siraku02

சிகு 02

அபியோடு நேரம் செலவழித்துவிட்டு அஞ்சனா வீடு திரும்பிய போது லேசாக இருட்டிவிட்டது. தருண் எப்போதும் அவன் ஆஃபீஸிலிருந்து தாமதமாகத்தான் வருவது வழக்கம். அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனாலும் அவளது மாமியார் சட்டென்று வலிக்க ஏதாவது சொல்லிவிடுவார். முன்பெல்லாம் அப்படி அவர் இருக்கவில்லை. அதற்காக மருமகள் மேல் பாசத்தைப் பொழிந்தாரா என்று கேட்டால் அதுவுமில்லை. இந்த வீட்டில் நான் மாமியார், நீ மருமகள்… அதைத்தாண்டி அஞ்சனாவோடு அவர் பெரிதாக எதுவும் வைத்துக் கொள்வதில்லை.
 
அதற்கொரு காரணம் உண்டு. இன்றுவரை அந்த வீட்டு நிர்வாகம் அவளது மாமியார் மதிவதனி வசனம்தான் இருக்கிறது. அதை இன்றுவரை இவள் பெரிதாக எடுத்ததுமில்லை. ஆனால் மதிவதனிக்கு தன் மருமகளைப் பார்த்துப் பயம். அஞ்சனாவின் மாமனாருக்கு வருமானம் என்று ஒன்றுமேயில்லை. மகனை நம்பியே அவர்களின் ஜீவனோபாயம் இருப்பதால் எப்போதும் மகனைத் தன் கைக்குள் வைத்திருக்கவே நினைப்பார். மருமகளைக் கொஞ்சம் எட்ட நிறுத்தவே பழகியிருந்தார் மதிவதனி.
 
“வாம்மா அஞ்சனா.” வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த முருகானந்தன் மருமகளை வரவேற்றார். பக்கத்தில் டீ கப் இருந்தது.
 
“கொஞ்சம் லேட் ஆகிடுச்சு மாமா, சாரி.”
 
“அதிலென்னம்மா இருக்கு, இன்னைக்கு ஒரு நாள்தானே? ஃபங்ஷன் நல்லா நடந்துச்சா?”
 
“ரொம்ப நல்லா நடந்துச்சு மாமா.” 
 
“சரிம்மா, உள்ள போ.” சொல்லிவிட்டுப் படித்துக் கொண்டிருந்த பேப்பரில் பார்வையைச் செலுத்திய முருகானந்தனின் கண்கள் மீண்டும் மருமகளையே பார்த்தது. பார்த்தவரின் கண்களில் அத்தனைச் சோகம். இன்று வீட்டில் நடந்த கூத்து அப்படி. ஒரு ஆட்டம் ஆடிவிட்டுத்தான் ஓய்ந்திருந்தார் அவரது சகதர்மிணி. வெளியே போய்விட்டு வந்திருக்கும் தங்கள் மருமகள் மேல் எத்தனை திருஷ்டி பட்டிருக்கும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.
 
“இந்தா மதிவதனி! இந்தப் புள்ளைக்குக் கொஞ்சம் சுத்திப்போடு.” இப்படிச் சொல்லத்தான் அவருக்கும் ஆசை. ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு அவரால் அந்த வீட்டில் வாழமுடியுமா?!
 
அஞ்சனா மிகவும் நல்ல பெண். தங்க விக்கிரகம் போல இருந்த அந்தப் பெண்ணை மதிவதனி விரும்பித்தான் தன் மருமகளாக ஏற்றுக் கொண்டார். ஆனால் காலம் செல்லச் செல்ல அந்த வீட்டிற்கென்று ஒரு வாரிசு வராதது அவருக்குப் பெரும் குறையாகிப் போனது. மனைவியையும் முற்றுமுழுதாக அவரால் குறைகூற இயலவில்லை. ஒன்றல்ல இரண்டல்ல, அஞ்சனா அந்த வீட்டிற்கு வந்து ஐந்து வருடங்கள் கழிந்துவிட்டன. இன்றுவரை ஒரு நல்ல சேதி இல்லை. அதில் மதிவதனிக்கு மிகுந்த மனவருத்தம். யார் பக்கம் பேசுவதென்று தெரியாமல் அவ்வப்போது முருகானந்தன் அமைதியாகிவிடுவார்.
 
“தருண்! நீங்க எப்ப வந்தீங்க?!” தங்கள் படுக்கையறைக்குள் நுழைந்த அஞ்சனா திடுக்கிட்டுப் போனாள். அந்த நேரத்தில் கணவனை அவள் அங்கே எதிர்பார்க்கவில்லை.
 
“அவசரமா நான் இப்போ சிங்கப்பூர் கிளம்புறேன் அஞ்சனா, முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு.” அவசர அவசரமாக அலமாரியில் இருந்த ஃபைல்களில் சிலவற்றைத் தனது ப்ரீஃப்கேஸில் அடுக்கிக் கொண்டிருந்தான் கணவன்.
 
“எனக்கு ஒரு கால் பண்ணியிருக்கலாமே?” அவளது கேள்விக்குப் பதில் சொல்லும் நிலைமையில் அவன் இப்போது இல்லை. அவன் வேலையிலேயே கவனமாக இருந்தான். இது பழக்கப்பட்ட விஷயம் என்பதால் அவனுக்குத் தேவையான உடைகளை இன்னொரு பையில் அடுக்க ஆரம்பித்தது பெண்.
 
தான் வீட்டினுள் நுழையும் போது மாமா கூட இவர் வந்ததைச் சொல்லவில்லையே என்று எண்ணியபடி இன்னொரு ஷர்ட்டை கப்போர்ட்டிலிருந்து எடுத்தாள் பெண். எதிரே இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளில் அவளது உருவம் தெரிந்தது. சற்று நிதானித்துத் தன் உருவத்தையே கண்ணாடியில் ஒரு நொடி பார்த்தாள். இன்று வளைகாப்பு வீட்டில் அத்தனைப் பேரும் பாராட்டிய அவளது எழிலுருவம்! சட்டென்று ஏதோ தோன்றக் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். அவளொருத்தி அங்கே நிற்பது கூடப் புரியாதவன் போல அவன் வேலையில் ஆழ்ந்திருந்தான் தருண். ஒரு பெருமூச்சுடன் தன் வேலையைத் தொடர்ந்தது பெண். என்றைக்காவது ஒருநாள் இவர்,
 
“நீ ரொம்ப அழகா இருக்கே அஞ்சனா.” என்று சொன்னதுண்டா? ஞாபக அடுக்குகளில் அவசரமாகத் தேடிப் பார்த்தாள் மனைவி. ஊஹூம்… ஞாபகம் வரவில்லை. கல்யாணமான புதிதில் இரண்டொரு முறை சொல்லியிருப்பார் போலும். 
 
‘அப்படியென்றால் இப்போது நான் அழகாக இல்லையா?’ மனம் சண்டித்தனம் பண்ணியது. அழகாக இல்லாமலா அத்தனைப் பேரும் அப்படிப் புகழ்கிறார்கள்?! அத்தனைப் பேர் புகழ்ந்த போதும் தன் கணவனின் வாயிலிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்க அவள் மனது ஆசைப்பட்டது. 
 
“நீங்க கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டுச் சும்மா இருக்கீங்களா?” வெளியே கேட்ட சத்தத்தில் அஞ்சனா திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அது மதிவதனியின் குரல். 
 
“என்னோட வாயை மூடுறதுலயே குறியா இருக்காத வதனி.”
 
“இந்த வீட்டுல யாராவது ஒருத்தர் இதைப்பத்திப் பேசித்தானே ஆகணும்.” மீண்டும் மாமியாரின் குரல். எதைப்பற்றிப் பேச வெளியே இருவரும் சண்டைப் போடுகிறார்கள்?! கணவன் முகத்தை மீண்டும் பார்த்தது பெண். உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட அதே முகம். யார் வாழ்ந்தால் என்ன, வாழாவிட்டால்தான் எனக்கென்ன என்பதுபோல் ஒரு ஃபைலில் ஆழ்ந்து போயிருந்தான் அவன்.
 
“வந்ததும் வராததுமா அவங்கிட்ட இதைத்தானே பேசின, அவன் ஏதாவது பதில் சொன்னானா?”
 
“அதுக்காக இப்பிடியே விட்டுட முடியுமா?”
 
“இதே நிலைமை உனக்கு வந்து என்னோட அம்மா உங்கிட்ட இதேமாதிரிப் பேசியிருந்தா நீ சும்மா இருந்திருப்பியா?”
 
“ஓஹோ! அப்பிடி வேற எண்ணமிருந்துதோ உங்களுக்கு? ஒன்னைக் கட்டி ஒழுங்கா வெச்சுக் குடும்பம் நடத்தவே துப்பில்லை, இதுல அம்மைக்கும் மகனுக்கும் இப்பிடியொரு ஆசை வேற இருந்துச்சோ?”
 
“நான் என்னப் பேசுறேன் நீ என்னப் பேசுற வதனி!”
 
“நீங்க எதுவும் பேசவேணாங்கிறேன் நான், என்னப் பண்ணணும்னு எனக்குத் தெரியும், எத்தனை நாளைக்குத்தான் நானும் மத்தவங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமத் தவிக்கிறது, அஞ்சு வருஷம் பொறுத்துப் பார்த்தது போதும்.” வெளியே வாக்குவாதம் நடந்துகொண்டிருக்க கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு தருண் வெளியே வந்தான். கூடவே அஞ்சனாவும் பின் தொடர்ந்தாள்.
 
“அம்மா, சாப்பாடு ரெடியா?”
 
“ஏன்டாப்பா! நான் ஒருத்தி இங்க நீ வந்ததுல இருந்து பேசிக்கிட்டு இருக்கேனே, உங்காதுல எதுவும் ஏறலையா?”
 
“எனக்கு ஃப்ளைட்டுக்கு லேட்டாகுதும்மா.”
 
“ஆமா, நான் தெரியாமத்தான் கேட்கிறேன், இந்தா நிற்கிறாளே மகராசி, இவ என்னப் பத்துப் புள்ளையைப் பெத்துப் போட்டுட்டான்னா நீ இப்பிடிப் பறந்து பறந்து சம்பாரிக்கிறே?” இந்த நேரடித் தாக்குதலை அஞ்சனா எதிர்பார்க்கவில்லை. மறைமுகமான குத்தல்களுக்கே பழக்கப்பட்டிருந்தவள் இப்போது வெகுவாகத் திகைத்தாள்.
 
“வதனி! போதும் நிறுத்து!”
 
“எதுக்கு என்னை நிறுத்தச் சொல்றீங்க? முதல்ல இந்த மகராசியை நம்ம புள்ளைத் தலையில கட்டின உங்க சம்மந்தியைக் கூப்பிடுங்க, இந்தப் பிர்சினைக்கொரு முடிவு கட்டுவோம்.”
 
“அஞ்சனா, நீ உள்ள போம்மா.” மாமனாரின் குரல் செவியை வந்தடைந்த போதும் அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள் பெண். இன்றைய பேசுபொருள் அவள்தான். இதுவரை வெளியே நடந்த விவாதம் அவள் சம்பந்தப்பட்டதுதான். கணவனை இப்போது அவள் திரும்பிப் பார்க்க அவன் அமைதியாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். 
 
“தருண்! உங்கம்மா பண்ணுற கூத்தை நீயாவது என்னன்னு கேட்க மாட்டியா?” அம்மாவின் அதிகாரம், மனைவியின் கண்ணீர் மௌனம், அப்பாவின் கையாலாகாத அதட்டல் எதுவுமே அவனைப் பாதிக்கவில்லை. நிர்ச்சலனமாக உண்டு முடித்தவன் நீரைப் பருகிவிட்டு எழுந்தான்.
 
“இங்க இருக்கிற எதுவுமே என்னோட பாட்டனோ அப்பனோ எனக்காகச் சேர்த்து வெச்ச சொத்தில்லை, நான் கஷ்டப்பட்டு ஒவ்வொன்னாச் சேர்த்தது, இந்த கவுரவத்தைக் கட்டிக் காப்பாத்தணும்னா இந்த வீட்டுல நான் ஒருத்தன்தான் ஓடணும்.” இதை மகன் சொல்லும் போது மதிவதனியின் பார்வைத் தன் கணவனை இகழ்ச்சியாக ஒரு முறை நோக்கியது.
 
“உங்களோட நின்னு மல்லுக்கட்ட எனக்கு நேரமில்லை, நான் கிளம்புறேன்.”
 
“நீ போய்ட்டு வாடா ராஜா, எல்லாம் நம்ம தலையெழுத்து! நமக்கு வந்து வாய்ச்சது எதுவுமே சரியில்லை.” முந்தானைத் தலைப்பில் அவசரமாக மூக்கை உறிஞ்சிக் கொண்டார் மதிவதனி.
 
“நான் வர்றேன் ம்மா.” அம்மாவிடம் சொல்லிவிட்டு அம்மாவின் மகன் கிளம்பிவிட்டான். இப்போது முருகானந்தன் மருமகளைப் பார்த்தார். பேசவே திராணியற்றவள் போல நின்றிருந்தது பெண். வீட்டுக்குள் அவள் வந்தபோது கணவனின் வருகையை மாமனார் அறிவிக்காததன் ரகசியம் அப்போது அஞ்சனாவிற்குப் புரிந்தது. இப்படியொரு புருஷன் வீட்டுக்கு வந்தால் என்ன, வராவிட்டால்தான் என்ன என்று நினைத்திருப்பார் போலும்.
 
“என்னை மன்னிச்சிடும்மா.” அந்த இரைஞ்சலில் பெண் பெரியவரைப் பார்த்தது.
 
“உன்னோட இந்த நிலைமைக்கு நானுந்தான் காரணம்.” மனைவி வாசல்வரை மகனை வழியனுப்பச் சென்றுவிட்டதால் தைரியமாகப் பேசினார் முருகானந்தன்.
 
“நான் சரியா இருந்திருந்தா எல்லாரையும் தட்டி அவங்கவங்க இடத்துல வெச்சிருக்கலாம், நான் என்னப் பண்ணட்டும்மா?! எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிற்கணுங்கிறது என்னோட விதி, நானும் ஒரு காலத்துல நல்லா வாழ்ந்து இவளை மகராசியா வெச்சிருந்தவன்தான்.” அதற்கு மேல் எதுவும் பேசாமல் பெரியவர் வெளியே போய்விட்டார். தன்னிடம் கணவன் சொல்லிக் கொள்ளாமல் போனதுகூட புத்தியில் உறைக்காமல் சிலைபோல நின்றிருந்தது பெண்!
 
***
“சீனியர்! உண்மையாவே நீங்கதானா?! என்னால நம்பவே முடியலை!” மீண்டும் மீண்டும் ஆச்சரியப்பட்டாள் அபிநயா.
 
“நானுந்தான் நினைக்கலை, நம்ம இப்போ அபிநய சரஸ்வதி வீட்டுக்குத்தான் போகப்போறோம்னு!” தன்னை மறந்து சிரித்தான் ஷியாம்.
 
“சீனியர்! எம் பேரைக் கொல்லாதீங்க சீனியர்… கொல்லாதீங்க சீனியர்!” எழுந்து நின்று அபிநயா பணிவாக வணக்கம் வைக்க இப்போது ஷியாம் வெடிச்சிரிப்புச் சிரித்தான். பத்து நிமிடங்களுக்கு மேல் என்னால் அங்கு நேரம் செலவழிக்க முடியாது என்று சொன்ன மகனை வாய்பிளந்து பார்த்திருந்தார் கண்மணி.
அப்போது அவன் பேசிய பேச்சென்ன?! இப்போது இங்கே நடப்பதென்ன?! கண்மணி மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரின் முகமும் இளையவர்களின் சிரிப்பைப் பார்த்து மலர்ந்து போனது.
 
இருவரும் ஒரே பாடசாலையில் படித்தவர்கள். ஷியாம் பெண்ணுக்கு சூப்பர் சீனியர். உயர்தரப் பிரிவில் அவன் நுழைந்த போது இவள் இரட்டை ஜடை போடும் வயது. துறுதுறுவென்று இருப்பாள். இவளைக் கேலி பண்ணவென்றே வேண்டுமென்று அந்தப் பெயரை ‘அபிநய சுந்தரி, அபிநய சரஸ்வதி’ என்றெல்லாம் அழைப்பான் ஷியாம். முதலில் ஆத்திரப்படுவாள், பிற்பாடு இதுபோல எழுந்து நின்று பணிவாக வணக்கம் வைத்துக் கெஞ்சுபவள் போல ஒரு நாடகம் ஆடுவாள். அதைப் பார்ப்பதற்காகவே இவனது செட் அவளைக் கேலி பண்ணும். அந்த ஞாபகத்தில் இப்போது இருவரும் தங்களை மறந்து சிரித்தார்கள். 
 
“ஆக, அபி இன்னும் மாறலை, அப்பிடியேதான் இருக்கா?!”
 
“ஆமா சீனியர்.” இருவரும் அதன்பிறகு தங்கள் யூனிவர்சிட்டி படிப்பு, மேற்படிப்பு என்று பேசிக் கொண்டிருந்தார்கள். வெறும் பெண் பார்க்கும் படலமாக ஆரம்பித்த சந்திப்பு பெரு விருந்தோடு நிறைவுபெற்றது. பெரியவர்கள் கீழ்தளத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கத் தனது சீனியருக்கு வீட்டைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தாள் அபிநயா.  
 
“ம்… வீடு ரொம்ப அழகா இருக்கு அபி.”
 
“தான்க் யூ சீனியர்.” 
 
“ஆமா… ஏன் இவ்வளவு நாளும் கல்யாணம் பண்ணிக்கலை?”
 
“ஏன் சீனியர்? நீங்க மட்டுந்தான் படிக்கணுமா? நாங்கெல்லாம் படிக்கக்கூடாதா?”
 
“விட்டிருக்கமாட்டாங்களே, அதான் கேட்டேன்.”
 
“அதெல்லாம் பிரமாதமா பண்ணினாங்க, ஆனா நாம யாரு?! அவ்வளவு சுலபத்துல விட்டுருவமா?”
 
“அதுசரி…” அவன் சிரித்துக் கொண்டான். பள்ளிக்காலங்களில் அவள் காட்டிய குறும்பு முகத்தை அறிந்தவன்தானே அவன். நாக்கின் நுனி வரை இன்னும் ஏதேதோ கேள்விகள் அவளைக் கேட்க நினைத்தான் ஷியாம். ஆனால் நெடுநாட்களுக்கு முன்பாக அவனுக்கு அவனே போட்டுக்கொண்ட‌ விலங்கு இப்போதும் அவனைப் பேசமுடியாமல் தடுத்தது. அவன் முகத்தையே பார்த்திருந்த அபிநயா இந்த நாடகம் எத்தனைத் தூரம் போகிறது பார்க்கலாம் என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.
 
“அப்புறம் அபி, ஃப்ரெண்ட்ஸ் யாரையும்… மீட் பண்ணலையா?” தட்டுத்தடுமாறி ஷியாம் கேட்டபோது அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அபி.
 
“என்ன கேட்கணுமோ அதை நேரடியாவே கேளுங்களேன் சீனியர்.”
 
“…” தன் கைவிரல் நகங்களை ஒரு சில நொடிகள் வெறித்துப் பார்த்தான் டாக்டர்.
 
“நீங்க இன்னும் மாறலையா சீனியர்?” அவள் குரலில் சொல்லவொண்ணாத சோகம் இப்போது.
 
“எப்பிடி இருக்கா?” கரகரப்பாக வந்தது அவன் குரல்.
 
“தெரியலை.”
 
“ஓ… கான்டாக்ட் இல்லையா?”
 
“இன்னைக்கு ஈவ்னிங் கல்பனாக்கு வளைகாப்பு, கல்பனாவை ஞாபகம் இருக்கில்லை?”
 
“ம்…” 
 
“இன்னைக்கு எல்லாரும் ஃபங்ஷனுக்கு வந்திருந்தாங்க.” அவள் சொல்லி முடித்தபோது அவன் கண்கள் அவளை ஆர்வமாக நோக்கியது. அவளைப்பற்றி ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்லிவிடேன் என்று அவன் கண்கள் அவளைக் கெஞ்சியது.
 
“நல்லா இருக்கா… அப்பிடித்தான் நான் நினைக்கிறேன்.” 
 
“புரியலை…” அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை.
 
“எனக்கும் எதுவும் புரியலை சீனியர்… முகத்துல சந்தோஷம் இருந்த மாதிரித் தெரியலை, ஆனா சிரிக்கிறா… கேட்டா, நான் நல்லாத்தானே இருக்கேன் அபின்னு சமாளிக்கிறா.”
 
“எத்தனைப் பசங்க?”
 
“இன்னுமில்லை.”
 
“ஏன்?”
 
“தெரியலை… எதையும் மனசுவிட்டுப் பேசமாட்டேங்கிறா… ஆனா எதுவோ சரியில்லை டாக்டர்.”
 
“அவனெங்க? அவளோட அண்ணன், புருஷோ…த்தமன்?” அந்தப் பெயரை அவன் உச்சரித்த விதத்திலும் அதன் பிற்பாடு அவன் உதடுகள் உச்சரித்த கெட்ட வார்த்தைகளிலும் தன் காதுகளை மூடிக்கொண்டாள் அபிநயா.
 
“பெரிய இவனாட்டம் அவனோட தங்கையைப் பத்திரம் பண்ணினானே, இந்த மயிரைப் புடுங்கத்தான் அந்த ஆட்டம் ஆடினானா?” 
 
“டாக்டர்… ப்ளீஸ்…” 
 
“என்ன மயித்துக்கு நீ இப்போ எங்கிட்ட ப்ளீஸ் போடுறே? எல்லாரும் அன்னைக்குக் கையைக் கட்டிக்கிட்டுச் சும்மா வேடிக்கைப் பார்த்துக்கிட்டுத்தானே இருந்தீங்க?” அவன் கத்தவில்லை, சத்தமாகப் பேசவுமில்லை. ஆனால் விஷத்தைக் கொட்டினான். சமூகத்திலிருந்த அவனுக்கான தரம், தராதரம் எல்லாம் அவன் சொற்களில் காணாமல் போயிருந்தன. அந்த நொடி அவன் அஞ்சனா என்ற பெண் மேல் ஆசை வைத்த சாதாரண மனிதன்.
 
“உங்க லவ்வை அப்போ நீங்களும் சொல்லலையே சீனியர்?” அபிநயா இப்போது குறைப்பட்டாள்.
 
“சொல்லலை… அதுமட்டுந்தான் பண்ணலை… ஆனா அந்த ஒட்டுமொத்த ஸ்கூலுக்குமே தெரியும், அவமேல நான் எவ்வளவு ஆசை வெச்சிருந்தேன்னு.”
 
“அவ ஒரு பொண்ணு சீனியர், வீட்டுல அவ்வளவு கட்டுப்பாடு இருக்கும் போது அவளால என்னப் பண்ணமுடியும்?”
 
“ஒன்னும் பண்ண யோக்கியதை இல்லை, ஆனா அந்த பாஸ்டர்ட் காட்டின மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்ட மட்டும் தெரியும்.”
 
“…” அபிநயா இதற்குப் பதிலேதும் கூறவில்லை. தனது காதல் கைகூடாத ஆதங்கத்தில் இவன் பேசுகிறான். வாழ்க்கையில் ஒரு நிலையான நிலை இல்லாததால் எப்படி இவனால் அன்று பெண்கேட்க முடியவில்லையோ அதேபோல்தானே அவளும்?! 
 
ஷியாமிற்கு உயர்தரத்தில் முதல்  தடவையிலேயே மருத்துவ பீடம் கிடைக்கவில்லை. இரண்டாம் முறை முயற்சித்துத்தான் அவனுக்கு அது கைகூடியது. பெண் மேல் ஆசை இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவோ, அல்லது படிப்பைத் தூக்கித் தூரப்போட்டுவிட்டுப் பெண் பின்னால் போகவோ அவனால் அப்போது இயலவில்லை. காலத்தின் கோலம், விதியின் சதி… இதைத்தவிர வேறென்ன சொல்வது? அதற்கு மேல் பேசத்தெரியாமல் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.