siraku01

siraku01

சிகு 01

என்ன தவம் செய்தனை… யசோதா…
 
பாடல் வரிகள் மிக ரம்மியமாக அந்த வீடெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தன. பார்க்கும் இடமெங்கும் வண்ணப்பட்டுடுத்தி வகைவகையாய் நகை அணிந்த பெண்டிர். வீடே மங்களகரமாக இருந்தது. எல்லா மனங்களிலும் இனம்புரியாத ஒரு இன்ப உணர்ச்சி. பூக்கள், பழங்கள், விதவிதமான வளையல்கள், அலங்காரங்கள் என அந்த இடமே தேவலோகம் போலக் காட்சியளித்தது.
 
“பேசாம நாமளும் இன்னொன்னு பெத்துக்கலாம் போல தோணுதில்லை?” அந்தக் குரலில் சட்டென்று திரும்பிப் பார்த்தாள் அபிநயா. யாரோ ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் ஆசையாகச் சொல்லிக் கொண்டிருந்தார். பிரசவ வைராக்கியம் என்பது போல இது வளைகாப்பு வைராக்கியம் போலும். வளைகாப்பு வீட்டை அல்லது கர்ப்பிணிப் பெண்களை, சிறு குழந்தைகளைப் பார்க்கும் போது பெண்களுக்கு இயல்பாகவே உண்டாகும் ஆசை இது. எல்லாம் முடிந்து அவரவர் வீட்டுக்குப் போனால் நிதர்சனம் புரிந்துவிடும். அபிநயா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.
 
இது போல அவள் பல பெண்களைப் பார்த்திருக்கிறாள். சொல்லப் போனால் அவளது தொழிலே இதுதான், மகப்பேறு மருத்துவர். வயது முப்பத்தி இரண்டு. இன்று அவர்களது தோழிக்கு வளைகாப்பு. தோழி என்றால் இன்றைக்கு நேற்று வந்த தோழமை அல்ல இது. அவர்கள் குழுவில் நான்கைந்து பேர் இருக்கிறார்கள். பள்ளிக்காலம் முதல் தொடரும் நட்பு. அதுமட்டுமல்லாது இன்றைய வளைகாப்பின் நாயகி அவள் பேஷன்ட்டும் கூட. மிகவும் சிரமப்பட்டு நேரம் ஒதுக்கி இன்றைய நிகழ்வுக்காக வந்திருந்தாள் அபிநயா. இதுபோன்ற நிகழ்வுகளில் அவள் கலந்துகொண்டு வெகுகாலம் ஆகிறது. படிப்பு படிப்பென்றே காலம் கரைந்து போனது.
 
“இவ இன்னும் வராம என்னதான் பண்ணுறா?!” எரிச்சல் தோன்ற அலைபேசியை உயிர்ப்பித்தவள் வாசலுக்கு வந்தாள். உள்ளே பாடலொலி, பெண்களின் சலசலப்பு என இனிமையாக இருந்தாலும் பேசுவதற்கு உகந்த இடமாகத் தெரியவில்லை. 
 
“அஞ்சு! எங்க இருக்க நீ? இவ்வளவு நேரம் எதுக்கு லேட் பண்ணுறே?” அலைபேசியில் யாரையோ அழைத்த அபிநயா பொரிந்து தள்ளினாள். மறுமுனை என்ன சொன்னதோ, 
 
“சரி சரி, சீக்கிரமா வா பேபி, எவ்வளவு நேரந்தான் இங்க உனக்காக எல்லாரும் காத்துக்கிட்டு இருக்கிறது?” இவள் பேச்சை முடித்துக் கொண்ட இரண்டு நிமிடங்களில் அந்த ஆட்டோ வளைகாப்பு வீட்டு முன்பாக வந்து நின்றது. அதிலிருந்து ஒரு பெண் இறங்கினாள். அவளைப் பார்த்த மாத்திரத்தில் இதுவரைக் காத்துக் கிடந்தவளின் முகம் மலர்ந்து போனது.
 
“அஞ்சு பேபி, வா வா.” ஓடிப்போய் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.
 
“பார்த்து ஒரு… ரெண்டு வருஷம் இருக்குமில்லை அஞ்சு?” 
 
“ம்…” அந்தப் பெண்ணும் சிரித்தபடி தலையை ஆட்டிவிட்டு ஆட்டோவிற்குப் பணம் கொடுத்தது. நேரில் பார்க்காவிட்டாலும் நண்பிகள் அலைபேசியில் பேசிக்கொள்வார்கள். 
 
“ஏன்டீ? டெய்லி தங்க பஸ்பம் சாப்பிடுறியா?‌ இல்லை காயகல்பமா? எதுக்குடீ அநியாயத்துக்கு இவ்வளவு அழகா இருக்கே?!” ஆச்சரியப்பட்ட அபிநயாவின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள் அஞ்சனா. ஆரஞ்சும் சிவப்பும் கலந்த பட்டுக்கட்டியிருந்தாள். புடவை‌ அவளுக்கு அழகு சேர்த்ததா? இல்லை அவளால் புடவைக்கு அழகா என்று பிரித்தறிய முடியாத வகையில் இருந்தாள் அந்தப் பெண். பெண்களைப் பார்த்துப் பெண்களே பொறாமை கொள்ளும் அழகு என்று சொல்வார்களே! அது அஞ்சனாவிற்கு மிகவும் பொருந்தும். இத்தனைக்கும் அவள் அத்தனை அலங்காரம் எதுவும் பண்ணியிருக்கவில்லை. கண்ணுக்கு லேசாக மையிட்டிருந்தாள். மிதமான ஒப்பனை, தலை நிறைய மல்லிகை பூ. 
 
“இந்தா அஞ்சனா! பிச்சைக்காரி மாதிரிப் போகாம‌ விசேஷ வீட்டுக்கு நல்லா நிறைய நகையைப் போட்டுக்கிட்டுப் போ.” மாமியாரின் அதிகாரக் குரலில் எதுவும் பேச இயலாமல் நகைகளை அணிந்து வந்திருந்தாள்.
 
“ஆமா… எத்தனைப் பவுன் தேறும்?” கேலியாகக் கேட்ட நண்பியைப் பார்த்துச் சங்கடமாகப் புன்னகைத்தாள் அஞ்சனா.
 
“மாமியாரோட உத்தரவு, மீற முடியலை அபி.” புன்னகைத்தது பெண்.
 
“ஒகே ஒகே, போட்டாலும் போடலைன்னாலும் நீ அழகுதான்டீ!” மீண்டும் மீண்டும் அழகு அழகு என்ற அபிநயா சிலாகித்தாள் என்றால் அது வெறும் வார்த்தைகளில்லை. பள்ளிக்காலம் முதல் அப்படித்தான். அஞ்சனா அவ்வளவு அழகு! அவள் வீட்டில் பெண்ணை வேறு எங்கேயும் அப்போதெல்லாம் அனுப்பமாட்டார்கள். பொத்திப் பொத்திப் பெண்ணை வளர்த்தார்கள் பெற்றோர். அபிநயா வீட்டுக்கெல்லாம் அஞ்சனா போனதே கிடையாது. அபிநயாதான் இவளைத் தேடிப் போவாள். 
 
“தருண் வெரி வெரி லக்கி!” நண்பியின் தலையிலிருந்த மல்லிகையின் வாசம் பிடித்த அபிநயா சொல்லவும் அஞ்சனா அவள் கையில் லேசாக அடித்தாள்.
 
“சும்மா இரு அபி.”
 
“என்னத்தைச் சும்மா இரு, இப்பவும் பிஸினஸ் பிஸினஸ் ன்னு ஊர் ஊராச் சுத்துறாரா? இல்லை… இந்த அழகை விட்டுட்டு இருக்க முடியாதுன்னு வீட்டோடயே இருக்காரா?” அந்தக் கேள்வியில் அஞ்சனாவின் முகம் உணர்ச்சிகளைத் துடைத்தாற் போல ஒரு நொடி மாறியது.
 
“அடடே! அஞ்சனா, வா வா.” அதற்குள்ளாக வளைகாப்புப் பெண்ணின் தாய் வரவேற்க இரண்டு பெண்களும் திரும்பிப் பார்த்தார்கள்.
 
“என்ன வாசல்லயே நின்னுப் பேசிக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்? உள்ள வாம்மா.” இளம்பெண்கள் இருவரும் உள்ளே வர அந்த முதியவர் அஞ்சனாவின் கைகளில் வளையல்களைக் கொடுத்தார். 
 
“போட்டு விடு, ஆமா… நீ எப்போ இப்பிடி வளையல் அடுக்கப் போறே?”
 
“நல்லாக் கேளுங்க ஆன்ட்டி, அதான் ஆன்ட்டி கேட்கிறாங்க இல்லை, பதில் சொல்லு.” அபிநயாவும் பெரியவரோடு சேர்ந்து கொள்ள அஞ்சனா சிரித்தாள்.
 
“சிரிச்சா சரியா? பதில் சொல்லு அஞ்சு.” இன்னொரு நண்பியும் சேர்ந்து கொண்டாள்.
 
“குழந்தைப் பெத்துக்கிட்டாப் பொண்டாட்டியோட அழகு குறைஞ்சு போயிடும்னு தருண் நினைக்கிறாரோ என்னவோ?” இது அன்றைய விழாவின் நாயகி கல்பனா.
 
“எங்கிட்டக் கேள்வி கேட்கிறதை விட்டுட்டு முதல்ல இந்த டாக்டர் எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கன்னு கேளுங்க.” தன் மீது குவிந்த பார்வைகளை அபியின் பக்கம் திருப்பிவிட்டாள் அஞ்சனா.
 
“இது நியாயமான பேச்சு! ஏய் அபி! இன்னம் எத்தனை நாளைக்கு இப்பிடியே இருக்கப்போறே, வயசு குறைஞ்சுக்கிட்டேப் போறதா நினைப்பா உனக்கு?” இது இன்னொரு நட்பு.
 
“காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக்கணும்னா எதுக்கு டாக்டராகச் சொல்றீங்க? படிக்கிறதை எல்லாம் படிச்சு முடிச்சிட்டுத் திரும்பிப் பார்த்தா நீங்க எல்லாரும் கல்யாணம் பண்ணிப் புள்ளைக் குட்டின்னு நிற்கிறீங்க! நான் என்னப் பண்ணட்டும்?!”
 
“ஆமா, இங்க டாக்டரா இருக்கிற யாரும் கல்யாணம் பண்ணிக்கலைப் பாரு, இவ மட்டுந்தான் டாக்டர் மாதிரிப் பெருசாப் பேச வந்துட்டா.” மீண்டுமொரு நட்பு அபிநயாவை கேலி பண்ணியது.
 
“அவங்களால முடியுது பண்ணுறாங்க, என்னால முடியலையே, நான் என்னப் பண்ணட்டும்?”
 
“அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது அபி, பொண்ணுங்களை ஒருத்தன் கையில புடிச்சுக் குடுக்கும் வரைப் பெத்தவங்களுக்கு நிம்மதியில்லை, இவ்வளவு நாளும் படிப்பு படிப்புன்னு காலத்தைக் கடத்திட்டே, இனியும் தாமதம் பண்ணாம சீக்கிரமாக் கல்யாணம் பண்ணிக்கோ, நீயும் காலாகாலத்துல புள்ளைக் குட்டின்னுப் பார்க்க வேணாமா?” 
 
“சரி ஆன்ட்டி.” நண்பியின் தாய் எடுத்துச் சொல்லவும் நல்ல பிள்ளையாகக் கேட்டுக்கொண்டாள் அபி. பாட்டுப்பாடி, வளையல் போட்டு, உண்டு சிரித்து மகிழ்ந்து நேரம் போனதே தெரியாமல் நண்பிகள் கூட்டம் சற்று நேரம் ஆட்டம் போட்டது. மனமே இல்லாமல் எல்லோரும் ஒரு கட்டத்தில் கலைந்து போனார்கள். 
 
“நீ வா எங்கூட.” அஞ்சனாவின் கையைப் பிடித்து அவளது காரில் ஏற்றிக் கொண்டாள் அபி.
 
“நேரம் போகுது, வீட்டுக்குப் போகணும் அபி.”
 
“அதெல்லாம் போலாம், இன்னும் கொஞ்ச நேரம் எங்கூட ஸ்பென்ட் பண்ணு அஞ்சு, ப்ளீஸ்.” கெஞ்சுபவளை மறுக்க முடியாமல் அமைதியாக உட்கார்ந்தாள் அஞ்சனா. நண்பர் வட்டம் பெரிதாக இருந்தாலும் இவர்கள் இருவருக்குள்ளும் படிக்கும் காலம் முதல் நெருங்கிய நட்புண்டு. டாக்டர் படிப்பு, அதன் பிறகான மேற்படிப்பு என்று அபி வெளிநாடுகளில் சுற்றித் திரிந்ததால் கொஞ்ச நாட்கள் மெல்லிய இடைவெளி தோன்றி இருந்தது. படிப்பையெல்லாம் மூட்டைக் கட்டி ஒருபுறம் வைத்துவிட்டு அபி இப்போது ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனையில் வேலையில் அமர்ந்துவிட்டாள்.
 
“எங்க போறோம் அபி?” 
 
“ஏதாவது ரெஸ்டாரன்ட் போலாம் பேபி, எவ்வளவு நாளாச்சு நாம இப்பிடி ஒன்னாப் பேசிச் சிரிச்சு?” முகமெல்லாம் புன்னகைப் பூக்க நண்பி சொன்ன போது மற்றவளும் சிரித்துக் கொண்டாள். அபி எப்போதும் இப்படித்தான் அஞ்சனாவை அழைப்பாள். அவளுக்குப் படிக்கும் காலத்திலேயே அஞ்சனா ‘பேபி’தான். உண்மையிலேயே அஞ்சனா அபிக்கு இரண்டு வயது இளையவள். டைபாய்டு காய்ச்சல் வந்ததால் ஒரு வருடத்தைத் தவறவிட்டுவிட்டு பள்ளியில் பிந்திப் படித்திருந்தாள் டாக்டர். அஞ்சனாவின் கெட்டித்தனத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் அதிபர் சிறுவயதில் அவளுக்கு டபுள் ப்ரமோஷன் கொடுத்திருந்தார். அழகாக, வயதில் இளையவளாக இருந்த அஞ்சனாவை அபிக்கு எப்போதுமே பிடிக்கும். பேபி பேபியென்று அவளோடேயே அலைவாள். 
 
“வயிறு ஃபுல்லா இருக்கு, எதுவும் ஆர்டர் பண்ணிடாதே அபி.” 
 
“ஆமா, ரெஸ்டாரன்ட் காரன் உன்னோட மச்சான் பாரு, நாம ரெண்டு பேரும் சும்மாப் போய் உட்கார்ந்து பேசிட்டு வர்றதுக்கு!” நேராக உள்ளே நுழைந்து இரண்டு பேருக்கும் இரண்டு காப்பசீனோ ஆர்டர் பண்ணிவிட்டு பேச வசதியாக ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தாள் டாக்டர். பெண்கள் இருவரும் அங்கேயே அமர்ந்து கொண்டார்கள்.
 
“அப்புறம், சொல்லு பேபி, லைஃப் எப்பிடிப் போகுது?”
 
“நல்லாப் போகுது, நீ எப்போக் கல்யாணம் பண்ணிக்கப் போறே?”
 
“நாளைக்கே பண்ணிக்கிறேன், போதுமா?”
 
“விளையாடாத அபி.”
 
“உண்மையைத்தான் சொல்றேன் பேபி, இன்னைக்கு நைட் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க.”
 
“நிஜமாவா?!” 
 
“ஆமா.”
 
“மாப்பிள்ளை யாரு? என்னப் பண்ணுறாரு? உனக்குப் புடிச்சிருக்கா?” 
 
“மாப்பிள்ளையும் நம்ம ஜாதி போல இருக்கு, அதாம்மா… டாக்டர்.”
 
“வாவ்! சூப்பர்!”
 
“நம்மளை விட இன்னும் கொஞ்சம் அதிகமாப் படிச்சிருப்பார் போல, நான் இன்னமும் ஆளைப் பார்க்கலை.”
 
“ஏய்! பார்க்காம எப்பிடிடீ?!”
 
“அதான் இன்னைக்கு வரப்போறாரில்லை, பார்த்துக்கலாம்… அதெப்பிடி பேபி? பசங்கன்னா எதைப் பத்தியும் கவலைப்படாம மேல மேல படிக்கலாம், நாம மட்டும் வயசோட கல்யாணம் பண்ணிக்கணுமா? அந்தக் கடுப்புல அம்மா குடுத்த மாப்பிள்ளையோட‌ ஃபோட்டோவை இன்னும் பார்க்கலை.” நண்பியின் பேச்சில் வாய்விட்டுச் சிரித்தாள் அஞ்சனா.
 
“ஆங்! இதைத்தான் இவ்வளவு நேரமும் நான் மிஸ் பண்ணினேன், சொல்லு சொல்லு, இந்தச் சிரிப்பு ஏன் தொலைஞ்சு போச்சு பேபி?”
 
“தொலைஞ்சு போச்சுன்னு நீயாக் கற்பனைப் பண்ணிக்கிட்டா நான் என்னப் பண்ணுறது?” சொன்னவளைக் கூர்ந்து பார்த்தாள் அபிநயா. என்னிடம் உன் பொய் செல்லுபடியாகாது என்பது போல இருந்தது அந்தப் பார்வை. அஞ்சனா இப்போது தலையைக் குனிந்து கொண்டாள்.
 
“உண்மையைச் சொல்லு அஞ்சு, நீ சந்தோஷமா இருக்கியா?” அந்தக் கேள்வி கேட்கப்பட்ட பின் அங்கே சிறிது நேரம் மௌனம் நிலவியது.
 
“சொல்லுடீ!”
 
“சந்தோஷம்னு நீ எதைச் சொல்லுற அபி?” 
 
“…”
 
“என்னைப் பார்த்தா உனக்கு எப்பிடித் தோணுது? பட்டும் பவுனுமாப் பார்க்க ஜொலிச்சுக்கிட்டுத்தானே இருக்கேன்.”
 
“தருண் எப்பிடி இருக்காரு?” டாக்டரின் கேள்வி இப்போது ஆராய்ச்சியாக வந்தது.
 
“அவருக்கென்ன? நல்லாத்தான் இருக்காரு?”
 
“பிஸினஸ் எப்பிடிப் போகுதாம்?” 
 
“ரொம்ப நல்லாப் போகுது, லாஸ்ட் மன்த் கூட நல்ல லாபம் வந்துதுன்னு எனக்கு இந்த நெக்லஸ் வாங்கிக் குடுத்தாரு.” துளிகூட முகத்தில் சந்தோஷம் இல்லாமல் தன் கழுத்தில் கிடந்த அந்தத் தங்கக் கட்டியைப் பெண் சுட்டிக்காட்டிய போது அபிநயா அமைதியாக எல்லாவற்றையும் கவனித்தாள். 
 
இருபத்தைந்து வயதிலேயே அஞ்சனாவிற்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் அவள் பெற்றோர். மிகவும் கெட்டிக்காரப் பெண். இருந்தாலும், மருத்துவத் துறையில் ஆர்வமில்லாததால் வணிகத் துறையைத் தேர்வு செய்திருந்தாள். ஒரு வங்கியில் பணிபுரிய என்னென்ன தகுதிகள் வேண்டுமோ அவையனைத்தையும் தனக்குள் வளர்த்துக் கொண்டவள் தனியார் வங்கி ஒன்றில் நல்ல பணியில் ஆரம்பத்தில் அமர்ந்தாள். இரண்டே ஆண்டுகளில் மேலும் தன் திறமைகளை உயர்த்தியவள் ஆறு இலக்கங்களில் ஊதியம் பெற்றாள். தனது சுயத்தைத் தொலைத்துவிட்டு அமைதியான புன்சிரிப்போடு தன்னெதிரே அமர்ந்திருக்கும் தன் மரியாதைக்குரிய நட்பை இமைக்காமல் பார்த்திருந்தாள் அபிநயா.
 
***
அடுக்குமாடிகள் அமைந்திருந்த அந்தப் பகுதியில் தன்னந்தனியாக தன்னைச் சுற்றி விசாலமான தோட்டத்தைக் கொண்டு அழகே உருவாக நின்றிருந்தது அந்த இரண்டடுக்கு வீடு. வீட்டைப் பார்த்த போதே புரிந்தது, அதன் சொந்தக்காரர் கலாரசிகர் என்று. வீட்டுக்கு முன்பாக இரண்டு கார்கள் நின்றிருந்தன. கூர்க்கா திறந்துவிட்ட கேட்டின் வழியாக தனது காரை ஓட்டிச் சென்று அதே வீட்டின் முன்பாக நிறுத்தினான் ஷியாம். அந்த வருடத்தின் ‘ஏ ஃபைவ்’ புது மாடல் ப்ளாக் ஆடி. எத்தனையோ புதுரக கார்கள் வந்தபோதிலும் ப்ளாக் ஆடி மேல் அவனுக்குத் தீராத மோகம். 
 
“ம்… பரவாயில்லை, பொண்ணு வீடு நல்லாத்தான் இருக்கு.” சொன்ன அப்பாவை ஒரு தினுசாகத் திரும்பிப் பார்த்தான் ஷியாம். அந்தப் பார்வை அத்தனை நல்லதாகத் தெரியவில்லை கண்மணிக்கு. கண்மணி ஷியாமின் அம்மா. கெஞ்சிக் கூத்தாடி மகனை இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருந்தார்.
 
“ஏங்க! நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா?” மனைவி தன்மீது பாய்ந்த பிறகுதான் நிலைமை புரிந்தது சுந்தர்ராமிற்கு.
 
“ஐயையோ! நான் சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன் ம்மா, ஏன்டா ஷியாமா! எதுக்குடா என்னை உங்க அம்மாக்கிட்ட இப்பிடி மாட்டி விடுறே? ஒரு ரசிகனா இந்த வீட்டை ரசிச்சு ரெண்டு வார்த்தை நான் சொல்லப்படாதா?”
 
“கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமா ரெண்டென்ன, ரெண்டாயிரம் வார்த்தை சொல்லுங்க, இப்ப வாயைத் தயவு செஞ்சு மூடுங்க, ஆண்டவா! வந்ததும் சரியில்லை, பெத்ததும் சரியில்லை.” கண்மணி மீண்டும் புலம்ப ஆரம்பிக்க அப்பாவும் மகனும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.
 
“அம்மா…”
 
“சொல்லுடா கண்ணா.” கண்மணியின் குரலில் தேன் வடிந்தது. இந்தக் கல்யாணம் முடியும் வரை ஷியாம் எது சொன்னாலும் அதைச் சிரமேற்கொண்டு செய்ய அவர் தயார். மகனோடு அத்தனைப் பாடு பட்டுவிட்டார் அந்த மகராசி.
 
“நீங்க கூப்பிட்டீங்களேங்கிற மரியாதைக்காக வந்திருக்கேன், ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்துட்டு நான் வந்திடுவேன், அதுக்கு மேல என்னை நீங்கத் தொல்லைப் பண்ணக் கூடாது.”
 
“சரிடா கண்ணா, நீ எப்பிடிச் சொல்றியோ அப்பிடித்தான், அதுக்கு மேல ஒன்னும் நடக்காது.” அம்மா கொடுத்த உத்தரவாதத்தில் காரை விட்டு இறங்கினான் ஷியாம். இந்தக் கல்யாணம், கால்கட்டிலெல்லாம் அவனுக்கு அத்தனை ஈடுபாடு கிடையாது. அவன் வேலைதான் அவனது உயிர்மூச்சு. 
 
ஷியாம் சுந்தர்ராம், வயது முப்பத்து ஐந்து. மெல்லிய உடல்வாகு, ஆனால் நெடுநெடுவென்று வளர்ந்திருந்தான். மகப்பேறு மருத்துவத்தில் கன்சல்டன்ட் நிலையில் இருக்கும் மிகவும் பிரசித்தமான இளம் மருத்துவன். மேற்படிப்பை முடித்த கையோடு இங்கிலாந்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவனை அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கண்மணி இலங்கைக்கு வர வைத்திருந்தார். இந்த ஒரு வருடமும் அவன் வாழ்க்கை அப்பா அம்மாவோடுதான் கழிகிறது. ஆனந்தமாகக் கழிகிறதா என்று கேட்டால் அதற்கு அவனுக்கு விடை தெரியாது. 
 
கருகருவென இருந்த கேசத்தில் காதோரமாக நான்கைந்து நரைமுடிகள். அவனுக்கும் வயது போகிறது என்று கட்டியம் கூறின. இரண்டு நாட்கள் ஷேவ் செய்யாத முகம். அங்கேயும் ஒரு சில வெள்ளைப் பூக்கள் மலர்ந்திருந்தன. நல்ல பளிச்சென்ற நிறம். வெளிநாடு அவனுக்குச் செங்கம்பளம் விரித்த போதும் அம்மாவின் கண்ணீருக்காக இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறான்.
இப்போதெல்லாம் அடிக்கடி இது போல ஏதாவது பெண் பார்க்கும் ஏற்பாடுகள் பண்ணிவிட்டு கண்மணி அவனிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வார். ஆனால் இன்றைக்கு மகன் என்னவோ இளகி வந்திருந்தான். அழுகையில் கரைந்து போகும் அம்மாவைப் பார்த்த போது அவனுக்கும் கவலையாக இருந்திருக்கும் போலும். சரி என்று ஒத்துக் கொண்டிருந்தான்.
 
“வாங்க வாங்க.” அபிநயாவின் பெற்றோர் வாசல் வரை வந்து வரவேற்றார்கள். தங்கள் பெண்ணும் பெரிய படிப்புப் படித்தவள் என்ற எண்ணம் இல்லாமல் இயல்பாக இருந்தவர்களை கண்மணிக்கு அந்த நொடியே பிடித்துப் போனது. கணவரைப் பார்த்து அர்த்தத்தோடு புன்னகைத்தார்.
 
“நல்லா இருக்கீங்களா?” சம்பிரதாயமாகக் கேட்ட சுந்தர்ராம் தன் குடும்பத்தோடு உள்ளே போனார். வீட்டினுள்ளேயும் அமைப்பு பிரமாதமாக‌ இருந்தது.
 
“வீடு ரொம்ப அழகா இருக்கு.” இது கண்மணி. 
 
“அபிக்குன்னு பார்த்துப் பார்த்துக் கட்டின வீடு, பிடி குடுத்தாத்தானே, பசங்களை டாக்டருக்கு படிக்க வெக்கிறது தப்போன்னு இப்பத் தோணுது.” 
 
“அப்பிடிச் சொல்லுங்க.” அபியின் அம்மா அங்கலாய்க்க அதற்கு சபாஷ் போட்டார் கண்மணி. பணிப்பெண் டீ கொண்டு வந்து கொடுக்க எல்லோரும் அருந்த ஆரம்பித்தார்கள். 
 
“அபி எங்க?” கண்மணி கேட்கவும் உள்நோக்கிக் குரல் கொடுத்தார் கனிமொழி. எந்தச் செயற்கைத் தனமும் இல்லாமல் எல்லாம் இயல்பாக அந்த வீட்டில் நடப்பது போல உணர்ந்தான் ஷியாம். சொல்லப்போனால் அது அவனுக்குப் பிடித்திருந்தது. மெல்லிய சாம்பல் நிற ஷர்ட்டும் கறுப்பு டெனிமும் அணிந்திருந்தான். பெண் மாடியிலிருந்து இறங்கி வருவாள் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க பக்கத்து அறையிலிருந்து சாதாரணமாக வந்தாள் அபிநயா. பெண்ணை ஒருசில நொடிகள் கூர்ந்து பார்த்தான் ஷியாம். எங்கேயோ பார்த்தாற் போல இருந்தது. அவள் யாரென்பது அவனுக்குச் சட்டென்று பிடிபட வாய்க்குள் புன்னகைத்தான்.
 
“என்னம்மா அபிநய சுந்தரி! எப்பிடி இருக்கீங்க?!” அவன் வார்த்தைகளில் பெண் இப்போது அவனை அவசரமாக நிமிர்ந்து பார்த்தது. பார்வைக் கூர்மைப் பெற முகம் முழுவதும் சிரித்தது. 
 
“சீனியர்! நீங்களா?! உண்மையாவே நீங்கதானா?!” அவள் கேட்டு முடிக்க ஷியாம் வாய்விட்டுச் சிரித்தான். தன் மகனுக்கு இத்தனை அழகாகச் சிரிக்கத் தெரியுமா என்று வியந்தவரைப் போல ஷியாமையே பார்த்திருந்தார் கண்மணி. இதுநாள்வரை அவன் சிரிப்புத் தொலைந்து போகக் காரணம் என்ன?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!