செம்புனல் – 6

வீட்டு வாசலுக்கு வெளியே செல்வதும் இரண்டடிக்கு மேல் போகாமல் உள்ளே வருவதுமாயிருந்தார் செம்பருத்தி. வெளியே திண்ணையில் அமர்ந்திருந்த சிவாவிற்கு தாய் எதாவது சொல்ல வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பு.

முடிவெடுத்தது அவனென்றாலும் அதற்கான ஆமோதிப்பு தாயிடமிருந்து வர வேண்டும். திருமணம் என்று சொன்னவனுக்கு சம்மதமா என்று கேட்கத் தயக்கம். ஏன் கேட்க வேண்டுமென்ற எண்ணமும் இருந்தது.

செம்பருத்திக்குள் நிறையக் கேள்விகள் – இப்போதேவா? தேடி வந்ததை விடவா? தெய்வா சம்மதிப்பாளா? இதையும் விட்டால்? சரி வருமா? எல்லாக் கேள்விகளுக்கும் சேர்த்து ஒரே பதில் கிடைக்குமா?

யாரிடமாவது பேச வேண்டும். மகனிடமே பேசலாம். பதினைந்து வயதில் தந்தையைப் பரிகொடுத்த பிறகு குடும்பத் தலைவனாகி வீட்டின் எல்லா முடிவுகளையும் எடுத்துத் தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிப்பவன். அதுவரை தாய் சொல்லைத் தட்டாதவன், தாய்க்கே ஆணையிடுபவனாய் மாறிப் போயிருந்தான்.

“சிவா… நம்ம தெய்வா…”

“இன்னும் என்னம்மா? அதான் சொல்லிட்டேன்ல?”

“ஒண்ணுமில்லப்பா. நான் கொஞ்சம் சித்தி வீடு வரைக்கும் போயிட்டு வரவா?”

“போயி?”

“மனசு என்னமோ மாதிரி இருக்கு… கொஞ்ச நேரம் பேசிட்டு வந்துடறேன்”

சிவா அமைதியானான். அவன் சித்தியின் வீட்டை நோக்கி நடந்தார் செம்பருத்தி. சிவா அப்பாவின் தம்பி மனைவி ரோஜா. போன வருடம் சாலை விபத்தில் கணவரை இழந்தவர். மகன் சொன்னதை அவரிடம் சொன்னார் செம்பருத்தி.

“கல்யாணமா? அவக்கிட்ட சொல்லிட்டீங்களா?”

“எனக்கு ஒண்ணும் புரியல ரோஜா. அதான் நேரா இங்க வந்தேன். இதான் நல்லதுன்னும் தோணுது. இப்ப இது தேவையான்னும் சந்தேகமா இருக்கு. நீ சொல்லு… என்ன செய்யட்டும்?”

“இந்த சம்பந்தம் வேணாம்னு சொல்லிடுறோம்னு வைங்க… பின்னாடி எப்பப் பையன் தேடுனாலும் தெயவாவுக்கு நடந்தத மறச்சு வெச்சுப் பேச முடியாது. தெரிஞ்சா வேற எவனும் ஒத்துக்குவானா மாட்டானான்னு நம்மளால சொல்ல முடியுமா? எல்லாம் தெரிஞ்சவங்க… அந்த ஊர் தலைவர் வீடு… நம்ம ஊர் தலைவர் பொண்ணு வாழுற வீடு… அனுப்பி வெச்சுடலாங்கா”

“எல்லாம் சரிதான் ரோஜா… நாள மறு நாளே கல்யாணம் நடத்தணும்னு சொல்லுறாங்களாம்”

“அவ்வளோ சீக்கிரமா? அவ உடம்புல இருக்கக் காயமெல்லாம் இப்பதான் ஆறி வருது. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்க மாட்டாங்களா?”

“சிவா முடிவா சொல்லுறான். அவங்கக் கேட்டதுக்கு சம்மதம் சொல்லிட்டு வந்துட்டான். இதுக்கு மேல அவன்கிட்டப் பேசி ஒண்ணும் பண்ணுறதுக்கில்ல”

“அவன் சம்மதம் சொன்னப் பிறகு நம்ம எதுக்கு யோசிக்கணும்? வாங்க தெய்வாவப் பாக்கப் போவோம்”

“சுந்தரி எங்க ரோஜா?”

“பின்னாடிக் குடிசையில தான் உக்காந்திருக்கு. வாங்க”

தெய்வாவை சுற்றி இரண்டு பெண்கள் இருந்தனர். செம்பருத்தியும் ரோஜாவும் வரவும் எழுந்துச் சென்றனர். அருகே சிதறிக் கிடந்த புத்தகங்களையும் தெய்வாவையும் பார்த்த ரோஜா இடுப்பில் சொருகியிருந்த சீப்பை எடுத்து அவள் பின்னால் அமர்ந்து நீண்டப் பின்னலை அவிழ்த்தார்.

“பொம்பளப் புள்ள இப்படியா இருப்ப? முகம் கழுவலையா? விளக்கு வெக்குற நேரமாகப் போகுது. அதுக்கப்பறம் உக்காந்து முடிய சிக்கெடுக்க முடியுமா? இதெல்லாம் சொல்லிக் குடுத்துதான வளத்தோம்?”

“சுத்தமா இருன்னு சொன்னீங்க… இதெல்லாம் செஞ்சா இப்ப நான் சுத்தமாயிடுவனா சித்தி?”

“என்ன தெய்வா? நீ…”

“சீப்பக் குடு ரோஜா. நம்ம எப்படி இருக்கோங்குறது அடுத்தவங்கப் பார்வையில இல்ல. நம்ம மனசுல இருக்கு. தலையக் கலச்சுப் போட்டுக் கசங்குன உடுப்ப மாட்டிக்கிட்டு நின்னா மட்டும்?”

தெய்வா பதில் சொல்லவில்லை. அவள் கேட்டக் கேள்வியும் தாய் கேட்டக் கேள்வியும் எதிர் எதிர் துருவங்களில் நின்று பதிலுக்காகக் காத்திருந்தன. இரண்டிலிருந்தும் தப்பித்து ஓடிவிட நினைத்தாள்.

மனம் வெறுமையாக இருந்தது. எண்ணங்கள் வற்றிப் போகவில்லை. காட்சிகள் மறைந்திருக்கவில்லை. கற்பனைகள் அவள் அனுமதிக்காய் காத்திராமல் தலையில் ஏறி அமர்ந்தன.

“தெய்வா”

“ம்ம்? என்னம்மா?”

“அண்ணன் உனக்கு கல்யாணம் பேசியிருக்கான். நாளன்னைக்கு…”

“என்னது? ம்மா… நான்… என்னமோ ரெண்டு மூணு நாளு லீவு சொல்லுறேன்னு சொன்னீங்க? நான் படிக்கணும்மா. இன்னும் ஒரே மாசம். பரிட்ச எழுதிட்டா…”

“ஆசைப்பட்டதப் படிச்சுட்டல்ல? பரிட்ச எழுதுனா என்ன எழுதலன்னா என்ன?”

“பட்டம் வாங்கணும்மா. அது இல்லாம நான் படிச்சுட்டேன்னு எப்படி சொல்லுறது? இதுக்கா மூணு வருஷம்…”

“படிக்கணும்ன… ஊர எதிர்த்து காலேஜுக்கு அனுப்புனேன். எவளாவது ஸ்கூல் தாண்டிப் போயிருக்காளா? உன் வாழ்க்க நல்லாயிருக்கணும்”

“வேலைக்குப் போகணும்மா. அதுக்குதானப் படிச்சேன்?”

“போயி? என்னத்தக் கிழிக்கப் போற?”

“புடிவாதம் புடிச்சேன்னு எல்லாரையும் சமாளிச்சு காலேஜுக்கு அனுப்புன. நேத்து நான் கேட்டதும் இத்தன புக்க கொண்டு வந்து குடுத்தியேம்மா. ஒரு மாசம்மா”

“கொழந்த அழுவுதுன்னு முட்டாய் குடுக்கலாம். அதுக்காக சாப்பாடுக்கு பதிலா முட்டாய் மட்டுமே குடுத்துட்டிருக்க முடியுமா?”

“படிக்குறேம்மா… அம்மா நான் படிக்கணும்மா…”

“சும்மா அதையே திரும்பத் திரும்ப சொல்லாத தெய்வா”

“என்ன பாத்து எத்தனப் பொண்ணுங்க அடுத்து காலேஜ் போக நெனைக்குறாங்க? என் படிப்ப நிறுத்துனீங்கன்னா அவங்க எல்லாரோட கனவும் கனவாவே நின்னுடும்மா. நல்லாப் படிச்சு என்ன பிரயோஜனம்னு யோசிக்க வெச்சுடும். மேலப் படிக்க வெக்க மாட்டாங்கன்னு முடிவே பண்ணிடுவாங்க. இன்னும் ஒரு மாசம் விடும்மா… அதுக்கப்பறம் நீ என்ன சொன்னாலும் கேக்குறேன். என்ன சொன்னாலும்”

“உனக்கு இருக்கிறது இன்னும் ஒரு நாள் தெய்வா. என்னால உங்கண்ணன்கிட்டப் பேச முடியாது”

“அண்ணன இங்க வர சொல்லும்மா. நான் பேசுறேன்”

“அவன் ஒத்துக்க…”

“உன்னக் கெஞ்சிக் கேக்குறேன்மா. நீ பேச வேணாம். ஒரே ஒரு வாட்டி அண்ணன வர சொல்லு. நானே பேசுறேன்”

“அக்கா… அவ சொல்லுற மாதிரி சிவாவக் கூட்டிட்டு வருவோம் கா. நம்மளாலக் கண்டிப்பா முடியாது. அவளாவது ஒரு தடவ முயற்சிப் பண்ணிப் பாக்கட்டுமே”

“அதனால மட்டும்…”

“எதுவும் மாறலன்னாலும் பரவாயில்ல. ஒருவேளப் பேசியிருந்தான்னு அவளும் ஏங்கத் தேவையில்ல, பேச வெச்சிருந்தான்னு நம்மளும் வருத்தப்படத் தேவையில்ல”

“சரி கூட்டிட்டு வரேன். ஆனா அவன் சொல்லுறதுதான் முடிவு. அதுக்கப்பறம் எதுவும் பேசக் கூடாது”

“ஒருத்தன் ஒரு நாள் பண்ணத் தப்புக்கே என்ன பண்ணுறதுன்னு தெரியாம செத்துக்கிட்டிருக்கேன். மூணே நாள்ல இன்னொருத்தனக் கொண்டு வந்து நிறுத்துறீங்க. என்னை என்ன…”

செம்பருத்தி குடிசையை விட்டு வெளியே ஓடினார். ரோஜா அவரை அழைத்தபடிப் பின்னே ஓட புடவை முந்தானையால் வாயை மூடியபடி வீட்டை நோக்கி விரைந்தார். சிவா இன்னும் திண்ணையில் உட்கார்ந்திருந்தான்.

“அவ உன்கிட்டப் பேசணுமாம். தயவுசெஞ்சு எதுவா இருந்தாலும் நீயே முடிவா சொல்லிட்டு வந்துடு. என்ன பேச சொல்லாதப்பா. இதுக்குமேல எம்மனச கல்லாக்கிக்க எனக்குத் தெம்பில்ல. போ… எது நல்லதுன்னு படுதோ செய்”

வீட்டினுள் சென்று கதவடைத்துக் கொண்டார். ரோஜாவிடம் திரும்பினான். அவனையும் மூடியிருந்த கதவையும் பார்த்தவர் கண்ணீரைத் துடைத்தபடி சென்றுவிட்டார். யாரும் துணைக்கு வரப் போவதில்லை. சிவா குடிசையை நோக்கி நடந்தான்.

வேணு சங்கிலியில் போட்டிருந்த பூட்டைத் திறந்து கொண்டிருந்தான். நரன் இன்று முழுவதும் குளிக்க வேண்டுமென்று திரும்பத் திரும்ப சொல்ல அருகிலிருந்த நதிக்கு அழைத்து வந்திருந்தான். சில்லென்றக் காற்று உடலை லேசாக நடங்கச் செய்தது.

“தண்ணி கண்டிப்பா ஜில்லுன்னு இருக்கும். நல்லா யோசிச்சுக்கோ. கண்டிப்பா இப்பவே குளிக்கணுமா?”

“இல்லன்னா தூக்கம் வராது. ராத்திரி பூரா முழிச்சிருக்க சொல்லுறியா?”

“ஏன்? காலைல முக்கியமான வேலை இருக்கா? கண்டிப்பா ராத்திரித் தூங்கியே ஆகணுமா?”

“திரும்பிப் போறப்போ கேவலமாப் போகக் கூடாதுல்ல?”

“இன்னுமும் நம்புறப் பாத்தியா? நான் இங்கயே நிக்குறேன். ரொம்ப உள்ளப் போகாத. தண்ணியோட வேகம் எப்போ அதிகமாகும்னுத் தெரியாது”

“குளிச்சுட்டுப் போட டிரஸ்? சோப் வேணும்”

“வந்து இதே ட்ரெஸ போடு. சோப்பு இங்க இருக்கு. துண்டு இல்ல. எடுத்துட்டு வர மறந்துட்டோம்”

“இதே டிரெஸ்ஸ போடவா? என்ன விளையாடுறியா? கிட்னாப் பண்ணா ஒரு ட்ரெஸ் கூட வாங்கித் தர மாட்டீங்களா? கஞ்சப் பயலுகளா”

“ஆமா இவரு மாமியார் வீட்டுக்கு வந்த புது மாப்ள… புதுத் துணி வாங்கிக் குடுத்து உபசாரம் பண்ணுறாங்க. போய்க் குளிடா”

“கிட்டத்தட்ட அப்படிதான?”

நரனை எட்டி உதைத்தான் வேணு. நீரில் விழுந்தவனின் கழுத்தைச் சுற்றி சங்கிலியைப் போட்டு அவன் நெஞ்சில் கை வைத்து அழுத்தினான்.

“உன்னயெல்லாம் பேச விட்டது தப்பு. பூபதி… வந்து இவனப் புடி. நடுங்கி சாவுற வரைக்கும் இவன தண்ணிய விட்டு வெளில விடக் கூடாது”

“ஏய்… ஜில்லுன்னு இருக்கும்ன… வெறைக்குது. விடுடா”

“முதல்ல உன் வாய அடிச்சு உடைக்கணும். கெட்டியாப் புடி பூபதி. கழுத்து வரைக்கும் தண்ணி உள்ளதான் இருக்கணும்”

இருவரும் ஆளுக்கொரு கையைப் பிடித்துக் காலை அவன் நெஞ்சில் வைத்து நீருக்குள் அழுத்தினர். நரனின் பற்கள் அடித்துக் கொண்டன. நடுங்கிய கைகளால் அவர்கள் கையை இறுகப் பிடித்தான். உடலை தண்ணீருக்கு மேல் கொண்டு வர முயன்றான். கத்த வாய்த் திறந்தால் பற்கள் இன்னும் வேகமாக அடித்துக் கொண்டன. வாயை இறுக்கி மூடினான். உடல் முழுவதும் நடுங்க ஆரம்பித்தது.

சிவா குடிசைக்கு வெளியே நின்று “தெய்வா” என்றழைத்தான். வெளியே வந்தவள் அவன் முன் மண்டியிட்டமர்ந்து அவன் கால்களை கட்டிக்  கொண்டாள்.

“இப்ப கல்யாணம் வேணாம்னா”

“நான் வாக்குக் குடுத்துட்டேன்”

“நீ வாக்கு மட்டும்தான் குடுத்த. நான் வாழணும்”

“தெய்வா எந்திரி முதல்ல”

“மாட்டேன். படிக்குறேன்னு சொன்னப்போ எனக்காக எத்தனப் பேருக்கிட்டப் பேசி காலேஜுக்கு அனுப்புன? இப்ப நீயே படிப்ப நிருத்துறியேண்ணா”

“அன்னைக்கு உன் சந்தோஷத்த யோசிச்சேன். இன்னைக்கும் யோசிக்குறேன்”

“இன்னும் ஒரு மாசம் குடு. ஒரே மாசம். பரிட்ச மட்டும் எழுதிடுறேன்”

“முடியாது தெய்வா”

“ஏன்? அவ்வளோ என்ன அவசரம்? இந்த ஒரு மாசத்துல என்ன ஆயிடப் போகுது?”

“ஒரு மாசம் கழிச்சு எதுவும் நடக்காதுன்னு இப்பவே நடத்திட நெனைக்குறேன்”

“கல்யாணமே வேணாம்ணா. உங்கக்கூடயே இருந்துடுறேன். என்னால முடியாது. என் வாழ்க்கைய நரகமாக்கப் பாக்குற. இன்னொருத்தர் வாழ்க்கையையும் சேத்துக் கெடுக்கப் போற. விட்டுடேன்… வேணாம்”

“முதல்ல ஒரு மாசம்ன… இப்ப கல்யாணமே வேணாம்னு சொல்லுற. தெளிவா முடிவெடுக்குற நெலமையில நீ இல்ல. நான் சொல்லுறதக் கேளு”

“கேக்க மாட்டேன். நான் சொல்லுறத நீ கேக்க மாட்டன்னா நீ சொல்லுறத நான் எதுக்குக் கேக்கணும்? இவ்வளோ கெஞ்சுறேன்… இதையும் மீறி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணன்னா செத்துப் போயிடுவேன். குடுத்த வாக்குக்கு பொணத்தத் தூக்கிக் குடு”

கால்களைக் கட்டியிருந்தவளின் முடியைப் பிடித்துத் தூக்கிக் கன்னத்தில் அறைந்தான்.

“விட்டா என்ன பேசிட்டே போற? சாவு… சாவுறதுக்குதான இத்தன வருஷம் வளத்தோம்… சாவுறதுக்குதான இப்பயும் பொத்திப் பொத்திப் பாத்துக்குறோம். நீ கேட்டன்னு உன்ன காலேஜ் அனுப்புனா நல்லவன். உனக்கு நல்லதுன்னு நெனச்சு நான் ஒரு முடிவெடுத்தா சாவியா?

வீட்டுல ஒரு சாவு விழுந்ததுக்கு அம்மா பாதியாயிட்டாங்க. அப்பா செத்த அன்னைக்கு அவங்கக் கதறுனது நியாபகம் இருக்கா? உனக்கோ எனக்கோ எதாவது ஒண்ணு ஆச்சுன்னா உயிர விட்டுடுவாங்க. எல்லாரும் போய் சேந்து நான் மட்டும் அனாதையா நிக்கணுமா? நானும் போயிடுறேன்.

இதுதான் முடிவுன்னா மூணு நாள் முன்னாடி என் நெஞ்சுல வந்து விழுந்தியே அப்போவே குடும்பத்தோட வெஷத்தக் குடிச்சிருக்கலாமே… இத்தன நாள் எதுக்கு உயிரோட இருக்கணும்? அந்தப் பொறுக்கிய எதுக்குத் தூக்கிட்டு வந்துது?

எல்லார் முன்னாடியும் வாழ்ந்துக் காட்டணும். அதுக்கு இந்த கல்யாணம் நடந்தே ஆகணும். உனக்கு இஷ்டம் இருக்கோ இல்லையோ… நாங்க உயிரோட இருக்கணும்னா, நான் குடுத்த வாக்கக் காப்பாத்தி தல நிமுந்து நடக்கணும்னா உயிர கையிலப் புடிச்சுட்டு இரு. இல்ல எதப் பத்தியும் கவலயில்லன்னா…”

சிவா சென்றுவிட்டான். தெய்வா கன்னத்தில் கை வைத்து அசையாமல் நின்றாள். இதுவரை யோசித்த எதுவும் இனி தேவயற்றவையாகிப் போயின. இனி யோசிக்க வேண்டியவை எதுவும் புத்திக்குப் புலப்படவில்லை.

வீட்டின் கதவை தடதடவெனத் தட்டினான். செம்பருத்தி பதறித் திறந்தார்.

“நாளைக்குப் போய் துணி சீர் எல்லாம் வாங்கிட்டு வந்துடுவேன். நாளன்னைக்குக் காலையில அவங்க ஊருக்குப் போகணும். நான் சொன்ன மாதிரி கல்யாணம் நடக்கும்”

“அவங்க ஊர்லயா?”

“அவங்கப் பழக்கம் பையன் ஊர்ல செய்யுறது. சரின்னு சொல்லிட்டேன்”

“இது நம்ம ஊரு சிவா. உன் கல்யாணம் எப்படியும் பொண்ணு ஊர்ல தான் நடக்கும். எம்பொண்ணு கல்யாணத்தையாவது இங்க நடத்திடணும்யா. உங்க அப்பா வாழ்ந்த ஊருய்யா…”

“சொல்லுறத செய்ங்க”

“சொல்லிட்டே இருக்க. செஞ்சுட்டே இருக்கோம். கொஞ்சம் காது குடுத்துக் கேக்கவும் செய்ப்பா. இங்க…”

“முடியாதும்மா. எல்லாம் பேசி முடிவுப் பண்ணியாச்சு”

செம்பருத்தி சுவரில் மாட்டியிருந்த கணவரின் படத்தின் முன் போய் நின்றார். சிறிது நேரம் படத்தைத் தடவியவர் சுவரிலிருந்து எடுத்து நெஞ்சோடு அணைத்து அப்படியே அமர்ந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!