siraku03

siraku cp-86c15d7f

சிகு 03

வீட்டிலிருந்த நான்கு பேரும் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அஞ்சனா அவள் தாய் வீட்டிற்கு அன்று வந்திருந்தாள். அவளால் அவளது கணவன் வீட்டில் இருக்க முடியவில்லை. மூச்சு முட்டியது. நேற்று அவர்களது வீட்டில் நடந்த கூத்தைத் தனது பெற்றோரிடம் சொல்லியிருந்தாள் பெண். அவளுடைய அப்பா ஃபோனை போட்டு அஞ்சனாவின் அண்ணனையும் வரவழைத்திருந்தார். அண்ணியை அழைக்க இது சரியான சமயமல்ல என்று அவரைத் தவிர்த்திருந்தார்.
 
“நான் அப்பவே தலையால அடிச்சுக்கிட்டேன், இந்தப் புதுப் பணக்காரங்களோட சகவாசம் நமக்கு வேணாம்னு, யாராவது எம்பேச்சைக் கேட்டீங்களா?” கண்ணீரில் கரைந்தார் அம்மா வெண்பா.
 
“வெண்பா, இங்க யாரும் அவளோட வாழ்க்கையைக் கெடுக்க நினைக்கலை, அந்த வீட்டுல அவ சுகப்படுவான்னு நினைச்சுத்தான் கட்டிக் குடுத்தேன்.”
 
“ஆமா, அவ சுகப்பட்டு நிற்கிற லட்சணத்தைத்தான் இப்போ பார்க்கிறீங்களே!”
 
“இப்பிடியெல்லாம் நடக்கும்னு யாரு எதிர்பார்த்தாம்மா?”
 
“நீங்க எதிர்பார்த்திருக்கணும், புதுசாப் பணத்தைக் கண்டவனோட பவுசு என்னன்னு நமக்குத் தெரியாதா?‌ கல்யாணம் பண்ணின இத்தனை நாள்ல இவ முகத்துல என்னைக்காவது சந்தோஷத்தைப் பார்த்திருக்கீங்களா? ஊர் உலகத்துலேயே இல்லாத ஒரு அம்மா இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையா வந்தவருக்கு மட்டுந்தான் இருக்காங்களா? மத்தவங்க எல்லாம் என்ன சுயம்புவா?”
 
“கொஞ்சம் பேசாம இரு வெண்பா.” தன் மனைவியை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் கோவிந்தராஜன். 
 
“இப்போ எதுக்குங்க என்னோட வாயை மூடுறீங்க? பெத்த வயிறு எரியுதுங்க, இவ்வளவு கஷ்டப்பட்டுப் பொண்ணைப் பெத்து வளர்த்துக் கட்டிக் குடுத்தது இதுக்குத்தானா?” வாய்விட்டுக் கதறிய மனைவியைப் பார்த்து கோவிந்தராஜனின் கண்களும் கலங்கின.
 
“நீ ஏன்டாப்பா இப்பிடிக் கல்லு மாதிரி அமைதியா இருக்கே? அதான் ஓடி ஓடி ஊர்லயே இல்லாத ஒரு மாப்பிள்ளையை உன்னோட தங்கச்சிக்குப் பார்த்தியே! இப்ப அவளோட நிலைமையைப் பார்த்தியா?”
 
“அம்மா…” இது புருஷோத்தமன். யார் மேல் தனது மன பாரத்தைக் கொட்டுவது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தார் வெண்பா.
 
“அம்மாதான்டா… அம்மாதான், அதாலதான் இன்னைக்கு இப்பிடிப் புலம்புறேன், என்னால இதையெல்லாம் தாங்க முடியலைடா புருஷோத்தமா!” மீண்டும் கதறினார் வெண்பா.
 
“இதுக்குத்தான்டா பணத்தைப் பார்க்காம குணத்தைப் பார்க்கணும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க, அந்தப் புதுப்பணக்காரியோட பணத்தைப் பார்த்து நீயும் உன்னோட அப்பாவும் மயங்கிட்டீங்க, நம்ம தரத்துக்கு இன்னைக்கு இவளோட வாயால எல்லாம் கதை கேட்கணும்னு எழுதியிருக்கு.”
 
“இங்கப்பாரு வெண்பா, இங்க யாரும் பணத்தைப் பார்த்து மயங்கலை, ஏன்? இங்க நாமென்ன வாழ வழியத்துப் போயா கிடக்கிறோம்?”
 
“அப்ப என்ன எழவுக்கு அவ வீட்டு வாசப்படியை மிதிச்சீங்க? அவ மூஞ்சும்…” அதற்கு மேல் பேசாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார் அம்மா. 
 
“நான் எங்க வெண்பா மிதிச்சேன்? அவங்களாப் பொண்ணு கேட்டு வந்தாங்க, நல்ல வசதியான, படிச்ச மாப்பிள்ளை, எம்பொண்ணு அந்த வீட்டுல நல்லா வாழுவான்னு நான் நினைச்சேன்.” ஆதங்கப்பட்டார் அப்பா. 
 
“ஆனா நான் அப்பவே சொன்னேன், இது வேணாம்னு, பணம் பரம்பரையா வரணுங்க, அப்பிடி வந்தா நிதானம் இருக்கும், புதுசாக் காசைக் கண்டவன் இப்பிடித்தான் இருப்பான், அடேயப்பா! இவரோட அம்மா மட்டுந்தான் இவரைக் கஷ்டப்பட்டு வளர்த்தாங்களாம்! அதால அவங்க கீறின கோட்டை இவர் தாண்டமாட்டாராம்! நாங்கெல்லாம் வலிக்காம சும்மா சுகமாப் பெத்து வளர்த்திட்டோம் பாருங்க!”
 
“தருண் இப்போ எங்க அஞ்சனா?”
 
“சிங்கப்பூர் போயிட்டாருண்ணா.”
 
“எப்போ வருவாரு?”
 
“எதுக்கு?” சட்டென்று கேட்டாள் பெண்.
 
“கேட்டா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும்மா.”
 
“இல்லைண்ணா… இனி யாரோட கேள்விக்கும் நான் பதில் சொல்லப் போறதில்லை, இது என்னோட வாழ்க்கை, இதை நான் வாழ்ந்துக்கிறேன்.”
 
“ஏய்! என்னப் பேசுற அஞ்சு நீ?” புருஷோத்தமன் திகைத்துப் போனான்.
 
“போதும்! ஸ்கூலுக்கு போற காலத்துல இருந்து நீ என்னை அடக்கி அடக்கித்தான் வெச்சிருக்கே, எல்லா வீட்டுலயும் பொண்ணுங்க வளர்ந்தாங்க, ஆனா நீ என்னைப் பார்த்த விதமே வேற.”
 
“அஞ்சும்மா நான் உன்னோட அண்ணன்டா, என்னோட தங்கச்சியை நான் பாதுகாக்காம வேற யாரு பார்த்துக்கிறது?”
 
“சரி, பாதுகாத்து வளர்த்தே, நான் என்னைக்காவது உன்னோட பேச்சை, இல்லை அப்பா அம்மாவோட‌ பேச்சை மீறியிருக்கனா? இல்லையில்லை?‌ நல்லாப் படிச்சேன், நல்ல வேலையில உட்கார்ந்தேன், நீங்க கைகாட்டின மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டினேன், இதுக்கு மேல எங்கிட்ட என்னண்ணா நீ எதிர்பார்க்கிறே?”
 
“…”
 
“போதும் விட்டுரு, எனக்கு வயசு முப்பது, எனக்கும் நல்லது கெட்டது இப்போப் புரியுது, தயவு செஞ்சு என்னை விட்டுருங்க.”
 
“விட்டுருங்கன்னா?!” புருஷோத்தமனின் கண்கள் பயத்தால் வெளுத்தது.
 
“என்னால முடியலைண்ணா, கொஞ்ச காலம் தனியா இருக்கணும்னு தோணுது, மூச்சு முட்டுது, நிம்மதியா‌ மூச்சு விடணும் போல இருக்கு, கொழந்தை இல்லைன்னா என்னோட வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு அர்த்தமா? யாரோ ஒருத்தருக்குக் கொழந்தைப் பெத்துப் போடத்தான் நான் பொறந்தனா? எனக்குப் புரியலை!” இப்போது சேலைத் தலைப்பால் வாயை மூடி வெடித்து அழுதார் வெண்பா. தலையைக் குனிந்து அமர்ந்திருந்த கோவிந்தராஜனின் கண்களும் கலங்கின.
 
“ஒவ்வொன்னுக்கும் அவர்கிட்டப் போய் கெஞ்சிக்கிட்டு நிற்காத, எனக்கு அது ரொம்பக் கஷ்டமா இருக்கு.”
 
“இது உன்னோட வாழ்க்கை அஞ்சு, நீ நல்லா இருக்க நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்.”
 
“அதைத்தான் நான் வேணாங்கிறேன், அவரு இன்னொரு கல்யாணம் பண்ணுறதுன்னாலும் பண்ணட்டும், எனக்கு அதைப்பத்தி எந்தக் கவலையும் இல்லை.”
 
“என்னப் பேசுற அஞ்சு நீ?!”
 
“என்னோட ஆறுதலுக்குத்தான் நான் இங்க வர்றேன், அது உங்களுக்குக் கஷ்டமா இருந்தாச் சொல்லுங்க, நான் வரலை… அதுக்கு மேல இனி யாரும் என்னோட வாழ்க்கையில தலையிட வேணாம், ப்ளீஸ்…” சொல்லிவிட்டுத் தனது அறைக்குள் போய்விட்டது பெண். இப்போதும் அங்கே யாரும் எதுவும் பேசவில்லை.
 
***
“அடடே! அஞ்சு பேபி! ஏது இவ்வளவு தூரம்?!” ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள் அபிநயா. ஏனென்றால் அஞ்சனா அவள் வீடு தேடி வந்திருந்தாள்.
 
“வராதவங்க வந்திருக்கீங்க, வாங்க வாங்க!” கேலியின் உச்சக்கட்டம் இது. ஆனாலும் அஞ்சனா சிரித்துக் கொண்டாள். எத்தனை நெருக்கமான நட்பு இருவருக்குள்ளும் இருந்திருக்கிறது. ஆனால் ஒருநாள் கூட தோழிகள் வீட்டிற்குப் போவதற்கு இவளுக்கு அனுமதி கிடைத்ததில்லை. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அபிநயாதான் தன் பேபி வீட்டிற்குப் போவாள். 
 
“ஆன்ட்டி, ப்ளீஸ் ஆன்ட்டி, அஞ்சுவை ஒருநாளைக்கு எங்க வீட்டுக்கு அனுப்புங்களேன்.” இப்படிப் பலமுறை அபிநயா அஞ்சனாவின் அம்மாவிடம் கெஞ்சியதுண்டு. ஆனால் அது ஒருபோதும் நடந்ததில்லை. பெண்கள், தங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை ஒருபோதும் மீற நினைப்பதில்லை. ஆனால் அவர்களை அவர்களது சமூகம் மீற வைக்கிறது!
 
அஞ்சனாவை தனது பெற்றோருக்கு அறிமுகப்படுத்திய அபி நண்பியை நேராக மாடியிலிருந்த அவளது அறைக்கு அழைத்து வந்தாள். தோழியின் முகத்திலிருந்த‌ கவலை ரேகைகள் எல்லோர் முன்னிலையிலும் அவளோடு பேச முடியாது என்று எடுத்துச் சொன்னது.
 
“நேத்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாங்களா அபி? என்னாச்சு?” 
 
“ம்… வந்தாங்க, நல்லாப் பேசினாங்க, அப்புறம் சாப்பிட்டாங்க.”
 
“உனக்குப் பிடிச்சிருக்கா?! மாப்பிள்ளையோட ஃபோட்டோ காட்டேன்.”
 
“ம்… பிடிச்சிருக்கு, அநேகமா எல்லாம் சரியா வரும்னு தோணுது பேபி.”
 
“வாவ்!” அஞ்சனா மகிழ்ச்சியில் வாயைப் பிளந்தாள். 
 
“சரி நீ சொல்லு, ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு?”
 
“அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லை அபி, உன்னைப் பார்க்கணும் போல இருந்துச்சு, அதுவும் நீ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருவாங்கன்னு சொன்னியா, அதுதான் ஒரு எட்டுப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.”
 
“அதுக்கு நீ ஒரு ஃபோனை போட்டு‌ எங்கிட்டப் பேசியிருக்கலாம், இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வரத் தேவையில்லை, இன்னம் எத்தனை நாளைக்கு உனக்குள்ளயே எல்லாத்தையும் போட்டு அழுத்திக்கப் போறே பேபி?” அந்தக் கனிவான குரல் அஞ்சுவை அசைத்துப் பார்த்தது. அடக்கி வைத்திருந்த கண்ணீர் அருவி கண்களில் லேசாக எட்டிப் பார்த்தது.
 
“ஏதாவது பேசு பேபி.” இவள் தூண்டத் தூண்ட அஞ்சனா விசும்ப ஆரம்பித்தாள். 
 
“என்னால முடியலை அபி.” என்றாள் மெதுவாக.
 
“என்னாச்சு ம்மா?”
 
“கல்யாணமாகி அஞ்சு வருஷம் ஆச்சாம், அவங்க வீட்டுக்கு இன்னும் வாரிசொன்னு வரலையாம்.”
 
“சரி, டாக்டரை பார்த்தீங்களா?”
 
“அதுக்கெல்லாம் அவருக்கு நேரமில்லை.”
 
“அப்போ எப்பிடி அவர் உன்னைக் குத்தம் சொல்லலாம்?”
 
“திட்டுறது அவரில்லை, அவரோட அம்மா.”
 
“ஓ! அம்மா திட்டும் போது தருண் ஒன்னும் சொல்ல மாட்டாரா?” 
 
“ம்ஹூம்.”
 
“ஏன்டீ, படிச்சவர்தானே அந்தாளு? பொண்டாட்டியை அம்மா திட்டும் போது ஒரு ஆம்பிளை ஏன்னு கேட்க மாட்டானா?” அபிநயா இப்போது கோபத்தில் வெடித்தாள். 
 
“வேற யாரும் திட்டினாக் கேட்பாரோ என்னவோ! ஆனா அந்த மகராசி யாரை என்ன சொன்னாலும் இவரு வாயைத் தொறக்க மாட்டாரு.” 
 
“ஏன்?!”
 
“அவங்கம்மா அவரைக் கஷ்டப்பட்டு வளர்த்தாங்களாம்.”
 
“எல்லா அம்மாமாரும் அவங்கவங்க புள்ளைங்களைக் கஷ்டப்பட்டுத்தான் வளர்க்கிறாங்க!” அபி சொல்லவும் அஞ்சனா பக்கென்று சிரித்தாள்.
 
“சரி, டாக்டர்கிட்டயும் போக முடியாது, இப்போ அந்தம்மா என்னதான் சொல்றாங்க?”
 
“பையனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வெக்கப் போறாங்களாம்.”
 
“என்னது?!” உட்கார்ந்திருந்த அபிநயா இப்போது வெகுண்டு எழுந்துவிட்டாள். ஆனால் வார்த்தைகளை உதிர்த்தவள் அமைதியாக இருந்தாள்.
 
“என்னடீ இவ்வளவு சாதாரணமாச் சொல்றே?!”
 
“வேற என்னப் பண்ணலாம் அபி? அந்தம்மாவோட மல்லுக்கு நிற்கச் சொல்லுறியா? அதுவும் இப்பிடிப்பட்ட ஒரு புருஷனுக்காக?” கசப்பை மென்று துப்பிய அந்த முகத்தைத் திகைப்போடு பார்த்தாள் அபி.
 
“அஞ்சு பேபி! என்னதான்டீ நடக்குது உங்க வீட்டுல?‌ நீ அவரோட சந்தோஷமா இருக்கியா இல்லையா?”
 
“…”
 
“ஏய்! என்னை நிமிர்ந்து பாருடீ!” இதுவரை நண்பியாகப் பேசிக்கொண்டிருந்தவள் இப்போது ஒரு டாக்டராக மாறியிருந்தாள். தோழியின் நாடியைத் தன்னை நோக்கித் திருப்பியவள்,
 
“உங்கூட ஒழுங்காக் குடும்பம் நடத்துறாரா இல்லை வேற எவளையாவது வெச்சிருக்காரா?” என்றாள் காரசாரமாக.
 
“சேச்சே… அப்பிடியெல்லாம் எதுவுமில்லை.”
 
“அப்போ உங்கூட நல்ல ரிலேஷன்ஷிப்ல இருக்காரா? நான் என்ன கேட்க வர்றேன்னு உனக்குப் புரியும் அஞ்சு.”
 
“ம்… அப்பப்போ… அவருக்குத் தேவைப்படறப்போ.” எங்கேயோ ஒரு சூனியத்தை வெறித்தப் பார்வை இப்போது அவளிடம்.
 
“அவருக்குத் தேவைப்படுறப்போவா? அப்போ உனக்குத் தேவைப்படுறப்போ நீ என்னப் பண்ணுவே? வேற எவங்கிட்டயாவது போவியா?”
 
“ஐயோ அபி!” காதுகளிரண்டையும் தன் கைகளால் மூடிக்கொண்டாள் அஞ்சனா. ஏதோ கேட்கத் தகாததைக் கேட்டது போல. ஆனால் அந்த உணர்வெல்லாம் இவளுக்குத்தான். விசாரணைப் பண்ணுபவள் ஒரு டாக்டர். அதுவும் மகப்பேறு மருத்துவர். இதைவிட வெளிப்படையான பேச்சுக்களையெல்லாம் அவள் தன்னிடம் குறையென்று வருபவர்களிடம் பேசி இருப்பதால் சாதாரணமாக இருந்தாள்.
 
“நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்களாடீ? கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷனா? அடச்சீய்! அந்தாள் நம்பர் குடு எனக்கு.”
 
“எதுக்கு?!”
 
“ஆங்! ரெண்டு நாள் நான் ஃப்ரீயா இருக்கேன், வர்றியான்னு கேட்கப் போறேன், சும்மாக் குடுடீன்னாப் பெரிய இவளாட்டம் எதுக்கு நொதுக்குன்னு கேள்வி கேட்கிறா!”
 
“இங்கப்பாரு அபி, இப்ப உங்கிட்ட நான் பேசின எதுவும் அவருக்குத் தெரியக் கூடாது, தெரிஞ்சாப் பெரிய பிரச்சினை ஆகிடும்.” அஞ்சனா பதறினாள், பயப்பட்டாள்.
 
“இல்லை, அப்பிடியெல்லாம் எதுவும் நடக்காது, காயை எப்பிடி நகர்த்தணும்னு எனக்குத் தெரியும், நீ கவலைப்படாதே.” இதுவரை எந்த விஷயத்தைத் தன் தோழியிடம் சொல்லி அவளை வருத்தப்படுத்தக் கூடாது என்று ஒருத்தி நினைத்திருந்தாளோ இன்று அவள் அதைச் செய்திருந்தாள். எந்த விஷயத்தைத் தன் காதுகளால் கேட்டுவிடக் கூடாது என்று மற்றவள் பயப்பட்டாளோ இன்று அவளும் அதைக் கேட்டிருந்தாள். இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். சொல்லப்பட்டதும் கேட்கப்பட்டதும் விரும்பத்தகாதது என்றாலும்… விஷயம் பேசப்பட்டது. இனி ஆராயப்பட வேண்டியது.
 
“உங்கிட்ட அன்பா இருக்க மாட்டாரா தருண்?” இது நட்பின் ஆதங்கம். இத்தனை அழகான, அன்பான மனைவியை ஒரு கொடூரன் கூட வேண்டாம் என்று சொல்லமாட்டானே!
 
“எங்கூட இருக்கும் போது ஒருமுகம், அந்த ரூமைவிட்டு வெளியே வந்துட்டா வேறமுகம்.”
 
“அப்பிடீன்னா?!”
 
“ரூமுக்குள்ள இருக்கிற வரைக்கும் என்னோட புருஷன், ரூமைவிட்டு வெளியே வந்துட்டா மதிவதனியோட பையன்.”
 
“ஓ… தனிக்குடித்தனம் போயிருக்கலாமே நீ?” இதை அபி சொன்னபோது அஞ்சனா வாய்விட்டுச் சிரித்தாள். அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரிந்துபோக இவள் அதற்கு மேல் அதுபற்றிப் பேசவில்லை.
 
“ஏன் பேபி இப்பிடி இருக்காரு உன்னோட புருஷன்?” கேட்கக்கூடாத கேள்விதான். இருந்தாலும் தோழியின் அவலநிலை மற்றவளைக் கேட்க வைத்தது. சில நொடிகள் தனது நகங்களை ஆராய்ந்த படி இருந்த அஞ்சனா இப்போது பேச ஆரம்பித்தாள்.
 
“அபி… பொண்ணுங்களுக்கு இருக்கிற மன தைரியம் ஆம்பிளைங்களுக்கு இல்லையோன்னு தோணுது, இந்த உலகத்தை, சமூகத்தை, குடும்பத்தைப் பார்த்து அதிகமாப் பயப்பிடுறது பசங்கதான், பொண்ணுங்க கிடையாது.”
 
“…”
 
“சொந்தபந்தமோ இல்லைன்னா ஃப்ரெண்ட்ஸோ இவங்களைப் பத்தி ஏதாவது கேலியாச் சொல்லிட்டா இவங்களால அதை ஏத்துக்க முடியலை.”
 
“புரியலை!”
 
“சில வீடுகள்ல புதுசாக் கல்யாணமான பசங்களைக் கேலி பண்ணுவாங்கில்லை, இவன் பொண்டாட்டி தாசன் ஆகிட்டான், பொண்டாட்டி முந்தானையைப் புடிச்சிக்கிட்டு அலையுறான்னு.”
 
“இதுல என்ன இருக்கு? உண்மைதானே? புதுசாக் கல்யாணம் ஆனவன் அப்பிடித்தானே இருப்பான்?”
 
“அதான், அதைப் பகிரங்கமாச் சொல்லுற தைரியம் சில ஆம்பிளைங்களுக்குக் கிடையாது, அதுலயும் அவங்க வீட்டுல இருக்கிற அம்மாக்கிட்ட, அக்கா தங்கைங்கக்கிட்ட இதை அவங்களால ஒத்துக்க முடியுறதில்லை, அவங்க ஈகோ அதுக்கு இடங்குடுக்கிறதில்லை.”
 
“அதுக்காக? ரூமுக்குள்ள மட்டும் பொண்டாட்டி தாசனா இருந்துக்குவாங்களா?” கேள்வி கேலியாக இருக்க அஞ்சனா சிரித்தாள்.
 
“உன்னால எப்பிடித்தான் இப்பிடிச் சிரிக்க முடியுதோ! ஆமா… எவ்வளவு நல்ல ஜாப்ல இருந்தே? ஏன் அதை விட்ட?”
 
“வேலை வேலைன்னு ஓடுறதாலதான் வயித்துல ஒன்னும் தங்கமாட்டேங்குது, வேலையை விடுன்னு சொன்னாங்க, இவரும் அதுக்கு ஒத்து ஊதினாரு, சரி எதுக்கு வம்புன்னு வேலையை விட்டுட்டேன்.”
 
“நீ எல்லாத்தையும் அவருக்காக விட்டே, ஆனா இப்போ அவர் உன்னையே விடப் போறாரே? உண்மையாவே அவங்கம்மா இன்னொரு பொண்ணைப் பார்த்தா அந்த மனுஷன் கட்டிக்குவாராடீ?”
 
“கட்டிக்குவாரா என்னன்னு எனக்குத் தெரியாது, ஆனா கட்டிக்கிட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.” 
 
“ஓ… அப்போ, பெத்தவ சொன்னா ஐயா மறுபேச்சுப் பேசாமக் கட்டிக்குவாரு.”
 
“ம்…”
 
“இவனோட எல்லாம் அஞ்சு வருஷம் நீ… என்னோட வாயில நல்லா வந்திரும்…” மேலே பேசாமல் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள் அபிநயா. அஞ்சனா எதுவுமே பேசவில்லை. தன் கணவரைப் பற்றி நண்பி கேவலமாகப் பேசுவது அவளுக்கு வலியைக் கொடுக்கவில்லை. வெயிலுக்கும் குளிருக்குமாக மாறிமாறித் தூக்கி எறியப்பட்டது போல அவள் வாழ்ந்த வாழ்க்கை அவளுக்குக் கசத்துப் போயிருந்தது. 
 
வேலைக்குப் போகும் காலத்தில் அஞ்சனாவிற்கு தங்கள் அறைக்குப் பக்கத்திலேயே இன்னொரு அறை இருந்தால் தனக்கு வசதியாக இருக்குமே என்று தோன்றியது. வீட்டில் ஒரு சின்ன மாற்றம் செய்தால் அவள் எதிர்பார்த்த வசதி தானாகக் கிடைக்கும். அதை அவள் கணவனிடம் சொன்ன போது உன் இஷ்டம் போலச் செய் என்று அனுமதி வழங்கி இருந்தான். அப்போது அவர்கள் கல்யாணமான புதிது. 
 
கணவன் அனுமதி கொடுத்த மகிழ்ச்சியில் மேற்கொண்டு ஆகவேண்டிய அனைத்தையும் பெண் திட்டமிட்டது. என்ஜினீயரை வரவழைத்து அனைத்துத் திட்டங்களும் போட்டு எல்லாம் முடிவான பிறகு இன்னும் இரண்டு நாட்களில் வேலையை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதுவரை வேடிக்கைப் பார்த்த மதிவதனி கடைசி நேரத்தில் வீட்டில் கை வைக்க வேண்டாம், இது என் வீடு என்று சொன்ன போது பெண் அதிர்ந்து போனது.
சமூகத்தில் அவளுக்கென்றொரு அந்தஸ்து இருந்தது. அவள் ஆரம்பித்த வேலைக்காகச் செலவு செய்யவிருந்த பணம் அவள் கணவனின் வருமானத்திற்கு ஒன்றுமேயில்லை. சொல்லப் போனால் அவள் சேமிப்பிலிருந்தே அதை அவளால் பண்ண முடியும். ஆனால் இவை எதற்கும் மதிவதனியின் ஆங்காரம் இடம் கொடுக்கவில்லை.
 
“எல்லாம் முடிவானத்துக்குப் பின்னாடி வேணாம்னு எப்பிடிங்க என்ஜினியர்கிட்டச் சொல்றது?”
 
“அம்மா வேணாம்னு சொல்றாங்க அஞ்சனா.”
 
“உங்கக்கிட்டச் சொல்லிட்டுத்தானேங்க வேலையை ஆரம்பிச்சேன்? அப்போ சரின்னுதானே சொன்னீங்க?”
 
“அம்மா வேணாம்னு சொல்லும்போது என்னால என்னப் பண்ணமுடியும் சொல்லு?”அந்தப் பதிலில் பெண்ணுக்குக் கோபம் தலைக்கேறியது. என்னோடு சந்தோஷமாகக் கழியும் உன் இரவுகள் கூட உன் அம்மாவின் அனுமதியோடுதான் கழிகின்றனவா என்று நடுவீட்டில் நின்று கத்தவேண்டும் போலத் தோன்றியது. ஆனால் முடியவில்லை. பொறுத்துக் கொண்டாள்.
அம்மாவின் குணத்தை நன்கு அறிந்த சத்புத்திரன் இவளுக்கு அனுமதி வழங்கும் முன்பாக அம்மாவிடம் அனுமதி வாங்கி இருக்கலாமே! இல்லை, அம்மாவிடம் ஒரு வார்த்தைக் கேட்டுக்கொள் என்று சொல்லி இருக்கலாமே!
 
“சாரி சார், மதர் இன் லா இப்ப அந்த வேலையைப் பண்ண வேணாம்னு சொல்றாங்க.” அந்த என்ஜினியரிடம் இதை அவள் சொல்லும் போது அத்தனைத் தலைக்குனிவாக இருந்தது. அதே மதிவதனி, அடுத்த ஆண்டு சமயலறை தனக்குப் போதவில்லை என்று சொல்லி வீட்டை விசாலப்படுத்திய போது அஞ்சனா அமைதியாகக் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. 
 
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, இந்த ஐந்து வருடங்களில் எத்தனையோ நிகழ்வுகள். மனதைப் புண்ணாக்கிய தருணங்கள். முன்பெல்லாம் அவள் அம்மா தருணை பற்றிச் சின்னதாகக் குறை கூறினாலும் அவளுக்கு வலிக்கும். 
 
“அந்தம்மா பண்ணுற கூத்துக்கு அவரை ஏம்மா திட்டுறே?” என்று வக்காலத்து வாங்குவாள். ஆனால் இப்போது அப்படியெதுவும் பேசத் தோணவில்லை. தூரத்தே தெரிந்த நிர்மலமான வானத்தின் ஒரு மூலையில் தனக்கான விமோசனம் இருப்பது போல வானையே வெறித்திருந்தாள் அஞ்சனா. அழகு தேவதை போல அமர்ந்திருந்தவளை இமைக்காமல் பார்த்திருந்தாள் அபிநயா.