RojaPoonthottam-6

குமுதா அத்தையின் வீட்டுக்குப் பின்னால் இருந்த அந்தச் சின்னத் தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள் மலர்விழியும் குமுதாவும். மலரின் வெறித்த பார்வையைப் பார்த்த போது குமுதாவிற்குச் சங்கடமாக இருந்தது.

குமுதா நெடுநாட்களாக அந்தக் காலனியிலேயே வசிக்கும் பெண்.‌ சித்ரலேகா மனம்விட்டுப் பேசும் ஒரே நபர் என்றால் அது குமுதாதான். இரண்டு பேருக்குள்ளும் ஒரு ஆழ்ந்த நட்பு உண்டு.

“என்னால எதையுமே நம்ப முடியலை அத்தை.‌ சத்யா சொன்னப்போ நான் ஆடிப்போயிட்டேன்.”

“ஏன் மலர்?”

“அத்தை!”

“நீ ஆடிப்போற அளவுக்கு அப்படி என்ன நடந்து போச்சு மலர்? உங்கம்மா ஒரு காலத்துல காதலிச்சா. அதைத் தப்புன்னு நினைக்கிறியா?”

“ஐயையோ! அப்படி இல்லை அத்தை.” மலர் பதறிப் போனாள்.

“மலர்… இப்போதான் நீ ரொம்பவே நிதானமா இருக்கணும். உங்கம்மாவை நீ எந்த வகையிலையும் காயப்படுத்திடக் கூடாது.”

“என்ன அத்தை இப்படிப் பேசுறீங்க. நான் எப்படி அம்மாவைக் காயப்படுத்த முடியும்?”

“உன்னால முடியாதுதான். ஆனா சூழ்நிலை எப்படி மாறிப் போகும்னு யாருக்கும் தெரியாது. பாவம்டி மலர் அவ. வாழ்க்கையில அப்படி அவ என்னத்தை அனுபவிச்சுட்டா?”

“அத்தை… அப்பா…”

“இல்லையில்லை… அவர் தப்பான மனுஷன் கிடையாது. பெரிய குடும்பம். இவருக்குக் கீழ மூனு தங்கைங்க. மூத்த பையன். பொறுப்புகள் ஜாஸ்தி. போதாக்குறைக்கு உங்கப் பாட்டி மகனை அவங்க கன்ட்ரோல்ல தான் வெச்சிருந்தாங்க.”

“………..”

“உங்கம்மா அப்போ இன்னும் கிளியாட்டம் அழகா இருப்பாளா? உங்கப் பாட்டிக்குப் பயம். எங்கப் பையன் தன்னோட பொண்ணுங்களை ஒப்பேத்ததாம பொண்டாட்டி பின்னோட போய்டுவானோன்னு.”

“அப்பா ஒன்னும் சொல்லமாட்டாங்களா?”

“ம்ஹூம்… அம்மா சொன்னதுதான் வேத வாக்கு. இந்த வீடு உங்கத் தாத்தாவோடது. கல்யாணம் பண்ணின புதுசுல உங்கப்பா ஒருதரம் இங்க வந்திருக்காரு. அதுக்கப்புறமா நீ பொறந்தப்போ ஒருதரம் அவர் வந்து பார்த்திருக்கேன்.”

“ஏனப்படி அத்தை? நல்ல நாள் பண்டிகைன்னா மாமனார் வீட்டுக்கு வரமாட்டாங்களா?”

“ஒருவேளை மனசுல உங்கப்பாக்கு அப்படியெல்லாம் ஆசை இருந்திருக்குமோ என்னமோ! ஆனா அந்த மகராசி தன்னோட மகனை அப்படி இப்படி அசைய விடமாட்டா. மகனை அப்படியே சாறு புழிஞ்சு எடுத்தா. அவளோட பொண்ணுங்க நல்லா இருக்கணும். உங்கம்மா ஊரான் வீட்டுப் பொண்ணு தானே?”

“அதுக்காக? பொண்டாட்டி மேல பாசம் இருக்காதா அத்தை?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது மலர். ஒருவேளை தனியா இருக்கும் போது பாசமா இருந்தாரோ என்னவோ? ஆனா உங்கம்மா சந்தோஷமா இருந்து நான் பார்க்கலைடி.”

“என்ன மாதிரியான வாழ்க்கை அத்தை இது?” இதை மலர் கேட்டபோது குமுதா ஒரு பெருமூச்சு விட்டார்.

“இந்த ஏரியாவுலயே உங்கம்மா தான்டி அழகு. அத்தை வீடுங்கிறதால இங்க நான் அடிக்கடி வருவேன். அப்போ இருந்தே உங்கம்மா எனக்குப் பழக்கம். காலேஜ்ல சேர்ந்தப்போ ஜாடைமாடையா ஒருதரம் அந்த ஞானபிரகாஷைப் பத்திச் சொன்னா. ஆனா என்ன ஆச்சுன்னு தெரியலை. அவங்க வீட்டுல அது தெரிய வந்து அவங்க அப்பா உங்கத் தாத்தாக்கிட்ட வந்து சத்தம் போட்டிருக்காரு. பெரிய வசதியான குடும்பம். அவங்களோட மோத இவரால முடியுமா? சட்டுன்னு வந்த வரனுக்குக் கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டாரு.”

“அப்பாக்கு எப்படி இப்படி ஆச்சு?”

“என்னன்னு தெரியலை. ஒரு நாள் நெஞ்சைப் பிடிச்சிக்கிட்டு விழுந்தவர் தான். அதுக்கப்புறமா எழும்பவே இல்லை. ரெண்டு பொண்ணுங்களுக்குக் கல்யாணம் பண்ணிக் குடுத்திருந்தாரு. மூனாவதுக்கு ஒன்னும் பண்ணாமப் போயிட்டானேன்னு உங்கப்பா கம்பெனியில குடுத்தத் தொகையைப் பறிச்சிக்கிட்டுத்தான் விட்டுது அந்த அம்மா.”

“இப்படியும் மனுஷங்க இருப்பாங்களா அத்தை?”

“உங்கத் தாத்தா ஒடைஞ்சு போயிட்டார். காசு பணம் முக்கியம் இல்லை. எம் பொண்ணு நிம்மதியா இருந்தா அதுவே போதும்னு இங்கே உங்களைக் கூட்டிக்கிட்டு வந்துட்டார்.”

இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். அம்மா பெரிதாக ஒரு வாழ்க்கை வாழவில்லை என்று மலருக்குத் தெரியும். ஆனால் இந்த அளவு எதிர்பார்த்திருக்கவில்லை. வாழ்க்கையின் கோரங்களைக் கேட்ட மாத்திரத்தில் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

“ஆனா உங்கத் தாத்தாவை மெச்சணும். ஆரம்பத்துல மனுஷன் நொறுங்கிப் போயிட்டாருதான். ஆனா அப்படியே நின்னுரல்லை. யார் யாரையோ கையைக் காலைப் புடிச்சு உங்கம்மாக்கு ஒரு வேலையை வாங்கிக் குடுத்துட்டார். காலேஜும் முழுசா முடிக்கலை. இருந்தாலும் கிடைச்ச அந்த வேலையை ஆதாரமாப் புடிச்சு உங்கம்மா படிப்படியா மேல வந்துட்டா. தாத்தா பாட்டி உன்னைப் பார்த்துக்கிட்டாங்க. இவ அவளோட படிப்பையும் பார்த்துக்கிட்டு வேலைக்கும் போனா. வாழ்க்கை அப்படியே ஓடிடுச்சு மலர்.”

“அதுக்கப்புறமா அப்பாவோட சொந்தம்னு யாரும் வரலையா?”

“இங்க என்ன இருக்கு மலர் புடுங்க? வந்தா உங்களுக்கு அவங்க தானே குடுக்கணும்?”

“நான்… என்னைப் பார்க்க வரலையா அத்தை?” திணறியபடி மலர் கேட்க குமுதா கசப்பாகச் சிரித்தார்.

“ஒருவேளை நீ பையனாப் பொறந்திருந்தா வந்திருப்பாங்களா இருக்கும். பொண்ணாப் பொறந்துட்டியே!”

“ஓ…”

“அவங்க இப்படியொரு உறவு இருக்கிறதையே மறந்து போயிருப்பாங்களா இருக்கும். இல்லைன்னா நீங்க இப்பக் கொஞ்சம் தலை நிமிர்ந்திருக்கிறதைப் பார்த்தா ஓடி வந்திருவாங்க.”

“வந்திருவாங்களா? இல்லை வந்திருவாங்களான்னு கேக்குறேன். வகுந்திரமாட்டேன். எங்கம்மாவை நிம்மதியா வாழ விடாமப் பண்ணிட்டு…” மேலே பேச முடியாமல் மலருக்கு ஆத்திரத்தில் கண்களில் நீர் முட்டியது.

“அமைதியா இரு மலர். இவ்வளவு காலமும் நீ உங்க அப்பாவைப் பத்திக் கேட்டப்போ நான் எதுவும் சொன்னதில்லை. ஆனா நிலைமை இப்போ அப்படி இல்லை. நீயும் வளர்ந்துட்டே. உனக்கும் உன்னச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியணும். அதால தான் எல்லாத்தையும் சொன்னேன். இப்பவும் இதெல்லாம் உனக்குத் தெரிஞ்சா மாதிரி உங்கம்மாக்கிட்டக் காட்டிக்காதே.”

“அம்மா ஏதாவது பேசினாங்களா அத்தை?”

“ம்… கல்யாணத்துக்குப் போய் வந்த அடுத்த நாள் இங்க வந்து எல்லாத்தையும் எங்கிட்டச் சொன்னா. சொல்லிட்டு அழுதா மலர்.”

“ஏன் அழுதாங்க?”

“விதியை நினைச்சு அழுதாம்மா.”

“அத்தை…”

“மலர்… நீ இப்போச் சின்னப் பொண்ணு கிடையாது. தனியா நின்னுத் தொழில் பண்ணுற.‌ நாலு மனுஷங்களோட பழகுற. நிதானமா யோசி. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதே. நீ எந்த முடிவு எடுத்தாலும் அது சரியா இருக்கும்னு நான் நம்புறேன். உங்கூட இந்த குமுதா அத்தை எப்பவும் துணையா நிப்பேன். அதை மறந்துடாதே.” உறுதியாக வந்து விழுந்த அந்த வார்த்தைகளில் மலருக்கு லேசாக தைரியம் பிறந்தது. யோசிக்க ஆரம்பித்தாள். இளையவள் தோளில் ஆதரவாகத் தட்டிவிட்டு உள்ளே போனார் குமுதா.

-0-0-0-0-0-0-0-

அந்த ‘ரேஞ்ச் ரோவர்’ வீட்டின் முன்பாக வந்து நிற்க அதிலிருந்து இறங்கினார் ஞானபிரகாஷ்.‌ நேரம் நண்பகல் பன்னிரெண்டைத் தாண்டிக் கொண்டிருந்தது. அணிந்திருந்த சன் கிளாஸைக் கழட்டி வாகனத்திற்குள் வைத்தவர் வீட்டின் காலிங் பெல்லை அடித்தார்.

இதுவரை ஏ சியில் இருந்த உடல் அந்தக் கொளுத்தும் வெயிலுக்குச் சற்று வாடியது.

“யாரது?” கேட்டபடியே வந்து கதவைத் திறந்த சித்ரலேகா திகைத்துப் போனார். அப்போது அங்கே இந்த மனிதரை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. சமையலில் மும்முரமாக நின்றிருந்தவர் தூக்கிச் சொருகிய புடவையில் ஒரு கையில் அகப்பையும் இன்னொரு கையால் நெற்றியைத் துடைத்தபடி வந்து நின்றிருந்தார்.

“என்ன? விட்டா அகப்பையாலயே அடி விழும் போல இருக்கு?” குறும்பாக அவர் கேட்ட பிறகுதான் சித்ரலேகாவிற்குத் தான் நின்றிருந்த கோலம் ஞாபகம் வந்தது. சட்டென்று அகப்பையைப் பின்னால் மறைத்தவர் சொருகியிருந்த புடவையையும் சரிசெய்து விட்டார்.

“பிரகாஷ்!”

“உள்ள வரலாமா?”

“வாங்க… வாங்க.” அழைத்தாலும் அந்தக் குரலில் தயக்கமிருந்ததை ஞானபிரகாஷ் கவனித்துக் கொண்டார்.

“என்ன சமையல்? வாசனை தூள் பறக்குது. மீன் குழம்பா?”

“ஆமா…”

“என்ன மீன்?”

“ஆங்…”

“என்ன மீன்னு கேட்டேம்மா.” அந்தச் சின்னஞ்சிறு வீட்டை இன்னும் சிறியதாக்கிக் கொண்டு இயல்பாக உள்ளே வந்தார் மனிதர்.

“விரால் மீன்.”

“அட்ராசக்க! அப்போச் சரியான நேரத்துக்குத்தான் வந்திருக்கேன். சமையல் ஆச்சுதா?” கேட்டபடியே அங்கிருந்த டைனிங் டேபிளில் போய் அமர்ந்தார் ஞானபிரகாஷ்.

“என்ன…” கேட்டபடியே பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்த சித்ரலேகாவை விசித்திரமாகப் பார்த்தார் மனிதர்.

“லேகா! அப்படியென்ன கேட்டுட்டேன்னு இந்த முழி முழிக்கிற? ஒரு வேளை சோறு எனக்குப் போட நீ இவ்வளவு யோசிக்கணுமா என்ன?”

“ஐயையோ பிரகாஷ்! அப்படியெல்லாம் இல்லை. இதோ…” என்றவர் ஓடிப்போய் ஒரு ப்ளேட்டை எடுத்துக்கொண்டு வந்து அவர் முன் வைத்தார்.

“கையை வாஷ் பண்ணணுமே.”

“அங்க இருக்கு பாத்ரூம்.‌ போய் வாஷ் பண்ணுங்க.”

“ஒகே.”

“அப்பளம் இனித்தான் பொரிக்கலாம்னு இருந்தேன். கொஞ்சம் வெயிட் பண்ணுறீங்களா?”

“தாராளமா.” மனிதர் ஏதேதோ அர்த்தங்களில் சொல்ல, அது எதையும் புரிந்து கொள்ளாமல் கிச்சனுக்குள் ஓடினார் சித்ரலேகா.

ஞானபிரகாஷின் கண்கள் வீட்டை ஒரு முறை வலம் வந்தது. பழைய வீடு. மிகவும் சின்னதாக இருந்தது. அம்மாவிற்கும் மகளிற்கும் தாராளம்தான். ஆனால் பார்க்க அழகாக இருந்தது. அவளைப் போல.

பாத்ரூமைத் திறந்தார் ஞானபிரகாஷ். புதிதாகக் கட்டி இருப்பார்கள் போலும். அனைத்து வசதிகளோடும் இருந்தது. மனதுக்குள் ஆயிரம் சிந்தனைகள் வந்து முட்டி மோதின.

இவர்கள் குடும்பம் நல்ல வசதியான செல்வாக்கான குடும்பம். மூத்தவர் அகத்தியனுக்கே அவ்வளவு பிரமாதமாகக் கல்யாணம் பண்ணிப் பார்த்தார் இவர் அப்பா. அதற்கடுத்தாற் போல கண்மணிக்கும். பெரிய வீட்டு சம்பந்தங்களைத்தான் தேடிப் பிடித்திருந்தார்.

ஞானபிரகாஷ் சம்பந்தமாகப் பிரச்சனை வந்தபோது அதற்கு மேல் மனிதர் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை. அதற்குள்ளாக வத்சலாவிற்கு நல்ல மாப்பிள்ளை வரவே அப்பா அந்தக் கல்யாணத்தை முடித்து வைத்துவிட்டார்.

பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல சொத்துப் பத்துகளை எழுதி வைத்தவர் ஞானபிரகாஷிற்கு என்று பெரிதாக எதுவும் செய்திருக்கவில்லை. தன் சொல் கேளாப் பிள்ளை குலத்துக்கு இழுக்கு என்பது அவர் எண்ணம்.

நகரத்துக்கு அப்பால் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவர்கள் பூர்வீக வீடுதான் ஞானபிரகாஷிற்கு என்று வந்தது. தொட்டிக்கட்டு வீடு. அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் என்று குடும்பமாக வாழ்ந்த வீடு. அம்மாவும் அப்பாவும் ஒன்றன் பின் ஒன்றாகப் போய் சேர்ந்த பிறகு இப்போது ஞானபிரகாஷ் மட்டும் தனியாக அங்கு இருக்கிறார். வேலைக்கு ஆட்கள் உண்டு. அதனால் எந்த சௌகர்யக் குறைச்சலும் இல்லை.

“பிரகாஷ்!” சித்ரலேகாவின் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தார் ஞானபிரகாஷ்.

“இதோ வந்தர்றேன்.” குரல் கொடுத்தபடி கையையும் முகத்தையும் கழுவியவர் அங்கிருந்த டவலில் முகத்தைத் துடைத்துக் கொண்டார். மெல்லியலாளின் அன்றைய வாசத்தை இன்றும் அந்த டவளில் நாசி உணர்ந்தது.

“இந்தாங்க டவல்.” வெளியே வந்தவரிடம் பெண் நீட்ட அழகாகச் சிரித்தார் மனிதர்.

“ஓ! அது என்னோட டவல். யூஸ் பண்ணினது.”

“பரவாயில்லைம்மா, சாப்பாடு ரெடியா?” மனிதர் சாப்பாட்டிலேயே குறியாக இருந்தார்.

“ஆமா… வாங்க.” அவரை உட்கார வைத்துப் பார்த்துப் பார்த்துப் பரிமாறினார் சித்ரலேகா.

“நீங்க வருவீங்கன்னு தெரியாது. இல்லைன்னா ஸ்பெஷலா ஏதாவது பண்ணி இருப்பேன்.”

“அதனால என்ன? இன்னொரு நாள் வர்றேன். ஆமா, அது என்ன?”

“பாவக்காய் பொரியல். சாப்பிடுவீங்களா?”

“நீ நஞ்சைக் குடுத்தாலே நான் ஆசையாச் சாப்பிடுவேன், பாவக்காய் ஒரு மேட்டரா? போடு போடு.” சிரித்துக்கொண்டே அவர் சொல்ல அங்கிருந்த சின்ன டவலால் ஒரு அடி போட்டார் சித்ரலேகா.

“சித்ரா!” வாசற்புறம் சத்தம் கேட்கவே இரண்டு பேரும் திரும்பிப் பார்த்தார்கள். வந்தது குமுதா. உள்ளே வந்தவர் புதிய மனிதரைக் காணவும் அங்கேயே நின்று விட்டார். அவர் இதுவரை ஞானபிரகாஷைப் பார்த்ததில்லை.

“வா குமுதா.”

“இல்லை… வெளியே வாகனம் நின்னுதா…‌ அதான் யாருன்னு பார்க்கலாம்னு வந்தேன்.”

“குமுதா… இவங்க தான் ஞானபிரகாஷ்.”

“அப்படியா! வணக்கம் அண்ணா.” வாய் நிறையப் புன்னகையோடு வணக்கம் வைத்த பெண்ணை ஞானபிரகாஷும் பார்த்ததில்லை. ஆனால் லேகா வாய்வழி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறார். காலங்கடந்த அறிமுகம் தான். இருந்தாலும் சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள்.

“சாப்பிடுங்க, நான் அப்புறமா வர்றேன். மலரும் இருக்க மாட்டா. சித்ரா தனியா இருப்பாளே… யாரோ என்னவோன்னு பார்க்கத்தான் ஓடி வந்தேன்.” அந்தக் குரலில் உண்மையான அக்கறை தெரிய ஞானபிரகாஷ் தலையாட்டினார். குமுதா போய் விட்டார்.

“அந்தக் குமுதாவா லேகா இது?”

“ம்…”

“அத்தைப் பையனையே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களோ?”

“ஆமா.”

“குடுத்து வெச்சவங்க. ஆசைப்பட்ட வாழ்க்கை வாழுறாங்க.”

“இன்னும் கொஞ்சம் குழம்பு ஊத்தட்டுமா பிரகாஷ்?” பேச்சை மாற்றினார் சித்ரலேகா. அவரும் அதன்பிறகு எதுவும் பேசவில்லை. அந்தப் பெண் பார்த்துப் பார்த்துப் பரிமாற வயிராற உண்டு முடித்தார்.

“சமைச்சதெல்லாம் நானே சாப்பிட்டு முடிச்சிட்டேனோ?” நாசூக்காக ஏப்பம் விட்டபடி அவர் கேட்க சித்ரலேகா சிரித்தார்.

“இல்லையில்லை… வழக்கமா சமைச்சா ரெண்டு நாளைக்கு இருக்கும். இன்னைக்கு அளவா இருக்கும்.”

“அப்போ இந்த வீட்டுக்கு அடிக்கடி என்னோட சேவை… தேவை. இல்லை லேகா?” விளையாட்டாக ஞானபிரகாஷ் கேட்க சித்ரலேகாவும் சிரித்தார்.

“நீ சாப்பிடல்லையேம்மா?”

“இல்லையில்லை… மலர் வரணும்.”

“எத்தனை மணிக்கு வருவா?”

“ரெண்டு மணி தாண்டிரும்.”

“ஓ… ரொம்பக் கஷ்டப்படுத்திக்கிறாளோ?”

“கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் பரவாயில்லை பிரகாஷ். சின்ன வயசுதானே? பொண்ணுங்களை ரொம்பத் தாங்கித் தாங்கி வளர்க்கக் கூடாது. நாளைக்குப் போற இடம் எப்படி இருக்குமோ? வர்றவன் எப்படி இருப்பானோ? அதால நான் மலரைக் கொஞ்சம் தைரியமாத்தான் வளர்த்திருக்கேன்.”

“ம்…” ஞானபிரகாஷ் சித்ரலேகாவையே பார்த்திருந்தார்.

“இப்போப் பாருங்க. அவளுக்குன்னு ஒரு தொழில் இருக்கு. சுயமா சம்பாதிக்குறா. யாரையும் நாளைக்கு எம் பொண்ணு எதிர்பார்த்துக்கிட்டு நிக்க வேணாம். அஞ்சு வருஷத்துக்கு லோன் போட்டு கடையை ஆரம்பிச்சா. இப்போக் கிட்டத்தட்ட அதுவும் முடியப் போகுது.”

“வெரிகுட்.”

“ஆமா… வீட்டுக்குன்னு ஒரு தொகை குடுத்துடுவா. ஆனா நான் அதுல கை வைக்க மாட்டேன். கையில இருந்த தொகையை இன்வெஸ்ட் பண்ணி இருக்கேன். கௌரவமா ஒரு வாழ்க்கை வாழ அது போதுமா இருக்கு பிரகாஷ்.” முதல் முறையாகத் தன்னிடம் மனம் திறக்கும் பெண்ணை ஒரு புன்னகையோடு பார்த்திருந்தார் மனிதர்.

“மாப்பிள்ளை ஏதும் பார்க்கிறியா லேகா?”

“ஆமா பிரகாஷ். இருபத்தி நாலு ரன்னிங். ரெண்டு மூனு வரன் வந்தது. ஆனா எனக்கு எதுவும் மலருக்குப் பொருத்தமாத் தோணலை.”

“நானும் பார்க்கட்டுமா?”

“இல்லை பிரகாஷ், நீங்க உங்க லெவலுக்குப் பார்ப்பீங்க. எங்கிட்ட அந்தளவு சக்தி இல்லைப்பா.”

“என்னப் பேச்சு லேகா இது? அப்படி மலரை நான் சும்மா விட்டிடுவேனா?”

“ஐயையோ! உங்களுக்கு எதுக்கு பிரகாஷ் தேவையில்லாத தலைவலி?”

“ஏம்மா? யோரோட பொண்ணா இருந்தா என்ன? மலர் என்னோட லேகாக்குப் பொறந்தவங்கிற ஒன்னு போதாதா?” அந்த வார்த்தைகளில் சித்ரலேகா தவிப்பது ஞானபிரகாஷுக்குப் புரிந்தது. எல்லாவற்றையும் ஒரே நாளில் திணிக்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டார்.

“என்ன லேகா இன்னும் மலரைக் காணலை? வந்ததோட மலரையும் பார்த்துட்டுப் போகலாம்னு நினைச்சேன்.”

“சிலநேரம் இப்படித்தான். வேலை ஜாஸ்தியா இருந்தா லேட்டாகிடுவா.”

“ஓ… அப்போ நான் கிளம்பட்டுமா? மலர் வந்தா நான் கேட்டேன்னு சொல்லு. ரொம்ப லேட் பண்ணாம நீ சாப்பிடு லேகா.” பேசியபடியே ஞானபிரகாஷ் கிளம்ப வாசல் வரை வந்து வழியனுப்பினார் சித்ரலேகா.

வீட்டுக்கு நேரத்தோடு வர ஆயத்தமான மலரை குமுதா அழைத்துச் சற்றுத் தாமதிக்கச் சொன்னது இவர்களுக்குத் தெரியாது. மலர் கொஞ்சம் குழப்பத்தில் இருந்தாள்.

-0-0-0-0-0-0-

மலர் அமைதியாக உட்கார்ந்து கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். கடையில் சுபாவும் ஜெனியும் இருந்ததால் இவள் பின்புறமாக அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மலர்.”

“என்ன சுபா?”

“சத்யன் சாரோட மாமா வந்திருக்காங்க.” சுபா சொல்லிவிட்டு மலரை ஆழமாகப் பார்த்தாள். மலருக்கும் சுபாவிற்கும் இடையில் நல்லதொரு தோழமை உண்டு. தனது குழப்பங்களை சுபாவோடு பகிர்ந்திருந்தாள் மலர்.

“தைரியமாப் பேசு மலர்.‌”

“ம்… வரச்சொல்லு.” இந்த நான்கைந்து நாட்களாக மலர் இப்படியொரு தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.‌ அன்றைக்கு குமுதா அத்தை ஃபோன் பண்ணித் தாமதிக்கச் சொன்ன போதே மலருக்குப் புரிந்தது. இனி ஞானபிரகாஷ் தாமதிக்க மாட்டார் என்று.

“வாங்க அங்கிள்.” எதிரே கம்பீரமாக நடந்து வந்த மனிதரை எழுந்து வரவேற்றாள் மலர்.

“எப்படி இருக்கேம்மா?”

“ம்… நல்லா இருக்கேன். கீர்த்தனா எப்படி இருக்காங்க?”

“நல்லா இருக்கா. ஹனிமூன் கிளம்பிட்டாங்க போல.”

“அப்படியா?”

“நீ எப்போம்மா இப்படியெல்லாம் போகப்போறே?” மலரை ஆழந்து பார்த்து ஞானபிரகாஷ் கேட்க அவரை இப்போது மலர் சளைக்காமல் பார்த்தாள்.

“அந்த எண்ணமே எம் மனசுல இல்லை அங்கிள்.”

“ஏன் மலர்?”

“அம்மாவை விட்டுட்டு என்னால எங்கேயும் போக முடியாது அங்கிள்.”

“ஆனா லேகா உனக்காக மாப்பிள்ளை பார்க்குறா.‌ அது தெரியுமா உனக்கு?”

“அம்மாக்கு வேற வேலை இல்லை அங்கிள். அதை எப்படித் தட்டிக் கழிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்.”

“எத்தனை நாளைக்கு மலர்?” இப்போது அங்கே அசாத்திய அமைதி நிலவியது. இரண்டு பேருமே மேற்கொண்டு என்னப் பேசுவது என்று புரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

ஞானபிரகாஷ் இப்போது தொண்டையைச் செருமிக் கொண்டார். பேசித்தானே ஆகவேண்டும். தனக்கு முன்னால் இருக்கும் இந்தப் பெண்ணிற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கடமை தனக்கிருப்பது அவருக்குப் புரிந்தது.

“நான் பண்ணினது பெரிய பாவம்தான் மலர். தங்கையோட வாழ்க்கையை நினைச்சுப் பயப்பட்ட நான் காதலிச்சிருக்கக் கூடாது.” விலுக்கென்று நிமிர்ந்தாள் மலர்.

“சத்யா எங்கிட்டப் பேசினான். நீ கேட்டதுல எந்தத் தப்பும் இல்லை மலர்.‌ தப்பெல்லாம் எம்மேல தான். ஒத்துக்கிறேன்.”

“இல்லை… அது…”

“நீ சங்கடப்பட இதுல எதுவுமே இல்லை மலர். நான்தான் எல்லாத்துக்கும் காரணம். உங்கம்மா வாழ்க்கை இப்படியாக நான்தான் காரணம்.” பழி அத்தனையையும் தன்மேல் போட்டுக் கொண்டார் ஞானபிரகாஷ்.

காதலித்துவிட்டு அமைதியாக இருந்தது வேண்டுமானால் அவரின் தவறாக இருக்கலாம். ஆனால் அம்மாவின் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு இந்த மனிதர் பாவம் என்ன பண்ணுவார்?!

“விதி அங்கிள்.”

“அதுக்கு நீ என்னப் பெயர் வேணும்னாலும் சொல்லு மலர். ஆனா எனக்குத் தெரிஞ்சது ஒன்னே ஒன்னுதான். நம்பிக்கைத் துரோகம்.”

“இது பெரிய வார்த்தை அங்கிள்.”

“இல்லை மலர். நீ ஒவ்வொரு முறையும் என்னை அங்கிள் அங்கிள்னு சொல்லும்போது என்னோட நெஞ்சை யாரோ வாளால அறுக்கிற மாதிரி இருக்கு. லேகாவோட பொண்ணு என்னை அப்பான்னுல்லை கூப்பிட்டிருக்கணும்?” சொல்லிவிட்டு அவர் குலுங்கிக் குலுங்கி அழ, மலர் விறைத்துப் போனாள்.

நடக்கப் போவதெல்லாம் மலருக்குத் தெளிவான காட்சி போல மனத்திரையில் கொஞ்ச நாளாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் நிதர்சனம் என்று வரும்போது, அதுவும் சம்பந்தப்பட்டவர் வாயால் அதைக் கேட்கும் போது உடலெங்கும் நடுங்கியது.

ஆனால் கூடிய விரைவில் ஞானபிரகாஷ் தன்னைச் சுதாரித்துக் கொண்டார். கண்களை அழுந்தத் துடைத்தவர் தொண்டையைச் சரிபண்ணிக் கொண்டார்.

“போனதைப் பேசுறதுல எந்த அர்த்தமும் இல்லைன்னு எனக்குப் புரியுது மலர். நான் பண்ணின தப்பையெல்லாம் இப்போ சரி பண்ணனும்னு நினைக்கிறேன். இதால பாதிக்கப்படப் போறது நீதான். அதால உன்னோட உண்மையான முடிவு என்னன்னு எனக்குத் தெரியணும் மலர்.”

“………….”

“எனக்குப் புரியுது. நீ இப்போ சின்னப்பொண்ணு இல்லை. தனியாத் தொழில் பண்ணுறே. நாலு பேரோட பேசுறே, பழகுறே. இதால உனக்கு நிறையச் சிக்கல்கள் வரலாம். தலைக்குனிவு ஏற்படலாம்.”

“…………..”

“உன்னோட அப்பாவோட இடத்துல இன்னொருத்தரை வெச்சுப் பார்க்கிறது உனக்குக் கஷ்டமாக் கூட இருக்கலாம். எதுவா இருந்தாலும் நீ தாராளமா எங்கிட்டச் சொல்லலாம் மலர். உன்னோட வார்த்தைக்கு நான் கட்டுப்படுறேன். உன்னோட விருப்பம் இல்லாம இங்க எதுவும் நடக்காது.”

மலர் எதுவும் பேசவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தாள். அம்மாவின் சந்தோஷமான வாழ்வு அவளுக்கு நிரம்பவே முக்கியம்தான். ஆனால் இது எந்த அளவு சாத்தியப்படும்?

“நீ சம்மதம் குடுத்து இந்தக் கல்யாணம் நடந்ததுன்னா அது ஏதோ பேருக்கு நடந்த கல்யாணமா இருக்காது மலர். லேகாக்குக் கிடைக்காத வாழ்க்கை, நான் வாழாத வாழ்க்கை இது எல்லாத்துக்கும் ஒரு விடையாத்தான் அந்தக் கல்யாணம் இருக்கும்.” இப்போது மலர் புரியாத பார்வைப் பார்த்தாள்.

“என்னோட காதலி இப்போ விதவையா நிக்குறா. அவளுக்கு நான் வாழ்க்கைக் குடுக்கிறேன். இந்தப் பேச்சுக்கெல்லாம் அங்க இடமே இல்லை மலர். ஆசைப்பட்ட மாதிரி நானும் லேகாவும் அப்போக் கல்யாணம் பண்ணி இருந்திருந்தா எப்படி வாழ்ந்திருப்போமா அப்படியொரு வாழ்க்கை வாழணும். அதுல நான் ரொம்ப உறுதியா இருக்கேன்.”

“இதுக்கெல்லாம் அம்மா…”

“அதை நான் பார்த்துக்கிறேன்.‌ நீ உன்னோட அபிப்பிராயத்தைச் சொல்லு மலர். நீ முழு மனசோட சம்மதம் சொன்னா இந்தக் கல்யாணம் நடக்கும். இல்லன்னா எதுவும் இல்லை. நல்லா யோசி. ரெண்டு நாள் டைம் எடுத்துக்கோ. அதுக்கப்புறம் எந்த முடிவா இருந்தாலும் எங்கிட்ட நீ தாராளமாச் சொல்லலாம். இது என்னோட விசிட்டிங் கார்ட்.” அங்கிருந்த மேசை மேல் கார்டை வைத்த ஞானபிரகாஷ் மலரின் தலையை ஒரு முறை வருடிக் கொடுத்தார்.

ஒரு கணம் தயங்கி நின்றவர் அதன்பிறகு மடமடவென வெளியே போய்விட்டார். மலர்விழி அப்போதும் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.