Rose – 26

26b1e51adc2d1a4b83bc4d2927822bc8-7317144d

Rose – 26

அத்தியாயம் – 26

மறுநாள் காலைபொழுது ரம்மியமாக விடிந்தது. புதிய இடம் என்ற காரணத்தால், இரவு முழுவதும் தூங்காமல் இருந்தான் யாதவ். தன்னையும் அறியாமல் அவன் உறங்கிப் போக, “யாதவ்!” அவனைத் தட்டி எழுப்பினாள் யாழினி.

அவனது உறக்கம் கலைந்து கண்விழித்துப் பார்க்க, “கிருஷ்ணா அப்பா திடீர்ன்னு மயங்கி விழுந்துட்டாரு. கொஞ்சம் என்னன்னு வந்து பாரு!” யாழினி பயத்தில் இதயம் படபடக்க கூறவே, உடனே எழுந்து சென்று அவரின் உடலை பரிசோதித்துப் பார்த்தான்.

அவருக்கு இதயத்துடிப்பு நின்று போயிருக்க, ஹார்ட் அட்டாக் வந்ததைப் புரிந்து கொண்டான். அவரைக் காற்றோட்டமான இடத்தில் படுக்க வைத்து, அவருக்கு முதலுதவி செய்ய தொடங்கினான்.

இதை யாழினி அதிர்வுடன் பார்த்தபடி நின்றிருக்க, “இனியா அப்பாவிற்கு ஒன்னும் இல்ல, நீ உடனே போய் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணு” என்றபடி அவரின் நெஞ்சில் கைவைத்து அழுத்தி சிகிட்சை செய்தான்.

கொஞ்ச நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட, “நீ வீட்டைப் பூட்டிட்டு வா, நான் மாமாவுடன் போகிறேன். அவருக்கு எதுவும் ஆகாது” தன்னவளுக்கு தைரியம் சொன்னபடியே, ஆம்புலன்சில் ரவீந்தரை ஏற்றினர்.

அவன் சொன்னபிறகு தன் மூச்சை இழுத்துவிட்டு மனதை சமநிலைக்கு கொண்டு வந்த யாழினி, தந்தையின் காரில் மருத்துவமனைக்குச் சென்றாள். அவள் உள்ளே செல்லும் போது ரவீந்தர் தீவிர சிகிட்சைப் பிரிவில்அனுமதிப்பட்டிருந்தார்.

அவரைப் பரிசோதித்துவிட்டு வெளியே வந்த டாக்டரோ, “இவரிடம் இரண்டாவது முறை அட்டாக் வந்தபோதே, ரொம்ப கவனமாக இருக்க சொன்னேனே! அவரின் உடல்நிலைபடி பார்த்தால் அதிகமான சந்தோஷமோ, அளவுகடந்த வேதனையோ இரண்டுமே கேட்கக்கூடாது” என்று கூறினார்.

அவர் சொன்னதைக்கேட்டு அதிர்ந்து போன யாதவ், “டாக்டர் அப்போது இது மூன்றாவது அட்டாக்கா?” அவன் நடுக்கத்துடன் கேட்டான்.

“நீங்க அவருக்கு என்ன உறவு முறை?” டாக்டர் அவனிடம் விசாரிக்க, தன்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டான்.

“நீங்களே கார்டியாலஜி முடிச்சிருக்கீங்களே, உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. இனி அவரைக் காப்பாற்ற முடியாது, நீங்க போய் பார்த்துட்டு வந்திடுங்க” என்ற மருத்துவர் கையை விரித்துவிட, இதைகேட்டு அதிர்ச்சியில் மூச்சுவிட மறந்து சிலையாகி நின்றாள் யாழினி.

தன்னவளின் கரம்பிடித்து அறைக்குள் யாதவ் அழைத்துச் செல்ல, தன் தந்தையைப் பார்த்த யாழினியின் விழிகளில் கண்ணீர் அருவியாகப் பெருகியது. அவர்கள் இருவரையும் நிதானமாகப் பார்த்த ரவீந்தரின் பார்வையில் ஒருவிதமான சந்தோசம் சுடரொளி வீசியது.

தன் மகளை அவன் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கையில், யாதவ் கரத்தைப் பற்றினார். அவனைப் பார்த்தபடியே அவரின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது. யாதவ் வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு, “அப்பா!” கதறிய யாழினியைத் தோள் சாய்த்துக் கொண்டான்.

ராகுலின் உதவியுடன் ரவீந்தரின் இறுதி யாத்திரைப் பயண வேலைகளை முடித்த யாதவ், தன்னவளைப் பார்த்தான். அந்த வீடு வெறுச்சோடிக் காணப்பட, தன் தந்தையின் புகைப்படம் முன்பு கண்ணீரோடு பித்துப்பிடித்தாற்போல அமர்ந்திருந்த யாழினியைப் பார்த்தான்.

தன்னவளின் அருகே சென்று அமர்ந்த யாதவ், “இனியா! இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருக்க போறே, வா போய் சாப்பிடலாம்” என்றழைக்க, அவனது குரலில் சட்டென்று நிமிர்ந்து சுற்றும் முற்றும் தேடினாள்.

“இன்னும் அப்பா வரல யாதவ். அவர் வரட்டும் மூணு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” இயல்பாக கூறியவளுக்கு நிதர்சனம் புரிய, அவளின் விழிகளில் கண்ணீர் பெருகியது.

தன்னருகே அமர்ந்திருந்த யாதவிடம், “ப்ளீஸ் கிருஷ்ணா அப்பாவை வர சொல்லுடா! என்னால அவர் இல்லாமல் இங்கே தனியாக இருக்க முடியாது!” குழந்தைபோல கேட்டவளை இழுத்து அணைத்துக்கொண்டு கொண்டான்.

இந்த நிலையில் அவளைத் தனித்துவிட மனமின்றி அவளுடன் தங்கினான். ரவீந்தரின் அறை பக்கமே செல்லாமல், எந்த நேரமும் தந்தையின் புகைப்படத்தைக் கையில் வைத்துக்கொண்டு, வீட்டையே சுற்றி பார்க்கும் யாழினியைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

இருவருக்கும் உணவை சமைத்து வைத்துவிட்டு, “இங்கே பாரும்மா! அங்கிள் உன்னைவிட்டு எங்கேயும் போகல. உன் பக்கத்தில் தான் காற்றாக இருப்பாரு, நீ நடந்ததை நினைத்து மருகாமல் முதலில் சாப்பிடு” ஆறுதல் சொல்லி அவளை சாப்பிட வைப்பதற்குள், இரவு நேரமே வந்துவிடும்.

இரவு நேரங்களில் தலையில் முகம் புதைத்து கதறி அழுகும் யாழினியை சமாதானம் செய்ய முடியாமல் போனது. அவள் குளித்து உடைமாற்றும் நேரங்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் அவளின் பக்கத்திலேயே இருந்தான்.

அவர்களையே அறியாமல் இருவருக்குமான நெருக்கம் இன்னும் அதிகரிக்க, அவளைத் தனிமையில் விடாமல் கண்ணுக்குள் பொத்தி பாதுகாத்தான் யாதவ். சிறிதுநேரம் அவன் வெளியே சென்றாலும், யாழினி அவனைத் தேடி வாசலில் வந்து அமர்ந்துவிடுவாள். யாழினியின் துயிலும், விடியலும் யாதவ் மார்பில் தான் என்றானது.

ஏற்கனவே அந்த வலியை அனுபவித்திருந்த அவனோ, தன்னவளுக்கு யாருமற்ற தனிமையைப் பரிசளிக்க விரும்பவில்லை. அன்றிரவு யாதவ் தன்னையும் அறியாமல் உறங்கிப் போக, “அப்பா… அப்பா…” நடு இரவில் குழந்தைபோல அழுதாள்.

அவளின் கதறல் சத்தத்தில் அவனின் உறக்கம் கலைய, “யாழினி இன்னும் எத்தனை நாளைக்கு நடந்ததை நினைத்து வருத்தப்படுவே! நீ அழுவதால் இங்கே எதுவும் மாறிவிட போவதில்லை. மாண்டவர்கள் மீண்டு வந்தால், பூமியில் வாழ இடமில்லாமல் போகும்னு அன்னைக்கே சொல்லி வச்சிருக்காங்க” வழக்கத்திற்கு மாறாக அவளைக் கடிந்து பேசினான்.

யாதவ் முகத்தில் கடுமையைக் கண்டு யாழினி மீண்டும் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அழுதாள். அவளை சமாதானம் செய்ய என்ன வலி என்று யோசிக்க, ‘ஒரு அதிர்ச்சியில் இருந்து மீட்டெடுக்க, இன்னொரு அதிர்ச்சிதான் கொடுக்கணும்’ என்றது அவனின் மனம்.

தன்னருகே அமர்ந்திருந்த யாழினியை இழுத்தணைத்து அவளின் செவ்விதழைத் தன் உதடுகளால் மூடினான். அதுவரை தந்தையின் இழப்பை நினைத்து அழுதவள், யாதவை அதிர்ச்சியுடன் விழிவிரிய நோக்கினாள்.

அவளின் சிகைக்குள் புகுந்த அவனின் கரங்கள் மாயம் செய்ய, ரோஜாவைவிட மென்மையாக இருந்தவளின் இதழில் தன்னைத் தொலைத்தான். மெல்ல அவனின் உணர்வுகள் விழித்துக்கொள்ள, இருவருக்கும் சுவாசம் தேவை என்றுணர்ந்து அவளிடமிருந்து விலகினான்.

தந்தையின் இழப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிப்பவளிடம், தான் இப்படி நடந்து கொள்வது தவறு என அவன் மூளை சொன்னது. சற்றுமுன் நடந்த நிகழ்வு அவளின் காயம்பட்ட இதயத்திற்கு ஆறுதலாக அமைய, மெல்ல அவனின் மார்பில் முகம் புதைத்தாள்.

அவன் கரங்கள் அவளை விலகிவிட நினைக்க, யாழினி அவனைவிட்டு விலக மறுத்தாள். அவளைப் பார்த்த நாளிலிருந்து பேயாட்டம் போடும் அவனது உணர்வுகள் விழித்துக் கொண்டது. ஏற்கனவே பலகீனமாக இருக்கும் அவளை படுக்கையில் வீழ்த்த அவனுக்கு மனம் வரவில்லை.

தந்தையும் இல்லாத தனிமையில் தனக்கிருக்கும் ஒரே ஆறுதல் என்றால், அது யாதவ் மட்டுமே என்று உணர்ந்தாள் யாழினி. அவனே இனி எல்லாம் என்று அவனின் மார்பில் சரன்புகுந்தவள், “நீயும் என்னைவிட்டு விலகிப் போகாதே கிருஷ்ணா, உன் பிரிவைத் தாங்கும் சக்தி எனக்கு இல்ல” என்றாள்.

அந்த நிமிடம் யாதவ் மனம் மேகங்கள் இல்லாத வானம்போல காட்சியளிக்க, யாழினி கழுத்தில் இருந்த செயின் அவனுக்கான உரிமையைத் தந்தது. மெல்ல அவனைவிட்டு விலக நினைத்தவளை, யாதவ் கரங்கள் தடுத்தது. அவள் அவனைக் கேள்வியாக நோக்கிட, அந்த பார்வையில் தெரிந்த தாபம் அவளை ஏதோ செய்தது.

இருவரின் விழிகளும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க, இரு இதயமும் லயம் மாறித் துடித்தது. அவளின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, இமைகளின் மீது இதழ் பதித்தான் யாதவ். அவன் பிம்பத்தை தனக்குள் சிறையெடுத்து அவளின் இமைக்கதவுகள் பூட்டப்பட, அவன் இதழ்கள் கன்னங்களில் ஊர்ந்து கழுத்தடியில் வந்து இளைப்பாறியது.

அந்த அறையிலிருந்த இருளும், தனிமையும் உணர்வுகளைக் கட்டவிழச் செய்தது. யாழினி மயக்கத்தில் இமை மூடியபடி பின்னே சரிய, அவளின் மீது பரவிப் படர்ந்தான் யாதவ். இருவரும் தங்களின் நிகழ்காலத்தை மறந்து, தங்களுக்கான தனியுலகில் சஞ்சரிக்க தொடங்கினார்.

யாதவ் கரங்கள் அவளின் மேனியை மீட்டிட, அவனது கரங்கள் செய்யும் மாயத்தில் தன்னை மறந்தாள் யாழினி. இரவு விடிகின்ற வரையில் அந்த அறையில் இசைக்கச்சேரி அரங்கேறியது.

மறுநாள் பொழுது விடியும் வேளையில், தன்னவனின் மார்பில் துயில் கொண்டாள். வழக்கம்போலவே முன்னதாக கண்விழித்த யாதவிற்கு, நேற்று இரவு நடந்த நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஞாபகம் வந்தது.

தன்மீது துயில் கொள்ளும் யாழினியை இமைக்காமல் நோக்கியவனின் மனதில் ஒருவிதமான நிறைவு. தன்னவளின் சிவந்த முகமும், அவளின் உதட்டில் உறைந்திருந்த புன்னகையும் கண்டான்.

நேற்று இரவு நடந்த சங்கமத்தை நினைத்தும், ‘என்ன காரியம் செய்திருக்கிற?! ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கச் சொல்லி தந்தாங்களா?’ அவன் மனம் குற்ற உணர்வில் குறுகுறுத்தது.

அன்று ரவீந்தர் மருத்துவமனையில் தன்னைப் பார்த்த பார்வை வேறு காரணம் இல்லாமல் ஞாபகம் வந்தது. அவனது சிந்தனையைக் கலைக்கும் விதமாக, யாழினியிடம் அசைவு தெரிந்தது. அவள் என்ன சொல்வாளோ என்று யாதவ் மனம் படபடவென்று அடித்துக் கொள்ள, மெல்ல விழிதிறந்து பார்த்தாள்.

தன் மனம் கவர்ந்தவனின் மார்பில் தூங்கியிருக்கும் விஷயம் புரிய, அதன்பிறகு நேற்று நடந்த சம்பவம் நினைவிற்கு வந்தது. அவன் முகத்தை நேருக்கு நேராக பார்க்கும் எண்ணமின்றி, “சாரிங்க!” மன்னிப்புக் கேட்டுவிட்டு குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.

யாழினி தவறாக நினைப்பதை ஏற்க முடியாமல், “உனக்கு என்மேல் கோபமே வரலயா?” யாதவ் அவளிடம் விசாரித்தான். சற்றுமுன் அவனின் முகத்தில் வந்துப்போன உணர்வைப் படித்த யாழினியின் மனமோ, அவனைக் குற்றவாளியாக நிறுத்த துணிவில்லாமல் தோற்றது.

இருவரும் ஒருவரையொருவர் உயிராக விரும்பும் வேளையில், தந்தையை இழந்த சமயத்தில் தனக்கு ஆதரவாக நின்ற காதலின் மீது மொத்த பழியையும் சுமத்த மனம் வரவில்லை. தன்னுடைய உடல் மற்றும் உள்ளத்தை ஆளுவதற்கு அவனுக்கு மட்டுமே உரிமையுண்டு என்று நினைத்தால், நேற்று நடந்த சம்பவத்தை இயல்பாக எடுத்துக் கொண்டாள்.

தவறு என்று முடிவெடுத்தால் அது இருவரின் பக்கமும் இருக்கிறதே என்ற எண்ணத்தில், “நேற்று இருந்த சூழலில் இருவரின் மனமும் தடுமாறியது நிஜம்தான் கிருஷ்ணா. அதை மட்டுமே காரணம் காட்டி, உங்களைக் குற்றவாளியாக்க மனசில்லை. எந்தவொரு சூழலும் என்னை நீ கைவிட மாட்டேன்னு உண்மையாக நம்பறேன்!” அவள் சொன்னதில் முதல் வாக்கியம் மட்டுமே யாதவ் காதை எட்டிட, தன்னை தவறாக நினைக்கவில்லை என்று பெருமூச்சுவிட்டான்.

அவளது தந்தைக்கு அடுத்து வாழ்க்கையில், யாழினி அதிகம் நேசிப்பது யாதவை மட்டுமே. அவனோடு இருக்கின்ற ஒவ்வொரு நிமிடத்தையும், அவளின் மனதில் பொக்கிஷமாக சேகரித்தாள்.

அவளின் அழுகையை மாற்றும் முயற்சியில் இறங்கிய யாதவ், “என்ன நீ இந்திய பெண்களைப் போல கண்ணைக் கசக்கிட்டு இருக்கிற? உன்னோட இந்த செயல் எனக்கு சுத்தமாக பிடிக்கல” என்று கூறவே, அதை உடனே மாற்றிக் கொண்டாள்.

வீட்டின் வேலைகளை இருவரும் இணைந்து செய்ய, இடைப்பட்ட நேரங்களில் தன்னவளை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றான். மாலை நேரங்களில் அவளுடன் இணைந்து நடக்கும் போது, அவன் மனம் சந்தோசத்தில் துள்ளியது.

அந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் அப்படியொரு தவறை யாதவ் தெரிந்தும் செய்யவில்லை. அதற்காக யாழினியை விட்டு அவன் ஒரேயடியாக விலகிச் செல்லவும் நினைக்கவில்லை.

 யாழினியின் கழுத்தில் இருக்கின்ற லாக்கெட்டைக் காணும் வேளையில் அவன் மனம் காரணமே இல்லாமல் துள்ளியது. அதற்கான காரணத்தை யாதவ் கடைசிவரை ஆராயாமல் விட்டுவிட்டான். அன்றைய நாளுக்குப் பிறகு யாழினி மெல்ல இயல்பிற்கு திரும்ப, ஹோட்டல் நிர்வாகத்தை எடுத்து நடத்த சொன்னான்.

அவள் தன்னால் முடியவே முடியாதென்று பிடிவாதமாக மறுத்துவிட, “சரியான பட்டுக்காடு மாதிரி பேசின, அப்புறம் நடக்கிறதே வேற! கொஞ்சமாவது அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவ மாதிரி பேசு” வேண்டுமென்றே அவளிடம் சிடுசிடுத்தான்.

“இப்போ என்ன செய்யணும்?” அவள் நேரடியாக கேட்க, “உன் அப்பாவையும், அந்த ஹோட்டலையும் நம்பி எத்தனையோ பேர் இருக்காங்க. அதனால் தொழிலை எடுத்து நடத்தப்பாரு” என்றான்.

மீனாலோட்சனி அதை செய்ய நினைத்தபோது காரணமே இல்லாமல் அவரை வெறுத்த யாதவ், இன்று தன்னவளை துணிவுடன் தொழிலை எடுத்து நடத்த சொன்னான். இந்த மாற்றம் எதனால் வந்தது என்று அவன் கொஞ்சம் யோசித்திருக்கலாம், விதி வலியது!

அன்றிலிருந்து இருவரும் தங்களின் வேலைகளைப் பகிர்ந்து கொண்டனர். சில நேரங்களில் அவளுடன் ஹோட்டலில் சென்று உதவியாக இருக்கும் யாதவ், மாலை நேரங்களில் அவளை அழைத்துக்கொண்டு வீடு திரும்புவதை வழக்கமாக மாற்றிக் கொண்டான். இது எதையுமே அவன் கட்டாயத்தின் பெயரில் செய்யவில்லை.

இருவரும் ஒரே அறையில் தங்கினாலும், யாதவ் அவளிடம் எல்லை மீறவில்லை. அவளை பாரமாக நினைக்காமல், தன்னவள் என்ற எண்ணத்தில் இமைகளுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டான். அவளை சுமப்பதுகூட அவனுக்கு சுகமாக இருக்க, அவளின் அருகே இருக்கின்ற மணித்துளிகளை ரசித்தான்.

இப்படியே நாட்கள் அதன்போக்கில் செல்ல, இரண்டு மாதங்கள் ஓடி மறந்தது. யாதவ் மீண்டும் இந்தியா செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளைக் கவனிக்க தொடங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!