Roja13

அந்த இடத்தில் கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. ஞானபிரகாஷ் மேற்கொண்டு எதுவுமே பேசவில்லை. தான் சொன்ன வார்த்தைகளை எதிரில் இருக்கும் பெண் உள்வாங்கிக் கொள்ளக் கால அவகாசம் கொடுத்தார்.

“இது என்ன புதுக்கதை?” நிதானமாக சித்ரலேகாவின் வார்த்தைகள் வரத் தோளைக் குலுக்கிக் கொண்டார் மனிதர்.

“மலருக்கு அப்பான்னு நான் உங்களைக் கைக்காட்டினதா எனக்கு ஞாபகமில்லையே பிரகாஷ்?” பெண்ணின் குரலில் நிதானம் ஏறிக்கொண்டே போக ஞானபிரகாஷ் அமைதியாக இருந்தார். சித்ரலேகாவோடு போராட வேண்டும் என்பது அவர் ஏற்கெனவே அறிந்த விடயம்தானே!

“ரொம்பப் பெரிய விஷயத்தைச் சொல்லிட்டு இப்போ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? மலருக்கு இதெல்லாம் சொல்லிக் குடுக்கிறது யாரு?”

“யாரும் சொல்லிக் குடுக்க வேண்டிய நிலைமையில அவ இப்போ இல்லை.”

“ஓஹோ! ரொம்ப வளர்ந்துட்டாளோ?”

“நீ அவளுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிருக்கே லேகா.”

“அதுக்காக? அவ எம் பொண்ணு இல்லைன்னு ஆகிடுமா?”

“நான் அப்படிச் சொல்லலை. பிஸினஸ்ல அவளுக்கு எவ்வளவு சுதந்திரம் குடுத்தியோ அதே சுதந்திரத்தை இப்பவும் குடுன்னு சொல்றேன்.”

“எதுக்கு? அவளே அவளுக்கொரு அப்பாவைத் தேடிக்கிறதுக்கா?”

“நியாயமாப் பார்த்தா நீதான் அதைப் பண்ணி இருக்கணும். அட்லீஸ்ட் அவளாவது பண்ணுறாளே.”

“புரிஞ்சுதான் பேசுறீங்களா பிரகாஷ்?”

“ஏன்? நீயும் நானும் என்ன இப்போ ஃபிஸிக்ஸ் க்ளாஸ்லயா இருக்கோம், புரியாமப் போறதுக்கு?” ஞானபிரகாஷின் முகத்தில் கேலி கிண்டல் எதுவும் இருக்கவில்லை. அந்த முகம் பெண்ணின் முகத்திற்குக் குறையாத இறுக்கத்தைத்தான் காட்டியது.

“நான் கிளம்புறேன்.” எழுந்து கொள்ளப் போன சித்ரலேகாவைக் கைப்பிடித்து அப்படியே நாற்காலியில் அமர வைத்தார் ஞானபிரகாஷ்.

“உக்காரு லேகா. இன்னைக்கு நாம இதைப்பத்திப் பேசி ஒரு முடிவுக்கு வந்திரலாம்.”

“இதுல பேச எதுவுமே இல்லைன்னு நான் சொல்றேன். நீங்க என்னடான்னா முடிவு கிடிவுன்னுறீங்க?”

“அமைதியா யோசி லேகா.”

“இதுல யோசிக்க என்ன இருக்கு?”

“இப்படியே தனியா எத்தனை நாளைக்கு இருக்கப் போறே?”

“சாகுற வரைக்கும் இருந்துட்டுப் போறேன். ஏன்? இத்தனை நாளும் அப்படித்தானே இருந்தேன்?”

“அப்போ உனக்கு மலர் இருந்தா.”

“இப்பவும் அதே மலர் இருக்காதானே?”

“இது விதண்டாவாதம்.”

“இருந்துட்டுப் போகட்டும். நீங்க எப்படி வேணா எடுத்துக்கோங்க. எனக்கு அதைப்பத்திக் கவலையில்லை.”

“தனியாவே வாழ்ந்து முடிச்சிரலாம்னு முடிவே பண்ணிட்டியா?”

“அதானே எனக்கு சாஸ்வதம். இத்தனை நாளும் நான் தனியாத்தான் இருந்தேன். இனியும் தனியாத்தான் இருக்கப் போறேன். புதுசா எங்கிருந்து நீங்கெல்லாம் இப்போ வந்திருக்கீங்க?”

“பழிவாங்குறியா லேகா?”

“என்னைப் பழி பாவத்துக்கு ஆளாக்காதீங்கன்னு சொல்றேன்.”

“எந்தக் காலத்துல இருக்கே நீ?”

“எந்தக் காலத்துல இருந்தாலும் நான் நான்தான். அதுல எந்த மாற்றமும் இல்லை.”

“அதுல நிறைய மாற்றங்களைக் கொண்டு வரணும்னு நான் நினைக்கிறேன்.” இப்போது ஞானபிரகாஷின் குரலில் அவ்வளவு உறுதி.

“நீங்க யாரு பிரகாஷ் என்னோட வாழ்க்கையில மாற்றங்களைக் கொண்டுவர?” இரக்கமே இல்லாமல் பெண் கேட்க சலனமே இல்லாமல் பார்த்திருந்தார் ஞானபிரகாஷ். இதெல்லாம் அவர் எதிர்பார்த்ததுதானே!

“அப்படி என்னத்தைப் பெருசா வாழ்ந்துட்டேன்னு இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறே? உம் புருஷன் உன்னைத் தங்கத் தட்டுல வெச்சுத் தாங்கி இருந்தாலாவது இந்தப் பேச்சுல ஒரு நியாயம் இருக்கு.”

“பிரகாஷ்! அது உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயம். வாயை மூடுங்க.”

“வாயை மூடி மூடித்தானே இந்த நிலைமையில வந்து நிக்கிறோம். இன்னும் வாயை மூடுன்னா?”

“உங்களுக்குக் கல்யாணம் பண்ணணும்னாத் தாராளமப் பண்ணிக்கோங்க. பொண்ணு நான் பார்த்துக் குடுக்குறேன். சந்தோஷமாப் புள்ளைக்குட்டிப் பெத்துக்கோங்க. அப்படி ஒன்னும் வயசாகிடலை உங்களுக்கு.”

“அதுக்கு எதுக்கு நான் இத்தனை நாளா ஒத்தையில நிக்கணும்? என்னோட தேவை அது இல்லை. எனக்கு என்னோட லேகா வேணும். அவளை நான் கல்யாணம் பண்ணிக்கணும். அவளோட நீ சொன்னப் புள்ளைகுட்டிகளைப் பெத்துக்கணும்.” ஞானபிரகாஷ் சொல்லி முடிக்க சித்ரலேகா எழுந்து நின்று விட்டார். கண்கள் குரோதத்தைக் கக்கியது.

“என்ன சொன்னீங்க?!”

“கல்யாணம் பண்ணிக்கலாம் லேகா, நீயும் நானும் ஆசைப்பட்ட மாதிரி.” மனிதர் சொல்லி முடிக்கப் பெண்ணின் கை அவர் கன்னத்தைப் பதம் பார்த்தது. இருந்தாலும் ஞானபிரகாஷ் அசைந்து கொடுக்கவில்லை.

“நான் மலர் உங்களை அப்பான்னு கூப்பிடுறதே தப்புங்கிறேன்.” சிலம்பெடுக்காத கண்ணகியாக தனக்கு முன்னால் நிற்கும் பெண்ணைக் கிஞ்சித்தும் கண்டு கொள்ளவில்லை மனிதர்.

“உனக்கு இப்பத்தானே நாப்பத்தி மூனு. கல்யாணம் பண்ணின கையோட கொழந்தை ஒன்னும் பெத்துக்கலாம்.” சொல்லி முடித்துவிட்டு இதுவரை வலது கன்னத்தைத் தடவிக் கொண்டிருந்த ஞானபிரகாஷ் இப்போது இடது கன்னத்தைத் தடவிக் கொண்டார். மனிதர் இயேசுநாதர் பரம்பரை போலும்! ஆனால் தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல மீண்டும் பேச ஆரம்பித்தார்.

“இந்தப் பேச்சை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இதையெல்லாம் எதிர்பார்த்ததுதான் லேகா. இல்லைன்னா உன்னை நான் காதலிச்சதுல அர்த்தமே இல்லையே? எனர்ஜியை வேஸ்ட் பண்ணாம உக்காரு.” அசால்ட்டாக மனிதர் சொல்ல இப்போது தொப்பென்று உட்கார்ந்தார் சித்ரலேகா. கண்களில் கண்ணீர் வழிந்தது.

“இப்போ எதுக்கு இந்த அழுகை?”

“நீங்களும் ஒரு சராசரி ஆம்பிளைதான் இல்லை பிரகாஷ்?”

“கண்டிப்பா.”

“உங்களுக்கு நான் முக்கியமில்லை. உங்க ஆசைகள் மட்டும்தான் முக்கியமில்லை?”

“இப்படியெல்லாம் பேசினா நான் என்னோட மனசை மாத்திக்குவேன்னு நினைக்காத லேகா. என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை. ஒரு தடவை உன்னை நான் தவறவிட்டது போதும். வாழ்க்கை இன்னொரு முறை எனக்கு வசந்தத்தைக் குடுத்திருக்கு. அதை இப்பவும் தவறவிட நான் ஒன்னும் முட்டாள் இல்லை.”

“நான் இன்னொரு மனுஷனோட வாழ்ந்திருக்கேன் பிரகாஷ்.”

“எனக்கு அதைப்பத்தி எந்தக் கவலையும் இல்லை.”

“எனக்கொரு பொண்ணு இருக்கா. அவளுக்கு இப்பத்தான் கல்யாணம் பண்ணிக் குடுத்திருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல அவளுக்கொரு கொழந்தை பொறக்கும். இப்பப் போய் நான் கொழந்தைப் பெத்துக்கிறதைப் பத்திப் பேசுறீங்களே… உங்களுக்கு வெக்கமா இல்லை?”

“இதுல வெக்கப்பட என்ன இருக்கு? வாழ்க்கை சில நேரங்கள்ல சில மனுஷங்களை வஞ்சிக்குது. இதுதான் நமக்கு விதிச்சிருக்கு. அதை இனியும் முட்டாள்தனமாக் கோட்டை விடுறது புத்திசாலித்தனம்னு எனக்குத் தோணலை.”

“அப்போ என்னைப் பத்தி நீங்கக் கவலைப்படலை?”

“இதுல உன்னைப்பத்திக் கவலைப்பட என்ன இருக்கு லேகா? நீ வாழ்ந்த வாழ்க்கை எப்படி இருந்துச்சுன்னு எனக்குச் சரியாத் தெரியாது. அதைத் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. ஆனாத் தனியாத்தான் ரொம்பக் காலம் வாழ்ந்திருக்கே. அத்தனைப் பாரத்தையும் ஒத்தை ஆளா உன்னோட தோள்ல சுமந்திருக்கே. போதும்… இப்போ எல்லாத்தையும் தூக்கிக் கீழே வை. ஃப்ரீயா இரு. சந்தோஷமா இரு. நீ அனுபவிக்க நினைச்ச வாழ்க்கை, ஆசைப்பட்ட வாழ்க்கை இப்போ உன்னோட வாசல்ல வந்து நிக்குது. அதை ஏன் மறுக்குற?”

“எனக்கு எதுவும் தேவையில்லை பிரகாஷ்.”

“அப்படி உன்னை லேசுல விட நான் தயாரா இல்லை லேகா. முடிவு பண்ணினது பண்ணினதுதான்.‌ அதுல எந்த மாற்றமும் இல்லை. நமக்குச் சதி பண்ணின விதியே மனசு மாறி நமக்கொரு வாய்ப்பைத் திரும்பவும் குடுத்திருக்கு. நீயும் மனசு மாறித்தான் ஆகணும். அதுவரைக்கும் நானும் ஓயமாட்டேன்.”

சட்டென்று எழுந்த சித்ரலேகா வெளிநடப்புச் செய்துவிட்டார். ஞானபிரகாஷ் அவரைத் தடுக்கவில்லை. ட்ரைவரோடு காரில்தான் போகிறாரா என்பதை மட்டும் பார்த்துக் கொண்டார். சித்ரலேகாவோடு பேசுவதற்கு முன்பிருந்த திடத்தை விட மனது இப்போது இன்னும் திடப்பட்டிருந்தது.

இந்தப் பெண்ணை எப்படித் தன் வழிக்குக் கொண்டு வருவது என்று முன்பு கவலைப்பட்டார். ஆனால் இப்போது மனது முழுதாக மாறியிருந்தது. எதையும் விடப்போவதில்லை. இனி எதையும் விட்டுக்கொடுக்க அவருக்கு விருப்பமும் இல்லை.

-0-0-0-0-0-0-0-

சத்யனும் மலரும் ஞானபிரகாஷ் வீட்டில் அமர்ந்திருந்தார்கள். சித்ரலேகா கிளம்பிப் போன கையோடு மலரை அழைத்திருந்தார் மனிதர். அவர்களும் உடனேயே கிளம்பி வந்திருந்தார்கள்.

“நான் தோட்டத்தைப் பார்த்துட்டு வர்றேன் மாமா. நீங்கப் பேசுங்க.” சத்யன் எழுந்து பின்னால் போக ஞானபிரகாஷ் ஒரு பெருமூச்சு விட்டார்.

“எதுக்குப்பா இவ்வளவு கோபப்படுறாங்க?”

“இது கோபமில்லை மலர், ஆதங்கம். நான் அவ கண்ணுலயே படாமப் போயிருந்தா அவபாட்டுல இருந்திருப்பா. ஆனா இப்போ அவளால எதுவும் பண்ண முடியலை. பழசெல்லாம் ஞாபகம் வரும். இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் போட்டுக் குழப்பிக்கிறா. முட்டாள்… எதிர்காலத்தைப் பத்தி அவ கொஞ்சமும் யோசிக்கலை.”

“இப்போ என்னப் பண்ணுறது?”

“உங்கம்மா இஷ்டத்துக்கு ஆட என்னால முடியாது.‌ நான் சொல்றதுக்கெல்லாம் அவ தலையாட்டித்தான் ஆகணும்.

“நடக்குமாப்பா?”

“ஏன் நடக்காது? என்னை வேணாம்னு சொல்லிருவாளா உங்கம்மா?” இதை ஞானபிரகாஷ் கேட்டபோது மலர் சிரித்தாள். ஏதோ தனக்கொரு அப்பா இருந்து அம்மாவும் அப்பாவும் சண்டைப் போட்டுக் கொண்டால் இப்படித்தான் இருந்திருக்குமோ!

“என்னோட நிலைமை உனக்கும் சிரிப்பா இருக்கில்லை மலர்?”

“ஐயையோ! அப்படி இல்லைப்பா.‌ நீங்க ரெண்டு பேரும் இப்படிச் சண்டைப் போட்டுக்கிறது பார்க்க நல்லாயிருக்கு. அதான் சிரிச்சேன்.”

“சண்டை மட்டுமா போட்டா உங்கம்மா.” சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கன்னத்தைத் தடவிக் கொண்டார் மனிதர்.

“ஐயையோ! என்னப்பா சொல்றீங்க?”

“காலேஜ்ல ஆரம்பத்துல என்னை நின்னுப் பார்க்கவே பயப்பிடுவா. ஒரு ஃபோட்டோ எடுக்க நான் பட்டப் பாடு உனக்குத் தெரியுமா மலர்?”

“எது? அந்தத் தோள்ல கைப் போட்டுக்கிட்டு ஜோடியா நிக்குறதா?” மகள் கேலிப்பண்ண அப்பாவின் முகம் வெட்கப்பட்டது. மலர் இப்போது சத்தமாகச் சிரித்தாள்.

“ஜூனியராப்பா அம்மா உங்களுக்கு?”

“ஆமா. அந்த புக்ஸை இறுக்கிக் கட்டிப் புடிச்சிக்கிட்டு குனிஞ்ச தலை நிமிராம அவபாட்டுக்கு வருவா, போவா. அவளை என்னைப் பார்க்க வெக்குறதுக்கே நான் தலையால தண்ணி குடிச்சேன்னாப் பார்த்துக்கோயேன் மலர்.”

“ஆனாலும் உங்க வழிக்குக் கொண்டு வந்துட்டீங்க.”

“ராட்சசி… அஞ்சு நிமிஷத்துக்கு மேலே நின்னுப் பேச மாட்டா. ஆனா எனக்குக் கிடைச்ச அந்த அஞ்சு நிமிஷங்களும் பொக்கிஷம் மலர். ஒரு கட்டத்துல எல்லாம் தொலைஞ்சு போச்சு” ஞானபிரகாஷின் குரல் கலங்க மலருக்கு மனதைப் பிசைவது போல இருந்தது.

அதற்கு மேலும் அங்கிருக்கத் தைரியம் இல்லாமல் சத்யனைத் தேடிக்கொண்டு பின்னால் இருந்த தோட்டத்திற்குப் போனாள். சத்யன் வேலை செய்யும் மனிதரோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தவன் மலரைக் காணவும் திரும்பிப் பார்த்தான். அந்த மனிதர் நகர்ந்து விட்டார்.

“என்னாச்சு மலர்? ஏய்! என்ன இது?” அவள் கண்கள் கலங்கி இருக்க சத்யன் திகைத்துப் போனான்.

“என்னன்னு சொல்லு. எதுக்கு இப்போ அழுறே?” மனைவியைத் தன்னோடு அணைத்துக் கொண்டவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“எதுக்கு சத்யா இப்படியெல்லாம் நடக்கணும்?”

“என்ன நடந்திருக்கு?”

“எவ்வளவு ஆசையா லவ் பண்ணி இருக்காங்க. எதுக்கு உங்கத் தாத்தா அவங்களைப் பிரிச்சாங்க சத்யா?” அழுதபடி மனைவி கேட்க சத்யன் புன்னகைத்தான். அவனிடமிருந்து பதில் வராமல் போகவும் அண்ணார்ந்து பார்த்தாள் மலர். அவன் முகத்திலும் கவலையின் சாயல்.

“அவங்க ஆசைப்பட்டது நடக்கலையே சத்யா.”

“நடக்கும்டா. நீ கவலைப்படாதே.”

“எவ்வளவு காலம் வீணாப்போச்சு சத்யா. ஏன் சத்யா இப்படியெல்லாம் நடக்குது?” விம்மியபடி கேட்டவளின் நெற்றியில் முத்தம் வைத்தான் கணவன்.

“விதி மலர். இனி அதையெல்லாம் நினைச்சு என்னப் பிரயோஜனம் சொல்லு?”

“இப்பக்கூட இதெல்லாம் நடக்கும்ணு எனக்குத் தோணலை.”

“அதெல்லாம் மாமா பார்த்துக்குவாங்க. நீ கவலைப்படாதே. நாம கிளம்பலாமா?”

“ம்…”

“உங்க வீட்டுக்குப் போய் சொல்லிட்டு அப்படியே போகலாம்.”

“சரி.” அவள் கண்களைத் துடைத்துவிட்டான் சத்யன். அன்று பிற்பகல் இருவரும் பாட்டியின் கிராமத்திற்குப் போவதாக ப்ளான். பாட்டி ஏற்கெனவே ஊருக்குக் கிளம்பி இருந்தார். இரண்டு நாட்கள் பாட்டியோடு தங்க சத்யன் நினைத்திருந்தான்.

இன்னும் நான்கு நாட்களில் அவன் மலேஷியா கிளம்புகிறான். மலருக்கு அரசாங்க ஆவணங்களில் ஏதோ தாமதம் ஏற்பட்டதால் இம்முறை சத்யன் மட்டுமே கிளம்புகிறான்.

வத்சலாவும் மலர் இப்போது மலேஷியா போவதை அவ்வளவு ஆதரிக்கவில்லை. இவர்கள் ஹோட்டல் வேலை முடிந்தபிறகு போகலாம் என்பது அவர் எண்ணம். மகன் ஆண்பிள்ளை. எங்கே வேண்டுமானாலும் தங்கலாம். ஆனால் மலரை அப்படி வேறு ஹோட்டல்களுக்கு அனுப்ப அவருக்கு விருப்பம் இருக்கவில்லை. எல்லோருக்கும் அதுவே சரியென்றும் பட்டது.

‘போகும் இடமெல்லாம் சொந்த ஹோட்டல் கட்டிக்கொண்டா போக முடியும்?’ அம்மாவை சத்யன் இப்படித்தான் கேலிப் பண்ணினான். அவனுக்கு மலர் கூடவே வராத ஆதங்கம்.

இவர்கள் இருவரும் மலரின் வீட்டை அடைந்த போது அங்கு குமுதாவும் இருந்தார். சித்ரலேகா மறந்தும் மகளின் பக்கம் திரும்பவில்லை. மருமகனை மாத்திரமே விழுந்து விழுந்து கவனித்தார். மலரும் கண்டுகொள்ளவில்லை. அழுத்தமாகவே இருந்தாள். இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் நாடகம் சத்யனுக்கும் புரிந்தது, குமுதாவிற்கும் புரிந்தது. யாருக்காகப் பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள்.

-0-0-0-0-0-0-0-

கார் பாட்டியின் ஊரை அடைந்தபோது நேரம் மாலை நான்கைத் தாண்டிவிட்டது. வத்சலாவின் அறிவுரையின் பேரில் மலர் பட்டுப்புடவைக் கட்டி நகைகள் அணிந்து வந்திறங்க பாட்டியின் முகம் மலர்ந்து போனது.

ஊரில் பாதிப்பேர் அங்குதான் வந்து நின்றிருந்தார்களோ! மலர் மலைத்துப் போனாள். சத்யாவை அவள் ஆச்சரியமாகத் திரும்பிப் பார்க்க அவனும் சிரித்தான்.

“கிராமம்னா இப்படித்தான் மலர். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. ஆனாப் போகப்போக உனக்கு இவங்களையெல்லாம் அவ்வளவு பிடிக்கும். பிலீவ் மீ.” அவன் சொல்லி முடிக்கப் பெண்கள் சிலர் குலவையிட்டார்கள்.

“ஐயோ பாட்டி! எதுக்கு இதெல்லாம்?” சத்யா கேட்டுக் கொண்டிருக்கும் போதே இரு பெண்கள் ஆரத்தி எடுத்தார்கள். புது மாப்பிள்ளையையும் பெண்ணையும் பார்க்க அத்தனை ஆர்வம் அவர்களுக்கு.

“நீ சும்மா இரு சத்யா. உனக்கு ஒன்னும் தெரியாது.” பேரனை அடக்கிய பாட்டி அப்போதே எல்லோருக்கும் காஃபி பலகாரம் பரிமாறச் செய்தார். நாளை மதியத்திற்கு பெரிய விருந்திற்கே ஏற்பாடு பண்ணி இருந்தார்.

“இஞ்சாருங்கம்மா பொண்ணுகளா! எல்லாருக்கும் தனித்தனியா வந்து வெத்திலை பாக்கு வெச்சு அழைக்க இந்த ரங்கநாயகி ஒடம்புல தெம்பில்லை. நாளைக்கு எல்லாரும் குடும்பமா மதிய விருந்துக்கு வந்திடணும்.” பாட்டி சொல்ல அத்தனைப் பேரும் தலையாட்டிக் கொண்டார்கள்.

பாட்டி வீட்டிற்கு சத்யன் வந்தால் எப்போதும் தங்கும் அறையை ஒரு பெண் காட்ட மலரின் கண்கள் சத்யனைத் தேடியது. வந்ததும் வராததுமாக அவன் நண்பர்கள் கூட்டத்தோடு சிரித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தான். அவன் உதவி தனக்கு இப்போது கிடைக்காது என்று புரிந்துபோக மலர் அங்கிருந்த பெண்களோடு லேசாக இணைந்து கொண்டாள்.

பழக்கமில்லாத கிராமத்துச் சூழல். இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள். சத்யனின் பாதி நாட்கள் இங்குதான் கழியுமென்று முன்பே ஒரு முறை அவன் சொல்லி இருந்ததால் அவளுக்கும் அந்தச் சூழல் ஏனோ மெதுவாகப் பிடித்தது.

கூட்டமெல்லாம் கலைந்து போக இரவு எட்டைத் தாண்டிவிட்டது. அதன் பிறகுதான் சத்யன் மலரின் பக்கம் திரும்பிப் பார்த்தான்.

“சாரி மலர், ரொம்ப நாளைக்கு அப்புறமா ஃப்ரெண்ட்ஸைப் பார்த்தனா, அதான்.”

“அதுக்காக இப்படியா?”

“ஏய்! இது நம்ம வீடு மலர்.”

“அது சரிதான். ஆனா எனக்கு இங்க எதுவுமே பழக்கமில்லையே சத்யா.”

“பழகிடும்டா. இன்னும் நாலு தரம் வந்து போனா எல்லாம் தானாப் பழகிடும்.”

பாட்டி இரவு உணவை அட்டகாசமாகப் பண்ணியிருக்க அதை ஒரு பிடி பிடித்துவிட்டது தனது பைக்கை எடுத்தான் சத்யன்.

“சத்யா! இந்த நேரத்துல வெளியே கிளம்பாத.”

“ஐயோ பாட்டி! இருக்கிறதே ரெண்டு நாள். அதுல அங்க போகாதே, இங்க போகாதேன்னா எப்படி?”

“சொன்னாக் கேளு சத்யா.”

“கொஞ்ச நேரந்தான் பாட்டி. மலருக்கு நம்ம ஊரை ஒரு ரவுண்ட் சுத்திக் காட்டிட்டு வர்றேன்.”

“மலரையும் கூட்டிட்டுப் போகப்போறியா? ஐயையோ! வேணாம் வேணாம். புதுப்பொண்ணு. ஏதாவது காத்துக் கருப்புப் பட்டிடப் போகுது.”

“காத்தாவது கருப்பாவது. சும்மாப் போங்கப் பாட்டி.”

“சொன்னாக் கேக்கமாட்டியா சத்யா? ஏதாவது இரும்பையாவது கையில எடுத்துக்கிட்டுப் போங்க.”

“என்னோட பைக்கே நல்லப் பெரிய இரும்புதான் பாட்டி. டோன்ட் வொர்ரி.” அவன் சொல்லவும் பாட்டி தலையில் அடித்துக் கொண்டார். மலருக்கு சிரிப்புத்தான் வந்தது.

“ஏறு மலர்.”

“புடவையோட எப்படி சத்யா?”

“நீ வேறே ஆரம்பிக்காதே. பொண்டாட்டியை ஒரு ரவுண்ட் பைக்கில கூட்டிக்கிட்டுப் போக நினைச்சது ஒரு தப்பா ஆண்டவா!” அவன் மேல் நோக்கிக் கையை விரிக்க மலர் சிரித்தே விட்டாள். பாட்டி கூடப் புன்னகைத்தார். புடவையை ஒரு பக்கமாக ஒதுக்கிக்கொண்டு அவள் ஏறி உட்கார பைக் பறந்தது.

அந்த வயல்வெளியின் ஓரமாக பைக்கை நிறுத்தினான் சத்யன். அம்புலியின் ஒளியில் அந்த இடமே ரம்மியமாக இருந்தது. நாற்றுகள் இதமாகத் தலையசைத்துத் தென்றலுக்கு ஆட மலர் பைக்கை விட்டு இறங்கினாள். இதுபோலெல்லாம் இதுவரை அவள் பார்த்ததில்லை.

“சத்யா!” அவள் வாய் அவனைத் தன்னிச்சையாக அழைத்தது.

“எப்படியிருக்கு பாட்டியோட ஊர்.”

“பியூட்டிஃபுல் சத்யா.”

“இங்கக் கண்ணுக்குத் தெரியுற அத்தனை வயலும் உங்க அப்பாவோடதுதான்.”

“அப்படியா!?”

“ஆமா… உங்கப்பா வாங்கிப் போட்டதை எங்கப்பா பார்த்துக்கிறாரு.”

“ஓ… கணக்கு வழக்கெல்லாம் ஒழுங்காப் பார்க்குறீங்க இல்லை?”

“அடிங்!” அவள் முதலாளி தோரணையில் கேட்க கையை ஓங்கினான் சத்யன். கலகலவென்று சிரித்தபடி வயல் வரப்பில் கால் வைத்தாள் மலர்.

“ஹேய் மலர்! பத்திரம்.‌ இப்ப அங்கெல்லாம் போகாதே. காலையில இங்க வேலை செய்ய ஆள் வருவாங்க. அப்போ உள்ளப் போய் பார்க்கலாம்.”

“சரிங்க…” அவன் சொல்லவும் அவளும் பின்வாங்கி விட்டாள்.

ஏகாந்தமான வேளை. தென்னங்கீற்றும் தென்றல் காற்றுமென மனம் மயங்க சத்யனைத் திரும்பிப் பார்த்தாள் மலர். அவனும் அப்போது அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘கடமைக்காகக் கல்யாணம் பண்ணியவன் நீ. உன்னிடம் காதலில்லை.’ என்று அவள் குற்றம் சொன்ன காரணத்தால் அவனுக்குள் முளைத்திருக்கும் காதலைக் காட்டாமல் கைக் கட்டி நின்றான். ஆனால் அந்த வேலையை அவன் கண்கள் செவ்வனே செய்து கொண்டிருந்தன.

தன்னையும் மிஞ்சிய காதலை அவள் கண்களில் பார்த்தவன் அவள் பக்கத்தில் போனான். இருந்தாலும் மௌனமாக அவள் அனுமதி வேண்டி நின்றான்.

பக்கத்தில் இருந்த தென்னைமரத்தில் அவன் சாய்ந்து கொள்ள மலர்விழி இப்போது தவித்துப் போனாள். அவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அந்தப் பார்வை மட்டும் அவளைத் துளைத்துக் கொண்டிருந்தது.

இரவு நடந்து கொண்டிருக்க மனைவியின் தவிப்பைக் கொஞ்ச நேரம் வேடிக்கைப் பார்த்தவன் அவள் கரம்பிடித்து இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான். அவள் முகம் நிமிர்த்தியவன்,

“சொல்லு மலர், அன்னைக்கு முதல்முதலா நம்ம வீட்டுல அந்த ஃபோட்டோவைப் பார்த்தப்போ என்ன நினைச்ச?” என்றான். மலர் வசமாக மாட்டிக் கொண்டாள்.

“சொல்லு மலர்.”

“சத்யா…”

“சொல்லமாட்டியா?”

“அது…”

“ம்… சொல்லு.”

“ஃபோட்டோ நல்லா இருந்தது.”

“அவ்வளவுதானா?”

“நீங்களும் நல்லா இருந்தீங்க.”

“அவ்வளவுதானா?” அவன் திரும்பவும் கேட்க மலர் இப்போது சிரித்தாள்.

“உங்களைப் பார்க்கணும் போல இருந்துச்சு.”

“அதுக்கப்புறம்?” விடாமல் அவன் கேட்க மெதுவாக விலகினாள் மலர்விழி. சத்யனின் முகத்தில் அத்தனை ஏமாற்றம். புரியவில்லையா? இல்லை… புரிந்துகொள்ள மறுக்கிறாளா? அவன் இளமை மொத்தமும் அவளுக்காக ஏங்கக் காத்திருந்தான் இளவல்.

அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது…

அன்புக்கதைப் பேசிப்பேசி விடியுது இரவு…