Rudrangi – 17
Rudrangi – 17
~17~
பலவற்றைச் சிந்தித்து ஓய்ந்த ராதை தனது முடிவை தேடிக் கொள்ள, ‘தனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்’ என நினைத்த சிவா வீட்டை விட்டு ஓடி கண் காணாத இடத்திற்குச் சென்று செத்துவிட வேண்டும் என நினைத்தாள்.
வீட்டை விட்டு வெளியேறிய சிவா அருகில் இருந்த இரயில் நிலையத்திற்குச் செல்ல, சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கிச் செல்லும் இரயில் புறப்பட தயாராக இருந்தது.
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்நேரத்தில் இரயிலில் ஏறியவன், கழிவறைக்கு அருகே அமர்ந்து கொள்ள, நடுச்சாமத்தில் கண்காணிப்பு பணியில் இருந்த போலிஸ் கூடச் சற்றே அயர்ந்திருந்தது சிவாவிற்கு ஏதுவாய் போய்விட்டது.
காலையில் கண்விழித்த கிருஷ்ணன் ராதையை பெயரிட்டு அழைக்க, பதில் கொடுக்க வேண்டிய ராதையோ இவ்வுலகத்தை விட்டுப் போய் வெகு நேரம் ஆகியிருந்தது.
“என்ன ஆச்சு இவ்வளாவு நேரம் தூங்க மாட்டாளே..” தன்போக்கில் புலம்பியவர் கூடாரத்தில் ஒருபக்கம் படுத்திருந்த சர்வாவையும் கண்ணனையும் கடந்து செல்ல, கிருஷ்ணாவின் சத்தத்தில் மறுபுறம் படுத்திருந்த வாசுவும் எழுந்துவிட்டார்.
“டேய் எதுக்கு டா இப்படி காலங்காத்தால தங்கச்சி பேர ஏலம் விடுற..?” வாசுவின் பேச்சில் திரும்பி நின்று முறைத்த கிருஷ்ணா
“இன்னும் காணும்னு தேடுனேன் டா..” என்றவர் வாசுவைப் பார்த்துக் கொண்டே அறையின் கதவைத் திறக்க, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ராதையை முதலில் பார்த்தது வாசு தான்..
கிருஷ்ணா திரும்பும் முன், “டேய் வேணாம்டா..” கதறியவர், கிருஷ்ணாவின் முகத்தைத் தனது தோள் வளைவில் புதைத்துக் கொண்டார்..
அவரது கத்தலில் ஏதோ என்று அடித்துப் பிடித்து எழுந்த சர்வாவும் கண்ணனும் அவர்களின் அருகே வர, சாரா கூட எழுந்துவிட்டாள்.
ராதையின் நிலைப் பார்த்து சர்வா பிரமை பிடித்தாற் போல நிற்க, சத்தம் கேட்டு எழுந்து வந்த சாராவை தனது முதுகுக்குப் பின்னால் மறைத்துக் கொண்டான் கண்ணன்..
அனைத்தும் முடிந்துவிட்டதைப் போல் இருந்தது கிருஷ்ணாவிற்கு, மகன்கள் யாரும் அவரது நினைவில் இல்லை.
வாசுவின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவருக்கும் நிமிர்ந்து பார்க்கும் தெம்பு சுத்தமாய் இல்லை. இத்தனை நாள் இருந்த இனிமை முடிந்து வாழ்வின் வெறுமையை மனம் ஏற்க மறுத்தது.
அதிர்ச்சியில் உறைந்திருந்த சர்வா சில நிமிடங்களில் உயிர்பெற, தனது பொறுப்புணர்ந்து வேகமாய் சூழ்நிலையை கையில் எடுத்தவன்..
“அங்கிள் டாடியையும் சாரவையும் வெளியே கூட்டிட்டு போங்க..” என்றவன் வேகமாய் அக்கதவைச் சாத்த,
வாசு அவனது சொல் உணர்ந்து, கிருஷ்ணாவையும் சாராவையும் வெளி வாயிலுக்கு அழைத்துச் செல்ல அதற்குள் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வாசலில் கூடியிருந்தனர்.
யாரையும் உதவிக்கு அழைக்காத சர்வா, கண்ணனை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு,
“கண்ணா..நீ மேல பார்க்க வேணாம் அம்மாவோட காலை மட்டும் பிடிச்சிக்கோ..” சர்வாவின் சொல்படி கண்ணன் ராதையில் காலைப் பிடித்துக் கொள்ள, கட்டிலின் மேல் ஏறியவன் சிறிய ஸ்டூல் ஒன்றையும் போட்டு, அன்னையை பிடித்துக் கீழிறக்க, கண்ணன் மறந்தும் நிமிரவில்லை.
கட்டிலில் இருந்த பெட்டை ஒரே தள்ளில் கீழே இழுத்துப் போட்டவன், வெற்றுக் கட்டிலில் அன்னையைப் படுக்க வைத்தான்..
சுற்றத்தாரை யாரும் உதவிக்கு அழைக்க அவன் மனம் விரும்பவில்லை.
இன்னும் மடிந்து அழுது கொண்டிருந்த தந்தையிடம் சென்றவன், “அப்பா..உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்..வாங்க” என்றவன் அவரது கையைப் பிடித்து தூக்க, கைப்பாவையாய் அவனுடன் சென்றார் அவரும், “அம்மா நம்மள விட்டு போயிட்டாங்க…” அவன் வாயை மூடி கிருஷ்ணா கதறி அழ
தனது வாயை மூடிய அவரது கரத்தை விலக்கியவன், “இது தான் உண்மை..இப்போ அழுறதுல ஒண்ணும் ஆகப் போறது இல்ல..” கலங்காத குரலில் சொன்னவனின் வார்த்தை அவருடைய கடமையைச் சுட்டிக் காட்ட
ராதையை படுக்க வைத்திருந்த அறைக்குள் நுழைந்தவருக்கு மனைவியின் புறம் கண்கள் திரும்ப, கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.
கண்ணனிடம் சாராவை கொடுத்தவர், “சாரா இங்கயிருக்கும் பாத்ரூம் போய் ஃபிரஷ் ஆகிட்டு அண்ணன் கிட்ட போ..” என்றவர் கண்ணனிடம் திரும்பி,
“பேபி வந்ததும் அவளைப் பக்கத்தில் இருக்கும் டீ கடைக்கு கூட்டிட்டு போ அதுக்குள்ள இங்க இருக்கும் நிலையை நான் சரிபண்ணி வைக்கிறோம்..” தந்தையிடம் சரியெனத் தலையசைத்தவன் சாராவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்..
சாராவிற்கு அங்கு ஏதோ பிரச்சனை என்று தெரிந்தாலும், என்ன கேட்கவென்று தெரியாததால் அமைதியாய் கண்ணனுடன் சென்றாள்.
அழுது கொண்டே நின்ற கிருஷ்ணாவின் தோள் தொட்டு அசைத்தவன், “நீங்க அம்மாவுக்கு பண்ண வேண்டியதை பண்ணுங்க..” என்றவன் பீரோவில் இருந்து கத்தைப் பணத்தை எடுத்துக் கொண்டிருக்க அதற்குள் விஷயம்
கேள்விப்பட்டு நண்பர்கள் அனைவரும் வந்துவிட்டனர்.
அவர்களை வைத்து முடிந்தவரையிலும் அனைத்தையும் செய்து முடித்தவனுக்கு அந்நேரம் தான் சிவாவின் நினைவு வந்தது.
அதற்குள் அக்கம் பக்கத்தில் சொற்ப நல்லுள்ளங்கள் வந்து பாதி வேலையை முன்னின்று செய்ய, ராதையின் உயிரற்ற உடலைச் சுத்தப்படுத்தி ஹாலில் ஒற்றைக் கட்டில் போட்டுப் படுக்க வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட உடல், போலீஸ் கேஸ் என்று போனால் கூறு போட்டு மிச்சம் மீதியைக் கொண்டு வருவார்கள் என்பதால் அன்று மாலையே உடலை எடுக்க முடிவு செய்தார் வாசு.
எதிலும் கிருஷ்ணா தலையிடவில்லை இனி ஒன்றும் இல்லை..என்ற மனநிலையில் இருந்தார். தன்னை இதுநாள் வரையில் தாங்கியிருந்த பிடி நழுவி வாழ்வின் பிடித்தம் இல்லா நிலை தான் அவருடையது.
சிவாவைத் தேடி வேகமாய் வீட்டினுள் வந்த சர்வா, கண்களால் அவளைத் தேட குழுமியிருந்த கூட்டத்தில் அவள் இருப்பதற்கான தடம் தெரியவில்லை..
ஒவ்வொரு அறையாகச் சுற்றிப்பார்க்க எங்கும் அவள் இல்லை..அவனின் தேடலை வைத்து அப்போது தான் சிவா இல்லாததைக் கவனித்தார் வாசு.
வெளியே சென்ற சர்வாவின் பின்னே சென்றவர் பேசத் துவங்கும் முன், “அங்கிள் சிவாவ காணோம்னு அப்பா கிட்ட சொல்ல வேணாம்..” தூரத்தில் இருந்த இரண்டு நண்பர்களைக் கையசைத்து அருகே அழைத்தவன்
“சிவாவ காணோம் பக்கத்துல இங்க எங்காயாச்சும் இருக்கானான்னு பாருங்க..வேற யாருக்கும் தெரிய வேணாம்..” அவனால தான இவ்வளவும் இப்பவும் தம்பிய தேட சொல்கிறானே என நண்பர்கள் நினைத்தாலும் அவனின் சொல்லுக்கு வேண்டித் தேட சென்றனர்.
எல்லாம் முடிந்துவிட்டது..மாலையில் சர்வா முன்னிருந்து அனைத்தையும் முடித்துவிட்டான்..சிவா கண் காணத் தூரத்திற்கு சென்றுவிட்டாள்..
இன்னும் கிருஷ்ணாவிற்கு சிவா இல்லாதது தெரியாமல் இருந்தது. சர்வாவின் முகத்தில் இருந்து ஒரு துளி கூடக் கண்ணீர் சிந்தவில்லை..
கூடியிருந்தவர்கள் அனைவரும் அவனை அழச் சொல்ல, யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை, அழவும் இல்லை.. முகத்திலிருந்த இறுக்கம் யாரையும் அவனிடம் நெருங்கவே தயக்கம் கொள்ள வைத்தது..
“இப்படி அழமா இருக்க கூடாது பா..” என வாசு சொன்னதற்கு கூட அவனது முகம் எதையும் பிரதிபலிக்க வில்லை..
கிருஷ்ணாவிடமும் வாசுவிடமும் மட்டும் தான் பேசினான்.. நண்பர்களிடம் கூட சுருங்கப் பேசியவன், கண்ணனின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை.
எல்லாம் முடிந்து அனைவரும் சென்ற பின்னர், தந்தையிடம் சொல்லாமா? வேணாமா? என ஒரு நிமிடம் சிந்தித்தவன் பின் வேண்டாம் என முடிவெடுக்க
அதற்குள் கிருஷ்ணா, “சிவா..” என அழைத்தார்…அவருக்கும் சின்னவன் துவண்டிருப்பான் என அப்போது தான் தோன்றியது.
சிவாவை அழைத்தவருக்கு விடையில்லாமல் போக அவரது அருகே வந்த சர்வா..
“சிவா இங்க இல்லை..” என்றான் சாதாரணமாய்
காலையில் இருந்து அழுதழுது ஓய்ந்த சாரா உறங்கியிருக்க..விஷயம் அறிந்திருந்த கண்ணனும் வாசுவும் அமைதியாய் நிற்க,
“இல்லைனா என்ன பா அர்த்தம்..” எனத் தவிப்பான குரலில் அவர் கேட்க
“சிவா நம்மல விட்டு போயிட்டான்..” என்ற சர்வாவின் குரலில் இப்போது இருந்தது கையாலாகத் தனத்தின் வெளிப்பாடு மட்டுமே..
அதிர்ந்து அவர் பார்க்கும் போதே வாசு நடந்ததைச் சொல்ல, மார்பை பிடித்துக் கொண்டு சுருண்டு விழுந்தார் கிருஷ்ணன்..
நால் வராய் இருந்த இந்தச் சின்ன குடும்பத்தைச் சிதறடித்தது எதுவெனத் தெரியாமலே மொத்தமும் அவர்களின் கைவிட்டு சென்றிருந்தது.
******
ரயிலில் ஏறிய ரவி அப்ஷராவிற்கு அழைத்துக் கிளம்பிவிட்டதாய் விவரம் சொல்ல, அவளும் பத்திரமாய் போயிட்டு வாங்க எனச் சொல்லி வைத்தாள்..
இருவருக்குமே இது புதிதான அனுபவம் தானே..இத்தனை வருடம் பின் பொறுப்பான கணவனாய் அவன் நடந்து கொள்ள, அவளுக்கு இது பிடித்திருந்தாலும் என்ன பேசுவது என இருவருக்கும் புரியாத நிலை.
அவள் போனை வைத்ததும், அவளிடம் பேச வேண்டும் என ஆவல் கொண்ட மனம் அவனுக்குப் புதிதாக இருந்தது..
நேரில் சென்றதும் அவளிடம் பேசி தெளிய வைத்துக் கொள்ள வேண்டும் நினைத்தவன்.. தனது மடிக்கணியை உயிரூட்டி அதில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்..
காலம் இவன் தன்னிலை விளக்கத்தைக் கொடுக்க வைக்குமா..?
அலுவலக வேலையைச் சிறிது நேரம் செய்தவன், சிறிது நேரம் வெளியே நின்றுவிட்டு வரலாம் என நினைத்து வெளியே வர, அந்தப் பெட்டியில் கூட்டம் அவ்வளவாக இல்லை…
பாதி பெட்டியைக் கடந்து வந்தவனுக்கு அப்போது தான் சன்னமான அழுகை ஒலி அவனது காதில் விழுந்தது..
சுற்றும் முற்றும் பார்த்தவன், சத்தம் வந்த திசை நோக்கி மெதுவாய் முன்னேறச் சன்னமான அழுகை ஒலி இப்போது பெருத்த கதறலாய் கேட்க,
வேக எட்டுக்கள் தான்… ஆனால் நடையில் ஒருவிதமான அழுத்தம்…பத்தடி தூரத்தை நொடியில் கடந்தவனின் விழி வட்டத்தில் காலை சுருக்கி முகம் புதைத்து அழுது கொண்டிருந்த சிறுவன் பதிலாய் கிடைத்தான்..
சிறுவனின் அருகே அமர்ந்தவன், அவனின் தோள்தொட்டு நிமிர்த்த…
ரவியின் வருகையை அறியாத அச்சிறுவன், கால் வெடவெடக்க நிமிர்ந்து பார்த்தான்..
எதிரில் நின்ற ரவி பார்க்க நல்லவனாகத் தெரிந்தாலும், ஆண் என்ற ஒரே காரணத்திற்காக அவனிடம் இருந்து இரண்டடி பின்னெடுத்து வைக்க
அவனது ஒதுங்கலில் உடல் அசைவில் புரிந்து கொண்டான் அச்சிறுவனின் நிலையை..
“நான் உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன் மா..” சின்னச் சிரிப்புடன் சிறுவனை அணுகி
“எழுந்துக்கோ..” என்றான்
அவனின் நேர்கொண்ட பார்வையும் சிநேகமான புன்னகையிலும் நம்பிக்கைக் கொண்ட அச்சிறுவனின் பார்வையில் பயம் நீங்கி இப்போது கலக்கம் குடியேற எழுந்து நின்றான்..
கைகளை மார்பின் குறுக்கே கட்டிய ரவி, “உன் பெயரென்ன..?” என்று வினவ
தயக்கமான குரலில், “சிவா..” எனச் சிறுவன் சொல்ல
“நீயும் எனக்குத் தங்கை போலத் தான் சிவா..சொல்லப் போன எனக்கும் உன்னை மாதிரி ஒரு தங்கை இருக்கா..” என்றவனின் மொழியில் முதன் முறையாகத் தலை நிமிர்ந்து அமர்ந்தாள் சிவா..
அரவாணியான தன்னைத் தங்கை என ஏற்றுப் பேசும் ரவியின் பேச்சில் சிவாவின் முகம் பிரகாசித்தது.
அவர்களுக்கு வேண்டியது பணம் அல்ல ஒற்றை அங்கீகரிப்பு தான் என அன்று அப்ஷரா யாரிடமோ சொல்லியது இன்று ரவிக்குமே புரிந்தது..
ருத்ராங்கி வருவாள்..