RR19 (2)

RR19 (2)

இன்று… 

 

மனமேடையில் பட்டு வேஷ்டி சட்டையில் மாலையும் கழுத்துமாக கம்பீரமாக அமர்ந்திருந்தான் ருத்ரன்.

 

தன் முழங்காலை கட்டிக்கொண்டு, அக்னி குண்டத்தின் முன், வெறித்தப் பார்வையுடன் அமர்ந்திருந்தாள் தாமிரா.

 

சுற்றியிருந்த யாரையும் அவள் கண்கள் கண்டு கொள்ளவில்லை.

 

வெண்ணிறத்தில் தங்க நிற ஜரிகையிட்ட பட்டுடன், நிலவு போல் ஒளிர்ந்து கொண்டிருந்தாள் அவள்.

 

அக்கினிக் குண்டத்தின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஐயர் மந்திரங்களை உச்சரிக்க,

 

தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளது வெண் சங்குக் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.

 

அந்த நொடி! அவளது வாழ்வில் மறக்க முடியாத நொடி. 

 

வார்த்தைகளால் வரித்திட முடியாத ஓர் உணர்வு உள்ளுக்குள் ஊற்றெடுக்க, அஞ்சனமிட்ட அவள் கண்களில் இருந்து சரேலென வழிந்த ஒற்றைக் கண்ணீர் அவளது கட்டுப்பாட்டையும் மீறி அவன் கையில் விழுந்தது.

 

ஏற்கனவே அவள் அவனது மனைவி தான். அப்படியிருக்க இத் தருணத்தில் மட்டும் அவள் மனம் ஏன் இப்படி கிடந்து தவிக்கிறது? 

 

ஏன் இந்த அர்த்தமற்ற உணர்வு? ஏன் இந்தக் காரணமற்ற கண்ணீர்? ஏன்? ஏன்? அவளால் விடை கண்டு பிடிக்க முடியாதவளாய் தோற்றுப் போனாள்.

 

இப்படி அமைதியாக அமர்ந்திருக்கும் கணவன் கூட அவளுக்குப் புதிது தான்.

 

அவனது இன்னொரு முகத்தை வெகு அருகில் இருந்து பார்த்து அனுபவித்தவளாயிற்றே.

 

அவன் புறங்கையில் விழுந்த அவளது ஒற்றைத் துளி கண்ணீர் அவன் மனதின் ஆயிரமாயிரம் உணர்வுகளை தோற்றுவித்தது.

 

வெண்ணிலவுச் சிற்பம் போல அமர்ந்திருந்தவளது பக்கவாட்டு தோற்றத்தை பார்த்தான்.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு அவனை தனியே சந்தித்து, அவள் முன்வைத்த சில கோரிக்கைகள் மனதில் ஓட, இறுகிய இதழ்களில் இளநகை சிந்தியது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு…

 

“லுக் மிஸ்டர் ருத்ரன். உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு, உங்க மனைவியா என்னால உங்க கூட வாழ முடியாது. இதெல்… ” என்றவளை இடைமறித்து,

 

“ஆல்ரெடி யூ ஆர் மை வொய்ப்” என்றான் சற்று குரலுயர்த்தி.

 

அது உண்மைதான். அவனை வெறித்துப் பார்த்தாள். இருந்தாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து,

 

“பட் உங்க மனைவியா நான் வாழலைங்குறது உங்க மனசுல இருக்கட்டும்.” என்றாள் வெடுக்கென.

 

“சோ வாட்? இனி என் மனைவியா தாராளமா இருக்கலாம்” அந்தப் பேச்சு அவளை கடுப்பாக்க அவனை முறைத்தாள்.

 

செய்வதெல்லாம் செய்துவிட்டு எப்படி இவனால் இப்படியெல்லாம் பேச முடிகிறது?

 

இவனுக்கு மனைவியா இருப்பது ஒன்று தான் குறைச்சல். அவனுடன் பேச்சை வளர்க்க விரும்பவில்லை.

 

“இங்கே பாருங்க. தேவையில்லாத பேச்சு வேண்டாம். எனக்கு உங்க கூட வாழ்றது கொஞ்சம் கூட இஷ்டமில்லை. இதெல்லாம் என் குடும்பத்துக்காக மட்டும் தான்.”

 

தொடர்ந்து, 

 

“நான் உங்களை காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டதாகவும் ஏதோ ஒரு மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்ல பிரிஞ்சுட்டதாகவும் தான் நெனைச்சிட்டு இருக்காங்க. அதுனால தான் உங்க கூடவே சேர்த்து வைக்க முடிவு பண்ணிருக்காங்க.” என்றதும் அவனது பார்வை அவளை துளைத்தது.

 

“நடந்த உண்மையெல்லாம் தெரிஞ்சு எங்க அப்பா கஷ்டப்படக்கூடாதுங்குற ஒரே காரணத்துக்காக தான் உங்க கூட வாழ… அதாவது பெயரளவுல  மட்டும் மனைவியா அவ்வளவுதான். 

 

அதுக்கு மேல எதையும் என்கிட்ட எதிர்பார்க்க கூடாது. அன்ட் நான் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் நீங்க தலையிட கூடாது. என்னோட ஜாப் கன்டினியூ பண்ணுவேன். என் இஷ்டப்படி தான் இருப்பேன். அப்புறம் அந்த வீட்ல என்னால இருக்க முடியாது. வேற வீடு அரேஞ்ச் பண்ணுங்க.

 

இதுக்கெல்லாம் நீங்க ஒத்துகுறதா இருந்தா இது நடக்கும்.” அவனை தீர்மானமாக பார்த்தாள்.

 

“ம்ம் ஓகே” என்றான் அவனும்.

 

என்ன சொன்னதுமே மறுக்காமல் ஒத்துக் கொண்டான். இதை நிச்சயமாக அவள் எதிர்ப்பார்க்கவில்லை. 

 

மெலிதாக அவள் மனதில் பரவிய ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டாள். 

 

அவன் எதையும் பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. கிளம்பி விட்டான்.

 

***

 

ருத்ரனது கறுப்புப் பக்கம் எவருக்கும் வெளிப்படையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. வெளியுலகிற்கு தெரியும் அளவிற்கு இவர்களது இல்லீகல் வேலைகள் நடப்பதுமில்லை.

 

ஆயுதம், கனிமங்கள், கறுப்புப் பணம் என அத்தனையும் புள்ளி விபரமும் புழங்கும் மாஃபியா நிழலுலக தாதாவாயிற்றே.

 

இப்படியானவர்கள் சமூகத்தில் பெரியளவில் மதிக்கப்பட்டு வரும் பணக்கார பெரும்புள்ளிகள்.

 

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கிளப் கேசினோ இதர நிறுவனங்கள் என பல லீகல் தொழில்களும் அவனுக்கு உண்டு.

 

அவன் வெளியுலகிற்கு செல்வாக்குள்ள செல்வந்தனாயிருந்தாலும், போலீஸ் அதிகாரியான விஸ்வநாத்திற்கோ அவனின் மறுபக்கமும் தெரிந்திருந்தது.

 

ஆனாலும் அவரால் அவனுக்கெதிரான ஆதாரங்கள் என சிறு துரும்பை கூட அசைக்கமுடியவில்லை.

 

இது இப்படியிருக்க, அவரது மகளே அவனை காதலித்து யாரும் அறியாமல்  திருமணம் செய்த கொடுமை அவருக்கு பெரும் கௌரவக் குறைச்சல். 

 

அதே சமயம் மகளின் வாழ்வு குறித்து அச்சம். அதைவிட அவள் மீதிருந்த பாசம்.  அதற்கு மேல் அவரால் அவனை எதுவும் செய்ய முடியாது கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார்.

 

அதிலும் தாமிரா அவனை காதலித்தாள் என்ற எண்ணமே அவரை அப்படியே நிலைகுலைய செய்து விட்டது.

 

தான் ஆசையாக வளர்த்த பெண் அவள். இப்படியொரு அயோக்கியனிடம் சிக்கிக் கொண்டாளே? அவர் உள்ளம் வெந்து போனது. அவரது நடமாட முடியாத நிலைக்குக் கூட காரணம் அதுவே.

 

அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து, கதவை தாளிட்டாள் தாமிரா.

 

“அப்பா…” என்றழைத்ததுமே இருவர் கண்களில் கண்ணீர் திரையிட்டது.

 

அருகில் ஓடிச்சென்று அவரை அணைத்துக் கொண்டாள். அழும் மகளின் தலையை ஆதரவாக வருடினார்.

 

எப்படி கம்பீரமாக நடமாடிய தந்தை இப்படியாகி விட்டாரே? என்று அவளும், எப்படியெல்லாம் அன்பாக ஆசையாக வளர்த்த மகளது வாழ்க்கையில் என்னவெல்லாம் நிகழ்ந்து விட்டது? என்று அவர் மனமும் வேதனையில் ஆழ்ந்திருந்தது.

 

“சாரிப்பா… என்னால தான் உங்களுக்கு இந்த நிலைமை” என்று அவள் விசும்ப,

 

“ச்சு… அழாதேமா. என்னால தான் உனக்கிந்த நிலைமையே. அ.. அன்னைக்கு உன்னை அப்படியே விட்டு வந்திருக்க கூடாது.” குழறலாக தெளிவின்றி வலியுடன் விழுந்த அவரது வார்த்தைகளில் உடைந்து போனாள் அவள்.

 

அவளது வீட்டில் தாமிராவுக்கும் அவரது தந்தைக்குமான பாசம் ‘எக்ஸ்ட்டரா ஸ்பெஷல்’. 

 

இந்த சில வருடங்களில் எல்லாம் தலைகீழாக மாற்றிவிட்டது போன்ற உணர்வு.

 

படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவரது மடியில்  அமைதியாக தலைசாய்த்து இருந்தாள் தாமிரா.

 

எத்தனை வலிகள். எத்தனை போராட்டங்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை மாற்றங்கள்.

 

அவரது மடியிலிருந்து எழுந்து நிமிர்ந்து தன் தந்தையை நோக்கினாள். வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள். ‌

 

“அப்பா… நீங்க ஆசைப்பட்ட மாதிரியே நடக்கும். எதுக்கும் கவலை படாதீங்க நான் இருக்கேன்.” 

 

“ஆனா நீ இதை எப்படி சமாளிக்க போறீயோனு நெனைச்சா தான்மா எனக்கு கவலையா இருக்கு” அவரது முகம் அதீத கவலையை காட்டி நின்றது.

 

அவரது ஆசை மகளாயிற்றே. அவள் ஏதேனும் ஆபத்தில் மீண்டும் மாட்டிக் கொள்வாளோ? என்ற பயமும் மேலோங்கியது. கண்களை  பயத்தை தேக்கி மகளை நோக்கினார் அவர்.

 

அவரது கைகளை தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டு, அவரது முகத்தை கனிவுடன் ஏறிட்டாள்.

 

“நீங்க எதுக்காகவும் பயப்படாதீங்கப்பா. நான் உங்க பொண்ணு” என்றாள் விறைப்பாக.

 

“ஆனா அ..அவன்…” மகளை எண்ணி கலங்கிப் பதற, இடைமறித்து,

 

“அவனால என்னை எதுவும் பண்ண முடியாதுப்பா. இதுக்கெல்லாம் சேர்த்து அனுபவிக்கத் தான் போறான். அனுபவிக்க வைப்பேன்” என்றாள் சூளுரைப்பது போல். தீர்க்கமான முடிவுடன் நிமிர்ந்தாள். 

 

தாமிராவின் கனிந்த முகம் மாறியது. கண்கள் சிவக்க, உள்ளே பொங்கும் அதீத கோபம் முகத்தில் பிரதிபலித்தது. சொன்னதை செய்து விடும் என்று உணர்த்தியது அவளது அந்த பார்வை. 

 

இத்தனை வருடங்கள் தந்தையும் மகளுமாக காத்திருந்தது இதற்குத் தானே.

 

அவனிடமிருந்து தப்பி வந்து  தந்தையின் உதவியுடன் தானே வெளிநாடு பறந்தாள். இப்போது கூட அவரது அழைப்பின் பேரில் தானே இலங்கை வந்தாள்.

 

அனைவர் முன்னிலையிலும் இருவரும் வேறு விதமாக நடந்து கொண்டாலும் அந்த தந்தை மகளது பாசம் வியக்கத்ததக்கது.

 

அவளது குடும்பமே அறியாத, அவர்கள் இருவரும் மட்டுமே அறிந்த உண்மையிது. 

 

அந்த வலியை அவனும் அனுபவிக்க வேண்டாமா?

 

காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும்.

 

****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!