siraku10

siraku cp-cc87895f

சிகு 10

ஹாஸ்பிடல் வேலையை முடித்துக்கொண்டு பெண்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்திருந்தார்கள். அஞ்சனா மிகவும் சோர்வாக உணர்ந்தாள். இருந்தாலும் குழந்தை எல்லா வகையிலும் ஆரோக்கியமாக இருப்பது அவள் மனதுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. மனதில் இருந்த படபடப்பு அடங்கியிருந்தது.
ஸ்கேனை முடித்துவிட்டு இருவரும் மீண்டும் ஷியாமின் அறைக்கு மீண்டும் போயிருந்தார்கள். அபி சொன்னதுதான், இருந்தாலும் அவன் வாயால் எல்லாம் சரியாக இருக்கின்றது என்று சொன்னது பெண்ணுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.
 
“எல்லாம் சரியா இருக்கா அபிம்மா? ஒன்னும் பிரச்சினை இல்லையே?” வாசலுக்கு ஓடிவந்து ஆர்வமாக வரவேற்ற வெண்பாவை பார்த்துச் சிரித்தாள் அபிநயா.
 
“ஒரு ப்ராப்ளமும் இல்லை ஆன்ட்டி, உங்கப் பொண்ணும் அவ குழந்தையும் ஆரோக்கியமா இருக்காங்க.”
 
“ரொம்ப சந்தோஷம் அபி, உன்னோட வேலையை எல்லாம் விட்டுட்டு அஞ்சு கூடவே அலையுறே, ரொம்ப தேங்க்ஸ் ம்மா.”
 
“அதெல்லாம் ஒன்னுமில்லை, ஆன்ட்டி… நாளைக்கு எங்க வீட்டுல ஒரு சின்ன ஃபங்ஷன், ரொம்ப வேண்டியவங்களை மட்டுந்தான் இன்வைட் பண்ணுறோம், நீங்க எல்லாரும் கண்டிப்பா வந்திடணும்.”
 
“என்ன ஃபங்ஷன் அபி?”
 
“அம்மா அப்பாவோட வெட்டிங் அனிவர்சரி ஆன்ட்டி.”
 
“அடடா! அப்பிடியாம்மா? நாளைக்குச் சொந்தத்துல ஒரு முக்கியமான கல்யாணம் இருக்கு, நானும் அங்கிளும் அதுக்குப் போறதா இருக்கோம், வேணும்னா இப்பிடிப் பண்ணலாமா? உங்க வீட்டு ஃபங்ஷனுக்கு அஞ்சுவும் ரம்யாவும் வரட்டும், கல்யாணத்தை முடிச்சிட்டு நானும் அங்கிளும் அங்க வந்தர்றோம்.”
 
“நோ ப்ராப்ளம் ஆன்ட்டி.” பெண்கள் நால்வரும் சேர்ந்துவிட வீடு கொஞ்ச நேரம் கலகலப்பாக இருந்தது. அயர்வாக இருக்கிறது என்று அஞ்சனா கட்டிலில் சாய்ந்து கொள்ள அவளுக்கு சூப் செய்கிறேன் என்று வெண்பாவும் சமையலறைக்குப் போய்விட்டார். அபிநயா ரூமைவிட்டு வெளியே வர ரம்யாவும் அவளைத் தொடர்ந்து பின்னே வந்தார்.
 
“அண்ணி, உங்கக்கிட்டக் கொஞ்சம் பேசணுமே.”
 
“சொல்லு அபி, என்ன விஷயம்?”
 
“இங்க வேணாம், பின்னாடி போலாமா?” இவள் கேட்கவும் பெண்கள் இருவரும் கொல்லைப்புறத்திற்கு வந்தார்கள்.
 
“சொல்லு அபி.”
 
“இன்னைக்கு ஸ்கேன்ல ட்வின்ஸ் இருந்ததுண்ணி.”
 
“வாவ்! சூப்பர் அபி! ஒரு கல்லுல ரெண்டு மாங்காயா? ஏன் அஞ்சு அதை எங்கக்கிட்டச் சொல்லலை?”
 
“ஏன்னா பேபிக்கே அது தெரியாது.”
 
“என்னாச்சு அபி? ஏன் தெரியாது? ஏதாவது ப்ராப்ளமா?”
 
“ப்ராப்ளம் ஒன்னுமில்லைண்ணி, சில நேரங்கள்ல ஒன்னு தவறிடும்.”
 
“ஐயையோ!”
 
“அதுக்காகப் பொறக்கலைன்னு இல்லை, பொறந்து சூப்பரா வளர்க்கிறவங்களும் இருக்காங்க, ஆனா இப்போதைக்கு பேபிக்கு இது தெரியவேணாம்னு சீனியர் சொல்லிட்டார், அடுத்தடுத்த ஸ்கேனை பார்த்துட்டு அவகிட்டச் சொல்லலாம்னு சொல்லிட்டார்.”
 
“ஏன் அபி? அப்பிடியெல்லாம் எதுவும் ஆகாது, இத்தனை நாளும் அவ பட்டது போதாதா?”
 
“கரெக்ட், எத்தனைத் தடவை முயற்சி பண்ணி ஃபெயிலியர் ஆனவங்க இருக்காங்க, இவளுக்கு முதல் தடவையே சக்ஸஸ் ஆகிடுச்சே! அதிலிருந்தே தெரியுதில்லை, ஆண்டவன் அவளுக்கு இனி நல்லதையேதான் குடுப்பான்னு.”
 
“கண்டிப்பா.”
 
“அண்ணி, இன்னொரு விஷயம்.”
 
“சொல்லு அபி.”
 
“நாளைக்கு சீனியரோட பேரன்ட்ஸும் ஃபங்ஷனுக்கு வருவாங்க, அதால நீங்க கண்டிப்பா பேபியை கூட்டிக்கிட்டு வரணும், சீனியர் அவங்களுக்கு பேபியை காட்டணும்னு சொல்றாரு.”
 
“சூப்பர், கண்டிப்பாக் கூட்டிட்டு வர்றேன், ஆனா…”
 
“என்னண்ணி?”
 
“அவங்க இதுக்குச் சம்மதிப்பாங்களா அபி?” 
 
“இதே கேள்வியை நானும் அந்த மனுஷன்கிட்ட பலதடவைக் கேட்டுட்டேன், இன்னமும் அவளால காயப்பட முடியாது, இது சரியா வருமான்னு? கொஞ்சம் சிரமப்படத்தான் வேணும், அதுக்காக அவளை விட்டுக்குடுக்க முடியுமான்னு கேட்கிறாரு, நான் இதுக்கு என்னண்ணி பதில் சொல்றது?”
 
“நடக்கிறது நடக்கட்டும் அபி, அவளுக்கு ஆண்டவன் எதை விதிச்சிருக்கிறானோ அதானே நடக்கும், நல்லபடியா நடந்தா சந்தோஷந்தான்.”
 
“ம்… நான் கிளம்புறேன் அண்ணி, ஃபங்ஷன் வேலை நிறைய இருக்கு.”
 
“சரிம்மா.” அபிநயா அத்தோடு கிளம்பிப் போக அடுத்த நாளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கலானாள் ரம்யா. அடுத்தநாள் மாலை ரம்யா செய்த ஆர்ப்பாட்டத்தில் அஞ்சனா ஆச்சரியப்பட்டாள். வெண்பாவும் கோவிந்தராஜனும் சொந்தத்தில் நடக்கும் திருமணத்திற்குக் கிளம்பிப் போயிருந்தார்கள். 
 
“என்னாச்சு அண்ணி, இன்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க?”
 
“இல்லையாப் பின்னே? ரொம்ப நாள் கழிச்சு நீயும் நானும் ஒரு ஃபங்ஷனுக்குப் போறோம், உன்னோட அண்ணன் வேற ஊர்ல இல்லை, ஹைய்யோ ஜாலி!” ரம்யாவின் குதூகலத்தில் பெண் சிரித்தது.
 
“அத்தை மாமா கூட இல்லை, நல்லா அரட்டை அடிக்கலாம், வேற யாரோட வீடா இருந்தாலும் என்னால என்ஜாய் பண்ண முடியாது, இது நம்ம அபி வீடு!”
 
“அது சரி, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தாக் கேட்கவா வேணும்? ஃபங்ஷன் களைகட்டிடாது?!” அண்ணி தேர்ந்தெடுத்து வைத்திருந்த புடவையை எடுத்துக் கட்டிக்கொண்டாள் பெண். நீலம் கலந்த பச்சை நிறத்தில் இருந்தது புடவை. மயில்கழுத்து நிறத்தில் பார்டர். அழகான பட்டுப்புடவை, கூடவே நகைகள், கைகளில் கண்ணாடி வளையல்கள். தலை நிறையப் பூவை வைத்துக்கொண்ட போது தன் நாத்தனாரை பார்த்த ரம்யாவுக்கு லேசான பொறாமை வந்தது.
 
“யப்பா! என்ன அழகுடிம்மா நீ?!” என்றவள் திருஷ்டி கழித்தாள். ரம்யாவும் பட்டுப்புடவைதான் கட்டியிருந்தாள். ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பரிசுப் பொருளோடு இருவரும் கிளம்பி வந்துவிட்டார்கள். அபியின் வீடு லேசாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தது. 
 
“வாங்க வாங்க, அஞ்சனா வா, இதுதான் அண்ணியா?” வாசல் வரை வந்த வரவேற்றார் கனிமொழி.
 
“ஆமா ஆன்ட்டி, ஹாப்பி அனிவர்சரி!” பெண்கள் வாழ்த்த அழகாக வெட்கப்பட்டார் அபியின் அம்மா. முப்பத்தைந்து வருட தாம்பத்திய வாழ்க்கையின் நிறைவு அந்த முகத்தை அழகுபடுத்தியிருந்தது.
 
“அபியோட அம்மாக்கு வெட்கமெல்லாம் வருது, இதையெல்லாம் பார்த்தாவது அவ கொஞ்சம் கத்துக்கலாம்.” காதைக் கடித்த அண்ணியைப் பார்த்துச் சிரித்தாள் பெண்.
 
“பொறுங்க அபி வரட்டும், நீங்க சொன்னதைச் சொல்லிக் குடுக்கிறேன்!” இளையவள் மிரட்டப் பெரியவள் சிரித்தாள்.
 
“வீடு ரொம்ப அழகா இருக்கில்லை அஞ்சு?” ரம்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த ப்ளாக் ஆடி உள்ளே நுழைந்தது. அந்தக் கறுப்பியந்திரத்தைச் சட்டென்று இனங்கண்டு கொண்டாள் அஞ்சனா. நாத்தனாரின் முகத்தையே பார்த்திருந்தாள் ரம்யா. அங்கு தெரிந்த கலவரம் அவளைத் திருப்திப்படுத்தியது. அந்த மனிதரின் வருகை இவளைப் பாதிக்கிறது!
 
“உள்ளப் போலாம் அண்ணி.”
 
“சரிம்மா.” இருவரும் உள்ளே வர அபிநயா வந்து வரவேற்றாள். 
 
“என்ன இவ்வளவு லேட்டா வர்றீங்க ரெண்டு பேரும்? நீ இங்க உட்காரு, அண்ணி… நீங்க எங்கூட வாங்க, ஆர்டர் பண்ணின சாப்பாட்டு ஐட்டமெல்லாம் வந்திடுச்சு, எல்லாம் சரியா இருக்கான்னு வந்துப் பாருங்க.” அவசரமாகக் கையோடு ரம்யாவை அபி அழைத்துக்கொண்டு போக அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள் அஞ்சனா. நான்கைந்து குடும்பங்கள் வந்திருந்தன. அவர்கள் யாரையும் இவளுக்குத் தெரியாது என்பதால் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
 
“உள்ள வாங்க.” யாரையோ கனிமொழி வரவேற்கும் சத்தம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தது பெண். ஒரு தம்பதியினர் வந்து கொண்டிருந்தார்கள். கூடவே ஷியாம். வெள்ளையும் நீலமுமாகக் கோடுகள் போட்ட போலோ ஷர்ட் அணிந்திருந்தான். ஃபுல் ஸ்லீவை முழங்கை வரை மடித்து விட்டிருந்தான். நீல நிற டெனிம். படு காஷுவலாக வந்திருந்தான். கூட வந்தவர்களைப் பார்த்த போது அது அவனின் பெற்றோர் என்று புரிந்தது. அவர்களை நோக்கி அடிக்கடி திரும்பிய பார்வையை வலுக்கட்டாயமாகத் திருப்பிக் கொண்டாள் அஞ்சனா.
 
“உட்காருங்க கண்மணி.”
 
“இருக்கட்டும், நீங்க போய் வர்றவங்களைக் கவனிங்க.” 
 
“இதோ வந்தர்றேன்.” சொல்லிவிட்டு அவர் போகவும் எல்லோரும் அமர்ந்தார்கள். தன்னருகில் அரவம் உணர்ந்து திரும்பிப் பார்த்தாள் அஞ்சனா. சோஃபாவில் இவளருகே உட்கார்ந்து கொண்டிருந்தான் ஷியாம். அத்தனை நீளமான இருக்கை இல்லை அது. கண்மணியின் பார்வையும் மகனிடமே இருந்தது. ஏனென்றால் இத்தனை அருகில் ஒரு பெண்ணோடு அவன் இதுவரை அமர்ந்ததில்லை! கணவரை அவர் சட்டென்று திரும்பிப்பார்க்க, அவர் முகத்திலும் மகனின் செய்கையால் உருவான ஆச்சரியமேத் தெரிந்தது. 
 
ஷியாம் இன்றுவரை அஞ்சனா பற்றி அவன் வீட்டில் பேசியிருக்கவில்லை.
ஆனால் அபி அவளது வீட்டில் பேசியிருந்தாள். அஞ்சனா என்று பெயர் குறிப்பிடவில்லையேத் தவிர ஷியாமின் மனதில் இன்னொரு பெண் இருப்பதைப் பட்டவர்த்தனமாக அவள் வீட்டில் சொல்லிவிட்டாள். 
 
“இந்த விஷயத்தைக் கொஞ்சம் நிதானமாச் சொல்லியிருக்கலாம் அபி.” ஷியாம் குறைப்பட்டான்.
 
“இல்லை சீனியர், அது தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.” அதற்கு மேலும் தாமதிப்பது நியாயமில்லை என்று அவனுக்குத் தோன்றியதால் ஒருநாள் அபிநயாவின் அப்பாவைச் சந்தித்துப் பேசினான்.
 
“சாரி அங்கிள்.”
 
“நோ ப்ராப்ளம் யங் மேன்! கல்யாணத்துக்கு அப்புறமாச் சொல்லாம முன்னாடியே உங்க மனசுல இருக்கிறதைச் சொல்லிட்டீங்களே, அது போதும் எனக்கு.”
 
“என்னோட மனசுல இருக்கிற பொண்ணு எந்தளவுக்கு எனக்கு முக்கியமோ அதேயளவு அபியும் எனக்கு முக்கியம் அங்கிள்.”
 
“குட்!” அபிநயாவை போல அவளது தந்தையும் எல்லாவற்றையும் இயல்பாக ஏற்றுக் கொண்டார்.
 
“சச் அ நைஸ் கேர்ள் அங்கிள், நீங்க பர்மிஷன் குடுத்தீங்கன்னா எனக்கு நல்லாத் தெரிஞ்ச ஜூனியர்ஸ் இருக்காங்க, அவங்கள்ல ஒருத்தரை அபிக்கு நான் பார்க்கட்டுமா அங்கிள்?”
 
“வொய் நாட் ஷியாம்! பாருங்க, அபியை உங்களுக்கு நல்லாத் தெரியும், அவளுக்கு ஏத்தமாதிரிப் பாருங்க.”
 
“ஷ்யூர் அங்கிள்.” அந்தப் பேச்சுவார்த்தையின் பின்பு அபியின் வீட்டுக்கு வந்து போவதில் ஷியாமுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. அவன் வீட்டைச் சமாதானம் செய்ய வேண்டும். இனியும் காலம் தாழ்த்துவது தவறென்றுத் தோன்றியது. அருகில் அமர்ந்தவனைத் தடுக்கமுடியாமல் எழுந்துகொள்ளப் போனாள் பெண். ஆனால் சோஃபாவில் இருந்த அவளது கரத்தின் மேல் தன் கரத்தை வைத்து அவளைத் தடுத்தான் ஷியாம். எதிரே அமர்ந்திருந்த அம்மாவின் பார்வை எதையும் கவனிக்கத் தவறவில்லை. கண்மணியின் பார்வை இப்போது அஞ்சனாவை கூர்மையாக ஆராய்ந்தது. அம்மாவின் பார்வையை மகனும் கவனித்தான்.
 
“ஹேய் சீனியர்! எப்போ வந்தீங்க? வாங்க ஆன்ட்டி, வாங்க அங்கிள்.” கலகலப்பாக வரவேற்றாள் அபிநயா, கூடவே ரம்யா. ஷியாமை அளவெடுத்த ரம்யாவின் பார்வையில் திருப்தி தெரிந்தது. 
 
“ஆன்ட்டி, இது அஞ்சனா, நாங்க எல்லாரும் ஒன்னாத்தான் படிச்சோம்.” இது கண்மணிக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான தகவல்.
 
“ஓ… அப்பிடியா?”  
 
“பேபி, இது சீனியரோட பேரன்ட்ஸ்.” நேரடியாக அவர்களைத் தனக்கு அபிநயா அறிமுகம் செய்து வைக்கவும் அஞ்சனா திணறிப்போனாள். அவன் கரத்தின் கீழ் அகப்பட்டுக்கொண்ட தன் கரத்தை விடுவித்துக் கொண்டு வணக்கம் வைத்தாள். கண்மணியும் இவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.
 
“அபி…” சூழ்நிலையின் கனத்தைத் தாங்க முடியாமல் அஞ்சனாவின் குரல் சோர்வாக வந்தது. 
 
“பேபி.” அபி அவளின் அருகில் வரவும் மெதுவாக எழுந்து அவளோடு உள்ளேப் போய்விட்டது பெண்.
 
“என்னப் பண்ணுது பேபி?” 
 
“கொஞ்சம் தலை சுத்துற மாதிரி இருக்கு.” 
 
“ஒன்னுமில்லை, நீ வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடு, எல்லாம் சரியாப் போகிடும்.” ரம்யாவை உணவுண்ண அனுப்பிவிட்டு இவளுக்கும் சௌகர்யம் பண்ணிவிட்டு விருந்தினரைக் கவனிக்கப் போய்விட்டாள் அபிநயா. அறையிலிருந்த கட்டிலில் சாய்ந்து கொண்டாள் பெண். கண்ணுக்குள் கண்மணியின் முகம் வந்து போனது. சம்பந்தமேயில்லாமல் மதிவதனியின் முகமும் அவளுக்குள் கண்சிமிட்டியது. தேவையில்லாத ஒப்பீடு. ஆனாலும் அவள் உள்ளத்தை அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை. இழப்புகள் சில பொழுதுகளில் பெரிதாகத் தெரிகின்றன.
வாழ்க்கையின் போக்கோடு நாம் ஓட நினைத்தாலும் உள்மனது அது எவ்வளவு பொய்யென்று நமக்குச் சொல்லிவிடுகிறது. பட்டவர்த்தனமாகக் காட்டிவிடுகிறது. ஷியாமின் குடும்பத்தைப் பார்த்த போது இயல்பாக அவள் கரம் வயிற்றைத் தடவிக் கொடுத்தது. அவர்களுக்கும் அவளுக்கும் எந்த உறவும் இல்லை. ஆனால் அவள் வயிற்றில் வளரும் உயிருக்கும் அவர்களுக்கும் எந்த உறவுமில்லையா?! லேசாக இருமுறைக் கதவு தட்டப்படும் ஓசைக் கேட்டது. 
 
“அபி…” என்றாள் பெண். ஆனால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தது அபியல்ல, ஷியாம். அவன் கையில் ப்ளேட் இருந்தது. உள்ளே வந்தவன் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வந்தான். அஞ்சனா அதிர்ந்து போனாள். ஆனால் அவனுக்கு அது பெரிதாகத் தோன்றவில்லைப் போலும். இயல்பாக அவளருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டான்.
 
“சாப்பிடு.” அவன் ப்ளேட்டை நீட்ட அவள் தடுமாறினாள்.
 
“இல்லை… நான் வெளியே போய்…”
 
“சேர்ந்தாப்போல பத்து நிமிஷம் உன்னால சோஃபாவுல கூட உட்கார முடியலை, நீ இங்கேயே உட்கார்ந்து சாப்பிடு.”
 
“இவ்வளவு… என்னால சாப்பிட முடியாது.”
 
“நானும் சாப்பிடுறேன், நீ சாப்பிடு.” அவன் வற்புறுத்தவும் அவள் ப்ளேட்டை பார்த்தாள். ஒரு ஸ்பூன்தான் இருந்தது.
 
“ஒன்னு போதும்.” அவள் பார்வையின் அர்த்தம் அவனுக்கும் புரிந்தது. அத்தனை வகையறாக்களை ப்ளேட்டில் பார்த்தபோது அவளுக்கு ஒருமாதிரியாக இருந்தது. முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
 
“என்னாச்சு?”
 
“இவ்வளவு ஃபூடை என்னாலப் பார்க்க முடியலை.”
 
“ஓ… நீ பார்க்காதே, சாப்பிடு.” பிரியாணியை ஸ்பூனால் எடுத்து அவன் அவள் வாயருகில் கொண்டு போக அஞ்சனா தவித்துப் போனாள். 
 
“இல்லை… நான்…”
 
“சாப்பிடு அஞ்சு.” அவன் குரல் கெஞ்சியது. பெண்ணின் கண்கள் லேசாகக் கலங்கிப்போனது. அது காயம்பட்ட மனது. இதமான ஒரு வார்த்தையையும் இல்லாதவன் போல அள்ளிக்கொள்ளவே ஆசைப்பட்டது. உள்ளம் என்பது ஒரு அற்புதமான விஷயம். கட்டுப்பாடுகளை என்றுமே அது மீற ஆசைப்படுவதில்லை. எத்தனை வலிகள், வேதனைகள் இருந்தாலும் கோடுதாண்டாமல் இருக்கவே அது முயற்சிக்கிறது. எத்தனை எல்லைகளை அது தனக்குத்தானே போட்டுக் கொண்டாலும் சில பொழுதுகளில் அதுகூட சிறகடிக்கத் துடிக்கிறது. எப்போதாவது தன்மீது விழும் பாலைவனத் தூறலில் அது நனைந்துவிட பேரவாக் கொள்கிறது. அஞ்சனா அந்த நொடி அந்த மனநிலையில்தான் இருந்தாள். தான் செய்வது தவறு என்று அவளுக்குத் தெரியும். செய்யக்கூடாது என்று புத்திக்கும் தெரியும். ஆனாலும் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டாள். தன் வாழ்க்கையின் கடந்த ஐந்து வருடங்களை அந்த ஒரு கணம் மட்டும் மறந்து போகத் துடித்தாள்.
 
“சாப்பிடும்மா.” இப்போது அவள் மறுக்கவில்லை. அவன் கொடுத்த விள்ளலை உண்டாள். அவளுக்குக் கொடுத்துவிட்டு அவனும் சாப்பிட ஆரம்பித்தான்.
 
“உனக்கும் எனக்குமான முதல் தனிமை.” அவன் குரல் ஆனந்தப்பட்டது. 
 
“படிக்கிற காலத்துலயும் நம்மைச் சுத்தி நிறையப் பேர் இருந்தாங்க, இப்பவும் இருக்காங்க.” அடுத்த கவளத்தை அவளுக்கு ஊட்டிவிட்டான் ஷியாம்.
 
“அன்னைக்கு அதையெல்லாம் மீறி வர்ற தைரியம் இருக்கலை, ஆனா இன்னைக்கு அப்பிடியில்லையே? இந்த ரூமுக்குள்ள நான் வர்றதை ஹால்ல இருக்கிற எல்லாரும் பார்த்தாங்க.”
 
“சீனியர்!” அவள் பதட்டப்பட்டாள்.
 
“எங்கம்மா பார்த்தாங்க, உன்னோட அண்ணி பார்த்தாங்க, ஆனா அதைப்பத்தி நான் இப்போ கவலைப்படவேயில்லை, எனக்கு இந்த நொடி இந்தத் தனிமை வேணும், எல்லாரும் பார்க்கத்தான் தாழ்ப்பாள் போட்டேன், என்னைத் தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்லாமச் சொல்லியிருக்கேன்.”
 
“இல்லை… அது…”
 
“எனக்காகக் காத்திருக்காம ஏன் அஞ்சு என்னை விட்டுட்டுப் போனே?” அந்தக் கேள்வியில் அஞ்சனா விக்கித்துப் போனாள். பல கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்த பெண்ணிற்கு அது அத்தனைச் சுலபமில்லை என்று இவனுக்கு யார் விளக்குவது?
 
“போதும்.” தொண்டைக்குள் இறங்க மறுத்ததை மட்டுமல்ல, அவன் பேச்சையும் நிறுத்த முயன்றது பெண்.
 
“இன்னும் கொஞ்சம் சாப்பிடு.”
 
“இல்லைங்க, என்னால முடியலை.” அந்த வார்த்தைகளில் அவன் முகம் கனிந்து போனது. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தப் பொழுது உண்டு முடித்ததே பெரும் சாதனை என்பது போல அமர்ந்திருந்த பெண் அவனைக் கவனிக்கவில்லை. அவள் தலையில் சூடியிருந்த பூவிலிருந்து அவன் பார்வை அவள் கழுத்தை முத்தமிட்டுக்கொண்டிருந்த ஆரத்தில் வந்து நின்றது. அதற்கு மேலும் அவனை வசீகரித்த இடங்களைப் பார்க்கச் சங்கடப்பட்டுக் கொண்டு குனிந்தான் ஷியாம். இடை மறைத்த சேலை அவனுயிர்கள் இரண்டு அங்கே இருப்பதை அவனுக்கு ஞாபகப்படுத்தியது. தொடத்துடித்த கரங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை. 
 
“தண்ணி கொண்டு வரட்டுமா?”
 
“இல்லை… எனக்குக் கொஞ்சம் தூங்கணும்.”
 
“ம்ஹூம்… இப்போதான் சாப்பிட்டிருக்க, கொஞ்ச நேரம் நட, வெளியே போலாமா?”
 
“இல்லையில்லை.” அவள் அவசரமாக மறுத்தாள். 
 
“ஏன்?”
 
“…”
 
“யாரைப் பார்த்துப் பயப்பிடுறே? உனக்காக நான் பன்னிரெண்டு வருஷம் காத்திருந்தது போதும், இனியும் காத்திருக்கப் பொறுமையுமில்லை, வயசுமில்லை, புரிஞ்சுக்கோ.” சொல்லிவிட்டு வெளியே போகப் போனவன் கதவருகே சென்று இவளைத் திரும்பிப் பார்த்தான். அவளும் போகும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
“இவ்வளவு அழகா எம்முன்னாடி இனி வராதே, நான் அத்தனை நல்லவன் கிடையாது.” என்றவன் வெளியே போய்விட்டான். முறையில்லாத பாராட்டு என்றாலும் அது அவளுக்குப் பிடித்திருந்தது, இனித்தது.
 
***
“ஷியாமா! கொஞ்சம் நில்லு!” வீட்டுக்குள் வந்ததும் வராததுமாகச் சத்தம் போட்டார் கண்மணி.
 
“கண்மணி! கொஞ்சம் பொறுமையாப் பேசு.”
 
“என்னத்தைங்கப் பொறுமையாப் பேசுறது? என்ன நடக்குது இந்த வீட்டுல?!” கணவர் மேல் பாய்ந்தார் கண்மணி. இது எதிர்பார்த்த தருணம்தான் என்பதால் ஷியாம் அமைதியாக ஜன்னலின் அருகில் போய் நின்று கொண்டான்.
 
“ஷியாமா, அம்மா கேட்கிறதுக்குப் பதில் சொல்லிட்டுப் போ.”
 
“அம்மா என்ன கேட்கப் போறாங்கன்னு எனக்குத் தெரியும் ப்பா.” என்றான் நிதானமாக.
 
“அது அம்மாவோட கேள்வி மட்டுமில்லை, என்னோட கேள்வியுந்தான், யாரந்தப் பொண்ணு?”
 
“எங்கூடப் படிச்சவப்பா.”
 
“அதைத்தான் அபிநயா சொல்லிட்டாளே, உனக்கும் அந்தப் பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்?”
 
“நிறைய இருக்கு, ஸ்கூலுக்கு போன காலத்துல இருந்து எனக்கும் அவளுக்கும் சம்பந்தம் இருக்கு.” மகனின் பதிலில் அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
 
“அப்பிடீன்னா என்ன அர்த்தம்?” அப்பாவின் கேள்விக்குப் பதில் சொல்ல ஷியாம் தயங்கியது ஒரு கணம்தான்.
 
“புடிச்சிருந்துது ப்பா, ஆனாச் சொல்லத் தைரியம் வரலை, முதல் தடவை மெடிசின் கிடைக்கலை, ரெண்டாவது தடவை எப்பிடியாவது கிடைச்சிடணும்னு போராடிப் படிச்சிக்கிட்டிருந்த காலமது, மனசுல இருக்கிற ஆசைகளுக்கு இடங்குடுக்க முடியலை, அவளுக்கும் வீட்டுல ரொம்பக் கட்டுப்பாடு, அழகான பொண்ணுன்னு அண்ணங்காரன் கண்ணுக்குள்ள வெச்சுப் பார்த்துக்கிட்டான்.”
 
“…”
 
“ஆசையை வாய்விட்டுச் சொல்லலையே தவிர எல்லாருக்கும் தெரியும், அப்பிடியே காலம் ஓடிடுச்சு.”
 
“காலம் ஓடிருச்சுன்னா?” அப்பாவிற்கு வார்த்தைகள் வரவில்லை.
 
“காலம் எனக்காகக் காத்திருக்கலைப்பா, அதுபாட்டுக்குப் போயிருச்சு.”
தொலைவானத்தை வெறித்தபடி பேசிக்கொண்டிருந்தான் ஷியாம்.
 
“காலம் காத்திருக்கலையா? இல்லை… அவ உனக்காகக் காத்திருக்கலையா? கல்யாணம் ஆன பொண்ணைப் பத்தியா இவ்வளவு நேரமும் பேசிக்கிட்டிருக்கே?” பெண்களுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு சூட்சுமப் புத்தி தோன்றுமோ? மகன் சொல்லத் தயங்கிய விஷயத்தை அம்மா சரியாகப் பிடித்தார்.
 
“கல்யாணமான பொண்ணா?!” இப்போது சுந்தர்ராம் வாயைப் பிளந்தார். 
 
“பின்ன இவ்வளவு நேரமும் உங்க மகன் என்னத்தை மென்னு முழுங்குறான்னு நினைக்கிறீங்க?”
 
“கல்யாணமான பொண்ணுன்னா என்னம்மா? தீண்டத் தகாதவளா? நான் ஆசைப்பட்டப் பொண்ணும்மா அவ.”
 
“என்னப் பேசுற ஷியாமா நீ? கல்யாணமான பொண்ணை நீ எப்பிடிக் கட்டிக்க முடியும்?”
 
“ஏன் முடியாது? இதே நிலைமைல நம்ம வீட்டுல ஒரு பொண்ணிருந்திருந்தா நாம இன்னொரு கல்யாணம் பண்ணிக்குடுக்க முயற்சி பண்ண மாட்டமா?”
 
“அந்தப் பொண்ணுக்கு என்னாச்சு?” சுந்தர்ராம் இன்னும் அந்தப் புள்ளியிலேயே நின்றிருந்தார்.
 
“என்ன ஆனா நமக்கென்னங்க?” இது கண்மணி.
 
“கல்யாணம் ஆகி அஞ்சு வருஷமாச்சு, புருஷன் அம்மாப்புள்ளை, இவ்வளவு நாளாகியும் கொழந்தைப் பொறக்கலை, அந்த வீட்டுல பையனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண முடிவெடுத்துட்டாங்க.”
 
“ஐயையோ!” சுந்தர்ராம் இப்போது பதறினார். பெண் மனதில்லையா… கண்மணியையும் இந்தக் கதை லேசாக இளக்கியது.
 
“அப்புறம் என்னாச்சு?” கதை கேட்ட கணவரை முறைத்துப் பார்த்தார் கண்மணி.
 
“பொறந்த வீட்டுக்கு வந்துட்டா, டைவர்ஸுக்கும் அப்ளை பண்ணிட்டா, செக் பண்ணிப் பார்த்தப்போ இவளுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லைன்னு தெரிய வந்திருக்கு.”
 
“உனக்கு இதெல்லாம் யாரு சொன்னா?” அம்மாவின் கேள்விகள் தாறுமாறாக வந்து வீழ்ந்தன.
 
“அபி, பொண்ணு பார்க்கப் போனப்போதான் சொன்னா.”
 
“முட்டாள் பொண்ணு! எதை யார்கிட்டப் பேசணும்னு தெரியாமப் பேசியிருக்கா.”
 
“அதான் இந்தப் பொண்ணு மேல எந்தப் பிரச்சினையும் இல்லையேப்பா? அவ புருஷன்கூடச் சேர்ந்து வாழலாமே!” ஒரு பெண்பிள்ளையின் வாழ்க்கை இப்படி ஆகிப்போனதில் உருகிவிட்டார் சுந்தர்ராம்.
 
“அவ இதுவரை வாழ்ந்த வாழ்க்கை அதுக்கு இடங்குடுக்கலைப்பா, நல்லாப் படிச்ச பொண்ணு, நல்ல வேலையில இருந்திருக்கா, எல்லாத்தையும் அவனுக்காக விட்டுக் குடுத்திருக்கா, ஆனா அம்மா சொன்னவுடனே அவன் இன்னொரு கல்யாணத்துக்கு ரெடியாகிட்டானே.”
 
“என்ன மனுஷன் இவனெல்லாம்?”
 
“அவங்கக் கண்ணு முன்னாடியே ஒரு கொழந்தையைத் தான் பெத்துக்கணும்னு அந்தப் பொண்ணு ஆசைப்பட்டா.”
 
“புரியலை.”
 
“ஐவிஎஃப் பண்ணிக்கிட்டாப்பா.” அந்தப் பதிலில் அம்மா,  அப்பா இருவருமே ஆச்சரியப்பட்டார்கள். அடுத்து மகன் ஒரு பெரிய குண்டைத் தூக்கி அவர்கள் தலையில் போடப் போகிறான் என்று அவர்களுக்குப் புரியவில்லை.
 
“லாஸ்ட் மன்த் பண்ணிக்கிட்டா, அவங்க வீட்டுல இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னு எவ்வளவு சொல்லியும் அவ கேட்கலை.” 
 
“சக்ஸஸா ஷியாமா?”
 
“ஆமாப்பா, அப்பா…” அவன் எதையோ சொல்லத் தயங்க சுந்தர்ராம் மகனை ஆழ்ந்து பார்த்தார்.
 
“அவளுக்கு டொனேட் பண்ணினது… நாந்தான்.”
 
“ஆங்!” மின்னாமல் முழங்காமல் மகன் இறக்கிய இடியில் அப்பா அலமலந்து போனார். இவர்களின் பாஷை அம்மாவிற்குப் புரியவில்லை என்று ஷியாம் அறிந்து கொண்டான்.
 
“அவ வயித்துல வளர்றது என்னோட கொழந்தைம்மா.”
 
“என்னது?!” நெஞ்சில் கை வைத்தபடி அப்படியே சுவரில் சாய்ந்து விட்டார் கண்மணி. அதன்பிறகு அந்த வீட்டில் கொஞ்ச நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. அதிர்ச்சி நீங்கிய கண்மணிதான் ஓடிவந்து மகனின் கன்னத்தில் ஓங்கி அறைத்தார்.
 
“என்னக் காரியம்டா பண்ணி வெச்சிருக்கே? யாரைக் கேட்டுடா இவ்வளவு பெரிய காரியத்தைப் பண்ணினே? எங்கிருந்துடா இவ்வளவு தைரியம் வந்துச்சு உனக்கு? ரோட்டுல போற எவளோ ஒருத்திக்காக இந்த வீட்டோட வாரிசைத் தூக்கிக் குடுத்திருக்கியே, முட்டாளா நீ? முட்டாளாடா நீ?” மகனைத் தாறுமாறாக அடித்தார் கண்மணி. ஷியாம் எதுவுமேப் பேசவில்லை. அமைதியாக எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டான்.