Roja 12

ரூமில் அமைதியாக அமர்ந்திருந்தான் சத்யன். திருமணம் முடிந்த கையோடு பெண் வீட்டிற்குப் போய் அங்கே ஒரு சில சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு அதன்பிறகு மாப்பிள்ளை வீடு வந்து விட்டார்கள்.
பெண் வீட்டில் அக்கம் பக்கத்தினர் என்று அதிகம் ஆட்கள் வந்து கொண்டிருந்ததால் சித்ரலேகாவால் அங்கிருந்து அசைய முடியவில்லை. குமுதாதான் மலரோடு உடன் வந்தார். சற்று நேரத்திற்கு முன்புதான் அவரும் கிளம்பிப் போயிருந்தார்.
கதவு திறக்கும் ஓசைக் கேட்டது.‌ சத்யன் திரும்பிப் பார்த்தான். இலகுவான பருத்தி இரவு ஆடையில் இருந்தான். மலர்தான் வந்து கொண்டிருந்தாள்.
“வெல்கம்!” எழுந்து அவளை வரவேற்றவன் கதவைத் தாள் போட்டுவிட்டு அவளைக் கைப்பிடித்து அழைத்து வந்தான். அவளும் லேசான ஒரு காட்டன் சேலையில் தலையை ஒற்றைப் பின்னல் போட்டு சாதாரணமாக இருந்தாள்.
அங்கிருந்த சோஃபாவில் அவளை உட்கார வைத்தவன் அவளுக்கு எதிரில் அவள் கைகளைப் பிடித்தபடி அமர்ந்து கொண்டான்.
“மிஸ். மலர்விழி… டாட்டர் ஆஃப் சித்ரலேகா.” அவன் அனுபவித்துச் சொல்ல மலரின் முகத்தில் இருந்த புன்னகை இன்னும் விரிந்தது.
“ஆனா… இனி மிஸஸ். மலர்விழி சத்யன்!” கிறக்கமாகச் சொன்னபடி எப்போதும் போல இப்போதும் அவள் கைவிரல் மோதிரத்தோடு விளையாடினான். மலர் மௌனமாக அவன் செயல்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இன்னைக்கு எல்லாமே ரொம்ப நிறைவா இருந்தது இல்லை மலர்?”
“ம்…”
“எனக்குத் தெரிஞ்சு எந்தக் குறையும் இருந்த மாதிரித் தெரியலை. உனக்கு?”
“இல்லையில்லை…‌ எல்லாமே நல்லா இருந்தது.”
“ஷாப்பை எப்ப ஓப்பன் பண்ணணும் மலர்?”
“அது வழக்கம் போல ஓப்பன்தான். பசங்க பார்த்துப்பாங்க. ஒரேயொரு வெட்டிங் இன்னும் மூனு நாள்ல இருக்கு. எல்லாம் டிசைன் பண்ணி முடிச்சுக் குடுத்திருக்கேன். வேலை முடிஞ்சதுக்கு அப்புறமா ஒரு தரம் போய் பார்த்துட்டு வந்தா சரி.”
“குட். நான் இன்னும் ஒரு வாரத்துல மலேஷியா போக வேண்டி வரும். நீயும் வர்றியா மலர்?”
“உங்களுக்கு… கஷ்டம் இல்லைன்னா…”
“இதுல என்னக் கஷ்டம் இருக்கு.‌ ரெண்டு பேரும் போகலாம்.‌ ஜாலியா இருக்கும்.”
“ம்…” மலர் சிரித்துக் கொண்டாள்.‌ அன்று விவேக் கடையில் வைத்துப் பிரச்சனைப் பண்ணியபோது சத்யனைக் கடைசியாகப் பார்த்தது. அதன்பிறகு இன்றுதான் பார்க்கிறாள். அவன் இப்படிக் கலகலவென்று பேசுவதே அவளுக்கு இதமாக இருந்தது.
அன்று தான் அந்தக் கேள்வியைக் கேட்ட போது வாயடைத்துப் போய் வெளியேறியவன்தான். அதன் பிறகு சட்டென்று மலேஷியா போய்விட்டான்.‌ தன் மேல் கோபமிருக்குமோ என்று மலர் பயந்தே போனாள். ஆனால் தினமும் ஃபோனில் பேசினான். சாதரணமாகவே பேசியதால் மலரும் திருப்திப் பட்டுக்கொண்டாள்.
“மலர்!”
“ம்…”
“அன்னைக்கு ஷாப்ல வெச்சு ஒரு கேள்வி கேட்டே… ஞாபகமிருக்கா?” இப்போது மலர் திடுக்கிட்டுப் போனாள். எல்லாம் நன்றாகப் போவதாக இப்போதுதானே நினைத்தாள். கண்கள் மனதின் சஞ்சலத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியது.
“இல்லைம்மா… உம் மேல எந்தத் தப்பும் இல்லை. நீ கேட்டது நியாயம்தான். அந்த நியாயம் என்னை ரொம்பவே சுட்டுது மலர்.”
“சத்யா… நான் ஏதோ தெரியாம அப்படிக் கேட்டுட்டேன். ப்ளீஸ்…” இப்போது சத்யா அழகாகப் புன்னகைத்தான்.‌ அவளை எப்போதும் வசீகரிக்கும் புன்னகை அது.
“நீ என்னை சத்யான்னு கூப்பிடும் போது ரொம்ப அழகா இருக்கு.” சொல்லிவிட்டுச் சிரித்தவன் மேலும் தொடர்ந்தான்.
“எனக்கும் மலருக்கும் இடையிலே இனி எந்த ஒளிவு மறைவும் இருக்கப்படாது. அதனாலதான் இப்போ இந்தப் பேச்சை எடுத்தேன்.”
“வேணாமே…” அவள் கண்ணும் முகமும் கெஞ்சியது. இப்போதும் அவன் சிரித்தான். ஆனால் மனதுக்குள் எதையோ நினைத்திருப்பான் போலும். அந்தச் சிரிப்பு கொஞ்சம் கள்ளம் நிறைந்தது போல வித்தியாசமாக இருந்தது.
“என்ன?” மலர் கலவரமாகக் கேட்டாள்.
“இல்லை… இப்போ நான் ‘வேணுமே மலர்’ னு சொன்னா இங்கே சீனே மாறிடும் இல்லை?” அவன் வாய்விட்டுச் சிரிக்க மலர் சிவந்து போனாள். அந்த அழகையும் சத்யன் கண்களால் பருகிக் கொண்டான்.
“இல்லை மலர்.‌ நாம கொஞ்சம் பேசணும். அன்னைக்கு நீ கேட்டது அவ்வளவு நியாயமாப் பட்டுச்சு எனக்கு. உனக்கு அநியாயம் நினைக்க என்னால முடியாதுதான். ஆனாலும் நிதானமாத் தனியா இருந்து யோசிக்கணும்னு தோணிச்சு. அதான் மலேஷியா போனேன்.”
“ஓ… அப்போ எம்மேல கோபத்துல தான் போனீங்களா?”
“அப்படியில்லை… உன்னைக் கோபிக்க என்னால முடியாது மலர். எனக்கு அந்தத் தைரியமும் இல்லை எங்கிறதுதான் உண்மை. என்னைப்பத்தி எனக்குத் தெரிஞ்சுக்கணும்.‌ எம் மனசுல என்ன இருக்குன்னு முதல்ல நான் தெளிவா இருக்கணுமில்லை மலர்?”
“ம்… தெளிவு கிடைச்சுதா?”
“நிறையவே…”
“என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
“தெரிஞ்சுக்கலாமே… ஆனா மலர் மனசுல என்ன இருக்குன்னு நானும் தெரிஞ்சுக்கலாமா?” அவன் குறும்பாகக் கேட்க அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
“ம்… சொல்லமாட்டீங்க… பரவாயில்லை, இருக்கட்டும். மலருக்கு இதுவரைக்கும் கல்யாணம் எங்கிற எண்ணமே வந்ததில்லை. அந்த நேரத்துல நான் கல்யாணப் பேச்சை எடுத்தப்போ எல்லாப் பொண்ணுங்களையும் போல மலரும் காதலா ஒரு புருஷனை எதிர்பார்த்திருக்கா.”
“……………..”
“அது நியாயமும் தானே? ஆனா நான் காதலுக்குப் பதிலா கடமையைப் பத்திப் பேசின உடனே மலருக்குக் கோபம் வந்துச்சு அன்னைக்கு.”
“சத்யா…”
“தப்பில்லை… மலருக்கு அப்போ நான் நியாயம் பண்ணலை. ஆனா இப்போப் பண்ணணும்னு நினைக்கிறேன்.” அவள் கண்கள் அவனைக் கேள்வி கேட்டது.
“இப்போ எம்மனசு பூராக் காதல் கொட்டிக்கிடக்கு மலர். ஆனா அதை மலர் உணரணும். என்னோட காதலை மலர் புரிஞ்சுக்கணும். மலருக்குக் கிடைச்சிருக்கிற இந்த சத்யா ஒரு நல்ல காதலன்னு மலர் சொல்லணும். அதுக்கப்புறமா… மலரோட சேர்ந்து மனசையும் தாண்டி நிறைய விஷயங்களை ஷெயார் பண்ணிக்கணும்.” இதுவரை அவனையே பார்த்திருந்த மலர் இப்போது விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள். சத்யன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி, ஏக்கம், தாபம் என அனைத்தும் கொட்டிக் கிடந்தது.
அவளைக் கைப்பிடித்து எழுப்பியவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அந்த மாம்பழக் கன்னத்தைப் பிரிய மனமில்லாமல் பிரிந்தது அவன் இதழ்கள்.
“குட்நைட் மலர். நீ தூங்கு. ரொம்ப டயர்டா இருக்கே. ட்ரெஸ் சேன்ஞ் பண்ணணும்னாப் பண்ணிக்கோ. ஃப்ரீயா இரு. இது உன்னோட ரூம். ஓகேயா?”
“ம்…” அழகே உருவாக நின்றிருந்தவளைப் பிரிய மனமில்லாமல் பிரிந்து நின்றான் சத்யன்.
-0-0-0-0-0-0-0-
தன் கன்னத்தில் மெல்லிய ஸ்பரிசத்தை உணர்ந்த மலர் லேசாக இமைகளைப் பிரித்தாள். தனக்கு மிக அருகில் சத்யனின் முகம். அந்த முகம் இயல்பாக அவள் முகத்தில் அழகானதொரு புன்னகையைத் தோற்றுவித்தது.
“குட் மார்னிங்.” அவன் சிரிப்புடன் சொல்லவும் இப்போது மலரின் தூக்கம் முழுதாகக் கலைந்தது. சுற்றுமுற்றும் கண்களை ஒரு முறை சுழலவிட்டவள் நிதர்சனத்தை உணர்ந்து கொண்டாள்.
“குட் மார்னிங் சத்யா.”
“நல்லாத் தூக்கம் போச்சா.”
“ம்…” அவளுக்குமே அது ஆச்சரியமாக இருந்தது. புது இடம் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் நிர்மலமான தூக்கம். இத்தனைக்கும் கட்டில் பெரிதாக இருந்ததால் சத்யாவும் அதில்தான் தூங்கினான். ஆனால் மலருக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
“மலர்… வீட்டுல பெரியவங்க எல்லாரும் இருக்காங்க. ஏதாவது கேப்பாங்க. அதுலயும் பாட்டிக்கு எக்ஸ்ரே கண். பார்த்து நடக்கணும் என்ன?”
“ம்… சரி.”
“ப்ரஷ் பண்ணிட்டு வாடா. அம்மாக்கிட்ட காஃபி அனுப்பச் சொல்றேன்.” தலையை ஆட்டிவிட்டு பாத்ரூமிற்குள் போனாள் மலர். அவள் பொருட்கள் எல்லாம் அந்த ரூமில் அதற்குரிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தது.
இரவு தூங்கும் போது நைட் ட்ரெஸ்ஸிற்கு மாறி இருந்தாள் மலர். ஒற்றைப் பின்னலைத் தளர்த்திவிட்டு லூஸ் ஹெயாரோடுதான் தூங்கி இருந்தாள். கலைந்திருந்த கூந்தலை ஒற்றைக் கையால் கோதியபடி போகும் பெண்ணை இலகுவான சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் சத்யன்.
அழகானதொரு சுடிதாரில் ரூமைவிட்டு வெளியே வந்தாள் மலர். சத்யனின் ரூம் மாடியில்தான் இருந்தது. கீழே சொந்த பந்தங்களின் குரல்கள் கேட்டவண்ணம் இருந்தன.
“போகலாமா மலர்.” கேட்டபடி சத்யனும் வர இருவரும் கீழே வந்தார்கள். மொத்தக் குடும்பமும் அங்கேதான் இருந்தது.
“சத்யா… வா வா.” பாட்டி அழைக்க அவரின் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டான் சத்யன். மாமியாரின் குரலில் வத்சலாவும் அங்கே வந்தவர் மலரை அணைத்துக் கொண்டார்.
“நீ ஓகேயா மலர்?”
“ம்…” சின்னக்குரலில் தன் முகம் பார்க்காமல் முணுமுணுத்த இளையவளைப் பார்த்து வாஞ்சையாகப் புன்னகைத்தார் வத்சலா.
“வா… வந்து நம்ம வீட்டுல முதல்முதலா எல்லாருக்கும் உங்கையால ஸ்வீட் குடு.” வத்சலா சொல்லவும் அந்த ட்ரேயை வாங்கிக் கொண்டவள் எல்லோருக்கும் கொடுத்தாள். பாட்டியின் கண்கள் அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்ந்தது.
“எதுக்குப் பாட்டி எம் பொண்டாட்டியை இப்படிப் பார்க்குறீங்க?”
“அட சும்மாப் போடா சின்னப் பயலே!” விளையாட்டாகச் சொன்னாலும் பாட்டியின் கண்கள் மலர் மேலேயே இருந்தது.
இளையவர்கள் மலரைப் பிடித்துத் தங்கள் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்கள். பேச்சும் சிரிப்புமாக அந்த இடம் கலகலத்தது. பெரியவர்கள் அந்த நாளுக்கான அனைத்தையும் திட்டமிட வீட்டில் கல்யாணப் பரபரப்பு இன்னும் மிச்சமிருந்தது. இன்று பெண் வீட்டில் விருந்து.
“பாட்டி… நானும் மலரும் அவங்க வீட்டுக்கு ஒரு நடைப் போயிட்டு வந்தர்றோம்.”
“ஆமா சத்யா. சாப்பிட்டுட்டுக் கிளம்புங்க. பாவம் சித்ரா, இத்தனை நாளும் பொண்ணு பொண்ணுன்னு வாழ்ந்திருப்பா. இதுநாள்வரை இந்தப் பொண்ணுதான் அவ உலகமா இருந்திருக்கும். இப்போ அந்தப் பொண்ணு வீட்டுல இல்லைன்னா அவளுக்குக் கஷ்டமா இருக்கும்.”
“ஆமா பாட்டி.”
“அது மட்டுமில்லை சத்யா. இப்போக் கல்யாணக் கூத்துல அந்த வீடு ஜேஜேன்னு இருக்கும்.‌ அதால சித்ரா இப்போப் பெருசா வருத்தப்பட மாட்டா. இன்னும் ரெண்டு நாள்ல எல்லாரும் கலைஞ்சு போயிடுவாங்க. அப்போ ரொம்பக் கஷ்டப்படுவா. நீங்க ரெண்டு பேரும் அப்போதான் இன்னும் அவளை நல்லாப் பார்த்துக்கணும். வயசு போனக் காலத்துல தனிமைக் கொடுமை சத்யா.” பாட்டி பெருமூச்சு விட சத்யன் அவர் கைகளைத் தட்டிக் கொடுத்தான்.
கண்மணி அப்போதுதான் ஏதோ வேலையை முடித்துவிட்டு வந்தவர் மலரின் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டார். சத்யாவைப் பார்த்துப் புன்னகைக்க அவனும் பெரியம்மாவைப் பார்த்துச் சிரித்தான்.
இந்தக் கல்யாணத்தில் சத்யனைவிட, ஏன்… மலரைவிட அதிகம் சந்தோஷப்பட்ட நபர் என்றால் அது கண்மணியாகத்தான் இருக்கும். ஏதோ தன் தம்பிக்கு ஒரு புத்தொளியைக் கொண்டுவந்த பெண்ணாகத்தான் மலரை அவர் பார்த்தார்.
மலரின் கையிலிருந்த மெஹந்தியைப் பார்ப்பது போல அவளின் கையைத் தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டார். கண்கள் லேசாகக் கலங்கியது. மலருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. சத்யாவை நிமிர்ந்து பார்க்க அவன் கண்களாலேயே அவளை ஆறுதல் படுத்தினான். பெரியண்ணன், வத்சலாவின் கணவர், கண்மணியின் கணவர் என அத்தனைப் பேரும் அங்குதான் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
“ஞானத்தைத் தேடுறியா மலர்?” அழாமல் இன்றுதான் மலரைப் பார்த்து முழுதாக ஒரு வாக்கியம் பேசி இருக்கிறார் கண்மணி.
“இன்னும் எந்திரிக்கலை. தூங்குறான். ரெண்டு வீட்டு வேலையையும் இழுத்துப் போட்டுப் பார்த்துக்கிட்டான் இல்லை. அதான்.” தம்பி மேலிருந்த வாஞ்சை அந்தக் குரலிலேயே தெரிந்தது மலருக்கு.
“ஞானத்தைப் பொறுத்தவரை நிறையத் தவறு நடந்து போச்சு மலர். நானெல்லாம் அவன் அக்கான்னே சொல்லிக்கப்படாது. அதுக்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.” லேசாகத் துளிர்த்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டார் கண்மணி.
“அப்பா அம்மாக்குத்தான் அறிவில்லாமப் போச்சு. பழைய மனுஷங்க. அப்படியும் சொல்ல முடியாது. இதோ… இந்த சத்யாவோட பாட்டியைப் பார்த்தியா? எவ்வளவு பெரிய மனசு! நேத்து உங்கம்மாவை எப்படி கௌரவப் படுத்திட்டாங்க. என்னைப் பெத்தவங்க என்னை மாதிரியே நடந்துக்கிட்டாங்க. சுயநலமா.” கண்மணி திக்கித் திக்கிப் பேச மலருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
“எம் புருஷன், எம் புள்ளைங்கன்னு ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கேன்.‌ ஞானத்தை மறந்து போய்ட்டேன். ஆனா வத்சலாவைப் பார்த்தியா. துணிஞ்சு இறங்கிட்டா. இதையெல்லாம் உங்கிட்டப் பேசுறது சரியான்னு கூட எனக்குத் தெரியலை மலர். ஆனா மனசு பாரமா இருக்கு.” சொல்லிவிட்டு அவர் தலைக் குனிந்திருக்க மலருக்குள் இப்போது பாரம் ஏறிக்கொண்டது.
அம்மா… இத்தனைக் காலமும் தன்னந்தனியாகத் தனக்காக வாழ்ந்த அம்மா. இந்தக் கல்யாணத்தின் ஆதாரமே அம்மாதான் என்றாலும் அது அவளுக்கும் சாதகமாக ஆகிப்போனது. மனதுக்குப் பிடித்தவரோடு ஒரு வாழ்க்கை வாழ்வது எத்தனை இனிப்பாக இருக்கிறது. கூடலில்லாத உறவு என்றாலும் அந்த அருகாமை எவ்வளவு இதத்தைக் கொடுக்கிறது! இதையெல்லாம் அம்மா இழந்துதானே போனார்.
ஆசைப்பட்டதைத் தொலைத்துவிட்டு, திடீரென்று தன்னோடு பிணைத்து வைக்கப்பட்டதை இணைத்துக்கொண்டு, அதற்கு வளைந்து கொடுத்துக் கொண்டு… நினைக்கவே அவளுக்குக் கஷ்டமாக இருந்தது.
அப்படியே அம்மா அப்பாவோடு நல்லதொரு வாழ்வு வாழ்ந்திருந்தாலும் இப்போது அவருக்கென்று ஒரு துணை இருப்பது நல்லதுதானே? அதுவே அவர் தொலைத்த உறவாக இருக்கும்போது…‌
ஆனால் இதையெல்லாம் இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா?கைக்கொட்டிச் சிரிக்கத்தானே காத்திருக்கும். தனிப்பட்ட மனிதனின் சுய விருப்பு வெறுப்புகளை என்றைக்குச் சுற்றி இருப்பவர்கள் மதித்திருக்கிறார்கள்.
“மலர்!” மனைவியின் முகமாறுதலைக் கவனித்த படியே இருந்த சத்யன் குரல் கொடுத்தான். மலர் சிந்தனைக் கலையத் திரும்பிப் பார்த்தாள்.
“என்ன?” அவன் கண்களாலேயே கேட்க மலர் புன்னகைத்தாள். ஆனால் மனதுக்குள் சிந்தனை ஓடியபடியே இருந்தது. சுற்றி இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட நான் என்ன நினைக்கிறேன் என்பது இங்கு மிக முக்கியம். எனக்குள் ஒரு
தெளிவு வரவேண்டும்.
“எல்லாரும் சாப்பிட வாங்க.” வத்சலா அழைக்க அதன்பிறகு காலை உணவு பரிமாறப்பட்டது.
“சின்ன மச்சான் எங்க?” இது லோகேந்திரன்.
“அண்ணா இன்னும் எந்திரிக்கலை. ராத்திரி தூங்கும் போதே லேட் ஆகிடுச்சு.”
“சரி சரி, தூங்கட்டும் விடு வத்சலா.”
“அம்மா… மலர் வீட்டுக்கு நாங்க போயிட்டு வர்றோம்.”
“எதுக்கு சத்யா?‌ லன்ச்சுக்கு அங்கதானே போகணும். எல்லாரும் போகலாமே?”
“இல்லை வத்சலா, அவங்க ரெண்டு பேரும் போயிட்டு வரட்டும் விடும்மா. சித்ராக்கும் பொண்ணைப் பார்க்கணும் போல இருக்கும் இல்லை.”
“ஓ… ஆமால்லை. அதை நான் யோசிக்கலை அத்தை. மலர்… பட்டுப்புடவை கட்டி நகையெல்லாம் போட்டுக்கிட்டுத்தான் போகணும் சரியா?”
“சரி அத்தை.”
“நீ சாப்பிட்டுட்டு ரெடியாகு மலர். நான் பூ எடுத்துக்கிட்டு வர்றேன்.”
எல்லோரும் சாப்பிட்டு முடிக்க இளையவர்கள் இருவரும் மேலே ரூமிற்குப் போனார்கள். சத்யன் தனது பட்டு வேஷ்டி சட்டையை எடுத்துக்கொண்டு அடுத்த ரூமிற்குப் போய்விட மலர் பின்க் நிறத்திலிருந்த ஒரு பட்டுப்புடவையை எடுத்து உடுத்திக் கொண்டாள். புடவையைக் கட்டி முடிக்கும் போதே வத்சலா பூவோடு வந்துவிட்டார்.
“ஐயோ அத்தை! எதுக்கு இவ்வளவு பூ?”
“அப்படிச் சொல்லக்கூடாது மலர். புதுப்பொண்ணு நிறைய நகைப் போட்டு தலை நிறையப் பூ வெச்சுக்கிட்டாத்தானே நல்லா இருக்கும்? அதோட இப்ப உங்க வீட்டுல நிறையப் பேர் வந்து போவாங்க. அதுலயும் பொண்ணைப் பார்க்கன்னே வருவாங்க.” பேசியபடியே மருமகளுக்கு நகைகளைப் போட்டுவிட்டவர் பின்னலில் பூவையும் வைத்து விட்டார்.
சத்யனும் ரெடியாகி வந்துவிட மூவரும் ரூமை விட்டு வெளியே வந்தார்கள். அப்போதுதான் ஞானபிரகாஷ் எழுந்து குளித்து முடித்துவிட்டு அவர் தங்கியிருந்த ரூமிலிருந்து வெளியே வந்தார். சின்னண்ணனைப் பார்த்த வத்சலா கண்களாலேயே புன்னகைத்தார்.
“மலர்!” ஞானபிரகாஷ் அழைக்கவும்,
“மாமா… நானும் இங்கதான் இருக்கேன்.” என்றான் சத்யன்.
“போடா தடியா.‌” ஞானபிரகாஷ் அலட்சியமாகச் சொல்லவும் வத்சலா முறுக்கிக் கொண்டார்.
“என்ன சம்பந்தி! எங்க மாப்பிள்ளைக்கு மரியாதை குடுக்கலைன்னா உங்கப் பொண்ணு நிலைமை என்னன்னு கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தீங்களா?”
“சரிங்க சம்பந்தியம்மா! எங்கப் பொண்ணைக் கண்கலங்காமப் பார்த்துக்கங்கம்மா.” லேசாகக் குனிந்து வாய்பொத்தி ஞானபிரகாஷ் சொல்லவும் மற்றைய மூவரும் சிரித்தார்கள். அப்பாவிற்கும் மகளிற்கும் தனிமைக் கொடுத்துவிட்டு அம்மாவும் மகனும் கீழே போய் விட்டார்கள். தனது பெண்ணை ஆசைதீர ஒரு முறைப் பார்த்தார் ஞானபிரகாஷ்.
“அம்மாவைப் பார்க்கப் போறீங்களா ரெண்டு பேரும்?”
“ம்…” மலரிற்கு வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டன. தன் எதிரில் நிற்கும் மனிதர் தன் அம்மாவின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டவர். புத்திக்கு அது நன்றாகத் தெரிந்தாலும் மனம் ஏனோ மறுதலித்தது. அவர் மேல் எப்பாடுபட்டாவது கோபப்பட வேண்டும் என மலர் பல தருணங்களில் நினைத்ததுண்டு. ஆனால் அது அவளால் முடியவில்லை.
“சத்யாதான் அம்மாவைப் பார்த்துட்டு வரலாம்னு சொன்னாங்கப்பா.” இயல்பாக அவள் வாயிலிருந்து ‘அப்பா’ என்ற வார்த்தை வந்தது. அது அவளாக நினைத்துச் சொல்வதல்ல. அதுவாகவே இப்போதெல்லாம் வந்து வீழ்கிறது.
“சரிம்மா… போய்ட்டு வாங்க.” சொன்னவரைப் பார்த்துச் சிரித்தாள் மலர். இருபத்தி நான்கு வயதில் தனக்குக் கிடைத்த அப்பா மேல் ஏதோவொரு சொல்லத் தெரியாத நேசம் வந்து முளைத்திருந்தது பெண்ணிற்கு.
இத்தனை நாள் அப்பா என்ற ஒரு நபர் தன் வாழ்க்கையில் இல்லையே என்ற ஏக்கம் அவளுக்குள் இருந்திருக்கும் போலும். அந்த ஏக்கம் இப்போது வடிகால் தேடிக்கொண்டது. இரண்டெட்டு நடந்தவள் திரும்பிப் பார்த்தாள்.
“என்ன மலர்?”
“ரெண்டு வீட்டு வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்றீங்கன்னு பெரியத்தை சொன்னாங்க. ஏம்பா?”
“நான் செய்யாம வேற யாரு செய்வாங்க மலர்? எனக்கென்ன பத்துப் பொண்ணா இருக்கு? உள்ளதும் ஒன்னு. அவ கல்யாணத்தைச் சிறப்பா எந்தக் குறையும் இல்லாமச் செய்ய வேணாமா?”
“அது சரிதான். அதுக்காக உங்களையே வருத்திக்குவீங்களா?”
“இதுல என்னடா ராசாத்தி வருத்தம் இருக்கு? அப்பாக்கு இதுல சந்தோஷம் தான்.”
“சந்தோஷம் இன்னும் நெறைய இருக்குப்பா உங்களுக்கு. அவசரப்படாம எல்லாத்தையும் நிறுத்தி நிதானமா அனுபவியுங்க. புரியுதா நான் என்ன சொல்ல வர்றேன்னு?” பேச்சென்று ஆரம்பித்த பிறகு மலருக்கு இப்போது தன் அப்பாவுடன் இலகுவாகப் பேச முடிந்தது. மனதுக்குள் இப்படியெல்லாம் ஒரு உறவை இதுநாள் வரைக் கற்பனை பண்ணி இருப்பாள் போலும். எல்லாத் தயக்கமும் ஆரம்பிக்கும் வரைதான். ஆரம்பித்த பிறகு அந்த உறவு இலகுவாக அவளோடு ஒட்டிக்கொண்டது.
“இப்ப அவசரப்பட்டு அங்கக் கிளம்பி வரவேணாம். நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு நிதானமா வாங்க.”
“லன்ச் ஆல்ரெடி ஆர்டர் பண்ணியாச்சு மலர்.”
“தெரியும்பா. குமுதா அத்தை ஃபோன் பண்ணிக் கேட்டப்போ சொன்னாங்க. அவங்க அதையெல்லாம் பார்த்துப்பாங்க. நீங்க உங்களையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க.”
“சரிம்மா.” மனிதர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. மகளின் பேச்சுக்கு அடிபணிந்து விட்டார்.
சத்யாவும் மலரும் கிளம்பிப் போன சிறிது நேரத்திலெல்லாம் மாப்பிள்ளை வீட்டாரும் வந்துவிட மதிய விருந்து அமர்க்களப்பட்டது. சித்ரலேகா நிற்க நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தார்.
***
கல்யாணம் முடிந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது. விருந்து கேளிக்கைகள் என ஒருபுறம் நகர்ந்தாலும் வாழ்க்கை வழமைக்குத் திரும்பி இருந்தது.
சித்ரலேகா அந்தக் காரில் வந்து இறங்கினார். ஞானபிரகாஷ் அவரை வரச்சொல்லி ஃபோன் பண்ணிவிட்டு காரை ட்ரைவரோடு அனுப்பி இருந்தார்.
“வா லேகா.”
“பிரகாஷ்! என்னத் திடீர்னு வரச்சொல்லி இருந்தீங்க?” இயல்பாகக் கேட்டபடி உள்ளே நுழைந்தாள் பெண். வீட்டின் உட்சுவரில் இருந்த கொம்புகள், துப்பாக்கி எதுவும் அங்கே இப்போது இல்லை.
“என்ன பிரகாஷ்? உங்கப் பாரம்பரியத்தைப் பறைசாற்றுர பொருட்களையெல்லாம் காணலை?” கேலியாகவே கேட்டார் சித்ரலேகா.
“எனக்கு நல்லப் பழக்கமான ஒரு லூசுப் பொண்ணுக்கு அதோட அருமை பெருமை தெரியலை. அதால தூக்கிட்டேன்.”
“என்ன கொழுப்பா?”
“ஆமா… நீ வடிச்சுக் கொட்டினதை நான் அப்படியே தின்னுட்டேன் பாரு. அந்தக் கொழுப்பு.”
“சரி சரி. இப்போ எதுக்கு என்னைக் கூப்பிட்டீங்க பிரகாஷ்?”
“இப்படி உக்காரு.” டைனிங் டேபிளை அவர் காண்பிக்க அங்கே உட்கார்ந்தார் சித்ரலேகா. மேசை மேல் ஃபைல் காகிதங்கள் என நிறையவே இருந்தன.
“லேகா… இது மலர் கல்யாணத்தோட வரவு செலவுக் கணக்கு. மொத்தமா எல்லாத்தையும் பார்த்துட்டேன். எங்கிட்டத்தானே எல்லாம் இருக்கு? இல்லை உங்கிட்டயும் ஏதாவது இருக்கா?”
“எங்கிட்ட என்ன இருக்கு? நீங்க எதை என்னைப் பார்க்க விட்டீங்க?”
“அதைவிடு. மலருக்குப் புதுசா வாங்கின நகைக்கு எல்லாம் மொத்தமா எவ்வளவு முடிஞ்சுது?”
“மலருக்குன்னு பெருசா நான் இவ்வளவு நாளும் நகை வாங்கலை பிரகாஷ். கல்யாணத்தப்போ பார்த்துக்கலாம்னு இருந்துட்டேன். மொத்தமா ஏழு லட்சம்
ஆகிச்சு.”
“அவ்வளவு பணம் இருந்துச்சா உங்கிட்ட?”
“ஆமா பிரகாஷ். மலர் சம்பாதிக்க ஆரம்பிச்சதுல இருந்து வீட்டுச் செலவுக்குன்னு குடுத்ததை நான் தொடலை.”
“அப்பவும் ஏழு லட்சம் வராதே லேகா?”
“என்னோட பழைய நகைகளும் கொஞ்சம் இருந்துச்சில்லை பிரகாஷ். அதையும் சேர்த்துச் சொல்றேன். இவ்வளவு பெரிய இடம் வரும்னு நான் நினைக்கவே இல்லையே. இதுவே மலருக்குப் போதாதுதான்.”
“அதெல்லாம் போதும் விடு. இன்னும் எவ்வளவு செய்ய இருக்கு? இதோட எல்லாம் தீர்ந்து போச்சா?”
“அது சரிதான். வத்சலா மாமியார் ஏதாவது சொன்னாங்களா பிரகாஷ்?”
“எதைப்பத்தி?”
“இல்லை… கிராமத்துல பொண்ணு பார்க்கிற ஐடியா இருந்ததுன்னு கேள்விப்பட்டேன்.”
“இல்லையில்லை… மலரை விட உன்னைத்தான் அவங்களுக்கு நிறையப் பிடிச்சிருக்கும் போல. எப்பப்பாரு அந்த சித்ராப்பொண்ணு சித்ராப்பொண்ணுன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க.”
“ஆமா… உங்களுக்கு என்னைக் கேலி பண்ணலைன்னா பொழுது நகராதே.” சித்ரலேகா அங்கலாய்க்க ஞானபிரகாஷ் சிரித்துக் கொண்டார்.
“லேகா… மொத்தமா எல்லாம் கூட்டிக் கழிச்சுப் பார்க்கும்போது செலவு கிட்டத்தட்ட பத்து லட்சம் வருது.”
“சரி பிரகாஷ். விருந்து ஆர்டர் பண்ணின கணக்கு எல்லாம் சேர்த்தீங்களா?”
“எல்லாம் சேர்த்தாச்சு.”
“சரி.”
“அதுல நீ ஏற்கெனவே அஞ்சு லட்சம் எங்கிட்டக் குடுத்திருக்கே.”
“ஆமா, மீதி அஞ்சு லட்சத்தையும்…” சித்ரலேகாவை மேலே பேச விடாமல் கை உயர்த்தித் தடுத்தார் ஞானபிரகாஷ்.
“எம் பொண்ணு கல்யாணத்துக்கு நான் போட்டிருக்கேன்.” ஞானபிரகாஷ் சொல்ல சித்ரலேகாவின் முகம் சுருங்கியது.
“எம் பொண்ணு கல்யாணத்துக்கு நான்தான் செலவு பண்ணணும் பிரகாஷ். இவ்வளவு பெரிய தொகை கல்யாணத்துக்கு வரும்னு நான் எதிர்பார்க்கலை. மீதிப் பணத்தைக் கொடுக்கிறதுக்கு இப்ப எங்கிட்டப் பணமும் இல்லைதான் பிரகாஷ். இதை உங்ககிட்டச் சொல்றதுல எனக்கொன்னும் கௌரவக் குறைச்சல் கிடையாது. ஆனா எப்படியாவது அதைத் திருப்பித் தந்திடுவேன். அதுல மாற்றமில்லை.” பெண் பேசப்பேச ஞானபிரகாஷ் அமைதியாகக் கேட்டிருந்தார். எதுவும் குறுக்கே பேசவில்லை.
“நான் டெப்போசிட் பண்ணி இருக்கிற பணத்துல இருந்து வருமானம் வருது பிரகாஷ். இதுநாள்வரை எனக்கும் மலருக்கும் அதுதான் சோறு போட்டுச்சு. இப்போ நான் தனியாள்தானே. என்னால சேமிக்க முடியும். உங்கப் பணத்தை நான் கொஞ்சம் கொஞ்சமா‌ எப்படியாவது திருப்பிக் குடுத்திடுவேன்.”
“ம்… இந்தக் கல்யாணத்துக்கு நான் செலவு பண்ணினது மலருக்குப் பிடிக்கலைன்னா நீ தாராளமா அந்தப் பணத்தைத் திருப்பிக் குடு லேகா. ஆனா அந்த முடிவை மலருக்கிட்ட விட்டுடு. நீ குறுக்க வராதே.”
“இது என்னப் பேச்சு? மலருக்கு நான்தானே அம்மா?‌ அப்போ நான்தானே இதையெல்லாம் முடிவெடுக்கணும்?”
“ஆனா மலர் என்னைத்தானே அப்பான்னு சொல்றா?” ஞானபிரகாஷ் போட்டு உடைக்கவும் சித்ரலேகா விதிர்விதிர்த்துப் போனார்.
இது அவருக்குப் புதிய தகவல்!