ரோஜா 9
“என்ன வத்சலா? பையன் முடிவே பண்ணிட்டான் போல? இவ்வளவு வேகமா வேலைப் பார்த்திருக்கான்?” அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்த மனைவியிடம் வம்பு வளர்த்தார் லோகேந்திரன்.
“ஏன்? இது நாம எதிர்பார்த்ததுதானே? இப்போப் புதுசாக் கேக்குறீங்க?”
“நாம பெத்தது இப்படிப் பண்ணும்னு எதிர்பார்த்ததுதான். இன்னும் சொன்னா இப்படியெல்லாம் பண்ணலைன்னாத்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்.”
“அப்புறம் என்ன?”
“இல்லைம்மா… மலர் வீடு வரைக்கும் போய் பேசுவான்னு எதிர்பார்க்கலை.”
“டைமைச் சும்மா வேஸ்ட் பண்ணாதீங்கன்னு நமக்கு ஜாடை மாடையாச் சொல்றானோ என்னவோ?”
“இருக்கும் இருக்கும். ஆனா உங்கண்ணன் இதையெல்லாம் பார்த்து ஆடிப்போயிட்டாரு.”
“காலாகாலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் புள்ளைக் குட்டின்னு பெத்திருந்தா இதெல்லாம் தெரிஞ்சிருக்கும். இங்கதான் அதெல்லாம் நடக்கலையே.” வத்சலா வெகுவாக அங்கலாய்த்துக் கொண்டார்.
“உங்கக் குடும்பம் இன்னும் கொஞ்சம் மச்சானை நெருக்கி இருந்திருக்கணும் வத்சலா. அப்போ மனுஷர் ஒத்துக்கிட்டிருப்பாரு?”
“யாரு? சின்னண்ணனா? ஒரு நாள் எங்கம்மா மருந்து பாட்டிலைக் காட்டி மிரட்டினாங்க.”
“நெஜமாவா?”
“முழுசையும் கேளுங்க. அதுக்கு இந்த மேதாவி என்ன சொல்லிச்சு தெரியுமா?”
“என்ன?”
“முழுசையும் குடிச்சிராம எனக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க. உங்கப் பின்னாடியே நானும் வர்றேன். கடைக்குப் போய் இதெல்லாம் வாங்குற நிலைமையில நான் இல்லைன்னு சொல்லிச்சு.”
“அடப்பாவமே! அவ்வளவு உயிராவா இருந்தாரு அந்தப் பொண்ணு மேல?” லோகேந்திரனுக்கு இப்போதும் மிகவும் கவலையாகிப் போனது. விதி ஏனிப்படி சதி செய்தது என்று புரியவே இல்லை.
“வரன் நிறைய வந்தருக்குமே வத்சலா?”
“அதுதான் நிலைமையை இன்னும் மோசமாக்கிச்சு. தினமும் வீட்டுல சண்டை. நம்ம கல்யாணமும் முடிவாகிடுச்சு. மிச்சமா இருந்தது சின்னண்ணாதானே?”
“ம்…”
“பெரியண்ணா தானுண்டு தன்னோட வேலையுண்டுன்னு இருக்கிற ரகம். சின்னண்ணா அப்படியில்லைல்ல. எல்லாரோடையும் நல்லாப் பழகுவாங்க. அதால எல்லாருக்கும் அவங்களை ரொம்பப் பிடிக்கும். பொண்ணு வீட்டுக்காரங்க நீ நான்னு போட்டி போட்டாங்க.”
“ஓ…”
“அம்மா ஆரம்பத்துல அப்பாக்கு சப்போர்ட் பண்ணினாலும் போகப் போக அண்ணா மாறமாட்டார்னு புரிஞ்சுப் போச்சு. இதையே யோசிச்சு யோசிச்சுப் பக்கவாதம் வந்திடுச்சு. நான் போறதுக்குள்ள ஒரு கல்யாணத்தைப் பண்ணிடு ஞானம்னு கெஞ்சினாங்க.”
“என்ன சொன்னாரு?”
“அசைஞ்சு குடுக்கவே இல்லை. உங்க குடும்ப கௌரவத்தைக் காப்பாத்திக்கிட்டீங்க. அதோட நில்லுங்க. ஒரு பொண்ணு வாழ்க்கையைச் சீரழிச்சது போதும். இன்னொரு பொண்ணு வாழ்க்கையில தயவு செஞ்சு விளையாடிடாதீங்கன்னு சொல்லிட்டாரு.”
“இதெல்லாம் உனக்கு அப்போ அப்பவே தெரியுமா?”
“இவ்வளவு டீட்டெய்லாத் தெரியாது. அக்கா வாயைப் புடுங்கினேன்.”
“அவங்களுக்கு நடந்தது எல்லாம் தெரியுமோ?”
“ம்… பெரியண்ணாக்கும் தெரிஞ்சிருக்கு. அப்பாவை எதிர்த்து யாரும் எதுவும் பேசலை. எனக்கும் ஏதோ பிரச்சனை நடக்குதுன்னு தெரியும். சின்னண்ணா கல்யாணம் வேணான்னு சொல்றார்னு புரிஞ்சுது. என்னன்னு ஒருதரம் கேட்டேன். நீ சின்னப் பொண்ணு. போய் உன்னோட வேலையைப் பாருன்னு அம்மா திட்டினாங்க.”
“கல்யாணம் முடிவாகியிருக்கு. நீ சின்னப் பொண்ணாமா அவங்களுக்கு?”
“எங்க வீடு அப்படித்தான்.”
“நல்ல வீடு போ! அதுக்கப்புறமாவது இந்த மனுஷன் அந்தப் பொண்ணைத் தேடி என்ன ஏதுன்னு பார்க்கலையா?” கேட்ட கணவனை மேலும் கீழுமாக ஒரு தினுசாகப் பார்த்தார் வத்சலா.
“என்னடீ?!”
“காதலிச்சப் பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிருக்கா. அவளுக்கொரு பொண் கொழந்தைப் பொறந்து அஞ்சு வயசா இருக்கும் போது புருஷன்காரன் செத்துப் போயிடுவான்னு இவருக்கு அசிரீரி வந்துது பாருங்க… இவர் தொடுத்துக்கிட்டே போறதுக்கு! யோசிச்சுப் பேச மாட்டீங்களா?”
“எல்லாம் ஒரு ஆதங்கம்தான் வத்சலா. இவ்வளவு காலமும் வீணாப் போச்சேடீ?”
“நம்மளாலதான் வாழ முடியலை. யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா இருக்கட்டும். எங்கிருந்தாலும் வாழ்கன்னு ஒதுங்கி இருப்பாரா இருக்கும்.”
“ஆமா… பொடலங்கா! நல்லா ஒதுங்கினாரு. மருந்து குடிக்கப் போன அம்மாவை மிரட்டத் தெரிஞ்சுதில்லை. அதேமாதிரி மிரட்டிக் கல்யாணத்தையும் பண்ண வேண்டியதுதானே?”
“அப்போ மட்டும் என்னச் சொல்லுவீங்க? சுயநலவாதி, அவனை மட்டும்தான் பார்க்கிறான். பின்னால ஒரு தங்கை இருக்காளே… அவளைப் பத்தி நினைச்சுப் பார்த்தானான்னு கேட்டிருக்க மாட்டீங்க?”
“இப்போ மட்டும் என்ன வத்சலா நடக்கப் போகுது. அதே சங்கதிதான். ஒழுங்காக் காலா காலத்துல அந்தப் பொண்ணோட வாழத் துப்பில்லை. காலம் போன கடைசியில கல்யாணம் பண்ணக் கிளம்பி இருக்கான். அதுவும் கல்யாண வயசுல ஒரு பொண்ணை வச்சிக்கிட்டு. இப்படித்தானே ஊரும் உலகமும் பேசப்போகுது.”
“இந்த ஊரும் உலகமும் என்னப் பேசினா எனக்கென்ன வந்தது? இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். அண்ணியை வழிக்குக் கொண்டு வர்றது ரொம்பக் கஷ்டம். எனக்கு அது நல்லாவேத் தெரியும். ஆனா நான் அவங்க கால்ல கைல விழுந்தாவது இதுக்கு சம்மதம் வாங்குவேன். எங்கண்ணா ஆயுசுக்கும் இப்படியே ஒத்தையா இருக்கக் கூடாது. அவர் மேலக் கொஞ்சம் கருணைக் காட்டுங்கன்னு கெஞ்சுவேன். எனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.” இப்போது லோகேந்திரன் சிரித்தார்.
“என்னச் சிரிப்பு?”
“உங்கண்ணாக்கு கல்யாணம் பண்ணுறதோட மட்டும் நிக்குற ஐடியா இல்லை வத்சலா.”
“அது அவங்கப் பாடு. அதைப்பத்தி நமக்கென்ன? ஒரு ஆம்பளையால ஒரு பொண்ணோட துணை இல்லாம இளமையில வேணும்னா வாழலாம். ஆனா வயசு போன காலத்துல வாழ முடியுமாங்க?”
“கஷ்டம்தான்.”
“ஏன்? அண்ணியுமே எத்தனை நாளைக்கு மலரை நம்பி வாழமுடியும்? அந்தப் பொண்ணுக்கும் ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்கத்தானே வேணும்? அதுக்கப்புறம் அவங்களுக்குன்னு என்ன இருக்கு? தனியா உக்காந்திருக்க முடியுமா?”
“ம்…”
“வாழுறாங்க வாழல்லை… அது அவங்க பிரச்சனைங்க. ஆனா வயசு போன காலத்துல உனக்கு நானிருக்கேன். நீ எதுக்கும் கவலைப்படாதேன்னு சொல்ல அவங்க ரெண்டு பேருக்குமே இப்போ ஒரு துணை அவசியம். யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு அவஸ்தைப் படுறதை விட ஆசைப்பட்டவங்களே கட்டிக்கிட்டா சந்தோஷம்தானேங்க?”
“நீ சொல்றது எனக்குப் புரியுதும்மா. ஆனா இந்த சமுதாயம் ஏத்துக்கணுமே?”
“கஷ்டப்படும் போது கைக்கட்டி வேடிக்கைப் பார்த்த சமுதாயம், இப்போ மட்டும் வரிஞ்சு கட்டிக்கிட்டு எதுக்குங்க வரணும்? இப்பவும் அதே கையைக் கட்டிக்கிட்டு சும்மா உக்காரச் சொல்லுங்க. எனக்கு நிறைய வேலைக் கிடக்கு.” சொன்ன வத்சலா வெளியே போய்விட்டார். ஆனால் சிந்தனை முடிச்சுகள் லோகேந்திரனைக் கட்டிப் போட்டன.
வத்சலா சொல்வது போல இது அத்தனை எளிதான காரியமல்ல. சித்ரலேகாவை தன் மைத்துனர் அவர் வழிக்குக் கொண்டு வருவதுவும் அவ்வளவு சுலபமாகத் தோன்றவில்லை. இவர்கள் சொல்வதைப் பார்த்தால் இதுவரை சாதாரணமாக ஒரு திருமண விழாவைக் கூட அந்தப் பெண் தவிர்த்து வந்திருக்கிறாள். அந்த அளவிற்கு சமுதாயத்திற்கு வளைந்து கொடுத்த பெண் எப்படி இதையெல்லாம் ஏற்பாள்? அப்படி இருக்கும் போது இதுவெல்லாம் சாத்தியமா?
இதில் மலரின் நிலைப்பாடு என்ன? அந்தப் பெண் இவற்றையெல்லாம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது? சத்யன் மேல் உள்ள பிரியத்தால் கல்யாணத்திற்குத் தலையாட்டி இருக்கிறது. ஆனாலும்… தன் தாய்க்கொரு திருமணம் என்று வரும்போது அதை அந்தச் சின்னப் பெண் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறாள்?
“நீங்க எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்படி யோசனைப் பண்ணிக்கிட்டு உக்காந்திருக்கீங்க?” மீண்டும் ரூமிற்குள் வந்த வத்சலா கணவரை ஆச்சரியமாகப் பார்த்தார்.
“மலருக்கு சத்யா மேல நாட்டம் இருக்கு, சரி வத்சலா… ஆனா சத்யாக்கு… எனக்கு அது கொஞ்சம் இடிக்குதுடி.” இப்போது வத்சலா மர்மமாகப் புன்னகைத்தார்.
“இந்தச் சிரிப்புக்கு என்னடி அர்த்தம்!?” இப்போது வத்சலா கதவை மூடிவிட்டு கணவரின் அருகே வந்தார்.
“என்ன ரகசியம் வத்சலா?”
“உங்கப் பையனுக்கும் அந்தப் பொண்ணைப் புடிக்குங்க. அது எனக்கு எப்பவோ தெரியும்.”
“அப்படியா சொல்றே?”
“ஆமாங்கிறேன். இப்போ மடிச்சத் துணியை அவன் கப்போர்ட்ல வைக்க அவன் ரூமுக்குப் போறேன். நான் வந்தது கூடத் தெரியாம ஐயா கீர்த்தனா கல்யாண ஆல்பம் பார்த்துக்கிட்டு இருக்காரு. எட்டிப் பார்த்தா ஐயா கை மலர் இருக்கிற ஃபோட்டோவைத் தடவுது.”
“ஹா… ஹா… அப்படிப் போடு. என்னடா நம்ம பையனுக்கு இந்த விஷயத்துல நம்ம ஜீன் வரலையேன்னு ரொம்பவே யோசிச்சேன். பரவாயில்லை… அப்போ என்னோட பெயரைக் காப்பாத்திடுவான்.”
“அய்யே!” தலையில் அடித்துக்கொண்டு போய்விட்டார் வத்சலா.
***
அந்த ப்ளாக் ஆடி மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது. காரில் சத்யாவிற்குப் பக்கத்தில் மலர். பெண்ணின் முகத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அலைபாய்ந்து கொண்டிருந்தான் சத்யா. ஆனால் மலர்விழி அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“வீட்டுல அம்மா என்ன சொன்னாங்க மலர்?”
“ஒன்னுமே சொல்லலை.”
“ஓ… ஏனப்படி?”
“தெரியலை.”
“கோபமா இருக்காங்களா?”
“இல்லை… கோபப்படலை. ஆனா சதா எதையோ யோசிச்சபடி இருக்காங்க. குமுதா அத்தை வந்தா மட்டும் நல்லாப் பேசுறாங்க.”
“ம்… அவங்க ஏதாவது பேசினாங்களா?”
“உனக்கு இதுல முழு சம்மதமான்னு கேட்டாங்க.” சொல்லிவிட்டு தலையைக் குனிந்து கொண்டாள் மலர்விழி.
“நீ என்ன சொன்னே?” அவன் குரலில் ஆர்வம் இருந்ததோ!
“ஆமான்னு சொன்னேன்.”
“வேற என்னப் பேசினாங்க?”
“நான் பேச்சை வளர்க்கலை.”
“ஏன் மலர்?”
“மேலே ஏதாவது உங்களைப் பத்திக் கேட்டா நான் என்ன பதில் சொல்லுறது?”
“ஏன்? என்னைப் பத்தி உனக்கு எதுவுமே தெரியாதா?”
“என்ன தெரியும் சத்யா? மாமாவுக்காக இந்தக் கல்யாணம்னு முடிவு பண்ணி இருக்கீங்க.” மலர் மனதிலிருந்த வார்த்தைகளை ஏதோவொரு ஆதங்கத்தில் சொல்லிவிட்டாள். இப்போது சத்யா காரை ஓரிடத்தில் ஓரங்கட்டினான். மலரைப் பார்த்தபடி அவள்புறமாகத் திரும்பி அமர்ந்தவன் அவள் முகத்தையே பார்த்திருந்தான். மலருக்குக் கொஞ்சம் சங்கடமாகிப் போய்விட்டது.
“மலர்… என்னைத் திரும்பிப் பாரு.” சொன்னவன் அவள் கைகளைத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டான்.
“மலர்… மாமா எங்கிற ஒரு காரணத்துக்காக யாராவது பிடிக்காத பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிப்பாங்களா?” இப்போது மலர் சத்யனை விசித்திரமாகப் பார்த்தாள்.
“எதுக்கு இப்போ இப்படியொரு பார்வை?”
“…”
“வேறொரு சந்தர்ப்பத்துல நீயும் நானும் அறிமுகமாகி இருக்கணும் மலர்.”
“ஏன்?”
“அம்மா அறிமுகப்படுத்தின பொண்ணு. அதுவும் பெரியம்மா பொண்ணு கல்யாணத்துக்குன்னு. எனக்கு உன்னை சைட் அடிக்கத் தோணலை மலர்.” சொல்லிவிட்டுச் சிரித்தான் சத்யா.
“நான் ஒன்னும் கண்ணிய சிகாமணின்னு சொல்லலை. பாட்டி ஊருக்குப் போறதே அங்க இருக்கிற பசுமைக்காகத்தான்.”
“எந்தப் பசுமை?” அவன் குரலில் சிரிப்பை உணர்ந்தவள் வேண்டுமென்றே துருவினாள்.
“வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தின் பசுமை… அதே போல… கலர் கலர் தாவணிகளும் அது சார்…” அவன் வாயை இவள் சட்டென்று மூட, கண்ணடித்தான் சத்யன். அவள் கையைத் தன் வாயிலிருந்து அகற்றியவன் சிரித்தான்.
“நானும் ஒரு சாதாரணப் பையன்தான் மலர். எனக்கு வரப்போற வைஃப் எப்படி இருக்கணும்னு எனக்கும் கனவுகள் இருக்கு. மாமாவுக்காக அதையெல்லாம் மாத்திக்க முடியாது.”
“உங்கக் கனவை எந்தளவு நான் பூர்த்தி பண்ணி இருக்கேன்.”
“அது தெரியலை. ஆனா இப்போ நிதானமா உன்னை ஆராய்ஞ்சு பார்த்தா… அவ்வளவு அழகா இருக்கே. உன்னை எப்படி நான் மிஸ் பண்ணினேன்?” இப்போது அவள் முகம் சிவந்து போனது. அவன் அதற்கும் சிரித்தான்.
“இப்படி வெக்கப்படுறப்போ இன்னும் அழகா இருக்கே. உன்னோட வேலைகள்ல ஒரு நிதானம் இருக்கு, பொறுப்பா இருக்கே. உனக்கொன்னு தெரியுமா மலர்? இந்த குணமெல்லாம் எங்கிட்டக் கிடையாது. இதையெல்லாம் உங்கிட்டப் பார்க்கும் போது எனக்கு அது நல்லா இருக்கு. அந்த ஃபீலை எனக்குச் சொல்லத் தெரியலை மலர். அது எல்லாத்தையும் தாண்டி உன்னை நான் ரொம்ப கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ணுறேன் மலர்.”
“…”
“கல்யாணம் பண்ணணும்னா அங்க லவ் இருக்கணும்னு சொன்னே. இப்போ லவ் இருக்கா என்னன்னு எனக்குத் தெரியலை மலர். ஆனாக் கண்டிப்பா ஏதோ ஒரு கட்டாயத்துல உன்னைக் கட்டிக்கச் சம்மதிக்கலை. உன்னை எனக்குப் புடிக்கும்.” மலர் எதுவுமே பேசவில்லை. சத்யன் தன் கைகளுக்குள் இருந்த அவள் கையை வருடிப் பார்த்தான். அவள் விரலில் இருந்த மோதிரத்தோடு அவன் விரல்கள் விளையாடியது. மலர் அவனையே ஆச்சரியமாகப் பார்த்திருந்தாள்.
இயல்பாக அவள் முகம் பார்த்துப் பேசினான். ஏதோ நெடு நாட்கள் பழகியது போல அவள் கையைப் பிடித்தான். சுலபமாக அவன் மனதில் நினைப்பவற்றை எல்லாம் அவளோடு பகிர்ந்து கொண்டான். இதுவெல்லாம் கட்டாயத்தில் கல்யாணம் பண்ணுபவன் செய்யும் காரியம் இல்லையே!
அவள் விரலில் இருந்த மோதிரத்தைக் கழட்டினான் சத்யா. மலர் பேசாமல் அவன் செய்கைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் ஸ்பரிசம் ஒன்றே அவளுக்கு அப்போது போதுமானதாக இருந்தது. பாக்கெட்டில் இருந்த அந்த சின்ன பாக்ஸைத் திறந்தவன் அதிலிருந்த மோதிரத்தை வெளியே எடுத்தான். மலர் அவனைக் கூர்மையாகப் பார்க்க, அதைக் கணக்கில் கொள்ளாதவன் அதை அவள் விரலில் போடப் போனான். ஆனால் மலர் தன் கையை லேசாக இழுக்கப் போனாள்.
“சத்யா… என்னப் பண்ணுறீங்க?”
“ஏன்? என்னாச்சு?”
“இல்லை…” அவளை மேலே பேச விடாமல் அவனது கோபப் பார்வை அவள் வாயடைத்தது. அந்த ஒற்றைக்கல் வைர மோதிரத்தை அவள் விரலில் போட்டுவிட்டான் சத்யா.
“நேத்து அம்மாவோட ஃப்ரெண்ட் பொண்ணுக்குக் கல்யாணம். கிஃப்ட் வாங்கணும் கூட்டிட்டுப் போ சத்யான்னு சொன்னாங்க. கடைக்குப் போனப்போ உனக்கு ஏதாவது வாங்கலாம்னு தோணிச்சு. அதான் வாங்கினேன்.” விலாவாரியாக அவன் விளக்கம் சொன்னான்.
“சைஸ் சரியா இருக்கா?”
“ம்…”
“அம்மாதான் இந்த சைஸ் கரெக்ட்டா இருக்கும்னு சொன்னாங்க.”
“ஓ… அவங்களுக்கும் வாங்கினது தெரியுமோ?”
“ம்… நல்லா இருக்கா?” அக்மார்க் காதலனாக மாறி அவன் கேள்வி கேட்க மலர் புன்னகைத்தாள்.
“நல்லா இருக்கு.” அவன் அவளுக்குப் புரியாத புதிராகவே தோன்றினான். அவள் மோதிரத்திற்காக இப்போது மலர் கையை நீட்ட சத்யன் சிரித்தான்.
“என்ன சிரிக்கிறீங்க?”
“ம்ஹூம்… ஒன்னுமில்லை. இது எங்கிட்டேயே இருக்கட்டும்.”
“அதை வெச்சு நீங்க என்னப் பண்ணப் போறீங்க?”
“என்னமோ பண்ணுறேன், விடேன் மலர்.” இப்போதும் அவள் விரல்களையே பற்றி இருந்தவன் அதை மெதுவாக நீவிக் கொடுத்தான்.
“ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி சேவைகள் செய்ய வேண்டும்…” வரிகள் போல அந்தப் பாடலைச் சொல்லிக் காட்டியவன்,
“ஒருத்தங்களோட புறங்கையை வெச்சு அவங்க குணாதிசயங்களைச் சொல்லிடலாமாம். நீ எப்படி மலர்? நீ என்ன மாதிரிப் பொண்ணு?” கண்ணும் முகமும் சிரிக்க என்னப் பண்ணுகின்றோம் என்று புரியாமலேயே காதல் பண்ணிக் கொண்டிருந்தான் சத்யன்.
***
“எதுக்கு சித்ரா இவ்வளவு பயப்படுறே?”
“குமுதா இது எம் பொண்ணோட வாழ்க்கை.”
“புரியுது. நான் எங்க வீட்டுல சொல்லி பையனைப் பத்தி விசாரிக்கச் சொன்னேன். விசாரிச்ச வரைக்கும் நல்லப் பையன்னுதான் அத்தான் சொல்றார்.”
“எனக்கு அதெல்லாம் பிரச்சனையே இல்லை குமுதா. பிரகாஷ் வீட்டுப் பையனை விசாரிச்சுத்தான் தெரிஞ்சுக்கணுமா?”
“அப்போ என்னதான் உன்னோட பிரச்சனை?”
“என்ன குமுதா நீயும் இப்படிக் கேக்குறே. பையன் வீட்டுல இதுக்குச் சம்மதிக்கணுமே?”
“அது அந்தப் பையன் பாடு. அதுக்கு நீ ஏன் கவலைப்படுறே?”
“அப்படி சும்மா விட்டுட முடியுமா? அவங்க வேணாம்னு சொல்லிட்டா எம் பொண்ணோட நிலைமை என்ன?”
“அப்படியெல்லாம் சொல்ல மாட்டாங்கன்னுதான் எனக்குத் தோணுது. அப்படியே சொன்னாலும் நான் சும்மா விடமாட்டேன். நேரா பிரகாஷ் அண்ணா வீட்டுக்குப் போய், என்ன மாமனும் மருமகனும் விளையாடுறீங்களான்னு நல்லா நாலு வார்த்தை கேப்பேன். என்ன நினைச்சுக்கிட்டு இருக்காங்க? இவங்க விளையாட நாங்கதான் கிடைச்சோமா?” இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த ரேஞ்ச் ரோவர் சித்ரலேகாவின் வீட்டின் முன்பாக வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஞானபிரகாஷ் நேரடியாக உள்ளே வந்தார்.
“வாங்க அண்ணா.”
“குமுதா… நல்லதாப் போச்சு. நீங்களும் இங்கதான் இருக்கீங்களா?”
“உக்காருங்க அண்ணா. சித்ரா… காஃபி போடேன்.”
“இல்லை குமுதா. கொஞ்சம் கழிச்சுக் குடிக்கலாம். இப்போ உக்காருங்க.” பேசியபடியே சித்ரலேகாவைப் பார்த்தார் மனிதர்.
“நீ ஏம்மா ஒரு மாதிரியா இருக்கே?”
“அதையேன் கேக்குறீங்க அண்ணா. அன்னைக்கு உங்க மருமகன் வந்தாலும் வந்தாரு. இவ இப்படித்தான் இருக்கா.”
“ஓ… எனக்குமே கொஞ்சம் ஷாக்காத்தான் இருந்துச்சும்மா. சத்யா மச்சான்கிட்டயும் வத்சலாக்கிட்டயும் இதைப்பத்திப் பேசும்போது நான் அங்க தான் இருந்தேன்.”
“ஓ… சத்யா வீட்டுல பேசிட்டாரா?”
“என்னமோ நான் படம் பார்க்கப் போனேன். நல்லா இருந்தது படங்கிறமாதிரி, மலர் வீட்டுக்குப் போனேன். அவங்க அம்மாக்கிட்டப் பேசினேன்னு சொல்றான்.”
“ஓ… இப்பத்தையப் பசங்க அப்படித்தான் அண்ணா. நாமெல்லாம் வளர்ந்த காலம் வேற. இப்போக் காலம் வேற. வத்சலா வீட்டுல என்ன சொன்னாங்க?” குமுதா மட்டுமே பேசிக் கொண்டிருக்க சித்ரலேகா சுவரில் சாய்ந்தபடி ஒரு படபடப்புடன் நின்றிருந்தார்.
“அவங்க அதுக்கு மேல இருக்காங்கம்மா. இது நாங்க எதிர்பார்த்ததுதான். எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு சட்டுன்னு சொல்லிட்டாங்க!”
“பிரகாஷ்!” இது சித்ரலேகா
.”அப்புறம் என்ன சித்ரா?” இப்போது குமுதா கலகலவென்று சிரித்தார்.
“நாங்கப் பயந்துக்கிட்டே இருந்தோம்ணா. நல்லவேளை… நீங்க வந்து விஷயத்தைச் சொன்னீங்க. பேசிக்கிட்டு இருங்க. நான் இதோ வந்தர்றேன்.” சொல்லிவிட்டு குமுதா வெளியே போக சித்ரலேகாவை விழி எடுக்காமல் பார்த்திருந்தார் ஞானபிரகாஷ்.
“லேகா! இப்படி வந்து உக்காரு.” ஞானபிரகாஷ் சொன்ன பின்பும் சித்ரலேகா பிரமை பிடித்தவர் போல அப்படியே நின்றிருந்தார்.
“என்ன?” கேட்டவர் எழுந்து போய் பெண்ணின் கைப்பிடித்து அழைத்து வந்து சோஃபாவில் அமர வைத்தார்.
“சொல்லு. எதுக்குத் தனியா எல்லாத்தையும் மனசுக்குள்ள வெச்சு மருகுறே?”
“பிரகாஷ்!” இப்போது வெடித்து அழுதார் சித்ரலேகா. ஞானபிரகாஷ் எதுவும் பேசவில்லை. பெண் அழுது தன் சோகத்தை, இயலாமையைக் கரைத்துக் கொள்கிறது. பாவம், அந்த மனிதர் என்னப் பண்ணுவார்!
“புரியுது லேகா. உன்னோட வேதனை என்னன்னு எனக்குப் புரியுது. எல்லாத்துக்கும் காரணம் நான்தான். இந்த முட்டாள்தான்.” இப்போது அவருமே கண்கலங்கினார்.
“ஆனா எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு லேகா. மலர் வத்சலா வீட்டு மருமக. என்னோட சத்யா பொண்டாட்டி.” சொல்லி விட்டுச் சிரித்தார் ஞானபிரகாஷ். சித்ரலேகாவும் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“இப்போ சொல்லு… என்னப் பிரச்சனை?”
“தெரியலை… எல்லாமே மலைப்பா இருக்கு பிரகாஷ்.”
“ஏன் லேகா?”
“மலருக்கு எப்ப இருந்தாலும் கல்யாணம் பண்ணணும்தான். அது எனக்குத் தெரியும். ஆனா இப்போ… நான்…”
“சொல்லு…”
“தனிச்சு நிக்குறேன் பிரகாஷ். என்னை எப்பவுமே தாங்கின அம்மா அப்பா இல்லை. பேருக்குக் கூட அவரோட சொந்தங்கள் எனக்கில்லை.”
“நானில்லையா உனக்கு?” இதை ஞானபிரகாஷ் கேட்டபோது சித்ரலேகா விரக்தியாகப் புன்னகைத்தார். அந்தச் சிரிப்பு அவரின் உயிரைக் கீறியது.
‘வாய்ப்பேச்சு இப்போது எதற்கு? உனக்கு நானிருக்கிறேன் என்பதை என் செய்கைகள் மூலம் நான் காட்டுகிறேன் லேகா. அப்போது நீ என்னைப் புரிந்து கொள்வாய்.’ மனதுக்குள் நினைத்துக் கொண்டார் ஞானபிரகாஷ்.
“லேகா… வத்சலா வீட்டுல சத்யா மலர் விஷயத்துக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. கூடிய சீக்கிரமே அவங்க இங்க வந்து உங்கிட்டப் பேசுவாங்க. அதைச் சொல்லிட்டுப் போகத்தான் நான் வந்தேன். இப்போ நான் கிளம்புறேன்.” சொல்லிவிட்டு ஞானபிரகாஷ் அவசரமாக வெளியே போய்விட்டார்.
லேகா மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தார். எதுவோ காலியானது போல இருந்தது. தனக்கு எப்போதுமே துணையிருக்கும் அந்தத் தனிமையோடு அமர்ந்திருந்தார் பெண்.