவான் என் புள்ள” என பெருமையாய்  சொல்லிய சந்திராவிடம், கனி..

“அத்தம்மா, மாமா உங்கள நல்லா ஏமாத்திட்டு இருக்காங்க..!” என்றவள்,  அவனின் நடவடிக்கைகளையும், அவனின் எச்சரிக்கையையும் சொல்ல,

“அட ப்ராடு பையலே! அதான் விசயமா?! என்னடா, எல்லாமே சரியா இருந்தும், எதுவுமே நடக்க மாட்டிங்குதேன்னு நினச்சேன். அவனுக்கு, நா அம்மான்னு ப்ரூப் பண்ணல, நா மணிமாறன் பொண்டாட்டி சந்திரா இல்ல… இப்பவே அவன கேட்டு, உண்டு இல்லன்னு ஆக்கிடுறேன்” என வீம்பாக தனது போனை எடுத்தவரை தடுத்த கனி..

“காரியம் கெட்டுச்சு போங்க. அத்தம்மா, மாமா ரொம்பவும் தெளிவா இருக்காரூ. அவரோட கல்யாணத்த தடுக்கறதுல. இப்ப, அவரு செஞ்ச, அதே ஸ்டைல்ல தான் அவருக்கு ஆப்பு வைக்கனும். உங்க பையனோட வீக் பாயிண்ட் எதுவோ, அத வச்சு அவர வழிக்கு கொண்டு வந்திடலாம்!” என்ற கனியின் வார்த்தையும், சந்திராவின் யோசனை படிந்த முகத்தையும், பார்ப்பதை தவிர வேற வழியே இல்லாது போனது பிரகாஷ்க்கும், தமிழுக்கும்….

நீண்ட யோசனைக்கு பின், “அத்தம்மா, நீங்க வேணுமின்னா, நெஞ்சுவலி வந்த மாதிரி ஆக்ட் பண்ணி, அவர என் கழுத்துல ஹாஸ்பிடல்ல வச்சு, ‘தாலி கட்டு, இது தான் உங்க கடைசி ஆசைன்னு’ சொன்னா….!” என கேட்க,

“அவன் நிச்சயம் அத கேட்க மாட்டான்டா. அவன் நேரா போய், டாக்டர்கிட்ட பேசிட்டு, புதுசா நாலு டாக்டர வர வச்சு, என்னைய புல்லா செக் பண்ண வச்சிடுவான். எத்தன டாக்டர கரெக்ட், பண்ணி பொய் சொல்ல வைக்க முடியும்?!” என நிதர்சனத்தை சொல்லிட…

‘அப்ப என்ன செய்யலாம்?!’ என யோசித்தவளுக்கு, முதல் வாரம் .. தான்,  ரத்தம் கொடுக்க போன போது பார்த்த கனிஷ்காவின் நியாபகம் எழ, “அத்தம்மா!  ஒரு சூப்பர் ஐடியா…  உங்களுக்கு எதாவதுன்னா தானே…  பேசாம, நா சீக்கிரமா மண்டைய போட்டுடுவேன். அவளுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க அவங்க வீட்டில ஆசை படறாங்கன்னு சொல்லுங்க” எனவும்,

“கனி, என்ன பேச்சு இது, கோவில்ல இருந்துட்டு!” என ஓரே நேரத்தில் மற்ற மூவரும் சொல்ல, ‘இவங்க பாசத்துல வழுக்கிடாம காப்பாத்து ஆண்டவா!’ என மனதில் வேண்டுதல் வைத்தவள்,


“ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்யலாமின்னு பெரியவங்களே சொல்லியிருக்காங்க. ஓரே ஒரு பொய் அதனால என்ன…”என்ற கனியிடம்,

“அப்படி இல்லடா, வாழ வேண்டிய பொண்ணு நீ. உனக்கு போய்… வேணாம் டா .. வேற வழிய யோசிக்கலாம்!” என சந்திரா உறுதியாக மறுத்திட,

“அத்தம்மா, வெற்றி மாமா தான் எனக்குன்னு, நா.. முடிவு செஞ்சு நாளாச்சு!” என்றவள், அவனை சந்தித்ததை சொல்லி,

“டாடிய, உங்ககிட்ட அத பேச தான் கூட்டிட்டு வந்தேன். என்ன ஆனாலும் மாமாவ விட முடியாது என்னால. சோ, நா டிசைட் பண்ணியாச்சு. இனி அதை சென்டிமென்ட்டா பேசி, சக்சஸ் பண்ண வேண்டியது உங்க பொறுப்பு” என தீவிரமாய் சொல்லிய கனியிடம்,

“சரிடா, நீ சொல்லற மாதிரி பேசினாலும், அவன் கேடி! கிரிமினல் கூட பழகி, அதே மாதிரியே இருக்கானே.. அவன நம்ப வைக்க முடியுமா?! உன்னோட ஹெல்த் ரிப்போர்ட் கேட்டா, என்ன செய்ய?!” என சந்தேகத்தை கேட்ட சந்திராவிடம்,

“அதுக்கு, நா ஏற்பாடு செய்யறேன். அவருக்கு நா, யாருன்னு தெரிஞ்சு எனக்கு, இப்படி ஒரு பிரச்சனைன்னு சொன்னா!  சின்ன வயசுல, என்மேல வச்ச பாசம், இன்னும் இருந்தா…  கண்டிப்பா, மாமா மேல அதிகமா தோண்டி துருவாம, தாலி கட்டுவாரூ! அவரோட பொண்டாட்டியா ஆகிட்டா போதும், அடுத்தத அப்புறம் பார்த்துக்கலாம்” என்றவள், ‘சந்திராவிடமும், தனது தாய், தந்தையிடமும் எப்படி வெற்றி வந்தால் பேச வேண்டும்’ என்பதற்கு பல முறை பாடம் சொல்லி கொடுக்க,

விருப்பமே இல்லாத போதும் கனியின் பிடிவாதத்திற்கும், வெற்றியின் வாழ்க்கைக்காகவும், மூவரும் ஒத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லாமல் போக, அவர்கள் திட்டப்படி அனைத்தையும் நடத்தியும் முடித்து விட்டார்கள்.

இதில் கனி எதிர்பார்க்காத விசயம், தன்னை யார்? என தெரிந்து, தனது உடல்நிலை பற்றி தெரிந்ததும், வெற்றி கொண்ட வேதனை, அதை தொடர்ந்து, எவ்வளவு விரைவாக திருமணத்தை நடத்த முடியுமோ, அவ்வளவு விரைவாக என்றாலும், எல்லா விதத்திலும் நிறைவான ஒரு திருமணத்தை நடத்தியதில் இருந்த பாசமும், அக்கரையும் தான்.

அதுவே அவளை குற்ற குறுகுறுப்பில் ஆழ்த்தினாலும், இயல்பான துடுக்கு தனத்தால், அதை ஓரம்கட்டி அதற்கு ஈடாக, நேசத்தோடு தனது வாழ்க்கையை துவங்க நினைத்த போது, அவனுக்கு தெரிந்து போன உண்மையால் இப்போது எப்படி இதை சரி செய்வது என்பதே….

பழைய நினைவுகள் கொடுத்த தாக்கத்தால், நீண்ட நேரம் கழித்து உறங்கியிருந்தாலும், எப்போது சரியான நேரத்திற்கு எழுந்து, தனது அன்றாட பணியை செய்து பழக்கம் கொண்ட வெற்றி, முதலில் கண் விழிக்க,

தன்னை பார்த்தவாரே உறங்கியது போல, தன் புறம் முகம் வைத்து, சிறு பிள்ளை போல, வாயை லேசாக பிளந்த படி, தூங்கும் கனியை பார்த்ததும், ஒரு நிமிடம், தனது கட்டுப்பாட்டை இழந்து, அவளின் உதடருகே கரத்தை கொண்டு சென்றவன், ‘ச்சே! அவ செஞ்ச வேலைக்கு ..’ என நினைத்தவன் திரும்பி, குடிப்பதற்காக ஜக்கில் வைத்திருந்த நீரை எடுத்து, அவளின் முகத்தில் ஊற்ற…

“மம்மீ ……!!!! வீட்டுக்குள்ள மழை பெய்யுதூ…!!!” என கத்தியபடி விழித்தவள், சிறிது நேரம் சென்றே, இருக்கும் சூழல் புரிய, நிமிர்ந்து வெற்றியை பார்க்க, நமுட்டு சிரிப்போடு அவளை பார்த்தவன், “ஹேவ் ஏ வொஸ்ட் டே ஃபார் யூ…!” என்ற படி பாத்ரூமுக்குள் புகுந்தான்.

 

 

அத்தியாயம் 7

வெற்றி, பாத்ரூம் சென்று, தனது வேலையை முடித்து வந்த போதும், ‘என்ன  நடந்தது?!’ என்றே புரிந்து கொள்ளாத குழந்தை போல, விழித்தபடி இருந்தவளை பார்த்தவனுக்கு சிரிப்பு பீரிட்டு வந்தாலும், அவளின் தலையிலிருந்து வழிந்த நீரும், அவள் அமர்ந்திருந்த விதமும் பரிதாபத்தையும் கொடுக்க, அவளை நோக்கி சென்றபடியே,

‘டேய் வெற்றி! இப்படி பயப்படுத்தியிருக்க கூடாதுடா.. போடா.. பாரு எப்படி உக்காந்திருக்கான்னு… ? ச்ச..!!  எதையும் யோசிச்சு செய்ய மாட்டையா..?!’ என தன்னையே திட்டியபடி, அவளிடம்  ‘சாரி …!’ சொல்ல நினைத்து,  “கனி…!”  என்று அழைத்த, அடுத்த நொடி அவன் தலையிலிருந்து வழிந்தது, இரவு கனி அவர்களுக்காய் கொண்டு வந்த பால்…..  “குட் மார்னிங் மாமா, ஹேவ் ஏ குட் டே … !!!” என்ற வாழ்த்தோடு…

 

இரவு கொண்டு வந்த பால், புளித்து போய் இருந்ததால் வந்த வாடை வயிற்றை பிரட்ட, கனியின் அதிரடியால் கண்ணிலும் லேசாக பால் புகுந்து கொள்ள, கண்ணை தேய்த்தபடி, தன் தலையை உதறி முடித்து, அவளை கோபப்பார்வை பார்க்க நினைக்க, அதுவரை அவனிடம் சிக்கும் வகையில் நிற்க கனி முட்டாளா…?! எப்போதோ பறந்துவிட்டிருந்தாள் அவ்வறையை விட்டு….

“அடியேய் அராத்து ! உன்ன…. இருடீ , வந்து வச்சிக்கறேன். பிராடு, பிராடு பண்ணறது பூராவும் பிராடு வேலை.. உண்மையா, ஒரு தடவையாவது இருக்காளா..?! பார்க்கற நேரமெல்லாம் நம்மள வச்சு செய்யுது.. இரு எங்க போவ..? திரும்ப இதே ரூமுக்கு தானே வருவ…” என வாய் விட்டே சொல்லியவன், திரும்ப பாத்ரூமில் நுழைந்து, அந்த பால் வாடை போக தேய்த்து குளித்து, கண்ணையும் நீரால் சுத்தம் செய்து வருவதற்குள், போதும் போதுமென்று ஆகியிருந்தது.

அதே கடுப்போடு ஜாக்கிங் செல்ல, தனது ட்ரக் பேண்ட், டீ சர்ட்டோடு வந்தவன், கனியை தேட, அவள் இருப்பதற்கான அரவம் எதுவும் இல்லாது இருக்க, “எங்க போயிருப்பா..?! எப்படியும் இங்க தானே இருக்கணும்! வந்து வச்சுக்கறேன் அவள..!” என முனுமுனுத்தபடியே வெளியே சென்றான். அவன் வெளியே செல்லும் வரையிலும், ஒரு அறையில் பதுங்கி நோட்டம் விட்டவள், “அப்பாடா!” என ஒரு பெருமூச்சை விட்டவாரே…

“கனி! நீ பண்ணது கொஞ்சம் ஓவரா தான் போச்சோ…!!! பயபுள்ள செம காண்டுல போகுதே…?! எதாவது விவகாரமா செய்யுமோ..?!”  என தனக்கு தானே பேசியவள், “க்கும்…..!! மாமா தானே .. விவரமாவே செய்ய தெரியல.. இதுல விவகாரமாவா செஞ்சிட போகுது.. விடு, விடு கனி, எவ்வளவோ பார்த்திட்டோம், இத பார்க்க மாட்டோமா!” என எப்போதும் போல அசால்ட்டாக, சொல்லியபடி மீண்டும் தங்கள் அறைக்கு சென்றவள்,

தண்ணிர் மற்றும் பால் அபிஷேகத்தால் கலவரமாகியிருந்த மெத்தை விரிப்பையும், அறையையும் ஒழுங்கு செய்து குளித்து அவசரமாக கீழே வந்து சந்திரா அறையில் தஞ்சம் புகுந்தாள், வெற்றியிடம் சிக்காது தப்புவதற்காக …..

கனி, சந்திரா அறைக்குள் செல்லவும், அவரும் தூக்கி எழுந்து, ப்ரஸ்ஸாகி வரவும் சரியாக இருக்க, “குட் மார்னிங்! அத்தம்மா” என்ற படி வந்தவளை, ஆசையாய் அணைத்து, சிரிப்போடு பார்த்தவர்,

இரவு கடந்த கால நிகழ்வை நினைத்தபடி அதிக நேரம் விழித்திருந்ததாலும், அதிகாலை வெற்றி செயலால் விளைந்த அதிகப்படியான வேலையால் வந்த களைப்பாலும், அதே நேரம் தான் செய்த செயலால் எழுந்த சிரிப்போடும் மலர்ந்திருந்த மருமகளின் முகத்தை பார்த்தவருக்கு நிம்மதியாக இருக்க, அந்த நிம்மதி தந்த சந்தோஷத்தோடு,

“குட் மார்னிங் கனிம்மா…! நீ ஏன்டா இப்பவே எழுந்த?! மெதுவா எழுந்து வந்திருக்கலாமே…!” என கேட்க,

“நா, இன்னும் கொஞ்ச நேரம் அங்க இருந்தாலும், உங்க புள்ள அவ்வளவு தான்..! என்ன ஒரு வழி பண்ணியிருப்பார்!” என அவள் சொன்னதன் அர்த்தம், அனர்த்தமாய் ஆகும் , என்பதை உணராது சொன்னவள், சந்திராவின் முகத்தில் தெரிந்த பாவம் விளங்காது ,

 

“நீங்க ஏன் அத்தம்மா இவ்வளவு சீக்கிரம் எழுந்தீங்க?!” என தனது அடுத்த கேள்வியால் அவரை சங்கடத்திலிருந்து மீட்டாள்.

“என்னடா செய்யறது!  பெத்து வச்சிருக்கனே ஒரு தடியன்… இடியே விழுந்தாலும், ஓடறத நிறுத்தாம செய்யறது மட்டுமில்லாம, வந்ததும் கஞ்சி கொடுக்கலைன்னா, கத்தியே உசுற வாங்குவான்! அதனால எப்பவும் இந்த நேரத்துக்கு எழுந்து பழக்கம் தான்….” என புன்னகையோடு  சொல்ல,

“ஓ..! மாமா உங்கள இவ்வளவு டார்ச்சர் செய்யறாரா..! நா வந்துட்டேனே, இனி நீங்க ரெஸ்ட் எடுங்க அத்தம்மா, நா பார்த்துக்கறேன் அவர…” என சொல்ல, பெருமையாய் சந்திரா பார்த்தார் எனில்,

கனியின் மனசாட்சியோ, “நீ மட்டும் அவருக்கு கஞ்சி வச்சு கொடுத்தா, அது தான் அவனுக்கு கடைசி பாலே..!!!  தாயே உன் சமையல் கலைய, தயவு செஞ்சு வெற்றி கிட்ட காட்டிடாத. இப்ப ஓடிட்டு வீட்டுக்கு வர்றவன், அப்படியே ஓடிட போறான்…!” என வார…

 

 

“ஏய்! நீ, எனக்கு மனசாட்சி. சோ, எனக்கு சப்போர்ட்டா பேசு…! இல்ல.. உனக்கு தான், அடுத்த கஞ்சி… ச்சே… பால்..! ஜாக்கிரதை..!!!”  என மிரட்ட.. “மனசாட்சிக்கே சங்கு ஊத, உன்னால தான் முடியும்!” என்றபடி அதுவே சென்று மூலையில் பதுங்கியது, அவளுக்கு பயந்து….

கனியின் திறமையை உணர்ந்தது போல சந்திரா, “ராஜாத்தி! நீ சொன்னதே போதும்டா… என்னால முடிஞ்ச வரைக்கும் நானே செய்யறேன். எனக்கு முடியாத போது அப்போ நீ செய்.. சரியா?!” என அனைவரின் உயிரையும் அவரே அறியாது காத்தவர்,

கனியை  பூஜை அறைக்கு அழைத்து வந்து, விளக்கேற்ற சொல்ல,  விளக்கேற்றியதும், நிம்மதியாய் பார்த்திருந்தவரின் காலில் விழுந்து வணங்கியவளை பார்க்க பார்க்க நிறைவாக இருந்தது சந்திராவிற்கு…

அதே நிறைவோடு பால் காய்ச்சி, காபி போட்டபடியே, “வெற்றி எழுந்திட்டானா கனிம்மா?!” என ‘ஒருவேளை இன்று தனது நடைமுறையை மாற்றியிருப்பானோ!’ என்ற நட்பாசையில் கேட்க,

 

“உங்க பையன் எப்பவோ எழுந்து, ரோட்டுல மேடு, பள்ளம் சரியா இருக்கான்னு செக் பண்ண போயிட்டாரு, அத்தம்மா!” என அவன் ஜாக்கிங் செய்வதை கிண்டலாக சொல்லிட,

 

 

அவள் சொல்லிய விதத்தில் வந்த சிரிப்போடு, காபியை கொடுக்க, அங்கிருந்த சமையல் மேடையின் ஒரு இடத்தில் மேலேறி அமர்ந்து கொண்டு காபியை ருசித்தவள், “அத்தம்மா, காபி ஏ ஒன்..! பேஸ் … பேஸ்…!” என கூற, “வாலு!!! குடி..”  என சொல்லிய படியே, வெற்றிக்காக சத்துமாவு கஞ்சியை கலந்தவர், காலை உணவிற்கான ஏற்பாடுகளையும் சேர்த்து செய்ய,

அவர் செய்யும் வேலையை, அதே மேடையில் அமர்ந்தபடியே, காலை ஆட்டி பார்த்துக் கொண்டிருக்க, அந்நேரத்தில் தயாராகி வந்த தமிழும் மகளின் முகத்தில் இருந்த சந்தோஷத்தால் நிம்மதி எழுந்தாலும், அவள் புகுந்த வீட்டில் இவ்வாறு இருந்தால்,  நாளை ஒரு வார்த்தை வரக்கூடாதே ! என நினைத்து, “ஏய், என்னடீ இப்படி உக்காந்திருக்க.. ?! காலைல உங்க அத்தம்மாவ வேலை செய்ய வச்சிட்டு, அங்கெதுக்கு குரங்கு மாதிரி உக்காந்திருக்க?!” என கேட்டுவிட்டு,

“அண்ணி…. எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம் தான். அதான் இப்படி இருக்கா..! மாமியாரா , அவள வேலை வாங்கறத விட்டுட்டு… இப்படி உக்கார வச்சிட்டு.. இறங்குடீ கீழ!” என திட்ட,

“மம்மி, என்ன பார்த்தா மங்கி மாதிரியா இருக்கு..?! பாருங்க, அத்தம்மா, இப்படி தான் என்ன டேமேஜ் பண்ணிட்டே இருக்காங்க..!” என சினுங்கியபடி, சந்திராவை துணைக்கு அழைத்தவளை பார்த்து, “சில நேரத்துல உண்மை கசக்க தான் செய்யும்டா கனிம்மா!” என சிரிக்க.. “யூ டூ அத்தம்மா!” என முகத்தை திருப்பியவளின் செல்லக்கோபத்தை போக்கிட,

 

“உங்க அம்மா, இன்னைக்கி தானே சொல்ல முடியும்.. நாளைல இருந்து அவ அவங்க வீட்டுக்கு போயிடுவா!  அப்புறம் புல்லா நம்ம ராஜ்யம் தான். நீ இங்க என்ன எங்க வேணுமின்னாலும் உக்காரு….. எத வேணுமின்னாலும், உன் இஷ்டப்படி செய்.. யார் கேட்பா…?!” என கூற….

சந்திரா எதார்த்தமாக கூறினாலும், ‘தன் மகளிடம் இதுவரை அதட்டியது போல  உரிமையாய்  இனி செய்ய முடியாதே என்பதும், நாளை முதல், தன் வீட்டில் அவள் இருக்கமாட்டாளே ! என்ற எண்ணமும் வர, தங்களின் ஒரே மகளை, அவளின் சேட்டையை விடுத்து எப்படி இனி இருக்க போகிறோமோ?!’ என தோன்ற கண்களில் நீர் நிறைந்தது… தமிழுக்கு…

சந்திரா தான் சொன்னதற்கு பதிலாக தமிழும் எதாவது சொல்வார் என எதிர்பார்க்க, பதிலெதுவும் வராது போக, அவரை பார்த்த பிறகே புரிந்தது, தான் சொன்னது அவர்களை எப்படி பாதித்திருக்கும் என்பது…. ! அதே போல தானே கனிக்கும்..  என அவளையும் பார்க்க,

கனியும், சந்திராவின் வார்த்தையில், இனி தன் தாய் தன்னுடன் இருக்க மாட்டார்கள் என்பது உறைக்க, தனது மனதில் லேசாக ஏறிய பாரத்தை யாருக்கும் காட்டிட கூடாது என்பது போல, விழியில் வழிய வந்த நீரை நிறுத்திட, கண்களை நாலா புறமும் சுழற்றிய படி அமர்ந்திருக்க, சந்திராவிற்கு மிகவும் வருத்தமாகி போனது.

“இப்ப என்ன சொல்லிட்டேன்னு ரெண்டு பேரும் சோக கீதம் வாசிக்கறீங்க! நா, சும்மா எதார்த்தமா தான் சொன்னேன். ஏன், தமிழ் இது உன் அண்ணன் வீடு தானே.?! அப்ப நா சொன்னதும், ‘என் அண்ணா வீட்டுக்கு நா, எப்ப வேணுமின்னாலும் வருவேன், அத கேட்க நீங்க யாருன்னு கேட்டுட்டு?!’, அதே மாதிரி, கட்டி கொடுத்தாலும் என் மகள அதட்ட, எனக்கு இல்லாத உரிமையான்னு சொல்லாம…!!!

அம்மாடி கனி! நீயும் என்னடா இப்படி…!! உன்கிட்ட நா இத எதிர்பார்க்கவே இல்ல. இந்நேரம் என்கிட்ட மல்லுக்கு நிப்பேன்னு பார்த்தா… ஹுகூம்…!!!”  என சிரிப்போடு சொல்லியவரை, தமிழும் கனியும்  இருபுறமும் அணைத்தபடி, கண்ணில் நீரோடும், இதழில் சந்தோஷ புன்னகையோடும் நின்ற காட்சியை கண்ட பிரகாஷின் மனம் நிறைவோடும், நிம்மதியோடும் இருந்தது.

‘தன் மகளை எப்போதும் நல்லமுறையில் சந்திரா பார்த்துக்கொள்வார்’ என்பதோடு ‘தங்களுக்கும் அவளின் உறவு என்றும் மாறாது, அதே உரிமையுடன் நடக்கலாம்!’ என்பதை விட பெரிய நிம்மதி பெண்ணை பெற்றவருக்கு கிடையாதே…

பிரகாஷ் ஹாலில் அமர்ந்து பேப்பரை கையிலெடுக்கவும், வெற்றி உள்ளே வரவும் சரியாக இருக்க, “வாங்க மாப்பிள, அம்மாடி கனி, மாப்பிள வந்துட்டாரு பாரு!!! குடிக்க காபி கொண்டுவாடா” என சொல்ல,

‘பிராடு பொண்ண பெத்து வச்சிட்டு,  அக்கரைய பாரு, மொத்த குடும்பமுமே பிராடா தான் இருக்கும்!’ என மனதில் நினைத்தவன், வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றவாறே, அவருக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர, அவனை அருகில் பார்த்த பிரகாஷ், “என்ன மாப்பிள, கண்ணொல்லாம் சிவந்து கிடக்கு?!” என அக்கரையாய் கேட்க,

அவருக்கு காபியுடன் வந்த தமிழை,  வெற்றிக்கு சத்துமாவு கஞ்சியோடு வந்த சந்திரா, ‘இத போய் கேட்கறாரே!’ எனும் விதமாய் பார்க்க, தமிழோ, “இந்த மனுஷனுக்கு கூரே இல்ல.. என்ன அண்ணி செய்ய!!”  என சந்திராவிடம் சொன்னதோடு அவரை பார்த்து முறைக்க,

 

 

வெற்றியோ, அவரின் கேள்விக்கு பதில் சொல்லாது, கனியை பார்வையாலேயே, ‘சொல்லிடவா !’ என கேட்க, அவள், ‘நானும் சொல்லுவேன்!’ என திரும்ப பாவனையாய் சொல்லிட, “போடீ! அராத்து” என வாயசைத்துவிட்டு, பிரகாஷிடம், “ஜாக்கிங் போகும் போது, டஸ்ட் விழுந்திடுச்சு மாமா வேற ஒண்ணுமில்ல…” என கூற,

 

சிறியவர்களின் ஜாடையில் பெண்கள் ஒருவிதமாய் பார்த்து சிரிக்க, பிரகாஷோ…

“அப்ப போய், கண்ண நல்லா தண்ணி விட்டு கழுவுங்க மாப்பிள! எவ்வளவு சிவந்து போச்சு..! கனிம்மா நீயும் போடா…! மாப்பிள்ளைக்கு என்ன வேணுமின்னு பார்த்து செய்!” என சொல்ல, ‘மாட்டுனியா!! காலைல தப்பிச்சிட்ட.. இப்ப வாடீ உனக்கு இருக்கு!’ என்ற பார்வையோடு வெற்றி உற்சாகமாய் மாடியேற..

 

சந்திரம்மா கனியிடம், “இந்தாடா இந்த கஞ்சியையும் கொண்டு போய் கொடு…” என்றவர்,

 

தமிழிடம், “வா தமிழ், நம்ம போய் டிபன் வேலைய பார்க்கலாம்!” என சமையறைக்கு செல்ல, பிரகாஷ் மீண்டும் பேப்பரில் முகம் புதைத்தார்

கையிலிருந்த கஞ்சியையும் மாடியையும் பார்த்தவள், “கண்டிப்பா போகணுமா….!” என்ற சிந்தனையோடு மாடியேற துவங்கினாள்…

அத்தியாயம் 8

கனி கையில் வைத்திருந்த கஞ்சியோடு மாடிக்கு செல்ல, அவளின் மனதின் படபடப்பு கூடினாலும், “நம்ம பண்ணதுல பாவம், மாமா கண்ணு நிஜமாவே சிவந்து தான் போச்சு! சோ, இந்த ஒரு தடவ, மாமா எது சொன்னாலும், நல்ல புள்ளையா கேட்டுக்கனும்!” என தனக்கு தானே சொல்லி கொள்ள,

பாலுக்கு பயந்து பதுங்கியிருந்த மனசாட்சி, அவளின் பேச்சில் அதிர்ந்து,  “கனி!!!! நிஜமாவா சொல்ற! நீ அடக்க ஒடுக்கமா, ஒருத்தர் சொல்றத கேட்க போறையா !!! இந்த மாதிரி ஷாக் எல்லாம் கொடுத்தா, நீ செஞ்சு தர்ற பால விட பவர்புல்லா இருக்கு.. அப்புறம், ஊரே உன்ன, மனசாட்சி இல்லதவன்னு சொல்லிடும்மா…! வேணாம். நீ, எப்பவும் போலவே இரு!!!” என படபடப்பில் துவங்கி, நக்கலில் முடிக்க,

“நல்ல புள்ளையா, அடக்க ஒடுக்கமா இருக்கணுமிங்கற மூடுல இருக்கறதால, நீ தப்பிச்ச, இல்ல… நடக்கறதே வேற! அடச்சீ!!! உள்ள போ..” என திட்டி அதை அடக்கியவள், மெல்ல கதவை திறந்து ஜாக்கிரதையாக எட்டி பார்த்தாள். காலை நடந்த நிகழ்வு கொடுத்த எச்சரிக்கை அது…

அறைக்குள், வெற்றி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாது போக… “என்னடா இது! ரூமுக்கு போகணுமின்னு வந்தவரு, கண்ணு பிரச்சனையில வேற ரூமுக்கு போயிட்டாரா…?! ஆளையே காணோமே..!!!” என்றவரே உள்ளே வந்து, கஞ்சி டம்ளரை அங்கிருந்த டீப்பாய் மீது வைத்த நொடி, அவளின் இடையோடு சேர்த்து இறுக்கி பிடித்தது வெற்றியின் முறுக்கேறிய கைகள்….

முதன் முறை உணரும் ஆணவனின் ஸ்பரிஷம், அவளை நடுக்கம் கொள்ள செய்ய, ஓயாமல் பேசும் வாய் பசைபோட்டது போல ஒட்டிக் கொண்டு, பேசா மடந்தையாய் அவனின் கரத்தில் இருந்தவள், அடுத்து அவன் செய்த செயலில்  சுத்தமாய் மூச்சுக்கு திணறும் நிலையில் நிற்கவேண்டியதானது.

ஆம்… !!! அவளின் இடையோடு பற்றி தூக்கியவன், அவளை நிறுத்தியிருந்தான், தன்னோடு சேர்த்தனைத்த நிலையில் ஷவருக்கு அடியில்…

அவளின் இதழ்களோ, மேலிருந்து விழுந்த நீரினால் வந்த நடுக்கமா?! அல்லது வெற்றியின் கரம் தனது வெற்றிடையில் பதிந்ததால், அந்த கரம் தந்த சூடு, தனது மேனியில் ஏற்படுத்திய மாற்றத்தால், வந்த நடுக்கமா?! என தெரியாது, நடுங்கி கொண்டிருந்தது.

கனி, மெல்ல நிமிர்ந்து பார்க்க, முதலில் தெரிந்தது, வெற்றி மேல் சட்டை அணியாததால், தெரிந்த வலிமையான நெஞ்சே…!!! அவனின் தோள்களும், மார்பும் அவனின் தேகபயிற்சியின் வலிமையை அழகாய் எடுத்து காட்ட, பார்த்த கனிக்கோ மூச்சடைத்து போனதோடு, முகமும் செவ்வானமாய் மாறி போனது.

அதே சிவந்த முகத்தோடு, அவனின்
முகம் பார்க்க தயக்கமும், பதட்டமும் தடுத்தாலும், அதையும் மீறி கூச்சத்தோடு நிமிர்ந்து அவனை காண, அவளை சீண்டும் நோக்கத்தில், அவன் செய்ய துவங்கிய வேலையால், அவனின் உணர்வுகளும் தூண்டப்பட்ட நிலையை, விழியில் தேக்கி நின்றிருந்தான் வெற்றி.

அவளின் முகத்திலிருந்து வழியும் நீர், அவளின் இதழை கடந்து, கழுத்து வழி செல்லும் பாதையை, தொண்டை குழி மேலேறி இறங்க, கிறக்கத்தோடு பார்த்தவனின் தாபப்பார்வையில், அவனிடமிருந்து விலகி செல்ல, கனியின் பெண்மை ஆணையிட்ட நேரம், அள்ளி தூக்கியவன் அவளோடு வந்து மெத்தையில் சரிந்தான்.

வெற்றியின் கரங்கள், அவளின் பெண்மையை மெல்ல சோதிக்க,
வேட்கை நிறைந்த பார்வையோடு, வெற்றியோ அவளின் ஈரம் தோய்ந்த இதழ் நோக்கி, தனது இதழ் பயணத்தை ஆரம்பித்தவன், அதோடு அவளின் பெயரையும் ஜபிக்க துவங்க , கரண்ட் ஷாக் அடித்தது போல,  ப்ரீஷ் ஆன நிலையில் இருந்தாள் கனி…

“கனி …..! கனி….!” என்ற வார்த்தை மட்டுமே, காதில் ரீங்காரமாய் விழுந்து கொண்டிருந்த வேளை,  “கனி…!” என்ற படி, அடுத்து அவளின் தோளில் கை வைக்க, “சீ …! போ மாமா…!! வேணா மாமா…!! ப்ளீஸ்…!!!” என சிணுங்கிய கனியின் தலையில், ஓங்கி ஒரு கொட்டு விழ,

“ஏன்டா ..அடிச்ச?!” என்றபடி தலையை தேய்த்தவள், ‘என்னடா இது, தண்ணிக்கு கீழ, இவ்வளவு நேரம் நின்னும் நம்ம தலை மட்டும் நனையவே இல்ல.. அதிசயமா இருக்கு..!!!!’  என்று யோசனையோடு  நிமிர்ந்து பார்க்க, அவள் நின்றிருந்ததோ, அந்த வீட்டின் மாடி படியின் துவக்கத்தில்…. கையில் ஏந்தியிருந்த கஞ்சி டம்ளரோடு….

அவளிடம் கஞ்சியை கொடுத்து சென்று, வெகு நேரம் ஆகி வந்த போதும், அசைவே இல்லாது, விழித்த படி நின்ற கனியை நெருங்கிய தமிழ், கனியை அழைக்க… அவளோ, ஏதோ ஒரு சிந்தனையில் இருந்ததால், அவரும் தோளில் தொட்டு உலுக்கியதும்,

அவளின் வார்த்தையில் முதலில் அதிர்ந்தாலும், “லூசு !! லூசு !! மானத்த வாங்குது.. எந்த நேரத்துல பெத்தேனோ?!” என்றபடி, தலையில் மானசீகமாய் அடித்துக் கொண்டவர், நறுக்கென ஒரு கொட்டை மண்டையில் தர, சுயநிலைக்கு முழுதாய் வந்தவள், சொன்னது அதைவிட கொடுமையாய் இருக்க .. “மாப்பிள்ளைய அவன், இவன்னா பேசற..!!” என திட்ட துவங்கவும் தான்…. நடப்பு புரிய,

‘அப்ப…. இப்ப நடந்தது, எல்லாமே கனவா… !! அதான் பார்த்தேன்.. இந்த மாமாக்கு எப்படிடா..  இவ்வளவு ரொமான்ஸ் வருதேன்னு…!’ நினைத்தபடியே, வெளிப்படையாய் தலையில் அடித்துக்கொண்டாள்.

“உன்ன பெத்த கொடுமைக்கு, நா செய்ய வேண்டியத, நீ ஏன் செய்யற…?! கஞ்சிய கொடுக்க சொன்னா, படியில நின்னுட்டு கண்ண முழிச்சிட்டே, கனவு கண்டுட்டு இருக்க..! உன்ன…!!” என எப்போதும் போல, தனது சுப்ரபாதத்தை ஆரம்பிக்க,

“ஆத்தா மயிலு…! ச்சீ.. தமிழு.. தயவு செஞ்சு உன்னோட பாடத்த நிறுத்து..! இன்னைய கோட்டா, காலைலயே முடுஞ்சு போச்சு.. மிச்சம் மீதி இருந்தா, இன்னொரு நாள் வச்சுக்கோ… ஏற்கனவே நீ செஞ்ச அட்வைஸால, ‘வொய் பிளட்… சேம்… ப்ளட்!’ நிலைமையில காது இருக்கு… மறுபடியும் தாங்காது மம்மி…!!!” என சென்னபடியே திரும்பியவள் அதிர்ந்து போய் நின்றாள், வெற்றியின் பார்வையில்…

கனவாய் இருந்தாலும், கொஞ்ச நேரத்திற்கு முன்பு, தான் பார்த்த அவனின் தாப பார்வை, அவனை நேர் கொண்டு பார்க்க இயலாமல் செய்ய, அந்த இடத்தில் நிற்காமல்  ஓட்டம் பிடித்தாள் சமையலறையே நோக்கி…. முகம் சிவக்க…

“என்னாச்சி இவளுக்கு… இவ ஏன் .. இப்படி ஒரு ரியாக்க்ஷன் கொடுத்திட்டு போறா…?! ஏற்கனவே கண்ணு மேட்டர்ல.. எல்லா மேட்டரும் முடுஞ்ச மாதிரி, லுக்கு விடுறாங்க அத்தையும், அம்மாவும்…!!! இதுல இவ வேற, இப்படியெல்லாம் செஞ்சா… அடுத்த மாசமே, புள்ளைக்கி தொட்டில் வாங்க ஆரம்பிச்சாலும் ஆச்சரியம் இல்ல..!!!’ என கடுப்பாய் நினைத்தவன்.. மேலிருந்து வர,

ஹாலில் இருந்த பிரகாஷ் அவனின் தோற்றத்தை பார்த்ததும், “என்ன மாப்பிள!! யூனிஃபார்ம்ல வந்திருக்கீங்க..?! இன்னைக்கே போகணுமா…?!” என, நேற்று திருமணம் முடிந்து, இன்று  அவன் டூட்டிக்கு செல்வதை கண்டு சந்தேகமாய் கேட்க,

“வேலை வெட்டிய பார்க்காம… உங்க மக எத கரச்சு மேல ஊத்துவான்னு…. வீட்டுலையே குத்த வச்சா உக்கார முடியும்….!” என முனுமுனுத்தவன், “ஆரம்பிச்சதே ..நீ தானேடா!” என மனது சொன்னது காதிலேயே வாங்காமல்…

அவரின் புரியாத பார்வையை கண்டு… “லீவ் சொல்லி இருந்தேன் மாமா…
ஒரு அவசர கேஸ்.. போன் வந்துச்சு.. நா   கண்டிப்பா போய் தான் ஆகணும்.. வர்றேன்” என வெளியே செல்ல போக,

இருவரின் உரையாடலையும் கேட்டிருந்த தமிழ், “என்ன தம்பி, காலைல இருந்து எதுவுமே சாப்பிடல, டிபனாவது சாப்பிட்டு போலமே?!” என சொல்ல,

“இல்ல அத்த, லேட் ஆகிடுச்சு..!” என பதிலளித்தவன், வேகமாய் வெளியேறி தனது வாகனத்தை கிளப்பி சென்றான்.

சந்திராவிடமும், கனியிடமும் சொல்லாமல் அவசரமாக வெளியேறும் வெற்றியின் நடவடிக்கையில், தமிழ் பிரகாஷை முறைக்க, “ஏன்டீ! நானும் பார்க்கறேன்… காலைல இருந்து, என்ன முறைச்சிட்டே இருக்க…?!” என கேட்க….

“ஹூம்… வேண்டுதல்…!” என நொடித்தவர்.. “விவஸ்த்த இல்லாம பேச வேண்டியதுக்கு பேசறது… இப்ப பேச வேண்டிய விசயத்துக்கு, வாய மூடிட்டு இருக்க வேண்டியது… பெத்தது தான் அரவேக்காடுன்னா… கட்டுனது கால் வேக்காடாவல்ல போச்சு எனக்கு….!” என நீட்டி முழங்க…

“இப்ப என்னாச்சு…?!” என்றவருக்கு…

“என்ன ஆச்சா..?! கல்யாணம் நடந்த அடுத்த நாளே பொண்டாட்டிய விட்டுட்டு ஒருத்தன், வேலைக்கு கிளம்பி போனா.. என்ன அர்த்தம்….?!” என கேட்க..

“வேலை அதிகமுன்னு அர்த்தம்…!” என்ற பிரகாஷின் பதிலில் எதை கொண்டு அவரின் மண்டையை உடைக்கலாம் என்பதாய் பார்த்த தமிழ்… வாகாய் எதுவும் சிக்காது போக…

“அட கூறுகெட்ட மனுஷா…!! வாயில நல்லா வந்திடும்… நம்ம சாதாரணமா கல்யாணம் பண்ணி வச்சிருந்தாலே..  யோசிக்க வேண்டிய விசயம்… நம்ம செஞ்சது போர்ஜரி… என்ன விவகாரமுன்னு பார்க்காம.. பேக்கு மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க..?!” என வசைமாரி பொழிய…

“போதும் தமிழூ…!! காலைல இருந்து முறைச்சதோட..  நல்ல இத்தன நாள் மனசுல நினச்சத எல்லாம் சொல்லி.  என்ன போதுமான வரைக்கும் டேமேஜ் பண்ணியாச்சு…!” என சொல்லும் போதே…

சந்திரா, வெளியே பேச்சு குரல் கேட்டாலும், மாமியாரும், மருமகளும் எப்போதும் போல கொஞ்சலில் இருந்ததால், வெற்றியின் வாகனம் சென்ற சத்தத்தில் அவன் சென்றுவிட்டது தெரிய, அவசரமாக ஹாலுக்கு வந்தவர்,

தமிழும், பிரகாஷும் பேசுவது புரியாமல் போனாலும்…  ஏதோ விவகாரம் என்பதை உணர்ந்தவர்… சடனாக அதை பற்றி கேட்பது உகந்ததாக தெரியாததால்…
“தமிழு போனது வெற்றி தானா ….!” என தெரிந்துமே கேட்க,

“ஆமா அண்ணி..  சாப்பிட்டு போக சொன்னதுக்கு கூட, இல்ல வேணாமின்னு சொல்லிட்டு போயிட்டார். மறுவீட்டு விருந்துக்கு கேட்கலாமின்னு நினச்சோம்…” என அதற்கு இடம் கொடுக்காமல் வெற்றி சென்றதை மறைமுகமாய் சொல்லிட..,

‘எப்பவும், என்ன ஆனாலும் சாப்பிடாம போக மாட்டானே…! இன்னைக்கி என்ன ஆச்சு.. ?! அதுவும் என்கிட்டயும், கனிகிட்டயும் சொல்லிக்க கூட இல்ல…!!!’ என மனதில் நினைத்தவர், சந்தேகத்தோடு கனியின் முகத்தை பார்க்க…

கனி யாரின் முகமும் பார்க்காமல், தலை குனிந்த விதமே சொல்லாமல் சொல்லியது…திருமணத்திற்காக சொன்ன பொய் வெற்றிக்கு தெரிந்து விட்டது என்பது…..

அத்தியாயம் 9

வெற்றி சென்றதும், கனியிடம் விசாரணை துவங்க… ‘யோவ் மாமா…. வசமா வச்சு செய்யறேன்னு சொன்னது இது தானா…?!  நா கூட, நீ தான்.. எதாச்சும் செய்வேன்னு பார்த்தா..  இந்த குரூப் கிட்ட சிக்க வச்சிட்டையே.. !!!! நல்லா வருவ ராசா.. நீ…!!! மகனே, இருடா உன்ன நைட் வச்சுக்கறேன்…’ என மனதில் வெற்றியை போதுமான வரை வருத்தவள்…

வெளியே அப்பாவியாய்.. “அத்தம்மா, மாமா எப்பவும், இப்படி சாப்பிட்டாம தான் போவாங்களா…?! இட்ஸ் டூ பேட்… சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியுமின்னு தெரியாத, மக்கு பையன பெத்து வச்சிருக்கீங்க…?!

இன்னைக்கி வரட்டும், நா போடுற போடுல.. அவரு இனி டைனிங் ஹால்லையே குடியிருப்பாங்க..!” என பேசியபடியே, “ஓகே… நா போய் நம்ம எல்லாருக்கும் டிபன் எடுத்து வைக்கிறேன்..!” என அங்கிருந்து செல்ல போக…

“கனிம்மா நில்லு…!  அவன் டைனிங் ஹால்ல குடியிருக்கறது இருக்கட்டும், முதல்ல.. உன் கூட ரூம்ல ஒழுங்கா குடியிருக்கானா! அதாவது நா என்ன கேட்கறேன்னா… ?!” என, ‘அதை எப்படி வெளிப்படையாய் கேட்க!’ என தயங்கி நிறுத்த…

அது புரிந்த கனி, “அதெல்லாம் நாங்க சந்தோஷமா….” என ஆரம்பித்தவளை முடிக்கவிடாது… “உண்மைய மட்டும்.. சொல்லு கனி..!” என சந்திரா சொன்ன விதத்திலேயே, ‘பொய் சொல்லாதே!’ என்ற தோணி நிறைந்திருக்க….

“ஹூம்…!!!” என்று பெருமூச்சை விட்ட கனி.. “அத்தம்மா… அவருக்கு நம்ம சொன்ன பொய் தெரிஞ்சிடுச்சு….!” என்றதும்…

‘எப்படி?! எப்போ?!” என்ற கேள்வி சந்திராவினுள் எழ, பிரகாஷ் தமிழுக்கோ ‘இனி அவள் வாழ்க்கை?!’ என்ற பயமே பிரதானமாய்  எழுந்தது.

“கனி..  நீ தான் அவன்கிட்ட சொன்னையா?!”என சந்திரா கேட்க.. மறுப்பாய் தலை அசைத்தவள்,

“அதுக்கும் முன்னாடியே அவங்களுக்கு விசயம் தெரிஞ்சிடுச்சு போல அத்தம்மா….!, மாமா தான்.. நா போனதும் உண்மையா, பொய்யான்னு கேட்டாங்க..?! நா, ஆமா உண்மை தான்னு சொல்லிட்டேன்” என சொல்லிட…

“போச்சு, போச்சு… ! உன் தலையில நீயே மண் அள்ளி போட்டுட்டுகிட்டையே!” என தமிழ் ஆதங்கத்தில் புலம்ப…

“அம்மா விழுந்த மண்ண நீ வேணுமின்னா அலசிவிடு..!” என கடுப்பாக சொன்னவள்,

“அத்தம்மா, அப்பா, அம்மா எல்லாருக்கும் தான் சொல்றேன்… நல்லா கேட்டுக்கோங்க.. திரும்ப, திரும்ப  சொன்னதையே சொல்ல கனி விரும்ப மாட்டா…. ! ஓகே..!” என்றவள்….

“வெற்றி மாமாக்கு… என் மேல ஒரு ‘இது..!’ இருக்கு… அதே மாதிரி, அவருக்கு கோபமும் இருக்கு…! பட்… ரெண்டுமே இப்ப சமஅளவா இருக்கறதால, கொஞ்சம் தடுமாறிட்டு இருக்காரூ. என்மேல இருக்கற கோபம் போய், அந்த இடத்த லவ் நிறைஞ்சா… எல்லாமே சரியாகிடும்….

என்னோட கெஸ் சரின்னா… நேத்து மதியமே, மாமாக்கு உண்மை தெரிஞ்சிக்கணும். அதை வச்சு ,உங்க யாராவது கிட்ட, மாமா எதாவது கேட்டாங்களா?! இல்லல்ல… அப்போ அவங்க எக்காரணம் கொண்டும், உங்க எல்லாரோட  மனசும் நோகற மாதிரி நடக்க மாட்டாங்க..

அவரோட கோபம் எத்தன நாளைக்கி, என்கிட்ட செல்லுமுன்னு.. நானும் பார்க்க தானே போறேன்…! நா, பண்ண போற சேட்டையில, தானா… வழிக்கு வரபோறார் பாருங்க…!” என நிதர்ஷத்தை சொன்னதோடு…

‘வெற்றியை எப்படி படுத்தி எடுக்கலாம்?!’ என்ற சிந்தனையில் கனி இறங்க…

கனி சொன்னது போல, உண்மை அறிந்தும், தங்கள் முன் வெளிப்படுத்தாமல் நாசுக்காக நடந்து கொள்ளும் வெற்றி, நிச்சயம் அவளை விட்டு விட மாட்டான்! என்பது தெளிவாக… அனைவருக்கும், அதுவே இப்போதைக்கு போதுமானதாய் இருந்தது.

****

வேகமாக வெளியேறிய வெற்றிக்கோ, கண்களின் உறுத்தல் குறையாததோடு, வெயிலின் தாக்கம் கண்ணில் மேலும் கண்ணீரை வர வைக்க, தனது கூலரை அணிந்தவன், தனது நண்பன் பணிபுரியும் மருத்துவமனைக்கு தனது வாகனத்தை செலுத்தினான்.

“எல்லாம் இந்த அராத்தால வந்தது.. நா ஒரு லூசு… உண்மை தெரியாம எவ்வளவோ ப்ளான் போட்டு இருந்தேன்… அவளோட, எப்படியெல்லாம் டைம் ஸ்பெண்ட் பண்ணனும்.. அவள் என்னோட வாழுற கடைசி நிமிஷம் வரைக்கும், எப்படி சந்தோஷமா வச்சுக்கணுமின்னு.. நினச்சிருந்தேன்! எல்லாமே நாடகமுன்னு சொல்லி, என்னை இப்படி ஏமாத்தி புலம்ப வச்சிட்டாளே!” என்ற ஆதங்கத்தோடு, வாகனத்தை மருத்துவமனை வாசலில் நிறுத்தி, தனது நண்பன் ரகுவிற்கு அழைத்தான்.

“ஹாய் மச்சான்!  புதுமாப்பிள்ளக்கு காலைல, எங்க நியாபகம் எல்லாம் வந்திருக்கு.. என்ன விசயம்.. எதாவது டவுட்டா?!” என கேலியாய் கேட்க..

“ஊம்…! டவுட் இல்ல..  என் பொண்டாட்டிக்கு டெலிவரிக்கு புக் பண்ணலாமின்னு தான்..!” என கடுப்பில் சொல்ல..

“வெற்றி..!!! நீ எதுலையும் செம பாஸ்ட் தான். உன்னோட மூவ்ஸ் அதிரடியா இருக்கும் ன்னு நம்ம பிரண்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும்…! அதுக்காக இப்படி…! நா எதிர்பார்க்கலடா….!” என அதிர்ந்து போய் பேசுபவனை நினைத்து பல்லை கடித்தவன்…

“டேய்… எங்கடா இருக்க இப்ப… அத சொல்லி தொல முதல்ல” என கேட்டவனுக்கு..

“ஹாஸ்பிட்டல்ல தான் மச்சி…! ஒரு எமர்ஜென்சின்னு நேரமே வந்தேன். இப்ப வேலை முடுஞ்சுது கிளம்ப போறேன்… எதுக்கு கேட்கற..?!” என பதில் சொன்ன ரகுவிடம்….

“சரி வெயிட் பண்ணு. உன் கேபினுக்கு வர்றேன்!” என சொல்லி, கட் செய்து போனை பாக்கெட்டில் போட்டவன், நேராக அவனின் கேபினுக்கு செல்ல…

“வாடா மச்சி…! என்னடா… யூனிஃபார்ம்ல..!! நேத்து தான் கல்யாணம் முடிஞ்சிக்கு… இப்ப, இப்படி வந்து நிக்கற , எதாவது என்கொய்ரியா?!” என அவனின் நடவடிக்கையை பார்த்து கேட்க..

“இல்லடா..! எனக்கு தான்.. டாக்டர கண்ஷல்ட் பண்ணிட்டு போகணும்டா…” என சொல்லி, அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமரந்தான்.

“டேய் மச்சான்..!! நேத்து நைட் எதாவது பிராப்பளமாடா ?! அதான் காலைலயே ‘அதுக்கான’ டாக்டர பார்க்க வந்தியா…?! இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே செக் பண்ணிக்கறதில்ல…!!”  என சொல்ல…

‘நைட், எங்களுக்குள்ள பிரச்சனைன்னு இவன் எப்படி கெஸ் பண்ணான்?! ஓ.. இவன் போட்டு கொடுத்ததால போல..! அப்ப எதுக்கு, அதுக்கான டாக்டர்ன்னு அழுத்தி….’ என புரியாது சில நொடி யோசித்தவன்.. புரிந்த நொடி.. “பரதேசி…! உன்னையெல்லாம்..!!” என எழுந்து அவனின் கழுத்தை பிடிக்க,

இருவரும் செய்த அதிரடி செயலால், அடுத்த நிமிடம், இருவரும் ஒருவர் மீது ஒருவர் என்ற நிலையில் நிலத்தில் கிடக்க,

“டேய்..! டேய்..! விடுடா…! உனக்கு சந்ததி வர வைக்க வேண்டி பேசினா.. என் சங்க ஒடைக்க பார்க்கலாமா ..?!” என வெற்றியை தள்ளிவிட…

“ரகு .. நானே கொலை காண்டுல வந்திருக்கேன். நீ வேற, இப்படி பேசி வெறுப்பேத்திட்டு..” என சொல்லி தரையிலேயே அமர்ந்தான் வெற்றி.

அவனுக்கு எதிரே, ஒரு கையை கன்னத்திற்கு முட்டி கொடுத்து படுத்த ரகு… “என்ன மச்சி… உன் பிரச்சன?! தெளிவா சொல்லு?” என கதை கேட்கும் எபெக்ட்டில் கேட்க…

அவனை முறைத்த  படியே, “எல்லாம் அந்த அராத்தால தான்..! சரியான ராங்கி.. லடாயீ..” என முனுமுனுக்க….

“யார சொல்லற நீ ?!”

“எல்லாம் நா கட்டிக்கிட்டவள தான் சொல்லிட்டு இருக்கேன். பொண்ணாடா அவ… சரியான ரவுடி…!” என கடுப்பில் சொல்ல,

மெல்லிய புன்னகையோடு..
“அடி பலமோ…?!”என சம்மந்தமில்லாமல் கேட்ட ரகு, தொடர்ந்து, “விடு மச்சான்.. பொண்டாட்டின்னு வந்தாலே, அவங்க அடுச்சு விளையாடற புட்பாலா ஆகிட வேண்டியது.. கணவர்களின் தலையெழுத்து. இதுல நீ மட்டும் விதி விலக்கா… !” என சொன்னதில்,

வெற்றிக்கும் லேசாக சிரிப்பு வர, “மச்சி அவ புட்பால் போல அடிக்கலடா..! வெறும் பால் வச்சே பழிவாங்கிட்டா…!” என்றவாரே… தொடர்ந்து காலை நடந்ததை சொல்ல, ஒருக்களித்து படுத்திருந்த நிலையை மாற்றி, மல்லாந்து படுத்த ரகு “ஹா…!!ஹா…!!” என வாய்விட்டு சிரிக்க…

“ஏன்டா.. அவ புளுச்சு போன பால ஊத்தி, என் கண்ணுல பிரச்சனையாகிடுச்சுன்னு சொன்னா.. இப்படி சிரிக்கற….!”

“இல்ல மச்சி.. நீ அவளுக்கு, ‘வொஸ்ட் டே!’ சொன்னே..! பதிலுக்கு அவ, ‘குட் டே!’ சொன்னா.. நல்லா யோசி யாருக்கு எது நடக்குதுன்னு…?!”  என தத்துவம் பேசியவனை பார்த்த வெற்றி,

“டேய் ரகு முடியலடா…! உன் மொக்க.. தயவு செஞ்சு, உங்க ஹாஸ்பிடல்ல இருக்கற, ஐ ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போ.. இல்ல, ஆள விடு.. வேற பக்கம் போய் பார்த்துக்கறேன்..” என எழுந்திட…

“கோவப்படாத மச்சி..! இரு டாக்டர் வந்துட்டாரான்னு கேட்கறேன்” என்றவன், எழுந்து ரிஷப்ஷனில் விசாரித்து, வெற்றியை அதற்கான மருத்துவரிடம் அழைத்து வந்தான்.

வெற்றியை பரிசோதித்த மருத்துவர், “கண்ணுல துரும்பா விழுந்த எதையோ, தண்ணியில கழுவி எடுக்காறதுக்கு முன்னாடி, கண்ண கசக்கி இருக்கீங்க.. அதான் இப்படி… என்ன விழுந்துச்சு ?!” என கேட்க..

வெற்றி நடந்ததை சொல்ல தயங்க.. சமயோஜிதமாய் ரகு… “காலைல, ஒரு கேஸை பிடிக்க போயிருக்கான். அக்யூஸ்ட், இவன் முகத்துல, கையில இருந்த பால ஊத்திட்டான். நல்ல வேளை, பால் ஆறி போனதால முகத்துக்கு எதுவுமாகல.. அவன் ‘ஸ்ராங்கா…!’ இருக்க பாதாம பால் வச்சிப்பான் போல டாக்டர்…” என சொல்லி, வெற்றியை பார்த்து கண்ணடிக்க.. டாக்டர் அறியாத வாறு ரகுவை வெற்றி முறைக்க…

“அப்ப, அதுல இருந்த பாதாம் தூள் கண்ணுல பட்டிருக்கும்.. ஓகே, இந்த சொட்டு மருந்த, ரெண்டு நாளைக்கி கண்ணுல மூனு சொட்டு ஊத்திட்டு படுங்க, சரியாகிடும்..”என சொல்லி கொடுக்க, “தேங்க்ஸ்…” சொல்லி வெளியே வந்தனர்.

“ஓகே மச்சி! நா கிளம்பறேன்” என வெற்றி சொல்ல… “மச்சான் ஒரு நிமிஷம், உன்கிட்ட கொஞ்சமே பேசணும்… இப்ப நீ ப்ரீயா இருக்கியா.. என  கேட்ட ரகுவிடம்,

“என்ன விசயம் டா…?!” என வெற்றி கேட்க,

“கனி விசயம் தான். நா, நேத்தே சொன்னேன்.. அவ தான், உனக்கு சரியான ஜோடின்னு… அப்புறமும், நீ இன்னைக்கி காலைல நடந்தத சொல்லும் போதே, கெஸ் பண்ணிட்டேன்… உங்களோட லைப் இன்னும் ஆரம்பம் ஆகலைன்னு….! ஏன்டா…?!”

“மச்சான்.. அவ எதை சொல்லியிருந்தாலும், ஓகேடா ! ஆனா.. மரணத்த சொல்லி, என்னை ஏமாத்தினது தான் தாங்க முடியல.. உயிரோட மதிப்பு புரியாதவ..! எல்லா விசயத்திலும் விளையாட்டு… பெரியவங்கன்னு  மரியாதை இல்ல!” என அவளின் குறையை அடுக்க…

“அவ சொன்னது பொய் தான் இல்லங்கல… பட்.. அந்த பொய் சொல்ல காரணம், உன் மேல இருந்த காதல்.. அத முதல்ல புருஞ்சுக்கோ…!” எனும் போதே, அவர்கள் நின்றிருக்கும் பகுதிக்கு ஓடி வந்த நர்ஸ் சொன்ன தகவலில், எமர்ஜென்சி நோக்கி சென்ற ரகுவை தொடர்ந்தான் வெற்றி.

அங்கு கனியின் வயதை ஒத்திருக்கும் ஒரு பெண், தலையிலும், உடலிலும் ரத்தம் பெருக ஸ்ரெக்ச்சரில் இருக்க… ரகு மருத்துவனாய், அவளின் நாடியை பரிசோதித்தவனுக்கு புரிந்து போனாது அந்த பெண்ணின் மரணம் தவிர்க்க இயலாது என்பது….

இன்னும் சில மணித்துளியில், அவள் உயிர் பிரிவது உறுதி என்பதால், மேற்கொண்டு எந்த சிகிச்சையும் தொடராமல் இருந்தவனை …

நெருங்கிய வெற்றி, “என்னடா.. உள்ள கொண்டு போக சொல்லாம நிக்கற..?!” என கேட்க… வெற்றியை பார்த்தவன் பார்வையே சொன்னது, ‘இனி அடுத்து என்ன!’ என்பதை…

அந்த பெண்ணின் பெற்றோரின் கதறலோடும், உறவினர்களின் கண்ணீரோடும், அந்த பெண்ணின் சடலம் வெளியே கொண்டு செல்லப்பட…

 

ரகு தனது அறைக்கு, வெற்றியோடு வந்தவன்.. “இப்ப பார்த்தியே.. இது மாதிரி நிறைய, நீயும் சரி, நானும் சரி.. நம்ம வாழ்க்கையில பார்த்திட்டோம். அதுவே சொல்லும், மரணம் எப்போ, எப்படி யாருக்கு வருமின்னு…யாராலையும் சொல்ல முடியாதுன்னு…!

கனி சொன்னது பொய் தான்..! ஆனா.. அது நடக்கவே நடக்காதுன்னு, நீ சொல்ல முடியுமா…?! வாழ்க்கையில மரணம் வந்தே தீரும்… என்ன ஒன்னு.. காலம் நேரம் தெரியாத வரை, சந்தோஷமா இருக்கலாம்.. தெரிஞ்சா நிம்மதி போயிடும்…!

சோ, உனக்கு கிடச்ச வாழ்க்கைய இருக்கற வரை சந்தோஷமா வாழ பாரு… யார், யாருக்கு முன்னாடி போவா?! யார் சொல்ல…!

இப்ப இறந்த அந்த பொண்ணு மேல தப்பே இல்ல…  காலேஜ் போக பஸ்ஸூக்காக, அவங்க அப்பா ஸ்டாப்ல இறக்கி விட்டுட்டு, பத்தடி கூட போகல… தண்ணி போட்டுட்டு ஓட்டுன, ஒரு பெரும் குடிமகன் ஆட்டோ, அந்த இடத்துல இருந்த அத்தன பேர் மேலையும் இடுச்சு தள்ளிட்டு போயிருக்கு…

பத்து நிமிஷம் முன்னாடி வீட்டுல இருந்து சந்தோஷமா வந்த பொண்ணு, பிணமா போறா…! உனக்கு இதுக்கு மேல சொல்ல வேண்டியதில்ல…!

அப்புறம்.. கனிய பத்தி நீ சொன்ன மத்த விசயங்கள்.. நீ அவகிட்ட பேசி, பழகி பாரு..! அப்ப தெரியும் அவள.  எனக்கு தெரிஞ்ச அளவில் கூட, உனக்கு அவள தெரியல… அவள புருஞ்சுக்க முயற்சி செய்!”  என சொல்லி வெற்றியின் முகம் பார்க்க..

இதுவரை இருந்த கோபம் குறைந்து, ஒரு வித சிந்தனை வந்தது புரிய,’அப்பாடா..! பையன் யோசிக்க ஆரம்பிச்சிட்டான்..! இனி கரெக்ட்டா.. ரூட் பிடிச்சு வந்திடுவான்’  என மனதில் தோன்றிய சந்தோஷத்தோடு, அனுப்பி வைத்த ரகுவிற்கு தெரியவில்லையே… அங்கு கனி இவனை கடுப்பேத்தும் முயற்சியை செவ்வனே செய்து வைக்க ரெடியாக இருக்கிறாள் என்று….

அத்தியாயம் 10

ரகு சொன்னதை மனதில் கொண்டு, “வெற்றி, இன்னைக்கி கனிகிட்ட பொறுமையா..(!) எல்லாத்தையும் பேசி சரி செய்யற.. அவ எதாவது கோக்கு மாக்கா தான் செய்வா…(சரியா புரிஞ்சுக்கிட்ட) சோ, நீ எதுக்கும் டென்ஷன் ஆகிட கூடாது…” என தனக்கு தானே மனதில் உறுப்போட்டவன், ஸ்டேஷன் செல்லாது, வெளியே பார்க்க வேண்டிய சில வேலைகளை மட்டும் முடித்துவிட்டு (ஸ்டேஷன் போனா சதிஷ் மறுபடியும், ரகு கேட்ட மாதிரி கேட்பான்னு தானே எஸ்கேப் ஆகிட்ட…) வீட்டிற்கு மாலையில் வந்திறங்கினான்.

வீட்டில் எந்த சத்தமும் இல்லாது அமைதியாய் இருப்பதை பார்த்தவன், “மாமாவும் அத்தையும் கிளம்பிட்டாங்களா..?! இந்த அராத்து இருக்கற இடத்துல, அமைதியா?! நம்ப முடியலையே…!! வீடு மாறி வந்திட்டமா?!” என மீண்டும் வாசலுக்கு சென்று, திரும்பவும் பார்த்து சந்தேகத்தை தீர்த்தவன், “நம்ம வீடு தான்..!” என வீட்டினுள் காலடி எடுத்து வைத்த நொடி, “பட்..!, பட்டார்..! ” என பெரிதாய் சத்தம் கேட்க…

சத்தம் வந்த திசையை அனுமானித்து சென்றவனுக்கு, கனி செய்து வைத்திருக்கும் வேலைக்கு அவளை அடிக்கவா?! இல்லை, அவளின் நிலையை எண்ணி சிரிக்கவா?! என யோசிக்க துவங்கினான்.

“ஏய் லூசு! கீழ படுத்துட்டு என்ன பண்ணற…?! என அவள் விழுந்து கிடக்கும் நிலையை கண்டு வந்த சிரிப்பை அடக்கியபடி கேட்க,

“ம்ஹும்… வேண்டுதல்.. உன் ரூம்ல அங்கபிரதட்ஷம் செய்யணுமின்னு….” என கீழே விழுந்த கடுப்பில், இடுப்பை தடவியபடி சொல்ல,

தனது உடைகள் கிடக்கும் நிலையை பார்த்து, வந்த ஆத்திரத்தை அடக்க முடியாது பல்லை கடித்தபடியே, “எதுக்குடீ இப்படி பண்ணி வச்சிருக்க, என் ரூம…?!” என கேட்டபடியே வந்தவனை,

“டேய் மாமா, உன் விசாரணையை அப்புறம் ஆரம்பி.. முதல்ல வந்து என்ன தூக்கி விடுடா…!” என்ற கனியின் வார்த்தையில், அவனின் அமைதி தூள் தூளாக…. இருந்தாலும், காலையிலிருந்து உருப்போட்ட விசயத்திற்காக அமைதியாய் இருக்க,

“டேய் மாமா, உன்ன தாண்டா சொல்றேன்..” என்ற கனியின் வார்த்தையில், மொத்த அமைதியும் பறிபோக,

“நீ பண்ணி வச்சிருக்கற வேலைக்கு உன்ன தூக்கிவிட்டு, சேவகம் வேற கேட்குதா…! அப்படியே விட்டன்னா, உன் பல்லூ எல்லாம் ஆட்டம் கண்டிடும் பார்த்துக்க… என கைகளை ஓங்க,

“என்ன பாட்டுக்கு மாமா!” என்ற கனியின் வார்த்தையில், தூக்கிய கையோடு, ‘ஙே!’ என பார்வையை செலுத்தி,

“என்னது…?!” என புரியாமல் கேட்க,

“அதான், மாமா  பல்லூ ஆடுமுன்னு சொன்னீங்களே.. அதான்…!” என சொல்லிட, ஓங்கிய அதே கையை தனது நெற்றியில் அறைந்தவன், “அடேய் வெற்றி.. ! இவ உன்ன கொலைகாரனா மாத்தாம விடமாட்டா போலடா…!” என முனுமுனுத்தபடி,

“உன்ன..!” என அவளை நெருங்கியவன், அப்போது தான், தனது கபோர்ட் கவிழ்ந்து கிடப்பது தெரிய,

“இப்ப எதுக்குடீ, என் கபோர்ட ஆமை மாதிரி கவுத்து போட்டு வச்சிருக்க..! அதுல தான் முக்கியமான கேஸ் ஃபைல்ஸ், டாக்குமெண்ட்ஸ் எல்லாமே வச்சிருந்தேன்…. இடியட்…!” என திட்டிய படி, தனது துணி குவியலில் கால் வைக்காமல், தாண்டி சென்றவன், தனது ட்ரஸ் கபோர்ட் முழுவதும் ஆக்கிரமித்திருந்த கனியின் துணிகளை, கண்டு பல்லை கடித்தபடியே..

அதை காட்டி, “இதெல்லாம் என்ன…. ?!” என கேட்க , கீழே கிடந்தவள், சாவகாசமாய் உக்காரந்து கொண்டு, கெத்தாய்,

“ட்ரஸ் மாமா.. என்னோடது…! ” என சொல்ல,

“அது உன்னோடதில்லாம உன் ஆயாவுதுன்னா கேட்டேன்… அதை எதுக்கு என்னோடது வச்ச, அதுவும் என்னோட ட்ரஸ் பூராவும், எடுத்து இப்ப குப்ப மாதிரி போட்டுட்டு….” என எகிறிட,

“என்ன மாமா புரியாம.. லூசு மாதிரி பேசிட்டு…” என்றதும், தன்னை மரியாதையில்லாது பேசுபவளை முறைக்க,

“முறைக்காத மாமா..! நீ பாட்டுக்கு, சொல்லாம போயி, பெருசுங்க கிட்ட மாட்டி வச்சிட்ட… அதுங்க, நீங்க என்னைய பெட்டிய கட்ட சொன்ன.. எபெக்ட்ல பார்த்து வச்சுதுங்களா…! அதுங்க கிட்ட தப்பிக்கவே, மாமா.. என் ட்ரஸ்ஸெல்லாம், அவரோட கபோர்டுல அடுக்க சொன்னாங்க… போய் அடுக்கறேன்னு  கெத்தா சொல்லிட்டேன்…!

அத்தம்மா வந்து பார்த்தா..! அதான் பொய்யா சொன்னத உண்மையாக்க, அடுக்க ஆரம்பிச்சனா… என்னோட ட்ரஸ் வைக்க, வைக்க இடமே பத்தல மாமா… அதான், உங்க ட்ரஸ்ஸ கொஞ்சமே கொஞ்சம் வெளிய எடுத்தேன்…” என அசட்டு சிரிப்போடு காரணத்தை அடுக்கியவளை வெட்டவா குத்தவா என்ற பார்வையோடு பார்த்தவன்,

குரலில், நக்கல் வழிய, “எது… இது கொஞ்சமா.. அடீயேய்! என் ட்ரஸ் புல்லா வெளிய தான் இருக்கு….!” என ஆரம்பித்தவன், முடிக்கும் போது கடுப்பில் முடிக்க,

“உங்க கபோர்ட் சின்னதா இருக்க நானா பொறுப்பு…. !” என அதற்கும் அவனையே குற்றம் சுமத்தியவளிடம் கேட்டாள் திரும்ப அதே வரும், என நினைத்து அடுத்த பிரச்சனைக்கு தவியவன்,

“அத விடு .. இப்ப இத ஏன் இப்படி பண்ணி வச்சிருக்க….?!” என கவிழ்ந்து கிடக்கும் சிறு கபோர்டை காட்டி கேட்க,

“அதுவா மாமா,  நா கொஞ்சம் புக்ஸ் கொண்டு வந்தேனா… அத வைக்க இடம் பார்த்தனா..  இது தான் நல்லா சூப்பரா இருந்துச்சு… நீங்க வேற அதுல புக்கும், ஃபையிலுமா வச்சிருந்தீங்களா, சோ அதோட வைக்கலாமின்னு திறக்க பார்த்தேன்…” என இழுத்து நிறுத்தி சொன்னவளை பார்த்து,

“திறக்க பார்த்த சரி.. அப்ப இப்படிடீ எப்படி கவுறும்…!” என கேள்வி கேட்க,

“அதுமேல ஏறினா கவுறதா.. என்ன மாமா உனக்கு அறிவே இல்ல.. எப்படி போலீஸ்ல சேர்ந்த.. ?!” என கேலியாய் கேட்டவளை முறைத்தாலும், அதில் ஏற வேண்டிய தேவையை அறிய வேண்டி,

“ஏறுனியா…! எதுக்கு…?!” என கேட்க,

“அது அதோட சாவி கிடைக்கல.. அதான், அதுக்கு மேல இருக்குமோன்னு..  ஸ்டூல் போட்டு தேடினேன்.. அதபிடிச்சதும், இப்படி கவுந்து, என்னையும் கவுக்குமின்னு தெரியல மாமா…!” என பச்ச குழந்தை போல, முகத்தை வைத்து சொன்னவளை பார்க்கும் போது, ‘அதுவரை இருந்த கோபம் போய்விடுமோ?!’ என வெற்றிக்கு ஆக…

‘வெற்றி, இவ சரியான மயக்கு மோகினி… அப்பாவி மாதிரி முகத்த வச்சிட்டு, பேசியே கவுத்திடுவா.. கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்ச மாதிரி… ! முதல்ல ரூம விட்டு வெளிய போயிடு… !’ என மனது எச்சரிக்க,

“மரியாதையா .. இந்த ட்ரஸ்ஸெல்லாம் எடுத்து, இருந்த மாதிரி மடுச்சி வச்சிட்டு, ரூம க்ளீன் பண்ணி வைக்கற.. நைட்டுக்குள்ள..!  இல்ல..  உன்ன என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…” என அதிகாரமாய் சொல்லிவிட்டு, மாற்று உடையை எடுத்த படி நகர்ந்தவனை பார்த்து…

“என்ன வேணுமின்னாலும் .. செய்ய உனக்கு பர்மிஷன் கொடுத்து 2 நாளாச்சு..!  ம்ஹும்… !!! இதுவரைக்கும் எதுவுமே நடக்கல, இதுல அதிகாரம் வேற… !” என பெருமூச்சோடு, மெதுவாக சொன்னாலும், வெற்றியின் காதில் விழுமாறு சொன்னவளை பார்த்தவன்,

“நீயெல்லாம் திருந்திட்டா… நாடு என்ன ஆகும்… ?! இந்த ஜென்மத்துல, நீ மாற மாட்ட…! ச்சை…!! உன்கிட்ட பேச நினத்சேன் பாரு.. என்னைய…” என சுத்தி பார்த்தவனை பார்த்து,

“மாமா அடுச்சுக்கவா தேடற… நல்லதா, நா எடுத்து தரவா…?!” என கேட்ட கனியை, “அடிங்க..!” என தனது கரத்திலிருந்த துணியை, அவள் மீது வீசி விட்டு துரத்த,

“அய்யோ.. அத்தம்மா உங்க பையன், என்ன அடுச்சு கொல்ல பார்க்கறாரூ..!” என கத்தியபடி ஓடியவளை, வெளியே சென்றிடாதவாறு,

“அடியேய் கத்தாதடீ…! நா அடிக்கவே இல்ல.. அதுக்குள்ள கத்தி ஊர கூட்டற…! கையில சிக்கினா இருக்குடீ, உனக்கு!” என சொல்லியபடியே விரட்ட,

“வேணாம் மாமா… கிட்ட வந்தா, இன்னும் கத்துவேன்… !” என்றபடியே கட்டிலை சுற்றி ஓடியவள், இறுதியாய் அவனின் உடை குமியலில் விழ…. அவளை விரட்டியவனும், அவளின் எதிர்பாரா செயலில், சேர்ந்தே விழுந்தான் அவளின் மேல்….

சில நொடியில் நடந்த, இந்த நிகழ்வில், அவளின் மேல் மொத்தமாக கவிழ்ந்திருந்த வெற்றிக்கு, வெகு அருகில் தெரிந்த, அவளின் கண்களும்… அதில் எப்போது வீற்றிருக்கும் குறும்பும் மயக்கத்தை கொடுக்க, மெல்ல பார்வையை கீழிறக்கியவனை கவர்ந்திழுத்தது.. அவளின் ஓயாமல் பேசும் இதழ்கள்…

அவனின் பார்வை சென்ற இடம் உணர்ந்த கனியிடம், அதுவரை இருந்த  குறும்பு மறைந்து, அவ்விடத்தை மெல்லிய நாணமும், பெண்மைக்கே உரித்தான பதட்டமும் ஆக்கரமிக்க, அவளின் முகத்தினை சிவக்க செய்தது.

அவளின் முகத்தில், திடீரென தோன்றிய மாறுபாட்டில், விரும்பியே தொலைந்து போக நினைத்தவன், மெதுவாக, அவளின் நடுங்கும் இதழை நெருங்க, அவனின் நோக்கம் புரிந்து, அவளின் இமைகள் மூடிக்கொண்டது, பெரும்  எதிர்பார்ப்போடு…

இதுவரை, எந்த பெண்ணிடம் தோன்றாத உணர்வோடு, அவளை நெருங்கி, அவளின் இதழை, தனது இதழால் அணைத்தவிருந்த நேரம்….

“கனிம்மா .. என்னடா?!  எதுக்கு கூப்பிட்ட…?!”  என்ற படி கதவை திறந்த சந்திராவின் பேச்சு குரலில், அடித்துபிடித்து விலகிய வெற்றியும், சட்டென, எப்படி அந்த சூழலில் பேசுவது! என புரியாது தவித்த கனியும், இருக்கும் நிலை, அவர்கள் முகம் காட்டிய வெக்கம், நடந்ததை ஒருவாறு புரிய வைக்க,

திரும்பி நின்றவாரே, “நைட் டிபன் ரெடி பண்ணி வைக்கறேன்… சீக்கிரமா, வந்து சேருங்க…!” என்றபடியே, சந்தோஷத்தோடு, அவசரமாக கதவை அடைத்து செல்ல..

அதுவரை இழுத்து பிடித்த மூச்சை, ‘உஸ்…!!’ என வெளிவிட்ட வெற்றி.. திரும்பி கனியை பார்க்க, அவளும் வெக்கத்தோடு, அசட்டு சிரிப்பொன்றை தந்தபடி, எழுந்து வெளியே ஓடிபோனாள்..

இதுவரை உணராது புதுவித உணர்வோடு.. “வெற்றி.. நிஜமா அவ மோகினி தான்… நைட் அவகிட்ட பேசற.. அடுத்து ……!!” என நினைத்தபடி.. எழுந்து அவனே, தனது அறையை ஒழுங்கு செய்துவிட்டு, அழகிய கனவோடு குளியலறை சென்று, சிறு குளியலை போட்டவன்,  இரவு உணவிற்காக கீழே சென்றான்.

 

அத்தியாயம் 11

மாலை கனியுடன் இருந்த நெருக்க நிலை, வெற்றியை மெல்ல தடுமாற வைத்திருக்க, அவளின் வரவுக்காக ஆவலாக காத்திருந்தான் தனது பால்கனியில்….

“லூசு… நா சிக்னல் கொடுத்துட்டு வந்து எவ்வளவு நேரமாச்சு..! புருஷன் வர சொன்னான்னு.. கொஞ்சமாச்சும் இருக்கா?! இப்படி வர்றதுக்கே லேட் பண்ணா, நா பேச வேண்டியத எப்ப பேசி… மத்தது.. விடிஞ்சிடும் போ..!” என கடுப்பில் உலாத்தியபடி, புலம்பியவனின் குரல் கனிக்கு கேட்டதோ….

அவன்  கடுப்பை மேலும் கிளப்பும் ஐடியாவில், தனது அத்தம்மாவோடு ஜாலியாய் கடலை போடும் பணியில் ஈடுபட்டிருந்தாள். “அத்தம்மா, நீங்க என்ன இந்த தமிழ் சீரியல் பார்த்து ஒப்பாரி வச்சிட்டு இருக்கீங்க.. ?! டூ பேட்…! இதெல்லாம், ஓல்டீஸ் பார்க்க வேண்டியது..! உங்கள மாதிரி என்றும் 16 எல்லாம் பார்க்கறதுக்காகவே, விதவிதமா கொரியன் சீரியல்ஸ் வருதே.. ஏன், அத நீங்க ட்ரை பண்ண கூடாது..?!” என்ற கனியின் ஆலோசனைக்கு,

“கனிம்மா, அதெல்லாம் பார்க்கலாம்டா.. ஆனா புரியாத பாஷைல எப்படிடா…?!” என தனது சந்தேகத்தை சந்திரா முன்வைக்க,

“அத்தம்மா..  பாஷையா முக்கியம், சீன் தான் முக்கியம்..! முதல்ல, நீங்க அத பாருங்க.. அப்புறமா நீங்களே, அது என்ன டைலாக்கா இருக்குமின்னு சொல்லிடுவீங்க..  ஓனா(own)வே…! உங்க கிரியேட்டிவிட்டிய தூண்டி விட ஒரு நல்ல சான்ஸ் அத்தம்மா….!” என விளக்கி கொண்டு, கொரியன் சீரியலில் மூழ்கி விட…  வெற்றியின் நிலையோ கடுப்பின் உச்சத்தில்… !!!!

தனது அத்தம்மாவோடு பேசி, சிரித்து.. சீரியலை கலாய்த்து.. என நேரம் கடத்தியவளோடு பேசியபடியே நேரத்தை பார்த்த சந்திராவுக்கு, தூக்கி வாரி போட்டது, கடிகாரம் காட்டிய நேரத்தை கண்டு…

“கனிம்மா…  இவ்வளவு நேரமாவா தூங்காம உக்காந்திருக்கோம்?! வெற்றி வேற மேல போய் ரொம்ப நேரமாச்சு. போடா, நம்ம நாளைக்கு பேசிக்கலாம்!” என்று படபடத்தார், மாலை நடந்த நிகழ்வை பார்த்த பின்பும்..  பொறுப்பில்லாது மருமகளை கீழே பிடித்து வைத்த மடத்தனத்தில்….

சந்திராவின் படபடப்பு எதனால்… என தெரிந்தும், “இப்ப என்ன அத்தம்மா, கொஞ்சம் தான் லேட் ஆச்சு..! மாமா, அதெல்லாம் கோபப்பட மாட்டாங்க..! அப்படியே கோபப்பட்டாலும், இந்த கனிக்கா சமாளிக்க தெரியாது?!” என கெத்தாய், சுடிதார் காலரை தூக்கிவிட்டவள், மனசாட்சியோ..

“அடியேய்.. கனி! நீ, என்னத்துக்கு நேரம் ஓட்ட உக்காந்திருக்கன்னு.. அவங்களுக்கு தெரியாம போகலாம்.. பட், ஐ நோ ஆல் டீட்டைல்ஸ்…! உனக்கு பாடி ஸ்ராங்.. பேஸ்மெண்ட் வீக்குன்னு.. எனக்கு நல்லாவே தெரியும்.. !” என சம்மன் இல்லாது ஆஜர் ஆக….

“இங்க பாரு… நானே மாமா கிட்ட வந்ததுல இருந்து, எனக்குள்ள என்னமோ ஆகிடுச்சோன்னு.. குழம்பி போய் இருக்கேன்..! இதுல நீ வேற, டீடைய்யிலூ..  பால்டாயிலூன்னு…” என மனசாட்சியோடு மல்லுகட்டியவளை,

சந்திராம்மா, “கனிம்மா, போ மேல.. நானும் போய் தூங்கறேன்!” என கட்டாயபடுத்தி மேலே அனுப்பிவிட,

“கடவுளே… கடவுளே… இது வரைக்கும் உங்க கிட்ட எந்த டீலும் வச்சுக்கிட்டதே இல்ல. பஸ்ட் டைம் நமக்குள்ள ஒரு டீல்.. இது சக்சஸ்புல்லா முடுஞ்சா, நம்ம காண்ட்ராக்ட் அடிக்கடி போட்டுக்கலாம்…சரியா!” என கடவுளிடம் கண்டிஷன் போட்டவள் தொடர்ந்து…

“இப்ப நம்ம முதல் டீல் என்னன்னா, நா ரூமுக்கு போகும் போது, மாமா தூங்கியிருக்கனும்.. ஓகே!” என்ற படி, மெல்ல நடந்து, அவர்கள் அறை வாசலில் நின்றவள், மெதுவாக தலையை உள்ளே விட்டு பார்க்க,

அறை முழுவதும் இருந்த இருளில், எதுவும் புலப்படாமல் இருக்க, “லைட்ஸ் ஆஃப் ஆகியிருக்கறத பார்த்தா.. மாமா தூங்கிட்டாங்க தான் போல.. ஓ காட்..! நம்ம பஸ்ட் டீல் சக்சஸ்…! தேங்க்யூ.. சோ மச்…!” என்ற படியே, ஜாலியாய் உள்ளே வந்து கதவடைத்த நொடி, அறை முழுவதும் ஒளி வெள்ளம் பாய்ந்தது வெற்றியின் செயலால்….

லைட்ஸ் அனைத்தும் உயிரூட்டப்பட்டதிலேயே, வெற்றி உறங்காது இருந்து புரிய, அவன் இருக்கும் திசையில் திரும்பாது… கதவையே பார்த்தபடி, கண்ணுக்கே தெரியாத கடவுள் அவள் முன் இருப்பது போல நினைத்து, ‘இப்படி சொதப்பிட்டையே கடவுளே..! முதல் தடவ ஒரு குழந்த புள்ள கேட்குதேன்னு.. கொஞ்ச மாச்சும் ஈவு இறக்கமில்ல.. இப்படி வந்து, வாண்ட்டேடா மாட்டி விட்டுட்டையே…!’ என கெஞ்சும் முகபாவத்தில் கேட்டவள், ‘இனி உனக்கும் எனக்கும் நோ டீல்…. கனி உன் கூட டூ விட்டாச்சு..!’ என கோபவமாய் முகத்தை வைத்துக் கொண்டு, ஆர்க்யூ செய்தபடி இருந்தவளை,

“க்ஹுக்கும்…!!!” என்ற வெற்றியின் கனைப்பு சத்தம் நிஜத்திற்கு அழைத்து வர, ‘ஈ…. !!!!’ என அனைத்து பற்களும் தெரியும் படி, அசட்டு சிரிப்போடு வெற்றியை பார்த்தவள்,

“மாமா.. இன்னுமா தூங்கள நீங்க..! இப்படி தூக்கம் கெட்டா.. உடம்பு என்னத்துக்கு ஆகும்.. போங்க.. போய் தூங்குங்க..!” என கடகடவென பேசிவிட்டு, அவனை கடந்து செல்ல போனவளின் கையை பிடித்தவன்,

“நா, என்ன சொல்லிட்டு மேல வந்தேன்?! நீ வர்ற நேரத்த பாரு..!” என கடிந்த பற்களுக்கு இடையே அழுத்தமாய் கேட்க,

“அது வந்து.. மாமா.. அத்தம்மா.. தனியா.. நானு.. கூட..!” என அவன் கைகளுக்குள் மாட்டியிருக்கும், கையை உருவி எடுக்கும் முயற்சியோடே.. விட்டு விட்டு பேசியவளை, சுண்டி இழுத்து, தன் மேல் விழச்செய்தவன், மெல்ல அணைத்து,

“ஏன்டீ ! அத்தம்மா தனியா இருக்காங்கன்னு, அவங்களுக்கு கம்பெனி கொடுக்கற.. அத்தம்மா.. பையனும் தனியா தான் இருக்கான்.. அவனுக்கு கம்பெனி கொடுக்கணுமின்னு  தோணுதா உனக்கு…!” என கனியின் காதுமடலில், தனது கற்றை மீசை உரச  சொன்னவனின் மெல்லிய குரலில், கனியின் மேனியெங்கும் சிலிர்ப்போடு கூடிய நடுக்கத்தை காட்ட, அவளின் காதிற்கும், கன்னத்திற்கும் இடையே முத்தத்தை தந்தவன், அவளை விட்டு விலகி, அவளின் முகம் பார்க்க,

கனியின் சிவந்த நிறம் கொண்ட முகம்.. இப்போது மேலும் சிவந்து, ஒரு வித அவஸ்தையில் இருப்பதை காட்ட, தனது உதடை கடைவாயில் வைத்தபடி, மெல்ல உதடுபிரியாது சிரித்தவன், “அராத்து..  அமைதியா நிக்கறத பார்த்தா.. மெயின் ஸ்விட்ச் அங்க தான் போல..!” என கண்ணடித்து கூற..

அவன் விலகி நின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, சட்டென அவனிடமிருந்து நழுவி தூரம் சென்றவள், “மாமா லேட் ஆகிடுச்சு, எனக்கு தூக்கம் வருது..!” என, அவன் தந்த முத்தத்தால் எழுந்த அவஸ்த்தையோடு.. சொன்னவளின் நிலையை புரிந்து கொண்ட வெற்றி, இதுவரை இருந்த மயக்க நிலையை மாற்றிக்கொண்டு…

“கனி.. எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. ஜஸ்ட் பேசவாச்சும் செய்யலாமா…?!” என கேட்க,

‘ஜஸ்ட் பேச்சு!’ என்றதில் கொஞ்சம் இயல்புக்கு வந்தவள், “ஓ! தாராளமா பேசலாமே.. மாமா!” என கூற ..

‘இவள என்ன செய்ய.. பேசலாமின்னா, குதிச்சிட்டு வர்றா…! பேச்சோட, செயல காட்டுனா . கவுந்தடுச்சு தூங்கறேன்னு சொல்றா..! வெற்றி, உன் பாடு ரொம்ப திண்டாட்டம் தான்..!’ என அவனுக்குள்ளேயே, நொந்து கொண்டவன் நெற்றியில் மானசீகமாய் அறைந்து கொண்டான்.

“கனி.. நா சொல்ற விசயத்தை, கொஞ்சம் சீரியஸ்ஸா கேளு..!” என்றதும்,

“ஹாஸ்பிடல் போகணுமா.. மாமா?!” என கேட்க,

“அங்க எதுக்கு..?!” என கேட்க வந்தவன், அவளின் பேச்சை, ‘எப்படி கனெக்ட் செய்ய வேண்டும்’, என்ற முந்தைய அனுபவத்தில் தெரிந்திருந்ததால், கனியை பார்த்து முறைக்க, “ஹீ…!!” என பல்லை காட்டியவள், “நீங்க கண்டின்யூ பண்ணுங்க மாமா…” என சொல்லிட..

“உன்னையெல்லாம்…!!” என்ற படியே… “இங்க பாரு கனி.. எனக்கு பஸ்ட் இப்படி குறுக்க பேசறது பிடிக்காது…! அதனால, நா பேசற வரை அமைதியா கேளு..!” என அழுத்தமாய் சொல்லிட..

தனது கைகளை கட்டி, ஒரு விரலை வாய் மீது வைத்து, மெத்தையில் சம்மணம் போட்டு அமர்ந்து.. “ஓகே வா.. மாமா!” என்பதாய் தலையசைத்தவளை கண்டவனுக்கு, சிரிப்பு வந்தாலும், இப்போது சிரித்தால், அவனை பேச விடமாட்டாள் என்பதால், முகத்தை சீரியஸ்ஸாகவே வைத்துக்கொண்டு..

“கனி, எனக்கு கல்யாணம் செஞ்சுக்கறதுல சுத்தமா இன்ட்ரஸ்ட்டே இல்லாம தான் இருந்தேன். அது ஏன்னு தெரியுமா….” என அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே….

“அதான் எனக்கு நல்லா தெரியுமே.. மாமா!” என சொல்ல, “என்ன.. தெரியுமா!!! என்ன தெரியும்..!!” என, ‘தன் மனதிற்குள் இருப்பது, இவளுக்கு.. எப்படி தெரிஞ்சுது?!’ என்ற ஆச்சர்யத்தில் கேட்க,

மெத்தையிலிருந்து, தாவி குதித்து இறங்கியவள், ஜன்னல் புறம் செல்ல, “கனி, என்ன கேட்டதுக்கு பதில் சொல்லாம அங்க எங்க போற..?!”  என கேட்க,

“அட இருங்க பாஸ்.. ஒரு பெசிஷன்ல நின்னுட்டு, சொன்னா தான்..  ஏப்ட்டா இருக்கும்..!, நீங்க அந்த சேர்ல அப்படியே உக்காந்துக்கோங்க மாமா.. அப்ப தான் ஃபீல் பண்ணி பார்க்க சரியா இருக்கும்..!”
என சொல்ல.. வெற்றிக்கு அப்போதே தெரிந்து போனது, ‘அவ லூசு தனமா.. எதையோ சொல்லி நம்மள கடுப்பேத்த போறா..!’ என்பது…

அவன் நினைப்பை வீணாக்காமல், அந்த ஜன்னல் கம்பியை பிடித்தபடி.. சீரியஸ்ஸாக முகத்தை வைக்க முயன்று.. வெளியே தெரிந்த நிலவை பார்த்தவளை, கண்டு வெற்றியின் நிலை தான் படுபயங்கரமாக மாறிக்கொண்டிருந்தது.

வெற்றி பேசுவதை போல, “கனி, நா காலேஜ் படிக்கும் போது, ஒரு பொண்ண உருண்டு பொறண்டு லவ் பண்ணேன். அவளும் என்ன லவ் பண்ணா..! ஆனா… அவ என்கிட்ட பொய்யா.. நடுச்சிருக்கான்னு, எனக்கு அவ பிரிஞ்சு போனப்பா தான், தெருஞ்சுதும்மா… தெருச்சுது… அதனாலேயே பொண்ணுங்கல கண்டாலே.. ஒதுங்கி ஒதுங்கி போயிடுவேம்மா… ஆனா பாரு.. நீ வந்த நேரம், எல்லாமே….  மாறிடுச்சு…!” என நெஞ்சில் கரம் வைத்து, நடிகர் திலகம் எபெக்ட்டை கொண்டு, கதை சொன்னவளை பார்த்தவன், ‘அவ்வளவு தானா!’ என்பது போன்ற முறைப்பான பார்வை பார்த்திருக்க…

திரும்பி அவனை பார்த்தவள், “ஓ! அப்படி இல்லையா…?! சரி, இப்ப சரியா சொல்றேன் பாருங்க…!” என்ற படி மீண்டும், அதே போல் நின்றவள், “கனி, நா காலேஜ் படிக்கும் போது விக்கி விக்கின்னு..  ஒரு ப்ரண்ட் இருந்தான். அவன்னா எனக்கு உயிரு.. அவன ஒரு பொண்ணு காதலிச்சு ஏமாத்திட்டா.. அவன், என் கண்ணு முன்னாடியே.. ‘அவதான் என் சாவுக்கு காரணமின்னு’ சொல்லிட்டு, சூசைட் பண்ணிட்டான்..!” என்றவள், கண்ணீர் வடிவது போலவும், அதை துடைப்பது போலவும் பாவனை காட்டிவிட்டு, “அப்ப முடிவு செஞ்சேன்! பொண்ணுங்கன்னா.. பக்கா சுயநலவாதிங்க, அவங்க பொழுதுபோக்குக்காக எதையும் செய்வாங்கன்னு.. அப்படிபட்ட பொண்ணுங்களுக்கு, என் வாழ்க்கையில இடமே இல்ல… இல்ல..  இல்ல..!”  என எக்கோ டைப்பில் சொல்லி திரும்பியவள், வெற்றி பார்த்த பார்வையில், ‘அச்சோ…! கருப்புசாமி கன்னை எடுக்க போகுதோ….!!’ என்ற படபடப்போடு நின்றாள்…

அத்தியாயம் 12

வெற்றி, கனி இருவரின் திருமணம் முடிந்து.. நாட்கள் வேகமாய் கடந்து கொண்டிருக்க, கனிக்கு எப்படி கழிந்ததோ, வெற்றிக்கு மிக மிக பரபரப்பானதாகவே போனது, கனியிடம் பேசவும் நேரமின்றி…

அன்று இரவு, கனியின் கதை சொல்லும் படலத்தில் கடுப்பாகி இருந்தவனை பார்த்த போது, ‘அச்சோ போச்சு… நம்மாளு போலீஸ்ன்னு மறந்து போய், இப்படி கடுப்பேத்திட்டோமே..! கருப்பு சாமி முறைச்சு பார்க்கற மாதிரியே பார்க்கறாரே..!! பொட்டுன்னு துப்பாக்கிய தூக்கி போட்டுடுவாரோ…!!!’ என்று ஒரு நிமிடம் பயம் வந்தாலும், ‘ச்ச.. ச்சா… மாமா நம்மள அப்படியெல்லாம் போட்டு தள்ள மாட்டாங்க!’ என்ற தைரியமும் கூட, கொஞ்சம் வெளியே கெத்தாகவே காட்டி நின்றாள், அவன் வேகமாய் அவள் புறம் வரும் வரையில்….

அவன் எழுந்த வேகத்திற்கும், அவளிடம் வந்த வேகத்திற்கும், கனியின் ஒட்டுமொத்த தைரியமும் கற்புரமாய் கரைய.. “மாமா.. மாமா… ப்ளீஸ் மாமா! தெரியாம வம்பு பண்ணிட்டேன் மாமா.. இனிமே வாயே திறக்க மாட்டேன் மாமா.. நீ என்ன சொல்றீயோ, அதே மாதிரி அப்படியே அடி மாறாம செய்யறேன் மாமா… அடிச்சிடாத மாமா.. குழந்த புள்ள உடம்பு தாங்காது மாமா…!” என கண்களை இறுக மூடி, காதை இரு கரம் கொண்டு மூடி, மூச்சுக்கு முன்னூறு மாமா போட்டவள்.. சிறிது நேரம் சென்றும், வெற்றி எதுவும் செய்யாமல் இருப்பதை பார்த்து, ஒற்றை கண்ணை திறந்து, மெல்ல தலைநிமிர்த்தி பார்த்தவள், பட்டென விழி விரித்து, அதிர்ந்து நின்றாள், வெற்றி நின்ற கோலத்தை கண்டு….

அதுவரை ட்ரக் போண்டும், டீசர்டுமாய் இருந்தவன், இவள் பேசி முடித்து நிமிர்ந்த போது, “ம்ம்…! ம்ம்..!” என்றபடியே, வேக வேகமாய், தனது  பேண்ட்டை கழட்டிவிட்டு.. வெளியே செல்வதற்கு தோதாய், பார்மல் பேண்ட்டை, போடுவதை கண்டு, ஒரு நொடி திகைத்தாலும், தன் முன் அவன் செய்யும் செயலில், “ச்சீ… மாமா, என்னது?!”  என்றபடி திரும்பி நின்றாள் முகத்தை மூடி…

உடையை மாற்றிக்கொண்டே, காதில் இருந்த ஹெட் போனில்.. “சதீஷ்.. வேற இன்பார்மேஷன் கிடச்சா, இமீடியட்டா எனக்கு இன்பார்ம் பண்ணிடு.. இன்னும் கொஞ்ச நேரத்துல, நா ஸ்டேஷன் வந்திடுறேன். சார்கிட்டயும் நா வர்றேன்னு இன்பார்ம் பண்ணிடு” என பேசியவனின் பதட்டமும், பரபரப்பும் ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரியவைக்க, இதுவரை இருந்த விளையாட்டு தனத்தை துறந்தவளாய், அவனின் பர்ஸ், வாட்ச் என எடுத்து கொடுத்தவள், கேள்வியாய் அவன் முகம் பார்க்க,

“ஒரு முக்கியமான கேஸ்டா, இப்ப விளக்கம் சொல்ல முடியாது.. நா எப்ப வருவேன்னு தெரியாது.. அம்மாகிட்ட சொல்லிடு, பத்திரமா இருங்க ரெண்டு பேரும், டைம் கிடச்சா கால் பண்றேன்!” என்றபடியே, ஸ்சூவை அணிந்தவன், அடுத்த சில நிமிடத்தில், வாகனத்தில் பறந்திருந்தான் தனது பணிக்காக…..

‘என்ன நடந்தது!’ என்பது புரியாமல், சிறிது நேரம் வாசலிலேயே நின்றவளை தழுவிய குளிர்ந்த காற்றில், நிற்கும் இடமும், சூழலும் நினைவில் எழ, கதவை அடைத்து விட்டு, வந்தவள் குழப்பத்தோடே உறங்கி போனாள்.

மறுநாள் விடியலில், தொலைகாட்சியில் வந்த செய்தியை பார்த்த போது தான் தெரிந்தது, வெற்றி அவ்வளவு பதட்டத்தோடு சென்றதன் காரணம்.. தமிழ்நாட்டில், அதுவும் குறிப்பாக சென்னையிலிருந்து மட்டும், ஒரே நாளில் கிட்டத்தட்ட நாற்பது குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதை, அனைத்து மீடியாக்களும், ஹாட் டாப்பிக்காக ஒளிபரப்பிக்கொண்டிருந்தது.

அன்று முதல் வெற்றி வீட்டிற்கு வருவதே, ரெப்ரஸ் செய்வதற்கு மட்டுமே என்பது போல ஆகிற்று.

கிட்டத்தட்ட பத்து நாட்கள் சென்ற நிலையில், சந்திராம்மா, “இந்த மாதிரி நிறைய தடவை ஆகியிருக்கு கனி… நேரம் காலம் இல்லாம, நல்லது கெட்டதுன்னு ஒன்னுக்கும் போகாம, வீடு வாசல்ன்னு நினப்பே இல்லாம, சுத்தறதெல்லாம் என்ன பொழப்பு.

 

இது  வேணாம்டா.. வெற்றி… ஏதோ உங்க அப்பா தான், ஆசை பட்டு சொன்னாருன்னு.. இந்த வேலையில சேர்ந்த, இப்ப அவரோட ஆசைக்கு கொஞ்ச நாள் வேல பார்த்தாச்சு.. இந்த வேலைய விட்டுடு ன்னு சொன்னா, கேட்டா தானே!” என ஆதங்கத்தோடு சொல்ல,

“அத்தம்மா, நீங்க வேலையா பார்க்கிறத, மாமா சேவையா பார்க்கறாங்க…! இதுல தப்பில்லையே…. அதோட உத்தியோகம் புருஷலட்சணம்…!” என கண்சிமிட்டி லேசான புன்னகையோடு, வெற்றி தரப்பை விட்டு கொடுக்காமல் பேசியவளை,

“அவன வேலை பார்க்க வேணாம், சம்பாதிக்க வேணாமின்னு சொல்லலடா கனி, இப்பவும்  நமக்கு இருக்கற சொத்தை பராமரிச்சாலே போதும், இன்னும் ரெண்டு தலைமுறைக்கு வரும்… வீணா தூங்காம, சாப்பிடாம உடம்ப கெடுத்துட்டு நிம்மதியில்லாம… இருக்கறதுக்கா வேலையும்,  சம்பாத்தியமும்..” என தனது பக்கத்திலிருந்தே பேசியவர், மேலும்..

“நீயே சொல்லு கனி.. கல்யாணம் ஆகி ரெண்டாவது நாள் போனவன், இதுவரைக்கும் வீட்டுலையே தங்கல…! புதுசா கல்யாணம் பண்ணோமே… வீட்டுல ஒருத்தி இருக்கான்னாவது தோணுதா, அவனுக்கு..! கல்யாணம் நடந்தாலாவது, ஒழுங்கா வீட்டோட இருப்பான்னு நினச்சா… எங்கே….!” என சலிப்பாய் கூறியவரின், அருகே அமர்ந்து அவரின் கை பற்றி, முகம் பார்த்தவாறு,

“அத்தம்மா, ஒரு அம்மாவா உங்க ஆதங்கம் ரொம்ப ரொம்ப சரியா தான் இருக்கு…! ஒவ்வொரு அம்மாவும் எதிர்பார்க்கறது, தன் மகன் குடும்பம், குழந்தை, சேமிப்பு, சந்தோஷம், பாதுகாப்பு எல்லாமே கொண்டு சிறப்பா வாழணுமின்னு தான்..

சரி… எல்லாருமே அப்படி இருந்திட்டா.. யார் தான், இந்த மாதிரி குற்றம் செய்யறவங்க கிட்ட இருந்து மத்தவங்கள காப்பாத்தறது…?!” என கேட்ட கனியிடம்,

“அதுக்கு…  என் புள்ள தான் போகணுமா…?! எனக்கும், அவன் பத்திரமா வரணுமின்னு இருக்காதா..?! நா என்ன ஏழு புள்ளையா வச்சிருக்கேன். ஒன்னே ஒன்னு… அவனுக்கு எதுவும் ஆகிட கூடாது. சந்தோஷமா நிம்மதியா வாழணும் ன்னு ஆசை படறது குத்தமா?” என வந்த மருமகளும் தனக்காக யோசிக்காமல் மகன் சார்பாக பேசியதில் வருத்தத்தோடு கேட்க,

“அத்தம்மா.. நீங்க ஆசை படறதோ, நீங்க நினைக்கறதுலையோ தப்பே கிடையாது. ஆனா மாமா பார்க்கற தொழில், உயிர் காக்குற டாக்டர் தொழில விடவும் மேன்மையானது தெரியுமா? டாக்டர்ஸ் தான் கடவுள்ன்னு எல்லாரும் சொல்றாங்க. பட், அவங்கள விடவும் பலமடங்கு உயர்ந்தவங்க போலீஸ்.

இப்ப டாக்டர் ஒரு நோயாளி வந்தா, அவர காப்பாத்த முயற்சி மட்டும் தான் செய்வாங்க. அவங்களால முடுஞ்ச எபெக்ட் போட்டு போராடுவாங்க. பல சமயம் காப்பாத்திடறாங்க.. சில கேஸ் தோத்தும் போயிடும். இதுல அவங்களுக்கு எந்த லாஸும் கிடையவே கிடையாது.

ஆனா, போலீஸ் அப்படி இல்ல அத்தம்மா.. அவங்களுக்கு ஒரு உயிர காப்பாத்த போகும் போது, எப்படி வேணுமின்னாலும் ஆபத்து தேடிவரும். அவங்க கொஞ்சம் சுதாரிப்பா இல்லாம போனா, உயிர் போகவும் வாய்ப்பு இருக்கு. பல போலீஸ் அதிகாரிங்க தன்னோட கை, கால் இழந்து வீட்டுல முடங்கி இருக்காங்க..

நம்ம ஜாலியா கொண்டாடுற, எல்லா கொண்டாட்டத்துக்கும், அவங்க, தன்னோட வீட்டு கொண்டாட்டத்த விட்டுட்டு, வந்து நிக்கறதால தான் பாதுகாப்பா எல்லாரும் இருக்க முடியுது. அப்படி பட்ட உன்னதமான வேலையில இருக்கறதுக்கு, நீங்க பெருமை படணும் அத்தம்மா. மாமா அன்னைக்கி கண்ணு சிவந்திருந்துச்சே, அதுக்காக ஹாஸ்பிடல் போயிருப்பாங்க போல, வாங்கின மருந்த கூட சரியா எடுத்துக்காம, ஓடறாங்கன்னா.. அவங்க வேலை மேல வச்சிருக்கற மதிப்ப, நீங்க புருஞ்சுக்கோங்க அத்தம்மா. அத விட்டுட்டு இப்படி பேசறது சரியே இல்ல..!

இப்ப மாமா எடுத்திருக்கற, கேஸ் பார்த்தீங்க இல்ல, பாவம் அத்தம்மா, பச்ச குழந்தையில இருந்து, பதினஞ்சு வயசு பொண்ணு வரை கடத்தியிருக்காங்க. அவங்கள, நல்லபடியா மீட்டு கொண்டு வர, போராடற உங்க புள்ளைய பாராட்டாம இப்படி பேசறது ட்டூ பேட்…!” என்றவள்,

“இப்ப என்ன அத்தம்மா, உங்களுக்கு வாரிசு வேணும், உங்க பேர் சொல்ல! அவ்வளவு தானே! விடுங்க மாமா வேலை முடுஞ்சு வந்ததும், கேஸ்ஸுல எப்படி, தீயா வேலை பார்த்தாரோ… அதே மாதிரி இதுலையும் தீயா வேலை பார்த்து, உங்கள பாட்டி ஆக்கிடுறோம்.. இப்ப ஹேப்பியா..!” என இதுவரை பொறுப்பாக பேசியதற்கு நேர் மாறாக,விளையாட்டாக பேசியவளை நெட்டி முறித்து..

“ஜாடிக்கு ஏத்த மூடி தான் கனிம்மா.. அவன்கிட்ட வேலைய விட சொல்லி பேசினாலும், இப்படி தான் பக்கம் பக்கமா பேசியே சரிகட்டிடுவான். நீயும், அதே மாதிரி இருக்க. என்னைய பொருத்த வரை, என் குடும்பம் நல்லா இருக்கறது முக்கியம்.. சோ, நீயாச்சு உன் மாமானாச்சு.. எந்த ஆபத்தும் இல்லாம உன் மாமன் வந்தா, எனக்கு அதுவே போதும்..!” என்று சமாதானம் ஆனவரின், தோள் மீது சாய்ந்தவள்,

“டோண்ட் வொரி, அத்தம்மா..! மாமா எப்பவும் பர்பெக்ட்டா டார்கெட் பிக்ஸ் பண்ணி தான், ஏக்க்ஷன் எடுப்பாங்க.. சோ, டோண்ட் வொரி… பீ ஹேப்பீ…!” என விவேக் மாடுலேஷனில் சொல்லி சிரிக்க, சந்திராவும், இதுவரை இருந்த மனஅழுத்தம் நீங்க நகைத்தார்.

கனி பேச ஆரம்பிக்கும் போதே வந்து விட்ட வெற்றி, கனியின் பேச்சில் திகைப்போடு, பெருமையாய் பார்த்தான் எனில், அவளின் இறுதி பேச்சில் சிரித்தபடி, ‘அதானே. இந்த அராத்து அதோட குணத்த மாத்திக்காதே..!’ என்று நினைத்தபடி, அப்போது தான் வந்தது போல, நேராக மாடிக்கு சென்றவன், வந்த வேலையை முடித்து, மீண்டும் சென்றான் தனது வேலையை விரைவிலேயே முடிக்க….

 

 

அத்தியாயம் 13

நாட்கள் வேகமாய் நகர, படுக்கையில் நல்ல உறக்கத்தில் இருந்த கனியின் காதோரம், மெல்ல உரசிய மீசையும் “கனிம்மா..” என்ற அழைப்பிலும், சினுங்கலோடு, “போ மாமா…! சும்மா தூங்க விடாம…” என்ற படி  கண்விழிக்க, எப்போதும் போல இப்போதும், அருகே யாருமில்ல வெற்றிடம், அவளை மிகவும் தோய்வுற செய்தது.

புரண்டு, வெற்றி படுக்கும் பகுதிக்கு வந்தவள், அவனின் தலையணையை பார்த்தவாறு படுத்து,

“டேய் மாமா… வரவர நீ ரொம்ப என்னைய அவாய்ட் பண்ற.. இது சரியில்ல பார்த்துக்கோ.. கனவுல மட்டும் டெய்லி வந்து, “கனிம்மா..! முனிம்மா..!” ன்னு கொஞ்ச வேண்டியது… அடியேய் கனி, இப்படியே போனா.. கனவுலையே குடுத்தனம் நடத்தி, புள்ளகுட்டி கூட கனவுல தான் பெத்துக்க போற…!” என புலம்பியவள்,

கோபமாக, அந்த தலையணையே வெற்றியின் சட்டையை பிடிப்பது போல பிடித்தவள், “இதோ பாரு மாமா, ஏதோ, முக்கியமான கேஸ், அதுவும் குழந்தைங்க சம்மந்தமானது ன்னு, நானும் விட்டு கொடுத்து, அடக்க ஒடுக்கமா இருந்தா.. அந்த கேஸ் முடுஞ்சு, ரெண்டு நாள் ஆகியும், கையில சிக்காம ஆட்டமா காட்டுற. நீ மட்டும் என்கிட்ட மாட்டு… அப்புறம் பாரு, இந்த கனி என்ன செய்யறான்னு…?!” என தனது மனதில் இருந்த ஏக்கத்தை, கோபத்தை அவளின் பாணியில் வெளிப்படுத்தியபடி இருந்தவள்,

“மாட்டினா, என்னடீ செய்வ?!”  என்ற வெற்றியின் குரலில் அடித்துபிடித்து எழுந்தபடியே தடுமாற்றத்தோடு, “மாமா… எப்ப வந்த நீ!” என கேட்க,

“ஹும், நீ ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே வந்திட்டேன்!” என சொல்ல,

கனியின் மனமோ, ‘தான் பேசியதை கேட்டிருப்பானோ?!’ என்பதை விட அதிதீவிரமாய், ‘அப்ப காலைல.. கண்டது கனவா?! இல்ல, நிஜமாவே?! மாமா தான் அப்படி பண்ணியிருப்பாங்களோ?!’  என்று யோசித்தபடி நின்றவளை பார்த்தவன்,

“இப்படியே எத்தன மணி நேரம், நிக்க போற, இத்தன நாள் கழிச்சு, ஒருத்தன் வீட்டுக்கு வந்திருக்கான்னு கொஞ்சமாச்சும்.. அக்கறை இருக்கா..? போ, போய் அம்மா கஞ்சி வச்சிருந்தா எடுத்துட்டு வா..!” என சிடுசிடுக்க,

‘இதோ… வந்ததும் ஆரம்பிச்சிட்டாரு..! கனவுல மட்டும், நல்லா கொஞ்சற மாமா… நிஜத்துல இப்படி தான், நிமிஷத்துக்கு நிமிஷம் மாறி மாறி நடக்கற.. இதெல்லாம் சரியில்ல..!’ என மீண்டும் மனதினுள்ளே பேசியவளை, வெற்றி பார்த்த பார்வையில்,

“இதுலையெல்லாம் குறச்சலே இல்ல. எப்ப பார்த்தாலும் முறச்சுக்கிட்டு.. பொண்டாட்டிய பார்த்து விடுற லுக்கா இது… மக்கு…

நல்லவேளை, மாமாக்கு மூனாவது கண் இல்ல.. அப்படி மட்டும் இருந்திருந்தா, அவ்வளவு தான்.. இந்நேரம் நம்ம காலி.. கனி, முதல்ல போய் கஞ்சிய கொண்டு வந்து கொடு..  குடுச்சிட்டு, இன்னும் கொஞ்சம் வெரப்பா நிக்கட்டும்…!” என்று முனுமுனுத்தபடியே, கீழே சென்றவளை பார்க்க, வெற்றியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் வெளியேறிய அடுத்த நொடி, அவளின் செய்கையில் இதுவரை கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த சிரிப்பை வெளியிட்டவன், தனது உடையை மாற்றிவிட்டு, கீழே சென்றான்.

அந்த கேஸ் சம்மந்தமான, அனைத்து வேலைகளும், இரு நாட்களுக்கு முன்பே முடிந்திருந்தாலும், மேலும் சில  நடவடிக்கைகளையும், முடித்துவிட்டு விடியற்காலையில், தனது அறைக்கு வர, கனி படுத்திருந்த கோலம் பார்க்க, அவனுக்கு இப்போதே அவள் வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும், அவளை கொஞ்சம் குழப்பிவிட்டு, சர்ப்ரைஸ்ஸாக எதாவது செய்யலாம் என்று முடிவு செய்தவன், அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு,

அவளருகே சென்று மெல்ல முத்தமிட்டு அழைக்க, கனவு என நினைத்து கொண்டு, சினுங்கியவளை பிரிய மனமில்லாது, சட்டென விலகி நின்றவன், தனது திட்டப்படி, அவளை வெறுப்பேத்தி கீழே அனுப்பி வைத்தான்.

நேராக கடுப்போடு கிச்சனுக்கு வந்தவள், “அத்தம்மா… உங்க பையன் கிட்ட சொல்லி வைங்க.. இந்த கனி பொறுமையா.. இருக்கற வரைக்கும் தான் கூலா இருப்பா.. கோபம் வந்திச்சு.. குலுக்கின கோலா மாதிரி பொங்கிடுவா…!” என அலப்பரையை கூட்ட,

என்ன தான் அன்று, வெற்றிக்காக பேசினாலும், சில தினங்களாய் அவளின் அமைதியும், யோசனையோடு கூடி முகமும், சந்திராவையும் கவலைபடவே செய்தது. இப்போது, பழைய படி பேசும், தன் ஆசை மருமகளை பார்த்தவர், “என்னாச்சி கனிம்மா.. வெற்றி என்ன சொன்னான், நீ இப்படி காண்டாகற மாதிரி…!” என அவரும் அவளுக்கு இணையாக பேச்சை வளர்த்த படி திரும்ப,

தனது இரு கைகளையும் கட்டி, கிச்சன் வாயிலில் நின்றிருந்த வெற்றி, சைகையில், ‘தான் இருப்பதை சொல்ல வேண்டாம்!’ என்றிட, சரியென தலையசைத்தவர், கனியின் பதிலுக்காக பார்க்க,

வெற்றி நிற்பதை அறியாமல் கனி, “நீங்க கஞ்சிய கொடுத்து,  நெட்டகொக்கா மட்டுமில்லாம..  நல்லா வெறப்பா வேற வளர்த்து வச்சிருக்கீங்களே.. ஒழிய வெவரமா வளர்க்காம போயிட்டீங்க!  அதென்ன எப்ப பார்த்தாலும், மூஞ்சிய வெறப்பா, முறப்பா வச்சிட்டு சுத்தறது..?! அப்படி முறைக்கும் போது, மூக்குலையே நங்குன்னு குத்தனும் போல இருக்கு…!” என பேச்சுக்கு தகுந்த, நடிப்போடு சொல்லிக்கொண்டிருக்க, தாயும், மகனும் அவளின் பேச்சு, செயல் இரண்டிலும் வரத்துடித்த சிரிப்பை, கஷ்டப்பட்டு அடக்கி நின்றனர் அவளின்  சேட்டையை ரசிப்பதற்காக..

“புதுசா கல்யாணம் பண்ணோமே.. பொண்டாட்டி ன்னு ஒருத்தி வீட்டுல இருக்காளே.. வந்தமா, அவள கொஞ்சுனமா, அவளை குஷிபடுத்துனமான்னு.. இல்லாம, போ போய் கஞ்சி கொண்டு வா, சோறு கொண்டு வான்னு … சரியான சோத்து மூட்ட…!” என்றவள்,

“அத்தம்மா… தெரியாம தான் கேட்கறேன், உங்க பையனுக்கு அதுல வெவரம் ரொம்ப கம்மியா இருக்கும் போலவே, நாலு கொரியன் சீரியல பார்க்க வச்சா என்ன..?!” என கேட்க, மகனின் முகம் போன போக்கை பார்த்து, கஷ்டப்பட்டு சிரிப்பை கட்டுப்படுத்தியவர், “அத என்கிட்ட கேட்கறதுக்கு பதிலா, உன் மாமா பின்னாடி தான் நிக்கறான், அவனையே கேளு!” என்றபடி, கிச்சன் மேடையை நோக்கி திரும்ப,

அதுவரை, ஜாலியாக பேசியவளுக்கு, தான் பேசியதை வெற்றி கேட்டுவிட்டான்.. என தெரிந்ததும், தயக்கத்தோடு ட்ரேட் மார்க், “ஈ….!!” என்ற அசட்டு சிரிப்போடு, அவனை பார்க்க, உள்ளே சிரிப்பை அடக்கி வெளியே முன்பை விட அதிகமாய் முறைத்தபடி நின்றவன்,

“அராத்து, நீயெல்லாம் சப்ஸ்ட்யூட் இல்லாத பீஸ்டீ.. எப்படி.. எப்படி நாங்க வெரப்பா, முறப்பா திரியறோமா..?! அடிங்க..!!” என விரட்ட,

“அத்தம்மா… ஹெல்ப் மீ..!!!” என்ற படி கனியும், “சிக்கினா.. உனக்கு இருக்கு டீ!!!” என்று வெற்றி சிரித்தபடியும், சந்திராவை இடையே விடுத்து, இருவரும் துறத்தியபடி இருக்க,

இருவரின், சிறுபிள்ளை விளையாட்டு மனதுக்கு நிறைவை அவருக்கு தந்தது என்றால் மிகையில்லை. வெற்றி தேவைக்கு சிரிப்பானே ஒழிய, இதுபோல மலர்ந்து சிரித்தது எல்லாம் கிடையாது.. அதுவும் போலீஸ் ஆன பிறகு, அவனின் புன்னகையே குறைந்தவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்போது கனியால், அவன் சிரிப்பதும், சிறுபிள்ளை போல துரத்தி கொண்டிருப்பதும், பார்க்கும் போது, மனம் முழுதும் நிறைந்து போயிற்று தாயாய் சந்திராவிற்கு….

துரத்தியபடியே, வெளி தோட்டத்திற்கு சென்றவர்களுக்கு, அங்கே தோட்டத்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பைப் கண்ணில் பட, அதற்கும் போட்டி போட்டு எடுத்த வெற்றி, முதலில் கனியை மொத்தமாய் நனைய வைத்தான் எனில், அவனோடு மல்லுக்கட்டி, அதை பரித்த கனியும் வெற்றியை முழுவதுமாய் நனைத்து விட்டே ஓய்ந்தாள்.

அதுவரை ஓட்டமும், ஆட்டமும் கழிந்த பொழுதின் முடிவில், இருவரும் கலைத்து போய், அங்கிருந்த புல்லில் மல்லாந்து படுக்க, இருவரின் முகமும் அந்த தோட்டத்து மலர்களை போல, மலர்ந்து கிடந்தது.

மூச்சு வாங்க, சிறிது நேரம் வானத்தை பார்த்து கிடந்தவர்கள், சில நிமிடத்திற்கு பின் ஒருவரை ஒருவர் பார்க்க, வெற்றியின் பார்வையில், முகம் இன்னும் வெக்கத்தால், மலர்ந்து சிவந்து இருக்க, ரோஜா மீதான பனித்துளி போல், அங்கங்கே வீற்றிருந்த நீர்துளி, இருக்கும் இடத்தை மறந்து, அவனை அதை பருக அழைப்பு விடுப்பதாய் தோன்ற, அவளை மிகவும் நெருங்கி, அவளின் நீர்துளியை உதடு கொண்டு துடைத்திடும் நேரம்,

பெண்மைக்கே உரித்தான நாணமும், இடம் பற்றிய அக்கரையும், கனியை வெற்றியின் நெருக்கத்தை அனுபவிக்கவிடாது தடுக்க, அவன் இதழ் தன் முகம் நெருங்கும் முன்பே, அவளின் கரம் கொண்டு, அவனின் இதழுக்கு தடை போட்டவள், தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட வார்த்தையை கஷ்டப்பட்டு, “மாமா.. இங்க வேணாமே..!” என சொல்ல, அதுவும் சத்தமின்றி காற்றாகி தான் போனது.. அவளுக்கே ஆச்சர்யம் தான், வாயாடி பட்டம் பெற்ற தன் நிலைமையை நினைத்து….

அவளின் முகத்தையே பார்த்தபடி இருந்த வெற்றிக்கு, அவளின் வார்த்தை தெளிவாக புரியாத போதும், கண்களின் தவிப்பும், தவிர்ப்பும்.. இருக்கும் சூழலை தெளிவாக்க, சிறு புன்னகையோடு, தன் இதழுக்கு தடையாய், இருந்த அவளின் மென்மையான கரத்திற்கு முத்தத்தை பரிசாக்கினான் வெற்றி…

அவன் இதழில், கரம் வைத்திருந்த கனிக்கோ.. அவனின் மூச்சு காற்றின் சூடும், இப்போது அவன் தந்த முத்தத்தினால் வந்த கூச்சமும், அவனிடமிருந்த தனது கரத்தை பிரித்தவள், அவனை திரும்பியும், பாராமல் தங்களின் அறையை நோக்கி ஓட்டமெடுத்தாள்.

அவள் விலகி சென்றாலும், மனதில் ஒருவித நிறைவோடு, மீண்டும் தனது இரு கரத்தையும் தலைக்கு கீழ் கோர்த்து, வானத்தை நோக்கி படுத்தவன், நடந்த நிகழ்வின் இனிமையை சுகமாய் கண்மூடி ரசிக்க துவங்கினான்.

எவ்வளவு நேரம் அப்படி இருந்தானோ, சந்திராவின் அழைப்பில், அதே சிரிப்போடு வீட்டிற்குள் வந்தவன், கனியே தேட, அவளோ தனது அத்தம்மாவை கேடையமாக்கி, அவருக்கு பின் மறைந்திருந்தாள். “அம்மா, நா போய் பிரஸ்ஸாகி வர்றேன் டிபன் எடுத்து வைங்க?!” என்றபடி சென்றவன், வரும் போதே, வெளியே செல்வது போல பார்மல் உடையணிந்து, ஒரு பேக்கோடு வர, அதுவரை இருந்த நிலை மாறி, கனியின் முகம் மெல்ல சுருங்கி போனது…

*********

கனியை போலவே, சந்திராவிற்கும் மகனின் இந்த செயல் கோபத்தை கொடுக்க, “வெற்றி… என்ன நினச்சிட்டு இருக்க உன் மனசுல?! கேஸ்ஸு, அது இதுன்னு.. இத்தன நாள் வீட்டுலையே தங்கல.. சரி போனா போகுதுன்னு விட்டா, வந்த கொஞ்ச நேரத்துல, மறுபடியும் அதுவும் பேக்கோட கிளம்பி நிக்கற.. இதுக்கு தான், இந்த  கருமம் புடுச்ச வேலையே வேணாமின்னு சொன்னேன். கேட்டையா நீ..

கல்யாணம் வேணாமின்னு சொன்னவன கட்டாயபடுத்தி கட்டி வச்சது தப்பு தான். அதுக்காக, அவள இப்படி தவிக்க வச்சிட்டு, நீ சுயநலமா இருக்கறது சரியில்ல. இந்த லட்சணத்துல இவ சப்போர்ட் வேற..!” என கோபமாய் அவரின் ஆதங்கத்தையும், சேர்த்து காய்ந்திட,

பதில் சொல்லாமல் வந்து, டைனிங் டேபிளில் சிறு புன்னகையோடு அமர்ந்தவன், “அம்மா… செம பசி மொதல்ல சாப்பாட்ட போடுங்க. காலைல கஞ்சி கேட்டும் கொடுக்கல. கேஸ் டென்ஷன்ல சரியா சாப்பிடவே இல்ல. சாப்பிட்ட அப்புறமா மத்தத பேசலாம்…!” என்றவன், இடைவெளி விட்டு, யோசிப்பது போல நிறுத்தியவன், “அச்சோ.. அது கூட கஷ்டம் தான், ஏன்னா, ஏர்போர்ட் வேற போகணும். இன்னும் ப்ளைட்டுக்கு கொஞ்ச நேரம் தான் இருக்கு..!” என சாவகாசமாய் சொல்லிட…

அவனின் அலட்சியத்தில், கனிக்கோ பக்கத்தில் இருக்கும் சாம்பாரை, அவன் மேல் ஊத்திடும் கோபம் வந்தாலும், பசி என்று அமர்ந்தவனை மனதில் கொண்டு, அவனின் மற்றொரு பிரிவை எண்ணி, கண்ணில் நீர் துளித்தாலும், ஏற்கனவே தாயிடம் வாங்கிகட்டுபவன், இப்போது தன்னால், மீண்டும் பேச போய் சாப்பிடாமல் சென்றுவிட்டால்… என்ற எண்ணத்தோடு, அவசரமாய் தனது கண்ணீரை கட்டுபடுத்தியவள், வெற்றிக்கு தட்டை வைத்து பரிமாற…

“ஆஹா.. அம்மா என்ன தான் சொல்லு… உன் சமையல அடுச்சுக்க ஆளே இல்ல..!  வெளிய பைவ் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிட்டாலும், உன் பக்குவத்துல, சமச்சத சாப்பிடற சுகமே தனி… அதுவும் உன் மருமக பார்த்து, பார்த்து பரிமாற அழகு இருக்கே… வேலைக்காரங்க தோத்தாங்க போ …! அட… அட .. சொர்க்கம் தான்!” என சிலாகித்து கூற….

அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் அனைத்தும் பொங்கிட, “ஏன்டா, என்ன பார்த்தா எப்படி தெரியுது..?! உனக்கு வேலை செய்ய வந்த வேலைக்காரி மாதிரியா இருக்கு… பசின்னு, உக்காந்தையே ன்னு சாம்பார மேல ஊத்தாம போனதுக்கு, இந்த பேச்சு தேவை தான்!” என அவனின் முதுகில் அடித்த படியே, கண்ணில் நீர் வடிய கேட்டவளின் கரத்தை பிடித்தபடி, கொஞ்சம் முகத்திலிருக்கும் புன்னகை மாறாமல், “அடியேய் அராத்து, போதும்டீ அடுச்சது, பாரு ட்ரஸ்ஸெல்லாம் கசங்குது.. இப்படியே ஏர்போர்ட் போனா நல்லாவா இருக்கும்?!” என கேட்க,

தன் கண்ணிரையும் பார்த்துவிட்டு சிரிப்போடு, தன் உடையையும், போகுமிடத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு பேசுபவனை, இனி அடித்தும்.. கேட்டும் .. என்ன பிரயோஜனம்?! என்ற நிலையில், அவனிடமிருந்து கையை பிரித்து எடுத்து, விலகி செல்ல போனவளை, மீண்டும் தனது இடதுகரம் கொண்டு இழுத்தவன், அவனுக்கு அருகே இருந்த சேரில் அமர்த்தி, “சட்டுன்னு நீயும் சாப்புடுடீ..  என் பொண்டாட்டி! போறது நா மட்டுமில்ல..  நம்ம ரெண்டு பேரும் தான்… !” என சொல்ல…

அவனின் இழுப்பில், வந்து அமரந்தாலும், அவன் செய்த செயல்களால், அவன் இறுதியாய் சொன்னது காதில் விழுந்தாலும், அதை உணராது இருந்தவளை, “வெற்றி…! கண்ணா…!  என்னப்பா சொல்ற…?! நிஜமாவே, கனிய கூட்டிட்டு வெளிய போறையா?!” என மகன் சொன்ன செய்தியில், ஆனந்த அதிர்ச்சி அடைந்த சந்திரா கேட்க,

“இப்ப, நா தமிழ்ல தானே சொன்னேன்! உங்க மருமக பாருங்க, பொறுப்பே இல்லாம உக்காந்திருக்கறத.. ஒரு குழந்த பையன், என்ன சொல்ல வர்றான்னு கூட கேட்காம… நீங்க திட்டறீங்கன்னா, உங்க மருமக அடி வெளுக்கறா…! பொண்ண கட்டி வைக்காம, ரவுடிய போய் கட்டி வச்சிட்டீங்களே… இது நியாயமா?!” என்று வெற்றி கிண்டலாக கேட்க,

“போலீஸ் ஆபிஷருக்கு, ரவுடி சரியான ஜோடி தான்… !” என அவனுக்கு பதில் கூறியவர், “கனிம்மா, என்னடா அவன் சொன்னது புரியலையா?! சீக்கிரமா கிளம்புடா…!” என அவளை அசைத்து சொன்ன பின்பே, அவன் தன்னையும் உடன் அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருப்பதை கிரகித்த அவளின் மூளை,

“இல்ல அத்தம்மா, நா போகல..!” என சொல்லி, வெடுக்கென அவர்கள் அறைக்கு சென்றிட… ‘அட ஆண்டவா! இதுங்க ரெண்டும் பண்ணற ரவுசு தாங்களடா! ஒண்ணு இறங்கி வந்தா…  இன்னொன்னு முறுக்கிட்டு நிக்குது.. இதுங்க ரெண்டும் இந்த ஜென்மத்துல, நம்மள பாட்டி ஆக்கின மாதிரி தான்… !’ என மனதிலேயே புலம்பிய சந்திரா, வெளியே வெற்றியை, ‘இது அத்தனைக்கும், நீ தான் காரணம். உன் விளையாட்டு தான் வினையாகி போச்சு…!’ என சொல்லாமல் சொல்லி முறைக்க மட்டுமே முடிந்தது.

*******

கனி தாங்கள் தங்கியிருந்த அறையின் பால்கனியில், தூரத்து தெரிந்த மலை முகட்டை பார்த்திருந்தாலும், அதன் அழகு கொஞ்சமும் அவளை கவரவில்லை என்பது அவளின் நிர்மூலமான முகத்திலிருந்தே தெரிந்தது வெற்றிக்கு..

கோபம் கொண்டு அறைக்கு சென்றவளை, ‘தங்களுக்காக இல்லாவிட்டாலும், பெரியவர்களின் மனதிற்காகவாவது, ஏற்பாடு செய்த பயணத்திற்கு வந்து தான் ஆக வேண்டும். இப்போது கிடைத்த விடுமுறை போல், இனி கிடைக்குமா?! என்பதும் அவன் தொழிலில் சொல்ல முடியாது..!’ என சொன்ன பிறகு, கனியும் கிளம்ப, ஒரு வழியாய் ஊட்டிக்கு அழைத்து வந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தது.

மாலை நேர இளம் காற்றும், சுற்றிலும் இருக்கும் இயற்கை அழகும் வெற்றிக்கு தந்த இதத்தை கனிக்கு தராது போனதை வேதனையோடு பார்த்தவன், ‘சாரிடீ.. நா சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன். நீ, எத்தன நாள் என்கிட்ட விளையாண்ட.. அத நா செஞ்சா இப்படி ரியாக்ட் பண்ணற…!’ என மனதில் நினைத்தவன், மெல்ல அவளை நெருங்கி..

“கனி, கொஞ்சம் ரெப்ரஸ் ஆகிட்டு வா, வெளிய போயிட்டு வரலாம்…!” என சொல்லிட, எந்த விதமான பாவனையும், இல்லாது வெறுமனே சென்றவளை பார்க்க பார்க்க, தன் மீதே கோபமாய் வந்தது வெற்றிக்கு… கனி வந்ததும், இருவரும் சேர்ந்து பொட்டானிக்கல் கார்டன், ரோஸ் கார்டன் என சுற்றி வந்தாலும், பேச்சு என்பது இல்லாது ஒருவித அமைதியே சூழந்திருந்தது.

படபட பட்டாசாய் எப்போதும் இருக்கும் கனியின் இந்த மாற்றம் வெற்றியே எதிர்பார்க்காத ஒன்று..  என்ன செய்து அவளை மாற்றுவது என தெரியாமல், அவளின் முகத்தையே ஏக்கமாய் பார்த்து பார்த்து திரும்பும் அவனை நினைத்து, மனதுக்குள் விழுந்து விழுந்து சிரித்தாலும், வெளியே முகத்தை சீரியஸ்ஸாக வைத்தபடி நடந்தவளின் மனசாட்சியோ….

“கனி..  இது ஓவர் நடிப்புடா சாமி…! ஏன்டீ இப்படி அவன போட்டு படுத்தற..!” என கேட்க, “அவன நா படுத்தறனா .. எவ்வளவு தில்லிருந்தா, என்னை அவாய்ட் பண்ணிட்டு போகறேன்னு சொல்வான். நா யாருன்னு அவனுக்கு தெரியல. காட்டறேன் பயபுள்ளைக்கி…?!” என சொல்ல,

“ஆகமொத்தம், அவன வச்சி செய்யறதுன்னு முடிவு கட்டிட்ட.. நடத்து நடத்து..!” என்று சொல்லிவிட்டு, ‘விசயம் தெருஞ்சா, நீ என்ன ஆக போறையோ?!’ என அதுவும் மனதினுள்ளேயே புலம்பிவிட்டு சென்றுவிட.. தனது நடிப்பை தொடர்ந்தபடியே வெற்றியோடு சென்றாள் அவர்களின் அறைக்கு…

அறைக்கு வந்ததும், வெற்றி தன்னை சுத்தப்படுத்தி வர பாத்ரூம் செல்ல, கனி அவன் உள்ளே சென்று கதவடைக்கும் வரை அமைதியாய் நின்றவள், அதற்கு பிறகு அங்கிருந்த கண்ணாடி முன்பு சென்று நின்று.. “கனி சும்மா சொல்லக்கூடாது… அசத்தற போ..! இதையே கண்ட்டின்யூ பண்ணற, அவன கதற விடுற… இனி ஒரு தரம் உன்ன விட்டுட்டு, வீட்டு வாசல தாண்ட கூட யோசிக்கணும். அப்படியே போனாலும்,  நீ ஓகே சொன்னா தான்.. சரியா..!” என்றபடியை, அவளுக்கு அவளே நெட்டிமுறித்து டிஸ்ட்டி கழித்து முடிக்க, வெற்றி கதவை திறந்து வருவது அறிந்து, தனது உடையோடு, அவனை தாண்டி உள்ளே சென்றுவிட்டாள் தானும் படுப்பதற்கு தயாராக….

கனி வந்து பார்த்த போது, வெற்றி ஒருபுறம் அமைதியாய் படுத்து உறங்கியிருக்க, “என்னடா இது, எப்படியும் நம்மகிட்ட வந்து கெஞ்சுவாரு, எப்படியெல்லாம் முறுக்கிக்கலாமின்னு ப்ளான் போட்டு வந்தா, கண்டுக்காம தூங்கறாரூ..?!” என்று முனுமுனுத்தபடி, அவனின் அருகே சென்று குனிந்து பார்க்க, நல்ல உறக்கத்தில் இருந்தான் வெற்றி.

சுறுசுறுவென கோபம் வர, “லூசு! லூசு! பொண்டாட்டி கோவமா இருந்தா, அவள சமாதானப்படுத்தாம இழுத்து போத்திட்டு தூங்குது பாரு..  தூங்கு மூஞ்சி..!” என வாய்விட்டே திட்டடியவள், கட்டலின் மறுபுறம் வந்து படுத்தவளுக்கு தான், தூக்கம் தூரம் விலகி சென்றிருந்தது.

கொஞ்ச நேரத்திற்கு மேல் அமைதியாய் படுத்திருக்க முடியாமல் போக, மெதுவாய் அவன் புறம் திரும்பி படுக்க, அவனும் அவள் புறம் பார்த்து தான் படுத்திருந்தான். “தூங்கற பாரு ஒன்னுமே தெரியாத புள்ள மாதிரி… அச்சோ! இப்ப எனக்கு தான் தூக்கமே வரமாட்டிங்குதே…! என்ன செய்வேன்?!” என வாய்விட்டே சொன்னவள், மீண்டும் திரும்பி படுக்க, அடுத்த நொடி அவளின் இடையோடு, வலுவான கரம் கொண்டு இறுக்கி அணைத்திருந்தான் வெற்றி.

“ப்ராடு! தூங்கற மாதிரியா நடுச்ச?!” என அவனின் கரத்தை எடுத்தவிட கனி செய்த முயற்சியை எளிதாக முறியடித்தவன், அவளை தன்னை நோக்கி திருப்பி, அவள் மீதே படர்ந்து, “ஏய், அராத்து! யாரு ப்ராடு..  நீயா?! நானா…?! என்னம்மா ஏக்ட் விடுற… கோபமா இருக்கற மாதிரி!” என சொல்ல,

‘அச்சச்சோ! கண்டுபிடிச்சிட்டானே?!’ என்று எப்போதும் போல, “ஈ……!” என சிரித்தபடி.. “எப்படி மாமா கண்டுபிடிச்ச..?!” என கேட்க, “அதான், நா பாத்ரூம திறந்தது கூட, தெரியாம கண்ணாடி கூட சேர்ந்து ப்ளான் போட்டத, கேட்டுட்டேனே..!”. என்றவன், “இப்படி என்னைய வச்சி, விளையாண்ட உன்னைய எதாச்சும் செய்யணுமே…!” என சொன்னவன்,

அவளின் கரத்தை கெட்டியாக பிடித்தபடியே, கழுத்து வளைவில் தனது மீசையை வைத்து குறுகுறுப்பூட்ட, அவனின் செயலில் கூச்சமும், வெக்கமும் வந்து பாடாய் படுத்த, “மாமா…மாமா ப்ளீஸ்! இனி விளையாட மாட்டேன்..  விடு மாமா..!” என கெஞ்ச,

“என்னது விடறதா..?! இனி விடுற ஐடியாவெல்லாம் சுத்தமா இல்ல..!” என்றவன், தன் மீசை கொண்டு செய்த செயலை, தனது உதடு கொண்டு செய்ய துவங்க, அவனின் கரங்களோ, அவளை மெல்ல உணரத்துவங்கியது. அவனின் செயலில் எழுந்த அவஸ்தையான உணர்வில் மேனி சிலிர்க்க, அவனிடமிருந்து விலக, ஒரு மனம் சொல்ல, கணவனாய் மனைவியிடம், அவன் எடுத்தக்கொள்ளும் உரிமைக்கு இடமளிக்க சொல்லி, அவளின் பென்மை சொல்லிட..  இரு கொல்லி எறும்பாய் தவித்தவள், மெதுவாக…

“மாமா, அன்னைக்கி, ஏதோ பேசனுமின்னு சொன்னீங்களே..! அத இன்னும் நீங்க சொல்லவே இல்ல…!” என அவனின் வேகத்திற்கு முட்டுகட்டை போட,

அவளின் மேனியில் பதிந்திருந்த தனது முகத்தை நிமிர்த்தியவன், “கனி, அன்னைக்கே நா, ஒரு விசயம் சொன்னேன் நியாபகம் இருக்கா?!” என சீரியஸ் டோனில் கேட்க,

“என்ன மாமா?!” என யோசனையோடு கேட்டவளை பார்த்து, “எனக்கு குறுக்க பேசினா பிடிக்காதுன்னு சொன்னேன், நியாபகம் இருக்கா..?! இனி நீ பேசுவ..!” என கேட்டு கண் சிமிட்ட,

“அடப்பாவி, அப்ப நீ எதுக்கு சொன்ன?!  இப்ப எதுக்கு கனெக்ட் பண்ற?!” என்ற அதிர்ந்து, விழி விரித்தவளை பார்த்தவாறே, அவளின் இதழ்களை சிறை செய்தவன், கரங்கள் செய்த மாயத்தில், கனியும் மெல்ல வெற்றியோடு முழுமையாய் கரைந்திருந்தாள்.

அவர்களிடமிருந்த மொத்த சக்தியும், தீரும் வரை, அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டாடி மகிழ்ந்தவர்கள், மெல்ல இருள் விலகி, விடியலை நோக்கி செல்லும் போது, ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றனர்.

மெதுவாக கண்விழித்த வெற்றிக்கு, தன் கையணைப்பில் மலர்ந்த முகத்தோடு, இரவு நடந்த நிகழ்வுக்கு ஆதாரமாய் நலுங்கிய சிற்பமாய் இருந்தவளை, மென்னையாய் தன்னோடு இறுக்கியவன்.. அவளின் காதருகே சென்று, “கனிம்மா…!” என்றிட, நேற்றைய காலை பொழுதினை போலவே, “போ.. மாமா! சும்மா தூங்கவிடாம…!” என சினுங்கிட,

அவனின் அணைப்பு கொடுத்த அழுத்ததில், தூக்கம் கலைந்து எழுந்தவளுக்கு, அப்போது தான்…  தான் இருக்கும் நிலையும், நேற்றைய நிகழ்வும் நினைவு வர, மலர்ந்திருந்த அவளின் மதிமுகம், செவ்வானமாய் மாறி போயிட, அதை மறைக்க வெற்றியின் மார்பிலேயே முகம் புதைத்தாள்.

அவள் எழுந்து முதல், அவளை பார்வையால் தொடர்ந்தவன், அவளின் வெக்கத்தையும், அதை மறைக்க தன்னிடமே அடைக்கலம் ஆனவளை ஆசையாய் அணைத்துக்கொண்டாலும், நேரம் அறிந்து, “கனிம்மா, எழுந்து ரெடியாகுடா…  பாரு மணி என்ன ஆகுதுன்னு…! நா ப்ரேக்பாஸ்ட் ஆர்டர் பண்றேன்!” என சொல்ல,

தான் இருக்கும் நிலையில், எப்படி அவன் இருக்கும் போதே அங்கிருந்து செல்வது, என்று தவிப்போடு அவனை பார்க்க, அவளின் பார்வைக்கு அர்த்தம் புரிந்தாலும், அவளின் வெக்கத்தை ரசிப்பதற்காகவே, “என்ன கனி, சொல்லிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு ஜாலியா படுத்துட்டு இருக்க… போ, போய் ப்ரஸ்ஸாகிட்டு வா..!” என கோபம் போலும் சொல்லிய நொடி,

இருவரையும் மறைத்திருந்த போர்வையை சட்டென எடுத்து, தன்னை மறைத்தவள், பாத்ரூம் நோக்கி சென்றிட, அவளை வெக்கப்பட வைக்க நினைத்தவன், வெக்கிப்போனான் தன் நிலையை எண்ணி….

******

புதிதாய் திருமணமான ஜோடிகளுக்கே உரித்தான விதத்தில் அடுத்த, அடுத்த பொழுதுகள் கழிந்தாலும், கனியிடம் பேச வேண்டியதை பேசிவிடுவது, என்ற முடிவோடு இருந்தவன், “கனி கொஞ்சம் அப்படியே வெளிய வாக் மாதிரி போயிட்டு வருவோமா?!” என கேட்க

“இந்த நேரத்துலையா, போ.. மாமா குளிரும்! இங்கையே சொல்லு, நா கேட்கறேன்!” என்று மறுக்க, “செல்லமில்ல, ரூம்ல இருந்தா, நா சொல்ல வர்றத நீயும் கேட்க மாட்ட, என்னாலையும் முழுசா சொல்லிட முடியாது.. அதனாலதான் சொல்றேன், வெளிய போலாம்!” என பேசி, அவளுக்கு லஞ்சமாய் சில பல கிஸ்களை கொடுத்து தாஜா செய்தவன், “போலீஸ்கிட்டையே லஞ்சம் வாங்கின ஆள், நீயா தான்டீ இருப்ப..” என கிண்டல் செய்தபடியே வெளியே வந்தவர்கள், பேசுவதற்கு தோதாய் ஒரு இடத்தில் அமர்ந்தார்கள்.

“கனி, தயவு செஞ்சு முதல் நாள் மாதிரி, குறுக்க பேசி டைவர்ட் பண்ணிடாத டாப்பிக்க!” என சொன்னவனின் குரலிலேயே, தனது விளையாட்டுதனத்தை விடுத்து, அடுத்து அவன் சொல்வதை கேட்கும்படி அமர்ந்தவளை பார்க்கும் போது, ரகு சொன்னது அனைத்தும் மனதில் வலம் வந்தது.

அவர்கள் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தவன், தூரத்து நிலவை பார்த்தபடியே, “கனி, உனக்கே நல்லா தெரியும், நா கல்யாணம் செஞ்சுக்கறதுல அவ்வளவா ஆர்வம் இல்லாம இருந்தது. அதுக்கு முக்கிய காரணமே, எங்க அம்மா தான். அவங்க என்னோட வேலைய விடச்சொல்லும் ஒவ்வொரு தடவையும், நாளைக்கி வர்றவ, நீ இப்படி ராத்திரி பகல்ன்னு பார்க்காம ஓடுனா ஒத்துக்கமாட்டா.. அவள நல்லபடியா பார்த்துக்கணுமின்னு சொல்ல, சொல்ல…  அப்ப, மனைவி வந்தா.. என்னோட முதல் காதலான, இந்த யூனிஃபார்முக்கு விடை கொடுக்க வேண்டி வருமோன்னு தான், அத அவாய்ட் பண்ணேன்”.

“முதல் தடவ உன்ன பார்த்தப்ப, நீ பேசினத வேற யாராச்சும் பேசியிருந்தா, கண்டிப்பா கன்னம் பழுத்திருக்கும்.. உன்கிட்ட அப்படி கோபப்பட முடியல. அதோட, நீ பிரகாஷ் மாமா பொண்ணுன்னும், உன்னோட உயிர் கொஞ்ச நாள் தான்.. அப்படின்னும் சொன்னதும், நா நானாவே இல்ல. மேபி வேற யாராவதா இருந்திருந்தா ஹாஸ்பிட்டல்லையே உண்மைய கண்டுபிடிச்சிருப்பேன். உனக்கு அப்படி இருக்க கூடாது ன்னு மட்டுமே, மனசுல ஓடிட்டு இருந்ததால மத்தத கவனிக்கல…

ரகு வந்து உனக்கு எதுமில்லன்னு சொன்னதும், ஒரு புறம் நிம்மதியா இருந்தாலும், என்னைய ஏமாத்திட்டீங்க, அதோட இப்படி நாடகமாடற நீ, நாளைக்கி இந்த வேலைய விட வைக்கவும் நாடகமாடுவியோன்னு தான் கோபம் வந்துச்சு.

அது மட்டுமா.. என்ன வாய்டீ உன்னோடது… அப்பப்பா.. என்னாலையே முடியல.. நீ செய்யற சின்ன சின்ன விசயம் கூட தப்பாவே தெரிஞ்சுது. ரகு அப்பவே சொன்னான், எங்களுக்கு தெரிஞ்ச கனி வேற.. நீ இப்ப அவள புருஞ்சுக்கல.. அவள நல்லா தெரிஞ்சிட்டு முடிவு பண்ணுன்னு.. அதே மாதிரி தான் நாளுக்கு நாள் உன்னோட ஒவ்வொரு முகமா தெரிய வந்துச்சு எனக்கு.

அம்மாகிட்ட அன்னைக்கி, நீ போலீஸ் வேலைய பத்தி உயர்வா பேசும் போதே பாதி ப்ளாட் ஆகிட்டேன். மிச்சத்தையும் அந்த சில நாள்ல, உன்னை பத்தி விசாரிச்சு தெரிஞ்சிட்டேன்.

நீயும், உன் ப்ரண்ட்ஸ் சில பேரும் சேர்ந்து கிராம புற பெண்களுக்காகவும், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் பத்திய விழிப்புணர்வு சம்மந்தமா நடத்தற கூட்டம் எல்லாமே.. சமூகத்தின் மேல அக்கறை இருக்கற நீ, எந்த சூழ்நிலையில எப்படி நடக்கணுமின்னு தெரிஞ்சு நடந்துப்பேன்னு, அப்பவே முடிவு பண்ணிட்டேன்.

முதல் தடவ பேசும் போது கூட, உன்ன பத்தி முழுசா தெரிஞ்சுக்காம.. புருஞ்சுக்காம..  ஜஸ்ட் ஒரு அபெக்சன்ல தான், உன் கேரக்டர மாத்திக்கோ, அது தான் என்கூட நீ வாழ சரியா இருக்குமின்னு சொல்லிட நினச்சேன். பட், இந்த இடைவெளியும் நல்லது தான். இப்ப முழுசா உன்னை நல்லா தெரிஞ்சிட்டு, புரிஞ்சிட்டு தான், மனைவியா முழுசா ஏத்துக்கிட்டேன். ஐ லவ் யூ கனி..!” என்றவனுக்கு பதில் வராது போக,

‘இவ்வளவு தூரம் பேசிட்டு, அதும் காதல சொன்னா பதிலே சொல்லாம என்ன பண்ணறா?!’ என பார்க்க, அவள் செய்திருந்த வேலையில், வெற்றியின் முகம் அஸ்டகோணலாய் மாறியிருந்தது. அவன் இவ்வளவு பேசியதை கேட்டாளா?! இல்லையா?! என தெரியாமல் விழிக்க வைக்கவே, கனி அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையிலேயே தூங்கியிருந்தால்..  அவனும் தான் என்ன செய்வான்?! (ஹா…ஹா..)

அத்தியாயம் 14

 

ஒரு வருடத்திற்கு பிறகு……

கடற்கரை மணலில் அமர்ந்திருந்த வெற்றி, கடலின் அலைகளை பார்த்தபடி இருந்தாலும், அவனின் நினைவுகள் யாவும், சிறிது நேரத்திற்கு முன் நடந்ததை நினைவு கூர்ந்த வண்ணம் இருந்தது.

“கனிம்மா, சொன்னா கேளும்மா, டாக்டர் இன்னும் ரெண்டு மூனு நாள்ல குழந்தை பிறந்திடுமுன்னு சொல்லிட்டாங்க இல்ல. இப்ப போய், பீச்சுக்கு கூட்டிட்டு போங்க, அங்க போய் வாக்கிங் போறேன்னு அடம்பிடிக்கலாமா..! சொன்னா கேளுடா..!” என்ற வெற்றியின் கெஞ்சலும், கொஞ்சலும் காதிலேயே விழாதவாறு, கையிலிருந்த மாதுளையை உறித்து சாப்பிட்டு கொண்டு இருந்தவளை பார்த்த போது, மெலிதான கோபம் வந்தாலும், அவளின் பயமே இப்போதைய அவளின் பிடிவாதத்துக்கு காரணம் என்பதை அறிந்தவனால், அவளிடம் கோபத்தை முழுமையாய் காட்டிடவும் இயலவில்லை.

எல்லா பெண்களுக்கும் இயல்பாய் தோன்றும் பிரசவம் குறித்த பயம், அவளை எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்திட சொல்லும் போது, அவளின் ஆசையா அல்லது உடல்நிலையா என்று முடிவெடுக்க இயலாமல் விழிபிதுங்கி நின்றான் வெற்றி.

கனியை மணம் புரிந்த நாள் முதல், அவள் செய்யும் செயலில் அவ்வாறு நிற்பது அவனுக்கு இப்போது பழகிபோன ஒன்றாகி போனது…

தமிழும், பிரகாஷும் கனியின் வளைகாப்பு முடிந்து, அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல கேட்க, “மாமா, அத்தை நீங்க வந்து இங்க தங்கிக்கோங்க. நா கனிய அங்க அனுப்ப மாட்டேன்!” என்று வெற்றி சொல்லிட, அவர்களும் பிரசவ நேரம் நெருங்குவதால் இங்கே தங்கிவிட்டனர்.

தமிழ், “ஏன்டீ! மாப்பிள்ளை இவ்வளவு தூரம் சொல்லிட்டு இருக்காறு, எரும மாட்டுமேல மழை பேஞ்ச மாதிரி இருக்க, நாங்க சொன்னா தான் கேட்க மாட்ட..! அவரு சொல்லறதுக்காகவாவது வீட்டுல அடங்கமாட்டியா..?!” என தனது ட்ரேட் மார்க் அட்வைஸ் மழையை ஆரம்பிக்க,

கனி, வெற்றியை பார்த்த பார்வையில், ‘போச்சு, இவங்க பேசறதுக்கும்.. சேர்த்து நைட் என்னை வச்சு செய்ய போறா..! அதுல தப்பிக்கணுமின்னா, அவ சொன்ன மாதிரி வெளிய கூட்டிட்டு போயிட வேண்டியது தான்..’ என்ற முடிவெடுத்தவன்,

“அத்த விடுங்க, நா கூட தானே போறேன். நா பார்த்துக்கறேன். எப்படியும் அவள வாக்கிங் கூட்டிட்டு போகணும் தானே. அந்த வாக்கை பீச்சுலையே செய்யட்டும்!” என்று கூறி அழைத்து வந்ததை, நினைத்த படி தன்மீது சாய்ந்திருந்தவளின், மணி வயிற்றிலிருக்கும் தன் குழந்தையை உணர்ந்தபடி இருந்தான் வெற்றி.

“மாமா…! மாமா….!”  என்று அழைத்தவளுக்கு, பதில் சொல்லாமல் அலையை பார்த்திருந்தவனை,  “டேய் வெற்றி…!” என்றிட..

“என்னடீ…!”

“எதாவது, பேசு மாமா…!”

“எதுக்கு, அன்னைக்கி ஊட்டில தூங்குன மாதிரி தூங்கவா…?!” என கடுப்பில் கேட்டவனை,

“ஈ….!” என்ற தனது ட்ரேட் மார்க் சிரிப்போடு பார்த்தவள், “அது உன் தப்பு தானே மாமா…! பாவம் புள்ளைன்னு, கொஞ்ச நேரமாச்சும் தூங்கவிட்டாம..  செஞ்சிட்டு, கூட்டிட்டு போய்..  லெக்சர் அடுச்சா… தூங்காம என்ன செய்வேன் சொல்லு மாமா.. !” என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்வளை பார்த்தவன்,

“நா, அப்ப எவ்வளவு முக்கியமான விசயம் பேசினேன்.. தெரியுமா?!” என்றவனின் குரலில், ‘தான் காதல் சொன்னதை அவள் கேட்கவில்லையே!’ என்ற ஆதங்கம் இப்போதும் தெரிய..

“என்னத்த சொல்லியிருக்க போறீங்க…! கனி, உன்ன பார்த்து.. நா ப்ளாட் ஆகிட்டேன். என் வேலை மாதிரியே, நீயும் எனக்கு முக்கியம், என் வேலை என்னோட முதல் காதல் ன்னா.. நீ என்னோட ரெண்டாவது காதல்…  ஐ லவ் யூன்னு, நாலு லைன்ல சொல்ல வேண்டியத, நாலூ பக்கத்துக்கு சொல்லியிருப்பீங்க…!” என கிண்டலாக சொன்னதும்,

“எப்படி, நா சொன்னத அப்படியே சொல்ற..?! அப்ப அன்னைக்கி நீ தூங்கலை தானே…!” என சந்தேகமாய் கேட்க,

“அச்சோ மாமா.. உன்னைய கரெக்ட் பண்ண எனக்கு, நீ எப்ப.. எப்படி பேசுவன்னு தெரியாமையா இருக்கும்…?! நா, நீங்க பேசறத கேட்கலன்னு புகார் சொல்றீங்கலே, நீங்க மட்டும் ஒழுங்கா…?! நா, நம்ம வீட்டில, நீங்க கல்யாணத்துக்கு ஏன் சமாதிக்கலன்னு..  வித வித அழகா கதை சொன்னா, அதை கேட்கறத விட்டுட்டு..  போன் தானே பேசிட்டு போனிங்க!” என்று அன்று அவன் அவசரமாக சென்றதை இப்போது கேடையாமாக்கி தப்பிக்க சொல்லிட,

“அட அராத்து.. போன சைலண்ட்ல போட்டு, நீ.. நின்ன ஜன்னல்கிட்ட இருந்த டேபிள்ல வச்சேன். நீ பேசும் போது, லைட் ஏறியறத பார்த்திட்டு.. வந்தா, அது சதிஷ் கால்…!

நிச்சயமா, அவன் அந்த நேரத்தில எமர்ஜென்சி இல்லாம கூப்பிட மாட்டான். அதான், ப்ளூடூத் ஆன் பண்ணிட்டு ரெடியாகிட்டே பேசினோன். இதெல்லாம் கவனிக்காம நீ, தான் லூசு மாதிரி ஒழறிட்டு இருந்தையே…!” என சொல்ல,

“என்னது..  நா லூசா…! ஆமா மாமா..  உன்னைய மாதிரி வெரப்பா கல்யாணம் வேணாமின்னு சுத்திட்டு இருந்தவன, இப்ப அப்பா ஆகற மாதிரி கரெக்ட் பண்ணி வச்சிருக்கற, நா லூசு தான்!”  என்றபடி வெற்றியின் முதுகில் அடிக்க..

சிரிப்போடு, அவளின் அடியை வாங்கிக்கொண்டிருந்தவன், திடீரென அவளின் முகத்தில் தெரிந்த மாற்றத்தில், அதுவரை இருந்த விளையாட்டு தனத்தை விடுத்து, “கனிம்மா, என்னடா..  என்னாச்சு?!”  என்று தவிப்போடு கேட்டிட..

“மாமா..  வலிக்குது… !” என வயிற்றில் கைவைத்து, கண்ணில் லேசாய் நீர் வர சொன்னவளை, மறு நொடி கரத்தில் தங்கியவன், விரைவாய் தனது வாகனத்தில் அமர்த்திவிட்டு, போனில் மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் அழைத்து சொல்லிய படியே, அவளின் கரத்தையும் அவ்வப்போது, தட்டி கொடுத்து, ஆறுதலாய் பேசியபடி மருத்துவமனையை அடைந்தான்.

இதுவரையிலும் கனியின் கண்ணில் சிரிப்பு, குறும்பு, வெக்கம், சில சமயம் கோபத்தை கூட கண்டு விட்டவன், முதன் முறையாக அவளின் பயத்தை கண்டு மனதளவில் மிகவும் நொறுங்கி போனான் அவளின் கணவனாய்..

அவள், “மாமா..  வலிக்குது மாமா..!” எனும்  ஒவ்வொரு  முறையும், அவளை விட மனதால், அந்த வலியை தாங்கி நின்றான் வெற்றி அவளின் கரத்தை பற்றியவாறு…

“ஒன்னுமில்லடா.. கொஞ்ச நேரம் தான்.. நம்ம ஏஞ்சல் வந்திடுவா.. எல்லாமே சரியாகிடும்..” என்று சொல்லி, அவளின் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தவனுக்கு, தன் கண்ணில் வடியும் நீரை துடைத்திடவும் தோன்றவில்லை.

“மாமா, நா செத்துடுவேன் போல மாமா, ரொம்ப பயமா இருக்கு மாமா..!” என்ற அவளின் வார்த்தையில், அடுத்து ‘என்ன சொல்லி அவளை தேற்றுவது!’ என்பதை கூட, மறந்து உறைந்து போனான் வெற்றி…

தாயையும், மனதால் தந்தையையும் படுத்திவிட்டு, இந்த மண்ணுலகில் வந்து உதித்தாள் அவர்களின் செல்ல இளவரசி… முதன்முறையாக குழந்தையை தாங்கி நிற்கும் நேரத்தின் அற்புத உணர்வை, தந்தையாய் முழுமையாய் உள்வாங்கி நின்றான்.

பேத்தி பிறந்த சந்தோஷமும், நிம்மதியும் அனைவரையும் தொற்றிக்கொள்ள, அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

 

***********

நான்கு ஆண்டுக்கு பிறகு…

“மாமா..! மாமா…! சொன்னா கேளு மாமா…!”

“அப்பா…! அப்பா…! கேளு அப்பா..!”

என செல்லும் இடமெல்லாம், ரயில் பெட்டி போல, வெற்றியின் டீசர்டை பிடித்தபடி கனியும், அவளின் புடவை முந்தானையை பற்றிய படி அவர்கள் வீட்டு இளவரசி, சாந்தினியும் தொடர்வதையும்,

எதையும் கண்டு கொள்ளாது, தனது வேலையை பார்த்தபடி இருந்த வெற்றியையும், பார்க்க பார்க்க சந்திரா, பிரகாஷ், தமிழ் மூவருக்கும் சிரிப்பு வந்தாலும், கனியின் முன்பு சிரித்து வைத்தால் அவ்வளவு தான்..  என்பதால் நடப்பதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

“மாமா…! முடிவா என்ன தான் சொல்ற நீ..?! நானும் ரெண்டு வருஷமா கேட்டுட்டு இருக்கேன். நீயும் பிடிகொடுக்க மாட்டிங்கற. பாரு, நம்ம சந்து குட்டியும் கேட்கறா…?!” என்றதும், நின்று அவளை முறைத்தவன்,

‘அவளா கேட்டாளா… இல்ல, நீ சொல்லி கொடுத்து கேட்க வச்சியான்னு.. தெரியாத அளவு நா முட்டாளா…?!’ என்று பார்வையாலேயே கேட்டுவிட்டு, அவர்கள் அறைக்கு சென்றுவிட, சோர்ந்து போய் அமர்ந்த கனியை,

சந்திரா, “அவன் தான் பிடிவாதமா வேணாமின்னு சொல்றானே. விடு கனிம்மா.. உன்னோட நல்லதுக்கு தானேடா..?!” என்று சமாதானம் செய்திட,

“அத்தம்மா, அவரு தான் லூசு மாதிரி, சொன்னதையே சொன்னா, நீங்களுமா.. இப்படி….?!” என்றவள், சாந்தினியை பார்க்க, அவளோ டிவியில் ஓடிய டாம் அண்ட் ஜெர்யில் மூழ்கி இருக்க,

“நானும் சரி, அவரும் சரி..  வீட்டுக்கு ஒத்த புள்ளையா இருந்தது போதாதுன்னு, சாந்தினியும் அப்படி தான் வளரணுமா..?! பிரசவ வலியில சொல்றது எல்லாம் பெருசா எடுத்துகிட்டு, மாமா பண்ணறது சரியில்ல…! அதுக்கு பெருசுங்க மூனும் துணை போறீங்க.. உங்களையெல்லாம், வச்சிட்டு என்னத்த செய்ய?!

இங்க பாருங்க அத்தம்மா, மாமா வேலையில நாங்க வெளியூர் போறது ரிஸ்க்.. அதனால சந்து குட்டிக்கு ஒரு மாசம் லீவ் வருது. அத சாக்கா வச்சி, நீங்க மூனு பேரும் கிளம்பறீங்க. மாமாவ கரெக்ட் பண்ண வேண்டியது, என் பொறுப்பு!” என்றவளின் வார்த்தையில் இருந்த நியாயம் புரிய,

சந்திரா, “இங்க பாரு கனி, நா அப்ப சொன்னது தான் இப்பவும், நீயாச்சு உன் மாமனாச்சி! நாங்க ஜாலியா எங்க சந்து பேபி கூட ஊர் சுத்த போறோம்!” என்றவருக்கு, மருமகளின் பேச்சில் இருக்கும் நியாயம் புரிந்ததால், எல்லாம் நல்லபடியாய் நடக்க இறைவனிடம் வேண்டிய படி, கிளம்ப தேவையான பற்றி மற்ற இருவரிடமும் விவாதிக்க துவங்கினார்.

‘மாமா, உன்ன எப்படி கரெக்ட் பண்ணன்னு…  தெரியாத போதே, கரெக்ட் பண்ணி புள்ளைய பெத்தவளுக்கு..  உன்னோட வீக்னஸ் எல்லாமே.. தெருஞ்ச பின்னாடியா..  கரெக்ட் பண்றது கஷ்டமா இருக்க போகுது…?! மாமா, இனி நோ பேச்சு…  ஒன்லி ஆக்க்ஷன் தான்…!’ என்ற படி, மாடியேறியவளின் திட்டம் நல்லபடியாய் நிறைவேற, நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.

சுபம்….

.

 

 

 

error: Content is protected !!