Roja 2

“எப்படி சுபா? சரியாத்தானே எல்லாம் ஆர்டர் பண்ணினோம்? இப்போத் திடீர்னு ஃப்ளவர்ஸ் குறையுதுன்னா எப்படி?”

“எனக்கும் அதான் ஒன்னும் புரியல மலர்.” சுபாஷினியின் குரலிலும் கலவரம்.

“சரி பரவாயில்லை விடு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். பொண்ணு வீட்டுக்காரங்கக்கிட்ட பேசு. அவங்க வயலட் ஆர்க்கிட் கேட்டிருந்தாங்க. பூ கொஞ்சம் கம்மியா இருக்கு. அதுக்கு பதிலா வயலட் கார்னேஷன் வெக்கலாம், இல்லைன்னா வயிட் ரோஸ் மிக்ஸ் பண்ணலாம். எது அவங்களுக்கு வசதியா இருக்கும்னு கேளு. உன்னால சமாளிக்க முடியலைனா எனக்கு ஃபோன் பண்ணு. நான் உடனே கிளம்பி வர்றேன், சரியா?”

“சரி மலர்.” ஃபோனை அந்தப் புறமாக சுபாஷிணி வைக்கவும் மலரும் ஆசுவாசமாக ஒரு மூச்சை விட்டாள். எப்படிப் பூக்களின் எண்ணிக்கை குறைந்து போனது என்று தெரியவில்லை.

மண்டபத்தைப் பார்த்து ஆர்டர் எடுப்பதைப் பெரும்பாலும் மலர் தான் பார்த்துக் கொள்வாள். இந்த ஆர்டரும் மலர் தான் எடுத்தாள். ஆனால் எங்கே தவறு நடந்தது என்று புரியவில்லை.

இந்த யோசனையில் இருந்த மலர்விழி கடை வாசலில் வந்து நின்ற ப்ளாக் ஆடியைக் கவனிக்கவில்லை. சன் கிளாஸைக் கழட்டி ஷர்ட் பாக்கெட்டில் போட்ட சத்யன் காரை விட்டு இறங்கினான்.

நகரின் மையப் புள்ளியில் நல்ல விஸ்தாரமாக இருந்தது அந்த ஷாப். பக்கத்தில் இருந்த கடைகளும் நல்ல நவ நாகரீகமாகத்தான் இருந்தது.
‘ம்… அம்மா நல்ல ஷாப்பாத்தான் தெரிவு செஞ்சிருக்காங்க.’ மனதுக்குள் நினைத்தபடி உள்ளே போனான் சத்யன்.
வாடிக்கையாளர்கள் கடைக்குள் நுழையும் போது இதமாக அவர்கள் வருகையை அறிவிக்கும் மணிகளின் ஓசை அன்று சற்று கூடுதல் இதம் கொடுத்தது மலருக்கு.

சிந்தனைகள் கலைய அண்ணார்ந்து பார்த்தவள் இமைக்க மறந்து போனாள். நிஜம்… நிழலை விட இன்னும் வசீகரிகமாக இருந்தது.

“ஹாய்! இங்க மலர்விழிங்கிறது…” அந்த இழுப்பில் மலர் லேசாக விழித்தது.

“நான் தான். நீங்க மிஸ்டர். சத்யனா?”

“யெஸ்.” அவன் கை இயல்பாக அவளை நோக்கி நீள மலர் கொஞ்சமும் தயக்கமில்லாமல் அந்தக் கையைப் பற்றிக் குலுக்கினாள்.

“சாரி மேடம். நேத்து உங்களை மீட் பண்ண முடியலை. ஐம் ரியலி சாரி.”

“ஐயையோ! பரவாயில்லை. என்ன இது? இதுக்குப் போய் சாரி சொல்லிக்கிட்டு.”

“இல்லை மேடம். உங்க டைமை நான் வேஸ்ட் பண்ணிட்டேன்.”

“பரவாயில்லை…” வாய் பேசினாலும் அவள் கண்கள் அவன் நெற்றியில் போடப்பட்டிருந்த பிளாஸ்திரியில் தான் இருந்தது. அந்தப் பார்வையை சத்யனும் உணர்ந்து கொண்டானோ என்னவோ?

“உங்களை நேத்துப் பார்க்க முடியாமப் போனதுக்கு இதான் காரணம். ஜல்லிக்கட்டு.” சொல்லிவிட்டு நெற்றியைத் தடவிய படி அவன் சிரிக்க இவள் பதறிப் போனாள்.

“ஐயையோ! ஜல்லிக்கட்டுன்னா…” வார்த்தைகள் வரமறுத்தது பெண்ணுக்கு.

“இந்த காளை மாட்டை அடக்குவாங்களே, வில்லேஜ்ல… அது.” அவன் விளக்கம் வேறு சொன்னான் மலருக்கு.

“அது தெரியுங்க… ஆனா அதை… நீங்க?”

“ஆமா.” இலகுவாகச் சொன்னான் சத்யன். தன் எதிரில் இருக்கும் பெண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசம் இழுத்துக் கொண்டிருக்கிறோம் என்று புரியாமலேயே பேசிக் கொண்டிருந்தான்.

“ஐயையோ! ரொம்ப ரிஸ்கான விளையாட்டாச்சே?”

“ரிஸ்க் தான். என்ன பண்ண மேடம்? அந்த ரிஸ்க் எனக்குப் பிடிச்சிருக்கே!” சொல்லிவிட்டு அவன் பற்கள் தெரியச் சிரிக்க இப்போது மலர் முழுதாக வீழ்ந்து போனது.

“மேடம்… என்னோட தீம் கலர் ரெட் அன்ட் வயிட்.” அவன் சட்டென்று தொழில் பேச மலரும் தன்னை மீட்டுக் கொண்டாள்.

“ஓகே சார். என்னென்ன ஃப்ளவர்ஸ் எதிர்பார்க்குறீங்க?”

“ரோஸ் தான் என்னோட சாய்ஸ். அதை விட பெட்டரா ஏதாவது இருந்தா நீங்களே சொல்லுங்க.”

“கொஞ்சம் காஸ்ட்லியா இருக்கும் சார்.”

“நோ ப்ராப்ளம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. கீர்த்தனா கல்யாணம் சூப்பரா இருக்கணும். எனக்கு அதுதான் முக்கியம்.”

“ஓகே சார்.” அவள் அங்கிருந்த சோஃபாவில் அவர்களது ஆல்பத்தை வைக்க சத்யன் அதற்குள் மூழ்கிப் போனான். பூக்களின் வகைகள், அலங்கார மாடல்கள் என அனைத்தும் அதிலே இருந்தது.

“மேடம்… முதல்ல நான் இதை ஒருதரம் பார்த்திடுறேன். அதுக்கப்புறமா நீங்க என்னை கைட் பண்ணுங்க.”

“ஓ… ஷ்யூர் சார்.” சொல்லிவிட்டுக் கடையின் பின்புறமாகப் போனவள் அங்கிருந்த ஃப்ரிட்ஜிலிருந்து ஆப்பிள் ஜூஸை எடுத்து ஊற்றினாள்.

கண்கள் அங்கிருந்த கண்ணாடியில் தன்னை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டது. தூக்கிக் கட்டிய கொண்டை, முன் முடிச்சோடிருந்த ஏப்ரன். பரவாயில்லை போலத்தான் தெரிந்தது. ஜூஸை அவனிடம் நீட்டினாள் மலர்.

“ஓ… தான்க் யூ மேடம்.” அதை ஒரு மிடறு அருந்தியவன் கண்கள் கடையை அளவிட்டது.

“உங்க ஷாப் ரொம்ப அழகா இருக்கு மிஸ்.மலர். மிஸ் தானே?”

“யா… யா…” அவள் பதிலில் அத்தனை வேகம்.

“உங்க சிஸ்டரும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.” இது மலர்விழி.

“ஆமா… ஆனா இன்னைக்கு அவளுக்கு ஏதோ ஃபேஷியல் இருக்காம். போயிருக்கா. ஆனா கண்டிப்பா நீங்க மண்டபத்துக்குப் போகும்போது அவளையும் வரச்சொல்லி இருக்கேன்.”

“அப்போ சரி. ஏன்னா எல்லாம் முடிவானதுக்கு அப்புறம் என்னால எதையும் சேன்ஞ் பண்ண முடியாது. அதான்…”

“புரியுதுங்க.” அதன்பிறகு கொஞ்ச நேரம் தனக்குத் தேவையான தகவல்களை வாங்கிக் கொண்ட சத்யன் தன் தேவையைச் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டான்.
ஆனால் பெண்ணின் கண்களில் இனம்புரியாதொரு சொந்தம் தெரிந்தது. தங்கையின் கல்யாண சிந்தனையில் இருந்த சத்யன் அந்தக் கண்களைக் கவனிக்கத்
தவறிவிட்டான்.
-0-0-0-0-0-0-0-

மலர்விழி ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இறங்கினாள். மிகவும் களைப்பாக இருந்தது. இன்றைக்கு அந்தப் பெண்வீட்டாரைக் கொஞ்சம் சிரமப் பட்டுத்தான் சமாளித்தார்கள்.
அவர்கள் கேட்ட பூக்கள் கொஞ்சம் குறைந்து விட்டதால் பெண்ணின் அப்பா கொஞ்சம் முறுக்கிக் கொண்டார். சுபாவால் சமாளிக்க முடியாமல் கடைசியில் மலர் சென்றுதான் பிரச்சனையை சுமுகமாக முடித்து வைத்தாள்.
போதும் போதுமென்று ஆகிவிட்டது.
வீட்டின் முன் திண்ணையில் சாய்வாக உட்கார்ந்தாள் மலர்.
ஆறேழு வீடுகள் கொண்ட காலனி அது. அம்மா வழித் தாத்தாவின் வீடு இவர்களது. இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சிறிய வீடுதான். இருந்தாலும் மலரும் அம்மாவும் சமாளித்துக் கொண்டார்கள்.

‘ஏன் மலர்? கை நிறையச் சம்பாதிக்குற. கொஞ்சம் பெரிய வீடாப் பார்க்கலாம் இல்லை?’ சுபாஷினி அடிக்கடி கேட்கும் கேள்வி இது.

ஆனால் மவருக்கு அதில் அத்தனை உடன்பாடு இல்லை. முதலில் பாங்க் கடனை அடைக்க வேண்டும். அதன்பிறகு தான் மற்றையது எல்லாம். அது போக இந்தக் காலனி அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம்.

மலருக்கு நினைவு தெரிந்தது முதல் எல்லாமே இங்கு இருப்பவர்கள் தான். கையில் ஐந்து வயதுக் குழந்தையோடு சித்ரலேகா தனித்து நின்ற போது ஆதரவு கொடுத்து அரவணைத்துக் கொண்டதும் இங்கிருப்பவர்கள் தான்.

“மலர் வந்துட்டயா? என்ன இங்க உக்காந்துட்டே?” சித்ரலேகாவின் குரலில் திரும்பிப் பார்த்தாள் மலர்.

அம்மா… பதினெட்டில் திருமணம் நடந்ததாம். பத்தொன்பதில் மலர் பிறந்தாளாம். இருபத்தி நான்கில் கணவர் தவறிவிட்டார். இப்போது நாற்பத்தி மூன்று வயது சித்ரலேகாவிற்கு.

அழகு என்றால் அது சித்ரலேகா தான். மலருக்கு அதில் எப்போதுமே பெருமை உண்டு. தன் அம்மாவை அக்காவா என்று பிறர் கேட்கும்போது பூரித்துப் போவாள். ஆனால், அந்த அம்மா வாழ்க்கையில் எதை அனுபவித்தார் என்று கேட்டால் அது மலருக்குத் தெரியாது.

வேலை என்று ஆரம்பித்த பிறகு இத்தனை அழகாக இருக்கும் அம்மா சமூகத்தில் எத்தனை எத்தனை பிரச்சனைகளைச் சந்தித்திருப்பார் என்று புரிந்தது மலருக்கு. கணவரும் இல்லாமல், கையில் குழந்தையோடு…
அப்போதெல்லாம் இவர்களுக்குத் துணை நின்றது இந்தக் காலனி வாசிகள் தான்.

“மலர்!” அம்மா உலுக்கவும் நிகழ்வுக்கு வந்தாள் மலர்.

“என்னடீ ஆச்சு?”

“டயர்டா இருக்கும்மா. அதான் இங்கேயே உக்காந்துட்டேன்.”

“இன்னைக்கு வேலை ஜாஸ்தியா?”

“ம்…” சோம்பல் முறித்தாள் பெண். திண்ணைக்குப் பக்கத்தில் படர்ந்திருந்த மல்லிகை லேசான காற்றுக்கு ஆடி மணம் பரப்பியது. உள்ளே போன சித்ரலேகா கையில் காஃபியோடு வந்தார்.

“இந்தா மலர். காஃபியைக் குடிச்சிட்டு ரெஸ்ட் எடு. குமுதாவோட மாமியாருக்கு உடம்புக்கு முடியலையாம். நான் ஒரு எட்டுப் போய்ப் பார்த்துட்டு வந்தர்றேன்.”

“சரிம்மா.” அம்மா வெளியே போகவும் மலர் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே வந்தாள். பழைய வீடுதான் என்றாலும் சித்ரலேகா வீட்டை நவநாகரீகமாகத்தான் வைத்திருந்தார்.

தனியார் கம்பெனியில் வேலைப் பார்த்திருந்தாலும் ஓய்வு பெற்றபோது ஒரு தொகைப் பணத்தைக் கையில் கொடுத்துத்தான் அனுப்பி இருந்தார்கள். சித்ரலேகாவும் நன்கு ஆராய்ந்து நான்கு பேரிடம் விசாரித்து வருமானம் வரும் வகையில் அந்தப் பணத்தை முதலீடு செய்திருந்தார். அதனால் மகளின் கையை எப்போதுமே அவர் எதிர்பார்த்தது கிடையாது.

மகளுக்குத் திருமண வயது நெருங்குவதால் வீட்டைக் கொஞ்சம் நவீனப் படுத்தி இருந்தார். மகளின் ரூமோடு சேர்த்து அவர்களுக்குப் சொந்தமாக இருந்த அந்தச் சின்ன இடத்தில் அனைத்து வசதிகளோடும் பாத்ரூம் ஒன்றைக் கட்டி இருந்தார்.

வீட்டுச் செலவுக்கென மலர் கொடுக்கும் பணத்தை அப்படியே அவளுக்குத் தெரியாமல் வங்கியில் போட்டு வைத்திருந்தார்.
மகளுக்கென்று இதுவரைப் பெரிதாக நகைகள் ஒன்றும் சேர்த்திருக்கவில்லை. அந்தப் பணத்தை அதற்காகவே ஒதுக்கி இருந்தார் சித்ரலேகா.

ரூமிற்குள் வந்த மலர் முகத்தைக் கழுவிவிட்டு காஃபியைக் குடிக்க ஆரம்பித்திருந்தாள். கண்களை மூடி காஃபியின் சுவையை அனுபவிக்கும் போது அந்த முகம் மனதுக்குள் வந்து அவளை இம்சை பண்ணியது.

நினைத்தும் பார்க்க முடியாத உயரம். அது அவளுக்கும் தெரியும். ஆனால் ஆசைப்படும் மனதுக்கு அதுவெல்லாம் தெரிகிறதா என்ன!?

லேசாக இன்று விவேக்கிடம் விசாரித்திருந்தாள் மலர். சத்யனின் குடும்பத்தைப் பற்றி இவள் கேட்ட போது விவேக் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்திருந்தான்.

‘இல்லை விவேக்… அவங்க வீட்டுக் கல்யாணத்துக்கு நம்மக்கிட்டத்தான் ஆர்டர் வந்திருக்கு.’

‘அப்படியா!?’

‘ஆமா… அதான் கேட்டேன். ஃபாமிலி எப்படி?’

‘பெரிய ஃபாமிலி மலர். ஹோட்டல் பிஸினஸ்ல கொடி கட்டிப் பறக்குறாங்க.’

‘ஹோட்டல் பிஸினஸ்னா…’ நகரின் ஒரு பிரபலமான நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பெயரை விவேக் சொல்லவும் மலர் வாயைப் பிளந்தாள்.

‘ஆமா மலர். கொஞ்சம் பெரிய இடந்தான். சொதப்பிடாம பார்த்துப் பண்ணு. உனக்கு இது ஒரு நல்ல சான்ஸ். பெரிய பார்டிங்க நிறையப் பேர் கல்யாணத்துக்கு வருவாங்க. உனக்கு இன்னும் நிறைய ஆர்டர்ஸ் வரச் சான்ஸ் இருக்கு.’

‘ஆமால்ல விவேக்.’

‘ம்… எதுவா இருந்தாலும் நீ நின்னு பண்ணு. வேலைகளை உன்னோட கண்பார்வையில வெச்சுக்கோ.’ இதுதான் விவேக். விளையாட்டுப் புத்தி இருந்தாலும் மலரை வரிந்து கட்டிக்கொண்டு காதலித்தாலும்… அவள் நலனில் அக்கறையுள்ள நல்ல நண்பன்.

‘அப்படியே நடுநடுவுல என்னைப் பத்தியும் கொஞ்சம் யோசி.’ சொன்னவனை முறைத்து விட்டுத்தான் இன்று வீடு வந்திருந்தாள்.

ஏணி வைத்தாலும் எட்ட முடியாத உயரம் தான். இருந்தாலும் நினைத்து நினைத்து மகிழும் மனதை அடக்க வழி தெரியாமல் வாளாவிருந்தாள்.

அவன் நெற்றியில் அந்தக் காயத்தைப் பார்த்த போது அவள் மனங்கிடந்து அடித்துக் கொண்டது அவளுக்குத் தானே தெரியும்!
அந்தஸ்திலும் சரி, பணத்திலும் சரி அவர்களை நெருங்கக்கூட மலரால் முடியாது. ஆனால்… அவன் புகைப்படத்தைப் பார்த்த நொடியிலிருந்து மலரால் அந்த முகத்தை மறக்க முடியவில்லை.
இயலாமையால் கண்களில் கண்ணீர் வடிய கட்டிலில் சாய்ந்து கொண்டாள் பெண்.

-0-00-0-0-0-0-
சத்யனின் வீடு அன்று அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.
குடும்பத்தில் அத்தனை பேரும் அன்று கூடி இருந்தார்கள்.
சத்யனின் அம்மா வத்சலாவிற்கு மூன்று உடன்பிறப்புகள். மூத்தவர் அகத்தியன், பெரியண்ணன். அடுத்து கண்மணி, அதற்கும் அடுத்தது ஞானபிரகாஷ், சின்னண்ணன். கடைக்குட்டி தான் வத்சலா.

“பெரியண்ணா! சின்னண்ணா எத்தனை மணிக்கு வருவாங்க?” கேட்டபடியே எல்லோருக்கும் பாயாசத்தை நீட்டினார் வத்சலா.

“வந்திருவாம்மா. மிச்ச வேலையை நாளைக்குப் பார்க்கலாம் வா வீட்டுக்குப் போகலாம்னு நானும் கூப்பிட்டேன். எங்க, கேட்டாத்தானே.” பெரியவர் அங்கலாய்க்க பெண்கள் இருவரும் முகத்தை முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள்.
தங்கைகளின் முகத்தை பெரியண்ணன் கவனிக்கவில்லை. தன் பாட்டில் டீவியைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.

வத்சலா அக்காவிற்குக் கண்ஜாடைக் காட்ட எழுந்து உள்ளே வந்தார் கண்மணி.

“என்ன வத்சலா?”
“பார்த்தியாக்கா இந்தச் சின்னண்ணன் பண்ணுற கூத்தை?”

“ம்… நான் தான் தப்புப் பண்ணிட்டேன்டீ. அப்போவே அவனை இழுத்து நாலு அறை விட்டுக் கல்யாணத்தைப் பண்ணிவச்சிருக்கணும்.”

“எப்படிக்கா? முடியாதுன்னு சொல்றவங்களை எப்படி ஃபோர்ஸ் பண்ண முடியும்?”

“அப்படித்தான் நானும் நினைச்சேன். ஆனா அது எங்க வந்து நிக்குது பார்த்தியா?” கண்களைத் துடைத்துக் கொண்டார் கண்மணி.

“சரி விடுக்கா. நீ என்ன வேணும்னா பண்ணின?”

“அப்படியில்லை வத்சலா. அம்மா அப்பா இருந்திருந்தா ஞானத்தை இப்படி விட்டிருப்பாங்களா? என்னை விடப் பெரியவனா இருந்திருந்தாப் பரவாயில்லை. சின்னவன் தானே. நான் சொல்லிப் புரிய வச்சிருக்கணும்.”

“விதி… வேற என்னத்தைச் சொல்ல?”
“இல்லைடி வத்சலா. நான் தப்புப் பண்ணிட்டேன். அண்ணாக்கு எப்பவுமே அவர் குடும்பம் தான் முக்கியம். அவர் அப்படியே பழகிட்டாரு. ஆனா நானும் அப்படியே இருந்துட்டேன் பார்த்தியா? எனக்கு மனசாட்சி கொல்லுதுடி.” மீண்டும் கண்ணீர் விட்டார் கண்மணி.

“அந்த ஃபோட்டோவைப் பார்த்தப்போ நான் திகைச்சுப் போயிட்டேன்கா.”

“ஆமா… அது ஞானத்தோட ஆசை. நிறைவேறல. அப்பா சம்மதிக்கலை. ஆனா நான் அப்படியே விட்டிருக்கக் கூடாதுடி. இன்னைக்கு எம்புள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ண ரெடி ஆகிட்டேன். இதுவே ஞானமும் எம் பையனா இருந்திருந்தா இப்படி விட்டிருப்பேனா சொல்லு? நான் சுயநலவாதி வத்சலா.” வெடித்து அழுகின்ற தன் அக்காவைச் சொல்லமுடியாத சோகத்தோடு பார்த்திருந்தார் வத்சலா.

பெரியண்ணா அகத்தியன் கொஞ்சம் வித்தியாசமான மனிதர். சட்டென்று எல்லோரோடும் பேச மாட்டார், பழக மாட்டார். தொழில் முடிந்தால் வீடு, வீட்டை விட்டால் தொழில். இதைத் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. தெரிந்தாலும் அவர் மனைவி அத்தனைச் சுலபத்தில்விட்டு விடமாட்டார்.

நல்ல இடத்தில் ஒரே மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து இப்போது அவள் டுபாயில் வசிக்கிறாள். தன் தம்பி தங்கைகளை அத்தனைத் தூரம் கரிசனத்தோடு கவனிக்கும் மனிதரல்ல.

ஆனால் ஞானபிரகாஷ் அப்படியல்ல. கலகலப்பான மனிதர். அக்காவிற்கும் தங்கைக்கும் நடுவில் பிறந்ததாலோ என்னவோ பாசத்தைக் காட்டத் தெரிந்த மனிதர். ஆனால் குடும்பம், பிள்ளை, குட்டி என்று வாழத் தவறிவிட்டார்.

சிறுவயதாக இருக்கும் போது காலேஜ் காலங்களில் அவருக்கொரு காதல் இருந்தது. காதல் என்றால் காதல் அப்படியொரு காதல். அமரக் காதல் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் வீட்டில் தெரியவந்த போது அப்பா விளாசி விட்டார். பெண் வீட்டிற்குப் போய் இவர் மல்லுக்கு நிற்க அவசர அவசரமாக அந்தப் பெண்ணுக்கு அவர்கள் திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.

அத்தோடு மனிதர் நொறுங்கிப் போய்விட்டார். பெற்றவர்கள் இப்படியொரு திருப்பத்தை எதிர்பார்த்திருக்கவில்லை.
எவ்வளவோ வற்புறுத்தியும் ஞானபிரகாஷ் அதன்பிறகு கல்யாணத்திற்குச் சம்மதிக்கவில்லை.

சரி… இவனோடு மல்லுக்கு நிற்பதால் வத்சலாவிற்கு வயது போகிறது என்று நினைத்த பெற்றவர்கள் அதில் கவனமாகி விட்டார்கள்.
அப்படியே மறைந்தும் போனார்கள்.
நடந்தது எதுவும் வத்சலாவிற்குத் தெரியாது. இவையெல்லாம் நடக்கும் போது கொஞ்சம் சின்னப் பெண்ணாக இருந்ததால் இது எதுவுமே அவர் மனதில் பதியவில்லை. வாழ்க்கை இப்படியே ஓடிவிட்டது.

ஆனால் அண்மையில் வத்சலாவின் வீடு வந்து இரண்டு நாட்கள் தங்கிய சின்னண்ணன் தவற விட்ட புகைப்படம் அவரைக் கொஞ்சம் புரட்டிப் போட்டது. திகைத்துப் போனார். யாரோ ஒரு பெண்ணோடு தோளோடு தோள் உரச நின்றிருந்தது சாட்ஷாத் அவளின் சின்னண்ணனே தான்.

புகைப்படம் பழையதாக இருந்தது. ஞானபிரகாஷின் காலேஜ் நாட்கள் அது என்று வத்சலாவிற்குப் புரிந்தது. அலறி அடித்துக்கொண்டு அக்கா கண்மணிக்கு ஃபோன் பண்ணினார் வத்சலா. விஷயத்தைக் கேட்ட போது கண்மணியுமே திகைத்துப் போனார்.
காதல் இருந்தது கண்மணிக்குத் தெரியும். ஆனால் இன்று வரை அந்தக் காதலைத் தன் தம்பி சுமந்து கொண்டு தான் வாழ்கிறான் என்பது அவருக்குத் தெரியாது.

குடும்பம் குடும்பம் என்று தங்கள் வாழ்க்கையிலேயே மூழ்கிப் போயிருந்த கண்மணியின் மனதை யாரோ வாளால் அறுத்தது போல இருந்தது. ஆனால் வத்சலா ஓய்ந்து போகவில்லை. எல்லோருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்யும் தன் சின்னண்ணனுக்கு இனியாவது தான் நியாயம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார்.

யாருக்கும் தெரியாமல் அண்ணனின் ஃபோட்டவைப் பத்திரப் படுத்திக் கொண்டவர் தேடுதல் வேட்டையில் இறங்கி விட்டார். இதற்கு அவர் கணவரும் துணை. ஏனென்றால் ஞானபிரகாஷை எல்லோருக்கும் அவ்வளவு பிடிக்கும்.

“அந்தப் பொண்ணு வந்துதா வத்சலா?” தன்னைச் சமாளித்துக் கொண்டு கேட்டார் கண்மணி.

“ஆமாக்கா… நேத்து வந்திருந்தா.”

“ம்… பேசினியா?”

“டீடெய்லா பேச முடியலைக்கா. சத்யா அப்போ ஊர்ல இருந்து வந்திருக்கலை. அதால நான் தான் பேசினேன். சத்யா இன்னைக்குக் கடைக்குப் போய் அந்தப் பொண்ணை மீட் பண்ணி இருப்பான்.”

“பொண்ணு எப்படி இருக்கா வத்சலா?” கேட்ட அக்காவைப் பார்த்துச் சிரித்தார் வத்சலா.

“என்னடி சிரிக்கறே?”

“இந்தக் கேள்வி உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலையா?”

“ஹூம்… என்னடிம்மா பண்ணச் சொல்றே? நம்ம ஞானத்துக்குப் பொறந்திருக்க வேண்டிய பொண்ணு.” சொல்லியபடி தன் கையில் இருந்த புகைப்படத்தை வருடிக் கொடுத்தார் கண்மணி. ஞானபிரகாஷோடு அழகாகச் சிரித்தபடி நின்றிருந்தார் சித்ரலேகா.

ஃபோட்டோவைப் பார்த்ததோடு நிறுத்தி விடவில்லை வத்சலா. தன் கணவரின் துணையோடு காரியத்தில் இறங்கி விட்டார். நன்கு தெரிந்த ஒரு நிறுவனத்தின் உதவியோடு சித்ரலேகாவின் ஜாதகமே அவர் கைக்கு வந்திருந்தது.

வத்சலா யாருடைய இழப்புகளையும் நினைத்து சந்தோஷப் படவில்லை. ஆனால் மனிதனுக்குக் கடவுள் கொடுக்கும் சோதனைகளுக்குப் பின்னே நம் புத்திக்கு எட்டாத நன்மைகள் இருக்கின்றன என்பதில் நம்பிக்கை பிறந்தது.

அக்காவின் பெண் கீர்த்தனாவிற்கு வரன்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடவுளின் அனுக்கிரகம், அதிலொன்று அமைந்து விட… இதோ கல்யாண ஏற்பாடுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அக்காவின் கையிலிருந்த புகைப்படத்தை வாங்கிக் கொண்ட வத்சலா அதைக் கப்போர்டில் வைத்துப் பூட்டினார்.

திருடனுக்குத் தேள் கொட்டியது போல அந்த ஃபோட்டோவைப் பற்றி சின்னண்ணன் கேட்காதது வத்சலாவிற்கு வசதியாகிப் போனது. ஒரு பெருமூச்சோடு பெண்கள் இருவரும் எழுந்து வெளியே போனார்கள்.