siraku08

siraku cp-b322359e

சிகு 08

இந்த ஒன்றரை மாதத்தில் அந்த வீட்டிற்குச் சமையல் வேலைக்கென்று இரண்டு பெண்கள் வந்து போய்விட்டார்கள். அவர்கள் இருவருக்கும் மதிவதனியை பிடிக்கவில்லை. அவர்கள் ஒன்றும் அந்த வீட்டு மருமகள் இல்லையே! எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு மாமியாருக்குச் சேவகம் செய்ய?! அந்த வீட்டில் கொடுக்கும் பணத்தைச் துச்சமென மதித்துத் தூரப் போய்விட்டார்கள்.
 
“இங்கப்பாருங்கய்யா! வீட்டு வேலைக்குத்தான் வர்றோம், அதுக்காக உங்க வீட்டம்மா பண்ணுற கூத்தையெல்லாம் எங்களால பொறுத்துக்க முடியாது! எவ வேலை பார்ப்பா இந்த வீட்டுல?” அந்தப் பெண்களின் வார்த்தைகளில் முருகானந்தன் சலித்துப் போனார்.
 
“ஏன் வதனி? அதான் அவங்க வேலையை அவங்க கரெக்டா பண்ணுறாங்க இல்லை? எதுக்குத் தேவையில்லாம நீ மூக்கை நுழைக்கிறே?” இப்படிக் கேட்டுவிட்டு அந்த மனிதர் மனைவியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டதுதான் மிச்சம். மனைவியின் தன்மையை நன்கு அறிந்தவர் என்பதால் அதற்கு மேல் அவரும் எதுவும் பேசவில்லை. வெளியூரிலிருந்து வந்த மகனிடம் அன்று புலம்பித் தீர்த்தார் மதிவதனி.
 
“தருண், வீட்டு வேலை செய்றது கொஞ்சம் கஷ்டமா இருக்குப்பா அம்மாக்கு.” இராப்போஜனத்துக்காக மூன்று பேரும் டைனிங் டேபிளில் கூடி இருந்தார்கள்.
 
“எதுக்கும்மா நீங்க வேலை பார்க்கிறீங்க? அதுக்குத்தான் ஆள் வர்றாங்க இல்லை?” நிதானமாக உண்டபடி கேட்டான் மகன்.
 
“ஆமா வர்றாளுங்க! குடுக்கிற காசுக்கு இங்க யாரும் ஒழுங்கா வேலை பார்க்கிறதில்லை.” நொடித்துக் கொண்டார் மதிவதனி.
 
“ஏம் ப்பா? சும்மாதானே வீட்டுல இருக்கீங்க? இதையெல்லாம் என்னன்னு பார்க்கமாட்டீங்களா?”
 
“நானாப்பா? எங்கிட்டயாப்பா சொல்றே?”
 
“ஆமா, நான் எத்தனை வேலைன்னுதான் பார்க்கிறது? வீட்டுக்குள்ள நடக்கிற விஷயங்களையாவது நீங்க என்னன்னுப் பார்க்கலாமில்லை?”
 
“பார்க்கலாந்தான்… வேலைக்கு வர்ற பொண்ணுங்க உங்கம்மாவோட அட்டகாசத்தைத் தாங்க முடியாம வெளியே போயிடுறாங்க, உங்கம்மாவை எதிர்த்துப் பேசிட்டு நான் எங்கேன்னு போவேன் தருண்?”
 
“இந்த மனுஷனோட குசும்பைப் பார்த்தியா? நல்லா மூனு வேளையும் கொட்டிக்கிறாரில்லை? அந்தக் கொழுப்பு, பேசத்தான் செய்யும்!” மதிவதனி கணவரைப் பார்த்த பார்வையில் நெருப்புப் பறந்தது.
 
“அம்மா ப்ளீஸ்… என்னைக் கொஞ்சம் நிம்மதியாச் சாப்பிட விடுங்க.” 
 
“சரிப்பா, இந்த மனுஷனோட கதையை நீ கண்டுக்காத, தருண்… நான் உங்கிட்டப் பேச வந்த விஷயமே வேற.”
 
“என்னம்மா?”
 
“ரெண்டு மூனு ஜாதகம் வந்திருக்கு, அதுல ஒன்னை உனக்குப் பார்க்கலாம்னு அம்மா நினைக்கிறேன்.” மனைவியின் பேச்சில் முருகானந்தன் திடுக்கிட்டுப் போனார். இந்த வீட்டிலிருந்த ஒரு பெண் இங்கிருந்து போய் முழுதாக இரண்டு மாதங்கள் ஆகவில்லை. அதற்குள் மகனுக்கு இன்னொரு கல்யாணமா?! ஓர் எதிர்பார்ப்போடு மகனைப் பார்த்தார் அப்பா. ஆனால் அவர் நம்பிக்கையைத் தவிடு பொடியாக்கினான் தருண்.
 
“உங்க இஷ்டம் போலச் செய்யுங்கம்மா.”
 
“அது சரிதான் ப்பா, ஆனா… பொண்ணு வீட்டுல ஒரு விஷயம் சொல்றாங்க.”
 
“என்னது?” 
 
“முதல் கல்யாணத்து…”
 
“அதுக்கென்ன இப்போ?!” தருணின் குரலில் அவ்வளவு ஆத்திரம். தன் தாயை முழுதாக அவன் பேசக்கூட விடவில்லை.
 
“இல்லைப்பா, அதுல ஒன்னும் அவங்களுக்குப் பிரச்சினை இல்லை, ஆனா…”
 
“ஆனா என்ன?” இதுவரையில் மனவேதனையோடு சாப்பாட்டை பிசைந்து கொண்டிருந்த முருகானந்தன் தனது மனைவியைக் கூர்ந்து பார்த்தார்.
 
‘இவ என்னைக்குமே பேச இப்பிடித் தயங்கினதில்லையே?! இன்னைக்கு எதுக்குப் பம்முறா?!’ 
 
“இல்லைப்பா… முதல் கல்யாணத்துல குழந்தைங்க இல்லைங்கிறதால… மெடிக்கல் ரிப்போர்ட்…”
 
“என்னது?! மெடிக்கல் ரிப்போர்ட்டா?!” என்னவோ அருவருப்பான விஷயமொன்றைக் கேட்டுவிட்டது போல முகத்தைச் சுருக்கினான் மகன்.
 
“ஆமாப்பா, நானும் கொஞ்சம் எடுத்துச் சொன்னேன், எங்கப் பையன் மேல எந்தக் குறையுமில்லை, வந்த மகராசி பெத்துப் போடாததுக்கு நாங்க என்னப் பண்ணுறதுன்னு.” சலித்துக்கொண்டார் மதிவதனி.
 
“இந்த இடம் வேணாம், நீங்க வேற இடம் பாருங்க.” சட்டென்று தீர்வு சொன்ன மகனை ஒரு ஜடத்தைப் பார்ப்பது போலப் பார்த்தார் முருகானந்தன். இவனெல்லாம் என்ன மனிதன் என்ற உணர்வு உள்ளத்தில் உதித்தது.
 
“இல்லைப்பா… பொருந்தி வந்திருக்கிற மூனு ஜாதகமும் சொல்லிவெச்சமாதிரி இதையேதான் சொல்றாங்க.” 
 
“என்னன்னு?”
 
“ரெண்டாங் கல்யாணம் எங்கிறது கூட அவங்களுக்கு வருத்தமில்லையாம், ஆனா ஒரு ரிப்போர்ட்டை எடுத்துக் குடுத்திடுங்க, கண்ணை மூடிக்கிட்டுப் பொண்ணை உங்க வீட்டுக்கு அனுப்புறோம்னு சொல்றாங்க.”
 
“இதைத்தானேப்பா அன்னைக்கு நான் உங்கிட்டச் சொன்னேன், மருமகளோட சேர்ந்து நீயும் ஒரு நடை ஹாஸ்பிடலுக்கு போன்னு, போயிருந்திருந்தா அந்தப் பொண்ணு இந்நேரம் இங்கேயே இருந்திருக்குமில்லை?”
 
“இங்க இருந்து என்னப் பண்ண? மூனு வேளையும் உங்களைப் போலக் கொட்டிக்கிறதுக்கா? இங்க இருந்தா அவ பெத்துக் குடுக்கணும், அதுதான் அவளால முடியாமப் போச்சே.” வருத்தப்பட்ட கணவன் மேல் பாய்ந்தார் மதிவதனி.
 
“அதென்ன வார்த்தைச் சொன்னீங்க? மருமகளா? யாரு யாருக்கு மருமகள்? அதான் எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு சட்டப்படி கையெழுத்துப் போட்டாச்சில்லை, இன்னும் எண்ணி மூனே மாசந்தான், ஜாதகம் அனுப்பியிருக்கிற எல்லா வீட்டுலயும் சொல்லிட்டேன், இன்னும் மூனு மாசத்துல எம் மகனைப் புடிச்ச தரித்திரம் தொலைஞ்சு போயிரும்னு.” 
 
“வதனி, உனக்கொன்னு சொல்லட்டுமா?” கேட்ட மனிதரை மனைவி மட்டுமல்ல, மகனுமே இப்போது திரும்பிப் பார்த்தான். தருணுக்கு அப்பாவின் பேச்சில் சந்தேகம் உருவானது.
 
“அஞ்சனாவை பத்தி எது சொல்றதா இருந்தாலும் எங்கிட்டச் சொல்லுங்கப்பா.” என்றான்.
 
“பரவாயில்லையே! உனக்கு இப்பவாவது பொண்டாட்டி மேல அக்கறை வந்திருக்கே?! ஹாஸ்பிடல்ல அந்தப் பொண்ணுக்கு எந்தக் குறையும் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம்.” இந்த நொடி அந்த வீட்டின் கடிகார ஒலி மட்டுமே அங்கிருந்த மூன்று பேருக்கும் கேட்டது. மதிவதனி கொஞ்சம் அதிர்ந்தாற் போலத் தெரிந்தார்.
 
“உங்களுக்கு யாருப்பா சொன்னாங்க?”
 
“அவங்களே சொன்னாங்க தருண்.”
 
“எப்போ?”
 
“டைவர்ஸ் நோட்டீஸ் வந்தப்ப என்னால நம்பமுடியலை, அஞ்சனா இப்பிடிப் பண்ணியிருக்க மாட்டான்னு நான் நிச்சயமா நம்பினேன், அதால அவங்க வீட்டுக்குப் போயிருந்தேன், அப்பதான் சொன்னாங்க.”
 
“யாரு சொன்னா? அவளோட கூடத் திரிஞ்சாளே, அந்த டாக்டர் சொன்னாளா? இதையெல்லாம் ஒரு கதைன்னு நம்பிக்கிட்டு நீங்க இங்க வந்துப் பேசுறீங்க! வேலிக்கு ஓணான் சாட்சியா? அந்த டாக்டர் இவளுக்குப் போலி ரிப்போர்ட் குடுத்திருப்பா, உலகத்தை ஏமாத்தணுமில்லை, அப்பதானே ஜாம் ஜாமுன்னு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்!”
 
“ஏன்? உன்னோட பையனுந்தான் இன்னொரு கல்யாணத்துக்கு ரெடியாகிட்டான், அவன் ரெடியானானோ இல்லையோ, நீ ரெடியாக்கிட்டே! அந்தப் பொண்ணு மட்டும் பண்ணிக்கக் கூடாதா?”
 
“ஓஹோ! விட்டா நீங்களே மாப்பிள்ளைப் பார்த்துக் குடுப்பீங்கப் போல இருக்கு! ஏன் செய்ய மாட்டீங்க? ஓசியில உட்கார்ந்து திங்கிறது செரிக்கணுமில்லை?”
 
“ஆமாண்டி! ஓசியிலதான் உட்கார்ந்து திங்கிறேன்! ரோட்டுல போறவன் போடுற சோத்தையா திங்கிறேன்? இல்லையே? எம் புள்ளைப் போடுறதைத்தானே திங்கிறேன்! உனக்கெதுக்கு வலிக்குது அதுக்கு?! உன்னைப்போல ஒரு பொம்பளையோட வாழ்ந்ததுக்குப் பின்னாடியும் அந்தப் பொண்ணுக்கு இன்னொரு கல்யாண ஆசை வரும்னு நீ நினைக்கிறே?!” மேசையில் இருந்ததை விசிறியடித்துவிட்டுக் கோபத்தோடு கத்திய அப்பாவை ஆச்சரியமாகப் பார்த்தான் தருண். இது போன்ற தருணங்கள் அவன் வீட்டில் நடப்பது வெகு வெகு அபூர்வம். முருகானந்தன் எப்போதுமே மனைவியின் பேச்சை மீறாத கணவன்தான். அம்மாவை எதிர்த்து அவர் ஒரு வார்த்தை சொன்னதில்லை. ஆனால் இன்று அது மாறியிருக்கிறது.
 
அம்மாவோடு வாழ்ந்ததால் அஞ்சனாவிற்கு‌ கல்யாண ஆசை இல்லாமல் போனதா? இது அம்மாவிற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகளா? இல்லை… தனக்கான வார்த்தைகளா?! காலம் கடந்த சிந்தனைதான். இருந்தாலும் தருணை போன்ற ஆண்கள் சிந்திப்பதே பெரிய விஷயம்தானே?!
 
***
அஞ்சனா அந்த ரெஸ்டாரன்ட்டின் சொகுசான இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். முகமெல்லாம் புன்னகைப் பூக்களை விதைத்துவிட்டாற் போல இருந்தது. வீட்டிலேயே அடைந்து கிடப்பது கொஞ்சம் சிரமமாக இருந்ததால் இன்றைக்கு வெளியே வந்திருந்தாள். கூடவே அபிநயாவும் வந்திருந்தாள். வெண்பா தன் மகளை அங்கே இங்கே நகரவிடவில்லை. கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டார். இன்னொரு திருமணம் செய்துகொள்ளாமல் மகள் இப்படியொரு முடிவெடுத்ததில் அம்மாவிற்கு லேசான வருத்தம்தான். ஆனால் அதை மகளிடம் காட்டிக்கொள்ளவில்லை.
 
“இங்கப்பாருங்கத்தை, எனக்கும் அஞ்சு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைதான், ஆனா அவ அது முடியாதுன்னு சொல்லும்போது நாம என்னதான் பண்ணுறது?”
 
“அக்கம் பக்கத்துல ஏதாவது பேசிடுவாங்களோன்னுதான் எனக்குப் பயமா இருக்கு ரம்யா.”
 
“இந்த அஞ்சு வருஷத்துல பேசாததையா இப்போப் பேசிடப் போறாங்கத்தை? இதுக்குப் போய் எதுக்கு இப்பிடி வருத்தப்படுறீங்க?”
 
“எம் பொண்ணு வாழ்க்கையைப் பார்த்தியா ரம்யா? அந்தப் பாவிங்களால இன்னைக்கு இவ இப்பிடி ஒத்தையா நிற்கிறாளே!” வெண்பா கண்கலங்கினார்.
 
“என்னப் பேச்சுப் பேசுற வெண்பா? எதுக்கு எம் பொண்ணு ஒத்தையா நிற்கணும்? ஏன்? நாமெல்லாம் என்ன செத்தாப் போயிட்டோம்?” கோபப்பட்டார் கோவிந்தராஜன்.
 
“அப்பிடியில்லைங்க, எத்தனை உறவுகள் கூட நின்னாலும் ஒரு பொண்ணுக்குப் புருஷன் மாதிரி வருமா?”
 
“மண்ணாங்கட்டி! இப்பிடி நாமெல்லாம் நினைக்கிறதாலதான் அவனை மாதிரி வெட்டிப் பயலுங்க எல்லாம் இந்த ஆட்டம் ஆடுறானுங்க! இருபத்தைஞ்சு வருஷம் அவனில்லாம நம்மக்கூட நல்லாத்தானே வாழ்ந்தா? அதுமாதிரி இனியும் நல்லாத்தான் இருப்பா, நீ வீணா மனசை வருத்திக்காத.” அன்றைக்கொரு நாள் மாமனார் மாமியாரோடு ரம்யா வெளியே வந்திருந்த போதுதான் இந்த உரையாடல் நடந்தது.
 
“போனதெல்லாம் போகட்டும் அத்தை, இனி அஞ்சனாவை நாம நல்லாப் பார்த்துக்கலாம், எந்தக் குறையுமில்லாமப் பார்த்துக்கலாம்.” சொன்னதோடு நிறுத்தாமல் தனது நாத்தனாரை நன்றாகப் பார்த்துக் கொண்டாள் ரம்யா.
 
“கவனமா இருக்க வேண்டியதுதான், அதுக்காக இப்பிடியே வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்கத் தேவையில்லை அஞ்சு, கொஞ்சம் ஃப்ரெஷ் ஏர்ல வெளியே போய்ட்டு வா.” 
 
“சரிங்கண்ணி.” அண்ணி சொல்வதும் சரியென்று தோன்ற இன்று கிளம்பியிருந்தாள். ஐந்து வருடங்கள் அனுபவித்த மனவேதனை, கடந்த சில வாரங்கள் அனுபவித்த உடல் வேதனை எல்லாவற்றையும் யாரோ நீரூற்றிக் கழுவிவிட்டாற் போல அவள் முகம் பளீரிட்டது.
 
“இந்தா, இது எல்லாத்தையும் இன்னைக்கு நீதான் சாப்பிட்டு முடிக்கணும்.” கையில் வைத்திருந்த பென்னம்பெரிய ட்ரேயை மேசையில் வைத்தாள் அபிநயா. நான்கைந்து ஐட்டங்களை ஆர்டர் பண்ணி வாங்கி வந்திருந்தாள்.
 
“இவ்வளவையும் என்னால சாப்பிட முடியாது அபி.”
 
“அடிப்பின்னிடுவேன், ஒழுங்காச் சாப்பிடு, உங்கம்மா நீ ஒன்னுமே சாப்பிட மாட்டேங்கிறேன்னு ஒப்பாரி வெக்கிறாங்க.”
 
“அவங்களுக்கு வேற வேலையில்லை.” சலித்துக் கொண்டாலும் அஞ்சனாவின் குரலில் பெருமை வழிந்தது. வயிற்றை லேசாகத் தடவிக் கொ‌டுத்தாள்.
 
“அபி…”
 
“ம்…”
 
“பொண்ணு பொறக்குமா பையன் பொறக்குமா?”
 
“ரெண்டும் பொறக்கும்.”
 
“அப்பிடியா?! சும்மா புளுகாதே.”
 
“உண்மையாத்தான் சொல்றேன், நிறையப் பேருக்கு இந்த மெத்தட்ல ரெட்டைக் குழந்தைங்க பொறக்குது பேபி, அநேகமா உனக்கும் அப்பிடித்தான் பொறக்கும்னு எனக்குத் தோணுது.” நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். அஞ்சனாவிற்கு இது இப்போது மிகவும் அவசியம் என்று தோன்றியது டாக்டருக்கு.
 
“ஹைய்யோ! அப்பிடி நடந்தா சூப்பரா இருக்குமில்லை அபி!”
 
“அடுத்த வாரம் உன்னோட ஃபர்ஸ்ட் ஸ்கேன் இருக்கில்லை பேபி?”
 
“ம்… ஆமா, எல்லாம் நார்மலா இருக்குமில்லை அபி?”
 
“கண்டிப்பா! நீ எதை நினைச்சும் வருத்தப்படக் கூடாது, அஞ்சும்மா… முப்பத்தைஞ்சு வயசுக்கு உட்பட்டவங்களுக்குத்தான் இந்த மெத்தட்ல குழந்தைப் பெத்துக்கிறதுக்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கு, உனக்கு இப்பத்தானே தெர்ட்டி, ஏன் வொர்ரி பண்ணிக்கிறே?”
 
“இல்லை அபி, எத்தனையோ தடவை ட்ரை பண்ணியும் சக்ஸஸ் ஆகாதவங்க நிறையப் பேரு இருக்காங்கன்னு அன்னைக்கு ஒரு ஆர்ட்டிக்கள்ல படிச்சேன்.”
 
“இருக்காங்கதான், இல்லேங்கலை… அதையெல்லாம் நீ எதுக்கு யோசிக்கிறே? நல்லதை மட்டும் நினை, அதுவே உனக்கு நடக்கும், இப்போ நடக்கலையா?” கேட்டவளின் கையை எடுத்து அதில் முத்தம் வைத்தாள் அஞ்சனா.
 
“அடடடடா! கிஸ் எல்லாம் பண்ணுறாளே! படிக்கிற காலத்துல எத்தனைப் பசங்க இந்த ஒரு முத்தத்துக்காகத் தவம் கிடந்தாங்க!” டாக்டர் சொல்ல இரண்டு பெண்களுமே சிரித்தார்கள்.
 
“ஸ்கூல் டேய்ஸ் உனக்கு ஞாபகம் இருக்கா அபி?” அஞ்சனாவின் கேள்வியில் அபிநயாவின் கண்கள் மின்னின. இவள் எதையோ பேசுமுன்பாக இப்போது மீண்டும் அஞ்சனாவே பேசினாள்.
 
“அபி, நான் மறந்தே போய்ட்டேன், நீ இன்னமும் எங்கிட்ட இருந்து பணம் வாங்கிக்கலையே?”
 
“ஐயையோ! நீ எதுக்கு இப்போ அதையே திரும்பத் திரும்ப நோண்டுறே? கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?”
 
“விளையாடாத அபி, ப்ளீஸ்…”
 
“சரி சரி, அக்கௌன்ட் நம்பர் குடுக்கிறேன், அதுல உம் பணத்தைக் கொண்டு வந்து கொட்டு.” 
 
“அபி… எங் குழந்தைப் பார்க்க எப்பிடி இருக்கும்?” வயிற்றைத் தடவியபடி கண்களில் கனவுகள் மிதக்க மீண்டும் கேட்டாள் அந்த இளம் தாய். இது தன் முதல் குழந்தையைச் சுமக்கும் எல்லாத் தாய்மார்களினதும் எண்ணப் போக்கு. ஆசையாசையாய் தங்கள் மனக்கண்ணில் பிறக்கவிருக்கும் குழந்தையைக் கற்பனை செய்து பார்ப்பார்கள்.
 
“பார்க்க எப்பிடி இருக்கும்னா… ம்… உன்னைப் போலதான் இருக்கும், சிவப்பா, பெரிய கண்ணோட, அழகா…” 
 
“அபி… நான் ஒன்னு கேட்கட்டுமா?” 
 
“கேளு பேபி.”
 
“தப்புத்தான்… நான் இப்பிடிக் கேட்கக்கூடாதுதான்… எனக்கும் புரியுது… ஆனா…”
 
“எதுக்கு இப்போ இப்பிடித் தயங்கிற? அதுவும் எங்கிட்ட? அப்பிடி என்னத்தைத்தான் எங்கிட்டக் கேட்கப்போறே பேபி?” அபிநயா ஆச்சரியப்பட்டபடி சிரித்தாள்.
 
“அபி… குழந்தை என்னைப் போல மட்டும் இருக்காதில்லை? ரெண்டு மூனு நாளாச் சின்னதா ஒரு ஆசை, இல்லையில்லை… இது சின்ன ஆசையில்லை, பேராசைதான், ஆனா… எனக்குள்ள வர்ற இந்த ஆர்வத்தை என்னாலத் தடுக்க முடியலை அபி.” 
 
“சொல்ல நினைக்கிறதைத் தெளிவாச் சொல்லு.” வரப்போவது என்னவென்று டாக்டருக்கும் லேசாகப் புரிந்தது. 
 
“அபி, என்னை நீ தப்பா நினைக்கக் கூடாது, ஒரு ஃப்ரெண்ட்டா நீ எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கே… எனக்கும் அதெல்லாம் நல்லாப் புரியுது, ஒரு சின்சியரான டாக்டர்கிட்ட இதை நான் கேட்கக்கூடாதுதான்… அதுவும் எனக்குத் தெரியுது… ஆனாலும்…”
 
“அம்மா தாயே! இப்ப உன்னோட பிரச்சினை என்ன? எதுக்கு இப்பிடி என்னோட தலையை உருட்டுற?” தோழி சொல்ல வருவது என்னவென்று புரிந்த போதும் தனது நடிப்பாற்றலை அவளிடம் காட்டினாள் அபிநயா.
 
“டோனர் யாரு அபி? எப்பிடி இருப்பாங்க? குணமானவங்களா? நல்ல மனுஷனா? தெரிஞ்சுக்கிட்டியா… இல்லை…”
 
“பேபி, உனக்கு இப்ப என்ன வேணும்?”
 
“இப்பிடிக் கேட்கிறது தப்புத்தான், சாரி… சாரி அபி.”
 
“தப்புன்னு யாரு சொன்னா? எந்த உலகத்துல வாழுற நீ? மெடிக்கல் ஃபீல்ட் இன்னைக்கு எவ்வளவோ முன்னேறியிருக்கு, நீ எதுக்கு இன்னமும் பழைய கிழவிங்க மாதிரிப் பேசிக்கிட்டு இருக்கே?”
 
“அபி… நீ என்ன சொல்றே? எனக்குப் புரியலை?!”
 
“பேபி, இதுல ரெண்டு வகை இருக்கு, ஒன்னு யாருன்னே தெரியாதவங்க டொனேட் பண்ணுவாங்க, அனானிமஸ் டானர்னு சொல்லுவோம், அவங்களைப் பத்தின எந்தத் தகவலும் வெளியே போகக்கூடாது.”
 
“ஓ…”
 
“இன்னொரு வகை இருக்கு, இதுல நமக்குத் தெரிஞ்சவங்களே டொனேட் பண்ணுவாங்க, இதுக்காக இப்போ நிறைய வெப்சைட்ஸ் இருக்கு, அங்க அவங்க ரெஜிஸ்டர் பண்ணியிருப்பாங்க, அவங்க யாரு, என்ன, ஏதுன்னு விசாரிச்சுட்டே இதுல நாம இறங்கலாம், உனக்கு இப்போ பண்ணினது இந்த ரெண்டாவது வகைதான்.”
 
“இதால… நாளைக்குக் குழந்தைப் பொறந்ததுக்கு அப்புறமா எந்தப் பிரச்சினையும் வராதே?”
 
“ம்ஹூம்… அதெல்லாம் ஒன்னும் வராது, மத்தவங்களுக்கு வருதோ இல்லையோ, உனக்குக் கண்டிப்பா வராது.” அபி இப்போது லேசாகச் சிரிக்க அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் அஞ்சனா.
 
“ஏன் அப்பிடிச் சொல்றே?”
 
“ஏன்னா… உனக்கு டொனேட் பண்ணினவரு அப்பிடி… உனக்குக் குடுக்கணும்னு ஆசைப்பட்டுக் குடுத்திருக்காரு.”
 
“யா… யாரு… யா…ரு அபி…” 
 
“பார்த்தியா, நீ இப்போ டென்ஷன் ஆகிறே, உனக்கு இது நல்லதில்லைன்னு உனக்கேத் தெரியும்.”
 
“இல்லையில்லை… இது டென்ஷனில்லை அபி, ஒரு ஆர்வம், ப்ளீஸ் அபி… சொல்லு, யாரு அபி? உனக்குத் தெரிஞ்சவங்களா?”
 
“உனக்குமே தெரிஞ்சவங்கதான்.”
 
“எனக்குத் தெரிஞ்சவங்களா? யாரு?! ப்ளீஸ் சொல்லேன்?”
 
“சொல்றேன், சொல்லாம எங்க போகப் போறேன்? அதுக்கு முன்னாடி நீ இதையெல்லாம் சாப்பிட்டு முடி, நான் ஒரு ஃபோன் பண்ணிட்டு வந்தர்றேன்.”
 
“யாருக்கு?!”
 
“அடியேய்! சாப்பிடுடீ முதல்ல.” விளையாட்டாக நண்பியை மிரட்டியவள் அலைபேசியை எடுத்துக்கொண்டு அப்பால் போனாள்.
 
“சீனியர்.” இவள் அழைத்த உடனேயே லைனுக்கு வந்துவிட்டான் ஷியாம்.
 
“சொல்லுங்க அபி.”
 
“பேபி உங்களைப் பார்க்கணுமாம்.”
 
“…”
 
“போச்சுடா! சீனியர்! லைன்ல இருக்கீங்களா?”
 
“ம்… இருக்கேன், என்னைப் பார்க்கணும்னு சொன்னாளா, இல்லை டோனரை பார்க்கணும்னு சொன்னாளா?” இது அவனது வருத்தம்.
 
“அட ஆண்டவா! நீங்க சீன்ல இருக்கீங்கன்னே அவளுக்கு இன்னமும் தெரியாது, இதுல உங்களுக்கு அவ ஊரு, பேரு, அட்ரஸ் எல்லாம் சொல்லி உங்களை விசாரிக்கணுமா? கிளம்பி வாங்க சீனியர்.”
 
“டியூட்டில இருக்கேன் அபி.”
 
“யோவ்! ஒரு பத்து நிமிஷந்தான், பக்கத்துலதான் இருக்கோம், கிளம்பி வாய்யா! என்னமோ அந்த ஹாஸ்பிடலே இவரோட தோள்லதான் நிற்கிற மாதிரிப் பெரிய நினைப்பு.” வசை மொழிகளோடு அவள் இணைப்பைத் துண்டிக்க ஒரு சிரிப்போடு எழுந்தான் ஷியாம். டியூட்டிக்கு இன்னொரு டாக்டரை அமர்த்திவிட்டு அந்த ப்ளாக் ஆடியை உயிர்ப்பித்தான். மனம் துள்ளிக் குதித்தது. கை தானாக ரேடியோவை ஆன் பண்ண அதில் பழைய பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. 
 
“அன்புள்ள அத்தான் வணக்கம்! உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்!” பாடலைக் கேட்ட ஷியாம் வாய்விட்டுச் சிரித்தான்.
 
“மயக்கத்துலதான் இருக்கா சுசீலாம்மா, ஆனா‌ இது மசக்கைல வந்த மயக்கம், என்னைப் பார்த்த மயக்கமில்லை.” பாடிக்கொண்டிருந்த பாடகியிடம் இவன் பேசிக் கொண்டிருந்தான். அபி சொன்ன இடத்திற்கு வந்தவன் காரை நிறுத்தினான். கண்ணாடித் தடுப்பிற்குப் பின்னால் பெண்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அபி எப்போதும் போல டெனிம், குர்தா அணிந்திருந்தாள். இவள் அரக்கு நிறத்தில் புடவைக் கட்டியிருந்தாள். அன்றைக்கும் அவள் சேலைக் கட்டியிருந்தது அவன் ஞாபகத்திற்கு வந்தது. 
 
“அம்மணிக்குப் புடவை கட்டப் பிடிக்குமோ? ஆனா அதுவும் அவளுக்கு நல்லாத்தான் இருக்கு, அதுசரி, அந்த வெள்ளை யூனிஃபார்ம்லயே அன்னைக்கு அவ தேவதை மாதிரித்தான் இருந்தா, கலர்கலரா உடுத்தும் போது கண்ணைப் பறிக்கமாட்டாளா என்ன?” அந்த மருத்துவன் பித்தன் போலத் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தான். ப்ளாக் ஆடி வந்து நின்றதை அபிநயா கவனித்தாள். ஆனாலும் வாய்திறக்கவில்லை. ஷியாம் ரெஸ்டாரன்ட்டின் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருவது அபிக்கு பக்கவாட்டில் தெரிந்தது. தோழியோடு பேசிக்கொண்டிருந்த அபிநயா இப்போது வேண்டுமென்றே கதவை நோக்கித் திரும்பிப் பார்த்தாள். இயல்பாக அஞ்சனாவின் பார்வையும் கதவை நோக்கிப் பாய்ந்தது. 
 
இதுவரை நேரமும் லேசாக நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்த பெண் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தது. அபி தன் தோழியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த ஷியாமின் பார்வையும் பெண்ணை விட்டு அகலவில்லை. அவளைப் பார்த்தபடியே நடந்து வந்துகொண்டிருந்தான். பார்வைகள் இரண்டும் மோதிக்கொண்டன. அஞ்சனா தன்னையறியாமலேயே இப்போது எழுந்து நின்றாள். கண்கள் லேசாகக் கலங்கியிருந்ததோ?!