சாரல் 2

பொழுது நன்றாக விடிந்திருக்க, தன் மகளை இன்னும் காணாமல் மாடிப் படிகளிளே தன் பார்வையை பதித்திருந்தார் மகியின் தாய் யமுனா. மகளுக்கு பிடிக்காத திருமணம் என்று அவருக்கும் தெரியும் ஆனால் துவாரகேஷை விட தன் மகளை யார் நன்றாக பார்த்துக் கொள்ள போகிறார்கள் என்ற நினைப்பிலே அவர் அவளது பேச்சை எல்லாம் கேட்கவில்லை. படிக்கும் பெண்ணை திருமண பந்தத்தில் இணைத்துவிட்டோமே என்று வருத்தம் இருந்தாலும் இன்னும் ஒரு செமஸ்டர் தானே என்று தன்னை தானே சாமாதனம் செய்துக் கொண்டார்.

மகள் வருவாள் என்று மாடிப்படியை பார்த்துக் கொண்டிருந்தவர் முதலில் மருமகன் வரவும், அவனுக்கு காப்பியை கலந்து எடுத்துச் சென்றார்..

“கண்ணப்பா… எழுந்துட்டியா.. இந்தா காப்பி…” சிறு வயதில் இருந்தே துவாரகேஷை அவர் அப்படி தான் அழைப்பார்.. மகி கூட இதற்காக சண்டை பிடிப்பது உண்டு..

“அத்தைன்னா அத்தை தான்.. நான் கேட்கிறதுக்கு முன்னாடியே காப்பியை கொண்டு வந்துட்டிங்க.. என் செல்ல அத்தை..” அவரது கண்ணத்தை பிடித்து கொஞ்சியவன் அவர் கொடுத்த காப்பியை வாங்கி பருக ஆரம்பித்தான்…

துவாரகேஷிடம் காப்பியை கொடுத்தவர் மீண்டும் தன் பார்வையை மாடிப்படியிலே வைத்திருக்க, துவாரகேஷும் அதை கவனித்தான்..

‘அடியே மகி.. நேத்து நைட் எப்படியெல்லாம் என்கிட்ட கத்தின.. உனக்கு வைக்கிறேன் டி பெரிய ஆப்பா!!!’ என்று மனதில் கறுவியவன், தன் அத்தையின் கவனத்தை தன் புறம் திருப்புவதற்காக வேண்டுமென்றே அவர் கொடுத்த காப்பியை சப்புக் கொட்டி குடிக்க ஆரம்பித்தான்.

“சூப்பர் அத்தை… காப்பி ரொம்ப டேஸ்ட். என்ன இருந்தாலும் மகிக்கு இந்த பக்குவம் வராது.” வேண்டுமென்றே தன் அத்தையின் கவனத்தை கவர அவன் சிலாகிக்க, யமுனாவும் தன் பார்வையை அவனிடம் திருப்பினார்.

அவர் கவனிப்பதை உணர்ந்துக்கொண்டவன், “கல்யாணம் ஆகியும் நமக்கு அத்தை கையால் தான் காப்பி. கும்பகர்னி என்னும் தூங்கிக்கிட்டு இருக்கா, நீ குடுத்து வச்சது அவ்வளவு தான்டா” தனக்கு தானே சொல்லிக்கொள்வது போல் துவாரகேஷ் உச்சுக் கொட்ட, யமுனாவிற்கு தன் மகளின் மேல் கோபமாக வந்தது.

மகி கீழே வந்ததும் அவளை அதட்ட வேண்டும் என யமுனா சிந்நித்துக் கொண்டிருக்க, துவாரகேஷோ அவரை ஓரக் கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தான்.

அவரது முகபாவனையில் இருந்தே அவர் நினைப்பதை உணர்ந்துக்கொண்டவன், ‘இன்னைக்கு நீ செத்த டி மகி’ என மனதில் அவளை நினைத்து புன்னகைத்துக்கொண்டான்.

இவர்களின் சம்பாஷனையை கேட்டுக் கொண்டே வந்த துவாரகேஷின் தாயார் தனத்திற்கு மகனின் திட்டம் புரிந்துவிட்டது. இவ்வளவு நாள் சண்டையிட்டுக் கொண்டவர்கள் ஒரே நாளில் மாறிவிடுவார்கள் என்று நினைப்பதற்க்கு அவர் என்ன முட்டாளா??  மகனின் அருகில் வந்தவர்,

“என்னடா துவா?? மகியை பத்தி என்ன சொல்லிட்டு இருக்க??” என்றவர் துவாரகேஷை முறைக்க, அவனோ மனதுக்குள் அலறினான்.. அவனுக்கு தான தெரியுமே.. தன் அன்னை மகிக்கு தான் சப்போர்ட் செய்வார் என்று.

“அது வந்து மா…. மகி என்னும் எழும்பலைன்னு சொன்னேன்.”

“உனக்கு காப்பி கொடுக்கிறதுக்காக அவ சீக்கிரம் எழும்பனுமா?? அதுக்குத் தான் நாங்க இருக்கோமே…” தனம் அவனை முறைக்க அவனோ காலையிலையே அட்வைஸ் மழையா என்று முகத்தை சுழித்தான்.

துவாவின் முகம் சுருங்கி விட்டதை உணர்ந்துக் கொண்ட யமுனா அவனுக்காக பரிந்துக் கொண்டு வந்நார்.

“அண்ணி கண்ணப்பா சொல்றதும் சரிதானே, இந்த பொண்ணுக்கு கழுதை வயசாச்சு என்னும் எழும்பி வரலை, இவ எப்படி நம்ம கண்ணப்பாவை நல்லா பார்த்துக்குவா?? வரட்டும் இன்னைக்கு, காலை உடைச்சிடுறேன்” தான் மகியின் தாய் என்பதையும் மறந்து அவர் உரைக்க, தனத்திற்கு எந்த சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் என்று இருந்தது.

தான் எதிர்ப்பார்த்த ரியாக்ஷன் தன் அத்தையிடம் வந்துவிட்டதும் அவனுக்கு  மகியை நினைத்து சிரிப்பாக வந்தது, மேலும் தன் அத்தையின் கோபத்துக்கு தூபம் போடுவது போல்,

“ஆமாம் அத்தை இவள் எப்படி என்னை கவனிச்சிக்குவா?? இவளை எழுப்பி விடவே நான் சீக்கிரம் எழும்பனும் அத்தை.. உங்க மருமகன் பாவம்” என்றவாறே வராத கண்ணீரை துடைத்துக்கொண்டான்.

துவாரகேஷ் வருத்தப்படுவது போல் கூறவும் யமுனாவிற்கு உருகிவிட்டது, “நீ கவலைபடாதே மருமகனே நான் அவளை கண்டிக்கிறேன்” என்றவர் துவாரகேஷின் அருகில் அமர அவனும்,

“என் செல்ல அத்தை” என அவரின் மடியில் படுத்துக் கொண்டான்.

தனத்திற்கு தான் தன் மருமகளை பற்றிக் குறை கூறுபவனை சும்மா விட மனம் வராமல், “டேய் துவா ரொம்ப என் செல்லத்தை குறை சொல்லாத, மகி குழந்தை மாதிரி டா.. அவளை நீ நல்லா பார்த்துக்கணும் அப்படி இல்லன்னா உன் காலை நான் உடைச்சிடுவேன்…” தனம் கண்டிப்புடன் கூற,

“அப்படி சொல்லுங்க அத்தை அப்போ தான் இந்த மரமண்டைக்குப் புரியும்” என்று கேட்ட குரலில் மூவரும் திரும்பிப் பார்த்தனர். மகி தான் மாடியிலிருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய் யாரை பார்த்து மரமண்டைன்னு சொல்ற?? பார்த்தீங்களா அத்தை உங்க முன்னாடியே எப்படி பேசுறான்னு??” மகியிடம் எகிறியவன் யமுனாவிடம் புகார் உரைக்க,

அவரும் மகியிடம், “மரியாதையா பேசு மகி. அவன் உன் புருஷன்” என்றார் கராராக.

தன் தாயார் அவனுக்காக பேசுவதை பார்த்தவளுக்கு கோபமாக வந்தது ஆனால் துவாரகேஷிற்கோ அவளை பார்த்து சிரிப்பாக வந்தது.

‘சிரிக்கிரியாடா துவா… உன்னை அப்புறம் கவனிச்சிக்குறேன்.’ மனது அவனை திட்டினாலும் அவன் சிரிக்கும் அழகை ரசிக்கத்தான் செய்தது, மூன்று வருடத்திற்கு முன்பு பார்த்ததை விட நிறைய மாறியிருந்தான். ஒல்லியாக இருந்தவன் இப்போது உயரத்திற்கு ஏற்ற உடல்வாகில் இருந்தான், தலை அசைக்கும் போது அலை அலையாக அவன் நெற்றியில் வந்து விழும் கேசம், சிரிக்கும் போதும், பேசும் போதும் உதடுகளோடு சேர்ந்து  சிரிக்கும் கண்கள் என நடு ஹாலில் நின்றுக் கொண்டு துவாரகேஷை சைட் அடித்துக் கொண்டிருந்தாள் அவனது மனைவி.

மனைவி தன்னை சைட் அடிப்பதை கூட உணராமல் அவளைப் பற்றி நன்றாக பற்ற வைத்துக் கொண்டிருந்தான் துவா.

“ஏன் டி அப்படி நிக்கிற??” தன் தாயின் குரலில் கலைந்தவளுக்கு சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை ஏனென்றால் அவள் தாயார் அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

“என்னம்மா?” புரியாமல் கேட்டாள் மகி.

“என்னது டி என்னம்மா?? கனவு கண்டுட்டு இருந்தியே இந்த உலகத்துக்கு வந்துட்டியான்னு கேட்டேன்.”

“ஆமாம் நீங்க என்ன பத்தி பெருமையா பேசும் போதே வந்துட்டேன்” என்று முனுமுனுத்தவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அவளையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தவனுக்கு அவளது முனுமுனுப்பு கேட்டுவிட, “பெருமையா?? உன்னை பத்தியெல்லாம் பெருமையா பேசுறதுக்கு என்ன இருக்கு?? ஒருவேளை நல்ல தூங்குறியே அதை பெருமைன்னு நினைச்சுட்டு இருக்கியா??”  ஒற்றை விரலை கன்னத்தில் தட்டி யோசனை செய்பவன் போல துவாரகேஷ் பாவனை செய்ய, அவனை கண்களாலே பஸ்பமாக்கி கொண்டிருந்தாள் அவனது மனைவி.

மகி கோபமாக முறைத்துக்கொண்டிருக்க, அவளை காப்பது போலவே வந்தார் துவாரகேஷின் தந்தை சிவசந்திரன். வெள்ளை வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்தார்..

“என்னடா சத்தம்” என்றவர் தன் மகனை தான் முறைத்தார்.. அவரை கண்டதும் மகி ஓடிச் சென்று துவாவை பற்றி புகார் வாசிக்க, துவாவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. அவன் கூறும் எந்த விஷயத்தையும் மறுக்காது கேட்டு கொள்ளும் தந்தைக்கு மகி என்றால் கொள்ளை பிரியம். அவள் விஷயத்தில் மகனும் இரண்டாம் பட்சம் தான்..

“மாட்டிவிட்டுட்டாளே!!!!  சும்மாவே அவ சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்டுவார்,  இதுல இது தெரிஞ்சா முறைச்சி பார்த்துட்டே இருப்பார்” தந்தையை பற்றி தெரிந்தவனாக அவன் தன் தந்தையை திரும்பிப் பார்க்க, அவனது எண்ணத்தை உறுதி படுத்துவது போல் துவாவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சிவசந்திரன்.

அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என யோசித்தவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் பாட்டியை பற்றி விசாரித்தான்.

“அப்பா பாட்டிக்கு எப்படி இருக்கு??”

அவன் பேச்சை மாற்றுவது மகிக்கு புரிந்தாலும் தனக்கும் பாட்டியை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியிருந்ததால் அமைதியாக மாமாவின் பேச்சை கவனித்தாள் மகி.

“கொஞ்சம் முன்னேற்றம் தெரியுது. எல்லாரும் சாப்பிட்டுட்டு கிளம்புங்க நாம எல்லாரும் போய் அம்மாவை பார்த்துட்டு வந்துடுவோம்” என்றவர் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

‘எப்படி தப்பிச்சேன் பார்த்தியா??’ அவர் சென்றதும் மகியிடம் துவா கண்களால் கேட்க, அவனை அலட்சியமாக பார்த்தவள்,

“போடா தறுதலை” என்று கூறிக்கொண்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.

“என்னது தறுதலையா?? நில்லுடி குள்ளச்சி” அவளை பார்த்து கத்தியவன்  அவள் பின்னோடு அவளை துரத்திக் கொண்டு ஓடினான்.

இருவரும் ஒருவரையோருவர் துரத்திக் கொண்டு ஓட அதை பார்த்து மகியின் தாயாருக்கு கண்கள் கலங்கியது. அவர் கலங்குவதை பார்த்த தனம் ஆதரவுடன் அவரின் கைகளை பிடித்துக் கொண்டார்

“எவ்வளவு வருஷம் ஆச்சு அண்ணி இவங்க ரெண்டு பேரும் இதே மாதிரி இந்த வீட்டுல ஓடி விளையாடி?” யமுனா சொல்வது உண்மையென புரிந்துக்கொண்டவர்,

“ஹ்ம்ம் ஆமாம் யமுனா அதனால தான் அத்தை இவங்களுக்கு கல்யாணம் செய்து வைச்சிட்டாங்களா இருக்கும். இனி எல்லாம் சரியாகிடும்  யமுனா.. நீ கவலை படாதே” அவரை சமாதானம் செய்தவர் தன் வேலைகளை பார்க்க சென்றார்.

அதன் பின்னர் அனைவரும் கிளம்பி துவாரகேஷின் பாட்டி காமாட்சியை பார்க்க சென்றனர். ஹாஸ்பிட்டலில் ஐ.சி.யு வில் இருந்த பாட்டியின் பாதங்களை தொட்டு வணங்கினர் இருவரும். அவர்களை அருகில் வருமாறு கண்களால் அழைத்தவர் இருவரின் கைளையும் ஒள்றாக பற்றிக்கொண்டார்.

“பாட்டி…” எப்பொழுதும் கம்பீரமாக இருக்கும் பாட்டியை இப்படி பார்பதற்கு மனம் வலித்தது மகிக்கு. கண்களில் குளம் கட்ட அவரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு ஒன்னும் இல்லைடா … சீக்கிரம் சரி ஆகிடுவேன்… அழக்கூடாது..” திக்கித் திணறி கூறியவர் இருவரின் கைகளையும் இறுக பற்றிக் கொண்டார்.. துவாவிடமும் மகியை நன்றாக பார்த்துக்கொள்ளுமாறு செய்கையில் கூறியவர் சோர்வாக கண்களை மூடிக் கொண்டார்.

‘நான் இவளை பார்த்துக்கணுமா?? இவக்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு ப்ளான் போடவே எனக்கு நேரம் சரியா இருக்கும்…’ மனதில் மகியை நினைத்து பெருமூச்சு விட்டவன்   பாட்டியை பார்த்து புன்னகைத்தான்.

ஐ,சி.யு வில் இருந்து வெளியே வந்தவன் நேராக தன் தந்தையிடம் சென்றான். அவனது வங்கியில் இருந்து உடனடியாக வருமாறு அழைப்பு வந்திருந்தது..

“அப்பா எனக்கு நாளைக்கே சென்னை போகணும்” என்றவன் வங்கியில் தன்னை அவசரமாக வர கூறியதையும் கூறினான். இன்று கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்றவன் தந்தையின் அனுமதிக்காக அவர் முகம் பார்த்து நின்றான்.

துவா கூறியதும் ஒரு நிமிடம் தன் தாடையை தடவி யோசித்தவர், “சரிப்பா அப்போ இன்னைக்கே கிளம்புங்க” என்றவர் மகியை பார்க்க, துவாரகேஷ் புரியாமல் விழித்தான்.

“என்னம்மா இன்னைக்கு கிளம்ப உனக்கு ஓகே தானே??” என்று மகியிடமும் அவர்  கேட்க, அவளும் தலையை உருட்டினாள்.

“அப்பா அவ எதுக்கு கிளம்பணும்??” அவர்களின் பேச்சில் இடைவெட்டி துவாரகேஷ் கேட்க, அவனை கண்களாலே எரித்தார் சிவசந்திரன்.

‘அப்படி என்னத்தை கேட்டுட்டோம்னு இப்போ இவர் ஃபயர் சர்வீஸை கூப்பிடுற அளவுக்கு என்னை கண்ணாலே எரிக்கிறாரு?’ அந்த நிலையிலும் மனம் தந்தைக்கு கவுண்டர் கொடுக்க, அவன் தந்தையோ,

“எதுக்கா?? மகியும் சென்னையில தான் படிக்கிறா? மறந்துடுச்சா??? அவளும் சென்னைக்கு உன்கூட தான் வரா” என்றார்.

இந்த பிசாஸையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டுமா என்று நினைத்தவன், “சரிப்பா இவளையும் கூட்டிட்டு போய் அவளோட ஹாஸ்டலில் விட்டுடுறேன்” என்றான் சமர்த்தாக.

அவனது பதிலில் கொதித்து விட்டாள் மகி. அவளுக்கும் அவனோடு செல்வதில் ஒன்றும் இஷ்டம் இல்லை.. அதை அவன் முகத்தில் அடித்தவாறு கூறி விடலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தவளின் எண்ணத்தை புரிந்தது போல் சிவசந்திரன்,

“என்னடா உளறுற?? மகியும் உன்கூடத் தான் இருக்க போறா… நானும் தனாவும் உங்க கூட வந்து ஹாஸ்டல்ல இருந்து மகியோட  திங்ஸ் எல்லாம் எடுத்து கொடுத்துட்டு அப்புறம் கிளம்பலாம்ன்னு இருக்கோம்… இன்னைக்கு இரவு கிளம்பலாம்” இது தான் தன் முடிவு என்பது போல் கூறியவர், அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு டாக்டரை காண சென்றார்..

அவர் கூறியதை கேட்டு துவாரகேஷிற்கு தலையை சுற்றுவது போல் இருந்தது. ஒரு நாள் கூட இவக் கூட இருக்க முடியாது இதுல என்கூடவே இருக்க போறாளா என்று நினைத்தவன் தன் விதியை நொந்தபடி தன் தந்தையின் பின் சென்றான்..

அன்று இரவே மகியும் துவாவும் தங்கள் பெற்றோருடன் சென்னைக்கு கிளம்பினர். மகியின் அன்னை மட்டும் மருத்துவமனையில் இருக்கும் தன் தாயை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால் ஊரிலே தங்கிக் கொண்டார்..

இரவு ஒன்பது மணிக்கு மேல் திருச்சியில் இருந்து கிளம்பியவர்கள், விடியற்காலை ஐந்து மணி போல் துவாவின் அப்பார்ட்மென்டை அடைந்தனர்.

ஒரு தளத்தில் மூன்று வீடுகள் என மூன்று தளங்களை கொண்ட அந்த அப்பார்ட்மென்ட் பார்க்க மிக அழகாக இருந்தது. தாங்கள் வந்த காரை விட்டு இறங்கிய மகி அந்த அப்பார்ட்மென்டை சுற்றி தன் கண்களை சுழல விட்டாள்.

அப்பார்ட்மென்ட் அருகிலேயே இருந்த அந்த பூங்கா என்னை பார்ககாமல் செல்லாதே என்று கூறுவது போல் இருந்தது மகிக்கு. கண்களை விரித்து சுற்றிலும் இருந்ததை ரசித்துக் கொண்டே மூன்றாம் தளத்தில் இருந்த அந்த ஒற்றை படுக்கையறையை கொண்ட ப்னாட்டிற்கு வந்தனர் அனைவரும்.

சாவியை கொண்டு கதவை திறந்துக்கொண்டு உள்ளே செல்ல எத்தனித்த துவாவை அங்கேயே நிற்க செய்துவிட்டு ஆரத்தி கரைக்க உள்ளே சென்றார் தனம்.

வரான்டாவில் நின்றுக் கொண்டு அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தவளின் காதருகே குனிந்தவன், “உனக்கெல்லாம் ஆரத்தி ஒரு கேடா” என்று முணங்க, அவனை முறைத்தாள் அவனது முறைப்பெண்.

“பாவம் என் அத்தைக்கு தெரியல… சனியனை பக்கத்திலையே வைச்சிட்டு ஆரத்தி எடுக்கிறது வேஸ்ட்ன்னு..” அவனுக்கு நிகராக ஒரு பதிலை அளித்தவள் வெட்டும் பார்வையோடு முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அவள் கூறியதில் எரிச்சல் அடைந்தவன் அவளை திட்ட வாய் எடுக்க, தன் தந்தையின் பார்வையில் தன்னை அடக்கிக் கொண்டான்.

ஆரத்தி எடுத்த பின்னர் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்… சிறிய ப்ளாட்டாக இருந்தாலும் அதை நேர்த்தியுடன் வைத்திருந்தான் துவா.

“ப்ளாட் ரொம்ப சின்னதா இருக்கிற மாதிரி இருக்கு துவா, வேற ப்ளாட் வாங்கிடுவோமா??” சிறிய வீடாக இருக்கிறதே என சிவசந்திரன் கூற, தனம் வேண்டாம் என மறுத்துவிட்டார்.. மகிக்குமே இந்த சிறிய வீடு பிடித்திருக்க, அவளும் தன் மாமாவிடம் வேண்டாம் என மறுத்துவிட்டாள்.

ஆனால் துவாவோ மனதில் தன் தந்தையை வறுத்துக் கொண்டிருந்தான்.. அவனது தந்தையிடம் கூறிவிட்டு தான் இந்த ப்ளாட்டை அவன் வாங்கியதே.. அப்போது நன்றாக இருக்கிறது என கூறியவர் இப்போது மகி வந்ததும் வேறு வாங்குவோமா என கேட்கவும் அவனுக்கு கோபமாக வந்தது. அந்த கோபம் அலுங்காமல் குலுங்காமல் மகியின் மீது தான் திரும்பியது அவனுக்கு. தன் பெற்றோர் சென்றதும் அவளை கவனித்துக் கொள்ளலாம் என எண்ணியவன் தன்னை அடக்கிக் கொண்டான்.

அன்று முழுவதும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதும், மகியின் பொருட்களை ஹாஸ்டலில் இருந்து எடுத்து வருவதும் என மகிக்கு தன் மாமாவுடனும் அத்தையுடனுமே அந்த நாள் கழிந்தது.

துவாரகேஷிற்கும் வங்கிக்கு செல்ல வேண்டியிருந்ததால் அவன் அவனது வேலையை கவனிக்க சென்றுவிட்டான்.

மாலை துவா வந்ததும் சிவசந்திரனும் தனமும் கிளம்ப, மகி அவர்களை இரண்டு நாட்கள் தங்கிவிட்டு செல்லுமாறு கூறினாள். ஆனால் அங்கே யமுனா அனைத்தையும் தனியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் இருவரும் மற்றொரு நாள் வருவதாக கூறிவிட்டு கிளம்பிவிட்டனர்.. மகியாலும் அதற்கு மேல் அவர்களை வற்புறுத்த முடியவில்லை..

அவர்கள் சென்ற பின்னர் மகியும் துவாவும் தனித்து இருந்தனர். மகி தன் பொருட்களை துவாவின் அலமாறியில் அடுக்கிக் கொண்டு இருந்தாள்.. மாமாவும் அத்தையும் இன்றே கிளம்பியது அவளுக்கு வருத்தமாக இருந்தது.

அவள் அமைதியாக இருப்பதை கவனித்தவன், “என்னடி அமைதியா இருக்க?? ஓடிப் போய் எனக்கு காப்பி போட்டு எடுத்துட்டு வா” என்க, மகியோ அவனை நக்கலாக பார்த்து,

“முடியாது” என்றாள்.

“ஏன் டி முடியாது??” ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் கேட்க, அவளோ,

“எனக்கு காப்பி போட தெரியாதுடா” என்றவள் அசால்ட்டாக தன் தோளை குலுக்கினாள்.

அதை கேட்ட துவாவோ அதிர்ச்சியில் தன் கையை தன் நெஞ்சில் வைத்துக் கொண்டான். அவளை அனைத்து வேலைகளையும் செய்ய வைத்து தன் பழிவாங்கும் படலத்தை துவங்கலாம் என அவன் எண்ணியிருக்க.. மகியோ அதில் மிக பெரிய குண்டை எறிந்தாள்.

“காப்பியே போட தெரியாதா?? அப்போ சாப்பாடு???” சந்தேகமாக இழுத்தவன் அவளை பே என பார்க்க, அவளோ அடுத்த அனுகுண்டை எறிந்தாள்.

“நீ நல்லா சமைப்பன்னு அத்தை சொன்னாங்களே” என்றவள் அவனை குழந்தை போல் பார்க்க, துவாரகேஷ் தன் இருகைகளையும் தன் தலைக்கு மேல் வைத்துக் கொண்டான்…

“அப்போ உனக்கு சமைக்கவும் தெரியாதா???” என்றவன் தன் வாழ்க்கை அவ்வளவு தானா என்பது போல் அவளை பார்க்க, அவனது மனைவியோ,

“எனக்கு சமைக்க தெரியாதுன்னு உனக்கு தெரியாதா??” என்று அலுங்காமல் குலுங்காமல் அடுத்த குண்டை எறிந்தாள்.

“அப்போ என் வாழ்க்கை அவ்வளவு தானா???” மனதில் நினைத்ததை இப்போது அவன் வாய் வார்த்தையாக கேட்டுவிட,

“அவ்வளவுதான்” என கூறி சிரித்தாள் அவன் மனைவி. விதியோ துவாவை பார்த்து சிரிப்பது போலவே உணர்ந்தான் அவன்.

அவளது சிரிப்பில் கடுப்படைந்தவன் தன் தலையை உலுக்கி கொண்டு, “என்னை பார்த்தா உனக்கு சிரிப்பா தான்டி இருக்கும்… பிடிக்காத ஒருத்தியை என் தலையில கட்டி வைச்சதும் இல்லாம இப்போ இந்த கொடுமை வேறயா??“ என்றவன் தனக்கு தானே புலம்ப..

“அதான் அடுத்த வருஷம் டிவோர்ஸ் பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சே அப்புறம் எதுக்காக புலம்பிட்டு இருக்க???” பார்வையை வேறு எங்கோ வைத்துக் கொண்டு மகி கூற,

“தரேன்டி தரேன் என்னால எவ்வளவு சீக்கிரம் டிவோர்ஸ் தர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தரேன். அது வரைக்கும் இந்த வீட்டுல நான் சொல்றத கேட்டுட்டு அமைதியா இருந்துக்கோ” எப்போதும் தான் மட்டுமே புலம்ப, அவள் ஜாலியாக இருப்பது போல் அவள் மேல் கடுப்பாகியவன் தன் கோபத்தை இவ்வாறு வெளிப்படுத்தினான்…

“என்னது அமைதியா உன்னோட பேச்சை கேட்டு இருக்கனுமா??? நான் இங்க இருக்கனும்னா கொஞ்சம் கன்டிஷன்ஸ் இருக்கு… அதை முதல்ல தெரிஞ்சிக்கோ” என்றவள் அவனுக்கு தான் குறைந்தவள் இல்லை என்பதை நிருபிக்க, அவனும்,

“என்னது நீ கன்டிஷன்ஸ் போடுறியா?? நான் சொல்ற கன்டிஷன்ஸை பர்ஸ்ட் கேளு” என்றான்.

யாருடைய கண்டிஷனை முதலில் கூறுவது என பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்கள் துவாரகேஷும்  மகியும்.

“எல்லாத்துலயும் முதல் உரிமை பொண்ணுங்களுக்கு தான் அதனால நான் தான் முதல்ல என்னோட கண்டிஷன்ஸை சொல்லுவேன்..” தான் தான் முதலில் கூற வேண்டும் என மகி தன் உரிமையை நிலை நாட்ட,

“அது பொண்ணுங்களுக்கு… உன்னை மாதிரி ராட்சஷிக்கு இல்லை.. ஒழுங்கா நான் சொல்றதை கேளு டி”

“என்னை பார்த்தா டா ராட்சஸின்னு சொல்ற.. நீ தான்டா தடிமாடு, எருமைமாடு, குரங்கு, பன்னி, டாக், ஃபூல்..” என கத்தியவள் அவனை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்தாள்.

“ஹப்பா!!! கத்தாத டி.. பிறக்கும் போதே ஸ்பீக்கரை முழுங்கிட்டு தான் பிறந்திருப்பாளா இருக்கும்” என்றவன் தன் காதுகளை தேய்த்து விட்டுக் கொண்டே, “நீயே சொல்லித் தொலை” என்றான்.

மகியும் தன் தொண்டையை சொருமிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்..

 

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!