Roja 11

 

“நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா மலர்?”

“நீங்க என்ன கேள்விப்பட்டீங்க விவேக்?”

“உனக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்காமே?” அத்தனை உரிமையாக ஒருமையில் தன்னை அழைத்துக்கொண்டு செந்தணலாகத் தனக்கு முன் நிற்பவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் மலர்.

“இது என்ன நியாயம் மலர்?”

“ஏன் விவேக்? நான் கல்யாணம் பண்ணிக்கிறது உங்களுக்கு அவ்வளவு அநியாயமாப் படுதா?”

“மலர்! நீ எதுவும் தெரியாத மாதிரி நடிக்காதே.”

“நடிக்கிறது நானில்லை… நீங்கதான். நடைமுறைச் சிக்கல்களை உங்களுக்கு நான் தெளிவாச் சொல்லிட்டேன். அதுக்கு மேலயும் நீங்க விவாதம் பண்ணினா அதுக்கு நான் என்னப் பண்ண முடியும்?”

“எது நடைமுறைச் சிக்கல்? அந்த ரெண்டு மாசமா? ஏன்? இப்போ நீ கல்யாணம் பண்ணிக்கப் போறவன் மட்டும் உனக்கு ரெண்டு வருஷத்துக்கு மூத்தவனா? ரெண்டே ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பொறந்திருக்கான்.”

“விவேக்! மரியாதையாப் பேசுங்க.”

“மரியாதையா? அவனுக்கா? காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தட்டிட்டுப் போன கதையா அவன் வருவான். நான் அவனுக்கு சாமரம் வீசணுமா?” கோபத்தின் உச்சத்தில் இப்போது விவேக் கத்தினான்.

மலர் பல்லைக் கடித்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். இதுவரை அமைதியாக இருந்த ஜெனி,

“விவேக் சார்! இது லவ் மேரேஜ். மலருக்கு சத்யன் சாரைப் பிடிச்சிருக்கு. அவங்களைத்தான் மலர் லவ் பண்ணுறாங்க. உங்களை அவங்க அவாய்ட் பண்ணின ரீசனே அதுதான். புரிஞ்சுக்கோங்க. உண்மையைச் சொன்னா சத்யன் சார் தான் உங்கக்கிட்டச் சண்டைக்கு வரணும். ஏன்னா அவங்க லவ்வரை சைட் அடிச்சது நீங்க.” நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் ஜெனி கோர்வையாகச் சொல்லி முடிக்க மலரின் பார்வை விசித்திரமாக ஜெனியைப் பார்த்தது.

“மலர்… இந்தப் பொண்ணு சொல்றது உண்மையா?” இப்போது மலருக்குத் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“ஆமா! சத்யாவை நான் ரொம்ப நாளா லவ் பண்றேன், போதுமா. அவரைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இந்த ஜென்மத்துல எனக்கு இல்லை. இதை யார்கிட்டேயும் சொல்லவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.” ஆவேசமாகக் கத்திவிட்டு மலர் நிற்க, விவேக்கும் அமைதியாகி விட்டான். பிரமை பிடித்தவன் போல அவன் நின்றிருக்க வாசலில் இருந்த மணியோசை இன்னிசையாக ஒலித்தது.

யாரோ வாடிக்கையாளர் வருகிறார் என்று அண்ணார்ந்து மலர் பார்க்க அங்கே சத்யன் நின்றிருந்தான்.

சத்யனைப் பார்த்த மாத்திரத்தில் ஜென்ம விரோதியைப் பார்ப்பது போல பார்த்துவிட்டு விவேக் போய் விட,

“வாங்க சார்.” என்றாள் ஜெனி.

“ம்…” ஒரு தலை அசைப்போடு உள்ளே சத்யன் வர, மலர் கடையின் பின்பக்கமாகப் போய் விட்டாள்.

“என்ன ஆச்சு?”

“ஒன்னுமில்லை சார். பக்கத்து ஷாப் பையன் எப்பவும் இப்படித்தான் பினாத்துவான்.”

“புரியலை…” சத்யன் மேலும் துருவவும் ஜெனிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.‌ மலரைத் திரும்பிப் பார்த்தாள். அவள் எங்கோ வெறித்தபடி நின்றிருக்க ஜெனி சங்கடமாக சத்யனைப் பார்த்தாள். அவளின் சங்கடம் புரிந்தவன் ஒரு புன்சிரிப்போடு மலரிடம் போனான். அப்பாடா… என்றிருந்தது ஜெனிக்கு.

“மலர்!” சத்யன் கொஞ்சம் அதட்டலாக அழைக்க மலர் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் பார்வையில் இருந்த கேள்வி பெண்ணுக்குப் புரிந்தது. இருந்தாலும் இதையெல்லாம் இவனிடம் சொல்ல வேண்டுமா என்றுதான் மலருக்குத் தோன்றியது. ஆனாலும் அவன் சட்டமாக நின்றிருந்தான்.

“பக்கத்துக் கடைக்காரப் பையன். சின்னப்புள்ளைத்தனமா இப்படித்தான் ஏதாவது பண்ணுவான்.”

“இவ்வளவு நாளும் நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா அப்படியில்லைப் போலத் தோணுதே.”

“விடுங்க சத்யா.” இப்போதெல்லாம் அவளை அறியாமலேயே அவனைப் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டிருந்தாள் மலர். அப்படி அவள் அழைக்கும் போதெல்லாம் அவன் பெயருக்கு ஒரு தனி கம்பீரமே வந்துவிடுகிறது.

“என்னாச்சு மலர்?” கொக்கிற்கு ஒன்றே மதி என்பது போல அவன் நின்றிருந்தான்.

“சொல்லிக்கிற மாதிரிப் பெருசா ஒன்னுமில்லை. விடுங்கன்னு சொல்றேன் இல்லையா?” மலர் சொல்லி முடிக்கும் போது சத்யன் அவளது வலது புஜத்தைப் பிடித்திருந்தான். அவன் லேசாக அழுத்திய விதமே நீ சொல்லாமல் நான் விடப்போவது இல்லை என்பது போல இருந்தது. அவள் கண்களை இமைக்காமல் பார்த்திருந்தான்.

“அந்தப் பையனுக்கு அவன் பெரிய மன்மதன்னு நினைப்பு.”

“சரி…‌ அதுக்கு இப்போ என்னப் பண்ணட்டாம்?”

“விடுங்களேன் சத்யா.”

“உனக்கு ஏதாவது தொந்தரவு குடுக்குறானா?”

“அவனைக் கல்யாணம் பண்ணிக்கட்டாம்.” மலர் சொல்லியே விட்டாள். விடாமல் இவனும் பிடித்துக்கொண்டு தொங்குவது எரிச்சலாக இருந்தது அவளுக்கு.

“அடிங் அவனை!” பல்லைக் கடித்துக் கொண்டு இவன் கோபமாகக் கிளம்ப மலர் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

“சத்யா! என்னப் பண்ணுறீங்க நீங்க?”

“அதான் என்னை வரும்போதெல்லாம் வெட்டவா குத்தவான்னு பார்த்தானா? அவனுக்கு எம் பொண்டாட்டி கேக்குதா? தோலை உரிச்சிட மாட்டேன்.” அவன் மல்லுக்கு நிற்க மலர் அவனை இழுத்துப் பிடித்தாள்.

“ப்ளீஸ்… சத்யா! இது தொழில் பண்ணுற இடம். இங்கப் பிரச்சனைப் பண்ணாதீங்க. நான் சொல்றதைக் கேளுங்க. ப்ளீஸ்…” அவள் அத்தனைக் கெஞ்சவும் தான் கொஞ்சம் நிதானித்தான் சத்யா.

“இப்போ எதுக்கு இங்க வந்தான்?”

“அவனுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு. அதான் வந்து பொலம்பிட்டுப் போறான். விடுங்களேன்.” மலர் சலிப்பாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“நீ எங்கிட்ட எதுவுமே சொல்ல மாட்டியா மலர்?” அவன் கேள்வியின் அபத்தம் புரிய மலர் அவனை விசித்திரமாகப் பார்த்தாள்.

“இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்?”

“மாமாவுக்காகக் கல்யாணம் பண்ணுறவர்கிட்ட என்னத்தைச் சொல்ல?” மலர் வாய்க்குள் முணுமுணுத்தாள். ஆனால் அதுவும் அவனுக்குக் கேட்டது.

“மலர்… இதுக்கு விளக்கம் அன்னைக்கே நான் உங்கிட்டச் சொல்லிட்டேன். மாமாவுக்காகப் போறது வர்றது எல்லாத்தையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. மலரை எனக்குப் பிடிச்சிருக்கு. இப்பல்லாம் ரொம்பவே பிடிக்குது. சஹானா அனுப்பின ஃபோட்டோவைப் பார்த்துட்டு யாருக்கும் தெரியாம குமுதா அத்தைக்கிட்டக் கெஞ்சிக் கூத்தாடி மலரைப் பார்க்கப்போற அளவுக்கு எனக்கு மலரைப் பிடிக்குது.”

“குமுதா அத்தை எனக்குத்தான் அத்தை. உங்களுக்குச் சித்தி.”

“இப்போ இதுதான் ரொம்ப முக்கியமா?” அவன் சொன்ன விதத்தில் மலர் வந்த புன்னகையை வாய்க்குள் மறைத்தாள். அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் கைப்பிடியில் தன்னிரு கைகளையும் நின்றபடியே குனிந்து ஊன்றியவன் அவள் கண்களை ஆழமாகப் பார்த்தான்.

“இந்த ஜென்மத்துல என்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டியா மலர்?” அவன் உருகிய படி கேட்கவும் மலர் அதிர்ந்து போனாள். இவன் கேட்டிருக்கிறான்! நான் சொன்னதை இவன் கேட்டிருக்கிறான்!

“எதை எங்கிட்ட மறைக்கிற மலர்?‌ வீட்டுல சஹானாவும் கீர்த்தனாவும் அந்த ஓட்டு ஓட்டுறாளுங்க. அம்மா எங்கிட்டச் சொல்ல வேண்டியதை எங்கயோ போய் சொல்லி இருக்காங்க.” அவன் உல்லாசமாகச் சொன்னான்.

“இல்லை… அப்படியெல்லாம் இல்லை. அத்தைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க.”

“அப்படியா? அப்போ உங்க அம்மாக்காகத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கப் போறியா?”

“…………..”

“ஆனா எனக்கெல்லாம் அப்படி இல்லைப்பா. ஆரம்பிச்சதென்னவோ அப்படி இருக்கலாம்.‌ ஆனா இப்போ தலைக் கிறுகிறுத்துப் போகுது. ஒரு பொண்ணு என்னைப் பைத்தியம் ஆக்குறா. சதா அவளைப் பார்க்கணும் போல இருக்கு. இப்பக்கூட ஸ்டூடியோ போறேன். அவ ஃபோட்டோவைப் பிரின்ட் போட.‌ எதுக்குன்னு கேக்க மாட்டியா மலர்?”

“எதுக்கு?” மலரின் குரலில் அத்தனைத் தயக்கம்.

“எத்தனை நேரம்தான் ஃபோன்லயே அவளைப் பார்க்கிறது? பக்கத்துல பார்க்கிற மாதிரி இல்லையே அது.‌ அதோட…”

“என்ன?” மலருக்குக் குரல் எழும்பவில்லை.

“ஃபோன்ல சரியா முத்தம் குடுக்க முடியலையே மலர்.” அவள் காதுக்கு அருகில் வந்தவன் ரகசியமாகக் சொன்னான். மலருக்கு வியர்த்துப் போனது.‌ மறந்தும் அவன் அவளைத் தீண்டவில்லை. ஆனால் அவன் மூச்சுக்காற்று அவளைத் தீண்டிச் சென்றது.

“இங்கப் பார்த்தியா?” அவன் எதையோ காட்ட மலர் நிமிர்ந்து பார்த்தாள். அவன் கழுத்திலிருந்த செயினில் அவள் மோதிரம் தொங்கிக் கொண்டிருந்தது.

“கல்யாணத்தன்னைக்குத்தான் நிச்சயதார்த்தத்தையும் வெக்கணுமா? ஏன், அதைக் கொஞ்சம் முன்னாடி வெச்சா ஆகாதா? பாதிக் கல்யாணம் முடிஞ்ச மாதிரி இருக்கும்ல? மனுஷனோடக் கஷ்டம் புரியாம.” அவன் தன்பாட்டில் புலம்பியபடி அவளை விட்டுத் தள்ளி வந்தான். மலருக்கு இப்போதுதான் மூச்சு சீரானது. விவேக்கை அவன் மறந்து போனதில் அவளுக்கு அத்தனைத் திருப்தி. ஆனால் சத்யன் அத்தனை சுலபத்தில் அவனை மறந்துவிடவில்லை என்று அப்போது மலருக்குப் புரியவில்லை.

“எங்கேயாவது வெளியே போகலாமா மலர்?”

“ம்ஹூம்…”

“ஏன்?” எப்போதும் அவள் அவனைத் தள்ளியே வைப்பதில் அவனுக்கு லேசாக மனச் சுணக்கம் வந்தது. ஆனால் அவள் பதில் சொல்லவில்லை.

“உனக்கு எம்மேல அப்படியென்ன கோபம் மலர்?”

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை.”

“அப்போ ஏன் என்னை எப்பப் பார்த்தாலும் அவாய்ட் பண்ணுறே? நேத்து அவ்வளவு ஆசையாப் பார்க்க வந்தா சொல்லாமக் கொள்ளாம நீ பாட்டுக்குப் போயிட்டே. அவனவன் கல்யாணம் ஃபிக்ஸ் ஆனா என்னெல்லாம் பண்ணுறான் தெரியுமா?”

‘ஆசையாக் கல்யாணம் பண்ணுறவங்க அதெல்லாம் பண்ணுவாங்க. நமக்கென்ன வந்தது?’ மனதுக்குள் அவள் புலம்பிக் கொள்ள இப்போது சத்யன் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.

“ஏதாவது சொன்னியா மலர்?”

“இல்லை…”

“உனக்கு எம்மேல ஏதோ கோபம் இருக்கு மலர்.‌ அதை வெளிப்படையா எங்கிட்டச் சொல்ல மாட்டேங்கிறே. என்னை விட்டுத் தள்ளித் தள்ளிப் போறே.”

“நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிக்க வேணாம்.”

“இல்லை மலர்… இதுதான் உண்மை. அரேன்ஜ்ட் மேரேஜ் பண்ணுறவங்க எல்லாம் என்ன சாமியாரா? முற்றும் துறந்தவங்களா? அவங்கெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி ஃபியான்ஸியோட என்ஜாய் பண்ண மாட்டாங்களா? ஆனா நீ எல்லாத்துக்கும் தடா போடுறே. நான் கிளம்புறேன் மலர்.” அவன் கோபமாகக் கிளம்பினான்.

“இப்போ எதுக்கு இவ்வளவு கோபப்படுறீங்க?”

“வேற என்ன பண்ணச் சொல்றே? எந்த விதத்திலயும் உன்னை நெருங்க விடாம இப்படி நீ விறைப்பா நின்னா நான் என்னதான் பண்ணுறது?”

“ஏன் சத்யா? உங்க மாமாவும் எங்கம்மாவும் சின்ன வயசுல ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமப் போயிருந்தா இந்த மலரை நீங்க திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டீங்க இல்லை?”

“மலர்!” சத்யன் திகைத்துப் போனான்.

-0-0-0-0-0-0-0-

மண்டபம் நிறைந்திருந்தது. மணவறையில் உட்கார்ந்து சத்யன் சம்பிரதாயங்களைச் செவ்வனே செய்து கொண்டிருந்தான்.

அன்றைக்கு மலரைச் சந்தித்த பிறகு சத்யன் அவளைப் பார்க்கவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மலேஷியாவிலிருந்து வந்திருந்தான்.

ஞானபிரகாஷ் கல்யாண வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் அவரால் அசைய முடியவில்லை. இவனாகவே வலிய வந்து மலேஷியா செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

‘எதுக்கு சத்யா? நம்ம மனேஜரை அனுப்பலாம்.’ ஞானபிரகாஷ் சொன்ன போதும் சத்யா சம்மதிக்கவில்லை.

‘இல்லை மாமா.‌ கண்டிப்பா இப்போ நம்மள்ல ஒருத்தர் அங்க இருக்கணும்.’ சத்யா சொல்வதிலும் நியாயம் இருந்ததால் ஞானபிரகாஷும் மறுக்கவில்லை.‌

தான் மாப்பிள்ளை வீடா, பெண் வீடா என்று தெரியாத அளவிற்கு அவரை வேலைகள் உள்வாங்கிக் கொண்டது.

சத்யாவிற்கு இப்போது கொஞ்சம் தனிமைத் தேவைப்பட்டதால் மலேஷியாப் பயணத்தைத் தானாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டான்.

தினமும் மலரை அழைத்துப் பேசினான். ஆனால் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான்.‌ மனம் எப்படியெல்லாமோ உணர்ந்த போதும் அவன் இருப்பை, அவள் மீதான தனது அக்கறையை அவளுக்கு உணர்த்திக் கொண்டுதான் இருந்தான்.

கல்யாண வேலைகள் எந்த அளவில் போய்க்கொண்டு இருக்கின்றன என்று விசாரிப்பான். அவன் வேலைகள் எந்தளவு முன்னேறி இருக்கின்றது என்று அவளுக்கு விளக்குவான். கல்யாண வேலைகளில் தனது அபிப்பிராயங்களையும் அவளோடு பகிர்ந்து கொள்வான். ஆனால் மறந்தும் அவனுள் சதா பொங்கிப் பெருகும் காதலை அவளிடம் காண்பித்துக்கொள்ள மாட்டான்.

இரண்டு வாரத் தனிமையில் தன்னை முழுதாக அலசி ஆராய்ந்தான் சத்யன். ஏனென்றால் அன்று மலர் அவனிடம் கேட்ட வார்த்தைகள் அப்படி. அதிலிருந்த நியாயம் அவனைக் குத்திக் கிழித்தது.

எல்லாப் பெண்களையும் போல அவளும் காதலான ஒரு கணவனை எதிர்பார்த்திருக்கிறாள். அந்த இடத்தில் நான் முரண்பட்டபோது அவளுக்கும் வருத்தமாகத்தானே இருந்திருக்கும். அப்படியென்றால் ஏனவள் இந்தத் திருமணத்தை மறுக்கவில்லை? அவள் அம்மாவிற்காகத் தலையாட்டினாளா? இல்லை… உண்மையிலேயே அம்மா சொல்வது போல என் மேல் அவளுக்கொரு நாட்டம் இருந்ததா?

இரவின் தனிமைகளில் பல கோணங்களில் இருந்தும் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தான் சத்யன். எது எப்படி இருந்தாலும் இந்த நிமிடம் அவளை நான் ஆழமாக நேசிப்பது உண்மை. ஒரு காதலனாக அவளுக்கு நான் அறிமுகமாகாவிட்டாலும் அவள் எதிர்பார்க்கும் காதல் கணவனாக என்னால் வாழமுடியும். அதுதானே அளுக்கு நான் செய்யும் நியாயம்.

எல்லா விதமாகவும் யோசனை செய்துவிட்டுத் தெளிவாக நாடு திரும்பி இருந்தான் சத்யா.

முழுமனதாக எந்தக் குழப்பமும் இல்லாமல் தன் திருமணத்திற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டான்.

மலேஷியாவிலேயே தனக்குத் தேவையானவற்றை சத்யன் வாங்கிக் கொண்டதால் வத்சலாவும் அமைதியாகிவிட்டார். தினமும் பேசுவதால் ஏதாவது தன்மீது கோபமோ என்று மலருக்கும் தோன்றவில்லை. எல்லாவற்றையும் சுமுகமாக நடத்திச் சென்றான் இளையவன். மலரை நோகடித்துப் பார்க்கும் துணிவு சத்யாவிற்கும் இல்லை என்பதுதான் உண்மை.

மணப்பெண்ணைக் கூட்டமாகப் பெண்கள் அழைத்துவர அங்கே பார்வையைத் திருப்பினான் சத்யன்.

ரோஜாப்பூக் கலரில் தங்கத் தாமரைகள் நெய்யப்பட்டிருந்த பட்டுடுத்தி முழு அலங்காரத்தில் நடந்து வந்துகொண்டிருந்தாள் மலர்.

இரண்டரை வாரங்களுக்குப் பின் அவளைப் பார்க்கிறான் சத்யன்.

கண்ணைப் பிரிக்கமுடியாத அளவிற்கு அவள் அழகு அவனைக் கட்டிப் போட்டது. பாட்டியை நிமிர்ந்து பார்த்தான். அவர் கண்களும் அப்போது மலரைத்தான் பார்த்தபடி இருந்தது. அவர் கண்களில் தெரிந்த திருப்தியைக் கண்டு கொண்ட பேரன் புன்னகையோடு சடங்குகளில் ஈடுபட்டான்.

சித்ரலேகா மணவறைக்குப் பக்கத்திலேயே நின்றிருந்தார். அது பாட்டியின் உத்தரவு. குமுதாவையும் அவர் கணவரையும் முன்னிறுத்தியே சித்ரலேகா அனைத்தையும் நடத்திய போதும் ஏனோ பாட்டி அவர் மேல் ஒரு கண்ணாகவே இருந்தார்.

மறுப்புச் சொல்வார் என்று பயந்த பாட்டியே இப்படி நடந்து கொள்ளவும் எல்லோருக்கும் பெரும் ஆறுதலாக இருந்தது.

ஞானபிரகாஷ் எல்லா இடங்களிலும், சந்தர்ப்பத்திலும் மிகவும் நிதானமாக இருந்தார். சித்ரலேகாவின் ஒதுக்கம் அவர் எதிர்பார்த்தது என்றாலும் அதை நேரடியாக அனுபவித்த போது ஏனோ மனிதருக்கு வலித்தது.

மூன்றாம் மனிதரைப் போல அந்தக் கண்கள் அவரைப் பார்த்த போது அவருக்கு வேதனைப் பொறுக்க முடியவில்லை. நல்ல வேளையாக முதல்முதலாக வத்சலா மலர் வீட்டிற்குப் போனபோது அவரை வேலை இழுத்துக் கொண்டது.

முதலில் சற்றுத் தயங்கினாலும் அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணிய பிறகு ஞானபிரகாஷ் புறப்படத் தயங்கவில்லை.

திரும்பி நாடு வந்த பிறகும் அனைத்துக் கல்யாண வேலைகளையும் தன் தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டார்.

வத்சலா குடும்பத்திற்கு அவர் மனம் தெரியும் என்பதால் யாரும் அவரை எதுவும் கேட்கவில்லை. முழுதாகப் பெண் வீட்டு மனிதராக மாறிப்போனார் ஞானபிரகாஷ்.

பெண் வீட்டிற்குத் தேவையான அனைத்தும் அவர் தலைமையின் கீழேயே நடைபெற்றது. ஆனால் குமுதாவும் கணவரும் தான் அனைத்தும் பண்ணுவது போல உலகத்தை நம்ப வைத்திருந்தார் ஞானபிரகாஷ்.

சித்ரலேகாவின் நிலைதான் மிகவும் தர்மசங்கடமாகிப் போனது.

எல்லாவற்றையும் தன் தோள்களில் தாங்கும் ஞானபிரகாஷை அவரால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. தூர நிறுத்தவும் இயலவில்லை.

‘பிரகாஷ்! எல்லாச் செலவையும் நீங்களே பண்ணினா எப்படி? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அன்னைக்கு வந்தப்பவும் இப்படித்தான். நீங்கதான் எல்லாம் பண்ணினீங்க. அட்லீஸ்ட் கணக்கு வழக்கையாவது எங்கிட்டச் சொல்லலாம் இல்லை.’ சித்ரலேகா குறைப்பட்ட போது ஞானபிரகாஷ் உணர்ச்சிகளைத் துடைத்த முகத்தோடு பெண்ணைப் பார்த்தார்.

‘எம் பொண்ணுக்குச் செய்றதால நான் கணக்கு வழக்கு எதுவும் வெச்சுக்கலை லேகா. கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமா கணக்கைத் தீர்த்துக்கலாம். இப்போ அதை நினைச்சு நீ வொர்ரி பண்ணிக்காதே. நடக்கப்போறது உம் பொண்ணு கல்யாணம். அதை என்ஜாய் பண்ணு. மிச்சத்தைப் பிற்பாடு பார்த்துக்கலாம்.’

இப்படிப் பேசியே சித்ரலேகாவின் வாயை அடைத்த ஞானபிரகாஷ் பெண்கள் இருவருக்கும் எந்தக் கஷ்டமும் வராமல் பார்த்துக் கொண்டார். அதற்குப் பாலம் அமைப்பது போல இருந்தவர் குமுதா.

இங்கு எது நடந்தாலும், தேவையென்றாலும் அது ஞானபிரகாஷின் காதுகளுக்கு உடனடியாகப் போய்விடும்.

அதற்கேற்றாற் போல அனைத்தையும் ப்ளான் பண்ணி விடுவார் மனிதர்.

சுப நேரத்தில் மந்திரங்கள் ஓதி அந்தத் தாலிக் கயிற்றைத் தன் கைகளில் வாங்கிய சத்யன் தன் பெற்றவர்களைக் கூடப் பார்க்கவில்லை. சித்ரலேகாவைத் தான் முதலில் பார்த்தான். அவன் கையில் இருக்கும் அந்த மஞ்சள் கயிற்றில்தான் அவர் உலகமே இருப்பது போல கண்கள் நிறைய மணமக்களையே பார்த்திருந்தார்.

அவரைக் கனிவாகப் பார்த்து உறுதியாகப் புன்னகைத்தவன் அவரின் உத்தம புத்திரியின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டான். அட்சதைகள் அந்த இடத்தை நிறைக்க மலரைப் பார்த்து ஒரு முறை மலர்ந்து சிரித்தான்.

அம்மா அப்பாவை அண்ணார்ந்து பார்க்க அவர்களும் கண்கள் நிறைய ஆனந்தப் புன்னகையோடு நின்றிருந்தார்கள்.

தாலி முடிந்த கையோடு தாரைவார்க்கவென ஐயர் பெண்ணின் தந்தையை அழைக்க இப்போது அந்த இடமே ஸ்தம்பித்துப் போனது. அனைத்திற்கும் முன்நின்ற‌ குமுதாவின் கணவர் இப்போதும் வரலாமா என்ன? ஞானபிரகாஷ் எல்லாவற்றையும் கையைக் கட்டிக்கொண்டு அமைதியாகப் பார்த்திருந்தார்.

வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்ளலாம். அவள் கஷ்டங்களில் பாதியைத் தோளில் சுமக்கலாம்.

ஆனால் அவன்தான் தன் சரிபாதி என்று அவள்தானே சொல்ல வேண்டும்! ஞானபிரகாஷ் அமைதி காத்தார்.

“சத்யா…” மலர் மெதுவாக அழைத்தாள். சட்டென்று திரும்பினான் சத்யன். நெற்றி வகிட்டில் சற்று முன்பு தான் வைத்திருந்த குங்குமத்தோடு பார்க்க தேவதை போல் இருந்தாள் மலர்.

“என்னடா?”

“உங்க மாமாவை இங்கக் கொஞ்சம் கூப்பிடுறீங்களா.”

“மலர்!” சத்யன் ஆச்சரியத்தின் உச்சிக்குப் போனான்.

“கூப்பிடுங்க சத்யா.” அவள் அழுத்திச் சொல்லவும் பக்கத்தில் நின்றிருந்த சஹானாவிடம் விஷயத்தைச் சொல்ல ஞானபிரகாஷ் அங்கு வந்தார்.

“என்ன சத்யா?” என்றபடி.

“மாமா… உங்களை மலர்தான் கூப்பிட்டா.” சத்யன் சொல்லவும் மனிதர் மலரைப் பார்த்தார்.

“என்னம்மா?” அந்தக் குரலில் அத்தனை வாஞ்சை. மலருக்குக் கண்கள் கலங்கியது.

“ஷ்… என்னம்மா? எதுக்கு இப்போ கண்ணு கலங்குது?” ரகசியக் குரலில் மலரை அதட்டினார் ஞானபிரகாஷ்.

“குமுதா அத்தையையும் மாமாவையும் தான் அம்மா இப்போ இந்தச் சடங்கையும் பண்ணச் சொல்லுவாங்க.” மலரின் குரலில் இருந்த தெளிவை சத்யா கவனிக்கத் தவறவில்லை.

“சரி… அம்மாக்கு அதான் விருப்பம்னா அப்படியே பண்ணட்டுமே?” இது ஞானபிரகாஷ்.

“இல்லையில்லை…” இப்போது மலர் பதறினாள்.

“இல்லை… இந்தச் சடங்கை நீங்கப் பண்ணுங்கப்பா!” உறுதியாக இளையவள் சொல்ல, ஏற்கனவே வரப்போவதை ஓரளவு அனுமானித்திருந்த சத்யன் அமைதியாக இருந்தான். ஆனால் இவர்களோடு குனிந்தபடி பேசிக்கொண்டிருந்த ஞானபிரகாஷ் சட்டென்று சரிந்து உட்கார்ந்தார்.

“அண்ணா!” இவர்கள் மேல் ஒரு கண்ணை வைத்திருந்த வத்சலா அவசரமாக வந்தார்.

“என்னாச்சுண்ணா?”

“ஒன்னுமில்லைம்மா… ஒன்னுமில்லை.” ஞானபிரகாஷ் இரண்டொரு நொடிகளில் தன்னைச் சுதாரித்துக் கொண்டார். வத்சலா மகனிடம் கண்களால் ‘என்ன?’ என்று கேட்க, அவர் காதில் மகன் நடந்ததைக் கூறினான். வெற்றிப் புன்னகை ஒன்று தோன்றியது அவர் முகத்தில். திருப்தியான பாவத்தோடு தன் கணவர் பக்கம் போய் நின்று கொண்டார். மனம் பொங்கி வழிந்தது. இத்தனையும் யாரையும் கவராத வண்ணம் இயல்பாக நடந்து கொண்டிருந்தது. சத்யன் மாமாவின் முடிவு என்ன என்பது போல அவரையே பார்த்திருந்தான்.

மகளின் கையைத் தன் கையில் எடுத்துக் கொண்ட ஞானபிரகாஷ் இப்போது மருமகனின் கையைப் பிடித்து அதில் அந்தப் பஞ்சுக் கரத்தை வைத்தார். முகம் மொத்தமும் புன்னகை அலங்கரித்திருந்தது.

“சபையில இதை நான் பண்ணணும்னா அதுக்கு உங்கம்மா எனக்கு அனுமதி கொடுக்கணும்மா. இது… எம் பொண்ணு முதல்முதலா எங்கிட்டக் கேட்டதுக்காக.”

“மாமா…”

“இல்லை சத்யா. லேகாவை நான் நிறையக் காயப்படுத்திட்டேன். இனியும் அவளைக் கஷ்டப்படுத்த எங்கிட்டத் தெம்பில்லை. கடைசிவரை கூடவே நிப்பேன், அதுல எந்த மாத்தமும் இல்லை. ஆனா நான் வேலைக்காரனா, இல்லை வீட்டுக்காரனான்னு அவதான் முடிவு பண்ணனும்.” சொல்லிவிட்டு சேர்ந்திருந்த அந்த கைகள் இரண்டிலும் ஆசையாக முத்தம் வைத்தவர் நகர்ந்து விட்டார். சபை அடுத்த நிகழ்விற்குத் தயாரானது.

“இந்தாம்மா சித்ரா… இப்படி வா நீ.” பாட்டி அழைக்கவும் அங்கிருந்த அனைவரும் கொஞ்சம் திகைத்துப் போனார்கள்.

”பெரியம்மா…” சித்ரலேகா தடுமாறினார்.

“பெரியம்மா தான் கூப்பிடுறேன் நீ வா. இருபத்தி நாலு வருஷம் கஷ்டப்பட்டு வளர்த்த உனக்கில்லாத உரிமையும் தகுதியும் இங்க யாருக்கு இருக்கு? எம் பேரனுக்கு உம் பொண்ணை நீதான் தாரைவார்த்துக் குடுக்கணும். சீக்கிரமா வா.” பாட்டி அதட்டலாகச் சொல்ல யாரும் எதுவும் பேசவில்லை. ஒரு நொடி சித்ரலேகாவின் பார்வை ஞானபிரகாஷைப் பார்த்தது.

அது நட்பான பார்வை. நாம் ஒரு விஷயத்தைப் பண்ணுவதற்கு முன்பு நம் மனதுக்கு நெருக்கமானவர்களிடம் அபிப்பிராயம் கேட்போமே… அந்தப் பார்வை அது. ஞானபிரகாஷ் கண்களை ஒரு முறை மூடித்திறந்து

‘போ’ என்பது போலத் தலையசைத்தார். அதன்பிறகு சித்ரலேகா தயங்கவில்லை.

பூவின்றிப் பொட்டின்றி எந்த மங்கல அணிகலன்களும் இன்றி கண்ணீரை மட்டும் காணிக்கையாக்கி அந்த இளம் தாய் தன்னந்தனியாக அந்தச் சபையைச் சாட்சியாக்கி தன் பெண்ணைத் தாரைவார்த்துக் கொடுத்தாள்.

மணவறையில் நின்றிருந்த பெண்கள் கண்கலங்கினார்கள் என்றால், அந்த மண்டபமே கொஞ்சம் ஸ்தம்பித்துப் போனது.