Seyyulaai2
Seyyulaai2
2
ஃபோனில் அன்று காலையில் அலாரம் அடிக்கவில்லை என்றபோதும் டாணென்று காலை ஐந்தரைக்கெல்லாம் முழித்துக்கொண்டாள் வன்ஷி. தனியாய் அலாரமொன்றும் வைத்து எழ அவசியமில்லாது அவளது biological clockஇன் அழைப்பில் எழுந்திருந்தாள். முந்திய நாள் மாலையும் வீடு திரும்பி தான் கொணர்ந்த உணவை உண்டு உடனேயே தனித்திருந்த தன்னை தானே நொந்து கொள்ள மனமில்லாது உறங்கிப்போயிருந்த அவளுக்கு அந்த பத்து மணிநேர சர்வரோக நிவராண தூக்கத்திற்கு பின் அவளை இறுக வளைத்து கட்டிப்போட்டிருந்த யாவும் சற்றே தளர்ந்திருந்ததைப் போலொரு உணர்வு.
எழுந்துவிடவே கூடாதென்று பிடிவாதமாய் புரண்டு படுத்து தன் கைகளை விருட்டென்று போர்வைக்குள் இழுத்துக் கொண்டாள். கண்ணிமைகளை இறுக ஒன்றை ஒன்று அணைத்துக்கொண்டாலும் தூக்கமில்லை. மறுபுறம் புரண்டு படுக்கலானாள்; பின் ஒட்டு மொத்தமாய் கவிழ்ந்து தலையணைக்குள் தலை புதைத்தும், இறுதியாய் சீராய் சவாசனத்தில்.. ம்ஹூம்.. கொஞ்சூண்டும் தூங்கவிடுவதாய் தெரியவில்லை அவளுக்குள் சுழன்று பெருத்த எதுவோ ஒன்று.
வேலை இல்லை. வெளியிலும், வீட்டிலும் இப்போதைக்கு வன்ஷிக்கு சொல்லிக்கொள்ளும்படி வேலையில்லை. எதற்காக இத்தனை காலையில் உறக்கம் துறந்து ஒரு கண்முழிப்பு, தன்னந்தனியே இந்த மெட்றாசில், இந்த வீட்டில் நிம்மதியாய் துயில் கொள்ளும் இந்த விடியற்காலையில் எல்லாம் ceilingஇல் சுற்றும் விசிறியைப் பார்த்துக்கொண்டு என்று அவளுடைய ஒரு நாளுக்கான அசாதரணமான தொடக்கம். பேசாமல் இப்போது நன்றாக மீண்டும் அந்த நிவாரண தூக்கத்திற்குள் தன்னை தொலைத்து பின் மாலை போல் ஒரு நான்கரைக்கு மேல் எழுந்து, மூஞ்சி அலம்பிக்கொண்டு, பின் ஊரைப் பார்க்க சென்றுவிட்டால் தான் என்ன?
சென்றுவிட்டால், சென்று ஒரு வாரம் அங்கு இருந்துவிட்டு பின் இந்த இயந்திரமாய் சுற்றும் நாட்களுக்கு திரும்பினால்.. திரும்பினால் மீண்டும் அதே வேலை, அதே தன்மேலான வசைப் பேச்சு, அதே அவதியான காலை உணவும், அரைகுறை மதிய உணவும்… வன்ஷி, இப்போது உன் தினசறி வாழ்க்கை இத்தனை அலுப்பாகவா உள்ளது? ஆமென்றால் அதனை மாற்றிக்கொண்டு விடேன். கொஞ்ச நாள் வேறு வேலை. வேறு அலுவலகம், வேறு மக்கள். பின் இந்த அலுப்பும் வேறாகிவிடும்.
சிந்தனையோடே தன்னிரு கைகளினால் தன்னை தானே கட்டிப்போட்டுக்கொண்டு இடப்பக்கம் புரண்டு படுத்தாள். விழிகளின் குவியலில் தென்பட்டனயெல்லாம் எதிர்புறத்தில் ஐந்து அடுக்குகளில் ஒன்றின் பின் ஒன்றாய் புத்தகங்கள். அதனருகில் கிடந்த writing tableஇன் மேல் கேட்பாரற்றுக் கிடந்த அவளது laptopஉம் வன்ஷி மெத்தையில் இருந்து எழ செயல்படுத்தியது.
தூங்கு தூங்கு என்று மூளை அடிக்கோடிட அதனை கேட்காத திரிசமன் செய்யப்போகும் குழந்தை சாயலாய் எழுந்து நான்கடிகளில் அந்த மேசைக்குச் சென்று மடிந்திருந்த தன் மடிக்கணினியை பிரித்தாள். அடுத்த சில கணங்களில் அவள் பார்வை முழுவதுமாய் அந்தத் திரையில் விரிந்து, படர்ந்து, நெளிவு சுளிவுடனான எழுத்துக்களின்மீது அப்பியிருந்தது. மௌனமாய் அதனை ஒரு முறை தலைமுதல் கால்வரை அவசரப் பார்வையில் மேய்ந்தாள். எல்லாம் ஏறத்தாழ சரியாக இருந்ததுப்போல் தான் தெரிந்தது. நன்றாய் தூக்கம் வராது படுத்தினாலும் கண்விழித்த சோம்பலும் அத்தனை நேரம் ஆர்ப்பரித்து அவளுள் எங்கெங்கும் ஓடிய தூக்கமும் இன்னும் அடியோடு போய் விடவில்லை.
தூக்கம் கலைந்ததும் ஒரு முறைக்கு மூன்று முறை மீண்டும் சரி பார்க்கத்தான் வேண்டும் அந்தச் சிறுகதையை. இப்போது ஏற்பட்ட அலுப்பின் ஒத்திகையைப் போல்… ஒரு முன்னோட்டமாய்.. இப்போதெல்லாம் திரைப்படத்திற்கு முன் விடுகிறார்களே.. அதான் டீசரோ, ட்ரெய்லரோ, அதனைப்போல என்றோ ஒரு நாள் வந்து ஒரு அலுப்பு தலை காட்டியபோது எழுதிய ஒரு பகுதி. அன்று ஒரு நாள் இவள் ஜவாப்தாரி இல்லாத ஒன்றிற்காக அந்த டீம் லீடர் பயல் இவளை ஏய்த்தானே.. அன்றைக்குத்தான். அன்று கூட தன்னை தானே நொந்து கொண்டு கண்களில் கரித்து தேங்கிய கண்ணீரையும், தொண்டையினுள் அடைத்த துக்கத்தையும் கட்டி காத்து வீட்டுற்கு வந்து சேர்ந்தாளே.. அந்த அலுவலகம், அதன் மக்கள், தினம் அங்கு செல்லும் நேரமென அனைத்திற்கும் பிரயத்தனப்பட்டு அலுத்துக்கொண்டாள். அன்றே எட்டிப்பார்த்திருந்த அலுப்பு. அதற்கானச் சமாதானமாய் அடுத்த இரண்டு நாட்கள் சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு எடுத்துக்கொண்டாள்.
மூன்றாம் நாள் அலுவலகத்தில் உடல் சரியில்லை என்று சொல்லிக்கொண்டாள். மனது சரியில்லை என்று பளீச்சென்ற உண்மையை கூறினால் இவர்கள் விடுப்பு தந்துவிடுவார்களா. அந்த இரண்டு நாட்கள் தனக்கானதாக எடுத்துக்கொண்ட சிறிய down timeஇல் அவள் கிறுக்கிய சிறுகதை.
எத்தனையோ யுகங்கள் கடந்து அந்த எழுத்துக்களில் விழுந்து தோய்ந்து உருண்டதுபோல இருந்தது அன்று அவள் எழுதியது. அடுத்ததாய் வேலை தேடத் தொடங்கும் முன் எழுதி வைத்திருக்கும் சிறுகதைகளை வார மாத இதழ்களுக்கெல்லாம் அனுப்பி வைத்தால் என்ன என்று தோன்றியது வன்ஷிக்கு. அதுவும் நல்ல யோசனை தான். இவ்வாறு முழு நேரம் எழுதியே எத்தனை நாட்கள் ஆகியிருக்கும். பிற வெளி யோசனைகளெல்லாம் அண்டவிடாமல் இதனில் ஒண்டியாய் ஒளிந்துகொண்டு ஆபீஸ், டீம் லீடர் மீதெல்லாம் பிரக்ஞை கொள்ளாது வாழ்ந்து அந்த அலுப்பில் இருந்து தன்னை தானே மீட்டுக்கொள்ள வேண்டும் போல் இருந்தது வன்ஷிக்கு.
எல்லாம் செய்யலாம். ஆனால் எதற்கும் முன் அம்மாவிடம் சொல்ல வேண்டும். வேலையை விட்டதை, டீம் லீடரை போயா டுபுக்கு என்று எரிந்து விழுந்ததை, அதன்பின் அந்த youtube channel இளைஞனை வேறு கடிந்து சொல்லி விட்டதை, பத்து மணிநேர தூக்கத்திற்கு பின் இப்போது கொஞ்ச நாட்கள் எழுதிகொண்டு இயந்திரமாய் சுற்றாமல் தன்னிஷ்டம் போல் இருந்துவிடலாமா என்பதையும். Laptopஐ மடியிலே கட்டிக்கொண்டு, ஒரு கையினால் அலைபேசியில் தன் தாயை அழைத்தாள் வன்ஷி.
மெட்றாஸின் அந்த காலை அவசரட்டிற்கு முப்பத்தாறு மைல் தாண்டி தினசறி அவதியில் பள்ளியில் நுழைந்து கொண்டிருந்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி வீணா ஜெயராம். செழித்து உயர நிற்கும் நிழற்குடை மரங்களை சாய்ந்தட்டத்தை கடந்து, செக்யூரிட்டியின் பணிவான காலை வணக்கத்தையும், அன்று சரியான நேரத்தில் வந்திருந்த பிற ஆசிரியர்களின் சமிக்ஞை தலை அசைவும், அதன்பின் சிறு விரல்கள் மடித்து நெற்றியில் ஒற்றப்பட்ட குட்டி சல்யூட்டுடனான மழலை மாறாத கும்மார்னிங் வீணா டீச்சரையும் தாண்டி பள்ளியின் அலுவலக அறையின் தன் பகுதியை சென்றடைந்த நாழியெல்லாம் ஒலித்த கைபேசியை நம்பமாட்டாமல் கையிலெடுத்தார்.
நேரம் காலை எட்டரை. இரவு தூதுவிட்ட அழைப்பிற்கு பதில் வராமல் போனதில் இருந்து வன்ஷி உறங்கிப்போயிருப்பாள் என்று மொழிபெயர்த்து கொண்டவராய் இருந்துவிட்டார். எந்நாளிலும் இத்தனை காலையில் எல்லாம், அதுவும் அவள் அலுவலகம் செல்லும் வேளையில் எல்லாம் தன்னை அழைக்கமாட்டாள். இன்று இப்போது இந்த நேரத்தில் அழைத்திருக்கிறாள் என்றால்; ஒரு வேளை உடம்பு படுத்துகிறதா? அப்படியானால் உடனேயே கிளம்பி ஊருக்கு வந்துவிட சொல்லவேண்டும். தனியாய் கிடந்து அவதிப்படுவாள் குழந்தை, என்ற மனவோட்டத்தினோடே கைப்பையை மேசையில் கிடத்தின மறு கணம் அவர் கையில் அலைபேசி, காதினில் ஒற்றியபடி, அதனுள் அவள் குரல். “அம்மா?” எப்போதும் போலான உற்சாகமெல்லாம் தேடினாலும் கிட்டாததைப் போல் அவளின் அந்த குரலிலேயே வீணாவின் மனம் மறுகிப்போனது.
தாமதம் செய்யாமல் மனதில் கரை புரண்ட எண்ணத்தினை வெளிகாட்டினாள் கவலை கொண்ட தாய். “செல்லம்மா? என்ன இந்த நேரத்துல கூப்படற. உடம்புக்கு முடியலையா?” காலை வந்தவுடன் அனிச்சையாய் அடைத்திருந்த ஜன்னல்களை திறக்க எத்தனித்து, இலாவகமாய் ஒரு கையினால் கைபேசியை தோளில் வைத்தழுத்திக்கொண்டே தன் கவலையுடனான யோசனையை எடுத்துரைத்தார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லமா. நல்லாதான் இருக்கேன். ராத்திரி சீக்கிரமாவே தூங்கி போய்ட்டேன்,” என்று சலனமில்லாமல் பதில் வழங்கிய போதிலும், சரியென்று ஒப்பு கொண்டு நம்ப முடியவில்லை வீணாவால்.
சுதாரித்து கொண்டு தன் இருக்கையில் வந்தமர்ந்தவாறே, “இல்லன்னா அபீசர் மேடம் இந்த நேரத்தில போன் பண்ண மாட்டீங்களே,” என்று கிண்டலாய் கூற, வன்ஷியின் உதட்டில் தானாய் குடிபுகுந்த நமுட்டு சிரிப்பை அவளால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. தான் ஆரம்பிக்காத போதிலும் நேரம் தவறி அழைத்ததை பொருட்டு அம்மா கண்டுபிடித்து இருக்கலாம்.
“அதான் இப்போ வெட்டி ஆபீசர் ஆயாச்சே, அப்பறம் அபீஸ் எங்க வேலை என்ன?” இப்படி பேச்சோடு பேச்சாய் கூறிவிட முடியுமென்று வன்ஷி துளியும் எண்ணவில்லை. எப்படி சொல்வதென்ற தயக்கத்தை மிஞ்சி விஷயம் கசிந்துவிட்டதென்று சிறிதான ஒளி பரவியிருந்தது அவள் முகத்தில்.இருந்தாலும் வந்து பசை போட்டி அமர்ந்திருந்தது ஒரு சொற்களில் புகுத்த முடியா தயக்கம்.
அதன்பின் அவளால் அந்த கைபேசியில் கேட்கமுடிந்ததெல்லாம் அரை நிமிட நம்பமுடியாத நிசப்தமும் அதன் பின் ஆர்ந்தமர்ந்து ஒலித்த அவள் தாயின் குரலும் தான். “ஏன் செல்லம்மா? என்னாச்சு?” மெதுவாய்… சமாதானமாய்… அரவணைப்பாய்.
“வேலைய விட்டுட்டேன்மா.” நிதானமான குரலில், தீர்க்கமான தொனியில் முன் வைத்தாள் வன்ஷி. பூசி முழுகவோ, சுற்றி வளைத்து பேசவோ அவசியமில்லை. அந்த பழக்கமும் இல்லை. நேரடியாய் சொல்லிவிட்டாள். அந்த பக்கத்தில்லிருந்து கேள்விகள் எதுவும் வரும் முன்பே, அவளே தொடர்ந்தும் விட்டிருந்தாள். “அந்த டீம்லீடர் பேசின பேச்சுக்கு ஓங்கி அரையாம ஏன் வந்தேன்னு கேளு. போதும் போதும்னு ஆகிப்போச்சு. போயா டுபுக்குன்னு திட்டிட்டேன்,” சொன்னதுதான் தாமதம். அப்படியாய் பேசியதற்கு அம்மா வைதுவிடுவாள் என்று எண்ணிய வன்ஷிக்கு, அப்போது ஒலித்த அந்த சின்ன சிரிப்பு மேலும் நடந்தவற்றை கூற ஊக்குவித்தது.
“அப்பறம் கேளுமா..”
“சொல்லுமா..” என்று அதற்கேற்றார்போல் வீணாவும் ராகம் பாட, வன்ஷி அந்த youtube channelகாரர்கள் செய்த விஷமத்தையும் விளித்து, தன் வாயால் வசவு கொடுத்ததையும் சொல்லி முடித்தாள்.
வன்ஷி ஒப்பித்து முடித்த க்ஷணமே வீணாவின் குரல் தொய்ந்து பேசியது. “என்ன செல்லம்மா.. அவங்க அப்படி பண்ணாங்கன்னா இப்படியா channel ஓடாது, யாரும் பாக்கவே மாட்டாங்கன்னு எல்லாம் சொல்லிடறது? தப்பில்லை?” கண்டிப்பாய் இல்லாவிட்டாலும் இவ்வாறு சொன்னது தப்பென தழைந்து கெஞ்சியது தாயின் குரல். தப்பென்றால் தப்புதான்.. அது தன் பெண்ணாய் இருந்தாலும், யாராய் இருந்தாலும். இந்த அம்மா அப்படித்தான்.
சொல்வதறியாது மௌனத்தில் உதட்டை பிதுக்கிய வன்ஷிக்கு, அடுத்ததாய் அம்மா சொன்னதை கேட்டதும் அழுகையே வந்துவிடும் போல் ஆனது. “நீ ஒழுங்கா பண்ற வேலைய மட்டம் தட்டின manager மேல கோபம் வந்தது, திட்டிட்ட, அது உத்தமம். யாருனே தெரியாத அவங்க வேலைய பாத்துட்டு இருந்தவங்கள இப்படி சொல்லியிருக்க கூடாது செல்லம்மா. கோபமானாலும் இப்படியா, நாயே பேயேன்னு திட்டினாகூட மனசுல நிக்காது, ஆனால் ஒருத்தர் நினைக்கறது நடக்க கூடாதுன்னு சொல்லிட்டோம்னா அது ஆரவே ஆராது. ரொம்ப தப்பு செல்லம்மா.”
கண்ணில் கரித்த நீருக்கு ஜோடியாய் தொண்டையில் வேறு என்னமோ நின்று அமுக்கியது. சின்ன வயதில் இருந்து அம்மா போதித்ததும் அதுதானே. யாரையும் இப்படி சாடக்கூடாது என்று. இத்தனை வருடங்களில் ஒரு முறையும் தான் இப்படி நடந்து கொண்டதில்லை, தன் ஆத்திரத்தை, தன்னுள் எழுந்த இயலாமையை அறியாத மனிதர்களிடம் எல்லாம் காட்டிவிட்டாளென்று உணர உணர உச்சந்தலையில் எல்லாம் உஷ்ணமாகி, நெற்றிப்பொட்டில் அழுத்தத் தொடங்கியது. தலை வலி!
கேட்டவற்றில் சுதாரித்து தொண்டையில் கனத்து உறுத்திய துக்கத்தை ஒரு வழியாய் விழுங்கி பதில் உரைக்க முயன்று தன் குரல் கண்டுகொண்டாள் வன்ஷி. “அம்மா நான் வேணும்னா அவங்க channel ஆபீஸ்க்கு போய் நான் செஞ்சது தப்பு அப்படி பேசியிருக்க கூடாதுன்னு சாரி கேட்டுட்டு வந்துடவா? ஐயோ, address கண்டுபிடிக்க அவங்க பேர் கூட எனக்கு தெரியாதேம்மா, அது தெரிஞ்சிருந்தாலும் ஃபோன் நம்பர் வாங்கி.. இல்ல இல்ல நேர்லயே போய் சாரின்னு சொல்லிடலாம்,” உணர்ந்த தவறில் கண்மண் தெரியாது உளறிய பெண்ணையும் அவளது அழுகை தழுவயிருக்கும் குரலையும் கேட்டு சிரத்தையாக சிரித்தாள் வீணா.
“அடி அசடு, அழறேயா?”
“ஆமாம்மா அசடு தான். பைத்தியம் பைத்தியமா பேசிட்டேன்,” அவளை தொடரவிடாமல் வெட்டினாள் அவள் தாய். “செல்லம்மா அது தப்புதான்னு உனக்கு புரிஞ்சதே போதும், இனிமேல் நீ அதை பண்ணமாட்டே. பேசறபோது யோசிச்சுத்தான் பேசணும், அவசரத்துல இப்படி பேசிட்டு அப்பறம் நம்ம பேசினதே நம்ம நிம்மதிய எடுத்துட கூடாது, சரி தானே?”
”சரிதான்மா,” அந்த சுருள்முடி கற்றைகள் நிறைய நெற்றி மறைக்க, நேராய் சரிந்து பொட்டாய் ஆகியிருந்த மூக்கின் நுனியெல்லாம் சிவப்பாய் ஆகி, கீழுதட்டின் அழுத்தம் மேலினதின் மீதும் பரவின ஒரு உதட்டு சுளிப்புடன் வன்ஷியின் முகம் வீணாவின் மனத்திரையில் சாயங்கால மரகத மஞ்சளில் நிழலாடியது. ‘அசட்டுப்பெண், கோபத்தில் பேசிவிட்டு பின் வருந்தும்… கண்ணை மறைக்கும் கோபமும், வார்த்தைகளை வாரிவழங்கும் ஆத்திரமும், பசி வந்தால் எங்கிருந்து வருமோ அப்படி ஒரு ஆத்திரம். அப்படியே அப்பாவைப் போல்’
வார்த்தைகளை அடைத்து நின்ற கண்ணீரை கரைக்க முடிவெடுத்து மெத்தையில் இருந்து தரைக்கு தாவி இரண்டு எட்டில் மேசைமீது இருந்த தண்ணீரை பருகினாள் வன்ஷி. இரண்டு வாய் தண்ணீரில் சமுத்திரத்தை அள்ளி பருகிய ஆசுவாசம். புறங்கையால் கன்னத்தை வருடி வழிந்து கிட்டதட்ட காய்ந்தே போயிருந்த கண்ணீரின் ரேகையினை அழுத்தி துடைத்தாள். “செல்லம்மா, அம்மா சொல்றத கேளு; ரெண்டு வாரம் மூணு வாரம் போகட்டும் வேற வேலை பாத்துக்கலாம், நீ ஒண்ணும் யோசனை பண்ணாதே கண்ணு.”
“சரிம்மா, அப்படியே செய்யலாம்.”
“மொதல்ல ஏதாவது சாப்பிடு. சமைக்க கூட வேண்டாம், வெளியில போய் சாப்பிட்டுவா. நேத்தி சாயங்காலம் சாப்பிட்டது வயத்த பட்டினி போடாதே.”
“இதோ போரேன்மா… அம்மா, நான் கொஞ்ச நாள் வெறுமன எழுதிண்டு இருக்கலாமா பாக்கறேன்மா..” மெதுவான யோசனையும் தயக்கமும் போட்டிபோட்ட குரல் குலாவியது. வீணாவும் அதனை சற்றும் எதிர்பார்க்காமல் இருந்துவிடவில்லை.
மூன்றாண்டுகளாக தனியே அந்த பெரிய நகரத்தில் அவதியான அவதி பட்டுக்கொண்டு, இல்லாததிற்கெல்லாம் யார் யாரிடமோ பேச்சும் வாங்கி அலுப்பு கண்டிருப்பாள். அவள் கேட்பதில், உணர்வதில் ஒன்றும் தவறில்லை என்று தோன்றியது வீணாவிற்கு. ஊதாறித்தனமாய் வேலையை விட்டுவிட்டு, அந்த டீம்லீடரையும் அபத்தமாய் திட்டிவிட்டு வந்த பெண்ணை ஒன்றும் கேள்வி கேட்காமல் இத்தனை பதவீசாய் கொஞ்சிகிறார்களே, இவர்கள் என்ன தாய், என்று நாம் கேட்கலாம். வன்ஷி அப்படியாய் டீம்லீடரை திட்டியது மட்டுமே தெரிந்து, அந்த டீம்லீடர் அவளை என்னென்ன சொல்லியிருக்கிறார் என்று தெரியாதபட்சத்தில் –முழுவதுமாய் கதையும் அவளது காரணங்களும் தெரியாத நிலையில் குருட்டாம்போக்கில் ஒரு judgemental மனநிலையில் இருந்து இதனை பார்ப்பது அநாகரிகம். அதையும் நாம் அறிவோம்.
மேலும் கதைக்குள் சென்றால் வேலையை விட்ட துயரத்தையும், பொறுமை தன்னை கைவிட்ட துக்கத்தையும் தாயிடம் பகிர்ந்துகொண்டு, பின் எழுதப்போவதாய் தான் வைத்திருந்த யோசனையை தாயிடம் பறைசாற்றியும் அதற்கு ஒப்புதலும் பெற்று இப்போது நல்ல பிள்ளையாய் தாயின் சொற்படி தன் வசிப்பிடத்தின் அருகாமையில் இருந்த ஒரு சிறிய உணவகத்தின் வாயிலை தொட்டாள் அவளது காலை உணவிற்காக.
அதே நேரம் அதற்கு ஏழு மைல் தொலைவில் அந்த பெரிய அபார்ட்மெண்டினுள்ள சின்ன வீட்டின் வாயிலில் கதவு திறக்கப்படவென அவன் காத்திருந்தான்.
அழைப்பு மணியின் ஓசையில் திசைமாறி கிச்சனிலிருந்து கதவிடம் வருவதற்குள் நங் நங் நங் என்று தொடராக மூன்று முறை அடித்துவிட்டதை குளியல் அறையில் இருந்து ராஜின் குரல் உச்ச ஸ்தாயியில் கதறியது, “மது, கொஞ்சம் வேகமா கதவ திற. இந்த பாழாப்போனவனுக்கு விரல் இருந்தாலும் இருக்குன்னு ஸ்விட்ச போட்டு இப்படி அமுக்கறான்.”
”கண்ணால பாக்காம, குரல கூட கேக்காம அவந்தான்னு சரியா சொல்றியேடா! என்ன கூட இப்படி கண்டுபிடிக்கமாட்டே நீ!” தன் கேலியுடன் உள்ளிருந்து ததும்பிய சிரிப்பை வேகமாய் வெளியேற்றிய படியே, தன் கட்டைவிரலில் நின்று மேல் தாழ்பாளை விடுவித்தாள் மதுவந்தி. இவர்கள் இப்படித்தான். சொல்லப்போனால் அவர்களோடு சேர்ந்தால் அவளும் கூட அப்படித்தான்.
கையை உயர தூக்கி கதவின் சட்டத்தை தாங்கி நின்றிருந்த யாதவ்வை தன் கைகளை கூப்பி, “டேய் நல்லவனே, அப்படி என்னடா பண்ண, நேத்தி ராத்திரி வீட்டுக்கு வந்ததிலிருந்து பொலம்பல் தாங்கலை. யாதவ்க்கு என்னமோ அச்சு, அவன் என்ன என்னமோ பேசறான், பைத்தியமா பண்றான்னு,” மதுவந்தி ராஜை பற்றி தன் மனம் போன போக்கில் உளறியதை சிறிதும் கண்டுகொள்ளாது உரிமையாய் உள்ளே நுழைந்தான். மதுவந்தி ரயிலின் அடுத்த பெட்டிப்போல் அவனை தொடர்ந்தாள் –அவளது புலம்பலும் தொடர்ந்தது. “இன்னும் ரெண்டு நாளைக்கு நீ இப்படியே பெனாத்தினியானா உன்ன சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட அழைச்சுண்டு போகற ப்ளான்ல இருக்கோம்.”
ஒன்றும் பேசாமல் சோபாவில் விழுந்து அமர்ந்து, கால் மேல் காலிட்டு விசிலடித்தவனை, அவனுக்கு ரெண்டடி தள்ளி கையை கட்டிக்கொண்டு கண்களில் கோபம் கனலிட முறைத்தாள், பதிலில்லை. தோல்வியை ஒரு பெருமூச்சினில் வெளியேற்றியவளின் குரல் கெஞ்சியது,“என்னடா பண்ற நீ?”
”லவ் பண்றேன் மது!” அனிச்சையாய் அவன் சொன்னதில், அந்த அமைதித்தனம் நிரம்பிவழிந்த குரலில் பாசாங்கில்லை. இம்மியளவும் இல்லை.
அதற்குள் குளியலறையில் இருந்து வெளிபட்ட ராஜ் ஈரத்தலையோடே அவர்களிடம் நடக்க அவனது வாய் தன்பாட்டில் குறை பாடியது,“இப்படித்தான் மது! இப்படித்தான் நேத்திலேந்து எல்லாத்துக்கும் பதில் சொல்றான். அந்த பொண்ணை பாத்து செய்யுள்ங்கறான்,அவளுக்குன்னு grammar இருக்குங்கறான், கோபம் அழகா இருக்குங்கறான். என்ன எடிட் பண்ணவிடாம என்னமா படுத்திட்டான் தெரியுமா..”
”கொஞ்சம் விட்டிருந்தா அந்த பொண்ணு என்னையும் உன்னையும் செவிள்ளேயே அரஞ்சிருப்பா, அத்தனை ஆத்திரம். அதைத்தான் லவ் பண்றானாம்!” இடைவிடாது அடுக்கிக்கொண்டே போன புகார்களை சிறிதும் சட்டை செய்யாது முகத்தில் படர்ந்திருந்த ஒரு பைத்தியக்கார புன்னகையோடே அமர்ந்திருந்த யாதவ்வை கண்டு தலையில் அடித்து கொண்டான் ராஜ், “இந்த நாசமாப்போன சிரிப்பு வேற! டேய், அப்படி சிரிக்காதேடா!”
அவன் தலை தாங்கிய உள்ளங்கையை இலாவகமாய் நகர்த்திவிட்டு, அந்த சிறு இடுக்குக்குள் ஒய்யாரமாய் புகுந்து தன் கணவன் மடியில் அமர்ந்து கொண்ட மதுவந்தியிடம் பார்வையை ஏற்றினான் ராஜ். ‘பாரேன் இந்தப் பயலை’ அவன் பார்வை சொன்னது.
”இப்படித்தான் ஒரு channel ஆரம்பிப்போமான்னு ஒரு நாள் பேச்சுவாக்குல சொன்னான், அடுத்த ரெண்டு வாரத்தில அவனே எல்லாமே செய்யலை? அவன் ஒண்ணு சொன்னா he really means itனு உனக்கு தெரியாதா, ராஜ்?” மெதுவாய் அவன் சிகைக் கலைத்து சொன்னவளை கண்டு மென்மையாய் புன்னகைத்தான் ராஜ். “அவன் இந்தப் பொண்ணு விஷயத்துல ரொம்ப சீரியஸா இருக்கான்னு தெரியும், அதுதான் எனக்கு கவலையே! எதோ ஒரு இருபது செக்ண்ட்ஸ் பாத்த பொண்ண லவ் பண்றேன்னு சொல்றான் –அதுவும்.. அதுவும் அந்தப் பொண்ணூ நம்மளை காரித்துப்பாத குறை, அதுக்குள்ள ஐயாக்கு காதலாம்…ஐயோ… மது…” கண்ணீரின்றி அழுதவன் சிணுங்கிக்கொண்டே அவள் தோளினில் தலை புதைத்தான்.
அவனை கைகொண்டு தன் பார்வைக்கு நிமிர்த்தியவள், “நீ என்ன இன்னும் புறால தூதுவிட்ட காலத்திலேயே இருக்கியா ராஜ்? Facebook, tinderனு லவ் பண்றாங்க! அந்த பொண்ண கண்டுபிடிக்கறது கஷ்டம்னு சொல்றியா, அதெல்லாம் இல்லடா.” என்று சொல்ல யோசனையாய் சுருங்கியது ராஜின் முகம்.
“அப்படிங்கற?”
“ஆமாம் மச்சான், அப்படித்தாங்கறேன்.”
யாதவ்வின் உற்சாகத்தில் தன்னிலையின்றி சிரித்த ராஜ், “எப்படிடா உனக்கு ஒண்டி இப்படியெல்லாம் ஆகறது? எனக்கு உன்னப்பத்தின கவலைய விட எங்களைப்பத்தின கவலைதான் ஜாஸ்தி..”
”என்னடா இப்படி சொல்லிட்ட..”
“பின்ன என்ன! சரி, அந்த பொண்ண பார்த்து பேசி எல்லாம் ஆகறவரைக்கும் அக்கா, மாமாவ பாக்க போயிடாதே என்னமோ ஏதோன்னு நினைச்சு பயந்துடப் போறாங்க.” ராஜின் கேலியை ஒப்புக்கொண்டு அவன் மனையாள் களுக்கென்று சிரிக்க யாதவ் அவ்விருவரையும் முறைத்தான்.
”ஒரு காலத்தில நீயும் மதுவோட காதல் பண்ணப்போ உன் பேத்தல் எல்லாம் கேட்டது யாருங்கறத மறந்துட்டேடா ராஜ் நீ..”
”ஆனாலும் அண்டத்தில எவனும் இப்படி செய்யுள் செய்யுளா எல்லாம் காதலிக்கமாட்டான்பா!”
“செய்யுள்.. என்ன அழகான வார்த்தை.. இல்ல யாதவ்?” என்று மது சிலாகிக்க, “ஆமாம்ல.. ஆனா மது… அவ அதைவிட அழகு!” யாதவ் சொன்னதில் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் கணவனும் மனைவியும், அவர்களது பார்வையே தத்தம் தலைகளில் அடித்துக்கொண்டன.