Sempunal 8
Sempunal 8
செம்புனல் – 8
தெய்வாவை ஓர் அறையில் விட்டுச் சென்றாள் காவேரி. அவளுடைய ஊரில் பெரிய வீடு ஆருமுகத்துடையது. இது அதைவிடப் பெரிய வீடாய் இருந்தது. கழுத்திலிருந்த மாலையைக் கழட்டி அருகிலிருந்த மரக் கட்டிலின் சட்டத்தில் வைத்தாள். அடுத்து கருகமணியையும் கழட்டி மாலையின் அருகிலேயே வைத்தாள்.
யாரேனும் அங்கு வருவார்களென்ற எதிர்ப்பார்ப்பு. தாயாவது வந்து பேசுவாள் என்ற ஆவல். கால்கள் வலித்தாலும் உட்காரத் தோன்றவில்லை. வாசலைப் பார்த்தபடி இருந்தாள். கடந்து சென்ற ஒவ்வொரு நொடியும் நின்று அவளை வேடிக்கைப் பார்த்து ஏளனம் செய்து சென்றது.
பரமன் அறைக்குள் வந்ததும் இரண்டடிப் பின்னால் சென்று சுவரோடு ஒட்டி நின்றாள். கொண்டு வந்த கவரை ஓர் மூலையில் வைத்து அவளிடம் வந்தான்.
“சாப்பிட வர சொன்னாங்க”
அவள் நிமிர்ந்துப் பார்க்கவில்லை. “வா” என்றவன் தோளிலிருந்த துண்டைக் கட்டிலில் வைத்தான். கருகமணி கண்ணில் பட்டது. எடுத்து அவளருகில் சென்று அவள் எதிர்ப்பையும் மீறிக் கழுத்தில் அணிவித்தான்.
“மத்தவங்கக் கேள்விக் கேக்குற மாதிரி, கேவலமாப் பேசுற மாதிரி எந்தக் காரியத்தையும் செய்யாத. வா சாப்பிட”
அவன் சென்றுவிட்டான். தெய்வா பெரிய பெரிய மூச்சுகளை எடுத்தாள். வியர்த்தது. கருகமணியை அவன் வலுக்கட்டாயமாய் தலையில் நுழைத்ததால் படிய சீவியிருந்த கேசம் களைந்திருந்தது. சூடியிருந்த பூக்கள் உதிர்ந்துத் தரையில் விழுந்திருந்தன.
எதிரிலிருந்த கண்ணாடியில் தன் முகம் பார்த்தவள் அவசரமாக விரலால் கோதிக் களைந்திருந்த முடியைப் பின்னலோடு சேர்த்து சொருகினாள். பின்னலுக்கு வெளியே இருந்த கருகமணியை முடியைத் தூக்கிக் கழுத்தோடு சேர்த்துப் போட்டாள். வியர்வை இன்னும் அடங்கியிருக்கவில்லை.
“தெய்வா… சாப்பிட வா. தம்பி வந்து கூப்பிட்டாங்களாம்… இன்னும் ஏன் இங்க நிக்குற? என்னாச்சு? ஏன் முகமெல்லாம் இப்படியிருக்கு? இவ்வளோ வேர்த்திருக்கு… பேன் போட்டுக்க வேண்டியதுதான? நம்ம ஊர்லதான் கரண்ட் கிடையாது. இங்க அந்த வசதி இருக்கு. இனிமே போட்டுக்கோ. முகத்தக் கழுவிட்டு வா. நான் முன்னாடிப் போறேன்”
காவேரி வந்து சொல்லிச் சென்றாள். தெயவாவால் அசைய முடியவில்லை. நிற்கும் இடம் மனதில் பதிந்தது. அறைக்குள் வந்தவர்கள் எல்லாம் சொந்தங்கள். ஆனால் யாரும் மனதில் ஒட்டவில்லை. சொந்தங்கள் என்று அவள் நினைக்கும் எவரும் வரவில்லை. இனி வரப் போவதுமில்லை.
வராதவர்கள் உதறிவிட்டார்களாத் தெரியாது. வந்தவர்கள் ஏற்றுக் கொண்டார்களா என்று புரியவில்லை. அவர்களைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம். அவர்கள் பார்வையிலும் பேச்சிலும் என்ன இருந்தது? கோபமா? பரிதாபமா? இரக்கமா? இளக்காரமா? எல்லாமும் இருந்ததாகப்பட்டது. எதுவாக இருந்தாலும் அது தனக்குத் தேவையில்லை என்று நினைத்தாள்.
“தெய்வா… எவ்வளவு நேரம் மாப்பிள்ளை அங்க தனியா உக்காந்திருப்பாங்க? என்ன பண்ணிக்கிட்டிருக்க? வா வேகமா?”
ரோஜா அவள் கைப் பிடித்து இழுத்துச் சென்றார். அவள் முகம் கூட பார்க்கவில்லை. பரமன் இலையின் முன்னால் அமர்ந்திருந்தான். பக்கத்து இலையில் உட்காரவைத்தார்.
அவன் மீது உரசிய நொடிக் கைகளை ஊன்றிக் கொஞ்சம் நகர்ந்தமர்ந்தாள். இலையைப் பிடித்து இழுத்துத் தனக்கு முன்னால் நகர்த்தினாள்.
திருமண வீட்டிலிருக்கும் கிண்டலும் கேலியும் அங்கில்லை. யாரும் யாருடனும் பேசவுமில்லை. பார்வைப் பரிமாற்றங்கள் எந்த சப்தமும் எழுப்பாததால் நிசப்தமாய் இருந்தது.
பரமன் சாப்பிடும்வரை உணவை சவைத்தவள் அவன் எழுந்ததும் இலையை மூடி எழுந்தாள். தடுப்பாரில்லை. கைக் கழுவி சொம்பை அவளிடம் நீட்டினான். கை துடைத்த துண்டைக் கொடுத்துச் சென்றுவிட்டான். அவள் மீண்டும் அறைக்குள் வந்து தரையில் அமர்ந்துக் கால்களைக் கட்டிக்கொண்டாள்
சிறிது நேரம் கழித்து செம்பருத்தியும் ரோஜாவும் வந்தனர். அருகில் அமர்ந்து அவள் கைகளைப் பிடித்துக்கொண்டார் செம்பருத்தி.
“நாங்கக் கிளம்புறோம் தெய்வா”
“ம்ம்”
“இங்க எல்லார்கிட்டயும் பாத்து நடந்துக்கோ. இனி இதான் உன் வீடு”
“ம்ம்”
“சரியா சாப்பிடும்மா”
“ம்ம்”
“போயிட்டு வாங்கன்னாவது சொல்லு தெய்வா”
“உங்க கடமைய முடிக்கணும். கட்டி வெச்சுட்டீங்க. கெளம்புறதுக்கு முன்னாடி இதெல்லாம் சொல்லணுங்குறதும் உங்க கடமை. சொல்லுறீங்க. கேக்குறேன். இதுக்குமேல என்கிட்டேந்து எதுவும் எதிர்ப்பாக்காதீங்க”
“ஏன் தெய்வா இப்படிப் பேசுற? எனக்கும் தெரியும். உன்னப் பெத்தவளுக்குத் தெரியாதா நீ என்ன பாடு படுறன்னு?”
“என்ன தெரியும்? பெத்துட்டா? எனக்கு நடந்தது உனக்கு நடக்கலல்ல… அப்ப உனக்குப் புரியாது. எந்திரிச்சுப் போயிடு”
“தெய்வா… அம்மாவ…”
“கெளம்புங்க சித்தி”
“என்னடி இப்படியெல்லாம் பேசுற? எம்மனசு…”
அறைக்குள் வந்த சிவா தாயினருகில் அமர்ந்தான்.
“நாங்க வரோம் தெய்வா. எது செஞ்சிருந்தாலும் உன் நல்லதுக்குதான் செஞ்சிருக்கோம். இத மட்டும் மறக்காத. நீ இங்க நல்லா இருப்ப தெய்வா”
“ம்ம்”
“இப்படி முகத்தத் தூக்கி வெச்சுக்கிட்டு…”
“நான் இப்பக் கத்துனன்னாத் தேவையில்லாத பிரச்சன வரும். இந்த நிமிஷம் வரைக்கும் உங்க மரியாதையக் காப்பாத்திட்டுதான் இருக்கேன். அதுக்காகவே உயிர் வாழுறவங்க நீங்க. பாத்து பத்திரமாப் போங்க”
“உனக்குக் கஷ்டமா இருக்கும்னு எனக்குத் தெரியும் தெய்வா. எல்லாம் சரி ஆகும். போயிட்டு வாங்கன்னு சொல்லு”
“வந்து என்ன பண்ணப் போறீங்க?”
“நீ இந்த வீட்டுல வாழ வந்திருந்தாலும் எங்க வீட்டுப் பொண்ணு தெய்வா”
சில நொடிகள் சிவாவின் முகத்தை உற்றுப் பார்த்தவள் கால்களைக் கட்டியிருந்த கைகளைப் பிரித்து வலதுக் கையால் அவன் கன்னத்தில் அறைந்தாள்.
செம்பருத்தி நெஞ்சில் கை வைத்துக் கத்த வாய்த் திறக்க அவர் வாயைப் பொத்தினார் ரோஜா. சிவா கன்னத்தில் கை வைத்து அசையாது இருந்தான்.
“என்ன செய்யுற தெய்வா? அவன் உன் அண்ணன்… சிவா எந்திரிப் போயிடலாம். அவ சொல்லுற மாதிரிக் கத்திக் கூப்பாடுப் போட்டா நல்லா இருக்காது. எந்திரிங்கக்கா. வா சிவா”
கன்னத்திலிருந்த அவன் கையைப் பிடித்து இழுத்த ரோஜா உடனே அவன் கையை விட்டுவிட்டார். கன்னத்தில் வரி வரியாய் தெய்வாவின் விரல் அச்சு.
“என்ன காரியம்டி பண்ணி வெச்சிருக்க? இப்படியே எப்படி வெளிலப் போறது? யாராவது கேட்டா என்ன சொல்லுறது?”
கேள்விக்கேட்ட சித்தியின் முன் அவளுடைய கைகளை நீட்டினாள். ஆங்காங்கே ரத்தம் கட்டிக் கறுத்திருந்த காயங்கள்.
“இதோட இன்னைக்கு நான் ரெண்டு ஊர் ஆளுங்க முன்னாடி நின்னேன். இனி இதப்பத்திக் கேக்குறவங்களுக்கு பதில் சொல்லணும்”
செம்பருத்தி திரும்பி மகனின் தோளில் இரண்டு கைகளாலும் சரமாரியாக அடித்தார். வெடுக்கென்று எழுந்து அறையை விட்டு வெளியே சென்றார். ரோஜா தெய்வாவின் கன்னத்தை வருடிக் கண்ணீரைத் துடைத்தபடி வெளியே சென்றார். சிவா மெதுவாக எழுந்தான்.
“அம்மா இதுவரைக்கும் என்ன அடிச்சதில்ல. இத்தன வயசுக்கப்பறம்… நான் அவசரப்பட்டோ யோசிக்காமயோ இந்த முடிவ எடுக்கல. உனக்கு இதான் நல்லது. கண்டிப்பா இங்க நீ சந்தோஷமா இருப்ப”
“இப்பயும் நீ தப்புப் பண்ணிட்டன்னு உன்னால ஒத்துக்க முடியலல்ல? வீட்ட விட்டு அனுப்பிட்ட… அப்படியே தலமுழுகிடு”
மீண்டும் கால்களைக் கட்டி அமர்ந்தாள். அவள் இனி பேச மாட்டாள், அவளிடம் பேசிப் பிரயோஜனம் இல்லையென்று வெளியே வந்தான்.
ஆத்மனும் சபரியும் ரங்கன், பரமனுடன் பேசிக் கொண்டிருந்தனர். அவன் கன்னத்துக் கோடுகளை கவனித்தவர்கள் எதுவும் கேட்கவில்லை. ரங்கன் மட்டும் தம்பியைத் திரும்பிப் பார்த்தான்.
பரமன் யாரிடமும் எதுவும் பேசவில்லை. கைக் கூப்பி வழியனுப்பி வைத்தான். சிவாவைத் தோளோடு அணைத்து விடுவித்தான். அமைதியாக செல்ல நினைத்திருந்தவன் பரமன் அணைத்த பிறகு “வரேன்” என்று சொல்லிக் கிளம்பினான். வீட்டிலிருந்த அவனுடைய ஊர்க்காரர்களும் சிறிது நேரத்தில் கிளம்பிவிட எஞ்சியிருந்தது ரங்கன், காவேரி, பரமன், தெய்வா மட்டுமே.
ரங்கனும் காவேரியும் அவர்களுடைய அறைக்குச் சென்றுவிட தெய்வா அமர்ந்திருந்த அறை வாசலுக்கு வந்தான் பரமன். அவள் இன்னும் அப்படியே அமர்ந்திருந்தாள்.
“உங்க வீட்டுலக் கெளம்பிப் போறாங்க… வெளில வந்து பாக்க மாட்டியா?”
“இனிமே இதான் என் வீடுன்னு சொல்லிட்டுப் போறாங்க”
“ஆமா. உன் வீடா நென. அப்போதான் எங்கக்கூட ஒன்ற முடியும்”
“எதுக்கு?”
அவ்வளவு நேரம் கதவருகில் நின்றுப் பேசியவன் கதவை மூடித் தாழிட்டு அவள் முன்னால் வந்தமர்ந்தான். அவள் பின்னால் நகர்ந்தாள்.
“முதல்ல இப்படி வெளிலத் தெரியுற மாதிரி ஒதுங்குறத நிருத்துறியா? சாப்பிடும்போதும் இப்படிதான் பண்ண”
தெய்வா தலைக் குனிந்தாள்.
“ஊருக்கு உபகாரம் பண்ணவும், உன் வாழ்க்கைக் கெட்டுடக் கூடாதுன்னும் யோசிச்சு தான் கல்யாணம் பண்ணிக்குறேன்னு கேட்டேன். உன்ன எப்படியெல்லாம் பாத்துக்கணும்னு எனக்குத் தெரியாது.
நோகடிக்காம இருக்க முயற்சிப் பண்ணுறேன். உண்மைய சொல்லணும்னா இப்ப எது உன்ன நோகடிக்கும்னே எனக்குத் தெரில தெய்வா. வீட்டுல எங்கம்மா இருந்திருந்தாலாவது… எனக்கு அஞ்சு வயசு இருக்கும்போதே போயிட்டாங்க.
அண்ணிய உனக்கு நல்லாத் தெரியும். சகஜமா இருக்கப் பாரு. தூங்கு. எனக்குக் கொஞ்சம் வேல இருக்கு. வெளிலப் போறேன்”
தெய்வா கையை மடக்கித் தலைக்கு வைத்துத் தரையில் படுத்தாள். பரமனிடம் கேட்க நினைக்கும் கேள்வியை அவன் திரும்பி வந்த பிறகாவது கேட்டுவிட வேண்டும்.
‘ஊருக்கு உபகாரம் பண்ணவும், உன் வாழ்க்கைக் கெட்டுடக் கூடாதுன்னும் யோசிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டேன்’ இதற்கு என்ன அர்த்தம்? மற்றவர்களை மட்டும் யோசித்து இந்தத் திருமணமா? பரமன் நடந்து கொண்ட விதத்தை யோசித்தாள். அவன் எப்படிப்பட்டவனென்று முடிவு செய்ய முடியவில்லை.
சிவாவை அறைந்தது நினைவு வந்தது. தந்தை ஸ்தானத்திலிருந்து வளர்த்தியவன். எப்படி அடிக்க முடிந்தது? விழியோரம் வழிந்தக் கண்ணீர் தரையில் சிந்தியது.
பேருந்தில் சிவாவின் அருகில் அமர்ந்திருந்த ஆத்மன் “என்ன யோசனையிலயே இருக்க?” என்று கேட்டான்.
“ஒண்ணுமில்ல”
“உன் கன்னத்துல… அம்மாவா? விடு சரியா…”
“தெய்வா”
“தெய்வாவா?”
“தப்புப் பண்ணிட்டனா ஆத்மா?”
“டேய்… இந்த நேரத்துல நீ என்ன பண்ணாலும் அவளுக்குக் கோபம்தான் வரும். அதுக்காக அடி வாங்கிட்டு வந்து நிக்குற? திருப்பி ஒண்ணு விட வேண்டியதுதான?”
“அம்மாவும் அடிச்சாங்க ஆத்மா”
“போலிஸ் ஸ்டேஷன்ல அடி வாங்குன அன்னைக்கு எங்கம்மாக் கேட்டாங்க… ஊர் தலைவரா இருக்குறதுன்னா சும்மான்னு நெனச்சியான்னு. குடும்ப தலைவனா இருக்குறதும் சும்மா இல்ல. எல்லாரையும் சந்தோஷப்படுத்தவும் முடியாது, அவங்க சந்தோஷமா இருக்குறதுக்காகதான் எல்லாம் செய்யுறோம்னு நம்ப வெக்கவும் முடியாது. போகப் போக அவங்களுக்கே புரியும். நீ ஒரு விஷயத்துக்கு இப்படி யோசிக்க ஆரம்பிச்சா அடுத்து எதையுமே சரியா முடிவெடுக்க முடியாது. பாத்துக்கலாம்…”
“எனக்கு அவனப் பாக்கணும்”
“நரனா?”
“இன்னைக்கு நான் வாங்குனதெல்லாம் அவனாலதான? பாக்கணும்”
“போனதும் முதல்ல ஊர் நெலவரத்தத் தெரிஞ்சுப்போம். அப்பறம் சபரிய கூட்டிட்டுப் போக சொல்லு”
காவல்துறையினர் வந்து தேடிச் சென்ற செய்தியை தரணி சொன்னபோது யாரும் பதட்டப்படவில்லை. நிம்மதியாக இருந்தது. இனி அதிகம் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை.
“சபரி என்ன அவன்கிட்டக் கூட்டிட்டுப் போ”
“நானும் வரேன்”
“நீ எதுக்கு ஆத்மா?”
“எப்படியிருக்கான்னுப் பாக்கணும். வாங்கப் போகலாம்”
நரன் கைகளைத் தலைக்கடியில் வைத்து மேலிருந்த மரக் கிளைகளைப் பார்த்தப்படிப் படுத்திருந்தான். இப்போது மண்ணில் படுப்பதற்கு எந்த பயமும் இல்லை. இருட்டுப் பழகியிருந்தது. மங்கிய ஒளியில் அங்கிருந்த எல்லாம் பளிச்சென்று கண்ணுக்குத் தெரிந்தன. வீசியக் காற்றுக் குளிருக்கு பதிலாக இதத்தைத் தந்தது. சுட்ட மீனும் அரை வேக்காட்டுப் பழங்களும் ருசித்தன. வினோத ஒலிகள் பறவைகளின் கூவலாகவும் வண்டுகளின் ரீங்காரமாகவும் மாறியிருந்தன.
அருகில் வந்து விழுந்த கல் திடுக்கிட வைத்தது. ஆத்மனும் சபரியும் சிவாவும் அவனை நோக்கி வந்துக்கொண்டிருந்தனர். அவன் எழ சிவா அவன் சட்டையை ஒரு கையால் பிடித்து அறைந்தான்.
இரண்டித் தடுமாறிச் சென்ற நரன் பற்களைக் கடித்து நிமிர்ந்து மூவரையும் பார்த்தான். சிவாவை நோக்கி அவன் நகரப் பின்னாலிருந்து அவன் கைகளை இறுக்கிப் பிடித்தான் வேணு.
“விடுங்கடா… சும்மா எதுக்கு அடிக்குறீங்க? யாருடா நீங்க நாலுப் பேரும்? அவளுக்கு என்ன வேணும்? சும்மா ரோட்டுல ஒரு பொண்ணு எவனையாவது பாத்துப் பொறுக்கின்னு சொன்னா உடனே பொங்குவானுங்களே… வெட்டிப் பயலுக… அந்த மாதிரியா? இப்ப என்ன அடிச்சா?
அவளே கொல்ல மாட்டேன்னு விட்டுட்டா… கூப்பிடுங்கடா அவள… கேளுங்க… என்னை என்ன பண்ணணும்னுக் கேளுங்க… விட்டுட சொல்லுவா. ஏன்னா அவளுக்கும் தெரியும் நடந்த எதையும் மாத்த முடியாதுன்னு. என்ன இங்க புடிச்சு வெச்சா? என்னதான் சாதிக்கணும்னு நெனைக்குறீங்க?”
“நடந்தது நடந்து போச்சுன்னு அசால்ட்டா சொல்லுற உன்ன மாதிரி தருதலைங்கள விட்டு வெச்சுட்டே இருக்குறதுனாலதான்டா எல்லாப் பயலும் அதையே சொல்லுறானுங்க. இன்னும் ரெண்டு நாள். அதுக்கப்பறம் தெரியும்…”
சிவாவின் கோபம் தணியவில்லை. திரும்பி வேகமாக நடந்தான். நரனின் கைகளை விடுவித்தான் வேணு. சபரி தான் அங்கிருந்துப் பார்த்துக் கொள்வதாக சொல்லி வேணுவை ஆத்மனுடன் அனுப்பி வைத்தான். நரன் அருகில் வந்த பூபதி முதல் முறையாய் அவன் தலையில் ஓங்கி அடித்தான்.