siraku11

siraku cp-0dafda39

சிகு 11

அபிநயா எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு அடுத்தாற்போல இருந்த சோஃபாவில் ஷியாம் அமர்ந்திருந்தான். எதிர்ப்புறத்தில் ஷியாமின் பெற்றோர். கண்மணியின் முகத்தில் அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது. சுந்தர்ராம் யார் பக்கம் பேசுவதென்று தெரியாமல் விழித்தபடி உட்கார்ந்திருந்தார்.
 
“உனக்கு எம் பையனைக் கட்டிக்கப் புடிக்கலைன்னா அதோட நிறுத்தியிருக்கணும் அபி, எதுக்குத் தேவையில்லாமக் கண்டவங்களையும் அவனோட கோர்த்துவிட்டிருக்கே?” 
 
“அம்மா!” கண்மணியின் காட்டமான பேச்சில் ஷியாம் துடித்துப் போனான். ஆத்திரத்தின் உச்சக்கட்டத்தில் என்னப் பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார் கண்மணி.
 
“என்னம்மா பேச்சு இது? வீட்டுக்கு வந்திருக்கிற பொண்ணுக்கிட்ட?” 
 
“பரவாயில்லை விடுங்க சீனியர்.” முகம் சிவந்து போனது அபிநயாவிற்கு. அவமானமாக உணர்ந்தாள்.
 
“சாரி அபி, நீ தப்பா எடுத்துக்காதே, எனக்கு நல்லது பண்ணுறதா நினைச்சு எனக்கு எங்கம்மா குழி தோண்டிக்கிட்டு இருக்காங்க.”
 
“ஷியாமா! என்னடாப் பேச்சு இது?” கண்மணி பதறினார்.
 
“தப்பு எம்மேலதாம்மா, இந்தக் காலத்துப் பசங்க மாதிரி கண்டமா, காதலிச்சமா, குடும்பம் நடத்தினமான்னு நானும் இருந்திருக்கணும், நான் அப்பிடியெல்லாம் நினைக்கலை, என்னோட எதிர்காலம், எங்கப்பா அம்மாவோட ஆசை, அவங்க கனவுன்னு படிப்புல கவனமா இருந்துட்டேன், அதனாலதான் எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டேன்.” தான் இழந்ததை நினைத்து வேதனைப்பட்டான் அந்த டாக்டர்.
 
“ஷியாமா கொஞ்சம் அமைதியா இருப்பா.” இது அப்பா.
 
“எப்பிடிப்பா அமைதியா இருக்கிறது? அம்மாவோட பேச்சைப் பார்த்தீங்களா? எவ்வளவு நாகரிகமில்லாமப் பேசுறாங்க? வீடுதேடி வந்திருக்கிற பொண்ணுக்கிட்ட இப்பிடித்தான் பேசுவாங்களா?”
 
“சாரிம்மா அபி.” மனைவியின் பேச்சுக்காக இளையவளிடம் மன்னிப்புக் கோரினார் சுந்தர்ராம். 
 
“ஆன்ட்டியை என்னாலப் புரிஞ்சுக்க முடியுது அங்கிள், அவங்கக் கோபம் நியாயந்தான், நான் இல்லேங்கலை, எல்லாத்தையும் மறந்து சீனியர் பொண்ணு பார்க்க வந்திருந்தா நானும் அவர்கிட்ட எதையும் சொல்லியிருக்க மாட்டேன், ஆனா அவர் என்னைப் பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி அவளைப் பத்தித்தான்.”
 
“ஓ…” மகனின் மனது ஓர் ஆண்மகனாக அப்பாவிற்குப் பிடிபட்டது. ஆனால் புரிந்துகொள்ள மறுத்த அம்மா மகனை முறைத்துப் பார்த்தார். 
 
“இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லி ஒரு நிம்மதியான வாழ்க்கையை என்னால வாழ்ந்திருக்க முடியும், ஆனா அது உங்க மகனுக்கு நிம்மதியா அமைஞ்சிருக்காது ஆன்ட்டி.” 
 
“அப்பிடி என்ன வசியத்தைப் பண்ணியிருக்காம்மா அந்தப் பொண்ணு எம் பையனுக்கு?” அழுகையினூடே கேட்டார் கண்மணி.
 
“அதை உங்கப் பையன்தான் சொல்லணும் ஆன்ட்டி, வேற டோனர் பார்க்கலாம்னுதான் நானும் சொன்னேன், ஆனா உங்கப்பையன் அதை ஏத்துக்கலை, உண்மைத் தெரிஞ்சிருந்தா அவளுமே ஒத்துக்கிட்டிருக்க மாட்டா, எல்லாம் சீனியரோட வார்த்தைப் பிரகாரம்தான் நடந்தது.”
 
“அபி, எதுக்கு இந்த விளக்கமெல்லாம்? போதும் விடு.”
 
“இல்லை சீனியர், பேபியை ஆன்ட்டி தப்பாப் புரிஞ்சுக்கக் கூடாது, அதை என்னால ஜீரணிக்கவும் முடியாது, அவ பாவம், வாழ்க்கையில ஏற்கனவே நிறையக் கஷ்டப்பட்டுட்டா, ஒரு குழந்தையைப் பெத்துக்கணும்னு ஆசைப்பட்டாளே தவிர, அது உங்கக் குழந்தையா இருக்கணும்னு அவ என்னைக்குமே நினைச்சதில்லை, இப்பவரைக்கும் மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டு இருக்கிறது நீங்கதானே தவிர அவளில்லை, அதை இங்க இருக்கிற எல்லாரும் புரிஞ்சுக்கிறது நல்லது.” அபியின் பதிலும் கொஞ்சம் காட்டமாக வந்தது.
 
“அஞ்சுவை பத்தி உங்கிட்ட விசாரிச்சது நான், பதில் சொன்னதோட நீ நிறுத்திக்கோ, மீதியெல்லாம் நான் நினைச்சபடிதான் நடந்திருக்கு, இனியும் எல்லாத்தையும் எனக்குப் புடிச்ச மாதிரி நடத்திக்க எனக்குத் தெரியும், ஒரு மகனா என்னைப் பெத்தவங்களை நான் நிறையவே சந்தோஷப்படுத்தி இருக்கேன், என்னைச் சந்தோஷப்படுத்த வேண்டிய கடமை அவங்களுக்கும் இருக்கு, அது அவங்களால முடியலைன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது, என்னோட வழியை நான் பார்த்துக்கிறேன்.” 
 
“ஷியாமா, என்னப்பாப் பேச்சு இது?”
 
“இல்லைப்பா, எனக்கும் மனசிருக்கு, எனக்கும் ஆசைகள் இருக்கு, நானும் சாதாரண மனுஷந்தான், அம்மாவோட ஆசைக்காக, கௌரவத்துக்காக எல்லாம் என்னால வாழ முடியாது, எல்லாத்துக்கும் சரின்னு தலையை ஆட்டிட்டு இந்தப் பொண்ணோட கழுத்துல தாலியைக் கட்ட எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? அதான் அம்மாவோட ஆசையா? உள்ளுக்குள்ள புழுங்கிக்கிட்டு பேருக்கு ஒரு வாழ்க்கையை வாழ்ந்து நாலு புள்ளைங்களைப் பெத்துக்கச் சொல்றாங்களா என்னைப் பெத்த அம்மா?”
 
“ஷியாமா.”
 
“அவங்கதான் பொம்பிளை, அவங்களால என்னைப் புரிஞ்சுக்க முடியலை, நீங்களும் ஏன் ப்பா இப்பிடி இருக்கீங்க? நீங்க ஏன் என்னைப் புரிஞ்சுக்க மறுக்கிறீங்க?” ஷியாமின் குரல் இப்போது கலங்கியது. 
 
“அப்பிடி இல்லை தம்பி, உனக்குப் பண்ணாம வேற யாருக்கு நாங்கப் பண்ணப் போறோம்? நாங்கெல்லாம் கொஞ்சம் பழைய மனுஷங்கப்பா, இதையெல்லாம் ஏத்துக்கக் கொஞ்சம் டைம் குடு, அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.” அதற்கு மேல் பேச எதுவுமே இல்லை என்பது போல அமைதியாகிவிட்டார் அப்பா.
 
“இது என்னோட சந்தோஷம் ப்பா, காலம் கடந்து வந்திருந்தாலும் அதைக் கொண்டாட நான் தயாரா இருக்கேன், நீங்களும் இந்த சந்தோஷத்துல எங்கூட நின்னீங்கன்னா நான் ரொம்பவே சந்தோஷப்படுவேன், அப்பிடியில்லாம உங்களோட விருப்பு வெறுப்புகள்தான் உங்களுக்குப் பெருசாப் பட்டதுன்னா எனக்கு வேற வழியில்லை, என்னோட வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்.” அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல ஷியாம் எழுந்துவிட்டான். அபிநயாவும் அவனுடனேயே புறப்பட்டுப் போய்விட்டாள்.
 
“எப்பிடிப் பேசுறான் பார்த்தீங்களா?” மகன் போனபிற்பாடு கணவரிடம் புகார் படித்தார் கண்மணி. கன்னங்களில் கண்ணீர் வழிந்தது.
 
“அவனை நாமளும் கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணணும்மா, இந்த வீட்டுக்கு ஏற்கனவே கல்யாணமான ஒரு பொண்ணு மருமகளா வர்றதான்னு நாம நினைக்கிறோம், அப்பிடி நம்மப் புள்ளை எதுல குறைஞ்சு போய்ட்டான்னு நாம யோசிக்கிறோம், ஆனாப் பிரச்சினை இப்ப அது இல்லை.”
 
“…”
 
“எத்தனை ஊர்ல வேலை பார்த்திருக்கான், எத்தனைப் பொண்ணுங்களோடப் பழகியிருப்பான்! எந்த இடத்துலயுமே சலனப்படாத அவனோட மனசு அந்தப் பொண்ணைத்தான் ஆசைப்படுதுன்னா, நாம இறங்கி வர்றதுதான் முறை, நியாயம்.” 
 
“…” கண்மணி எதுவும் பேசவில்லை. கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
 
“எவ்வளவோ சந்தோஷங்களையும் பெருமையையும் தேடித்தந்த புள்ளை அவன்! இன்னைக்கு அவனா ஆசைப்பட்டு ஒன்னை நம்மக்கிட்டக் கேட்கிறான், நமக்குப் புடிக்குதோ இல்லையோ, அதை அவனுக்கு நடத்திக் குடுக்கிறதுதான் நம்மக் கடமை கண்மணி, புரிஞ்சுக்கோ.”
 
“அப்பாவும் மகனும் இப்போ ஒரு கட்சியில்லை?”
 
“அவன் சொல்றது எனக்கு நியாயமாப் படுது, இன்னைக்கு அந்தப் பொண்ணைப் பார்த்தேயில்லை? எத்தனை அமைதியா, அழகா இருந்துது, அந்தப் பொண்ணு என்னப் பாவம் பண்ணிச்சு? பெத்தவங்களும் கூடப்பொறந்தவனும் பார்த்து வெச்சவனைக் கட்டியிருக்கு, மனசுல ஆசை இருந்தும் பெத்தவங்கப் பேச்சைக் கேட்டிருக்கு, ஆனா அது வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்தியா? அவ கண்ணு முன்னாடியே புருஷன் இன்னொரு கல்யாணம் பண்ணத் தயாராகி இருக்கான், என்னக் கொடுமைம்மா இதெல்லாம்?” 
 
“…”
 
“இவ்வளவு நடந்தும் அந்தப் பொண்ணு நம்மப் பையன் பின்னாடி வரலை, இது இவனோட ஆசை, அந்தப் பொண்ணைச் சமாளிக்கிறதே உம்புள்ளைக்குப் பெரும்பாடா இருக்கும் போலத் தெரியுது, இதுல நாம வேற அவனுக்குக் கஷ்டத்தைக் குடுக்க வேணாம், இத்தனை நாளும் கல்யாணமே வேணாம்னு இருந்த புள்ளை, இப்பவாவது சம்மதிச்சானே, அதை நினைச்சு சந்தோஷப்படு, எல்லாம் நல்லதாவே நடக்கும்.” சுந்தர்ராம் அத்தோடு எழுந்து போய்விட்டார். கண்மணி மட்டும் தனியே அமர்ந்திருந்தார்.
 
***
வெளியே கதவு தட்டப்படும் ஓசைக் கேட்டது. நேரம் பத்து மணி. இரவு உணவை முடித்துக்கொண்டு அனைவரும் படுக்கைக்குப் போக ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். வேலை விஷயமாக வெளியூர் போயிருந்த புருஷோத்தமன் அன்றைக்குத்தான் வீடு வந்திருந்தான்.
 
“அது யாருங்க இந்நேரம் கதவைத் தட்டுறது?!” ரம்யா கேட்டுக் கொண்டிருக்கும் போதே கோவிந்தராஜன் போய் கதவைத் திறத்தார். 
 
“யாருப்பா அது?” புருஷோத்தமனும் கேட்டபடியே வெளியே வந்தான். வீட்டு வாசலில் தருண் நின்றிருந்தான். ஆயிரம்தான் இருந்தாலும் அவன் அந்த வீட்டு மாப்பிள்ளை. அந்த எண்ணத்தில் புருஷோத்தமன் அவனை வரவேற்கப் போக மகனை ஒரு பார்வைப் பார்த்தார் அப்பா. அவர்களுக்கு நிறைய ரணங்களைக் கொடுத்த மனிதன் அவன். எதையும் மறந்து போக கோவிந்தராஜன் தயாராக இல்லை.
 
“என்ன வேணும்?” குரலில் கொஞ்சம் கடினத்தன்மை இருந்தது. தருண் சட்டென்று பதில் சொல்லி விடவில்லை. அப்படியே நின்றிருந்தான். அவன் கண்கள் சிவந்திருப்பதைப் பார்த்த போது பெரியவருக்கு லேசான சந்தேகம் வந்தது.
 
“அஞ்சனா எங்க?” என்றான். பேச்சு என்னவோத் தெளிவாகத்தான் இருந்தது.
 
“எம் பொண்ணை எதுக்கு நீங்க கேட்கிறீங்க? அதுவும் இந்த நேரத்துல?”
 
“அவளை வெளியே வரச் சொல்லுங்க.”
 
“கொஞ்சம் மரியாதையாப் பேசுங்க, என்னமோ உங்க வீட்டு வேலைக்காரியைக் கூப்பிடுற மாதிரிக் கூப்பிடுறீங்க! இந்தக் காலத்துல அவகூட மரியாதைக் குடுக்கலைன்னாத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டா, தெரியுமில்லை?”
 
“ரிப்போர்ட் வந்த உடனே அவளுக்குத் திமிர் ஏறிடுச்சா? அவளாலக் கொழந்தைப் பெத்துக்க முடியும்னு எனக்குக் காட்டுறாளா?” மதிவதனியின் மகன் நான் என்பதைக் காட்டிக் கொண்டிருந்தான் தருண்.
 
“ஆமா, அதுக்குத்தான் பெத்துக்கப் போறா! அதுக்கு ஏன் உங்களுக்கு வலிக்குது? நீங்க உங்கம்மா பார்க்கிற பொண்ணைக் கட்டிக்கிட்டுச் சந்தோஷமாப் புள்ளை, குட்டிப் பெத்துக்கோங்க.” அந்த வார்த்தைகள் எதிரிலிருப்பவனைத் தாக்கியிருக்க வேண்டும். கோபத்தில் எகிறினான்.
 
“ஆமா! எங்கம்மா காட்டுற பொண்ணைத்தான் நான் கட்டிக்கப் போறேன், நீங்களும் உங்கப் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து வெச்சிருக்கீங்களா?” தருணின் சத்தத்தில் உறங்க ஆயத்தமான பெண்கள் ஹாலுக்கு வந்துவிட்டார்கள். கோவிந்தராஜன் இப்போது கோபத்தின் உச்சத்திற்குப் போய்விட்டார்.
 
“ஆமாய்யா! அவ மட்டும் சம்மதம்னு ஒரு வார்த்தைச் சொல்லட்டும், நானே அவளுக்கு மாப்பிள்ளைப் பார்க்கிறேன்.”
 
“அது எதுக்கு? அவதான் ஏற்கனவே பார்த்து வெச்சிருக்காளே, வந்ததும் வராததுமாப் பெத்துக்க ஆயத்தம் பண்ணினதுலேயேத் தெரியலையா? ஒருவேளை எங்க வீட்டுல இருக்கும் போதே உண்டாகிட்டாளா? அதான் அடிச்சுப் புடிச்சு இங்க ஓடி வந்துட்டாளா?” அவன் பேச்சு வரம்பு தாண்டிப் போனது. இதுவரை அமைதியாக நின்றிருந்த புருஷோத்தமன் இப்போது தருணின் நெஞ்சில் கை வைத்தான். 
 
“இதுக்கு மேல உங்களுக்கு மரியாதையில்லை, தயவுபண்ணி நீங்கக் கிளம்பிடுங்க.” 
 
“கையை எடுய்யா! பொண்ணை ஒழுங்கா வளர்க்கத் தெரியலை, இதெல்லாம் ஒரு குடும்பம்! நீயெல்லாம் ஒரு அண்ணன்!”
 
“ஆமாய்யா! நாங்கெல்லாம் நல்ல குடும்பமில்லைத்தான், நீதான் நல்ல குடும்பத்துல பொறந்தவன், ஒத்துக்கிறோம், இப்ப மூடிக்கிட்டுப் போறியா!” வேட்டியை மடித்துக் கட்டினான் புருஷோத்தமன்.
 
“புருஷோத்தமா,அமைதியா இரு.” இது கோவிந்தராஜன்.
 
“உன்னோட தங்கச்சி மூடிக்கிட்டு இருந்தாளா? வேணும்னுதானே எல்லாம் பண்ணியிருக்கா?”
 
“ஆமா, அவ அப்பிடித்தான் பண்ணுவா! உனக்கென்ன வந்துது? அதான் அவளால பெத்துக்க முடியாதுன்னு அனுப்பிட்ட இல்லை, எந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு இங்க வந்து நின்னுப் பேசுறே? ஒதுங்கிப் போகச் சொல்லி உங்கம்மாதானே சொன்னா? நாங்க ஒதுங்கிட்டோம், நீ உங்கம்மா பார்த்து வெச்சிருக்கிற பொண்ணைக் கட்டிக்கிட்டுப் பெத்துப்போடு, யாரு வேணாம்னா?” விட்டால் புருஷோத்தமன் தருணை அடித்துவிடுவான் போல நின்றிருந்தான்.
 
“ஆமா! எங்கம்மா பார்த்திருக்கிற பொண்ணைத்தான் நான் கட்டிக்குவேன், எங்கம்மா சொல்றதைத்தான் நான் கேட்பேன், என்னப் பண்ணுவ நீ?” திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகள் புருஷோத்தமனை வெகுவாகத் தாக்கியது. தருணின் அருகில் வந்தவன் அவனுக்கு மட்டும் கேட்கும்படியாக வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
 
“அப்போ அம்மாவையே கட்டிக்கிட்டுக் குடும்பம் நடத்த வேண்டியதுதானே! எதுக்கு எங்கப் பொண்ணு வாழ்க்கையைச் சீரழிச்சே?”
 
“ஏய்!” இப்போது தருண் புருஷோத்தமன் மேல் பாய அவனை அசால்ட்டாக அப்புறம் தள்ளினான் புருஷோத்தமன். ஏற்கனவே நிதானமில்லாமல் வந்திருந்த தருண் நிலத்தில் வீழ்ந்தான்.
 
“என்னையா அடிக்கிறே! டைவர்ஸ் கிடைச்சிருங்கிற நம்பிக்கையில ஆடிப்பார்க்கிறாளா உன்னோட தங்கச்சி? அது எப்பிடிக் கிடைக்குதுன்னு நானும் பார்க்கிறேன்!” கறுவிக்கொண்டே தருண் போய்விட்டான். வீட்டிற்குள் வந்த கோவிந்தராஜன் அலைபேசியை எடுத்து அவசரமாக யாரையோ அழைத்தார். மறுமுனை அழைப்பை ஏற்றுக்கொண்டது போலும். மனிதர் படபடவென்று பொரிய ஆரம்பித்துவிட்டார். 
 
“ஏம்மா! ஒதுங்கிப் போங்க ஒதுங்கிப் போங்கன்னு சொன்னீங்க, நாங்கதான் ஒதுங்கிட்டோமில்லை, இப்போ எதுக்கு உங்க மகன் எங்க வீட்டு வாசல்ல வந்து சத்தம் போடுறாரு? உங்களுக்கும் எங்களுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லைன்னு சைன் பண்ணிக் குடுத்தாச்சு, இதுக்கு மேல நாங்க என்னப் பண்ணினா உங்களுக்கென்ன? உங்கப் பையனுக்குந்தான் நீங்கப் பொண்ணுப் பார்க்கிறீங்க, நாங்க என்ன ஏதுன்னு கேட்டோமா? இல்லையில்லை? அப்புறம் எதுக்கு உங்க மகன் இங்க வர்றாரு?” அதற்கு மேல் மதிவதனி லைனில் இருக்கவில்லை. துண்டித்து விட்டார்.
 
“எதுக்குப்பா அந்தப் பொம்பளையோட நீங்கப் பேசுறீங்க? தங்கச்சியோட வாழ்க்கைன்னு பொறுத்துப் போனா அவன் ரொம்பத்தான் ஆட்டம் காட்டுறான், வரட்டும் இனி இந்தப்பக்கம், அவனோட முதுகெலும்பை உடைக்கிறேன்!” புருஷோத்தமனும் அறைக்குள் போய்விட அனைவரும் கலைந்து விட்டார்கள். அஞ்சனா என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக உள்ளே போய்விட்டாள். ஆனால் ரம்யா ஃபோனை போட்டு நடந்தது அனைத்தையும் அபிநயாவிடம் சொல்லிவிட்டாள்.
 
***
அடுத்தநாள் அபிநயாவே ஷியாமை தேடிக்கொண்டு ஹாஸ்பிடல் வரை வந்திருந்தாள். அவளைப் பார்த்த போது ஷியாமிற்கு மிகவும் வேதனையாக இருந்தது. நேற்றைக்கு அவன் அம்மா அவளிடம் பேசிய முறை எவ்வளவு தவறானது? அவளாக இருக்கப்போக நடந்ததைப் பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டாள்.
 
“வா அபி.”
 
“சீனியர், நீங்க பிஸியா?”
 
“இன்னும் கொஞ்ச நேரத்துக்கு நான் ஃப்ரீதான், அபி…”
 
“சொல்லுங்க சீனியர்.”
 
“நேத்து நடந்ததுக்கு நான் திரும்பவும் உங்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேம்மா.”
 
“இதையே எத்தனைத் தடவைச் சொல்வீங்க சீனியர்?”
 
“எத்தனைத் தடவைச் சொன்னாலும் என்னோட மனசு ஆறலையே.”
 
“சீனியர், அதை விடுங்க, நான் இப்போ வேற ஒரு பிரச்சினையோட வந்திருக்கேன்.”
 
“பிரச்சினையா?”
 
“ஆமா, நேத்து அண்ணி ஃபோன் பண்ணினாங்க.”
 
“யாரு? ரம்யாவா?” 
 
“ஆமா.”
 
“என்னவாம்?”
 
“அந்த தருண் இருக்கானில்லை?”
 
“அது யாரு?!” ஷியாமின் கேள்வியில் தலையில் அடித்துக்கொண்டாள் பெண்.
 
“அவன்தான் சீனியர், பேபியோட புருஷன்.” அந்தச் சொற்கள் அவனை ஆத்திரப்படுத்தியது.
 
“அபி, அந்த எருமை மாட்டைப் பத்தி நானே உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு இருந்தேன்.”  
 
“முதல்ல நான் சொல்றதைக் கேளுங்க சீனியர், அந்த விஷயத்தைக் கேட்டதுல இருந்து எனக்கு ஆறலை!” பல்லைக் கடித்தாள் பெண்.
 
“என்னாச்சு?”
 
“நேத்து அந்த ராஸ்கல் பேபியோட வீட்டுக்குப் போயிருக்கான்.”
 
“எதுக்கு?” இப்போது ஷியாமின் தாடை இறுகியது.
 
“போயி தாறுமாறாப் பேசியிருக்கான்.”
 
“அந்த வீட்டுல ஒரு வீரன் இருக்கானில்லை, அவன் என்னத்தைப் பார்த்துக்கிட்டு இருந்தானாம்?”
 
“அங்கிள்தான் முதல்ல பேசியிருக்காரு, அவன் பேச்சு ஒரு மாதிரியா இருக்கவும் அண்ணா பேசியிருக்காங்க, ரெண்டு பேருக்கும் தகராறு ஆகிடுச்சாம்.”
 
“…”
 
“அதுகூடப் பரவாயில்லை சீனியர், போகும்போது என்ன சொல்லியிருக்கான் தெரியுமா?”
 
“என்ன?”
 
“டைவர்ஸ் கிடைக்குங்கிற நினைப்புல ஆடுறியா, அது உனக்கு எப்பிடிக் கிடைக்குதுன்னு நானும் பார்க்கிறேன்னு சொல்லியிருக்கான்.” அபி படபடத்தாள்.
 
“ஓ…” அதற்கு மேல் ஷியாம் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தவன் தொலைபேசியில் ரிசப்ஷனை அழைத்தான். 
 
“நான் சொன்ன அந்த ஃபைலை கொஞ்சம் கொண்டு வாங்க.” அவன் சொன்ன ஐந்தாவது நிமிடம் அவனது மேசை மேல் ஒரு ஃபைல் வைக்கப்பட்டது. அதைத் திறந்த ஷியாம் அதன் முதற்பக்கத்தில் இருந்த ஃபோட்டோவை பெண்ணிடம் காட்டினான்.
 
“இது அவனா அபி?” ஷியாம் காட்டிய படத்தைப் பார்த்த அபிநயா திடுக்கிட்டுப் போனாள். ஏனென்றால் அதில் இருந்தது தருண்தான்.
 
“சீனியர்! இது என்ன ரிப்போர்ட் மாதிரி இருக்கு?! அந்த வெளங்காதவனுக்கு ஏதாவது ப்ராப்ளமா?”
 
“நல்லாப் பார்த்துச் சொல்லு, இது அவன்தானா?”
 
“அவனேதான், அவனை எனக்கு நல்லாவேத் தெரியும் சீனியர்.”
 
“அப்போ டைவர்ஸ் கிடைச்ச மாதிரித்தான், நீ கவலைப்படாதம்மா, ரம்யாக்கும் ஃபோனைப் போட்டுச் சொல்லு.”
 
“சீனியர், தப்பா எதுவும் நடந்திடாதே?”
 
“சேச்சே! ஒரேயொரு ஃபோன் கால், நாய்க்குட்டி மாதிரிச் சொன்ன இடத்துல வந்து கையெழுத்துப் போட்டுட்டுப் போவான்.”
 
“அவனுக்கு என்ன ப்ராப்ளம் சீனியர்? ஒருவேளை பேபியை அவங்கிட்ட இழுக்கிறதுக்கு ஏதாவது ட்ராமா போடுறானா?”
 
“அவனோட உயிருக்கு எந்த ஆபத்துமில்லை, அதால அவன் என்ன ட்ராமா போட்டாலும் யாரும் நம்ப வேணாம், மீதியை நான் பார்த்துக்கிறேன்.” ஷியாமின் வார்த்தைகளில் அபிக்கு யானை பலம் வந்தாற்போல இருந்தது. மேலும் சிறிது நேரம் அவனோடு பேசிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.