sippayinmanaivi6

sippayinmanaivi6

நடுகற்கள்
கணியனும் மதிமாறனும் ரோம புரவிகள் வாங்க புரவி கொட்டில் சென்றனர். கணியனுடன் சூலாவும் வந்திருந்தான். ரோம புரவிகளுக்கு மதிப்பு அதிகம் அதன் அழகை நாள் முழுவதும் ரசிக்கலாம். நாகர் நாட்டில் ஆதிக்குடி புரவிகள் இல்லை, எல்லாம் ரோமரிடமும் யுவனரிடமும் இறக்குமதி செய்தது. சோனா மலைத்  தொடரின் அந்தப் பக்கம் இருக்கும் பீஜே நாட்டில் ஒரு ஆதிக்குடி புரவி உள்ளது. பீஜே புரவி குட்டை ரகம் மற்றும் அதை நெடும் தூர பயணத்திற்கு பயன்படுத்தமாட்டார்கள் ஆகவே நாகர்களும் சௌவலயர்களும் மற்றும் வகனர்களும் பெரும்பாலும் ரோம புரவிகளை வாங்குவர் இல்லையெனில் யுவனர்களின் புரவிகள். நாகரிடம் யானைகள் அதிகம் மேலும் ரோம நாட்டிலும் யுவன நாட்டிலும் யானைகள் கிடையாது அதனால் யானைகள் ஏற்றுமதியில் நாகருக்கு நல்ல வரவேற்பு.

கொட்டிலின் ஒரு ஓரத்தில் மை-கரும் நிறத்தில் காற்றை கிழித்துக் கொண்டு அதன் பின் கழுத்திலிருக்கும் முடி பறந்தவாறு மின்னும் உடல் மயிருடன் அந்த புரவி ஓடிக்கொண்டிருந்தது. உருண்டு திரண்ட அதன் இடையும் நீண்டிருந்த அதன் விலா பகுதியும் நிலத்தில் வாழும் மிருகங்களில் மிக பெரிய கண்களும் அந்த புரவியின் மீது கணியனுக்கு ஆசையைத் தூண்டியது.

‘அது ரோம காட்டிலிருந்து பிடிக்கப்பட்டது, இன்னும் அதை பழக்கப்படுத்தவில்லை, தேர்ந்த வீரனால் மட்டுமே அது முடியும்’ சூலா சொன்னான். மேலும் கணியனை சீண்டும் வகையில் நகைத்தான். சூலாயுடன் பேம்பேவும் இருந்தான்.  கணியனும் சிறிது உணர்ச்சிவசப்படவே செய்தான் ஆனால் அதை காட்டிக்கொள்ளவில்லை. கணியன் சூலாவை பார்த்து கேட்டான் ‘ஆதிகுடி ரோம அரசர்கள் எப்படி புரவிகளைத் தேர்தெடுப்பார்கள் என்று தெரியுமா?’ . இல்லை என்பது போல் தலையசைத்தான்.

‘சில புரவிகளை வெகுதூரம் ஓட்டிச் சென்று விடுவார்கள் அதாவது அதற்கு தாகம் எடுக்கும் வரை. அதன் பிறகு புரவிகளை நீர் இருக்கும் இடத்திற்கு சிறிது தூரத்தில் அதனை விடுவிப்பார்கள். அந்த புறவிகளும் நீரை நோக்கி ஓடிச்செல்லும். அது அருகில் சென்ற உடன் ஓசை எழுப்பி அதனை மீண்டும் அழைப்பார்கள். எந்த புரவிகள் நீர் அருந்தாமல் அரசனின் ஆணைப்படி பின் வருகிறதோ அதையே தேர்ந்தெடுப்பர்.’ கணியன் சுலாவின் முகத்தைப் பார்த்தான்.  சுலாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

கணியன் மேலும் விவரிக்கவில்லை, கணியன் தன் மேலாடையை உதறினான் தடுப்புகளை மீறி உள்ளே குதித்தான். புரவியை நோக்கி நடந்தான், புரவி கணியனை நோக்கி நடந்தது. அருகில் வந்தவுடன், அதன் கண்களை அச்சமின்றி உற்றுப் பார்த்தான். ஏதோ ஒரு பந்தம் இருப்பது போல் இருவரும் உணர்ந்தனர். கணியன் தடுப்பை நீக்கினான். புரவி வரப்பை வெட்டிவிட்டதும்  தேங்கிய நீர் ஓடுவது போல்  வேகமெடுத்து ஓடியது. கண்களிலிருந்து மறையும் தூரம் சென்றது. கணியன் ஓசை எழுப்பினான், புரவி சற்றும் யோசிக்காமல் திரும்பியது, இருக்கும் வேகத்தைவிட அதிக வேகம் எடுத்தது. கணியனை நோக்கி ஓடி வந்தது. கணியன் அருகில் வந்ததும் முன் கால்களை எழுப்பி காட்டியது. கணியன் அதன் மேல் ஏறினான். புரவி சீறியது.

நாகர் நாட்டில் வடமேற்கிலிருக்கும் ரோமசாலையிலிருந்து நடுவிலிருக்கும் கூடலை நோக்கி தென்கிழக்கு திசையில் பயணித்தால் இடையில்  பிரம்பி நாடு சிற்றரசு அதன் கிழக்கில் நீட்சியாக பிரம்பி காடு அடர்ந்த வனம் மற்றும் பிரம்பி மலைதொடர். சிற்றரசன் கந்தனை காணத்தான் கணியன் புரவியில் பயணம் செய்கிறான்.

‘தலைவரே ஏன் நாம் குதிரையில் செல்கிறோம்?’ மதிமாறன் கேட்டான்.

‘நாம் வணிகத்திற்காக அமைத்த சாலையில் செல்லப்போவதில்லை நாம் வேறுஒரு பிரம்பியை காணப்போகிறோம். சிற்றரசர் கந்தன் தான் அவர்களின் இறைவன், கந்தனுக்காக உயிரை இழப்பது மட்டுமல்ல ஊரையே இழக்கவும் தயாராக இருக்கும் பல கிராமங்கள் மற்றும் வனமனிதர்கள் இருக்கும் சிறுகாடுகள் வழியாக செல்லப்போகிறோம்’ கணியன் சொன்னான்.

‘ஆனால் ஏன் ?’ மதிமாறன் பொறுமையின்றி கேட்டான். அதற்கு பொறுமையுடன் புன்னகைத்தான் கணியன். ‘நாம் வெகுதூரம் செல்ல வேண்டும் ஆகையால் என்னைப்பற்றி சில நினைவுகளை சொல்கிறேன் ‘ கணியன் தன் பிறந்த ஊரில் தன் வீட்டை சுற்றி இருக்கும் பிரம்பி மலை தொடர்களை நினைவுகூர்ந்தான், புரவி மெல்ல நடைபோட்டுக் கொண்டிருந்தது.

கணியன் ஒரு விவசாய குடும்பத்தில் பல குழந்தைகளுக்கு நடுவில் அவனும் குழந்தையாய் வளர்ந்தவன். பிரம்பி சிற்றரசாக இருந்த கந்தனின் தந்தை கார்மேகம் எல்லா கிராமங்களிலிருந்தும் சில வாலிபர்களை  அரசு வேலையில் அமர்த்தினான், அறிவு கூர்மை நிறைந்தமையால் அவனது ஊரிலிருந்த பெரியவர்கள் சிலரை தேர்தெடுத்து அனுப்பினார்கள், கணியனின் அப்பா தன் மகன் தன்னை போல் வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட வேண்டாமென்பதனால் அரசு வேலைக்கு அனுப்பி வைத்தார்கள்.

கணியன் எதிலும் பொறுமையாக இருப்பவன் ஆனால் அவன் வளர்ச்சியில் மட்டும் வேகம் தான். பிரம்பி சிற்றரசருக்கு நல்ல வேலையாளாக இருந்தான் கந்தனோடு தான் சேர்ந்து வளர்ந்தான். கந்தனும் கணியனும் மற்றும் பலர் தோண்டி துறைமுகத்திலிருந்து ரோம நாட்டிற்கு முதல் முறையாக சென்றனர். அங்கே பிரம்பியில் விளையும் தானியங்களையும் சுவையூட்டிகளையும் வைத்து பெரும் வணிகர்களை ஈர்த்தான். அங்கே பல அடிமைகளை பொது ஏலத்தில் வாங்கினான், கந்தனுக்கு அதில் உடன்பாடில்லை எனினும் விடாப்பிடியாக வாங்கினான். நாகர் நாடு திரும்பினார்கள், வழி மாறி வஞ்சிகாட்டை கண்டடைந்தார்கள். அங்கே கடலை ஒட்டி பெரும் ஆறு ஒன்று இருப்பதனை கண்டான் பெரும் கலன்கள் கரையொதுங்கவும் பல நாட்கள் அங்கேயே நிறுத்திவைக்கவும் உதவும் என்பதை உணர்ந்தான். கார்மேகத்தின் உடல்நல குறைவால் கந்தன் ஆட்சி பொறுப்பை ஏற்றான் ஆகையால் கணியனின் பொறுப்பும் அதிகரித்தது.  கணியன் தான் வாங்கிவந்த அடிமைகளை வைத்து வஞ்சிக்காட்டில் புது துறைமுகம் ஒன்றை அமைத்தான். இந்த துறைமுகம் சௌவலையருக்கு பெரும் பாதகம் ஏற்படும் அதனால் அவர்கள் பிரம்பி  மீது போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்து கந்தன் கரும்நள்ளியுடன் உடன்படிக்கை செய்தான். அயல்நாட்டு வணிகர்கள் தரும் கடல் வழி சுங்கவரி முழுவதும் நாகர் பேரரசிற்கு செல்லவேண்டும் ஆனால் வஞ்சிகாடு சந்தை முழுவதும் பிரம்பி பொருட்கள் மட்டுமே விற்பனைக்கு வரும்.  கந்தன் நினைத்தது போல் போர் வரும் சூழல் ஏற்பட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கணியன் புரவிகளை நிறுத்தினான்.

ஏதோ வன பகுதி போலிருந்தது, அங்கிருந்து சிறு குன்று போல் மேலேழுந்தது அதில் சிறிது தூரம் நடந்த பின். பல கற்கள் நடப்பட்டிருந்தது அந்த கற்களுக்கு அப்பால் ஒரு பள்ளத்தாக்கு அங்கே ஒரு கிராமம் இருந்தது. ‘இது எந்த இடம் தலைவரே’

‘இந்த ஊரின் பெயர் முன்டூர், இவர்களின் உடை வேறு வகையாக இருக்கும் அதன் பெயர் தான் முன்டு ஆகையால் தான் இந்த ஊரிற்கும் முன்டூர் என பெயர் வந்தது.’ கணியன் சொன்னான்

‘இது என்ன கற்கள் நடப்பட்டிருக்கிறது’  மதிமாறன் கேட்டான்.

‘இதுவே நடுகற்கள், நாகரில் சிலர் மட்டும் போரில் இறந்தவர்களுக்கு கற்களை வைத்து வழிபடுவார்கள்’ கணியன் சொன்னான்.

‘இது என்ன வேடிக்கை?’ மதிமாறன் சொன்னான்.

‘வேடிக்கை அல்ல பின்னால் என்றோ வரப்போகும் தலைமுறைக்கு விட்டுச் செல்லும் பாடம், தான் இறந்தாலும் இது இருக்கும் என்னும் நம்பிக்கை. வருங்காலத்தில் நம்மை நினைவுகூற இதை நடுகிறார்கள், இது எப்படி வேடிக்கையாகும், இது மிக பெரிய அறிவு அல்லவா, வருங்காலத்தை காணும் பார்வை. எனக்கு இதை காணும் பொழுது ஏனோ சிலிர்ப்பு தான் வருகிறது’ கணியன் சொல்லிவிட்டு ஒரு பெரிய நடுக்கல்லின் பக்கத்தில் சென்றான் அதையே ஊற்று பார்த்து கொண்டிருந்தான்.

அந்த கல்லில் சிவப்பான நிறத்தில் ஒரு கை அச்சும் அதன் பக்கத்தில் மாடன் என்ற பெயரும் பொறிக்க பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!