RojaPoonthottam-1

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்

பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

ஆடிக்கொண்டு பாடியபடி வெளியே வந்தான் விவேக். அழகான இளங்காலைப் பொழுது. நேரம் காலை ஏழு மணி. நேற்றிரவு பெய்த மழையின் குளிர்ச்சி இன்னும் நிலத்தில் மிச்சமிருந்தது. இவன் வெளியே வரும்போதுதான் மலர்விழி அவள் ஷாப்பிற்குப் பக்கத்தில் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு ஸ்டான்ட் போட்டுக் கொண்டிருந்தாள். விவேக்கின் பாடல் இப்போது அவசர கதியில் மாறியது. ஹை டெசிபலில் பாடினான் பையன்.

பூக்களே… சற்று ஓய்வெடுங்கள்… அவள் வந்து விட்டாள்…

“என்ன தம்பி… பாட்டெல்லாம் பலமாருக்கு?” மலரின் பேச்சில் விவேக்கின் முகம் சிவந்து போனது.

“இங்கப்பாரு மலர்! என்னை லூசுன்னு வேணும்னாலும் கூப்பிடு. நான் தாங்கிப்பேன். ஆனா தம்பின்னு மட்டும் கூப்பிடாதே. என்னால தாங்க முடியாது.”

“தம்பியைத் தம்பின்னு கூப்பிடாம வேற எப்படிக் கூப்பிடுறது தம்பி?”

“ஏன்? நான் என்ன உங்க அம்மா அப்பாக்கா பொறந்தேன்? உனக்கு தம்பி ஆகிறதுக்கு?”

“ரெண்டு மாசம் லேட்டாப் பொறந்திருக்கியே, அது போதாது?”

“ஏன் மலர்? உனக்கே இது நியாயமாப் படுதா? ரெண்டு மாசமெல்லாம் ஒரு கணக்கா? இதுக்காக என்னோட லவ்வை நீ ரிஜெக்ட் பண்ணுறது கொஞ்சம் கூட நல்லாயில்லை. இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் அவசரமா எட்டு மாசத்துலயே பொறந்து கணக்கை நேர் பண்ணி இருப்பேனில்லை?”

“என்ன தம்பி? உங்கப்பாக்கு ஃபோனைப் போட்டு உங்க பையன் கடையைக் கவனிக்காம காதல் பயிர் வளர்க்கிறார்னு சொல்லட்டுமா?” எங்கே அடித்தால் வலிக்கும் என்று தெரிந்து வார்த்தைகளைப் போட்டாள் மலர்விழி. அது சரியாக வேலை செய்தது. விவேக் எதுவும் பேசாமல் அவன் கடைக்குள் போய்விட்டான்.

மலரின் கடையும் விவேக்கின் கடையும் அடுத்தடுத்தாற் போலத்தான் இருந்தது. விவேக் கொஞ்சம் வசதியான வீட்டுப் பையன். படிப்பு பெரிதாக வரவில்லை என்று அவன் அப்பா அவனைத் தொழிலில் இறக்கி இருந்தார். பெரிதாக ஒரு ஸ்டேஷனரி ஷாப் வைத்துக் கொடுத்திருந்தார். நல்ல பையன்தான். ஆனால் விளையாட்டுப் புத்தி ஜாஸ்தி.

‘ரெட் ரோஸ்’ தன் கடையின் பெயர்ப்பலகையை அண்ணார்ந்து பார்த்தாள் மலர்விழி. எந்த நேரத்தில் அவளுக்கு அந்தப் பெயரை வைத்தார்களோ! பூக்கள் என்றால் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும்.

அப்பா அவள் ஐந்து வயதாக இருக்கும் போதே இறந்து போனாராம். பெரிதாக அப்பாவைப் பற்றிய எதுவும் அவள் ஞாபகத்தில் இல்லை. அவள் உலகம் அவள் அம்மா சித்ரலேகா தான். அழகு என்றால் அவள் அம்மா அப்படியொரு அழகு. அம்மாவின் அழகில் பாதி வந்திருந்தாலே தான் பேரழகியாக இருந்திருப்போம் என்பது அவள் எண்ணம். ஆனால் முக்கால்வாசி அழகை அள்ளிக்கொண்டு தான் வந்திருக்கிறோம் என்று எப்போதும் அவள் உணர்ந்து கொள்வதே இல்லை.

இந்தக் கடை அவள் கனவு. சிறுவயது முதலே ஏனோ தெரியவில்லை, இப்படியொரு கடை வைக்க வேண்டும் என்ற விதை அவள் மனதில் விழுந்து விட்டது. அதற்கு ஏற்றாற்போல பாடங்களைத் தெரிவு செய்து கொண்டாள். தேவையான பயிற்சிகளையும் தேடிப் பயின்று கொண்டாள்.

இதோ! இப்போது ‘ரெட் ரோஸ்’ என்று கண்ணைக் கவரும் பெயர்ப்பலகையுடன் நிற்கும் இந்தக் கடைக்குப் பின்னால் அவள் உழைப்பு நிறையவே இருக்கிறது.

பெரிதாகச் சொத்து என்று சொல்லிக்கொள்ள அவர்களிடம் ஒன்றும் இருக்கவில்லை. அம்மா வழித் தாத்தா கொடுத்த வீடு இருந்தது. அதனால் இருப்பிடத்திற்கு எந்தக் கஷ்டமும் வரவில்லை. அம்மா தனியார் நிறுவனத்தில் வேலையில் இருந்தார். கடந்த சில வருடங்களாக மகள் தலை தூக்கிய பிறகு அம்மாவை வேலைக்குப் போக அனுமதிக்கவில்லை. தொழில் நன்றாகவே போனது மலருக்கு.

பாங்கில் கடன் வாங்கித்தான் இந்தக் கடையை ஆரம்பித்திருந்தாள் மலர். இப்போது அவளின் கீழே ஐந்து பேர் வேலை செய்கிறார்கள். இன்னும் ஒரு வருடத்தில் பாங்க் கடன் முழுதாகத் தீர்ந்து போய்விடும். அதன்பிறகு கடையால் வரும் வருமானம் முழுதாக அவளுக்குச் சொந்தம்.

கடைக்குள் நுழைந்தாள் மலர்விழி. கடை என்றால் சாதாரணப் பூக்கடை இல்லை அது. மேல்தட்டு மக்கள் விரும்பி வாங்கும் பலதரப்பட்ட மலர்களைக் கொண்ட கடை அது. கல்யாண ஆடர்களையும் பெரிய அளவில் பண்ணிக் கொடுப்பது இவர்களுக்குக் கைவந்த கலை. இரண்டு பெண்களைக் கடையின் உள்ளக வேலைகளுக்கு அமர்த்தி இருந்தாள் மலர். சுபாஷிணி, ஜெனி என்று பெயர். மலரின் மனமறிந்து வேலை செய்யும் பெண்கள். ரொம்ப நல்ல மாதிரி.

மூன்று பையன்களை வெளி வேலைகளுக்கென்றே நியமித்திருக்கிறாள். பூக்களைத் தருவிப்பது, ஆர்டர்களை டெலிவரி பண்ணுவது என்று அவர்களுக்கு வேலைச் சரியாக இருக்கும்.

அன்றுதான் நல்ல உயர் ரக ஆர்க்கிட் மலர்கள் வந்திறங்கி இருந்தன. ஒரு திருமணத்திற்காகப் பெண் வீட்டார் வயலட் நிற ஆர்கிட் மலர்கள் தான் வேண்டும் என்று கேட்கவும் அதற்காக அந்த மலர்களைத் தருவித்திருந்தாள் மலர்.

“குட் மார்னிங் மலர்.”

“குட் மார்னிங் சுபா. ஜெனி இன்னும் வரலையா?”

“இன்னைக்குக் கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன்னு நேத்தே சொன்னாளேப்பா.”

“அட ஆமாமில்லை? மறந்து போச்சு.”

“மலர்!”

“சொல்லு சுபா.”

“ஆர்கிட்டை இன்னும் வெளியே எடுக்கலைப்பா. அப்படியே பாக்ஸ்ல தான் இருக்கு.”

“ஆமா சுபா, இருக்கட்டும். எத்தனை மணிக்கு ரவி வருவான்?”

“இன்னும் கொஞ்ச நேரத்துல வரணும் மலர். லேடீஸ் கிளப்புக்கு பொக்கே டெலிவரி பண்ணணும். அதுக்கப்புறமா இந்த ஃப்ளவர்ஸைக் கொண்டு போய் மண்டபத்துல வெச்சிடுவான்.”

“ஓகே… அப்போ நானும் மண்டபத்துக்கு ரவி கூட போயிடுறேன்.”

“இல்லை மலர். உனக்கு மிஸஸ். வத்சலா கூட இன்னைக்கு பத்து மணிக்கு ஒரு அப்பாயின்மென்ட் இருக்கு.”

“அட ஆமாமில்லை. அதை மறந்து போயிட்டேன்.”

“என்னாச்சு மலர்? ஏன் இன்னைக்கு ஒரு மாதிரியா இருக்கே? எல்லாத்தையும் மறந்து போச்சு மறந்து போச்சுன்னே சொல்றே?”

“ஒன்னுமில்லை சுபா. இன்னைக்கு மனசு கொஞ்சம் பரபரன்னு இருக்கு. சொல்லத் தெரியலை. என்னமோ ஒரு மாதிரியா இருக்கு.”

“மலர்… விவேக்கைப் பார்த்தியா?”

“ம்… ஆமா. அவன் வேற காலங்காத்தாலை.”

“சரி விடு.‌.. அவன் சங்கதி தான் நமக்குத் தெரியுமே. பொக்கே ஒன்னு பண்ண வேண்டி இருக்கு. அந்த வேலையை நீ முடிச்சிர்றயா?” எதைச் செய்யச் சொன்னால் மலரின் மனது ஒருநிலைப் படும் என்று புரிந்து வைத்திருந்த சுபா அவளுக்குப் பிடித்தமான வேலையைச் சொன்னாள். சம்மதமாகத் தலையை ஆட்டிய மலர் கடையின் உள்ளே பின்புறமாக நடந்து வந்தாள்.

நல்ல நீளமாக இருந்தது அந்த இடம். பூக்கள் வைக்க, அதைப் பராமரிக்க என்று நிறைய இடம் தேவைப்பட்டதால் தான் இந்த இடத்தைத் தேர்வு செய்திருந்தாள் மலர். இருபத்தி நான்கில் இருந்தாள். இந்தத் தொழிலின் அடி முதல் நுனி வரை அவளுக்கு இப்போது அத்துப்படி. வாய் ஏதோ ஒரு பாடலை முணுமுணுக்க கை அது பாட்டில் வாங்குபவர்கள் ஏற்கனவே தெரிவுசெய்திருந்த பூக்களை அழகுற அடுக்க ஆரம்பித்தது.

வண்ண வண்ணப் பூக்கள் பார்வைக்கும் தொடுகைக்கும் இதம் தர தன்னை மறந்து வேலையில் ஆழ்ந்து விட்டாள் மலர்விழி.

-0-0-0-0-0-0-

நேரம் பத்து மணி. மலர் ஸ்கூட்டியை அந்தத் தெருவில் வளைத்துத் திருப்பினாள். அவர்கள் கொடுத்திருந்த முகவரி அந்தத் தெருவில் தான் இருந்தது.

மிஸஸ். வத்சலா என்று தன்னை அறிமுகப்படுத்தி இருந்தாராம் அந்த அம்மா. இத்தனைக்கும் மலர் அந்தக் காலை அட்டென்ட் பண்ணி இருக்கவில்லை. பேசியது சுபாஷிணி தான். அவர்கள் வீட்டில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் திருமணத்திற்கு பூ அலங்கார வேலைப்பாடு செய்ய வேண்டுமாம்.‌ அதற்காகப் பேச அழைத்திருந்தார்கள்.

ஏரியா பார்ப்பதற்கு நல்ல அழகாக இருந்தது. மேல்தட்டு வர்க்கத்தினரின் வாசஸ்தலங்கள். கொடுத்திருந்த வீட்டு நம்பரின் முன்பாக ஸ்கூட்டியை நிறுத்தினாள் மலர்.

‘நாய் இருக்குமோ!’ யோசனையோடே உள்ளே எட்டிப் பார்த்தாள். ம்ஹூம்… அப்படித் தெரியவில்லை. இவள் கழுத்து வரையிருந்த சுற்று மதில் கூட கலை நயத்தோடு தான் இருந்தது.

“உள்ளே வாம்மா மலர்.” அந்தக் குரலில் கவனம் கலைந்த மலர் கேட்டைத் திறந்தாள். க்ரில் வேலைப்பாடு கொண்ட கேட். அதுகூட அழகாகத்தான் இருந்தது.

வீட்டையே இவ்வளவு தூரம் ரசித்துக் கட்டி இருப்பவர்கள் திருமணம் என்று வரும்போது இன்னும் எவ்வளவு எதிர்பார்ப்பார்கள்! நிச்சயம் தனக்கு வேலை அதிகமாகத்தான் இருக்கும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் மலர்.

“வாம்மா… உள்ளே வந்து உக்காரு.” வாசல் வரை வந்து வரவேற்ற பெண்மணி பார்க்க அசப்பில் ‘எம். குமரன், சன் ஆஃப் மகாலட்சுமி’ பட நதியா மாதிரி இருந்தார். இளமையையும் முதிர்ச்சியையும் சம விகிதத்தில் கலந்தாற் போல ஒரு தோற்றம்.

“இங்க மிஸஸ். வத்சலா எங்கிறது…”

“நான் தாம்மா. நான் தான் உங்க ஷாப்புக்குக் கால் பண்ணி இருந்தேன்.”

“ஓ… அப்படியா ஆன்ட்டி. நான் மலர்விழி.”

“தெரியும்மா, பார்த்திருக்கேன்.”

“அப்படியா! எங்க ஆன்ட்டி?”

“சிட்டியில இருக்கிற வெரி ஃபேமஸ் ஷாப் ஓனர் இப்படிக் கேக்கப்படாது.”

“ஐயையோ! அப்படியெல்லாம் இல்லை ஆன்ட்டி.” சிரித்தபடி திரும்பியவளின் கவனத்தில் பட்டது அந்தப் புகைப்படம்.

கறுப்பு வெள்ளைப் புகைப்படம். ஒரு இளைஞனின் முகம் மட்டும் க்ளோஸ் அப்பில் எடுக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டிருந்தது. உடற்பயிற்சி செய்து முடித்திருப்பான் போலும். முகமெல்லாம் வியர்வை வடிய வித்தியாசமாக இருந்தது அந்த ஃபோட்டோ. ஆனால் மலரால் கண்களை அகற்ற முடியவில்லை. நெஞ்சுக்குள் எதுவோ பிசைந்தது.

“இவங்களுக்குத்தான் கல்யாணமா ஆன்ட்டி?” மனதை வெறுமை சூழ கேட்க வேண்டுமே என்பதற்காகக் கேட்டாள் மலர்விழி.

“இல்லைம்மா…” வத்சலாவின் அந்த ஒற்றை வார்த்தையில் மலரின் உலகில் கலர்க் கலராகப் பூப்பூத்தது.

“இவன் எம் பையன். கல்யாணம் என்னோட அக்கா பொண்ணுக்கு.”

“ஓ… அவங்க வரலையா?”

“அவளுக்கு எல்லாமே சத்யா பண்ணனும். அவன் சரின்னு சொல்லித்தான் மாப்பிள்ளையையே ஓகே பண்ணினான்னா பார்த்துக்கோயேம்மா.” ஏதோ நெடுங்காலம் பழகியவர் போலப் பேசினார் வத்சலா.

“அது யாரு சத்யா ஆன்ட்டி?”

“எம் பையன் தாம்மா.”

“ஓ…” அவள் கண்கள் அவள் சொல் பேச்சுக் கேளாமல் அந்த ஃபோட்டோவை இன்னுமொரு முறை வருடியது.

‘சத்யா…’ மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் மலர். பெயர் அவனுக்கு நன்றாகத்தான் பொருந்தியது.

“இவனும் அவளுக்கு ஏத்த மாதிரித்தான். எம் பொண்ணு மேல கூட அவ்வளவு பிரியம் கிடையாது. ஆனா பெரியம்மா பொண்ணுன்னா எது வேணும்னாலும் செய்வான்.” அவர்கள் குடும்பக் கதையை வத்சலா பேச ஆரம்பிக்க மலர் லேசாக நெளிந்தாள்.

“ஆன்ட்டி… எந்த மாதிரி டிசைன் எதிர்பார்க்குறீங்க? என்னென்ன ஃப்ளவர்ஸ் பிடிக்கும்?” மலர் பேச்சைத் திசை திருப்பினாள்.

“அதெல்லாம் சத்யா தான் முடிவெடுக்கணும்மா. அவன் இன்னைக்கு வர்றேன்னு சொன்னான். அதால தான் உன்னையும் இன்னைக்கு வரச்சொன்னேன் மலர்.”

“பரவாயில்லை ஆன்ட்டி. உங்க பையன்…” அவனை நேரில் ஒரு முறை பார்த்துவிடும் ஆவலில் மலர் கொஞ்சம் தடுமாறினாள். ஆனால் அவள் உள்மனது அவளைக் கேலி பண்ணியது.

‘மலர்! நீதானா இது!? என்ன பண்ணுகிறாய் என்று தெரிந்துதான் நடந்து கொள்கிறாயா?’

“இதோ ஃபோன் பண்ணிப் பார்க்கிறேம்மா. இவ்வளவு நேரத்துக்கு என்ன பண்ணுறான்னு தெரியலையே.” சொல்லியபடியே ஃபோனை எடுத்த வத்சலா மகனை அழைத்தார். ஃபோனை ஸ்பீக்கரில் போட்டவர் மகனின் பதிலுக்காகக் காத்திருந்தார்.

“அம்மா!” அந்த ஆழ்ந்த குரல் மலரைச் சிலிர்க்கச் செய்தது.

“சத்யா! நீ எங்க இருக்கே? ஏன் இன்னும் வீட்டுக்கு வரலை. ஆர்டர் எடுக்கிறதுக்கு ஃப்ளோரிஸ்ட் வீட்டுக்கு வந்திருக்காங்க. கீர்த்தனா என்னடான்னா அண்ணாதான் எல்லாம் செலெக்ட் பண்ணணுங்கிறா. என்னடா இது?”

“அம்மா… நான் வரக் கொஞ்சம் லேட் ஆகும்.”

“என்ன சத்யா நீ?”

“ப்ளீஸ்மா…” அந்தக் குரல் கம்பீரம் குறையாமல் அந்தப்புறம் அம்மாவைக் கெஞ்சியது.

“இது கொஞ்சம் கூட நல்லா இல்லை சத்யா.”

“ரொம்ப நாள் கழிச்சு ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஒன்னு கூடி இருக்கோம். இப்பப் போய் என்னால கிளம்ப முடியாதும்மா. நீங்க வந்திருக்கிறவங்களுக்கு நம்ம ஐடியாவைச் சொல்லிடுங்க. கீர்த்தனாக்கு ஒரு பொக்கே, அதுக்கப்புறம் குட்டிப் பொண்ணுங்களுக்கு ஆளுக்கு ஒன்னு. அதுக்கப்புறம் ‘த்ரோன்’ டெக்கரேஷன். எல்லாம் சொல்லுங்க. நாளைக்குக் காலைல அவங்க ஷாப்புக்கு நானே போய் டிசைனை செலெக்ட் பண்ணிடுறேன். அவங்க ஃப்ரீயான்னு பார்த்துக்கோங்க.”

அம்மாவும் மகனும் பேசிக்கொண்டிருக்க அமைதியாக அமர்ந்திருந்தாள் மலர். வத்சலாவின் முகத்தில் இப்போது மன்னிப்புக் கோரும் பாவம் தெரிந்தது. மலர் புன்னகைத்தாள். இதுவெல்லாம் தொழிலில் சகஜம் தானே.

“சரி… நாளைக்காவது வந்து சேர்ந்திடுவ இல்லை சத்யா?”

“கண்டிப்பாம்மா… நைட்டே வந்திடுவேன்.”

“ஓகே… பை.”

“பை ம்மா.” ஃபோன் சட்டென்று நின்றுபோனது.

“சாரி மலர்.”

“பரவாயில்லை ஆன்ட்டி. உங்க சன் சொன்ன விஷயங்களை நீங்கக் கொஞ்சம் டீடெயிலா சொல்லுங்க. நான் நோட் பண்ணிக்கிறேன்.” அதன்பிறகு தொழிலில் இறங்கி விட்டாள் மலர்.

அடுத்த நாள் காலை பத்து மணிக்கு மீண்டும் ஒரு முன்பதிவைச் செய்து விட்டு எழுந்து கொண்டாள் பெண். எதிரே நான்கு சட்டத்துக்குள் தொங்கிய அந்த முகம் மீண்டும் ஒருமுறை என்னைப் பாரேன் என்றது. கட்டுப்படுத்த முடியாமல் அந்த முகத்தை மெதுவாக வருடியது அவள் பார்வை. நாளை நேரிலேயே பார்க்கலாமே என்ற எண்ணத்தோடு கடையை நோக்கிப் புறப்பட்டாள் மலர். வத்சலாவின் முகத்தில் அழகானதொரு புன்னகைத் தவழ்ந்து கொண்டிருந்தது.

-0-0-0-0-0-0-

நகரத்திலிருந்து நான்கு மணிநேரத் தொலைவில் இருந்தது அந்தக் கிராமம். பசுமைக்குக் குறைவில்லை. வயல் முப்போகமும் விளைந்து நின்றது.

கோவிலை அண்டிய இடத்தில் காதைப் பிளக்கும் ஒலியில் ஸ்பீக்கரில் பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. கோவிலைச் சார்ந்திருந்த பிரதேசம் முழுவதும் கடைகளும் மக்களுமாக நிரம்பியிருந்தது.

தனது புல்லட்டை நிறுத்திவிட்டு இறங்கினான் சத்யன். அந்த கிராமத்தின் கனவு நாயகன். பட்டணத்துவாசி. இருந்தாலும் ரங்கநாயகி பாட்டியின் மேலும் அந்த கிராமத்தின் மேலும் அதீத அன்பு அவனுக்கு. சேர்ந்தாற் போல இரண்டு நாட்கள் லீவு கிடைத்தால் ஓடி வந்து விடுவான். பாட்டி வீட்டில் அவனுக்கென்று தனியாக ஒரு புல்லட் அவன் பாவனைக்காக எப்போதும் நிற்கும். இது ரங்கநாயகியின் ஏற்பாடு. பேரன் என்றால் அவருக்குமே அவ்வளவு பாசம். ஓங்கி உயர்ந்து ஆண்மையின் இலக்கணமாக, தன் கணவரின் வாரிசாக நிற்கும் பேரனுக்கு இந்த ஊரிலேயே ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது அவர் கனவு.

“ஹேய் சத்யா வந்தாச்சுடா.” வேஷ்டி சரசரக்க ஒரு இளைஞர் பட்டாளமே சத்யாவை வந்து சூழ்ந்து கொண்டது. சத்யாவுமே வேஷ்டி சட்டையில் தான் வந்திறங்கி இருந்தான்.

கடந்து இரண்டு நாட்களாக சத்யனின் ஜாகை பாட்டியின் ஊரில்தான். கோவில் திருவிழா நடக்கின்றது. பாட்டியின் ஊர் திருவிழா சத்யன் இல்லாமலா? தொழிலைத் தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டுக் கிளம்பி விட்டான் சத்யா.

பாட்டி என்றால் அப்பா லோகேந்திரனின் அம்மா. லோகேந்திரன் ஒரு பெரிய தனியார் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பெரிய படிப்புப் படித்திருந்த தன் மகனுக்கு பட்டணத்தில் பெண் பார்த்துத் திருமணம் முடித்து வைத்திருந்தார் ரங்கநாயகி. அது எத்தனைப் பெரிய தவறு என்று பிற்பாடுதான் அவருக்குப் புரிந்தது.

வத்சலாவைக் குறைச் சொல்ல முடியாது, நல்ல பெண்தான். ஆனால் இந்தக் கிராமத்து வாசம் நகரில் பிறந்து வளர்ந்த அவருக்கு அத்தனைத் தோதாக இருக்கவில்லை. அடிக்கடி வந்து போக மாட்டார். மகனுக்கும் ஓயாத வேலை. லீவு கிடைப்பது அரிது.

மருமகளைப் போலவே பேத்தி சஹானாவும் அதிகம் கிராமத்தை விரும்புவதில்லை. ஆனால் சத்யன் தலைகீழ். இந்தக் கிராமம் என்றால் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். பாட்டிக்கும் பேரன் என்றால் அவ்வளவு பிடிக்கும். அவனை ஊரோடு கட்டிப்போடத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.

“மச்சான்… ஜல்லிக்கட்டு எத்தனை மணிக்குடா ஆரம்பிக்குது?”

“அது எத்தனை மணிக்கு வேணும்னாலும் ஆரம்பிக்கட்டும். நீ எத்தனை மணிக்கு சத்யா ஊருக்குக் கிளம்புறே?”

“டேய்! கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கடா.”

“வேணாம் மச்சான்… பாட்டி எங்களைக் கொன்னு போட்டுடும். நீ நடையைக் கட்டு.”

“அடிப் பின்னிடுவேன். சத்யா இல்லாம ஜல்லிக்கட்டா? அடுத்த மாசம் பெரியம்மா பொண்ணு கல்யாணம். வேலைத் தலைக்கு மேல கிடக்கு. அத்தனையையும் விட்டுட்டு இங்க வந்து நிக்குறேன். இவனுங்க என்னடான்னா என்னைக் கிளப்புறதுலேயே குறியா இருக்கானுங்க.”சொல்லியபடியே சன் கிளாஸைக் கழட்டினான் சத்யா. கும்பலாகப் பெண்கள் சிலர் இவர்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

ஹேய் ஓடக்கார மாரிமுத்து… ஓட்ட வாய் மாரிமுத்து… ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க சௌக்கியமா?

சத்யா சத்தமாகப் பாட கூடி நின்ற அத்தனை இளைஞர்களும் ஜொள்ளு விட்டார்கள்.

“ஆமா… என்னோட பட்டணத்து மாமாவுக்கு எப்பவுமே குசும்பு தான். வயசுப் பொண்ணுங்க எல்லாரும் சவுக்கியமாத்தான் இருக்கோம். ஆனா நின்னு திரும்பிப் பார்க்கத்தான் தைரியம் இல்லை. பார்த்தா உங்கப் பாட்டி கண்ணை நோண்டிப்புடும் இல்லை?” கிராமத்துத் தைரியமொன்று சத்யனை வம்பிழுத்தது.

“அடப் போ புள்ளே! பாட்டியைப் பத்தி நீ ஏன் கவலைப்படுறே? நின்னு ரெண்டு வார்த்தை ஆசையாப் பேசு. அந்தக் கெழவியை ஓரங்கட்டிட்டு பெரிய வீட்டுச் சாவியை உன்னோட இடுப்புல சொருகுறேன்.” பக்கா கிராமத்தானாக மாறி பதில் சொன்னான் சத்யன். ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இளவட்டங்கள் அனைத்தும் இப்போது மலர்ந்து சிரித்தது.

“ஆமா… மாமாவுக்கு ஆசையைப் பாரு. ஆசையா ரெண்டு நாள் பேசிட்டு டவுனுக்குப் போயிடுவாங்க. அந்தப் பெரிய வீட்டுக் கெழவியை யாரு சமாளிக்கிறது? தோலை உரிச்சுப்புடுவாங்களே?” இது இன்னொரு குரல்.

“நீ சரின்னு சொல்லிப் பாரு புள்ளை. மாமன் டவுனு வேலையை விட்டுட்டு வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு வயக்காட்டுல இறங்குறேன்.”

“முதல்ல ஜல்லிக்கட்டுல இறங்குங்க மாமோய்! அதுக்கப்புறமா வயக்காட்டுல இறங்கலாம்.” கொல்லென்று சிரித்தபடி கலர் கலர் தாவணிகள் நகர்ந்து போய்விட்டது. சத்யன் வாய்விட்டுச் சிரித்தான். இந்த இனிமைகளுக்காகத் தானே அவன் இங்கே வருவது. கள்ளங் கபடமில்லாத இந்தப் பாசம் அவனுக்கு நிரம்பவே பிடிக்கும்.

“வேணாம் சத்யா.” மாதவன் தடுத்தான். ஊரில் மாதவன் தான் அவனுக்கு வெகு நெருக்கம்.

“சும்மா இரு மாதவா. இன்னைக்கு ஒரு கைப் பார்த்திடுவோம்.” வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் களத்தில் குதித்து விட்டான் சத்யன். ஊரே கூடி நின்று வேடிக்கைப் பார்த்தது.

கொம்பு சீவி விடப்பட்டிருந்த காளை அந்தக் கட்டிளங் காளையை முறைத்துப் பார்த்தது. சத்யன் சட்டையைக் கழட்டி மாதவனிடம் வீசினான். உடற்பயிற்சி செய்து முறுக்கேறியிருந்த அவன் புஜங்கள் புடைத்துக் கொண்டன.

“பட்ணத்து மாமோய்! பத்திரம், பார்த்து சூதானமா இருந்துக்கோங்க.” எங்கிருந்தோ ஒரு குரல் வர விசில் சத்தம் கிளம்பியது. அந்த இடமே அதிர்ந்து கொண்டிருந்தது.

நான்கு புறமும் கயிற்றால் தடைகள் போடப்பட்டிருக்க அந்தக் காளை சத்யனைப் பார்த்து உறுமிக் கொண்டிருந்தது. மாதவனுக்கு வயிற்றைப் பிசைந்தது. இது ஒரு தொல்லை சத்யனிடம். எல்லாவற்றிலும் ஆர்வமாகப் பங்கெடுத்துக் கொள்வான். ஆனால் இவனுக்கு ஒன்றென்றால் அவன் பாட்டி இவர்களை வகுந்து விடுவார்.

“டேய் சத்யா! வேணான்டா.” கயிற்றுக்கு வெளியே இருந்தபடி கத்தினான் மாதவன்.

“அடச்சீ வாயை மூடு. எத்தனைப் பொண்ணுங்க சுத்தி வர நிக்குது. இப்போப் போய் வான்னு கூப்பிடுற.” பிடிவாதமாக நின்ற சத்யனை நெருங்கியது காளை.

முதற் பாய்ச்சலிலேயே சத்யனின் தோளை லேசாகக் கீறியது கொம்பு. சிராய்ப்பாக இருக்க அந்த இடத்தில் கொஞ்சமாக ரத்தம் கசிந்தது. இதுவரைக் கைக் கொட்டிச் சிரித்த பெண்கள் கூட மெதுவாக அடங்கி விட்டார்கள்.

இரண்டாவது பாய்ச்சலில் சத்யனை ஒரு புரட்டுப் புரட்டியது காளை. பட்டணத்துக் காளை இப்போது கொஞ்சம் திணறினான். இன்னுமொரு முறை அந்த முரட்டுக்காளை சத்யனை இழுத்து வீச சத்யனின் நெற்றியில் லேசான காயம் பட்டது. ஆனால் அடுத்த முறை சத்யன் விடவில்லை. காளையின் கழுத்தை தோதாகப் பற்றிக் கொண்டான். காளை திமிறும் முன்பாக அதன் கழுத்தை வளைத்து நிலத்தோடு மோத திமிறக்கூட முடியாமல் அடங்கிப் போனது அந்த ஜீவன்.

ஆண்களின் கூச்சலை விட பெண்களின் சத்தமே அதிகமாக இருக்க நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வெளியே வந்தான் சத்யன். உடம்பெல்லாம் மண் ஒட்டி இருந்தது. நெற்றியிலிருந்து லேசாக வடிந்த ரத்தத்தை மாதவன் துடைத்து விட்டான்.

“எதுக்குடா சத்யா இந்த விஷப் பரீட்சை? பாட்டி பார்த்தா நீ தொலைஞ்சே.”

“அதை விடு. சுத்திவரப் பாரு. அத்தனைப் பட்சிங்க கண்ணும் இந்த மாமன் மேலத்தான் மாதவா.” சிரிப்போடே சத்யன் சொல்ல மாதவனும் சிரித்தான்.

“ஏன்டா? டவுனுல நீ பார்க்காத பொண்ணுங்களாடா சத்யா?”

“என்னதான் நாகரிகமா அங்கப் பார்த்தாலும் பாவாடை தாவணியில இருக்கிற சுகமே தனிதான்டா.”

“அப்போப் பேசாம பாட்டியை இங்கேயே பொண்ணு பார்த்திடச் சொல்லலாமா?”

“சொல்லிட்டாப் போச்சு. வா… வீட்டுக்குப் போகலாம்.”

“ஐயையோ! நான் வரமாட்டேன். இந்தக் கோலத்துல உன்னைப் பாட்டி பார்த்துச்சு… உன்னை விட்டுட்டு எம்மேல தான் பாயும். நீ பஸ்ஸூக்குப் போறப்போ சொல்லு. அங்க நான் வர்றேன்.”

“சரிடா மச்சான்.” சத்யன் புல்லட்டில் ஏற அவனைக் கடந்தது முன்பு அவனைக் கலாய்த்த தாவணிக் கூட்டம்.

“பார்த்தீங்களாடீ எம் மாமனோட வீரத்தை! ஏன் மாதவன் சார்… பேசாம உங்கக் கூட்டாளியை என்னைக் கட்டிக்கிடச் சொல்லுங்களேன்.” வலிய வம்புக்கு வந்தது ஒரு பட்சி.

“ஏம்மா… உன்னோட மாமன் என்னோட கூட்டாளிக்கிட்ட வம்புக்கு வர்றதுக்கா?” இது மாதவன்.

“அப்போ நான் சரிப்பட்டு வருவேனா? எனக்கு எந்த மாமனும் இல்லையே மாதவன் சார்.” மாதவன் அந்த ஊர் பள்ளிக்கூடத்தில் வாத்தியார் வேலை பார்ப்பவன். பெரிய படிப்புப் படித்த அவனை எல்லோரும் ‘சார்’ என்றுதான் அழைப்பார்கள்.

“அடிங்! அதை எங்கிட்ட நேரடியாக் கேக்காம எதுக்கு ஊடால மாதவன் சார்.” புல்லட்டில் ஏறி உட்கார்ந்திருந்த சத்யன் இறங்குவது போல பாவ்லா காட்டவும் அத்தனைப் பெண்களும் கலகலவெனச் சிரித்தபடி ஓடியே போய்விட்டார்கள். மாதவனும் சத்யனும் கூட சிரித்துக் கொண்டார்கள்.

“கிளம்பு சத்யா. இந்நேரத்துக்குப் பாட்டிக்குத் தகவல் போயிருக்கும். கொதிச்சுப் போய் உக்காந்திருப்பாங்க. செத்தடா நீ.” மாதவன் சொல்ல இப்போது சத்யனும் சிரித்தான்.

வீட்டிற்குள் புல்லட் நுழையும் முன்பே வாசலுக்கு வந்து விட்டார் ரங்கநாயகி. கண்கள் பேரனின் தோளையும் நெற்றியையும் ஆராய்ந்தது. தனக்கு முன்பாகவே மின்னல் வேகத்தில் செய்தி வந்துவிட்டது என்று புரிந்தது சத்யனுக்கு.

“என்ன பாட்டி? வாசலுக்கே வந்தாச்சா?” கேட்டபடி புல்லட்டை விட்டுப் பேரன் இறங்க, பாட்டியின் கண்ணசைவில் ஆரத்தித் தட்டு வந்தது. அதை வாங்கிய ரங்கநாயகி கடுகடுத்த முகத்துடனேயே பேரனுக்கு திருஷ்டி கழித்தார். வந்த புன்னகையை சத்யன் விழுங்கிக் கொண்டான். திரும்பி உள்ளே போக முயன்ற பாட்டியின் கழுத்தைக் கட்டிக் கொண்டான் இளையவன்.

“என்ன பாட்டி? எம்மேல கோபமா இருக்கீங்களா?”

“பேசாத சத்யா. நான் ரொம்பக் கோபமா இருக்கேன்.”

“ஏன் பாட்டி?”

“இது உனக்குத் தேவையாடா? ஒன்னு கிடக்க ஒன்னு ஆனா உங்க அம்மாக்கும் அப்பாக்கும் யாரு பதில் சொல்றது?”

“என்ன பாட்டி இப்படிப் பொசுக்குன்னு சொல்லிட்டே? உம் பேரன் மேல உனக்கு நம்பிக்கையே இல்லையா?”

“நான் என்ன பேசுறேன் நீ என்ன சொல்றே சத்யா?”

“பாட்டி அதை விடுங்க… இன்னைக்கு ஊர்ல இருக்கிற அத்தனைப் பட்சிங்க கண்ணும் ஐயா மேல தான் தெரியுமா?” எதைச் சொன்னால் பாட்டியின் கவனத்தைத் திருப்ப முடியும் என்று தெரியாதவனா சத்யன்!?

“ஏன் சத்யா? பாட்டி உனக்கு கிராமத்துலேயே ஒரு பொண்ணைப் பார்க்கட்டுமா?” ஆசையாகக் கேட்டார் ரங்கநாயகி.

“உங்க இஷ்டம் பாட்டி. நீங்க கேட்டு நான் இல்லைன்னா சொல்லப்போறேன்.” சத்யா அன்று என்ன மனநிலையில் இருந்தானோ! பாட்டி கேட்கவும் சட்டென்று பதில் சொல்லி விட்டான். ரங்கநாயகிக்கு வாயெல்லாம் பல்லாகிப் போனது.

“நெசமாத்தான் சொல்றியா? நம்ம மாதவனோட பள்ளிக்கூடத்துல வேலை பார்க்குற அந்த டீச்சர் பொண்ணைக் கேட்டுப் பார்க்கட்டுமா?” பாட்டியின் வேகத்தில் பேரன் மிரண்டு போனான்.

“பாட்டி… முதல்ல கீர்த்தனா கல்யாணம் நல்லபடியா முடியட்டும். அதுக்கப்புறமா அந்த டீச்சரைப் பார்க்கலாம்.” மெதுவாகக் கழன்று கொண்டான் பேரன்.‌

காலம் வகுக்கும் கணக்கை இங்கு அறிபவர் யார்? பேரனுக்குப் பெண் பார்க்கும் கனவில் பாட்டி இருக்க டவுன் பஸ்ஸைப் பிடிக்கக் கிளம்பிக் கொண்டிருந்தான் சத்யன்.