ரௌத்திரமாய் ரகசியமாய்

அத்தியாயம்- 1

மழை மேகம் திரண்டிருக்க, வானம் இருண்டிருந்தது. வானம் சல்லடையாய் மாறி விட்டது போல் மழை வெளியே ‘சோ’ வென கொட்டிக் கொண்டிருந்தது. ‘பளிச் பளிச்’சென மின்னல் ஒளியும், ‘திடும் திடும்’ என இடி ஒலியும் சீரான நேர் இடைவெளியில் விட்டு விட்டு வந்து கொண்டிருந்தன.

காற்றும் பலமாக வீசியது. அடித்த காற்றில் ஜன்னல் கதவுகள் பட படவென அடித்துக் கொள்ள. வெளியே கூட்டினுள்‌ளிருந்த நாய்கள் வேறு பலமாக குரைக்கவாரம்பித்தன. திடீரென மின்சாரம் தடைப்பட்டது.

இத்தனை நேரம் கதைப்புத்தகத்தில் மூழ்கியிருந்தவள் மின்சாரம் தடைப்பட, விளக்குகள் அனைத்தும் அணைந்து விட‌, புத்தகத்தை விட்டும் தலையை உயர்த்தினாள்.

வெளியே பலத்த சத்தத்துடன் கொட்டும் மழையும், இடி முழக்கமும், நாய்கள் குறைக்கும் ஒலியும் இரவின் நடுப்பகுதியில் அவளுள் பயப்பந்துகள் உருள, எச்சிலை கூட்டி விழுங்கியபடி கைகளிரண்டும் படுக்கையின் அருகிலிருந்த குட்டி மேசையை நோக்கி நகர்ந்தது.

அவள்‌ தேடியது கிடைத்து விட்டது. அது அவளது கைப்பேசி‌ தான். அதை எடுத்து அதன் டார்ச்சை பயன்படுத்தி அம்மாவின் அறைக்கு சென்று விடலாமென எண்ணியவளுக்கு அவளது கைப்பேசியும் சதி செய்து விட, பதினைந்து வீதத்திற்கும் குறைவான சார்ஜ் அளவை காட்டியது.

தங்கையுடன்‌ சண்டையிட்டு தனியே தூங்கியது தவறோ? சண்டை போட்டுக் கொண்டு அவளுடனே தூங்கியிருக்கலாம் என தன்னையே நொந்து கொள்ள, அழுகை அழுகையாய் வந்தது அவளுக்கு. இந்த மழை, இடி, மின்னல் வேறு பயத்தை கிளப்பியது.

பளிச் பளச்சென்று மின்னல் கீற்றுகள்..! திடும் திடும்மென அவ்வப்போது இடி முழக்கங்கள்..!
காற்றின் வேகமும் பலமாக இருக்க. ஜன்னல் கதவுகள் சடார் சடாரென்று கம்பிகளை அறைந்து கொண்டு கிடந்தன. நாய்களின் ஊளை ஒரு பக்கம்.

“அம்மா.. அப்பா..” படுக்கையில் அமர்ந்திருந்தபடியே மெதுவாக அழைத்துப் பார்த்தாள். பதிலில்லை.

“அக்ஷி..” என‌ தங்கையையும் அழைத்தாள். எந்த‌ பதிலுமில்லை. இந்த இடி, மழைச்சத்தத்தில் எங்கே அவர்களுக்கு கேட்கப் போகிறது.

அவர்கள் அறைக்கே சென்றுவிட வேண்டியது தான் என பயத்தில் “அம்மா,அப்பா” அழைத்துக் கொண்டே கட்டிலை விட்டும் கீழே இறங்கினாள். இவ்வளவு சத்தமாக அழைத்தும் வராமல் உறங்கும் குடும்பத்தினர் மேல் கோபம் கோபமாய் வந்தது.

படக் படக்கென்று அடித்துக் கொண்டிருந்த ஒரு ஜன்னல் கதவை இழுத்து அடைக்க அவளது கையை நீட்டிய போது, ஜன்னலுக்கு வெகு அருகே, கொட்டுகிற மழையில் நனைந்தபடி ஏதோவொன்று அவள் கைகளில் இலேசாக மோதியவாறு மின்னல் வேகத்தில் கடந்து சென்றதை போன்ற உணர்வு. ஒரு கணம் இதயம் நின்று துடித்தது அவளுக்கு.

சட்டென கையை உள்ளிழுத்துக் கொண்டவளுக்கு, அழுகை வேறு முட்டிக்கொண்டு வந்தது. பேயோ திருடனோ என்ற பயம் தலைதூக்க அலங்காரத்திற்கென‌ வைக்கப்பட்டிருந்த மரத்தாலான நீண்ட மலர்ச்செண்டை கையிலெடுத்து,

“அம்மா.. அப்பா.. எங்கே போயிட்டீங்க?” பயத்தில் கோபமும் ஒருங்கே தோன்ற கத்தி அழைத்தாள்.

மீண்டும் ஜன்னலருகே ஓர் அசைவு‌. பயத்துடன் திரும்பிப் பார்த்தாள்‌. அங்கே யாருமில்லை.

தைரியத்தை முயன்று வரவழைத்துக்‌கொண்டு
“யாரது? விளையாடுறீங்களா எங்கூட? கையில் மாட்டுனீங்க அடிச்சு மண்டையை உடைச்சிடுவேன்..” அடிக்குரலில் கத்திய அடுத்த நொடி வீட்டின்‌ விளக்குகள் அனைத்தும் ஒன்றாக ஒளிர, அவள் முன்னே கையில் கேக்கை ஏந்தியபடி, புன்னகை முகத்துடன் நின்றிருந்தவனை கண்டதும் ஆச்சரியத்துடன் விழிகள் விரிய நின்றிருந்தாள். இத்தனை நேரம் அவளை ஆட்கொண்டிருந்த பயமும் எங்கோ பறந்தோடிப் போனது.

“ஹேப்பி பர்த்டே மை ட்வின் சிஸ்டர்..” என்று அவன் அருகில் வர “தருண்” என ஓடிச் சென்று தனது இரட்டை சகோதரனை கட்டிக் கொண்டாள் தாமிரா. தருணுக்குப் பின்னால் தாய் தந்தை மற்றும் தங்கையும் சிரித்த முகத்துடன் நின்றிருந்த விதமே தருணின் வருகை முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது.

துபாயில் அமைந்துள்ள ஓர் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் தருண். இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று தான் இலங்கை வந்திருக்கிறான். அதுவும் அவனதும் அவனது இரட்டை சகோதரியினதும் பிறந்த நாளன்று.

சகோதரனை கண்ட மகிழ்ச்சியில் அவனை பற்றியிருந்த கைகளை விடவேயில்லை அவள்.

“தருண்‌ இந்த வருஷமும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்னு நெனச்சேன். நீ வந்தது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஐ அம் சோ ஹேப்பி..” என்றாள் முகம் நிறைந்த புன்னகையுடன்.

“அப்படி மிஸ் பண்ண கூடாதுனு தான் வந்துட்டேன்.”

“தேங்க் யூ சோ மச் தருண். இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை அன்ட் ஹேப்பி ஹேப்பி பர்த்டே மை ஹேன்ட்சம் ப்ரதர்..” என்று‌ மீண்டும் அவனை கட்டிக் கொள்ள இந்த முறை கொஞ்சம் கடுப்பானாள் அக்ஷரா.

“ஹலோ.. உங்க பாச மலர்‌ படத்தை அப்புறம் பார்க்குறோம். இப்போ இந்த கேக்கை சட்டுபுட்டுனு வெட்டி முடிங்கயா. நீ மட்டும் எங்க அண்ணா கூட கொஞ்சிக்கிட்டு இருக்க, இந்த லிட்டில் பிரின்சஸையும் கொஞ்சம் கொஞ்ச விடுமா..” என அவர்கள் இருவருக்கும் நடுவில் புகுந்து கொள்ள, கலகலப்பான தருணம் அது.

அதன் பிறகு தருணிண் வருகை வேறு இரட்டிப்பு சந்தோஷத்தை தர முழு குடும்பமுமே மகிழ்ச்சியின் உச்சத்தில். ஒருவாறு அனைத்து சந்தோஷ ஆர்ப்பாட்டங்களையும் முடித்துக் கொண்டு அவரவர் அறைகளுக்குப் போகவே மணி இரண்டை தாண்டியது. தனது பக்கபலமான சகோதரனின் திடீர் சந்திப்பில் மனம் நிறைந்த மகிழ்ச்சியில் பாடலொன்றை முனுமுனுத்துக் கொண்டே அறையினுள் நுழைந்தவள் ஏதோ ஓர்‌ வித்தியாசத்தை உணர்ந்தாள்.

யாரோ அறையினுள் இருப்பது போன்ற பிரம்மை. அறை முழுவதும் நோட்டம் விட, பால்கனி கதவின் ஒரு பகுதி மற்றும் திறந்திருப்பதை கண்டாள்.

“நான் லாக் பண்ணிட்டு தானே போனேன்??” என்ற‌ யோசனையுடன் கதவை சாத்த எத்தனித்த வேளை,

“ஹேப்பி பர்த்டே ஏஞ்சல்..” என்றோரு கிசுகிசுப்பான ஓர் குரல் அவள் செவியை தீண்ட, இந்த திடீர்‌ குரலில், சுவாசம் தடைபட நெஞ்சின் மத்தியில் கைகளை வைத்தபடி திடுக்கிட்டு திரும்பினாள் அவள். அங்கே கையில் அழகிய‌ ஆர்க்கிட் மலர்க்கொத்துடன், பற்கள் பளீரிட புன்னைகத்த வண்ணம் நின்றிருந்தான். அவன்‌ ரகு.

எப்போதும் போல் இப்போதும் தோற்றத்தில் ஓர் கம்பீரம். எந்நேரமும் உதட்டில் ஒட்டியிருக்கும் புன்னகை பார்ப்போரை எளிதில் கவர்ந்து விடும். எதிர்ப்பாரா நேர்த்தில் ரகுவை தனது அறைக்குள் கண்வளுக்கு ஒரே அதிர்ச்சி. இந்நேரம் எப்படி இங்கே வந்தான்? அது‌ வேறுயாருமல்ல தாமிராவின் கல்லூரி தோழன் ரகு. நெருங்கிய தோழன்.

இவன் வந்திருப்பதை வீட்டினர் யாரும் பார்த்து தன்னை தப்பாக எண்ணிவிடக் கூடுமோ? என்ற‌ பயத்தில் தடுமாறியவள்,

“ரகு இங்கே என்னடா பண்ணிக்கிட்டு இருக்க? நீ எப்படி உள்ள வந்த?” மெல்லிய‌ குரலில் சுற்றும் முற்றும் விழிகளை சுழல விட்டபடி பதற்றத்துடன் வினவ,

அங்குமிங்கும் அசைந்தாடும் அவள் கரு விழிகளில் தன்னை மறந்தான்.

அவன் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு,

“என்னை முன்ன பின்ன பார்த்ததே இல்லையா? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. நீ எப்படி வந்த?” கேட்டாள் குரலில் சிறிது அழுத்தத்துடன்.

மாறாத புன்னகையுடன், “உனக்கு பர்த்டே விஷ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்.” என்றான்‌ சாதாரணமாக.

“அதுக்கு ஏன்டா திருட்டுத்தனமாக, அதுவும் இந்த நேரத்தில் வந்த? பேசாம வாசல் வழியா வர வேண்டியது தானே லூசு‌. உன்னை யாருக்கும் இங்கே தெரியாத என்ன? அப்படில்லைனா காலையில காலேஜ்ல விஷ் பண்ணியிருக்கலாம். இல்லை ஒரு கோல் பண்ணியிருக்கலாம்.

உனக்கென்ன அவசரம்? யாராவது பார்த்தா நம்மை தப்பா நெனச்சிட போறாங்க ரகு. உனக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லையா? முதல்ல இங்கிருந்து கிளம்பு. எதுவாக இருந்தாலும் காலையில் ஹாஸ்பிடல்ல பேசிக்கலாம் கோ ரகு.” என்று முகத்தை உர்ரென வைத்தபடி அவனை தாறுமாறாக திட்டி இங்கிருந்து அனுப்பி விட முயன்று கொண்டிருந்தாள்‌.

அதையெல்லாம் அவன்‌ சட்டை செய்யாமல், “என்னோட ஏஞ்சல் ஃபிரண்ட்டுக்கு பர்த்டே. நான் விஷ் பண்ணலைனா எப்படி? சரியாக நடு ராத்திரி 12 மணிக்கு விஷ் பண்ணலாம்னு தான் வந்தேன். அதுக்குள்ள உங்க குடும்பமே வெளியில் வந்துட்டாங்கப்பா. நான் எப்படி அவங்க முன்னாடி வர முடியும்? நீ வேற இருட்டுக்கு பயந்து ஒப்பாரியா வச்சிட்டு இருந்த.” என்று அவளைப் போலவே செய்து காட்டி அவன் சிரிக்க,

“என்ன அப்பவே வந்துட்டானா?” என்றிருக்க அவன் அவளைப் போல அழுது காட்டி கிண்டல் செய்தது அவளது தன்மானத்தை சிறிது சீண்டவே நண்பன் இன்ஸ்டன்ட்டாய் முளைத்த கோபத்தில் “ரகூ…”என்று அவனை முறைக்க கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

“ஓகே ஓகே‌ சாரிப்பா கூல் ஹேப்பி பர்த்டே ஏஞ்சல்..” என அந்த ஓர்க்கிட் மலர்க்கொத்தை நீட்டவே, “தேங்க்ஸ்” என்று அவள் முத்துப் பற்கள் மின்ன, கன்னத்தில் குழி விழ சிரித்து அதை அவள் வாங்க, அந்த வெள்ளைச் சிரிப்பில் தன்னை தொலைத்தவன் அவன் அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கி வந்த ஆசைப்பரிசை மாத்திரம் வழங்கவில்லை.

***
கொழும்பு
நள்ளிரவு- 12:47 மணி

சுவரோடு பொருத்தப்பட்டிருந்த மின் விசிறி இட வலமாக சுழன்றுகொண்டிருக்க அந்த அறையே குளிர்ந்தாலும் எட்வர்ட் மட்டும் கொட்டும் வியர்வையில் நனைந்திருந்தான். ஒரு வித மங்கலான‌ வெளிச்சத்தில் மூழ்கியிருந்நது அந்த அறை.

அவனது‌ வாழ்வின்‌ அத்தியாயம் இன்னும் சில மணி‌நேரங்களில் முடிவடையப் போவது உறுதி. சுவரோரமாக ஒன்றிக் கிடந்தவன் பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டிருக்க, அந்த அறையின் கதவு சடாரென்று திறக்கப்பட்டது‌.
வரிசையாக உள் நுழைந்த நான்கு முரட்டு தடியர்கள் அவ்வறையை விட்டும் அவனை பிடித்து இழுத்து வந்து ஓர் காரில் ஏற்ற முற்பட்ட வேளை அந்த சிறு இடைவெளியை தனக்கு‌ சாதகமாக பயன்படுத்திக்கொள்ள‌ நினைத்தவன் அவர்களது பிடியை விட்டும் நழுவி ஓட‌ முயன்றான்‌.

அதற்குள் சுதாரித்த அம்முரட்டு தடியர்களுள் ஒருவன் அவன் சட்டடையின் பின்புற காலரை‌ கெத்தாக பிடித்து இழுத்து, திருப்பி முகத்துக்கே ஒரு‌ குத்து விட மூக்கிலிருந்து குபுக்கென இரத்தம் வழிந்தது.

இரத்தம் வழிய நின்றிருந்தவனது கையை அவன் முதுகுக்குப் பின்புறம் மடக்கி பிடித்து வண்டியினுள் தள்ள வலியால் அலறினான்‌. வண்டி புறப்பட்டது அம்மனிதனின் இறுதி நிமிடங்களை நோக்கி.

ஆள்‌ அரவமற்ற‌ பகுதி அது. சாலையோர விளக்குகள் சில விட்டு விட்டு எரிந்துகொண்டிருந்தன. தன் முன் ஓர் உயிர் மடியப்போவதை எண்ணி ஓயாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது மழை.

அந்த மழையையும்‌ காற்றையும்‌ கிழித்துக்‌கொண்டு அசுர‌ வேகத்துடன் கீரிச் சென்ற ஒலியுடன் வந்து நின்றது ஓர் கறுப்பு நிறக் கார். காரை விட்டும் இறங்கி அழுத்தமான காலடிகளுடன் நடந்து வந்தான் ஒருவன்.

கருப்பு நிற ஜாக்கெட் அணிந்து,ஆறடி உயரத்தில், அளவான உடற்கட்டு,அடர்ந்த தாடி‌, தலை முடியை முழுவதும் மறைக்கும் விதமாக ஒரு கறுப்பு நிற தொப்பி, அடர்ந்த புருவங்கள், அகன்ற நெற்றி, இறுகிய‌ பாறை போன்ற முகம், அவனது சிவந்த கூர் விழிகளை கூலர்ஸ் கொண்டு மறைத்திருந்தான்..

இரத்தம் வழிய தொங்கிப் போன தலையோடு, முழங்காலிட்டு அமர்ந்திருந்தவனது கைகளிரண்டும் முரட்டு தடியர்களின் பிடியில் சிக்கியிருந்தது. பசித்த மிருகத்தின் வெறியோடு வந்தான் அவன்.

ருத்ரணை பார்த்ததும் அத்தடியர்களுள் ஒருவன் முன்னோக்கி வந்து, “என்ன தான் அடிச்சாலும் இவன் வாயைத் திறக்கவே மாட்டேங்குறான்” என்றான் கடித்த பற்களுக்கிடையில்.

அவனது ஆட்களின் கைவரிசையால் நார்நாரக கிழிந்து கிடந்தான் எட்வர்ட்.
இது போதாது. இன்னும் அவனை வதைக்க வேண்டும். வலியால் துடிக்க வேண்டும். அவனுக்கு இந்த ருத்ரன் யாரென்று காட்ட வேண்டும்.. ருத்ரனது வலது கையான அமர்தீப்பை நிமிர்ந்து பார்த்தான். ருத்ரனின் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. அவனது ஓர் கண்ணசைவு போதும் கொலையும் செய்ய தயங்க மாட்டான் .

அவனது கட்டளையை புரிந்து கொண்டு, மறுநொடி எட்வர்ட்டின் உச்சிமுடியை பிடித்து கடுமையாக இழுத்துப் பிடித்து தொங்கியிருந்த அவன் தலையை நிமிர்த்த வலியால் அலறினான்.

கூலர்ஸை அகற்றி, அவன் மேல் ஓர் ஊடுருவும் பார்வையை வீசியவன், “லுக் அட் மீ எட்வர்ட்..” என்றான் மிக அமைதியான அதே சமயம் ஆழ்ந்த குரலில். மெல்ல இமைகளை பிரித்தவனது விழிகளில் மரண பயம் தெரிந்தது.

இதோ இது தான். இந்த பயம் தான் அவனுக்கு வேண்டும். எதிரியின் கண்களில் தெரியும் பயம் தான் அவனுக்கு பலம். இதை இதை தான் அவனும் எதிர்ப்பார்த்தான்.

“இப்போ கூட நீ எதையும் சொல்ல போறதில்லை ரைட்?” அவனது பார்வை எட்வர்ட்டின் முகத்தில் நிலைத்திருந்தன. எதிரிலிருப்பவர்களை ஊடுருவும் ஓர் துஷ்டப்பார்வை அது. அந்தப் பார்வை வீரியம் தாளாமல் தடுமாறினான் எட்வர்ட். எக்காரணம் கொண்டும் தன்னை உயிருடன் விடப்போவதில்லை என எட்வர்ட்டும் அறிவான்.. ஆனால் உயிரே போனாலும் அவன் வாயை திறக்கப் போவதில்லை அதுவும் உறுதி.

அவனிடமிருந்து எந்த பதிலும்‌ வராது போகவே அமர்தீப்பின் பிடியின் அழுத்தம் அதிகரித்தது. மீண்டும் அலறினான். அப்போதும் பதிலளிக்கும் எண்ணம் அவனுக்கில்லை. முணகல் ஒலியை தவிர‌ வேறு எதுவுமில்லை.

அமர்தீப் கொந்தளித்தான். அவனது தாடையை இறுகப்பற்றி, “உனக்கு இது கடைசி வாய்ப்பு எட்வர்ட். வாயைத்திறந்தா கொஞ்சம் ஈஸியாக சாகலாம் இல்லை..” பற்கள் நறநறுக்க கத்தியவன் பிடி மேலும் இறுகியது. வலியில் துடித்தான் எட்வர்ட்.

இத்தனை நாட்கள் நண்பனாக இருந்தவன் இன்று துரோகியாகிப் போனான். ருத்ரனையே ஏமாற்றியிருக்கிறான். சாதாரண விஷயமா இது? இத்தனை நாட்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதே அவனை ஓர் வேட்டையாடும் கொடிய மிருகமாய் மாற்றியிருந்தது. அவ்வளவு எளிதில் தோல்வியை ஏற்றுக் கொள்ளும்‌ ரகமல்ல இந்த ருத்ரன்.

ருத்ரன் உள்ளுக்குள் எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தான். “குட் அப்போ உன் முடிவையும் நீ தெரிஞ்சுக்க..” கண்களில் குரோதம் மிண்ண வெறித்துப் பார்த்தான்.

அமர்தீப்பை நோக்கி கையை நீட்டிய மறுநொடி அவன் கைகளில் முளைத்ததோர் துப்பாக்கி. இது நாள் வரை கூட இருந்தவன்‌ என்ற தயவு தாட்சண்யம் எல்லாம்‌ இங்கில்லை. துப்பாக்கியை நெற்றிப்பொட்டில் வைத்து‌ அழுத்தினான். அவ்வளவுதான் ‘டுமீல்’ என்ற சத்தத்துடன் எட்வர்ட்டின் மண்டையோட்டடை துளைத்துச் சென்றது குண்டு.

error: Content is protected !!