sippayinmanaivi 7

sippayinmanaivi 7

ஆடலரசிகள்

ஐநுறுவர் மாநாட்டிற்கு உக்ரகாரி வரப்போவதை அறிந்து பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது அதில் ஒன்று ஆடல் நிகழ்ச்சி. ஆடல் நிகழ்ச்சியில் ஆட ஆலதாவும் அவளின் குழுவும் தேன்கூடு அரங்கிற்குள்  வந்தடைந்தனர். ஆம் உக்ரகாரியின் ஒற்றர் கூட்டம் தான் ஆலதாவும் அவளின் குழுவும், ஆடலரசிகளாக சில வாரங்களுக்கு முன் இங்கிருக்கும் வணிகர்களிடம் அறிமுகம் ஆனார்கள் அதிலும் குறிப்பாக வைனா மற்றும் மள்ளன். இவர்களிடம் நம்பிக்கை பெற ஆலதா பெரும் போராட்டம் உற்றாள். சில நாட்கள் முன்னால்…

மயக்கும் உருண்ட கரும்விழிகளில் மை தீட்டிக் கொண்டு, முகத்தில் அதிகாரம் பூசி பட்டாலான மேல் ஆடை அணிந்திருந்தாள். குடைபோல் விரிந்திருந்த கீழ் ஆடை அதில் ஒவ்வொரு மடிப்பிலும் ஒரு விலங்கிருந்தது. ஆடலரசிகளுக்கு தேவையான அனைத்து அணிகலன்களும் அணிந்திருந்தாள். மள்ளன் மற்றும் சில வணிகர்கள் அவளின் ஆட்டத்தைக் காண தேக்களுடன் அமர்ந்திருந்தனர், முழு பன்றி இறைச்சி செந்தீயில் கருகிக்கொண்டிருந்தது அதில் பசும்நெய் விட ஒரு சேவகன். ஆலதா ஆட ஆரம்பித்தாள், அவளின் முகத்தை மீறி வேறு எங்கும் பார்க்கமுடியவில்லை அத்தனை ஒளி , பார்ப்பவர்கள் அனைவரும் அவளை ஒரு நாளாவது அடைந்து விட வேண்டும் என்று தோன்றும். அந்த முகமும் புன்னகையும் தேக்களின் போதையை மீறியது. அவள் சிணுங்குவதை பார்க்க வேண்டும், உடலுறவின் பொது அவள் தவிப்பதைக் காணவேண்டும் என்ற எண்ணம் – சூட்டினால் இட்ட அரசு முத்திரை போல் பதிந்து விட்டது மள்ளனுக்கு. அன்றிரவே ஆலதாவிடம் தனியாய் பேச ஏற்பாடு செய்தான். ஆலதாவும் ஏற்றுக்கொண்டாள் வேறு வழி இருக்கிறதா என்ன?

‘அடலரசியின் பெயர் என்ன?’

‘ஆடலை பார்ப்பவர் பெயர் தெரிந்தால் தான் பார்ப்பீரோ?’ மெல்லிய குரலில் கேட்டாள் லேசான புன்னகை.

‘அழகியின் பெயர் உன் அழகிற்கு பொருத்தமோ என்று தெரிந்துகொள்ள!’ மள்ளன் கேட்டான்.

‘ஆலதா’

‘ஆலதா எந்த நாட்டுப்பெண்?’

‘ஏன் நாடு தெரிந்தால்தான் பார்ப்பீரோ? ஆடலை?’

‘இல்லை, உன் மேல் ஆசை பெருகிவிட்டது, புணரும் முன் முழுதாய் ஆளை தெரிந்துகொள்ள வேண்டும், நான் பெரும் வணிகர் அல்லவா?’

ஆலதா கோபமாய் பார்த்தாள், ‘புணர்வதா? பெரும்வணிகரே என்ன இது ? யாரைக் கேட்டு இந்த முடிவிற்கு வந்தீர்’.

‘யாரைக் கேட்க வேண்டும் ?’

‘என்னை கேட்க வேண்டும்’

‘இது என்ன புது வழக்கம் ஆலதா?’

ஆலதா ஒன்றும் புரியாமல் திகைத்தாள், ஒரு வேலை இவன் வகன நாட்டில் நம்மை பார்த்திருப்பானோ, இப்பொழுது நம்மை சோதிக்கிறானோ என்று குழம்பினாள்.

‘ஆடலரசிகள் பொதுவாக இது போன்றவற்றை எதிர்ப்பதில்லையே?’

‘நான் ஆடலரசி தான் விலை மகள் அல்ல?’

‘என்றோ ஒரு நாள் போர் குற்றவாளியாக அகப்பட்டால், எவரோ ஒருவரின் கட்டளைக்கு அடங்கும் அடிமையாகி போனால் இந்த உறுதி இருக்குமா ?’

‘அப்படி ஒரு நிலை வந்தால், என் இறந்த உடலுடன் தான் கட்டளை இட வேண்டும்’ ஆலதா காரம் குறையாமல் பேசினாள்.

‘ஆலதா , உண்மையில் உன்னை எனக்கு பிடித்திருக்கிறது’ மள்ளன் சொன்னான்.

‘பெரும் வணிகரே உம்மை பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை ஆனால் மற்றவரை இழிவாக நினைக்க வேண்டாம் என்று சொல்கிறேன்’ ஆலதா சொன்னாள். மேலும் தொடர்ந்தாள்.

‘அனைத்தையும் வணிகராக சிந்திக்காதீர் ‘ மறுமுறை மெல்லிய குரலில் பேச துடங்கினாள்.

‘பிடித்த பெண்ணை அடையாதீர்கள்,  ஆசைப்படுங்கள், அவளும் விரும்பினாள் அவளுடன்  புணரும் இன்பமே தனி’ ஆலதா பேசி முடித்தாள்.

மள்ளன் நாளை சந்திப்போம் என்று சொல்லிவிட்டு புன்னைகைத்தவாறு சென்றான். சில நாட்கள் மெதுவாக அவர்களின் நட்பு வளர்ந்தது. பெரிய வணிகனை அவ்வளவு எளிதாக நினைக்க கூடாதல்லவா.

‘ஆலதா, உண்மையை சொல் நீ எந்த நாட்டுப்பெண் ?’

‘மள்ளா என்ன சந்தேகம்?’ கணித குரலில் மயக்கும் விழிகளை அசைக்காமல் அவனைப் பார்த்தாள். அந்த பார்வையைத் தாண்டிவருவது மிக கடினம் ஆனால் மள்ளன் முயற்சி செய்தான். ‘ஆலதா, என் நிலை அப்படி  எவரையும் வெகு விரைவில் நம்ப முடியாது’  என்று குழைந்த குரலில் மள்ளன் சொல்லி தொடர்ந்தான். ‘பெரும் வணிகராக இருப்பதில் அதற்கான விலையை குடுத்தாக வேண்டும்’ மள்ளனின் குரல் தடுமாற்றத்திலும் லேசாக கலங்கிய கண்களிலும் அவன் சோகம் ஆலதாவுக்கு புரிந்தது. ஆலதா அவன் அருகில் வந்தாள், ஒரு தோளில் சாய்ந்து, அவனை மெல்ல இன்னொரு தோள்பட்டையில் தடவினாள். தன் பின்னங்கையில் குறுவாள் மறைத்து வைத்திருந்தான். மள்ளனின் ஒற்றன் ஆலதா பற்றி சில உண்மைகளை சொல்லியிருந்தான். அவள் சௌவலய பெண் என்பதும் அவள் ஒரு விலைமகள் குறிப்பாக அரசர்கள் வணிகர்கள் புணரும் விலை மதிப்புள்ள பெண் ஆனால் இங்கு ஏன் ஆடலரசியாக வேடமிடுகிறாள் என்று புரியவில்லை என்றான் ஒற்றன். அவள் என்ன சொல்கிறாள் என்று பொறுமை காத்தான் அதுவும் அவனுக்கு பிடித்திருக்கிறது என்பதனால் மட்டுமே இல்லையெனில் குறுவாள் ஆலதா கழுத்தை கீறியிருக்கும்.

ஆலதா ஆறுதல் சொல்ல ஆரம்பித்தாள் ‘உன் நிலைமை எனக்கு புரிகிறது, நானும் அப்படிப்பட்ட ஒரு சூழலில் இருந்தவள் தான்.’ ஆலதா குரல் குழைந்தது, கண்ணில் நீர் தாரை தாரையாக பெருக்கெடுத்து மோவாய் நோக்கி சென்று வடிந்தது மள்ளனின் தோளில். மள்ளன் அவளை மேலும் இறுக்கமாக அணைத்தான். ‘மள்ளா நான் ஒரு….’ குரல் மேலும் தாழ்ந்தது. மள்ளன் பொறுமையாக இருந்தான் அவளின் கண்ணீர் உண்மையானது என்று புரிந்தது. ஆலதா தைரியத்தை வரவைத்துக்கொண்டாள் ‘நான் ஒரு விலைமகள், மதனபள்ளி என் ஊர் ஆனால் நான் ஒரு சௌவலய பெண். என் அப்பா என்னை ஒருவனுக்கு விற்றுவிட்டான்.  அவன் என்னை மதனபள்ளிக்கு அழைத்து வந்தான், பல இன்னல்களுக்கு ஆளானேன். அவனைக் கொன்று என் குழுவிற்கு தலைவி ஆனேன். என்னை விலைமகளாக பார்க்கும் கண்கள் வெறுப்பை உண்டாக்கியது. கொஞ்ச நாட்கள் ஆடலரசியாக இருக்கலாம் என்று வந்தேன். நீ என்னை விலைமகள் போல் பார்த்தது சலிப்பை உண்டாக்கியது  ஆனால் அதன் பின்னர் நீ தோழனாக என்னிடம் பழகியதும் உன் மேல் எனக்கு ஆசை வந்தது. பல முறை உண்மையை சொல்லிவிட வேண்டும் என்று மனம் துடிக்கும் ஆனால் என்னை தோழியாக பார்க்கும் உன் கண்கள் என்னை ஏதோ செய்கிறது’ ஆலதா அழுதபடியே சொல்லிமுடித்தாள், சொல்லிமுடித்தது தான் தாமதம் மள்ளனின் இதழ் ஆலதாவை அடைந்தது இடம் என்று ஒன்று இல்லாமல் எல்லா இடத்திலும் முத்தமிட்டான். உணர்ச்சி தலைக்கேறிய நிலையில் ஆலதா மள்ளனின் உடலோடு உரசியும் மோதியும் கட்டில் வரை வந்தாள் அவனை கட்டிலில் சாய்த்தாள் அவனை பார்த்தால் அவன் பார்வையில் விலைமகளை பார்க்கும் இழுவுதான் இல்லை. உடைகளை அகற்றினாள் அவன் மேல் அமர்ந்தாள்.

சில நாட்கள் கழித்து மள்ளன் ஆலதாவை தனியே சந்தித்தான். அவனுக்கு ஒரு உதவி செய்யவேண்டும் என்றான். உக்ரகாரி விருந்தினராக வரப்போகிறான், அவன் பல வருடங்களாக ஐநுறுவர் வணிகத்திற்கு அதரநகரி துறைமுகத்தை பயன்படுத்த வற்புறுத்தி வருகிறான் ஆனால் அங்கு சின்னர்கள் செல்ல அச்சப்படுகிறார்கள் மேலும் கலன்கள் ஒதுக்க சரியான இடமில்லை, பராமரிப்பற்ற அந்த துறையை யார் வேண்டும் என்பார்கள்? உக்ரகாரி பொறுமைகாக்கும் ஆளில்லை ஆனால் நல்ல அறிவார்ந்தவன் அதனால் தான் பூம்புகாரை முற்றுகைவயிடப்பார்த்தான், தோற்றுப்போனான். இப்பொழுது என்ன சிந்தனையில் இருக்கிறான் என்று தெரியவில்லை, எனக்காக என்னுடைய ஒற்றராக நீ இருப்பாயா என்று கேட்டதும் என்ன சொல்வதின்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

‘பயப்படாதே, உன்னால் முடியும்.’ மள்ளன் சொன்னான்.

‘இல்லை இது எனக்கு பழக்கமில்லை. என்னால் பொய்களை எடுக்கமுடியாது. என்னைப்பற்றி உனக்கு தெரியுமல்லவா . உன்னிடம் கூட என்னால் உண்மையை மறைக்கமுடியவில்லை’ ஆலதா சொன்னாள்.

‘புரிகிறது, எனக்காக நீ செய்ய வேண்டும்’ மள்ளன் சொன்னான். நீண்ட நேர வற்புறுத்தலுக்கு பின் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்.

***

உக்ரகாரி விருந்தினராக வந்தான் வழக்கம்போல் அதரநகரி துறையைப் பயன்படுத்த வற்புறுத்தினான், மள்ளனும் ஏதேதோ சொன்னான். உக்ரகாரிக்கு புரிந்தது. ஆனால் பொறுமைகாத்தான் மள்ளன் உக்ரகாரிக்கு சிறந்த பரிசளிப்பதாக சொல்லி ஆலதா மற்றும் அவள் குழு ஆடல் நிகழ்ச்சியை பரிசாக அளித்தான்.

‘யார் அந்த பெண்’ உக்ரகாரி மள்ளன் எதிர்பார்தது போல் கேட்டான்.

‘பெயர் வேண்டுமா இல்லை ஆளே வேண்டுமா?’ மள்ளன் சொல்லி சிரித்தான்.

‘இதுவல்லவா பரிசு என்றால்’ உக்ரகாரி சொல்லி அவனும் உரக்க சிரித்தான்.

***

‘என்ன ஆலதா? ஏதேனும் சேதி உண்டோ’ உக்ரகாரி உடலுறவு முடிந்த பின்னர் தேறல் கிண்ணத்தோடு அமர்ந்து கேட்டான்.

‘பேரரசே, மள்ளன் என்னை உங்களை கண்காணிக்க சொல்லிருக்கிறான். உங்கள் திட்டமென்ன என்று அறிய விரும்புகிறான்’ ஆலதா சொன்னாள்.

‘இவன் என்ன நம்மை கண்காணிக்கிறான்?’

‘நீங்கள் அவனை தாக்கிவிடுவீர்கள் என்று அஞ்சுகிறான் என்பது என் எண்ணம்’

‘ஐநுறுவர் மாநாட்டில் அவனை எதுவும் செய்யமுடியாது, வேறு ஏதோ அவன் சிந்தனையில் இருக்கிறது’

‘அவனிடம் நான் ஏதாவது செய்தி சொல்லவேண்டும், அப்பொழுதுதான் என்மேல் நம்பிக்கை வரும் ‘

‘அடுத்து நான் கல்லூர் செல்ல போகிறேன், இதைமட்டும் சொல். புதியதாய் ஒருவரிடம் நிறைய செய்திகள் நான் சொன்னதாக சொன்னால் சந்தேகம் எழலாம்’

‘அப்படி சொன்னால் ?’

‘மள்ளன் உன்னை என்னோடு அனுப்பிவைப்பான்’

அடுத்தநாள் உக்ரகாரியுடன் அவன் ஆட்களும் மற்றும் ஆலதாவும் அவளோடு சில ஒற்றர் பெண்களும் கல்லூர் நோக்கி சென்றார்கள்.

 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!