Roja 10

ஞானபிரகாஷ் மலரின் எண்களை அழுத்திவிட்டு அமைதியாகக் காத்திருந்தார். மறுபக்கம் அழைப்பு போய்க்கொண்டிருந்தது.

“ஹலோ!”

“மலர், நான் ஞானபிரகாஷ் பேசுறேன்.”

“சொல்லுங்க… அங்கிள்.” அந்தக் குரலில் இருந்த அந்நியம் கேட்டு மனிதரின் முகத்தில் சொல்லவொண்ணாத வேதனை ஒன்று தோன்றியது.

“மலர் எங்க இருக்கம்மா இப்போ?”

“ஷாப்லதான் அங்கிள்.”

“சரிம்மா, இன்னைக்கு நைட் சத்யன் வீட்டுல இருந்து உங்க வீட்டுக்கு சொந்தக்காரங்க வருவாங்க. நீ இப்போவே கிளம்பி வீட்டுக்குப் போம்மா.”

“ஓ…”

“வீட்டுக்குப் போய் நல்லா சாப்பிட்டுட்டு குட்டித் தூக்கம் ஒன்னு போட்டுட்டு ஃப்ரெஷ்ஷா இருக்கணும் சரியா?”

“அம்மாக்கு இதெல்லாம் தெரியுமா அங்கிள்?”

“நான் சொல்லிக்கிறேன். எனக்கு குமுதா அத்தையோட நம்பர் மட்டும் வேணும். அதைக் கொஞ்சம் அனுப்பி வெக்குறியாம்மா.”

“இதோ… அனுப்புறேன் அங்கிள்.”

“ஓகே ம்மா. பை.” ஞானபிரகாஷ் அழைப்பைத் துண்டித்த அடுத்த நொடி குமுதாவின் நம்பர் வந்துவிட்டது. அதைத் தன் ஃபோனில் சேமித்துக் கொண்டு குமுதாவை அழைத்தார் மனிதர்.

“ஹலோ!”

“குமுதா… நான் பிரகாஷ் பேசுறேம்மா.”

“அடடே! சொல்லுங்கண்ணா. திடீர்னு கூப்பிட்டிருக்கீங்க. என்ன விஷயம்?” இந்தக் குரலில் இருக்கும் குதூகலம் கூட ஏன் மலரின் குரலில் தனக்காக எதிரொலிக்கவில்லை என்று நினைத்தபோது ஏனோ ஞானபிரகாஷிற்கு வலித்தது.

“குமுதா, இன்னைக்கு ஆறிலிருந்து ஏழுக்குள்ள வத்சலா குடும்பத்தோட மலர் வீட்டுக்கு வருவா.”

“அண்ணா! என்னண்ணா திடீர்னு? இப்பப் போய் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருவாங்கன்னு சொல்றீங்க? காலையிலேயே சொல்லி இருந்தா நாங்களும் ஏற்பாடு பண்ணி இருப்போம் இல்லை?”

“இதுல பதட்டப்பட ஒன்னுமே இல்லைம்மா. நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்.”

“அண்ணா?”

“மலரை வீட்டுக்குப் போகச் சொல்லி கால் பண்ணிட்டேன். இந்தப் பொண்ணுங்க பார்லர் அது இதுன்னு என்னெல்லாமோ பண்ணுவாங்களே? அப்படி ஏதாவது பண்ணுறதா இருந்தாப் பண்ணச்
சொல்லும்மா.”

“சரிங்கண்ணா. சும்மாவே உங்கப் பொண்ணு அழகுதானே?” அந்த வார்த்தையில் ஞானபிரகாஷ் நிறைந்து வழிந்து போனார். கொஞ்ச நேரம் எந்தச் சத்தமும் வராமல் போகவே…

“ஹலோ… அண்ணா… லைன்ல இருக்கீங்களா? ஹலோ…” என்றார்.

“இருக்கேம்மா… இருக்கேன்.” அந்தக் குரலில் கரகரப்பைக் கேட்டபோது குமுதாவிற்கே பாவமாகிப் போனது.

“உங்களுக்கு வத்சலா மட்டுமில்லை, குமுதாவும் இருக்கேண்ணா.”

“குமுதா…” இப்போது ஞானபிரகாஷ் குலுங்கிக் குலுங்கி அழுதார். குமுதா எதுவுமே பேசவில்லை. அவர் மனதின் பாரம் குறையட்டும் என்று அமைதியாகக் காத்திருந்தார்.

“ஆகவேண்டியதைப் பார்ப்போம் ண்ணா. கவலைப்படாதீங்க, உங்க மனசுப் பிரகாரம் எல்லாமே நல்லதா நடக்கும்.” அதற்குள் ஞானபிரகாஷ் தன்னை மீட்டிருந்தார்.

“குமுதா… சத்யனோட பாட்டியும் வர்றாங்க. அவங்களுக்கு சத்யாக்குக் கிராமத்துல ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டணும்னு ஆசை. எப்படியோ சத்யா சமாளிச்சு வச்சிருப்பான் போல. பொண்ணைப் பார்த்ததும் அவங்க மேற்கொண்டு வாய் திறக்கப்படாது, புரியுதா?”

“அதெல்லாம் அசத்திடலாம்.”

“மலருக்கு ஒரு ட்ரெஸ் ஆர்டர் பண்ணி இருக்கேன். ஏதோ பேர் சொன்னானே கடையில… லெ… லெஹாவோ என்னவோ?”

“லெஹெங்கா.”

“ஆங்… அதான். சரியா அஞ்சு மணிக்கு அதை டெலிவரி பண்ணுவாங்க. நீயும் கூட நின்னு போட்டுப் பார்த்து ஏதாவது திருத்தம் செய்யணும்னா சொல்லும்மா, அப்பவே பண்ணிக் குடுப்பாங்க.”

“சரிண்ணா.”

“ஆறுமணிக்கு கேட்டரிங் ஆளுங்க வருவாங்க. உங்க வீட்டுக்காரர் அப்போ அங்க நிக்குற மாதிரிப் பார்த்துக்கோம்மா.”

“சரிண்ணா.”

“ஸ்வீட், காரம், அதுக்கப்புறம் வர்றவங்களுக்கு டின்னர். எல்லாம் ஏற்பாடு பண்ணி இருக்கேன். ஒரு பத்துப் பேர் வருவாங்கம்மா.”

“சரிண்ணா, ஒன்னும் பிரச்சனை இல்லை. உங்க வழக்கம் எப்படிண்ணா? மாப்பிள்ளைக்கு மோதிரம் எதுவும் போடணுமா?”

“இல்லைம்மா. இந்த ஃபங்ஷனுக்குப் பொதுவா மாப்பிள்ளை வரமாட்டாங்க.”

“அவங்க அடையாளம் மாதிரி ஏதாவது போடும் போது நாமளும் ஏதாவது பண்ணணுமில்லை?”

“தேவையில்லைம்மா. அதை நிச்சயதார்த்தம் பண்ணும்போது பார்த்துக்கலாம்.”

“சபையில எந்தக் குறையும் வந்திரக்கூடாதில்லைண்ணா? அதால தான் கேக்குறேன்.”

“எதுக்கும் நான் வத்சலாக்கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டுட்டு உனக்குச் சொல்றேம்மா.”

“சித்ராக்கிட்டப் பேசலையாண்ணா?” குமுதா கேட்க இப்போது ஞானபிரகாஷ் கசப்பாகச் சிரித்தார்.

“இருக்கட்டும்மா. எங்க போகப் போறா? ஆறுதலாப் பேசிக்கலாம். எனக்கு இப்போ முக்கியம் எம் பொண்ணு கல்யாணம். மத்ததெல்லாம் அதுக்கப்புறம்தான்.”

“சரிண்ணா.”

“ஏதாவது தேவைன்னா இந்த நம்பருக்குக் கூப்பிடு குமுதா. தேவை எதுவா இருந்தாலும் எந்தத் தயக்கமும் வேணாம். புரியுதா?”

“நல்லாப் புரியுதுண்ணா.”

“நான் வெச்சிடட்டுமா?”

“சரிண்ணா… சரிண்ணா.” ஃபோனை வைத்து விட்டு ஞானபிரகாஷ் நெற்றியைத் தடவிக் கொள்ள இங்கே குமுதா சித்ரலேகாவின் வீட்டிற்கு ஓடினார்.

-0-0-0-0-0-0-0-

சித்ரலேகாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஸ்விட்சைப் போட்டால் அனைத்து வேலைகளும் மளமளவென்று நடைபெறுவதைப் போல அவர் வீட்டு வேலைகள் அனைத்தும் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. குமுதாவும் அவர் கணவரும் அனைத்தையும் மேற்பார்வைப் பார்த்துக் கொண்டார்கள்.

சரியாக ஐந்து மணிக்கு உடையோடு இரு பெண்கள் வந்து விட்டார்கள். சந்தனக் கலரில் வெள்ளி ஜரிகை வேலைப்பாடமைந்த லெஹங்கா. அத்தனை அழகாக இருந்தது.
மலரின் அளவிற்கு ஏற்றாற்போல திருத்திக் கொடுத்துவிட்டுப் போனார்கள். மலர் அன்று வீட்டிலேயே வழமைபோல அவள் பண்ணும் ஃபேஷியலைப் பண்ணி இருந்தாள். லேசான ஒப்பனை.
ஞானபிரகாஷின் அழைப்பு வந்தபிறகு குமுதாவும் சித்ரலேகாவும் செய்த ஒரே வேலை என்றால் லாக்கரில் இருந்த நகைகளைப் போய் எடுத்து வந்ததுதான். ஆடையில் அதிகம் வேலைப்பாடு இருந்ததால் நகைகளைப் பெரிதும் தவிர்த்து விட்டாள் மலர்.

ஆறுமணிக்குச் சரியாக ஞானபிரகாஷ் சொன்னது போல சாப்பாடு வந்திறங்கிவிட்டது. குமுதாவின் கணவர் அதைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார்.

வீட்டைக் கொஞ்சம் க்ளீன் பண்ணிவிட்டு, நல்லதாக ஒரு புடவையை உடுத்திக்கொண்டு சித்ரலேகா நிமிர்ந்த போது மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டார்கள். நேரம் ஆறு முப்பது.

“வாங்க வாங்க.” குமுதாவும் அவர் கணவரும் தான் முன்னின்று எல்லோரையும் வரவேற்றார்கள்.
குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் வந்திருந்தார்கள்.
மூத்தவர் அவர் மனைவி, கண்மணி அவர் கணவன், கீர்த்தனா அவள் கணவன், லோகேந்திரன் வத்சலா, சத்யாவின் தங்கை சஹானா, சத்யாவின் பாட்டி ரங்கநாயகி.
சித்ரலேகாவின் கண்கள் ஞானபிரகாஷைத் தேடியது. ஆனால் மனிதர் வந்திருக்கவில்லை.
சத்யனும் மாப்பிள்ளை இதற்கெல்லாம் வரக்கூடாது என்று பாட்டி சொல்லியதால் வந்திருக்கவில்லை. ஆனால் வந்ததும் வராததுமாக தன் அண்ணியைப் பார்த்த சஹானா ஒரு ஃபோட்டோ எடுத்து அண்ணாவிற்கு அனுப்பி வைத்தாள். அது அவன் இவர்கள் கிளம்பும் போதே தங்கைக்குப் போட்ட ஆர்டர்.

சித்ரலேகா எதற்கும் முன்னால் வரவில்லை. பின்னணியிலேயே ஒதுங்கிக் கொண்டார். ஆண்கள் அத்தனைப் பேரும் சோஃபாவில் அமர்ந்து கொள்ளப் பெண்களுக்கு ஜமுக்காளம் விரித்திருந்தார்கள்.
வெயில் அன்று கொஞ்சம் கொளுத்தி இருந்ததால் அதற்கு இதமாக குமுதா எல்லோரிற்கும் முதலில் ஜூஸ் பரிமாறினார்.

“நீங்க…” வத்சலா இழுக்கவும்,

“நான் குமுதா. அது என் வீட்டுக்காரர். இந்தக் காலனியில தான் இருக்கோம். மலர் பொறக்குறதுக்கு மொதல்ல இருந்தே எனக்கும் சித்ராக்கும் நல்ல நட்பு உண்டு. சொல்லப்போனா மலர் எங்க வீட்டுப் பொண்ணு.”

“அப்படியா? நல்லது. அண்ணீ… எதுக்குக் கிச்சன்லயே இருக்கீங்க? இங்க வந்து நீங்களும் உட்காரலாமே?”

“வத்சலா! நீ கொஞ்சம் சும்மா இரும்மா.” இது ரங்கநாயகி. வத்சலா சொல்லி முடிப்பதற்குள் ரங்கநாயகி மருமகளை அதட்டி இருந்தார். அங்கிருந்த அனைவருக்கும் மலரின் அப்பா இறந்து போனது தெரியும் என்பதால் கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தார்கள்.

ரூமில் இருந்த மலருக்கு சட்டென்று கண்கள் நிறைந்து போனது. ஆனால் கிச்சனில் நின்றிருந்த சித்ரலேகா புன்னகைத்துக் கொண்டார்.
அவருக்கு இதெல்லாம் பழகிப்போன விஷயம்தானே.

ரங்கநாயகிக்கு ஏனோ தானும் அந்தக் கட்டத்தைத் தாண்டி வந்த பெண்தான் என்பது அப்போது மறந்து போனது. ஒருவேளை மலர் அவர் பார்த்த பெண்ணாக இருந்திருந்தால் புரிந்து கொண்டிருப்பாரோ என்னவோ!

“அண்ணியை இங்க வரச் சொல்லலாமே.” சஹானா கேட்க, கீர்த்தனா எழுந்து ரூமிற்குள் சென்று மலரை அழைத்து வந்தாள். ரங்கநாயகியைத் தவிர அங்கிருந்த அனைவருக்கும் மலர் ஏற்கனவே அறிமுகம் ஆனவள்தான்.
பெண்ணைக் கூட்டிவந்து ஜமுக்காளத்தில் கீர்த்தனா உட்கார வைக்க, பாட்டியைப் பார்த்த சஹானாவின் ஒற்றைப் புருவம் ஏறி இறங்கியது. ரங்கநாயகி பெண்ணை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பாட்டியின் பக்கமாகச் சரிந்தவள்,

“பொண்ணு எப்பூடீ…” என்றாள் கேலியாக.

“ம்… ம்… நல்லாத்தான் இருக்கா. இப்போதான் தெரியுது. உங்கண்ணன் நான் கேட்டதுக்கு அங்கத் தலையாட்டிட்டு வந்து இங்கப் பேச்சு மாறினதுக்கான காரணம்.” பாட்டியின் குரலில் எரிச்சல் இருந்தது.

“புரிஞ்சாச் சரி.”

“அழகு மட்டும் போதுமா சஹானா குடும்பம் நடத்த?”

“குணத்துலயும் தங்கம் பாட்டி. போகப்போக அது உங்களுக்கேப் புரியும்.”

“என்னவோ போ!” பாட்டியும் பேத்தியும் முணுமுணுத்துக் கொண்டார்கள். இப்போது குமுதா அனைவருக்கும் ஸ்வீட், காரம் என்று பரிமாறினார்.

“பொண்ணோட அப்பா வீட்டு சொந்தங்கன்னு யாரும் வரலையா?” இது ரங்கநாயகி. மலர் இப்போது தன்னைக் கட்டுப்படுத்த மிகவும் கஷ்டப்பட்டாள்.

“இல்லைம்மா. அவங்க யாரும் இங்க வர்றதில்லை.” குமுதா பதில் கொடுத்தார்.

“ஏன்? ஏதாவது பிரச்சனையா?”

“பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்லைம்மா. கைக்குழந்தையோடத் தனியா நிக்குற பொண்ணுக்கு ஆதரவு குடுத்தா அவங்களுக்குத் தானே நஷ்டம். அதோட பையனா இருந்தாலாவது பரவாயில்லை. பொண்ணு வேற.”

“இது நல்ல நியாயமா இருக்கே? கூடப் பொறந்ததுங்க தான் அப்படின்னா பெத்தவளுமா அப்படி இருப்பா?”

“அந்த வீட்டுல எல்லாருமே ஒன்னு போலதாம்மா.”

“அதை விடுங்க அத்தை. பெரியவங்க நீங்க. ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்லுங்க. ஒரேயடியா நிச்சயதார்த்தத்தையும் கல்யாணத்தையும் சேர்த்தே வச்சுடலாம்.” வத்சலா பேச்சை மாற்றினாலும் ரங்கநாயகி ஏனோ சமாதானம் ஆகவில்லை. பழங்காலப் பெண்மணிதான். இருந்தாலும் சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் தாண்டி நீதி, நியாயம், பாசம் இதெல்லாம் உண்டல்லவா?

“வத்சலா! உன்னோட சம்பந்தியை இங்க வந்து உக்காரச் சொல்லும்மா.” இந்த வார்த்தைகளில் அங்கிருந்த அனைத்துப் பேரும் திகைத்துப் போனார்கள். சற்று நேரத்திற்கு முன்பு பேசிய பேச்சென்ன? இப்போது பேசுவதென்ன?
ஆனால் வத்சலா தயங்கவில்லை. மாமியாரை நன்கு புரிந்தவர் என்பதால் ஓடிப்போய் சித்ரலேகாவைக் கைப்பிடித்து அழைத்து வந்து அவர் பக்கத்தில் உட்காரச் செய்தார்.

சித்ரலேகாவைப் பார்த்த மாத்திரத்தில் ரங்கநாயகிக்கு ஏனோ மனதைப் பிசைந்தது.
மணப்பெண்ணிற்கு அக்கா போல இருக்கும் இந்தப் பெண் சின்ன வயதிலேயே கொண்டவனைத் தொலைத்து விட்டுத் தன்னந்தனியாக நிற்கிறதா?!
வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவருக்கு அதன் வலி புரிந்தது.
புருஷனும் இல்லாமல் அவனைச் சார்ந்த சொந்த பந்தங்களும் இல்லாமல் ஒற்றையாக நின்று இந்தப் பெண் எப்படித் தன் பேரனின் கல்யாணத்தை நடத்தப் போகிறது? ஆயிரம் கேள்விகள் குடைந்தது ரங்கநாயகியை. ஆனாலும் வாயைத் திறக்காமல் அழுத்தமாகவே இருந்து கொண்டார்.

அதன் பிறகு எல்லோருமாகச் சேர்ந்து மூன்று வார இடைவெளியில் ஒரு நல்ல நாளைப் பார்த்து முடித்தார்கள். விட்டால் வத்சலா அடுத்த வாரமே கல்யாணத்தை வைத்திருப்பார்.
நல்ல நாளும் அமையவில்லை, அமைந்த நாளும் பெண்ணிற்கு வசதிப்படவில்லை.

அதன் பிறகு எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட ரங்கநாயகி கொஞ்சம் நிறைவாக உணர்ந்தார். எந்தக் குறையும் இல்லாமல், வந்தது முதல் மாப்பிள்ளை வீட்டாரைத் தாங்கிக் கொண்ட அந்தப் பெண் வீடு,

‘போனால் போகிறது… என் சத்யா ஆசைப்பட்டு விட்டான்.’ என்ற நிலைமைக்கு வந்திருந்தது பாட்டியின் மனதில். ஆனால் சித்ரலேகாவின் கண்கள் அங்கிருந்த அனைவரையும் வட்டமிட்டபடி இருந்தது.

“சின்னண்ணன் இன்னைக்கு மலேஷியா போறாங்க. அதான் அவங்க வரலை அண்ணி.” வத்சலா விளக்கம் கொடுக்கவும் சித்ரலேகா திடுக்கிட்டுப் போனார்.

“ஓ… இல்லை… பிரகாஷை மட்டும் காணலையா, அதான் பார்த்தேன்.”

“பிஸினஸ் விஷயமாப் போறாங்க. சத்யன் தான் போறதா இருந்துது. நீ ஃபங்ஷனைக் கவனி, நான் போறேன்னு கிளம்பிட்டாங்க.”

“அப்படியா… எல்லா ஏற்பாடும் பிரகா…” சித்ரலேகா வெள்ளந்தியாக ஏதோ சொல்லப் போக வத்சலா அவர் கையை அழுத்திப் பிடித்தார். எனக்கு எல்லாம் தெரியும் நீ இடம் பார்த்துப் பேசு, என்பது போல இருந்தது வத்சலாவின் அசட்டுச் சிரிப்பு.

வத்சலா தன் மருமகளுக்கு அழகானதொரு ஆரம் கொண்டு வந்திருந்தார். அதை அவர் ரங்கநாயகியின் கைகளில் கொடுக்க,

“நீயே போடும்மா.” என்றார் பெரியவர் புன்னகை முகமாக. மலர்விழியின் கழுத்தில் அதை அணிவித்து விட்டு வத்சலா கணவரைப் பார்க்க அவர் முகத்திலும் ஒரு நிறைவு தெரிந்தது. இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.

அதன்பிறகு மாப்பிள்ளை வீட்டார் ஒவ்வொருவராகக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். சஹானாவும் கீர்த்தனாவும் மலரோடு வேண்டுமென்று வம்பு வளர்த்துக் கொண்டிருக்க வத்சலா அங்கே வந்தார்.

“கீர்த்தனா… உங்கல்யாணத்துக்கு ஃப்ளோரிஸ்ட்டை வீட்டுக்கு வரச்சொல்லி இருந்தனா…” வத்சலா வேண்டுமென்று இழுக்க அந்த மூன்று பெண்களும் அவரைத் திரும்பிப் பார்த்தார்கள்.

“சொல்லுங்க சித்தி.”

“பார்த்தா ஒரு பொண்ணு வந்துச்சு.”

“ம்…” கதை சொல்வது போல வத்சலா சொல்ல பெண்கள் இருவரும் சுவாரஸ்யமாக ‘ம்’ கொட்டினார்கள். மலருக்கு ஒன்றும் புரியவில்லை.

“வந்த பொண்ணு டெக்கரேஷன் பத்தியெல்லாம் பேசிச்சு. ஆனா அந்தக் கண்ணு இருக்கில்லை கண்ணு? அது மட்டும்…”

“அது மட்டும்?” கோரசாக வந்தது இரு குரல்கள். மலர்விழி இப்போது ஆடிப் போய்விட்டாள்.

“அங்க ஹால்ல மாட்டி இருந்த நம்ம சத்யாவோட ஃபோட்டோவை அப்படி சைட் அடிச்சுது.”

“ஓ…” நாத்தனார் இருவரும் ஆர்ப்பரிக்க தன் குட்டு வெளிப்பட்ட அதிர்ச்சியில் மலருக்கு லேசாகக் கண்கள் கலங்கிவிட்டது. வத்சலா மலரை அணைத்துக் கொண்டார்.
முகம் சிவக்க குறும்பு செய்து மாட்டிக்கொண்ட குழந்தை போல அவள் நின்றிருந்த கோலம் அத்தனை அழகாக இருந்தது.

“சஹானா… எதுக்கு எம் மருமகளை இப்போ எல்லாரும் கேலி பண்ணுறீங்க?” பெண்கள் புறமாக வந்த லோகேந்திரன் கேட்க இப்போது மலர் இன்னும் தவித்துப் போனாள்.

“சித்தப்பா! சங்கதி தெரியுமா?” கீர்த்தனா ஆரம்பிக்க,

“எது? நீ இன்னும் நிலத்துல நடக்காம வானத்துல பறக்குறியே அதா?” புதுப்பெண்ணான கீர்த்தனாவை லோகேந்திரன் கேலி பண்ண அவள் சிணுங்கினாள்.

“எம் மருமகளை யாராவது கேலி பண்ணினா இதான் நடக்கும். வத்சலா, உனக்கும் தான்.” சொல்லிய படி மலரின் தலையை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தார் லோகேந்திரன்.

“அப்படியா? சஹானா… சத்யாக்கு ஃபோனைப் போடு. உங்கப்பாக்கு மருமக கூட்டணின்னா எனக்கு எம் பையன் இருக்கான்ல.” கெத்தாக வத்சலா சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் யாருக்கும் தெரியாமல் உண்மையாகவே சஹானா தன் அண்ணனை அழைத்திருந்தாள்.

இவர்கள் இங்கே இப்படிப் பேசிக்கொண்டிருக்க ரங்கநாயகி அங்கே குமுதாவைப் பிடித்து மலரின் அப்பா குடும்பத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.
குமுதாவும் எதையும் மறைக்கவில்லை. எதையும் மறைக்கப்போக அது சித்ரலேகாவைப் பற்றித் தவறாக நினைக்க சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிவிடும் என்று அனைத்தையும் கொட்டி விட்டார்.
ஞானபிரகாஷ் பற்றி மட்டும் வாயைத் திறக்கவில்லை.

அடுத்தாற் போல இருந்த ஒன்றிரண்டு வீடுகளிலிருந்து எட்டிப்பார்த்த நட்புகள் தங்களையும் அழைக்கவில்லையே என்று குறைப்பட அவர்களைச் சமாளித்துக் கொண்டிருந்தார் சித்ரலேகா.

“திடீர்னு வந்துட்டாங்க அக்கா. அதான் உங்களையெல்லாம் கூப்பிட முடியலை. மாப்பிள்ளை வீட்டுக்குப் போகும்போது கண்டிப்பாக் கூப்பிடுறேன்.”
எல்லாப் பேச்சுக்களும் ஓய்ந்து வத்சலா குடும்பம் கிளம்பிய பிறகு அந்த ப்ளாக் ஆடி அமைதியாகச் சத்தமின்றி மலரின் காலனிக்குள் நுழைந்தது. சத்யன் வருவது தெரிந்ததால் குமுதா மலரை அப்போது தன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.

“சித்ரா, அத்தை மலரைப் பார்க்கணும்னு சொன்னாங்க. காட்டிட்டு வந்தர்றோம்.”

“சரி குமுதா.” ஆனால் மலர் குமுதா அத்தையின் வீட்டுக்குப் போனபோது அங்கு இருந்தது சத்யன். அத்தையை ஆச்சரியமாக இளையவள் பார்க்க,

“போய்ப் பேசு மலர். ஆசையாக் கேக்கும் போது என்னால மறுக்க முடியலை.” சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார் குமுதா. மலர் வீட்டிற்குள் வரவும் சோஃபாவில் உட்கார்ந்திருந்த சத்யா எழுந்து விட்டான். கண்கள் அவளை மேலிருந்து கீழாக ஒரு முறை ஆராய்ந்தது.

எப்போதும் ஒரு ஜீன்ஸ் குருதாவில் தலையைக் கோணல் மாணலாக உயர்த்திக் கொண்டை போட்டுக்கொண்டு, சதா ஏப்ரனை மாட்டிக்கொண்டு பூக்களோடு பூவாக நிற்கும் பெண்ணா இவள்! சத்யன் திக்குமுக்காடிப் போனான்.

இவளை இன்னும் கொஞ்சம் கவனித்திருக்க வேண்டுமோ என்று காலந்தாழ்ந்து ஞானம் வந்தது. அந்த ஆடையில் தலையை லூசாக விட்டு மிதமான ஒப்பனையில் மையிட்ட விழியிரண்டும் இவனைப் பார்ப்பதும் நிலம் பார்ப்பதுமாக ஜாலம் காட்ட, சத்யன் தலைகுப்புற வீழ்ந்தே போனான்.

“மலர்!” அவன் குரல் சொன்ன சேதியில் மலர் இரண்டெட்டுப் பின்னால் போனாள்.

“ஹேய்! நோ நோ… பயப்படாதே. உன்னை நான் இப்படிப் பார்த்ததே இல்லையா… அதான்…” வார்த்தைகளோடு அவன் போராடிக் கொண்டிருந்தான்.

‘ஏன்? இவர் சகோதரியின் கல்யாணத்தில் இவர் என்னைப் பார்க்கவில்லையாமா?’ மலரின் மனது அவனிடம் கேள்வி கேட்டது.

“மலர்… எங்கிட்ட எதுவும் மறைக்கிறியா நீ?” அந்தக் கேள்வியில் மலர் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.

“இல்லை… சஹானா ஃபோன் பண்ணி இருந்தா. அம்மா ஏதோ கேலி பண்ணினாங்களாம்?”

“இல்லையில்லை… அது சும்மா பார்த்ததை…”
“சரி சரி… அதுக்கு எதுக்கிப்போ இவ்வளவு டென்ஷன் ஆகுற. எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைங்கிற மாதிரியே இருக்கு.” சொன்னவன் பெண்ணின் அருகில் வந்து எப்போதும் போல அவளின் கையைப் பற்றி அன்று அவன் அணிவித்திருந்த மோதிரத்தோடு விளையாடினான்.

“என்னை நிமிர்ந்து பாரு மலர்.” ஆனால் மலருக்கு அந்தத் தைரியம் இருக்கவில்லை. குனிந்த படியே நின்றாள்.

“இந்தக் கண் எங்கிட்டப் பொய் சொல்லுமா மலர்?” அதற்கு மேல் அங்கே நிற்க மலருக்குப் பயமாக இருந்தது. ஏனோ தெரியவில்லை.
தன் காதலை ஏற்றுக்கொள்ளும் தைரியம் அந்தத் தையலுக்கு இருக்கவில்லை. திரும்பி அவள் விடுக்கென நகரப்போக அவள் கை இன்னும் அவன் வசமே இருந்தது.
லேசாகச் சிரித்தவன் பின்னிருந்த படியே அவள் கூந்தலைத் தடவிப் பார்த்தான். மறந்தும் அவன் விரல்கள் அவளைத் தீண்டவில்லை. கைப்பிடிக்க மட்டுமே அவனுக்கும் தைரியம் இருந்ததோ!? அந்தக் கூந்தலில் வாசம் பிடித்தான் சத்யன்.
‘என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளியறையா அறையா… மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவது தான் முறையா…
மலரின் மனதுக்குள் ஏனோ இந்த வரிகள் ஞாபகம் வர அந்த நொடிகளில் கரைந்து நின்றாள் பெண்.

“மலர்! ஏதாவது சொன்னியா எங்கிட்ட?” சத்யன் அவள் புறமாகக் குனிந்து கேட்க இல்லையென்று அவசரமாகத் தலையாட்டியவள் கையை விடுவித்துக்கொண்டு ஓடி விட்டாள். அவனோடு அவள் பேசவும் இல்லை. போகும் போது சொல்லிக் கொள்ளவும் இல்லை.

சத்யனை எதுவோ வெகுவாகக் குழப்பியது. திருமணம் பற்றிப் பேசியபோது அவள் முகத்தில் ஏதாவது இருந்ததா என்று இப்போது ஞாபகப்படுத்திப் பார்த்தான். அப்படி எதுவும் நினைவிலில்லை.
கோபப்பட்டாள். அது நியாயம்தானே என்று நினைத்திருந்தான்.
ஆனால் அந்தக் கோபத்தின் பின்னால் இருந்தது என்ன? மலரை இன்னும் கொஞ்சம் அவதானித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. உல்லாசமான மனநிலையோடு கிளம்பி விட்டான் சத்யன்.