Sempunal 5

Sempunal 5

செம்புனல் – 5

காலில் எதுவோ ஊர்ந்தது. நரன் அலறினான். துள்ளி குதித்தான். இரண்டடி ஓடினான். அவன் சட்டையைப் பிடித்து இழுத்த தரணி கால் முட்டிக்குப் பின்னால் உதைத்து மண்டியிட வைத்தான்.

“பூச்சிக்கெல்லாம் பயப்படுற உனக்கெதுக்கு இந்த வேலை? இவ்வளோ நேரம் வாய் சவடால் விட்ட? எதா இருந்தாலும் கண்ணுக்குத் தெரியுற வரைக்கும் இருக்க தைரியம் கண்ணுக்குத் தெரியாமக் கிட்ட வரும்போது காணாமப் போயிடுதுல்ல? உள்ளுக்குள்ள ஒதறுதுல்ல?”

“ஏய்… எதுக்குடா உக்கார வெச்ச? கீழ என்னென்ன கடக்குதோ? உங்களுக்கெல்லாம் கண்ணு எப்படிடாத் தெரியுது? ஒரு டார்ச் எடுத்துட்டு…”

“ரெண்டு நிமிசம் என்ன நடக்குதுன்னு புரியாததுக்கு இப்படி லபோ லபோங்குற…”

“எனக்குத் தேவயில்லாமப் பேசுறதுப் புடிக்காது. என்னையே…”

“இங்கயே இருந்துடலாம் தரணி. இதுக்கு மேல உள்ளப் போனாக் கஷ்டம். கொஞ்ச நேரம் இங்க உக்காரு. அப்பறம் போய் ரெண்டு நாள் நம்ம இங்க தங்குறதுக்குத் தேவையான எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடு”

“சரிண்ணா. இவனத் தனியா சமாளிச்சிடுவீங்களா?”

“முடிஞ்சா…”

“பூச்சிக்கு பயப்படுறான்… இவனுக்கு ஒருத்தர் காவலுக்கு இருக்குறதே அதிகம்”

“எவன்டா பயப்படுறா? இது நீ பழகுன இடம். அதனால காடா இருந்தாலும் தைரியமாப் பேசுற. உன்னக் கொண்டு போய் எங்க வீட்ல என் ரூம்ல தள்ளி லைட் ஆப் பண்ணா நீ கூட என்ன மாதிரி தான்டா பதறுவ”

“ஆமாமா… தரணி… நம்மளப் பாக்க வரணும் இல்ல எதாவது தகவல் சொல்லணும்னா எங்க எப்படி வரணும்னு வேணு கிட்ட சொல்லிட்டு வந்துடு. அவன் பாத்துப்பான்”

சபரியும் தரணியும் அமைதியானார்கள். ஆனால் சூழல் அமைதியாய் இல்லை. ஒலித்த சன்ன ஒலிகள் கூட நெஞ்சுக்குள் ஊடுருவிச் சென்றன.

சிவா பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான். தெய்வாவின் கல்லூரி தோழி ஒருத்திக்கு அழைத்து அவள் மூன்று நாட்கள் கல்லூரிக்கு வர மாட்டாளென்று சொன்னான். அடுத்து அவளுடைய சூப்பர்வைசருக்கு அழைத்து அவள் கடைக்கு மூன்று நாட்கள் வர மாட்டாளென்று சொன்னான்.

அவளைத் தேடி யாரேனும் வீட்டிற்கு வந்தால்? போலிஸ் அவளை விசாரிக்க வேண்டுமென்று சொன்னால்? தெய்வா மீது சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறதா? அவளுக்கும் அவனுக்கும் எங்காவது, எதிலாவது சம்பந்தம் இருக்கிறதா?

நரனை முதல் நாள் பார்த்ததிலிருந்து யோசித்தான். எவ்வகையிலும் இருவருக்கும் சம்பந்தம் இல்லை. எதற்காக அவன் அப்படி செய்தான்? என்றாவது ஒரு நாள் அவனிடம் கேட்க வேண்டும்.

வீட்டிற்கு வந்தபோது தரணி அங்கிருந்தான்.

“அதுக்குள்ள ஏன் வந்த? அவன்…”

“இல்லண்ணா. நான் மட்டும் வந்தேன். துணி, விளக்கு, எண்ணெய், சாப்பாடு எல்லாம் எடுத்துட்டுப் போகணும். இன்னும் ரெண்டு மூணு நாளு அங்கயே இருக்கலாம்னு சபரி அண்ணா சொன்னாங்க”

“மூணு நாளைக்கு மேல அங்கயே இருக்க வேண்டி வரலாம். எப்பயும் நீங்க ரெண்டுப் பேருமே இருக்க வேணாம். இப்பப் போ. ராத்திரி இரு. நாளைக்கு யாரையாவது அனுப்பி ஆள் மாத்தி விடுறோம்”

“பரவால்ல நானே…”

“தொடர்ந்து ஊருக்குள்ள ஒரு ஆள் இல்லன்னுத் தெரிஞ்சா போலிஸ் கொடைவாங்க தரணி”

“சரிண்ணா. போலிஸ் அடிச்சாங்களா? இப்படி அடிச்சிருக்காங்க…”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீங்க பத்திரமா இருங்க. அவன விட்டு கண்ணெடுக்காதீங்க. தப்பிச்சான்…”

“தொட நடுங்கிண்ணா… அதுக்காக அசால்ட்டா இருக்க மாட்டோம். பாத்துக்குறோம். எங்கத் தங்கியிருக்கோம்னு வேணு அண்ணன்கிட்ட சொல்லிட்டுப் போறேன்”

கை முட்டியில் கல் குத்திக் காய்ந்திருந்த தோலை நகத்தால் கீறிப் பிய்த்துக் கொண்டிருந்தாள் தெய்வா. தோள் சதையை விட்டுப் பிரிந்தபோதெல்லாம் சுருக்கென்றது. வலியை மறக்க இன்னொரு வலி.

எத்தனை முறை நினைத்துப் பார்த்தாளென்று தெரியாது. உண்மையில் அவள் நினைத்துப் பார்க்க அவசியமின்றி காட்சிகள் கண் முன் தோன்றின.

காட்சிகளில் தெரிந்த அவளைப் பார்த்து அவளே பரிதாபப்பட்டாள்; வெறுத்தாள்; கண்ணீர் விட்டாள்; கோபம் கொண்டாள். அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

‘வெட்டிருக்கணும். கைல அருவா கெடச்சும் ஏன் வெட்டாம விட்டேன்? அவனக் கொன்னா எம்மனசு அமைதியாயிடுமா? எல்லாத்தையும் மறந்துடுவேனா?’

“தெய்வா…”

செம்பருத்தி வந்து அவளருகில் குடிசையின் மண் சுவரில் சாய்ந்தமர்ந்தார். மகளின் கையை எடுத்து அவர் கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.

“நல்லாத் தூங்குனியா?”

“இன்னும் எத்தன நாளு இங்கயே உக்காந்திருக்குறது? கண்ண மூட முடியல. உங்களோடல்லாம் வீட்டுல இருந்தா நல்லாயிருக்கும்னுத் தோணுது. யாரையும் பாக்கவும் புடிக்கல. என்ன நெனச்சா எனக்கே வெறுப்பா இருக்கும்மா”

தெய்வாவின் கையையும் சேர்த்துத் தன் கைகளால் முகத்தை மூடி அழுதார் செம்பருத்தி. கண்களைத் துடைத்த தெய்வா அவரிடமிருந்து கையை விடுவித்துக் கொண்டாள்.

“என்னோட காலேஜ் பேக் எடுத்துட்டு வந்து தரியா? படிக்குறேன்”

“பேக்… உன்ன இங்க கொண்டு வந்தப்போ பேக் இல்லையே தெய்வா”

“கடையிலேந்துக் கிளம்புனப்போ எடுத்துட்டு வந்தேன். நடுவுல… வீட்டுல இருக்க ஏதாவது ஒரு நோட்டோ புக்கோ எடுத்துட்டு வந்து தாம்மா. பைத்தியம் புடிக்குது”

“எடுத்துட்டு வரேன் தெய்வா. இப்பவே போய் எடுத்துட்டு வரேன்”

எழுந்து ஓடினார் செம்பருத்தி. இருபது நிமிடங்களில் ஒரு பை நிறைய புத்தகங்களைத் தூக்கி வந்து அவளிடம் கொடுத்தார்.

அங்கே இருக்க வேண்டும். மகளிடம் ஏதாவது பேச வேண்டும். என்ன பேச? அவர் அங்கில்லையென்று அவள் உணரும் முன் வந்த வழியே திரும்பிச் சென்றார்.

தெய்வா புத்தகத்தைத் திறந்தாள். வகுப்பில் கவனித்த பாடம். புரிந்த வரிகள். எழுத்துக்களெல்லாம் மங்கி மறைந்தன. அன்று வாய்விட்டுக் கதற முடியாமல் எழுப்பிய ஓலம் காதைக் கிழித்தது.

புத்தகத்தை மூடிக் கீழே போட்டு காதுகளைப் பொத்திச் சுருண்டுப் படுத்தாள். நரன் அவள் கைகளைப் பிடித்து இழுத்தான். அடித்தான். ஆடைக் கிழித்தான்.

“அம்மா…”

“என்னாச்சு தெய்வா? என்ன? ஏன் கத்துன?”

அருகிலிருந்த குடிசைகளிலிருந்து பெண்கள் ஓடி வந்தனர். அவளை எழுப்பித் தண்ணீர் கொடுத்தனர்.

“நாங்க யாரவது கூட இருக்கோம்”

“அழுதுட்டே இருந்தா சரியாகிடுமா?”

“அமைதியாத் தூங்கு தெய்வா. எல்லாத்தையும் மறக்க முயற்சிப் பண்ணு”

“தூங்கு தெய்வா”

தரையில் படுத்துக் கொண்டாள். மனம் அமைதியுற்றதாத் தெரியாது. கூச்சல் குறைந்திருந்தது.

நரனை காட்டுக்குள் கூட்டி வந்து இரண்டு நாட்களாகியிருந்தன. தரணியும் சபரியும் போய் வேணுவும் பூபதியும் வந்திருந்தனர். பூபதி வேணுவை விட வயதில் பெரியவனாய்த் தெரிந்தான். வந்ததிலிருந்து அமைதியாகவேயிருந்தான்.

நரனால் பேசுவதை நிறுத்த முடியவில்லை. சில நேரங்களில் திட்டினான். சில நேரங்களில் கெஞ்சினான். பேச்சு உளறலாய் மாறிக் கொண்டிருந்தது.

“வாய மூடவே மாட்டியா?”

“இங்க கேக்குற சவுன்ட் எல்லாம் புதுசா இருக்கு”

“பயமா இருக்கா?”

“எனக்கென்ன பயம்? போர் அடிக்குது”

“அடிக்கும். இப்படி போர் அடிச்சு அடிச்சுதான் கொழுப்பேறிப் போய்க் கெடக்கு”

“நான் இங்க வந்து மூணு நாளாச்சு. குளிக்கணும். எத்தன வாட்டி சொல்லுறது? பல்லுக் கூட விளக்காம சாப்பிடுறேன். வாயெல்லாம் கசக்குது”

“இப்ப நீ குளிச்சு என்ன பண்ணப் போற?”

“நாறுறேன்… உன் பேரென்ன? ஏன் எவனுமே பேர் சொல்ல மாட்டேங்குறீங்க? மாட்டிப்போம்னு பயமா?”

“என்னமோ விடியுற வரைக்கும் என்ன இங்க வெச்சிருந்தா உங்களக் காட்டிக் குடுக்க மாட்டேன்ன? இப்ப மூணு நாளாச்சு”

“சொன்னதெல்லாம் செய்யுற மனுஷனப் பாத்திருக்கியா? உன் அம்மா அப்பாவால கூட உன்கிட்ட சொன்னதையெல்லாம் உனக்காக செய்ய முடியாது”

“சொல்லுறது, செய்யுறது எதுக்குமே அர்த்தம் புரியாம இப்படி வாழ்ந்து என்னத்த சாதிக்கப் போற?”

“உத்தமனா வாழ்ந்து நீ என்னத்த சாதிக்கப் போற? ஒண்ணுத்தையும் அனுபவிக்காம… இப்படி இருப்பா, டேய் இப்படி இருடான்னு சுத்தி இருக்கவங்க சொல்லுறதுக்கெல்லாம் தலையாட்டிக்கிட்டு… ஊரு உலகம்னு எத, யார சொல்லணும்னுப் புரியாம… உன் வாழ்க்கைய அடுத்தவன் கையிலேந்துப் புடுங்கி வாழத் தெரியாதவன், அடுத்தவன் எப்படி வாழணும்னு சொல்லிக் குடுத்து, அவன் வாழ்க்கையப் புடுங்கி நீ வெச்சுக்கப் பாக்குறியா?”

“நீ என் வாழ்க்கைன்னு யோசிக்குற. அடுத்தவனப் பத்தி உனக்கு எந்தக் கவலையும் இல்ல. ஊரு உலகத்தயெல்லாம் விடு… ஒரு வீட்டுக்குள்ள இருந்தாக் கூட எங்க வாழ்க்க, நம்ம வாழணும்னுன்னுதான்டா யோசிக்கத் தோணும். உனக்கு இதெல்லாம் புரியாது”

“சரி புரியாததால நான் இங்க இருக்கேன். நீ?”

“முட்டாளெல்லாம் உலகத்தோட ஒரு பக்கத்துலையா இருக்கான்? உன்ன தண்டிக்கணும்னாலும், திருத்தணும்னாலும், ஏன்… ஒதுக்கணும்னாலும் நான் உன் கூட இருந்துதான் பண்ண முடியும்”

“அப்ப முட்டாளா இருந்தா என்ன உன்ன மாதிரி அறிவு ஜீவியா இருந்தா என்னடா? எல்லாரும் ஒண்ணாதான வாழுறோம்?”

“உன்ன மத்தவங்களோட சேர விட்டா அவங்களையும் இப்படி யோசிக்க வெப்ப. அதுக்குதான் தனியாக் கூட்டிட்டு வந்தது”

“என் கூட சேந்துக் கெட்டுப் போயிடாத. தள்ளி உக்காந்துக்கோ”

“வாய மூட்றா”

“நான் சொன்னதெல்லாம் உனக்கும் எப்பயாவது தோணியிருக்கும். ஆனா இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாதுன்னு பயமுறுத்தி வெச்சிருப்பாங்க. இல்ல?”

“பூபதி இவனப் பாத்துக்கோ. நான் கொஞ்ச தூரம் நடந்துட்டு வரேன்”

“யாருக்கிட்டேந்துத் தப்பிச்சு ஓடுறன்னாவது தெரிஞ்சுக்கோ முதல்ல”

வேணு திரும்பிப் போவதைக் குறித்து யோசித்தான். இங்கு வருவதற்கு முன்பு ஆத்மன் சொன்னவை நினைவு வந்தன.

“இந்தக் காட்டுக்குள்ள வரணும்னா ஊரத் தாண்டி தான் வரணும். எவன் கண்ணுலயும் படாம வந்தாலும் கொஞ்ச தூரத்துக்கு மேல உள்ள வர முடியாது. நம்ம யாரோட உதவியாவது கண்டிப்பா வேணும். சுலபமா வழி மாத்திக் கூட்டிட்டுப் போயிக் குழப்பி விட்டுட முடியும்”

நரன் தப்பிச் செல்ல முயற்சிக்காததற்குக் காரணமும் இதுதான். வேணுவுக்குத் தெரியும். இருந்தாலும் எப்போதும் யாராவது ஒருவர் விழித்திருந்தனர்.

தலைவர் அவசரமாக அழைத்து வரச் சொன்னதாக சொல்லி சிவாவை ஆறுமுகத்தின் வீட்டிற்குக் கூட்டி வந்தான் சபரி. ஆறுமுகத்தின் மூத்த மகள் காவிரியும், அவள் கணவன் ரங்கனும், அவனுடைய தம்பி பரமனும் வந்திருந்தனர்.

ரங்கனின் ஊருக்கும் அவர்கள் ஊருக்கும் நீண்டக் காலப் பகையிருந்தது. இரு பக்கமும் உயிர் சேதம், பொருள் சேதம் அதிகரித்துக் கொண்டே போக சண்டையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர எண்ணினார் ஆறுமுகம்.

தாமே முன் வந்து தன் மகளை அவர்கள் ஊரில் கட்டிக் கொடுப்பதாகச் சொன்னார். முதலில் யாரும் ஒப்புக் கொள்ளவில்லை.

இவர்கள் சண்டையில் ரங்கனின் ஊர் தலைவரான அவன் தந்தை இறந்து போயிருக்க தலைவனாயிருந்த ரங்கன் இதற்குச் சம்மதித்தான். இனி யாரும் யாரையும் தாக்கக் கூடாதென்ற ஒப்பந்தத்தின் பேரில் இரண்டு வருடங்களுக்கு முன் அவர்கள் திருமணம் நடந்திருந்தது.

“வா சிவா. உன்கிட்டப் பேச வந்திருக்காங்க. காவேரி உள்ளப் போ”

“என்கிட்டயா?”

“உக்காரு சிவா. இங்க நடக்குறதெல்லாம் கேள்விப்பட்டோம். என்ன பிரச்சன வந்தாலும் நாங்க கூட நிப்போம்”

“நீங்க எப்பயும் ரெண்டு ஊருக்காகவும் யோசிப்பீங்கன்னுத் தெரியும்ங்க”

“இவன உனக்குத் தெரியும்ல? என் தம்பி பரமன். இவன்…”

“அண்ணா நானே சொல்லுறேன். நான் தெய்வாவக் கல்யாணம் பண்ணிக்க நெனைக்குறேன் சிவா. உன் சம்மதம் வேணும்”

“தெய்வாவையா?”

“அப்பா இப்பதான்…”

“நீ இதுலத் தலையிடாத ஆத்மா. அவங்கக் கேக்கணும்னு நெனைக்குறாங்க. தகப்பனில்லாத வீடுன்றதால முடிவெடுக்க வேண்டியது சிவா. அவங்கப் பேசட்டும்”

“சிவா நம்ம ரெண்டு ஊருப் பிரச்சனைய தீத்து வெக்க மாமா அவருப் பொண்ணக் குடுக்குறேன்னு சொன்னாரு. இப்ப இந்த ஊருல ஒரு பிரச்சனங்கும்போது நாங்க எதாவது செய்யணும்”

“அதுக்காக இன்னொரு கல்யாணம் தான் வழியா?”

“அப்படியில்ல. வேற என்ன உதவி வேணும்னாலும் செய்ய நாங்கத் தயார். ஆனா அதெல்லாம் உங்களுக்கு தைரியத்த வேணா குடுக்கும். ஆறுதல் சொல்லவோ, உங்களுக்காக நாங்க இருக்கோம்னு புரிய வெக்கவோ நெனச்சா இந்த கல்யாணம் ஒண்ணுதான் வழி”

“நீ ஊர யோசிக்குற பரமா. உன்ன யோசிச்சுப் பாத்து முடிவுப் பண்ணு”

“ஒரு பொண்ணோட வாழ்க்கைய யோசிச்சுப் பேசுறேன். ஊரும் முக்கியம்தான். அதுக்காக என்ன பணயம் வெக்க மாட்டேன். எங்கண்ணன் நல்லாதான இருக்காங்க?”

“உங்க அண்ணன் கல்யாணத்தையும் உன்னோடதையும் சேத்துப் பாக்காத. ரெண்டும் வேற. தேவையில்லாம என் தங்கச்சிக் கஷ்டப்படுறதப் பாக்குறதுக்கு அவளக் காலம் பூரா எங்கக் கூடவே வெச்சுப்பேன்”

“சொல்லிட்ட… செய்ய முடியுமான்னு யோசி. அவ சந்தோஷமா இருப்பான்னு நம்பு. என்ன நம்பு”

“அவ இதுக்கு ஒத்துக்குவாளா?”

“அப்ப உனக்கு சம்மதமா?”

“உங்க குடும்பத்த நம்பி எங்க ஊர் தலைவரே அவருப் பொண்ணக் குடுத்துருக்காரு. நானும் நம்புறேன்”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!