Riya raj – DUECP – FINAL

Riya raj – DUECP – FINAL

அத்தியாயம் 14

 

ஒரு வருடத்திற்கு பிறகு……

கடற்கரை மணலில் அமர்ந்திருந்த வெற்றி, கடலின் அலைகளை பார்த்தபடி இருந்தாலும், அவனின் நினைவுகள் யாவும், சிறிது நேரத்திற்கு முன் நடந்ததை நினைவு கூர்ந்த வண்ணம் இருந்தது.

“கனிம்மா, சொன்னா கேளும்மா, டாக்டர் இன்னும் ரெண்டு மூனு நாள்ல குழந்தை பிறந்திடுமுன்னு சொல்லிட்டாங்க இல்ல. இப்ப போய், பீச்சுக்கு கூட்டிட்டு போங்க, அங்க போய் வாக்கிங் போறேன்னு அடம்பிடிக்கலாமா..! சொன்னா கேளுடா..!” என்ற வெற்றியின் கெஞ்சலும், கொஞ்சலும் காதிலேயே விழாதவாறு, கையிலிருந்த மாதுளையை உறித்து சாப்பிட்டு கொண்டு இருந்தவளை பார்த்த போது, மெலிதான கோபம் வந்தாலும், அவளின் பயமே இப்போதைய அவளின் பிடிவாதத்துக்கு காரணம் என்பதை அறிந்தவனால், அவளிடம் கோபத்தை முழுமையாய் காட்டிடவும் இயலவில்லை.

எல்லா பெண்களுக்கும் இயல்பாய் தோன்றும் பிரசவம் குறித்த பயம், அவளை எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்திட சொல்லும் போது, அவளின் ஆசையா அல்லது உடல்நிலையா என்று முடிவெடுக்க இயலாமல் விழிபிதுங்கி நின்றான் வெற்றி.

கனியை மணம் புரிந்த நாள் முதல், அவள் செய்யும் செயலில் அவ்வாறு நிற்பது அவனுக்கு இப்போது பழகிபோன ஒன்றாகி போனது…

தமிழும், பிரகாஷும் கனியின் வளைகாப்பு முடிந்து, அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல கேட்க, “மாமா, அத்தை நீங்க வந்து இங்க தங்கிக்கோங்க. நா கனிய அங்க அனுப்ப மாட்டேன்!” என்று வெற்றி சொல்லிட, அவர்களும் பிரசவ நேரம் நெருங்குவதால் இங்கே தங்கிவிட்டனர்.

தமிழ், “ஏன்டீ! மாப்பிள்ளை இவ்வளவு தூரம் சொல்லிட்டு இருக்காறு, எரும மாட்டுமேல மழை பேஞ்ச மாதிரி இருக்க, நாங்க சொன்னா தான் கேட்க மாட்ட..! அவரு சொல்லறதுக்காகவாவது வீட்டுல அடங்கமாட்டியா..?!” என தனது ட்ரேட் மார்க் அட்வைஸ் மழையை ஆரம்பிக்க,

கனி, வெற்றியை பார்த்த பார்வையில், ‘போச்சு, இவங்க பேசறதுக்கும்.. சேர்த்து நைட் என்னை வச்சு செய்ய போறா..! அதுல தப்பிக்கணுமின்னா, அவ சொன்ன மாதிரி வெளிய கூட்டிட்டு போயிட வேண்டியது தான்..’ என்ற முடிவெடுத்தவன்,

“அத்த விடுங்க, நா கூட தானே போறேன். நா பார்த்துக்கறேன். எப்படியும் அவள வாக்கிங் கூட்டிட்டு போகணும் தானே. அந்த வாக்கை பீச்சுலையே செய்யட்டும்!” என்று கூறி அழைத்து வந்ததை, நினைத்த படி தன்மீது சாய்ந்திருந்தவளின், மணி வயிற்றிலிருக்கும் தன் குழந்தையை உணர்ந்தபடி இருந்தான் வெற்றி.

“மாமா…! மாமா….!”  என்று அழைத்தவளுக்கு, பதில் சொல்லாமல் அலையை பார்த்திருந்தவனை,  “டேய் வெற்றி…!” என்றிட..

“என்னடீ…!”

“எதாவது, பேசு மாமா…!”

“எதுக்கு, அன்னைக்கி ஊட்டில தூங்குன மாதிரி தூங்கவா…?!” என கடுப்பில் கேட்டவனை,

“ஈ….!” என்ற தனது ட்ரேட் மார்க் சிரிப்போடு பார்த்தவள், “அது உன் தப்பு தானே மாமா…! பாவம் புள்ளைன்னு, கொஞ்ச நேரமாச்சும் தூங்கவிட்டாம..  செஞ்சிட்டு, கூட்டிட்டு போய்.. லெக்சர் அடுச்சா… தூங்காம என்ன செய்வேன் சொல்லு மாமா.. !” என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்வளை பார்த்தவன்,

“நா, அப்ப எவ்வளவு முக்கியமான விசயம் பேசினேன்.. தெரியுமா?!” என்றவனின் குரலில், ‘தான் காதல் சொன்னதை அவள் கேட்கவில்லையே!’ என்ற ஆதங்கம் இப்போதும் தெரிய..

“என்னத்த சொல்லியிருக்க போறீங்க…! கனி, உன்ன பார்த்து.. நா ப்ளாட் ஆகிட்டேன். என் வேலை மாதிரியே, நீயும் எனக்கு முக்கியம், என் வேலை என்னோட முதல் காதல் ன்னா.. நீ என்னோட ரெண்டாவது காதல்…  ஐ லவ் யூன்னு, நாலு லைன்ல சொல்ல வேண்டியத, நாலூ பக்கத்துக்கு சொல்லியிருப்பீங்க…!” என கிண்டலாக சொன்னதும்,

“எப்படி, நா சொன்னத அப்படியே சொல்ற..?! அப்ப அன்னைக்கி நீ தூங்கலை தானே…!” என சந்தேகமாய் கேட்க,  

“அச்சோ மாமா.. உன்னைய கரெக்ட் பண்ண எனக்கு, நீ எப்ப.. எப்படி பேசுவன்னு தெரியாமையா இருக்கும்…?! நா, நீங்க பேசறத கேட்கலன்னு புகார் சொல்றீங்கலே, நீங்க மட்டும் ஒழுங்கா…?! நா, நம்ம வீட்டில, நீங்க கல்யாணத்துக்கு ஏன் சமாதிக்கலன்னு..  வித வித அழகா கதை சொன்னா, அதை கேட்கறத விட்டுட்டு.. போன் தானே பேசிட்டு போனிங்க!” என்று அன்று அவன் அவசரமாக சென்றதை இப்போது கேடையாமாக்கி தப்பிக்க சொல்லிட,

“அட அராத்து.. போன சைலண்ட்ல போட்டு, நீ.. நின்ன ஜன்னல்கிட்ட இருந்த டேபிள்ல வச்சேன். நீ பேசும் போது, லைட் ஏறியறத பார்த்திட்டு.. வந்தா, அது சதிஷ் கால்…!

நிச்சயமா, அவன் அந்த நேரத்தில எமர்ஜென்சி இல்லாம கூப்பிட மாட்டான். அதான், ப்ளூடூத் ஆன் பண்ணிட்டு ரெடியாகிட்டே பேசினோன். இதெல்லாம் கவனிக்காம நீ, தான் லூசு மாதிரி ஒழறிட்டு இருந்தையே…!” என சொல்ல,

“என்னது..  நா லூசா…! ஆமா மாமா..  உன்னைய மாதிரி வெரப்பா கல்யாணம் வேணாமின்னு சுத்திட்டு இருந்தவன, இப்ப அப்பா ஆகற மாதிரி கரெக்ட் பண்ணி வச்சிருக்கற, நா லூசு தான்!”  என்றபடி வெற்றியின் முதுகில் அடிக்க..

சிரிப்போடு, அவளின் அடியை வாங்கிக்கொண்டிருந்தவன், திடீரென அவளின் முகத்தில் தெரிந்த மாற்றத்தில், அதுவரை இருந்த விளையாட்டு தனத்தை விடுத்து, “கனிம்மா, என்னடா..  என்னாச்சு?!” என்று தவிப்போடு கேட்டிட..

“மாமா..  வலிக்குது… !” என வயிற்றில் கைவைத்து, கண்ணில் லேசாய் நீர் வர சொன்னவளை, மறு நொடி கரத்தில் தங்கியவன், விரைவாய் தனது வாகனத்தில் அமர்த்திவிட்டு, போனில் மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் அழைத்து சொல்லிய படியே, அவளின் கரத்தையும் அவ்வப்போது, தட்டி கொடுத்து, ஆறுதலாய் பேசியபடி மருத்துவமனையை அடைந்தான்.

இதுவரையிலும் கனியின் கண்ணில் சிரிப்பு, குறும்பு, வெக்கம், சில சமயம் கோபத்தை கூட கண்டு விட்டவன், முதன் முறையாக அவளின் பயத்தை கண்டு மனதளவில் மிகவும் நொறுங்கி போனான் அவளின் கணவனாய்..

அவள், “மாமா..  வலிக்குது மாமா..!” எனும்  ஒவ்வொரு முறையும், அவளை விட மனதால், அந்த வலியை தாங்கி நின்றான் வெற்றி அவளின் கரத்தை பற்றியவாறு…

“ஒன்னுமில்லடா.. கொஞ்ச நேரம் தான்.. நம்ம ஏஞ்சல் வந்திடுவா.. எல்லாமே சரியாகிடும்..” என்று சொல்லி, அவளின் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தவனுக்கு, தன் கண்ணில் வடியும் நீரை துடைத்திடவும் தோன்றவில்லை.

“மாமா, நா செத்துடுவேன் போல மாமா, ரொம்ப பயமா இருக்கு மாமா..!” என்ற அவளின் வார்த்தையில், அடுத்து ‘என்ன சொல்லி அவளை தேற்றுவது!’ என்பதை கூட, மறந்து உறைந்து போனான் வெற்றி…

தாயையும், மனதால் தந்தையையும் படுத்திவிட்டு, இந்த மண்ணுலகில் வந்து உதித்தாள் அவர்களின் செல்ல இளவரசி… முதன்முறையாக குழந்தையை தாங்கி நிற்கும் நேரத்தின் அற்புத உணர்வை, தந்தையாய் முழுமையாய் உள்வாங்கி நின்றான்.

பேத்தி பிறந்த சந்தோஷமும், நிம்மதியும் அனைவரையும் தொற்றிக்கொள்ள, அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

 

***********

நான்கு ஆண்டுக்கு பிறகு…


“மாமா..! மாமா…! சொன்னா கேளு மாமா…!”

“அப்பா…! அப்பா…! கேளு அப்பா..!”

என செல்லும் இடமெல்லாம், ரயில் பெட்டி போல, வெற்றியின் டீசர்டை பிடித்தபடி கனியும், அவளின் புடவை முந்தானையை பற்றிய படி அவர்கள் வீட்டு இளவரசி, சாந்தினியும் தொடர்வதையும்,

எதையும் கண்டு கொள்ளாது, தனது வேலையை பார்த்தபடி இருந்த வெற்றியையும், பார்க்க பார்க்க சந்திரா, பிரகாஷ், தமிழ் மூவருக்கும் சிரிப்பு வந்தாலும், கனியின் முன்பு சிரித்து வைத்தால் அவ்வளவு தான்..  என்பதால் நடப்பதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

“மாமா…! முடிவா என்ன தான் சொல்ற நீ..?! நானும் ரெண்டு வருஷமா கேட்டுட்டு இருக்கேன். நீயும் பிடிகொடுக்க மாட்டிங்கற. பாரு, நம்ம சந்து குட்டியும் கேட்கறா…?!” என்றதும், நின்று அவளை முறைத்தவன்,

‘அவளா கேட்டாளா… இல்ல, நீ சொல்லி கொடுத்து கேட்க வச்சியான்னு.. தெரியாத அளவு நா முட்டாளா…?!’ என்று பார்வையாலேயே கேட்டுவிட்டு, அவர்கள் அறைக்கு சென்றுவிட, சோர்ந்து போய் அமர்ந்த கனியை,

சந்திரா, “அவன் தான் பிடிவாதமா வேணாமின்னு சொல்றானே. விடு கனிம்மா.. உன்னோட நல்லதுக்கு தானேடா..?!” என்று சமாதானம் செய்திட,

“அத்தம்மா, அவரு தான் லூசு மாதிரி, சொன்னதையே சொன்னா, நீங்களுமா.. இப்படி….?!” என்றவள், சாந்தினியை பார்க்க, அவளோ டிவியில் ஓடிய டாம் அண்ட் ஜெர்யில் மூழ்கி இருக்க,

“நானும் சரி, அவரும் சரி..  வீட்டுக்கு ஒத்த புள்ளையா இருந்தது போதாதுன்னு, சாந்தினியும் அப்படி தான் வளரணுமா..?! பிரசவ வலியில சொல்றது எல்லாம் பெருசா எடுத்துகிட்டு, மாமா பண்ணறது சரியில்ல…! அதுக்கு பெருசுங்க மூனும் துணை போறீங்க.. உங்களையெல்லாம், வச்சிட்டு என்னத்த செய்ய?!

இங்க பாருங்க அத்தம்மா, மாமா வேலையில நாங்க வெளியூர் போறது ரிஸ்க்.. அதனால சந்து குட்டிக்கு ஒரு மாசம் லீவ் வருது. அத சாக்கா வச்சி, நீங்க மூனு பேரும் கிளம்பறீங்க. மாமாவ கரெக்ட் பண்ண வேண்டியது, என் பொறுப்பு!” என்றவளின் வார்த்தையில் இருந்த நியாயம் புரிய,

சந்திரா, “இங்க பாரு கனி, நா அப்ப சொன்னது தான் இப்பவும், நீயாச்சு உன் மாமனாச்சி! நாங்க ஜாலியா எங்க சந்து பேபி கூட ஊர் சுத்த போறோம்!” என்றவருக்கு, மருமகளின் பேச்சில் இருக்கும் நியாயம் புரிந்ததால், எல்லாம் நல்லபடியாய் நடக்க இறைவனிடம் வேண்டிய படி, கிளம்ப தேவையான பற்றி மற்ற இருவரிடமும் விவாதிக்க துவங்கினார்.

‘மாமா, உன்ன எப்படி கரெக்ட் பண்ணன்னு…  தெரியாத போதே, கரெக்ட் பண்ணி புள்ளைய பெத்தவளுக்கு..  உன்னோட வீக்னஸ் எல்லாமே.. தெருஞ்ச பின்னாடியா.. கரெக்ட் பண்றது கஷ்டமா இருக்க போகுது…?! மாமா, இனி நோ பேச்சு…  ஒன்லி ஆக்க்ஷன் தான்…!’ என்ற படி, மாடியேறியவளின் திட்டம் நல்லபடியாய் நிறைவேற, நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.

சுபம்….

error: Content is protected !!