siraku09

siraku cp-b2d35d7a

சிகு 09

சர்வாங்கமும் நடுங்க அப்படியே எழுந்து நின்றுவிட்டாள் அஞ்சனா. அவனைப் பார்த்த மாத்திரத்தில் கண்களில் லேசான ஈரம். சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு அவனை அவள் பார்த்திருக்கிறாள். சொந்தத்தில் ஒருவருக்கு உடம்பிற்கு முடியாமல் போக அவரைப் பார்ப்பதற்காக அம்மாவோடு ஹாஸ்பிடல் வரைப் போயிருந்தாள். நீண்டகால இடைவெளிக்குப் பிறகு அன்றுதான் அவனை முதல்முதலாக அவள் பார்த்தது. அப்போதுகூட அவன் இவளைப் பார்க்கவில்லை. பக்கத்தில் யாரோ ஒரு இளம்பெண் அமர்ந்திருக்க இவன் காரை ஓட்டிக்கொண்டு போனான். மனைவியாக இருக்கும் என்று இவள் அப்போது நினைத்திருந்தாள்.
 
“பேபி…” அபிநயாவின் குரலில் அவளைத் திரும்பிப் பார்த்தது பெண். அஞ்சனாவின் பார்வை கேட்ட கேள்விக்கு அபியின் பதில் ஆமென்பதாக இருந்தது.
 
“ஏன் அபி?” குரல் நடுங்க இவள் கேட்டுக் கொண்டிருக்கும் போது அவன் இவர்களை நெருங்கியிருந்தான்.
 
“ஹாய் அபி…” அவளுக்கு மாத்திரம் ஹாய் சொன்னவன் அஞ்சனாவிடம் எதுவும் பேசவில்லை. மாறாக அவன் கண்கள் அவளை அங்குலம் அங்குலமாக அளவெடுத்தது. 
 
“எப்பிடியிருக்க அஞ்சனா?” அந்தக் குரலில் இதுவரை கண்களை நனைத்திருந்த ஈரம் கரையுடைத்தது.
 
“ஹேய் பேபி!” அபிநயா இவளைப் பார்த்துப் பதறிப் போனாள்.
 
“நீ டென்ஷனாகக் கூடாதுன்னு நான் அப்பவே உங்கிட்டச் சொன்னேன் பேபி, நீ அப்போ எல்லாத்துக்கும் தலையை ஆட்டிட்டு இப்போ இப்பிடி பிஹேவ் பண்ணக்கூடாது.”‌ அபிநயா எச்சரித்துக் கொண்டிருக்கும்போதே அஞ்சனாவின் தொண்டைக்குள் எதுவோ அடைப்பதைப் போலிருக்க அதற்கு மேல் தாங்க முடியாதவள் போல சற்று அப்பாலிருந்த வாஷ் பேசினை நோக்கி ஓடினாள். அவ்வளவு நேரமும் சிறுகச் சிறுக அவள் உண்டு முடித்திருந்த அத்தனையும் ஒட்டுமொத்தமாக வெளியே வந்தது. 
 
“பேபீ…” நண்பியை நோக்கி ஓடப்போன அபியின் கரத்தைப் பிடித்து நிறுத்தினான் ஷியாம்.
 
“சீனியர், பேபீ…”
 
“நான் பார்த்துக்கிறேன், நீ அமைதியா இரு.” அவளை அமைதிப்படுத்தியவன் அஞ்சனாவிடம் போனான். அவள் தலையை இவன் இருபுறமும் அழுத்திப் பிடிக்க வாந்தியெடுத்த களைப்பில் கண்மூடி நின்றிருந்தவள் இவனை உணரவில்லை.
 
“அபி…” என்றாள் சோர்வாக. ஷியாம் எதுவுமேப் பேசவில்லை. வாஷ் பேசினுக்கு சற்று அப்பால் வைத்திருந்த டிஷ்யூவை கற்றையாக எடுத்தவன் அதைக் குளிர்நீரில் நனைத்து அவள் முகத்தைத் துடைத்துவிட்டான். மூச்சுவாங்கக் கண்மூடி நின்றிருந்தவளின் கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் வழிந்தது.
 
“அபி, நாம வீட்டுக்குப் போலாம்.” என்றாள்‌ கேவியபடி.
 
“கொஞ்ச நேரம் பேசிட்டு அதுக்கப்புறமாப் போலாம்.” அந்த ஆழ்ந்த குரலில் சடாரென்று கண்களைத் திறந்தது பெண். ஒரு கை அவளது தலையைத் தாங்கியிருக்க அடுத்த கரத்தில் ஈர டிஷ்யூவோடு நின்றிருந்தது ஷியாம். தீச்சுட்டாற்போலத் துடித்து விலகியது பெண். 
 
“அஞ்சு!” அவன் குரல் இப்போது அவளை அதட்டியது. அவன் அதட்டலில் பதறிப்போய் ஓடிவந்தாள் அபிநயா.
 
“சீனியர் ப்ளீஸ்… அவளைத் திட்டாதீங்க, இதையெல்லாம் தாங்கிற மனநிலையில அவ இப்போ இல்லை.”
 
“இந்த விலகலை இனியும் என்னால அனுமதிக்க முடியாது அபி.” அவன் உறுமினான்.
 
“சரி சரி, புரியுது, கொஞ்சம் பொறுமை சீனியர், ப்ளீஸ்…” என்றவள் அஞ்சனாவின் கரம் பிடித்து அவளை இருக்கைக்கு அழைத்து வந்தாள்.
 
“அபி… ஏன் இப்பிடி? வீட்டுக்குப் போலாம்.” பெண் மீண்டும் மீண்டும் அதையே திரும்பச் சொன்னது.
 
“பேபி… எதுக்கு இப்பிடி ஓடி ஒளியுற? எதைப் பார்த்து பயப்பிடுற நீ?”
 
“அபி ப்ளீஸ்…” அதற்கு மேலும் நின்று பேச முடியாமல் நாற்காலியில் தொய்ந்து அமர்ந்தாள் அஞ்சனா. அவள் முன்னால் ஒரு க்ளாஸை டொக்கென்று வைத்தான் ஷியாம். 
 
“லெமன் ஜூஸ், குடிக்கச் சொல்லு.” அவன் குரலில் அஞ்சனா தலையை அப்புறமாகத் திருப்பிக் கொண்டாள். 
 
“பேபி, வாய்க்கு நல்லா இருக்கும், கொஞ்சம் குடி.”
 
“போலாம் அபி.” மீண்டும் அஞ்சனாவின் கண்ணீர் குரல். அவள் வார்த்தைகளில் அவன் முகத்தில் சினமேறியது. அவனின் கரம்பிடித்து அப்பால் இழுத்துக்கொண்டு போனாள் அபிநயா.
 
“என்ன சீனியர் இப்பிடி பிஹேவ் பண்ணுறீங்க?”
 
“வேற என்னப் பண்ணச் சொல்றே நீ? என்னமோ வில்லனைப் பார்க்கிற‌ மாதிரிப் பார்க்கிறா? என்னைப் பார்த்தா அவளுக்கு வில்லன் மாதிரித் தெரியுதாமா?”
 
“ஷ்… ஐயோ! எதுக்கு இப்போ இப்பிடிக் கத்துறீங்க சீனியர்? அவ காதுல விழப்போகுது.”
 
“விழுந்தா என்ன? இத்தனை வருஷம் கழிச்சு எவ்வளவு ஆசையாப் பார்க்க ஓடி வர்றேன், அவ என்னடான்னா…”
 
“உங்களைப் பார்த்ததும் வாந்தி எடுக்கிறா… ஹா… ஹா…” அவன் பேச்சை இவள் முடித்துவிட்டுச் சத்தமாகச் சிரித்தாள் கேலியாக.
 
“எட்றா அந்த வெளக்குமாத்தை! என்னடீ நினைச்சுக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?!” கோபமாக ஆரம்பித்தவன் ஒரு கட்டத்தில் தானும் அவளோடு சேர்ந்து சிரித்துவிட்டான்.
 
“முடியாது அபி, இதுக்கு மேலயும் தள்ளி நிற்க முடியாது, அதை அவளுக்குப் புரியவை.” என்றான் கனத்த குரலில்.
 
“சீனியர், வாழ்க்கையில ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கா, நீங்க ஆசைப்படுறது அத்தனைச் சுலபத்துல நடக்காது, கொஞ்சம் பொறுமையா இருக்கணும்.”
 
“எத்தனை நாளைக்கு? இல்லை இன்னும் எத்தனை நாளைக்குன்னு கேட்கிறேன்?”
 
“ப்ளீஸ் சீனியர்!”
 
“நான் வந்ததுதான் இப்போ இவளுக்குப் பிரச்சினை, இதுவே வேற யாராவது டோனர்னு வந்திருந்தா நல்லாத்தானேப் பேசியிருப்பா? ரோட்டுல போற எவனோ ஒருவனை அவளால ஏத்துக்கமுடியுது, என்னை ஏத்துக்க முடியலையோ?”
 
“அதுல இருந்தே எல்லாரும் நீங்களும் அவளைப் பொறுத்தவரை ஒன்னுல்லைன்னுத் தெரியுதில்லை சீனியர்?” அபிநயாவின் வார்த்தைகள் அவனைக் கொஞ்சம் சமாதானப்படுத்தின. 
 
“இன்னும் கொஞ்சம் டைம் குடுங்க டாக்டர், அவளோட மனசும் இதையெல்லாம் ஏத்துக்கணுமில்லை? உங்க மனசுல இருந்த ஆசையை அன்னைக்கு நீங்க வெளிப்படையாக் காட்டினீங்க, இவ காட்டலைன்னாலும் மனசுக்குள்ள உங்கமேல ஆசை இருந்துது, அது எனக்குத் தெரியும்.”
 
“அந்தக் காயங்களைத் திரும்பவும் கீறாதே அபி.”
 
“அப்போ அவ சின்னப் பொண்ணு, இவளையே காவல் காக்கிற அண்ணன், எல்லாத்துக்கும் மேல பயம்… பாவம் அவளுந்தான் என்ன செய்வா? நீங்கக் கூட எதையும் வாய்விட்டுச் சொல்லலையே சீனியர்?”
 
“அதனாலதான் சொல்றேன் அபி, அன்னைக்குச் சம்பாத்தியம் இல்லை, மனசுல இருந்த காதலைச் சொல்லத் தைரியமும் இல்லை, இன்னைக்கு எல்லாமும் இருக்கு, எதுக்குத் தள்ளி நிற்கணும்?”
 
“இடைப்பட்டக் காலத்துல அவ ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டாளே!” அபிநயா சொன்ன போது பக்கத்திலிருந்த‌ சுவரில் ஓங்கிக் குத்தினான் ஷியாம்.
 
“ப்ளடி வாழ்க்கை! ப்ளடி கல்யாணம்! அவனை…” பற்களைக் கடித்தான் டாக்டர்.
 
“ப்ளீஸ் சீனியர், இனி எல்லாம் படிப்படியாச் சரியாகிடும், அதான் அவ உங்களைப் பார்த்துட்டால்லை, அவளுக்கு இனி எல்லாம் புரியும், கொஞ்சம் டைம் குடுங்க.”
 
“சொல்லி வை அவகிட்ட, இந்த ஐவிஎஃப் லொட்டு லொசுக்கு எல்லாம் இந்தக் குழந்தைக்கு மட்டுந்தான், அதுவும் அவ ஆசைப்பட்டுட்டாளேன்னுதான்! அடுத்தக் குழந்தை நான் ஆசைப்பட்ட மாதிரித்தான் பொறக்கும்.”
 
“சரி.”
 
“என்னைப் பொறுத்தவரைக்கும் அவ என்னைக்குமே என்னோட அஞ்சனாதான், அவ வாழ்க்கையில ஆயிரம் நடந்திருக்கட்டும், எனக்கு அதைப்பத்திக் கவலையில்லை, எனக்கு இன்னைக்கு அவளைப் பார்த்தாலும் அந்த ஸ்கூல்தான் ஞாபகம் வருது, அன்னைக்கு அவளைப் பார்த்தப்போ என்னெல்லாம் தோணிச்சோ அதேதான் இப்பவும் தோணுது.”
 
“அப்ப என்னத் தோணிச்சு உங்களுக்கு சீனியர்?” பெண் வம்பை விலைகொடுத்து வாங்கியது.
 
“ஆங்… நீயொரு பொண்ணாப் போயிட்டே, பையனா இருந்தேன்னு வெச்சுக்கோ, எனக்கு அவளை என்னெல்லாம் பண்ணத் தோணுதுன்னு விளக்கமாச் சொல்லியிருப்பேன்.”
 
“சரி சரி, வயசானாலும் எங்க ஹீரோவோட மனசும் ஆசையும் இன்னும் மாறலைன்னு எங்களுக்கும் நல்லாவேப் புரியுது.” அபி பேச்சை மாற்றிவிட்டாள். இல்லாவிட்டால்தான் அவன் வாய் வரம்பில்லாமல் பேசுமே!
 
“வயசாகிடுச்சா? யாருக்கு?! அம்மணியை இன்னைக்கு எங்கூட அனுப்பி வை, என்னோட வயசு என்னன்னு நான் அவளுக்குக் காட்டுறேன்.”
 
‘ஆத்தீ… சீனியர் கைல இவ சிக்கினாச் சின்னாபின்னமாகிடுவாப் போல இருக்கே!’ மனதுக்குள் அலறினாள் அபிநயா.
 
“அடுத்த வாரம் உங்க பேபிக்கு ஸ்கேன் இருக்கு, அன்னைக்கு எங்கிட்டக் கூட்டிக்கிட்டு வா.”
 
“சீனியர், அதுக்கு அவ ஒத்துக்குவாளாத் தெரியலையே?”
 
“என்னப் பண்ணுவியோ எனக்குத் தெரியாது அபி, அடுத்த வாரம் அவ எங்கிட்டத்தான் வரணும், அவ வரலைன்னா அவ போற ஹாஸ்பிடலுக்கு நான் வருவேன், எந்த ஹாஸ்பிடல்ல எவன் என்னைத் தடுக்கிறான்னு நானும் பார்க்கிறேன்.” அந்த ஏரியாவின் தலைசிறந்த, மிகவும் பிரசித்தமான டாக்டர், அவனை யாரும் தடுக்க இயலாது. தடுக்கவும் மாட்டார்கள். 
 
“இப்பிடிப் பேசினா எப்பிடி டாக்டர்?” அபி கெஞ்சினாள்.
 
“உனக்குப் புரியலை அபி, இப்பிடியே விட்டா இவ என்னைவிட்டுத் தள்ளிப் போறதுலேயேக் குறியா இருப்பா, இன்னைக்குப் பார்த்தேயில்லை, எங்கிட்டச் சாதாரணமாப் பேசக்கூட அவளால முடியலை, தள்ளி ஓடுறதுலயே குறியா இருக்கா.” ஷியாம் சொல்வதும் சரியோ என்று அபிக்கு இப்போது தோன்றியது.
 
“இப்போப் போறேன், ஆனா அடுத்த வாரம் அவ எங்கிட்டத்தான் வரணும், நீ கூட்டிக்கிட்டு வர்றே அபி!” ஆணை போலச் சொல்லிவிட்டு ஷியாம் போய்விட்டான். அந்த ப்ளாக் ஆடி சர்ரென்று வெளியேறிப் போனதை அஞ்சனாவும் கவனித்தாள். ஆனால் அவளால் சரியாக நிமிர்ந்து உட்காரக் கூட முடியவில்லை. அபி இவளிடம் வந்ததும் கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் இறங்கலாயிற்றுப் பெண்ணுக்கு.
 
“அழாதே பேபி.” என்றாள் அபிநயா.
 
“ஏன் அபி? ஏன் இப்பிடிப் பண்ணினே அபி?” என்றால் நலிந்த குரலில்.
 
“அப்பிடி என்னத்தைப் பண்ணிட்டேன் நான் உனக்குக் கெடுதலா?”
 
“அன்னைக்கு ஒரு நாள்… நான் பார்த்தேன்.”
 
“யாரை? சீனியரையா?”
 
“ம்…”
 
“எங்க?”
 
“ஹாஸ்பிடல்ல வெச்சு… கூடவே ஒரு பொண்ணு இருந்தா.” அந்த ஊரின் பெயர்போன ஹாஸ்பிடல் ஒன்றின் பெயரைச் சொன்னாள் அஞ்சனா.
 
“தெரிஞ்ச யாருமா இருக்கும், இல்லைன்னா பேஷண்ட்டா இருந்திருக்கும்.”
 
“இன்னும்… கல்யாணம் ஆகலையா?”
 
“ம்ஹூம்.”
 
“ஏன்?” கேட்ட பெண்ணை அபியின் பார்வை ஊடுருவியது. 
 
“ஏன்னு உனக்குத் தெரியாது?” கோபமாகக் கேட்ட நட்பினை வலியோடு பார்த்தாள் பெண்.
 
“குடும்பம், மானம், மரியாதை, அண்ணன், லொட்டு லொசுக்குன்னு நீங்கப் பாட்டுக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிடுறீங்கடீ, ஆனா இவனுங்க பாவம் என்ன செய்வானுங்க? நிம்மதியா வாழவும் முடியாம, அம்மா தொல்லையைத் தாங்கவும் முடியாம…” 
 
“உனக்கெப்பிடித் தெரியும்?”
 
“அன்னைக்குப் பொண்ணு பார்க்க வீட்டுக்கு வந்தது ஷியாம்தான்.
 
“ஓ… எல்லாம் சரியா வரும்னு சொன்னியே?!” என்றாள் இப்போது அஞ்சனா ஆச்சரியமாக.
 
“அது உனக்காகச் சொன்னது, பொண்ணு பார்க்கிறேன்னு வந்து உட்கார்ந்த அந்த மனுஷன் அப்பவும் உன்னைப் பத்தித்தான் விசாரிக்கிறான்.”
 
“நீ என்ன சொன்னே?”
 
“உள்ளதைச் சொன்னேன்.”
 
“ஏன் அபி? நான் நல்லா இருக்கேன்னு சொல்லியிருக்கலாமில்லை?”
 
“சொல்லிட்டு? சொல்லிட்டு என்னப் பண்ணச் சொல்றே? அந்தாளை என்னைக் கட்டிக்கச் சொல்றியா?”
 
“ஏன்? அவரை உனக்குப் புடிக்கலையா?”
 
“புடிக்குது புடிக்கலைங்கிறது ரெண்டாம் பட்சம் பேபி, இன்னைக்கு வரைக்கும் மனசளவுல உன்னோட ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டிருக்கிற மனுஷனை நான் கட்டிக்கிட்டு என்னப் பண்ணுறது? ப்ராக்டிகல்னு ஒன்னு இருக்கில்லை?” 
 
“தப்புப் பண்ணிட்டே, இந்தக் கல்யாணம் நடந்திருக்கணும், உன்னால அவர்கூட ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும்.”
 
“என்னால முடியும், அவரால முடியுமா?”
 
“காலம் எல்லாத்தையும் மறக்க வெச்சிடும்.”
 
“மண்ணாங்கட்டி! இவ்வளவு நாளும் அதைப் பண்ணாத காலம் இனித்தான் பண்ணிடப் போகுதாக்கும், அம்மாவைச் சமாதானம் பண்ணுறதுக்காக சும்மா அங்க இங்கன்னுப் பொண்ணு பார்த்துக்கிட்டுத் திரிஞ்சிருக்கார் அந்த மனுஷன்.”
 
“அதுக்காக… எனக்கு…” அதற்கு மேல் அஞ்சனாவால் பேச முடியவில்லை, தடுமாறினாள்.
 
“இங்கப்பாரு பேபி, உன்னைப்பத்திச் சொன்னது மட்டுந்தான் என்னோட வேலை, அதுக்கு மேல முடிவெடுத்ததெல்லாம் ஷியாம்தான், வேற டோனர் பார்க்கலாம்னுதான் நானும் சொன்னேன், ஆனா அவர் கேட்கலை, பிடிவாதமா நின்னுட்டாரு, டாக்டர் லதாவை ரெக்கமண்ட் பண்ணினதும் அவர்தான்.”
ஒவ்வொன்றாகக் கேட்கக் கேட்க அஞ்சனாவிற்கு தலை சுற்றியது. அதற்கு மேலும் அங்கு தாமதிப்பதை அவளின் உடல் தாங்காது என்று உணர்ந்த அபி அவளை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள். தகவல் கேட்ட அவள் அம்மாவிடம் அவள் வாந்தியெடுத்ததைச் சொல்லிவிட்டு அப்போது அங்கே இருந்த ரம்யாவை தனியே கொல்லைப்புறத்திற்கு அழைத்துவந்தாள்.
 
“என்ன அபி? ஏதாவது பேசணுமா?” பேச்சை ஆரம்பித்த அண்ணியிடம் அவர்கள் பள்ளிக்காலம் தொடங்கி இன்று ரெஸ்டாரன்ட்டில் நடந்ததுவரை அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டாள் அபிநயா.
 
“ஓ… இவ்வளவு நடந்திருக்கா?!” ஆச்சரியப்பட்டார் ரம்யா.
 
“நல்ல ஒரு வாழ்க்கையை ஏற்கனவே இந்தப் பொண்ணுத் தொலைச்சிட்டா அண்ணி.”
 
“இவ எங்க தொலைச்சா? எம் புருஷன் தொலைக்க வெச்சிருக்கார்!” பல்லைக் கடித்தார் அண்ணி.
 
“உண்மைதான், வெளியே சொல்லிக்கலைன்னாலும் பேபிக்கு ஷியாம் மேல லவ் இருந்துச்சு, எனக்கு அது நல்லாத் தெரியும் அண்ணி.”
 
“ஐயையோ…”
 
“அதெல்லாம் முடிஞ்சு போன கதைண்ணி, தொலைச்ச அதிர்ஷ்டம் இப்பத் திரும்பவும் இவளைத் தேடி வந்திருக்கு, இப்பவாச்சும் இவ கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கலாமில்லை?”
 
“அதானே! உள்ளங்கைல வெச்சு இவளைத் தாங்கின அந்த தருண் மகராசன் மட்டும் நமக்குப் போதும்னு இவ நினைச்சுட்டாப் போல.”
 
“அப்பிடி மட்டும் இவ நினைச்சா இவளை எங்கையால நானே கொன்னுப்போட்டிடுவேன் அண்ணி!”
 
“அப்பிடிச் சொல்லு, அந்த மனுஷன் சொல்றதும் சரிதான் அபி, இவளை இப்பிடியே விட்டாச் சரிப்பட்டு வராது, நல்லதுக்குப் பாவமில்லை, நாம களத்துல இறங்கிட வேண்டியதுதான்.”
 
“அபி, சாப்பிட வாம்மா.” உள்ளேயிருந்து பெரியவர் குரல் கொடுக்கவும் பெண்கள் இருவரும் பேச்சை முடித்துக்கொண்டு போய்விட்டார்கள்.
 
***
ஆறு வாரங்கள் நிறைவடைந்திருந்தன. அன்று அஞ்சனாவிற்கு முதல் ஸ்கேன். ஹாஸ்பிடல் போகத் தயாராக இருந்தாள் பெண். அபி ஏற்கனவே அப்பாயின்மென்ட் வாங்கி வைத்திருந்தாள். 
 
 “பேபி நீ ரெடியா?” கேட்டபடி உள்ளே வந்தாள் அபிநயா.
 
“அபி…”
 
“சொல்லு பேபி?”
 
“எந்த டாக்டர்கிட்டப் போறோம்? டாக்டர் லதாவா?”
 
“இல்லை… டாக்டர் ஷியாம்.” நிதானமாகப் பதில் சொன்னாள் அபிநயா.
 
“அபி, நீ புரிஞ்சுதான் எல்லாம் பண்ணுறியா?”
 
“புரிஞ்சுக்க மறுக்கிறது நீதான் பேபி.”
 
“அபி, என்னனப் பேசிக்கிறீங்க? ஏதாவது பிரச்சினையா?” கேட்டபடி ரம்யா அங்கே வர அஞ்சனா அமைதியாகிவிட்டாள். அண்ணியின் காதுக்கு அவள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கால நிகழ்வுகள் போவதை அவள் விரும்பவில்லை. 
 
“ஒன்னுமில்லைண்ணி, கிளம்புறோம்.” சொல்லிவிட்டுப் பெண் வெளியே போக அபியும் ரம்யாவும் அவளறியாவண்ணம் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். 
 
“அபி, தேவையில்லாம நீ எல்லாரோட வாழ்க்கையையும் குழப்பிக்கிறே.” அஞ்சனா பேச்சை ஆரம்பித்த போதும் அபிநயா எதுவும் பேசவில்லை. அமைதியாக காரை ஓட்டிச் சென்றவள் அதை பார்க் பண்ணினாள். டாக்டர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்தை எட்டிப்பார்க்க அங்கே அந்த ப்ளாக் ஆடி ஜம்மென்று நின்றிருந்தது. அபிநயா தனக்குள் சிரித்துக் கொண்டாள். இருந்தாலும், 
 
“டாக்டர் வந்துட்டாங்களா மேடம்?” ரிசப்ஷனில் நிற்கும் பெண்ணிடம் சம்பிரதாயத்திற்காகக் கேட்டாள்.
 
“வந்துட்டாங்க, ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க மேடம்.” அவர்களை அதிகம் காத்திருக்க வைக்காமல் டாக்டர் உள்ளே அழைக்க இரண்டு பெண்களும் எழுந்து போனார்கள். ஷியாம் இந்தளவு மகப்பேறு மருத்துவத்தில் பிரசித்தம் என்று அஞ்சனாவிற்கு இதுவரைத் தெரிந்திருக்கவில்லை. இணையதளத்தைத் தட்டிச் சில தகவல்களைப் பெற்றுக்கொண்டாள். 
 
“ஹலோ சீனியர்.” ஆர்ப்பாட்டமாக ஒருத்தி உள்ளே நுழைய அடுத்தவள் அமைதியாக வந்து கொண்டிருந்தாள். இளநீல வண்ணத்தில் ஊதா நிற பார்டர் வைத்த காட்டன் புடவைக் கட்டியிருந்தாள். ஷியாமிற்கு ஒரு நிமிடம் அவளிடமிருந்து கண்ணைப் பிரிக்க இயலவில்லை.
 
“ம்க்கும்…” வேண்டுமென்று அபிநயா சத்தம் எழுப்ப அவள் கையிலிருந்த ஃபைலை வாங்கிக் கொண்டான். 
 
“என்ன அபிநய சரஸ்வதி, சத்தம் பலமா இருக்கு?” ஃபைலை பார்வையிட்டபடி அவன் கேட்க இப்போது அஞ்சனாவின் முகத்திலும் லேசான புன்னகைத் துளிர்த்தது. பள்ளிக்கால நினைவுகள் அவளுக்குள்ளும் வந்து போயின. அன்றைக்கு டியூட்டியில் இருந்த நர்ஸ் அஞ்சனாவின் நிறை, ரத்த அழுத்தம் என எல்லாவற்றையும் செக் பண்ணி முடிக்க,
 
“ஸ்கேனுக்கு எல்லாம் ரெடியா இருக்கா சிஸ்டர்?” என்றான் ஷியாம்.
 
“ரெடி டாக்டர்.” நர்ஸ் சொல்ல அனைவரும் எழுந்து அதற்கான அறைக்குப் போனார்கள். அபிநயாவும் நர்ஸும் அறைக்குள் நுழைந்துவிட்டார்கள்.
 
“சீனியர்…” அந்தக் குரலில் ஷியாம் சட்டென்று நின்றான். அவள்தான் அவனை அழைத்திருந்தாள். நீண்ட, நெடிய, கொடுமையான பல வருடங்களுக்குப் பின்னான அவளின் அழைப்பு. ஷியாம் உள்ளே போகாமல் திரும்பி அவளிடம் வந்தான்.
 
“அபி… ஸ்கேன் பண்ணட்டும்.” தலையைக் குனிந்தபடி நின்றிருந்தவளிடமிருந்து வந்தது இந்த வார்த்தைகள்.
 
“ஏன்?” ஷியாமிற்கு இத்தனை மிருதுவாகப் பேச வருமா?!
 
“ப்ளீஸ்…” அவள் குரல் கெஞ்சியது. இதுவே இன்னொரு ஆண் டாக்டராக இருந்திருந்தால் அஞ்சனா இத்தனைக் கவலைப்பட்டிருக்கமாட்டாள். அவள் குழந்தைக்காக எத்தனைச் சிறந்த மருத்துவரிடம் போக முடியுமோ அவரிடம்தான் போயிருப்பாள். ஆனால் அந்த டாக்டர் ஷியாம் எனும்போது அவள் மனது முரண்பட்டது.
 
“இது நம்மக் குழந்தை அஞ்சு.” அந்த வார்த்தைகளில் துடித்துப் போய் நிமிர்ந்து பார்த்தது பெண். அவள் கண்களின் அலைப்புறுதலைச் சில நொடிகள் ரசித்தவன் என்ன நினைத்தானோ, 
 
“சரி, உள்ளப் போ.” என்றான். அவள் அவனைக் கடந்து செல்லும் போது,
 
“புடவையில ரொம்ப அழகா இருக்கே.” என்றான் ரசனையாக. பிரேக் போட்டாற் போல சட்டென்று நின்றது பெண்.
 
“ஸ்கூல் யூனிஃபார்ம்லதான் உன்னைப் பார்த்திருக்கேன், சின்னப் பொண்ணா… இத்தனை அழகா உன்னை நான் பார்த்ததில்லை.” ஒரு புன்னகையோடு அவன் சொல்ல அவள் கண்கள் லேசாகக் கலங்கியது. இந்த ஒரு வார்த்தைக்காக அவள் அந்த வீட்டில் ஏங்கியதுண்டு!
 
“அபி, நீங்க ஸ்கேன் பண்ணுங்க.” 
 
“யெஸ் டாக்டர்.” சொல்லிவிட்டு வெளியே போனவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் அபிநயா. வேண்டாம் சீனியர் என்று அவள் அன்றைக்கு ரெஸ்டாரன்ட்டில் வைத்துக் கெஞ்சிய போது இவன் அடித்தக் கூத்து என்ன? இன்றைக்குப் பெட்டிப்பாம்பு போல அடங்கிப்போய் போவதென்ன?! அபிநயா ஸ்கேன் பண்ணுவதற்காக எல்லா ஆயத்தங்களும் செய்து முடித்திருந்த போது அந்த அறைக்குள் இன்னொரு நர்ஸ் வந்தாள். வந்தவள் அபியின் காதுக்குள் ஏதோ ரகசியம் போலச் சொல்லிவிட்டுப் போனாள்.
 
“அதானே பார்த்தேன்!”
 
“என்ன அபி?”
 
“ஒன்றுமில்லை பேபி, நீ இப்போ உன்னோட பேபியை ஸ்கிரீன்ல பாரு.” என்றவள் அவன் சொல்லி அனுப்பியிருந்த அறையின் எண்ணுக்குரிய சிஸ்டத்திற்கு அவள் சிஸ்டத்தை கனெக்ட் செய்தாள். இப்போது அங்கிருந்தபடியே அவனால் அனைத்தையும் பார்க்க முடியும். அஞ்சனா பூரித்துப் போய் திரையைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அபியின் முகத்தில் லேசான குழப்பம் தோன்றியது. ஆனால் அதை அஞ்சனா கவனிக்கவில்லை. சில நொடிகளில் முன்னர் வந்த நர்ஸ் மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்தாள். இம்முறை அவள் கையில் ஒரு காகிதத் துண்டு இருந்தது. அபியிடம் அவள் அதைக் கொடுத்துவிட்டு வெளியே போய்விட்டாள். 
 
“அபி, ட்வின்ஸ் மாதிரித் தெரியுது, இப்போதைக்கு அவகிட்ட எதுவும் சொல்லிடாத, பின்னாடி ஏதாவது ஆச்சுதுன்னா அவ தாங்கமாட்டா, அடுத்தடுத்த ஸ்கேன்ல பார்த்துட்டு கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்.” ஷியாம்தான் எழுதியிருந்தான். படித்து முடித்ததும் அந்தக் காகிதத்தைக் கசக்கிக் குப்பைத் தொட்டிக்குள் போட்ட பெண் தன் வேலையில் கவனமாகிவிட்டாள். மறந்தும் எதையும் அஞ்சனாவிடம் உளறவில்லை.