ruok4

ruok4

நிலா-முகிலன் 4

முகிலன் என்னதான் சிரித்து பேசுகிக்கொண்டிருந்தாலும், மனதிற்குள் வருந்துகிறானோ என்ற எண்ணம் தோன்றவும், “யாருக்கு யாருன்னு அந்த சர்வேஸ்வரன் எழுதி வெச்ச எழுத்தை யாராலும் மத்த முடியாது கண்ணப்பா! ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரான்னு போயிட்டே இருக்கணும்!” என மாமா இலகுவாகச் சொல்ல, அதற்குப் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்த முகிலன், நிலாவைக் காண்பித்து ஜாடை செய்யவும், அது புரிந்தவராக, “ம்மா அழகி! நாளைக்கு மதுரைக்குப் போய் உங்க அம்மா அப்பாவை பார்த்துட்டு வாரலாமான்னு கேட்கறேன் இவன்?!” என்று கேட்டார் மாமா நிலாவிடம்.

அவரது அந்த கேள்வியில் முகம் இருண்டு போக, “வேண்டாம் யங் மேன்! அந்த அம்மாவாவது பரவாயில்லை, ஆனால் அவரு ரொம்பவே அடமன்ட்! ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு அங்கே போயிருந்தேன் இல்ல, அப்ப நான் எவ்வளவு கெஞ்சினேன் தெரியுமா? கொஞ்சம் கூட கன்சிடர் பண்ணல! எனக்கு என்னவோ பிடிக்கல!” என்றாள் நிலா கண்களில் வெறுமையுடன்.

“இல்ல! நாளைக்கு நாம மதுரைக்கு போறோம் டாட்! மார்னிங் அஞ்சு மணிக்கு, ஒரு செட் ட்ரெஸ்ஸ பாக் பண்ணிட்டு  நீ ரெடியா கீழ வந்திருக்கணும்! நைட்டு மாமா வீட்டிலேயே படுத்துக்கோ! நீ தூங்கினாலும் சரி! இல்லாம போனாலும் பரவாயில்லை! இட்ஸ் அன் ஆர்டர்!” என்றான் முகிலன் திட்டவட்டமாக.

அதில் சுறு சுறுவென கோபம் ஏற, “நீங்க யாரு மிஸ்டர் எனக்கு ஆர்டர் போட! என்னால வர முடியாது!” என அவள் பட்டென்று பதில் சொல்ல,

“உனக்கு பிரபாவைக் கண்டு பிடிக்கணும்னா நான் சொல்றத நீ கேட்டே ஆகணும்! அப்பறம் உன் இஷ்டம்!” என இலகுவாகச் சொல்லிவிட்டு, அவளது பதிலையும் கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்றான் முகிலன்.

சென்னையில் இருக்கும் நாட்களில், விளையாட்டுத் தனத்துடன் வெகு இயல்பாக நடந்துகொள்ளும் முகிலனின் இந்த பிடிவாதமும் அழுத்தமும் மாமாவுக்கு புதியதாக இருக்கவும், அப்படியே அதிர்ந்துபோய் நின்றார் ஜீ.கே மாமா.

***

இருள் மறையாத அதிகாலை, முகிலன் தன்னுடைய நீல நிற ‘ஓக்ஸ் வேகன் ஜெட்டா’வை வாகன நிறுத்தத்திலிருந்து கிளப்பிவந்து, அந்த குடியிருப்பின் வாயிலை அடைய,  குழப்பம், பயம் என அத்தனை உணர்ச்சிகளும் முகத்தில் நிறைந்திருக்க, அங்கே நின்றுகொண்டிருந்தாள் நிலா.

மதுரைக்கு கிளம்பிக் கொண்டிருந்த அவர்களை வழி அனுப்பவென அங்கே அவளுடன் நின்றுகொண்டிருந்தனர் ஜீ.கே மாமாவும், மாமியும்.

கையில் வைத்திருந்த சிறிய பயணப்பையுடன் காரின் பின் புற இருக்கையை நோக்கி நிலா போகவும், முன் புற கதவைத் திறந்தவாறே, “ஹேய்! உனக்கு என்ன மனசுல பெரிய மகாராணின்னு நினைப்பா?  என்னை உன்னோட ட்ரைவர்னு நினைச்சியா! ஒழுங்கா முன்னால வந்து உட்காரு!” என அவன் அதட்டலாகச் சொல்ல, “முகிலா! பாவம்டா அவ. இப்படி மிரட்றதா இருந்தா, நீ மட்டும் போய்ட்டு வா!” என்றார் மாமி கண்டணக் குரலில்.

மாமா முந்தைய இரவே அனைத்தையும் மாமியிடம் சொல்லியிருக்க அவருக்கும் ஓரளவிற்கு நிலாவின் நிலைமை புரிந்திருந்தது.

“வாங்க மேடம்! வந்து முன்னால உட்காருங்க மேடம்!” என மிகப் பணிவுடன் சொன்ன முகிலன், மாமியிடம், “இது போதுமா பியூட்டி!” என்றான் மேலும் பணிவான குரலில்.

“உன்னோட இந்த துஷ்ட தனத்துக்கு, என் கிட்ட அடிதான் வாங்க போற பாரு! ஒழுங்கா கிளம்பு! குழந்தையைப் பத்திரமா கூட்டிண்டு போ! அவ அப்பா அம்மா அவளை ஏத்துண்டான்னா, அங்கேயே விட்டுட்டு வா! இல்லனா நாம பார்த்துக்கலாம்” என்றார் மாமி மிகவும் கரிசனத்துடன்.

அதற்குள் நிலா முன் பக்க இருக்கையில் வந்து அமர்ந்திருக்க, ‘பியூட்டி! அவங்க இந்த குழந்தையோட அப்பா அம்மாவா இருக்க வாய்ப்பே இல்ல! அங்கே போனால் என்னென்ன காமெடியெல்லாம் நடக்க போகுதோ; ஓ மை கடவுளே!’ என மனதில் எண்ணியவன்,

“நீங்க சொல்லிட்டீங்க இல்ல அப்படியே செஞ்சிடலாம் பியூட்டி! பை!” என்று சொல்லிவிட்டு, அவர்களிடம் விடை பெற்று காரை கிளப்பினான் முகிலன்.

அதே நேரம், அங்கே வந்து நின்ற கால் டாக்ஸியிலிருந்து இறங்கி, “ஸ்டாப்! ஸ்டாப்!” என்றவாறே பயணப் பெட்டியை இழுத்துக்கொண்டு, முகிலனின் வாகனத்தை நோக்கி ஓடிவந்தான் ஒரு நெடியவன்.

அவனைப் பார்த்ததும் இன்ஜினை அணைத்துவிட்டு, “கட்டதொரைக்கு கட்டம் சரியில்ல!” என முணுமுணுத்தவாறு தலையில் கையை வைத்துக்கொண்டான் முகிலன்.

அவர்கள் இருவரையும் மாற்றி மாற்றி ஒரு புரியாத பார்வை பார்த்தாள் நிலா!

“ஹேய்! கதிர்! வாடா வா! எப்படி இருக்க?” என மாமா மிகவும் குதூகலமாக அவனை வரவேற்க, அவர்கள் அறியாமல் வாயை மூடிக்கொண்டு நக்கலாகச் சிரித்தவாறே மாமி, முகிலனுக்கு அருகில் வர, கண்ணாடியை இறக்கினான் முகிலன்.

அவனிடம் குனிந்து, “உன்னை வெறுப்பேத்தறாராம் மாமா! நீ கண்டுக்காத, இவனை நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு! என்றார் மாமி.

அதற்குள் மாமாவால் கதிர் என அழைக்கப்பட்டவன், யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல், அவனுடைய பயண பெட்டியின் நீண்டிருந்த பிடியைச் சுருக்கி,  டிக்கியை திறந்து அதில் திணித்து விட்டு, காரின் பின் கதவைத் திறந்து, “ஹை! பிரின்சஸ்! அது என்னை மாதிரி அடிமைகள் உட்காரும் சீட், நீங்க இங்க வந்து உட்காருங்க!” என சொல்லிக்கொண்டே முன் புற கதவைத் திறக்க,

முகிலன் அவளை மிரட்டியது எதையும் அறியாமல், அவன் அந்த இருக்கையைப் பற்றி கொடுத்த விளக்கத்தினால் பதட்டம் அடைய, “டேஏஏஏய்! இப்ப மேனர்ஸ் இல்ல! அது இல்ல; இது இல்லன்னு குஷி ஜோ அக்கா மாதிரி ஆரம்பிச்சான்னா, மதுரை போய் சேரும் வரைக்கும் அவ நிறுத்த மாட்டா…டா. இவன் வேற சும்மா இருக்கற சிங்கத்தை சீண்டி பாக்கறான்!” என முகிலன் கடிந்துகொள்ள,

குதூகலத்துடன், “அண்ணா! நாம மதுரை போறோமா!” எனக் கேட்டான் கதிர்.

“நாங்க ரெண்டு பேர் மட்டும்தான் போறோம்! நீ ஏன் உன்னையும் கூட சேர்த்துக்கற?” என முகிலன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கதிர் முன் புற இருக்கையில் அமர்ந்திருந்தான். பின்புறமாக இடம் மாறியிருந்த நிலா, அவனை முறைத்துக்கொண்டு உர்ர்! என உட்கார்ந்திருந்தாள்.

நொந்தே போனவனாக, தலையில் அடித்துக்கொண்டான் முகிலன்.

அதைப் பார்த்து, “டேய் இது வெறும் டீசர்தான்! இனிமேல்தான் இருக்கு ஃபுல் என்டர்டைன்மென்டே!” என்றார் மாமா கிண்டல் ததும்பி வழியும் குரலில்.

முழங்கையால் மாமாவின் விலாவில் இடித்தவாறே, “ஏன்னா நீங்க சும்மாவே இருக்க மாட்டிங்களா? பாவம்னா அவன்! ஏற்கனவே அவ அவனை ஒரு வழி பண்ணிண்டு இருக்கா! போறாக்குறைக்கு இவன் வேற சேந்துண்டான்னா அவ்ளோதான்” என்றார் மாமி காட்டமாக.

“கவலையே படாதடீ! அவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்! ஏன்னா உன் அபிமான புத்ரன் ரொம்போ நல்லவன்!” என மாமாவின் கிண்டல் தொடர,

“கர்மம்! கர்மம்! உங்க பேத்தி கூட சேர்ந்துண்டு, எப்ப பாரு டிக் பண்றேன் டொக் பன்றேன்னு,  வடிவேலு டயலாக்கலாம் பேசிண்டு, ரொம்ப கெட்டு போய் இருக்கீங்கோ! ஆத்துக்கு வாங்கோ, உங்களுக்கு இருக்கு!” என்று நொடிந்துகொண்டு, “கண்ணப்பா! ஜாகர்த்தையா போயிட்டு வாடா! பத்திரம்!” என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்றார் மாமி!

“ஜோக்ஸ் அபார்ட் முகிலா! பத்திரமா போயிட்டு வா!” என்றார் மாமாவும் முழு அக்கறையுடன்.

குழப்பமும் குதூகலமுமாகத் தொடங்கியது அவர்களுடைய அந்த பயணம்.

***

“என்னடா இந்த நேரத்துல இங்க வந்து குதிச்சிருக்க?” என முகிலன் கேட்க, “நேத்து நைட், உங்களை பார்க்கணும்னு மனசுல ஒரு கிங்பிஷர் வந்து கூவிச்சு! உடனே ஸ்பைஸ் ஜெட்ட பிடிடுச்சு இங்கே வந்துட்டேன்!” என்றான் கதிர் கொட்டாவியுடன்.

“டேய் பாவி! என் பக்கத்துல உட்கார்ந்து தூங்கித் தொலைக்காத!அப்பறம் மதுரைக்கு போகாமபோட்டோம் நேரா பரலோகம்தான்!” என்ற முகிலன் தொடர்ந்து, “எல்லாருக்கும்  மனசுல குயில்தான் கூவும், உனக்கு மட்டும் எப்படிடா கிங்பிஷர் கூவுது!” என நக்கலாக கேட்க, “அது மனசுல ஃபிகர நினைச்சா குயில் கூவும், உங்கள மாதிரி முரட்டு சிங்கிள நினைச்சா கிங்பிஷர்தான கூவும்” என்றான் கதிர் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

கதிர் வளவளத்துக்கொண்டே வர, நிலா ஒரு வார்த்தை கூட பேசாமல் உட்கார்ந்திருக்கவும், “நானே மிங்கிள் ஆகணும்னு நினைச்சாலும், அது நடக்கவே நடக்காது போல இருக்கே! எல்லாமே கால கொடுமைடா கதிரவா!” என்றவாறு ‘ரியர் வ்யூ’ கண்ணடியைச் சரி செய்வது போல அவளுடைய முகத்தைப் பார்த்தான் முகிலன்.

எந்த ஒரு உணர்ச்சியையும் முகத்தில் வெளிக்காட்டாமல்,  அமைதியாக உட்கார்ந்திருந்தாள் அவள்.

அவனுடைய செய்கையைக் கவனித்த கதிர் மட்டும், தொண்டையை செருமிக்கொண்டு, “நடக்கட்டும்! நடக்கட்டும்!” என்றான் விஷமமாக.

அதில் பொறுமை இழந்த முகிலன், “ஜிம்முக்கு போய் பாடியை மட்டும் நல்லா வளர்த்து வெச்சிருக்க, மூளை கொஞ்சம் கூட வளரல.

அதனாலதான் மூணு அட்டம்ட் அடிச்சும் உன்னால இன்னும் யூபிஎஸ்சி கிளியர் பண்ண முடியல.

எப்ப பாரு கேர்ள் ஃப்ரண்ட்ஸ் பப்; டிஸ்கோ தே..ன்னு ஊரை சுத்திட்டு, டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க.

இதுல என்னையே ஓட்டுறயா நீ!

வெளுத்துடுவேன் பாத்துக்கோ!” என எறிந்து விழ, ஒரு பெண்ணின் எதிரில் அவன் இப்படிப் பேசவும் தர்ம சங்கடமாகப் போனது கதிருக்கு.

அந்த எண்ணத்தில் அனிச்சை செயலாக அவன் பின்புறம் திரும்ப, மிகவும் முயன்று நிலா சிரிப்பை அடக்குவது புரிந்தது. அதை உணர்ந்ததும் அவனுடைய முகம் தொங்கிப் போனது.

அவனைப் பார்க்க முகிலனுக்கே பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் கதிரை சமாதானம் செய்யும் விதமாக அவன் எதாவது பேசினால், அவனுடைய அட்டகாசம் எல்லை மீறும் என்பதை நன்கு அறிந்திருக்கவும், அப்படியே விட்டுவிட்டான் அவன்.

வண்டி செங்கல்பட்டைக் கடக்கவும்,அதன் வேகம் நூற்றிநாற்பதை தாண்டி பறந்தது. சற்று நேரம் அங்கே இறுக்கமான மௌனமே குடிகொண்டிருக்க, “பசிக்குது, எதாவது சாப்பிட்டுட்டு போகலாமா?” எனக் கேட்டு அந்த மௌனத்தைக் கலைத்தாள் நிலா.

சில நிமிடங்கள் பயணித்து, ஒரு உணவகத்தில் வாகனத்தை நிறுத்தினான் முகிலன். மணி காலை எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த உணவகத்தின் உள்ளே நுழைந்ததும், வேண்டிய உணவைச் சொல்லிவிட்டுக் காத்திருக்க, “மூன் மேடம்! உங்களுக்குப் பேசவே தெரியாதா? நானும் கார்ல ஏறினதுல இருந்து பார்த்துட்டே இருக்கேன், சைலன்ட் மோட்லேயே வந்துட்டு இருக்கீங்க! எங்க கிளவுட் அண்ணா வேற பயங்கர வைப்ரஷன் மோட்ல இருக்காரு!” என்று கேட்டு அதுவரை கொஞ்சம் அடங்கி இருந்த கதிர், மறுபடியும் அவனுடைய சேட்டையை ஆரம்பித்தான்.

அதற்கு முகிலன் அவனைப் பார்த்து முறைக்கவும், “அண்ணா முக்கியமா எதையாவது டார்கெட் பண்ணிட்டு இருக்கீங்களா? ஒய் திஸ் மச் சீரியஸ் என்றவன்,

அங்க அப்பா செம்ம திட்டு. உங்களையும் அண்ணாவையும் கம்பேர் பண்ணி கொல்றாரு.

அவரு பெரிய ஆபீஸரா இருந்தாருன்னா, என்னை ஏன் பரேட் எடுக்கணும்.

நான் என்ன வெச்சுட்டா வஞ்சனை பண்றேன்!

அண்ணா அவனோட படிப்பு,கேரியர், பொண்டட்டி புள்ளகுட்டின்னு வெளி நாட்டுல போய் செட்டில் ஆகிட்டான். நீங்க பாட்டுக்கு திடீர் திடீர்னு மாயமா மறைஞ்சுடுவீங்க.

நான் இங்க வந்ததே நீங்க இப்ப இங்க இருக்கறதாலதான். உங்க கூட இருந்தால் ஜூன் எக்ஸாம்க்கு ரிலாக்ஸ்டா பிரிப்பர் பண்ண முடியும்னுதான்.

அவர்தான் அப்படி பண்றாருன்னா, நீங்களுமா?” என கதிர் புலம்பலில் இறங்க, “ரிலாக்ஸ் கதிர்! நீ இங்க வரப்போறத என் கிட்ட முன்னாடியே இன்பார்ம் பண்ணி இருக்கலாம் இல்ல? நான் உனக்கு எதாவது அரேன்ஞ் பண்ணி இருப்பேனே; என் கூட சேர்ந்து இப்படி அலைய வேண்டாமே!” என்றான் முகிலன்.

“இல்லணா! ஐ என்ஜாய் திஸ் லாங் ட்ரைவ்!” எனக் கதிர் சொல்ல, “நாங்க என்ன ஜாலி டூரா போறோம் என்ஜாய் பண்ண! நானே கடுப்புல இருக்கேன்!” என்றான் முகிலன் நிலாவைப் பார்த்துக்கொண்டே.

அவள் அதைக் கண்டு கொள்ளாமல், உணவிலேயே கவனமாய் இருக்க, “அந்த பொண்ணுக்கு காது கேக்காதா?” என்று கதிர் முகிலனிடம் கொஞ்சம் சத்தமாகவே கேட்டுவிட, “எனக்குக் காது நல்லாவே கேட்கும். உனக்குத்தான் வாய் கொஞ்ச நேரம் கூட சும்மாவே இருக்காது போல இருக்கு.

நீ இதே மாதிரி லொட லொடன்னு பேசிட்டே வந்தேன்னு வை! லோக்கல் அனஸ்தீசியாவே கொடுக்காமல் வாய்ல அப்படியே ஸ்வீச்சர்ஸ் போட்டுடுவேன். ஜாக்கிரதை!” என அவள் மிரட்டலாகச் சொல்ல, “மேடம்க்கு பெரிய எண்ட்டு சார்ஜன்னு மனசுல நினைப்பா?” என அவன் பதிலுக்கு எகிற, “என்ன எண்ட்டா!” என அவள் கேட்கவும், “அமாம் காது மூக்கு டாக்டரைத்தான் சொன்னேன். நீ கமல் படமெல்லாம் பார்த்தது இல்லையா?” என அவளை விடாமல் வாரினான் கதிர், அவர்கள் சண்டையில் தலையைப் பிடித்துக்கொண்டான் முகிலன். அதைப் பார்த்ததும்தான் அடங்கினர் இருவரும்.

அவர்கள் உணவு உண்டு முடித்து, பிறகு அவர்களுடைய பயணத்துடன் சேர்ந்து, இருவரின் சண்டையும் தொடர்ந்தது.

நிலா அவளுடைய பெற்றோருடைய முகவரி  எனக் கொடுத்திருந்த மதுரை திருமங்கலத்தில் இருக்கும்,அந்த வீட்டிற்கு ஒரு வழியாக மதியம் ஒன்றரை மணி வாக்கில் வந்து சேர்ந்தனர் மூவரும்.

ஓரளவிற்கு அந்த இடத்தை அடைய அவளே சரியாக வழியும் காண்பித்தாள்.

ஆனாலும் அவர்கள் அந்த வீட்டை அடைந்ததும், வீட்டிற்குள் வர அவள் முற்றிலும் மறுத்துவிட, அவளை காரிலேயே விட்டுவிட்டு, முகிலனும் கதிரும் அந்த வீட்டிற்குள் சென்றனர்.

சிறிய தோட்டத்தின் நடுவில், அழகாக அமைந்திருந்தது குட்டி பங்களா போன்றிருந்த அந்த தனி வீடு.

வீட்டின் அழைப்பு மணியை அழுத்தவும், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கதவைக் கொஞ்சமாகத் திறந்து எட்டிப் பார்த்தார்.

“இங்க நிலாவோட அம்மா?” என முகிலன் கேட்க, அவனை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்த அந்த பெண்மணி சற்றே தயக்கத்துடன், “நான்தான்; நீங்க யாரு?” எனக் கேட்க,

நாங்க சென்னைல இருந்து வரோம்மா! அங்க நிலா இருக்கும் பிளாட்லதான் நானும் குடி இருக்கேன்!” என அவன் சொல்ல, அதே சமயம், ஓட்டி வந்த புல்லட்டை ஓரமாக நிறுத்திவிட்டு, அவர்களை நோக்கி வந்தார் ஐம்பதைக் கடந்த வயதில் இருக்கும் ஒருவர்.

அவர் வந்த உடனேயே, கதவை நன்றாகத் திறந்து, அவருக்கு வழி விட்டு விலகி நின்றார் அந்த பெண்மணி. அவருடைய அந்த உடல் மொழியிலேயே தெரிந்து போனது அப்பா என நிலா குறிப்பிட்ட அந்த நபர் அவர்தான் என்று.

அந்த பெண்மணி முகிலன் கூறியவற்றை அவரிடம் சொல்ல, “செத்துப்போனவள பத்தி கேட்டுகிட்டு, எதுக்காக இங்குட்டு வந்திருக்கானுங்களாம்!” என அவர் கேட்கவும்,

முகிலனுக்கு கோபம் சுள்ளென்று ஏறினாலும், அதை அடக்கியவனாக, “அவங்க உங்களுக்கு பிடிக்காம கல்யாணம் பண்ணிட்டது தப்புதான். அதுக்காக நீங்க இப்படி பேசக்கூடாது.  உங்க பொண்ணு மேண்டலி ரொம்ப டிஸ்டர்ப்டா இருகாங்க. உங்க கூட இருந்தால்தான் அவங்க நார்மல் ஆவாங்க!” என அவன் அடுக்கிக்கொண்டே போக, ‘முகிலன் அண்ணாவா இவ்ளோ பொறுமையா பேசறாங்க?!’ எனக் கதிர் வாய் பிளந்து நின்றான்.

“டேய் என்னடா பெருசா பேச வந்துட்ட! எதாவது இப்படி செஞ்சு பணம் பார்க்கலாம்னு கிளம்பி இருக்கீங்களா! செத்தவளை எப்படிடா நாங்க கூட வெச்சுக்க முடியம்?” என அவர் மரியாதையைக் கைவிட்டவராக ஏக வசனத்தில் பேசவும்,

“யோவ் பெரிய மனுஷனா தெரியரியே! பாங்க்ல வேலை செய்யரையே கொஞ்சமாவது மரியாதையை தெரிஞ்சிருக்கும்னு பார்த்தேன்! இவ்ளோ கேவலமா நடந்துக்கற! உயிரோட இருக்கற பெத்த பொண்ணையே செத்துட்டான்னு பேசற! அப்படி என்ன உனக்கு ஜாதி வெறி?” என முகிலன் பதிலுக்குக் கோபத்துடன் பாயவும், குறுக்கே வந்த அந்த பெண்மணி, “தம்பி என் பொண்ண பறிகொடுத்துட்டு, இன்னும் கூட அந்த துக்கம் எங்களுக்கு போகலப்பா! எங்க விருப்பம் இல்லாம யாரையோ கட்டிக்கிட்டு போனதால அவளைத் தலை முழுகி விட்டுட்டோம், ஜாதி வெறில அவளை கொல்லணும்னு எல்லாம் நாங்க நினைக்கல! ஜாதி ஜனம் மத்தியில அசிங்க பட்டு நொந்து போயிருக்கோம் தம்பி. எங்களை தயவு செஞ்சு விட்டுடுங்க!” என கண்ணீர் வடிக்கத்தொடங்கினார் அவர்.

அவருடைய கண்ணீரைக் கண்டு கொஞ்சம் இளகியவன், “உங்க பெண்ணை பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா!” என அவன் கேட்க, அவர் கணவரின் முகத்தைப் பார்க்கவும், “நான் ஒரு போலீஸ் ஆபிசர்! தயங்காம சொல்லுங்க!” என அவன் சொல்ல,

“என் மக பேரு நிலமங்கை!” என்றார் அந்த பெண்மணி.

error: Content is protected !!