siraku07

siraku cp-3f811f33

சிகு 07

அபிநயாவின் அதிர்ந்த பார்வையைக் கூர்ந்து பார்த்தான் ஷியாம். இப்படியொரு அதிர்ச்சியை அவளிடமிருந்து அவன் எதிர்பார்க்கவில்லை.
 
“என்னம்மா அபிநய சரஸ்வதி! எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?! அப்பிடி என்னத்தை நாங்க சொல்லிட்டோம்னு நீங்க இப்பிடியொரு ரியாக்ஷன் காட்டுறீங்க?” 
 
“சீனியர்… சீனியர் நீங்க உண்மையாத்தான் சொல்றீங்களா?!”
 
“ஏம்மா? இதெல்லாம் விளையாடுற விஷயமா?”
 
“அதில்லை சீனியர், எந்த யோசனையும் பண்ணாமச் சட்டுன்னுச் சொல்லிட்டீங்களா… அதான்…” அபியின் கருத்துக்கு ஷியாம் பதில் சொல்லவில்லை. அவனும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான்.
 
“அபி… கொஞ்ச நாளாவே என்னோட முடிவுகள் என்னையும் மீறித்தான் எடுக்கப்படுது, என்னையே என்னாலக் கன்ட்ரோல் பண்ண முடியலைன்னு வெச்சுக்கோயேன்.”
 
“புரியுது சீனியர்.”
 
“அன்னைக்கு நான் உங்க வீட்டுக்கு வந்திருக்கக் கூடாது, அப்பிடியே வந்திருந்தாலும் எங்கிட்ட யாரைப் பத்தியும் நீ பேசியிருக்கக் கூடாது.”
 
“சீனியர்… பேபியைப்பத்தி எப்பிடி என்னால உங்ககிட்டப் பேசாம இருக்கமுடியும்? அதுவும் அவ சந்தோஷமா இருந்தா அது வேற விஷயம், அவ இப்பிடிக் காயப்பட்டு நிற்கும்போது நான் எப்பிடி அதை உங்கக்கிட்ட மறைக்கிறது?”
 
“அதனால இப்போக் காயப்பட்டு நிற்கிறது நீதானே அபி.”
 
“நானா? நான் எதுக்குக் காயப்படணும்?” விறைப்பாகப் பேசிய பெண்ணிடம் எழுந்து வந்தான் ஷியாம். 
 
“இந்தக் கண்ணுல எப்பவும் தெரியுற குறும்பையும் தாண்டி இன்னைக்கு மெல்லியதா ஒரு சலனத்தை என்னாலப் பார்க்க முடியுதே, அது ஏன் அபி?” அவன் நிதானமாகக் கேட்டான்.
 
“சீனியர், நீங்க என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கக் கூடாது, சத்தியமா இது காதலில்லை, படிக்கிற காலத்துலேயே இந்த சீனியரை எல்லாருக்கும் புடிக்கும், அதுக்கு நானும் விதிவிலக்கில்லை, ஆனா அப்பவே எம்மனசுல வேற ஒருத்தி இருக்கான்னு அப்பட்டமாக் காட்டின ஆளு நீங்க.”
 
“அது உண்மைதானே அபி?”
 
“ஆமா… அதுக்காகப் பொண்ணுங்க உங்களைத் திரும்பியே பார்க்கலைன்னு நான் பொய் சொல்ல மாட்டேன்.” அவள் வார்த்தைகளில் அவன் புன்னகைத்தான். வலியோடு புன்னகைத்தான்.
 
“பார்க்க வேண்டியவ பார்க்கலையே அபி! அந்த இடத்துல நான் தோர்த்துத்தானே போயிட்டேன்!”
 
“நீங்க அன்னைக்குத் தோர்த்துப் போயிருந்தா இன்னைக்கு எப்பிடி அவ உங்க முன்னாடி வந்து நிற்பா?”
 
“ஓ…”
 
“ஆனா நான் ஒன்னு சொல்லட்டுமா சீனியர்?”
 
“ம்…”
 
“அன்னைக்குப் பொண்ணுங்க உங்களைப் பார்த்த பார்வையில வெறும் வயசுக்கே உண்டான கவர்ச்சி மட்டுந்தான் இருந்துச்சு, ஆனா இன்னைக்கு அப்பிடியில்லை.”
 
“அந்த வயசையெல்லாம் நாம தாண்டிட்டோம் இல்லை அபி?”
 
“கண்டிப்பா! இப்போக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சின்னதா ஒரு சலனத்தை எங்கண்ணுல பார்த்ததாச் சொன்னீங்க இல்லையா? சத்தியமா அது லவ்வில்லை சீனியர், ஒருவேளை… இவ்வளவு நல்ல மனுஷனை மிஸ் பண்ணப் போறோமேங்கிற வருத்தமா இருக்கலாம்.” சொன்னப் பெண்ணை அணைத்துக் கொண்டான் ஷியாம். கல்மிஷமில்லாத தோழமைக் கலந்த அழகான அணைப்பு அது.
 
“ஆனா ஒன்னு சீனியர், நீங்க எடுத்திருக்கிற முடிவுகள் பேபியை எந்த வகையிலயும் காயப்படுத்தக் கூடாது, அவ இதுவரைக்கும் பட்டதெல்லாம் போதும்.”
 
“அபி… புரிஞ்சுக்கோங்க, மனஸ்தாபங்கள் வரும், இல்லைன்னு என்னால அடிச்சுச் சொல்ல முடியாது…” 
 
“அதனாலதான் நானும் சொல்றேன் சீனியர், வேற யாராவது டோனர் பார்க்கலாம், தெரியாதவங்களா…”
 
“நோ!” உச்சஸ்தாயியில் வந்தது அவன் குரல்.
 
“காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கட்டிக்கிட்டுப் போனதெல்லாம் போதும்! அவ எவனை வேணும்னாலும் கல்யாணம் பண்ணியிருக்கட்டும், எனக்கு அதைப்பத்திக் கவலையில்லை, ஆனா என்னோடக் கொழந்தைங்களைப் பெத்துப் போடப்போறது அவதான்னு இந்த இயற்கையே எழுதி வெச்சிருக்கு! அதை மாத்த யாராலயும் முடியாது அபி, அதை மாத்த இனி யாரையும் நான் அனுமதிக்கவும் மாட்டேன்!”
 
“சீனியர்… அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லை, நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம்.”
 
“தேவையில்லைம்மா, எதுக்குக் கல்யாணம் இப்போ?”
 
“சீனியர்… உங்கம்மாவை யோசிச்சுப் பார்த்தீங்களா? உங்கக் கல்யாணத்துல அவங்க ரொம்பவே ஆர்வமா இருக்காங்க, காத்துக்கிட்டு இருக்காங்க.”
 
“ஸோ வாட்? எல்லாரையும் எல்லா நேரத்துலயும் சந்தோஷப்படுத்த முடியாது, ஒரு மகனா அவங்களை இதுவரைக்கும் நான் நிறையவே சந்தோஷப்படுத்திட்டேன், இந்த நிமிஷம் அவளா இல்லை என்னோட அம்மாவான்னுக் கேட்டா, என்னோட பதில் அவள்தான், அதுல எந்த மாற்றமும் இல்லை.” 
 
“அப்போ உங்க லைஃப்?!”
 
“அதைப்பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.”
 
“வாழ்க்கைப் பூரா இப்பிடியே இருக்கப் போறீங்களா?”
 
“நாளைக்கு என்ன நடக்குங்கிறது நம்ம யாருக்குமே தெரியாது, இல்லைன்னு போனவ இந்தளவு நெருங்கி வந்திருக்கா, இன்னும் எந்தளவுக்கு நெருங்கி வர்றான்னு பொறுத்துத்தான் பார்ப்பமே.”
 
“ஒருவேளை நெருங்கலைன்னா?”
 
“இன்னொன்னு பெத்துக்கிறதா இருந்தாலும் அவ உங்கக்கிட்டத்தானே வருவா அபிநய சுந்தரி? அப்போ நீங்க எங்கிட்ட வாங்க மேடம், நான் காத்துக்கிட்டு இருப்பேன்.”
 
“யோவ் சீனியர்! லூசாய்யா நீ?! புடிக்குதோ புடிக்கலையோ, ஒரு வாழ்க்கையை அவ வாழ்ந்துப் பார்த்துட்டா, நீ இன்னும் ஒரு ஆணியையும் புடுங்கலையேய்யா? எதுக்கு சாமியாரா வாழப்போறே?!”
 
“அதுக்காக சம்சாரி ஆகமுடியுமா? அம்மாவுக்காக, ஆணி புடுங்கிறதுக்காகவெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது அபிநய சரஸ்வதி, அதால இன்னொரு பொண்ணோட வாழ்க்கையும் சேர்ந்தில்லைப் பாதிக்கப்படப் போகுது?”
 
“அப்போ கடைசிவரைக்கும் இப்பிடியே இருக்கிறதா ஐடியாவா?”
 
“பார்க்கலாம்மா, வாழ்க்கை எனக்கு இன்னும் எதையெல்லாம் வெச்சிருக்குன்னுப் பொறுமையா வேடிக்கைப் பார்க்கலாம்.”
 
“இதுதான் உங்க உறுதியான முடிவா சீனியர்?” கவலையோடு அவள் கேட்க, கனிவாகச் சிரித்தான் அவன். அந்தப் புன்னகையின் வசீகரத்தைத் தாங்க முடியாமல் அபிநயா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
 
 அதேவேளை அஞ்சனாவின் வீடு தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக மனதுக்குள் இருந்த படபடப்பு நீங்கி எல்லோரும் குதூகலமாக நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஏதோ பார்ப்பவருக்குப் பண்டிகை வீடு போல காட்சியளித்தது அந்த வீடு. ரிப்போர்ட் எப்படி வந்திருந்தாலும் அதை அவர்கள் பொருட்படுத்தியிருக்கப் போவதில்லை. ஆனாலும் தங்கள் பெண்மேல் எந்தக் குறையும் இல்லை என்பது அவர்கள் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது.
 
ரிப்போர்ட் வந்ததும் வராததுமாக லதா இவர்களுக்குத் தகவல் சொல்லிவிட்டார். உடனேயே அபிநயா இங்கு கிளம்பி வந்துவிட்டாள். இது நேரம்வரை இங்கே ஆட்டம் போட்டுவிட்டுத்தான் ஷியாமை பார்க்கக் கிளம்பிப் போயிருந்தாள். அவளைக் கையில் பிடிக்க முடியவில்லை. ஏதோ அஞ்சனாவிற்கு அப்போதே குழந்தைப் பிறந்துவிட்டது போல ஆர்ப்பரித்தாள்.
 
வீட்டின் காலிங் பெல்லை யாரோ அடிக்க வெண்பாதான் கதவைத் திறந்தார். அழையா விருந்தாளி ஒருவர் வாசலில் நின்றிருக்க திகைத்துப் போனார் பெண். இப்போதைக்கு முருகானந்தனின் வருகையை அந்த வீட்டில் யாரும் விரும்பவில்லை. அன்றைக்குத் தன் முடிவுகளை அஞ்சனா வீட்டாரை வைத்துச் சொன்ன அடுத்தநாளே கோவிந்தராஜன் நல்லதொரு லாயரை பார்த்துவிட்டார்.
மகன் கூறிய அறிவுரைகள் எதையும் அவர் காதுகொடுத்துக் கேட்கவில்லை. பார்த்ததோடு மட்டும் நிற்காமல் விவாகரத்து சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இப்போது முருகானந்தன் அதைப்பற்றித்தான் பேச வந்திருக்கிறார் என்று வெண்பாவிற்கு புரிந்துபோனது.
 
“யாரும்மா அது?” கேட்டபடி வந்த கோவிந்தராஜனும் அப்போது அங்கே மகளின் மாமனாரை எதிர்பார்க்கவில்லை. எப்படி இருந்தாலும் வீட்டுக்கு வந்தவரை வரவேற்பது முறை என்பதால் உள்ளே அழைத்தார்கள்.
 
“வாங்க.” அழைத்தவர்களைப் பார்த்துச் சங்கடமாகச் சிரித்தபடி உள்ளே வந்தார் மனிதர். 
 
“உட்காருங்க.” இது வெண்பா.
 
“அஞ்சனா…” உள் நோக்கி வெண்பா குரல் கொடுக்க வெளியே வந்தாள் மகள். வந்தவள் கூட மாமனாரை தங்கள் வீட்டில் எதிர்பார்க்கவில்லை. இது நேரமும் அந்த வீட்டிலிருந்த மகிழ்ச்சியை யாரோ துடைத்துப் போட்டாற் போல இருந்தது. அந்த வீட்டிலிருந்து யார் வந்தாலும் இந்த வீட்டின் மகிழ்ச்சி தொலைந்து போவது வழக்கம் என்பதால் யாரும் எதுவும் பேசவில்லை. 
 
“நல்லா இருக்கியாம்மா?” பெரியவரின் வார்த்தைகளுக்கு அஞ்சனா பதில் சொல்லவில்லை. தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
 
“டாக்டரை பார்க்கப் போனியாம்மா?”
 
“ம்… போனேன் மாமா.”
 
“நல்லது, அந்த வீட்டுல என்னென்னவோ அம்மாவும் மகனும் பேசிக்கிறாங்க, பேச்சு எதுவும் அவ்வளவு நல்லதா எங்காதுல விழலை, எப்பவும் போல உன்னையே குத்தஞ் சொல்றாங்க, நான் பேசினா வீணான சண்டைதான் வரும், அதனாலதான் உன்னைப் பார்க்க வந்தேம்மா.” தன் மருமகள் விவாகரத்து வரைப் போகமாட்டாள் என்ற நம்பிக்கை இருந்ததால் மனைவியையும் மகனையும் குறை கூறிக்கொண்டிருந்தார் மனிதர்.
 
“இல்லை மாமா, விவாகரத்தெங்கிற முடிவெடுத்தது நான்தான்.” தெளிவாக எந்தப் பிசிருமற்ற குரலில் சொன்னது பெண். தன் காதுகளையே நம்ப முடியாதவர் போலத் தன் மருமகளையே பார்த்தார் முருகானந்தன்.
 
“என்னம்மா சொல்றே?!” 
 
“அவ இப்பதான் தெளிவான முடிவெடுத்திருக்கா, எங்க எல்லார்கிட்டயும் அவளோட முடிவைத் தெளிவாச் சொன்னா, எங்களுக்கும் அதுல எந்தத் தப்பும் இருக்கிறதாத் தெரியலை.” 
 
“ஓ…” அதற்கு மேல் முருகானந்தனுக்கு சொல்ல எதுவும் இருக்கவில்லை. எங்கள் பெண் சரியாக முடிவெடுத்திருக்கிறது. அதில் எங்களுக்கும் உடன்பாடுதான். நீ இப்போது வந்து எதுவும் பேசி குட்டையைக் குழப்பாதே என்ற மறைமுக சேதி அதிலிருந்தது.
 
“தப்பா எடுத்துக்காதீங்க, அவங்கப் பையனுக்கு அவங்க இன்னொரு கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி எங்கப் பொண்ணு ஒதுங்கிறதுதான் மரியாதை, அதைத்தான் அவங்களும் எதிர்பார்க்கிறாங்க.” வெண்பா நிதானமாக எடுத்துச் சொன்னார். அதற்கு மேல் என்னப் பேசுவதென்று தெரியாமல் மனிதர் எழுந்துவிட்டார். 
 
“டாக்டரோட ரிப்போர்ட் இன்னைக்குத்தான் வந்துச்சு, எங்கப் பொண்ணுக்கு எந்தக் குறையும் இல்லையாம், அதையும் மறக்காம உங்க வீட்டுல சொல்லிடுங்க.” அந்த வார்த்தைகளில் முருகானந்தனின் கைகள் லேசாக நடுங்கியது. சமாளித்துக் கொண்டவர் மருமகளின் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் பண்ணினார்.
 
“நல்லா இரும்மா.” அதற்குமேல் எதுவும் பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொள்ள வெளியே போய்விட்டார் மனிதர்.
 
“பாவம் இந்த மனுஷன், வாயில்லாப் பூச்சி.” 
 
“இவர் ஒழுங்கா இருந்திருந்தா அந்தம்மாவால இந்த ஆட்டம் ஆட முடியுமா?” அம்மாவும் அப்பாவும் தங்களுக்குள் பேசிய படி உள்ளே போக அஞ்சனா அமைதியாக நின்றிருந்தாள். நினைவடுக்குகளிலிருந்து பலவற்றை அழித்துக் கொண்டிருந்தது பெண்.
 
***
ஒருமாதம் கடந்து போயிருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அஞ்சனாவின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அண்ணி எவ்வளவு வற்புறுத்தியும் இன்னொரு கல்யாணத்துக்குப் பெண் சம்மதிக்கவே இல்லை. அவள் எடுத்த முடிவை எதிர்க்கும் திராணி அந்த வீட்டில் இப்போது யாருக்கும் இல்லை.
 
“இங்கப்பாரு பேபி, உன்னோட ப்ராப்ளம்ஸ் எல்லாத்தையும் முதல்ல க்ளியர் பண்ணு, பண்ணிட்டு அதுக்கப்புறமா ட்ரீட்மெண்ட்டுக்கு வா, மைன்ட் ரொம்பத் தெளிவா எந்த ஸ்ட்ரெஸ்ஸும் இல்லாம இருக்கணும், புரிஞ்சுதா?” அபிநயா தெளிவாக எல்லாவற்றையும் தன் தோழிக்கு விளக்கியிருந்தாள்.
 
“முப்பத்தைஞ்சு வயசுக்கு உட்பட்டவங்களுக்குத்தான் இந்த ட்ரீட்மென்ட் சக்ஸஸ் ஆகிற வாய்ப்பு ஜாஸ்தியா இருக்கு, அதால நீ வொர்ரி பண்ணிக்க எதுவுமேயில்லை, பீ ஹாப்பி!” உற்சாகப்படுத்திய நட்பை ஆசையாக அணைத்துக் கொண்டாள் அஞ்சனா. மனம் ஏதோவொரு இனம்புரியாத மகிழ்ச்சியில் பொங்கித் திளைத்தது. இதுவரைக் காலமும் அவளைச் சூழ இருந்த இறுக்கமான உலகம் மாறிப்போனதாலா, இல்லை… ஐந்து வருடங்கள் ஆசையோடு காத்திருந்த அவள் குழந்தை உருவாகப் போகும் உற்சாகமா, எதுவென்று தெரியவில்லை. ஆகமொத்தத்தில் அஞ்சனா சந்தோஷமாக இருந்தாள்.
 
ஏற்கனவே அவள் அழகை வர்ணிக்க வார்த்தைகளைத் தேட வேண்டும். இப்போதிருக்கும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் அவள் அழகு இன்னும் மெருகேறியிருந்தது.
 
இருவரின் சம்மதத்துடன் விவாகரத்துப் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. அந்த வீட்டிலிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. அன்றைக்கு அவள் மாமனார் வந்து போனதோடு சரி. கழுத்திலிருந்ததைக் கழட்டும் போது மட்டும் பெண்ணின் கைகள் லேசாக நடுங்கியது.
 
“இங்கப்பாரு அஞ்சனா, என்னோட கழுத்துல இருக்கிறதைக் கழட்டும் போது நான் அழுதா அதுல ஒரு நியாயம் இருக்கு, ஏன்னா உங்கண்ணனோட நான் வாழுற வாழ்க்கை அப்பிடி, நீ வாழ்ந்த வாழ்க்கைக்கெல்லாம் இப்பிடித் தயங்கிறது சுத்த வேஸ்ட்.” சொன்ன ரம்யா தயங்கி நின்ற பெண்ணைக் கண்டுகொள்ளாமல் அவள் கழுத்தில் கிடந்ததை உருவியெடுத்து, அழகாகப் பார்சல் பண்ணி அந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். 
 
“இனியாவது நிம்மதியா‌ இரு.” அனைவரும் சொன்ன வார்த்தை இதுவாகத்தான் இருந்தது. 
 
அபிநயா தன் தோழியை முழுதாக அவள் பொறுப்பில் எடுத்துக் கொண்டாள். உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பேணவேண்டி இருந்தது. எந்தச் சஞ்சலமும் இல்லாமல் அமைதியான மனநிலையில் பெண்ணை வைத்திருந்தார்கள். விட்டமின் டீயின் அளவும் தேவையான அளவு பேணப்பட்டது. அத்தோடு அவள் அருந்த வேண்டிய மாத்திரைகள் மருந்துகள் என அனைத்தும் செவ்வனே பேணப்பட்டன. லதாவின் ஆலோசனைகளையும் பெற அபிநயா தவறவில்லை.
 
“சீனியர், நீங்க இதைப் பண்ணுறீங்களா… இல்லை…” ஒரு டாக்டராக இப்போதாவது ஷியாம் உள்ளே நுழைவான் என்று அபிநயா எதிர்பார்த்தாள். ஆனால் அந்த வாய்ப்பையும் அவன் மறுத்தான்.
 
“வேணாம்மா.”
 
“சீனியர், உருவாகப் போறது உங்களோட குழந்தை! நீங்க ஆசையாசையாக் காதலிச்ச அஞ்சுக்கும் உங்களுக்கும் பொறக்கப்போற குழந்தை!” இதைச் சொல்லும்போது அபிநயாவின் உடல் சிலிர்த்தது. தன் உணர்ச்சிகளை வெளியே காட்டப் பிரியப்படாதவன் போல ஷியாம் சில நொடிகள் தன் முகத்தை மூடிக்கொண்டான்.
 
“எனக்கும் அவளுக்கும் பொறக்கப் போற குழந்தைக்காக நான் எவ்வளவோ கற்பனைகள் வெச்சிருந்தேன் அபி, அது இப்பிடித்தான் நிறைவேறணுங்கிறது விதி, ஆனா அதை ஏத்துக்க எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.” 
 
“அடப்போங்க சீனியர்! இந்தக் குழந்தையை இப்பிடிப் பெத்துக்கோங்க, அடுத்ததை நீங்க ஆசைப்பட்ட மாதிரி பெத்துக்கோங்க, இதுக்குப் போய் சும்மா சோக சீன் போட்டுக்கிட்டு.” அவள் சொன்ன வார்த்தைகள் இனிக்க அவன் இப்போது சிரித்தான்.
 
“அன்னைக்குச் சொன்னதுதான் அபி, அவளை ஒரு பேஷன்ட்டா என்னால பார்க்க முடியாது, ஒரு டாக்டரா என்னாலப் பாவமும் செய்ய முடியாது.”
 
“அடப்போய்யா! எப்பப்பாரு கிழவன் மாதிரி டயலாக் அடிச்சிக்கிட்டு.” தனக்குத் தெரிந்த இரண்டு கெட்ட வார்த்தைகளைச் சொல்லிவிட்டுப் பெண் போய்விட்டது. அடுத்த வாரத்திலேயே மருத்துவ ரீதியான செயற்பாடுகள் அனைத்தும் ‘லேப்’ இல் நடந்து முடிந்திருந்தது. கருத்தரிப்பதற்குக் கலங்களுக்குச் சில நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதால் அஞ்சனா பொறுத்திருக்க வேண்டியிருந்தது. மருத்துவ ரீதியான செயற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்றிருக்க அன்றைக்குக் கரு பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டது. 
 
ஆசையாய், அன்பாய், காதலாய் கொஞ்சம் மோகத்தோடு உணரப்பட வேண்டிய பொழுது! அதை ஒருவர் திரையில் விளக்க, கூடவே அபிநயா, லதா என இருவர் செயற்படுத்த… தந்தைப் பெயர் தெரியாத அவள் குழந்தை அவள் கருவில் விதைக்கப்பட்டது. இயற்கை அவளுக்கு விதித்தது இதைத்தான். பெண் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.
 
“அபி…”
 
“சொல்லு பேபி.” அனைத்தும் செவ்வனே முடிந்த நிறைவில் இருந்தாள் அபிநயா.
 
“இதுவரைக்கும் எங்கிட்ட இருந்து நீ ஒத்தக் காசு கூட வாங்கலை, என்னதான் நடக்குது இங்க?”
 
“அடிப்போடி! பெருசாக் காசு குடுக்க வந்துட்டா இவ!”
 
“அபி, விளையாட்டில்லை இது, இதுக்கு எவ்வளவு செலவாகும் ன்னு எனக்குத் தெரியும், என்னப் பண்ணுற நீ?!”
 
“சரி சரி, டென்ஷன் ஆகாதே, நான் பொறுமையா வாங்கிக்கிறேன்.” அபிநயா தலையில் கையை வைத்துக் கொண்டாள். இவள் செலவு அத்தனையையும் ஷியாம் ஏற்றுக்கொண்டான் என்று எப்படி இவளிடம் சொல்வது?! 
 
அடுத்து வந்த இரண்டு வாரங்களை அவர்கள் பொறுமையுடனேயே கழிக்க வேண்டியிருந்தது. கருக்கட்டலை உறுதிப்படுத்தச் சாதாரணமாகச் செய்யப்படும் ப்ரெக்னன்ஸி டெஸ்ட்டே செய்ய வேண்டும். அதையும் செய்துமுடித்த போது அழகான இரண்டு சிவப்புக் கோடுகள் அஞ்சனாவை பார்த்துக் கண்சிமிட்டின. அவளது ஐந்து வருடக் காத்திருப்பு. எத்தனையோ தடவைகள் ஆசையாய், ஆவலாய் இதே சோதனையைச் செய்த போது அவளை ஏமாற்றிய இரு கோடுகள். இன்று முதல்முதலாக அவளை மகிழ்வித்தது.
தோழிகள் இருவரும் ஆரத்தழுவி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். லதாவிற்கு தகவல் போனது. சொல்ல வேண்டியவர்களுக்கும் ரகசியமாகத் தகவல் பரிமாறப்பட்டது.
 
“அபி, இன்னைக்கு நான் உங்கூடவே இருக்கட்டுமா?”
 
“என்ன பேபி கேள்வி இது? எங்கூட எங்க வீட்டுக்கு வர்றியா?” ஆசையாகக் கேட்டது பெண்.
 
“ம்…” அவள் சம்மதம் சொன்னதுதான் தாமதம், அந்தத் தகவலும் எங்கேயோ காற்றில் பறந்து போனது. அஞ்சனாவை அன்றைக்கு முழுவதும் தன் கண்காணிப்பில் வைத்துக் கொண்டாள் அபி. 
 
“கொஞ்ச நேரம் தூங்கி நல்லா ரெஸ்ட் எடு பேபி, இனி நீ எப்பிடி நடந்துக்கணும்னு உனக்கு நான் சொல்லத் தேவையில்லை, கவனமா இருக்கணும்.” தன் ரூமிலேயே அவளைத் தூங்க வைத்தவள் அவள் ஆழ்ந்து தூங்கும் வரைக் காத்திருந்தாள். அறைக்கு வெளியே யாரோ நடமாடும் சத்தம் கேட்கவும் மெதுவாக வெளியே வந்தாள் பெண். ஷியாம்தான் நின்றிருந்தான். 
 
“எங்க?” அவன் குரல் அவனுக்கேக் கேட்கவில்லை. அபிநயா உள்நோக்கி ஜாடைக் காட்டவும் அசையாமல் அப்படியே நின்றிருந்தான் அவன். கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.
 
“சீனியர்…” அபிநயா அவன் கையை வந்து பிடிக்க அது நடுங்கிக் கொண்டிருந்தது. அப்படியே பெண்ணின் காலடியில் முழங்காலிட்டு அமர்ந்தான் ஷியாம்.
 
“சீனியர்! என்னப் பண்ணுறீங்க நீங்க?!” அதிர்ச்சியில் உறைந்தவள் சத்தமின்றி அவனை எச்சரித்தாள். ஷியாம் எதுவுமேப் பேசவில்லை. பிடித்திருந்த அவள் கையை அவனது கண்ணில் சில நொடிகள் வைத்துக் கொண்டான்.
 
“எந்திரிங்க சீனியர், அவ முழிச்சுக்கப் போறா.” அந்த வார்த்தைகளில் தன்னைச் சுதாரித்துக் கொண்டவன் எழுந்து சத்தம் செய்யாமல் அந்த அறைவாசலுக்குப் போனான். அவனைப் பொறுத்தவரை அது சொர்க்க வாசல்! உள்ளே நிர்மலமான முகத்தோடு அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகான அவளின் தரிசனம். ஷியாம் உள்ளுக்குள் பொங்கிச் சிதறிக் கொண்டிருந்தான். அன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் அவன் பார்த்தச் சின்னப் பெண்ணில்லை இவள்! இரட்டை ஜடைப் போட்டுக்கொண்டு உல்லாசமாகத் திரிந்த குமரியில்லை இவள்!
 
அவள் அழகு ஆயிரம் மடங்கு கூடியிருந்தது. கருங்கூந்தல் தலை வைத்திருந்த தலையணையை மறைத்துக் கிடந்தது. ஒன்றிரண்டு ஒற்றை மயிரிழைகள் அவள் காதோரம் கலைந்து கிடந்தன. கருநீல காட்டன் புடவைக் கட்டியிருந்தாள். அவள் தங்க நிறத்திற்கு அந்தப் புடவை அத்தனை எடுப்பாக இருந்தது. ஊடுருவிய அவன் பார்வையை உறக்கத்தில் அவள் உணர்ந்திருப்பாள் போலும்! லேசாக அசைந்தாள். கால்களை மூடியிருந்த அவள் சேலை இப்போது லேசாக விலக மெல்லிய கொலுசொன்று தலைகாட்டியது. முகத்தில் புன்னகை உறைய அணுஅணுவாய் அவளை ரசித்தவன் பார்வை இப்போது அவள் வயிற்றில் வந்து நின்றது.
 
காதல் மட்டும்தான் அவன் செய்தான்! கட்டி அணைக்கவில்லை! கரும்பு முத்தம் சிந்தவில்லை! கட்டில் பாடம் கூடப் படிக்கவில்லை. ஆனால் இன்று தொட்டில் வரை வந்திருக்கிறார்கள்! அதற்கு மேலும் அங்கே நிற்காமல் வெளியே வந்தவன் அபியிடம் சொல்லிக் கொள்ளாமலேயே போய்விட்டான்.