Roja08

இருமனம் கொண்ட திருமண வாழ்வில்… . இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்…

பாடல் தொடர்ந்து ஒலிக்க சித்ரலேகா ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றிருந்தார். பாடல் வரிகள் சூழ்நிலைக்கு அத்தனைக் கச்சிதமாகப் பொருந்திப் போனது. அருகில் வந்த ஞானபிரகாஷ் வேகமாகப் பாடலை நிறுத்தினார்.

“இந்தப் பாட்டு இனி அவசியமில்லை.” அதிர்ந்து பார்த்த பெண்ணை அலட்சியம் செய்தவர்,

“வீட்டைச் சுத்திப் பார்க்கலாமா லேகா?” என்றார். கூட நடப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை சித்ரலேகாவிற்கு.

பெரிய பெரிய மரத்தூண்களோடு வீடு நல்ல விசாலமாக இருந்தது. பெரிய மண்டபம் போல இருந்த லிவிங் ஏரியாவை அடுத்து சின்னதாக ஒரு இடம். அதில் பெரிதாக ஒரு டைனிங் டேபிள். இருபது பேர் ஒன்றாக இருந்து ஒரே நேரத்தில் உணவருந்தலாம் போல இருந்தது. அதோடு சேர்ந்தாற் போல ஒரு புறம் சமையற்கட்டு. ஊருக்கே விருந்து சமைக்க அங்கு இடமிருந்தது. சித்ரலேகாவின் முழு வீடுமே அந்த சமையற்கட்டின் அளவுதான் வரும்.

அடுத்த பக்கமாக ஒரு ரூம் இருந்தது. பூட்டியிருந்த அந்த ரூமைக் கேள்வியாகப் பார்த்தார் சித்ரலேகா.

“அம்மா அப்பா ரூம். அண்ணா வந்தா அந்த ரூமைத்தான் யூஸ் பண்ணுவாங்க. நாங்க யாரும் அதை எட்டிக்கூடப் பார்த்ததில்லை.”

அந்தப் பகுதியைத் தாண்டி வீட்டின் கொல்லைப்புறம் இருந்தது. பெரிய தோட்டம் போல இருந்தது இடம். இரண்டு மூன்று தலைகள் தெரிய, பின்னால் ஏதோ விளைச்சல் நடக்கிறது என்று புரிந்து கொண்டார் பெண்.

லிவிங் ஏரியாவிற்கும் கிச்சனுக்கும் இடையில் மரவேலைப்பாடு அமைந்த மாடிப்படிகள் இருந்தன. படிகள் கூட மரத்தில் தான் பழைய கால பாணியில் அமைக்கப்பட்டிருந்தது. சித்ரலேகா ஏறுவதற்குத் தயங்க… கையைக் காட்டினார் ஞானபிரகாஷ். மறுக்க முடியாமல் மேலேறிப் போனார்.

மேலே மாடி முடியும் இடத்தில் கொஞ்சம் மர நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து வராண்டா போல நீண்டிருக்க அங்கே இரண்டு மூன்று அறைகள் தென்பட்டன.

“வா லேகா.” ஒரு அறையின் கதவைத் திறந்தார் ஞானபிரகாஷ். அது அவர் ரூம் போலும். நல்ல பெரிதாக இருந்தது. சில ஷெல்ஃபுகள் அணிவகுத்திருக்கப் புத்தகங்கள் நேர்த்தியாக அணிவகுத்திருந்தன. கல்லூரிக் காலத்திலேயே மனிதர் புத்தகப் பூச்சி.

“இன்னும் படிக்கிறதை விடலையா பிரகாஷ் நீங்க?” சிரித்துக் கொண்டே கேட்டவர் புத்தகங்களை லேசாகத் தடவிக் கொடுத்தார்.

“எல்லாக் காதலியையும் விட்டுக் கொடுக்கச் சொன்னா எப்படி லேகா?” அந்தப் பதிலில் புத்தகங்களை வருடிய சித்ரலேகாவின் கை ஒரு நொடி தயங்கியது. ஆனாலும் பெண் கண்டு கொள்ளவில்லை.

பெரிய கட்டில், சோஃபா, அட்டாச்ட் பாத்ரூம் என சகல வசதிகளோடும் இருந்தது அந்த ரூம்.

“கீழே போகலாமா பிரகாஷ்?”

“ஏன் லேகா? கொஞ்ச நேரம் இங்க இருக்கலாமே. எத்தனை நாள் உன்னைக் கூட்டிக்கிட்டு வந்து இந்த ரூமைக் காட்டணும்னு நினைச்சிருக்கேன் தெரியுமா?” மறுத்துப் பேச வழியில்லாமல் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தார் சித்ரலேகா. ஞானபிரகாஷும் கட்டிலில் அமர்ந்து கொண்டார்.

“அது என்ன பிரகாஷ் நியாயமே இல்லாம சொத்தைப் பிரிச்சிருக்காங்க?” அதுவரை மனதில் உறுத்திய கேள்வியைக் கேட்டே விட்டார் சித்ரலேகா.

“இப்படித் தட்டிக் கேக்க எனக்கொரு பொண்டாட்டி இல்லையே?”

“பேச்சை மாத்தாதீங்க. அதென்ன? எல்லாருக்கும் நல்ல வருமானம் வர்ற சொத்துக்களாப் பார்த்துக் குடுத்துட்டு உங்களுக்கு மட்டும் பழைய வீடா? இதை யாரும் ஏன்னு தட்டிக் கேக்கலையா?”

“அப்பா சொன்னா சொன்னதுதான் லேகா. நாங்க யாரும் மறுத்து எதுவும் பேசமாட்டோம்.”

‘அவ்வளவு பயம் இருக்கிறவர் எதுக்குக் காதலிக்கணும்?’ மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டார் பெண்.

“உனக்கெல்லாம் அப்போ எதுக்குடா காதல்னு நினைக்கிறியா? தப்புத்தாம்மா. நான் பண்ணினது பெரிய தப்புத்தான். ஆனா அந்த வயசுல அதைப் புரிஞ்சுக்கிற பக்குவம் இருக்கலை. அழகான இந்தப் பொண்ணைப் பார்த்தப்போ தலை கிறகிறுத்துப் போச்சு.”

“நீங்க அம்மா அப்பா சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணி இருந்திருக்கணும் பிரகாஷ். வத்சலா கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமாக் கூடப் பண்ணி இருந்திருக்கலாமே?”

“மறுக்கணும்னு நினைக்கலைம்மா. ஆனாப் புடிக்கலை. என்னப் பண்ணச் சொல்றே? ஏற்கனவே ஒரு பொண்ணு வாழ்க்கையைப் பாழடிச்சாச்சு. இதுல இன்னொரு பொண்ணு வாழ்க்கையோடவும் விளையாடக் கூடாதில்லை.”

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. காலப்போக்குல எல்லாம் சரியா வந்திருக்கும். உங்களை யாரும் இங்க சரியா கைட் பண்ணலை. காலத்தை வீணடிச்சிட்டீங்க.”

“எனக்கென்ன லேகா. நான் நல்லாத்தான் இருக்கேன். இத்தனை வருஷம் சம்பாதிச்சதையெல்லாம் வயல் பூமியா வாங்கிப் போட்டிருக்கேன். வத்சலா புருஷன் ஊருல முப்போகமும் விளையுற பூமி. வாங்கிப் போடுங்க மச்சான்னு அவர்தான் சொன்னார். கடைசி காலத்துல உக்கார்ந்து சாப்பிட அந்த வருமானம் இருக்கு. வீடு இருக்கு, கார் இருக்கு. இதுக்கு மேல என்னம்மா?”

“இதெல்லாம் இருந்தாப் போதுமா பிரகாஷ்?” கோபமாக சித்ரலேகா கேட்கக் கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டார் ஞானபிரகாஷ். கைகளைத் தலைக்கு அணையாகக் கொடுத்தவர் கூரையைப் பார்த்தபடி படுத்திருந்தார்.

“போதும் லேகா. இதுக்கு மேல கிடைக்க என்ன இருக்கு? ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கலை. கிடைச்ச வாழ்க்கையை ஆசைப்பட்டு வாழவேண்டியதுதான்.”

“இதெல்லாம் ஒரு வாழ்க்கையா ஆசைப்பட்டு வாழ?”

“ஏன் லேகா? ஒரு பொண்ணு இருந்தாத்தான் வாழ்க்கை முழுமையடையுமா?”

“ஆமா… அதுலென்ன சந்தேகம் உங்களுக்கு? நீங்கக் கல்யாணம் பண்ணி இருந்திருக்கணும், கொழந்தை பெத்திருக்கணும். அதுக்கப்புறமா கிடைச்ச வாழ்க்கையை ஆசைப்பட்டு வாழ்ந்திருக்கணும். அதை விட்டுட்டு ஒத்தையா நின்னு டயலாக் பேசப்படாது. உங்க வீட்டுல உங்களை யாருமே கண்டுக்கலை. சுயநலவாதிகள்.”

கோபமாகப் பெண் சொல்லச் சத்தமாகச் சிரித்தார் ஞானபிரகாஷ். சுயநலமில்லாமல் நீ என்னைக் கவனிக்கக் கூடாதா என்று சொல்ல மனம் கிடந்து தவித்தது. ஆனாலும் வாயை இறுக மூடிக்கொண்டார்.

இந்தப் பெண் மனசாட்சிக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் கட்டுப்பட்டு வாழப் பழகியிருக்கிறது. இப்போது போய், கிடைத்த வாழ்க்கையை ஆசைப்பட்டு வாழும் ரகம் நானில்லை. என் காத்திருப்பு கைக்கூடி இருக்கிறது. உன்னோடு ஆசைப்பட்ட வாழ்க்கையை மட்டும்தான் நான் வாழ்வேன் என்று சொன்னால்… இருக்கும் இந்த சுமுகமான உறவும் துண்டித்துப் போகும். அதனால் மௌனமாக இருந்தார். ஆனால் நெடு நாளைக்கு மௌனமாக இருக்கும் உத்தேசம் அவருக்கு இருக்கவில்லை.

-0-0-0-0-0-0-

வீட்டுக்கு முன்னால் இருந்த மல்லிகைப் பந்தலில் மொட்டுக்களைப் பறித்துக் கொண்டிருந்தார் சித்ரலேகா. மலர் வரும் நேரம், ஆனால் இன்னும் வந்திருக்கவில்லை. ஒரு கண் வாசலையே பார்த்திருக்கக் கைகள் பூப்பறித்துக் கொண்டிருந்தன.

அந்த ப்ளாக் ஆடி மெதுவாக அந்தக் காலனிக்குள் நுழைய திரும்பிப் பார்த்தார் பெண். கார் கொஞ்சம் பரிட்சயமானது போல இருந்தது. தங்கள் வீட்டுக்கு முன்னால் கார் நிற்க அதிலிருந்து இறங்கினான் சத்யன். அப்போதுதான் அது பிரகாஷின் மருமகன் என்று இவருக்கு ஞாபகம் வந்தது.

“வாங்க தம்பி.” புன்னகையோடு வரவேற்றாலும் இந்த வருகைக்குக் காரணம் என்ன என்று மனது கேள்வி கேட்டது.

“மலர் வீட்டுக்கு வந்துட்டாளா ஆன்ட்டி?”

“வர்ற நேரம்தான், நீங்க வாங்க தம்பி.” மலரைப் பையன் ஒருமையில் விளித்ததை அன்னையின் மனம் அவசரமாகக் குறித்துக் கொண்டது.

“உக்காருங்க சத்யா. அம்மா அப்பா எல்லாம் சௌக்கியமா?”

“நல்லா இருக்காங்க ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க?”

“எனக்கென்னப்பா? நான் நல்லாத்தான் இருக்கேன். பொண்ணு மாப்பிள்ளை எல்லாம் நல்லா இருக்காங்களா?”

“ஆங்… அவங்களுக்கென்ன ஆன்ட்டி. சூப்பரா இருக்காங்க.”

“மலர் வரச்சொல்லி இருந்தாளா தம்பி?” சித்ரலேகாவின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்.

“இல்லை ஆன்ட்டி… நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே…

“சித்ரா…” என்றபடி உள்ளே நுழைந்தார் குமுதா.

“ஓ… இவங்கதான் குமுதா அத்தையா? ஹாய் ஆன்ட்டி.” பையன் இலகுவாக வணக்கம் வைக்கப் பெண்கள் இருவரும் திகைத்துப் போனார்கள். இதென்ன கூத்து!? இந்தப் பையனுக்கு எப்படி குமுதாவைத் தெரிந்தது?

“ஆச்சரியமா இருக்கா? மலர் உங்களைப்பத்தி அடிக்கடி பேசுவா?” தெளிவாகக் காய் நகர்த்தினான் சத்யா. குமுதா சித்ரலேகாவை ‘என்ன இதெல்லாம்?’ என்பது போலப் பார்க்க, அவரும் விழித்துக்கொண்டு நின்றார். சத்யன் எல்லாவற்றையும் மௌனமாகக் கவனித்துக் கொண்டான்.

“நீங்களும் உக்காருங்க ஆன்ட்டி. நல்ல நேரத்துலதான் வந்திருக்கீங்க. எங்க வீட்டு எல்லா நல்லது கெட்டதுலயும் குமுதா அத்தைக்கு இடம் உண்டுன்னு மலர் அடிக்கடி சொல்லுவா.”

“மலருக்கும் உங்களுக்கும் நல்லப் பழக்கம் போல இருக்கு?” புன்னகையுடன் கேட்டபடி அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தார் குமுதா.

“இது யாரு சித்ரா?”

“ஞானபிரகாஷோட தங்கைப் பயன்.”

“அடடே! அப்படியா? நல்லது நல்லது.”

“நல்ல பழக்கத்தான். ஆனா… சமீப காலமாத்தான் ஆன்ட்டி.”

“தெரியும் தம்பி. உங்க வீட்டுக் கல்யாணத்துக்கு மலர்தானே எல்லா அலங்காரமும் பண்ணிச்சு.”

“ஆமா ஆன்ட்டி. அப்போ இருந்தே மலரை எனக்கு நல்லாத் தெரியும்.”

“ஓ… சத்யா நீங்க என்னமோ சொல்ல வர்றீங்கன்னு எனக்குத் தோணுது.” இது சித்ரலேகா. ஏனோ அவர் வயிற்றுக்குள் பயப்பந்து ஒன்று உருண்டது.

“ஆமா ஆன்ட்டி. சொல்லணும்… ஆனா அதை நீங்கத் தப்பா எடுத்துக்காம சரியான கோணத்துலப் புரிஞ்சுக்கணும்.”

“முதல்ல விஷயத்தைச் சொல்லுங்கத் தம்பி. இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு. ஞானபிரகாஷ் அண்ணா வீட்டுப் பையன் தப்பா எதுவும் சொல்லிடப் போறதில்லை.” அந்தப் பொறுப்பு உனக்கு இருக்க வேண்டும் என்பது போல குமுதா சொல்ல,

“அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம் ஆன்ட்டி.” என்று அவர் வாக்கியத்தை அவர் புறமே திருப்பினான் சத்யன். குமுதாவே கொஞ்சம் திணறிப் போனார்.

“ஆன்ட்டி… நானும் மலரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணுறோம். கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்படுறோம்.” சத்யா சொல்ல இரு பெண்களுமே மீண்டுமொரு முறை திகைத்துப் போனார்கள்.

“சத்யா!” இது சித்ரலேகா. ஆனால் குமுதா சட்டென்று உணர்ச்சி வசப்படவில்லை. நிதானமாக சத்யாவை ஏறெடுத்துப் பார்த்தார். இவரைச் சமாளிப்பது அத்தனை சுலபமில்லை. சத்யன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

“மலருக்கும் இதுல பூரண சம்மதம் தானா தம்பி?”

“ஆமா ஆன்ட்டி, ஏன் கேக்குறீங்க?”

“தம்பி நீங்க இன்னும் சின்னப் பையன் கிடையாது. ஏற்கனவே உங்க குடும்பத்துல உருவான காதலால நிறையப் பிரச்சனைகள் வந்திருக்கு.” குமுதா நிதானமாகப் பேச சித்ரலேகாவின் தலைத் தானாகக் குனிந்தது.

“தெரியும் ஆன்ட்டி.”

“தெரிஞ்சுமா இதெல்லாம்?”

“ஏன் ஆன்ட்டி? மலருக்கு நான் பொருத்தமில்லைன்னு நீங்க நினைக்கிறீங்களா?”

“மலர் உங்களுக்குப் பொருத்தமான்னு யோசிக்கிறேன் சத்யா.”

“சின்ன மாமா வளர்ந்த சூழ்நிலை வேற ஆன்ட்டி. ஆனா எங்க வீடு அப்படியில்லை. என்னோட அம்மா அப்பா என் ஆசைகளுக்கு மதிப்புக் குடுப்பாங்க. அதுல உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேணாம்.”

“இங்க யாரும் யாரையும் சந்தேகப்படலைத் தம்பி. இழப்புகள் ரெண்டு பக்கத்துலயும் ஜாஸ்தியா இருக்கு. இதையெல்லாம் இன்னொரு தரம் தாங்குற தெம்பு மனசுக்கு இல்லை.”

“நிச்சயமா சொல்றேன் ஆன்ட்டி. சத்யன் சம்பந்தப்பட்ட எதுவும் தவறாது. நீங்க என்னை நம்பலாம்.” சொல்லிவிட்டு சத்யன் சித்ரலேகாவைப் பார்க்க, குமுதாவின் பார்வையும் தோழியை நோக்கித் திரும்பியது. ஆனால் சித்ரலேகா அமைதியாகவே இருந்தார். சரித்திரம் மீண்டும் திரும்புகிறது என்று நினைத்திருப்பாரோ!

இத்தனைப் பேச்சும் வீட்டினுள்ளே நடக்கும் போது மலர் அப்போதுதான் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள். சத்யனை அவள் அப்போது அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் கார் வாசலில் நிற்கிறதே.

உள்ளே வந்தவளை வரவேற்றது அங்கே நிலவிய அசாத்திய அமைதி. அம்மாவின் வெறித்த பார்வை சத்யன் எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டான் என்று சொல்லியது. குமுதா அத்தையின் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சத்யன் மலர்ந்த முகமாகவே இருந்தான்.

“வா மலர். என்ன இவ்வளவு லேட் பண்ணிட்டே?” இலகுவாக அவன் கேட்க அம்மாவின் முகத்தைச் சட்டென்று திரும்பிப் பார்த்தாள் மலர்.

‘என்னக் கூத்து இதெல்லாம்?’ என்று கேளாமல் கேட்டது சித்ரலேகாவின் முகம்.

“ஆன்ட்டிக்கிட்ட எல்லாம் பேசி இருக்கேன் மலர். எதுக்கு சும்மா காலத்தை வேஸ்ட் பண்ணணும். ஆன்ட்டிக்கிட்ட முதல்ல பேசிட்டா வீட்டுல அம்மா அப்பாக்கிட்ட பேசுறது சுலபமாப் போயிடும். மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கலாம் இல்லையா?” எந்தப் பிசிறும் இல்லாமல் அவன் சொல்லி முடித்தான். பெண்கள் மூவரும் எதுவும் பேசும் நிலையில் இருக்கவில்லை.

“அப்போ நான் கிளம்புறேன் ஆன்ட்டி.” குமுதா சத்யனோடு எழுந்து வாசல் வரை வர சித்ரலேகா அப்போதும் அமைதியாகவே இருந்தார்.

“நீங்க எங்களுக்கு ஒரு நல்ல பதிலாச் சொல்லுவீங்கங்கிற நம்பிக்கையில நான் கிளம்புறேன் ஆன்ட்டி.” என்றவன் மலரைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தான். தன்னையறியாமல் அவளும் மலர்ந்த முகமாய் புன்னகைக்க ஒரு தலையசைப்போடு அவளிடம் விடைபெற்றவன் காரை நோக்கிப் போய்விட்டான். குமுதாவின் கண்கள் இளையவர்கள் இருவரையுமே வட்டமிட்டது.

தான் நிறையவே நடிக்க வேண்டியிருக்கும் என்று எண்ணி வந்திருந்த சத்யன் இயல்பாகவே அனைத்தையும் நடத்தி முடித்திருந்தான். ஆனாலும் என்ன? அதை அவன் உணர்ந்து கொள்ளவில்லை.

-0-0-0-0-0-0-

லோகேந்திரனும் ஞானபிரகாஷும் அமர்ந்து வயல் வரவு செலவுக் கணக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். பக்கத்தில் வத்சலா உட்கார்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தார்.

“என்ன மச்சான்? இந்த வருஷம் விளைச்சல் கொஞ்சம் அதிகமா இருக்குமோ?”

“ஆமா மச்சான். மழை நல்லாவே பேய்ஞ்சுதில்லை. அதான். மாசத்துக்கு ஒரு தடவையாவது இதையெல்லாம் போய்ப் பாருங்க மச்சான். உடையவன் பார்க்கலைனா ஒரு முழம் கட்டைதான்.”

“அதான் நீங்க இருக்கீங்கல்லை மச்சான்.‌ அதுக்கப்புறம் என்ன?”

“அது சரிதான். இருந்தாலும் நீங்களும் ஒரு கண்ணை வெச்சுக்கிறது நவ்லதில்லையா?”

“எங்க மச்சான் இதுக்கெல்லாம் நேரம் இருக்கு? இதுல புதுசா மலேஷியா ப்ரோஜெக்ட் வேற.”

“ஆமா இல்லை… எப்படிப் போகுது அந்த வேலை?”

“பிரச்சனையில்லை மச்சான். இருந்தாலும் கொஞ்சம் அதிகமா கவனம் செலுத்த வேண்டி இருக்கு. வேற ஊர் இல்லையா?”

“அதுவும் சரிதான்.” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சத்யன் உள்ளே நுழைந்தான். மூவிரண்டு கண்களும் அவனைத் திரும்பிப் பார்த்தன.

“வா சத்யா.” இது வத்சலா. அம்மாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவன் அவர் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி மேசை மேல் வைத்தான்.

“என்ன சத்யா? ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு?”

“அம்மா… நான் இப்போ நேரா மலர் வீட்டுல இருந்து தான் வாறேன்.”

“மலர் வீட்டுக்கா? எதுக்கு நீ அங்கப் போனே?”

“மலரோட அம்மாவைப் பார்க்கப் போனேன்.” சத்யாவின் பதில்கள் தெளிவாக வந்து விழுந்தன.

“எதுக்கு?” இது ஞானபிரகாஷ். அவர் குரலில் இப்போது கலக்கம். அம்மான் முகத்தை ஒரு முறை அண்ணார்ந்து பார்த்தான் சத்யன்.

“நானும் உங்கப் பொண்ணும் லவ் பண்ணுறோம்.‌ எனக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் குடுங்கன்னு கேட்டேன்.” நிதானமாக சத்யா இதைச் சொன்னபோது ஞானபிரகாஷ் எழுந்து நின்றுவிட்டார். லோகேந்திரனின் கை அவரின் கையைப் பிடித்து இழுத்து மீண்டும் உட்கார வைத்தது.

“என்ன மச்சான் இதெல்லாம்? சத்யா என்ன சொல்றான்?”

“ஏன் மாமா? என்னோட மனசுக்குப் பிடிச்சப் பொண்ணை நான் கட்டிக்கக் கூடாதா? அதை அந்தப் பொண்ணோட அம்மாக்கிட்ட சொல்லிட்டேன்.‌ இப்போ அதை என்னோட அப்பா அம்மாக்கிட்ட சொல்றேன்.‌ இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு?” தோளைக் குலுக்கியபடி சாதாரணமாகச் சொல்லி விட்டு சத்யா உள்ளே போய்விட ஞானபிரகாஷ் ஆடிப் போய்விட்டார்.

“மச்சான்!” இப்போதும் வார்த்தைகள் சண்டித்தனம் பண்ணியது ஞானபிரகாஷிற்கு.

“நானும் வத்சலாவும் இதை எதிர்பார்த்தோம்.” லோகேந்திரன் சொல்லத் தங்கையின் முகத்தைப் பார்த்தார் அண்ணன். அவளும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே இருந்தாள்.

“என்ன நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு அமைதியா இருக்கீங்க? எனக்கே படபடங்குது!”

“எதுக்கு மச்சான் டென்ஷன் ஆகுறீங்க? அவனோட மனசை எங்கங்கிட்டச் சொல்லாம வேற யாருக்கிட்டச் சொல்லுவான்?”

“அதுக்காக! இவ்வளவு பெரிய முடிவை சிம்பிளா சொல்லிட்டுப் போறான்.”

“நமக்குத்தான் இதெல்லாம் பெரிய விஷயம் மச்சான். இந்தக் காலத்துப் பசங்களுக்கும் இதெல்லாம் சிம்பிள்தான்.” ஞானபிரகாஷ் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தார். கணவனும் மனைவியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.

“வத்சலா… காஃபி கொண்டு வாம்மா.” மனைவியிடம் கண்ணைக் காட்டியவர், அவர் நகர்ந்ததும் ஞானபிரகாஷிடம் திரும்பினார்.

“இருபத்தைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்தத் தைரியம் நமக்கில்லாமப் போச்சேன்னு வருத்தப் படுறீங்களா மச்சான்?” இப்போது ஞானப்பிரகாஷ் சரேலென்று நிமிர்ந்தார். கண்கள் லேசாகக் கலங்கி இருந்தது. லோகேந்திரன் அவர் கையை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தார்.

“விடுங்க மச்சான்… ஆனது ஆகிப் போச்சு. இனி ஆக வேண்டியதைப் பார்ப்போம்.”

“மச்சான்… சத்யா என்னென்னவோ சொல்றானே. நீங்க…”

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. அவனுக்குப் பிடிச்சிருந்தா மலர்தான் இந்த வீட்டு மருமக. அதுல எந்த மாற்றமும் இல்லை.”

“மச்சான்!”

“சொல்லப்போனா அதுல எனக்குச் சந்தோஷம் தான். ஏன்னா உங்க வாழ்க்கை சீரழிஞ்சு போகக் காரணமா நின்னது எங்கக் கல்யாணம் தான். அந்த உறுத்தல் இன்னுமே எனக்கு இருக்கு.”

“சீச்சீ… அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. உங்க அம்மா இதுக்கு…”

“அம்மாக்கு ஊர்ல ஒரு பொண்ணைப் பார்த்து சத்யாக்குப் பண்ணணும்னு ஆசை. அவனைப் பக்கத்துலேயே வெச்சுக்கணும்னு ஆசைப்படுவாங்க. லைட்டா எதிர்ப்பு வரும். ஆனா அதை உங்க மருமகன் சமாளிச்சிடுவான்.”

“ஓ…”

“முதல் நாள் இங்க வந்தப்போவே உங்கப் பொண்ணுக்கு சத்யாவை அவ்வளவு பிடிச்சுதாம், வத்சலா சொன்னா.”

“அப்படியா? அதெப்படி வத்சலாவுக்குத் தெரிஞ்சுது?”

“சத்யாவோட ஃபோட்டோவை அவ்வளவு ஆர்வமா, ஆசையாப் பார்த்துச்சாம். இதெல்லாம் நமக்குத்தான் புரியாது மச்சான். ஆனா இந்தப் பொம்பளைங்களுக்கு… யப்பா! பிரிச்சு மேய்ஞ்சிடுவாங்க.”

“இது… சாத்தியப்படுமா மச்சான்?” இப்போதும் குழப்பத்திலேயே இருந்தார் மனிதர்.

“எந்த உலகத்துல மச்சான் இருக்கீங்க? நாம வளர்ந்த காலம் வேறே, இப்போ இருக்கிற காலம் வேறே.‌ பெத்தவங்க அவங்களோட ஆசைக்கு ஒத்துக்கலைன்னா பேசாம ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல போய் கல்யாணம் பண்ணிக்குற காலம் இது.”

ஞானபிரகாஷ் சற்று நேரம் எதுவும் பேசவில்லை.‌ திடீரெனக் கேட்ட விஷயம் அதிர்ச்சியாக இருந்தாலும் அதன் பிறகு குப்பென்று ஒரு சந்தோஷம் மனசுக்குள் பரவியது என்னவோ உண்மைதான். லேகாவின் பெண் தன் தங்கை வீட்டு மருமகளா? தான் தூக்கி வளர்த்த சத்யனின் மனைவியா!? மனிதரின் கண்கள் மீண்டும் கலங்கியது.

“அமைதியா இருங்க மச்சான்.‌ நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம். எல்லாத்தையும் நல்லபடியா முடிக்கலாம். அதுசரி… உங்க வீட்டம்மா என்ன சொல்லுறாங்க?” பேச்சை இயல்பாக வேறு திசைக்கு மாற்றினார் லோகேந்திரன்.

“அதை ஏன் கேக்குறீங்க போங்க.”

“என்ன மச்சான்? இப்படி சலிச்சுக்குறீங்க.”

“வேற என்னத்தைச் சொல்ல. பேசுற வார்த்தை ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்துப் பேச வேண்டி இருக்கு.”

“ஓ… மச்சான், நான் நினைக்கிறேன்… உங்ளுக்கு சாமர்த்தியம் பத்தலைன்னு.” சொல்லிவிட்டு லோகேந்திரன் சிரிக்க, ஞானபிரகாஷும் இணைந்து கொண்டார்.

“பார்த்தீங்க இல்லை… நாம பார்க்கப் பொறந்து வளர்ந்தது. எப்படித் தைரியமாப் பேசிட்டுப் போகுது. இப்படி இருக்கணும் மச்சான்.”

“அது சரிதான். தொழில்னு வந்துட்டா நானுமே இப்படித்தான். ஆனா… லேகா விஷயத்துல என்னால அப்படியெல்லாம் நடந்துக்க முடியலை மச்சான்.”

“சுத்தம்! அப்போ அப்படியே தூரமா இருந்துக்கிட்டு பார்த்து ரசிக்க வேண்டியதுதான். என்ன மச்சான் நீங்க. விஷயத்தை அவங்க கிட்டச் சொன்னீங்களா?”

“இன்னும் இல்லை.”

“ஆமா… உங்களுக்கு இருபது, அவங்களுக்குப் பதினெட்டுப் பாருங்க. சட்டுப்புட்டுன்னு விஷயத்தைச் சொல்லி மேல ஆகவேண்டியதைப் பாருங்க.”

“அதுக்கிடையிலே உங்கப் பையன் இன்னொரு குண்டைத் தூக்கிப் போடுறானே?”

“அதுவும் சரிதான். எனக்கென்னவோ சத்யா தெளிவாக் காய் நகர்த்துற மாதிரித்தான் தெரியுது.”

“புரியலை மச்சான். என்ன சொல்றீங்க?”

“அதை விடுங்க. அதை நானும் வத்சலாவும் என்னன்னு பார்த்துக்கிறோம். நீங்க சீக்கிரமாக் குடும்பம் நடத்துற வழியைப் பாருங்க மச்சான். என்ன? குடும்பம் நடத்துற ஐடியா இருக்கா? இல்லை… அவங்களைப் பூஜை ரூம்ல உட்கார வெச்சு பூப்போடப் போறீங்களா?” இப்போது லோகேந்திரன் ஃப்ரெண்ட் மோடுக்கு மாறி இருந்தார். ஒரே வயது என்பதால் இருவருக்குள்ளும் எப்போதும் உறவையும் தாண்டிய ஸ்நேகம் இருக்கும்.

குறும்பு முகத்தில் கூத்தாட லோகேந்திரன் புறமாகச் சாய்ந்த ஞானப்பிரகாஷ் அவர் காதில் என்னவோ சொன்னார். இவர் சொன்னதுதான் தாமதம் மனிதர் இடிஇடியெனச் சிரிக்கத் தொடங்கிவிட்டார்.

காஃபியோடு வந்த வத்சலாவே கணவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார். அண்ணனிடம் காஃபியை நீட்ட அதை வாங்கிய ஞானபிரகாஷ் எழுந்து அப்பால் போய்விட்டார்.

“எதுக்கு நீங்க இப்போ இந்தச் சிரிப்புச் சிரிக்கிறீங்க?” மனைவியின் கேள்விக்குப் பதில் கூடச் சொல்லலாம் லோகேந்திரன் சிரித்தார்.

“வத்சலா… பாவம்டீ அந்த சித்ரலேகா. உங்கண்ணா கையில மாட்டிக்கிட்டு என்னப் பாடு படப்போகுதோ?”

“உஷ்… என்னப் பேச்சு இது?” குரலைத் தணித்த வத்சலா கணவரைக் கண்டித்தார்.

“ஆமா… நீ என்னை அடக்கு.” என்றவர் மனைவியை அருகில் இழுத்து அவர் காதில் என்னவோ சொன்னார்.

“இந்தக் காட்டாத்து வெள்ளத்தை அந்தப் பொண்ணு தாங்குமா?” சொல்லிவிட்டு மீண்டும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் லோகேந்திரன். வத்சலாவின் கண்கள் இப்போது கலங்கிப் போனது.

“போச்சுடா! இவ அண்ணனை நினைச்சு உருக ஆரம்பிச்சுட்டா. எல்லாம் நல்லபடியா உங்க அண்ணன் ஆசைப்படியே நடக்கும், சரியா?”

“ம்…” தலையை ஆட்டியபடி கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் வத்சலா.