siraku12

siraku cp-7d9686e6

சிகு 12

அந்த வீட்டிற்கு முன்னால் ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கினார் கண்மணி. வீடு பார்ப்பதற்கு நல்ல விசாலமாக அழகாகவே இருந்தது. சுற்றிவரத் தோட்டம், குளுகுளுவென்று இருந்தது. கேட்டை திறந்துகொண்டு உள்ளே வந்தார். அவர் இங்கே வருவது அவர் வீட்டில் யாருக்கும் தெரியாது. காலிங் பெல்லை இவர் அடிக்க ஒருசில நொடிகளில் கதவு திறந்தது. இவர் வயதை ஒத்த ஒரு பெண்மணி கதவிற்குப் பின்னால் நின்றிருந்தார்.
 
“வாங்க… யார் வேணும்?” புன்னகை முகமாகக் கேட்டார் வெண்பா.
 
“இங்க… அஞ்சனா எங்கிறது…”
 
“எம் பொண்ணுதான், உள்ள வாங்க.” கதவை நன்றாகத் திறந்துவிட்ட வெண்பா வந்தவரை உள்ளே அழைத்து வந்தார். மகளுக்குத் தெரிந்தவர்கள் போலும் என்பது அவரது நினைப்பு. வீட்டில் ஆண்கள் அப்போது இருக்கவில்லை. இருவரும் வெளியே போயிருந்தார்கள்.
 
“அஞ்சு, கொஞ்சம் வெளியே வாம்மா.” உள் நோக்கிக் குரல் கொடுத்தவர், 
 
“நீங்க உட்காருங்க.” என்றார் கண்மணியை பார்த்து. 
 
“இருக்கட்டும்.” வீட்டை நோட்டமிட்டபடி அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தார் பெரியவர். அப்போது காலை வேளை. மிகவும் அயர்வாக இருந்ததால் கட்டிலில் சாய்ந்திருந்தாள் அஞ்சனா. அம்மா அழைக்கவும் எழுந்து வெளியே வந்தாள். நைட்டியில் தலை கலைந்து போய்க்கிடக்க வெளியே வந்தது பெண். இவள் வெளியே வருவதற்கும் பொருட்கள் வாங்கக் கடைக்குப் போயிருந்த ரம்யா வீட்டினுள் வருவதற்கும் சரியாக இருந்தது.
 
“இவங்க உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்காங்க அஞ்சு.” அம்மாவின் அறிமுகத்தைத் தொடர்ந்து பார்வையைத் திருப்பிய பெண் அதிர்ந்து போனது. ஷியாமின் தாயை அங்கே, அப்போது அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. இதுவரைச் சுழன்று கொண்டிருந்த தலை இப்போது இன்னும் வேகமாகச் சுழல ஆரம்பித்தது.
 
“வாங்க.” இது அஞ்சனா. நேற்றைய விசேஷ வீட்டில் இவரை அவள் பார்த்திருந்ததால் இலகுவாக அடையாளம் கண்டு கொண்டாள். உள்ளே நுழைந்த ரம்யாவும் பேச வகையற்றவள் போலத்தான் நின்றிருந்தாள். இளையவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
 
“உட்காரு.” கொஞ்சம் அதிகாரமாகவே வந்தது குரல். அந்தக் குரலில் இப்போது வெண்பா திகைத்துப் போனார். யாரோ ஒரு பெண், தன் மகளைப் பார்க்க வந்திருப்பதாகவே அவர் நினைத்தார். ஆனால் அதே பெண் தன் மகளிடம் இந்தத் தொனியில் பேசுவது அவருக்கு அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை. 
 
“இவங்க யாரு அஞ்சு?” இது அம்மாவின் விசாரணை. கண்மணியின் கண்கள் இப்போது தங்கள் வீட்டு வாரிசைச் சுமந்திருப்பவளை ஆராய்ந்தது. முகம் சோர்ந்து கிடந்தாலும் பார்க்க அத்தனை அழகாக இருந்தாள். தாய்மையின் எழில் அவளிடம் பரிபூரணமாகக் கொட்டிக் கிடந்தது. அழகிதான்! அதை அவர் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. தன் மகன் இந்தப் பெண்ணிடம் மயங்கிக் கிடப்பதிலும் அவருக்கு ஆச்சரியம் இல்லைதான். ஆனால் அது காலங்கடந்த மயக்கம் என்பதுதான் அவர் பிரச்சனையே!
 
“அதான் அம்மா கேட்கிறாங்கல்லை, பதில் சொல்லு.” இது கண்மணி. இதற்கு மேலும் பேசாமல் இருப்பது நல்லதல்ல என்று புரிய அம்மாவைப் பார்த்தாள் அஞ்சனா.
 
“நேத்து அபி வீட்டுக்கு இவங்களும் வந்திருந்தாங்கம்மா.”
 
“ஓ… அபிக்கு தெரிஞ்சவங்களா?” ஆசுவாசமாக உணர்ந்தார் வெண்பா. ஏனென்றால் வந்ததிலிருந்து கண்மணியின் பார்வையும் பேச்சும் தன் மகளைக் குற்றம் சாட்டுவது போலவே இருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை.
 
“அவ்வளவுதானா?” மீண்டும் கண்மணியின் குரலில் வேறுபாடு. 
 
“ஸ்கூல் காலத்துல எனக்கு சீனியரா இருந்த பையனோட அம்மா இவங்க, அதுவும் நேத்துத்தான் தெரிஞ்சுது.” உனக்கும் எனக்குமான தொடர்பு அவ்வளவுதான் என்று அழகாகச் சொல்லி முடித்தாள் பெண்.
 
“ஆனா அவன் அப்பிடிச் சொல்லலையே!” சட்டென்று சொன்னார் கண்மணி. கையிலிருந்த பொருட்களை கிச்சனில் வைத்துவிட்டு வந்தாள் ரம்யா. கண்மணியின் வருகை அத்தனை நல்லதிற்கில்லை என்று அவளுக்குத் தோன்றியது. அபிநயாவிற்கு அவசரமாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள். 
 
“மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு எனக்குத் தெரியாதுங்க, ஆனா என்னோட நிலைப்பாடு இதுதான், அதனால நீங்கக் கவலைப்படத் தேவையில்லை.” வந்திருப்பவரின் மனநிலை என்னவென்று அஞ்சனாவிற்கு புரிந்துவிட்டது. தெளிவாகப் பதில் சொன்னாள்.
 
“அப்போ உன்னோட வயித்துல வளர்றதுக்கு‌ என்ன முடிவு?” அம்மாவின் முன்னால் கேட்கப்பட்ட அந்தக் கேள்வியை அஞ்சனா ரசிக்கவில்லை. சட்டென்று அவரை அவள் திரும்பிப் பார்க்க வெண்பாவின் முகத்தில் கலவரம் தெரிந்தது.
 
“அபிதான் எல்லாம் பண்ணினா, எனக்குக் கொழந்தைங்கக் கிடையாது, ஐவிஎஃப் பண்ணிக்கிட்டேன், எல்லாம் சரியா இருக்கும்னு அவளை நம்பி அத்தனையையும் ஒப்படைச்சேன், இப்பிடியொரு தப்பு நடக்கும்னு தெரிஞ்சிருந்தா வேற டாக்டரை நான் பார்த்திருப்பேன்.”
 
“தப்பா?! என்னத் தப்பு அஞ்சு?!” பதறியபடி கேட்டார் வெண்பா.
 
“ஒன்னுமில்லைம்மா, இவங்களுக்குத் தப்பான தகவல் கிடைச்சிருக்கு, சொன்னாப் புரிஞ்சுக்குவாங்க.” அம்மாவைச் சமாதானம் செய்துவிட்டு கண்மணியிடம் திரும்பியது பெண்.
 
“உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன், எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி அந்த வாழ்க்கை ஒத்துவராம டைவர்ஸுக்கு அப்ளை பண்ணியிருக்கேன், இன்னொரு கல்யாணம் பண்ணுற ஐடியாவெல்லாம் எனக்குக் கிடையாதும்மா, அதாலதான் ஐவிஎஃப் பண்ணிக்கிட்டேன், இந்த விளையாட்டோட விதிமுறைகள் என்னன்னு தெரிஞ்சுதான் விளையாட வந்திருக்கேன், நானும் ஒரு நல்ல ஜாப்ல இருந்தவதான், என்னால என்னோட குழந்தையை வளர்க்க முடியும், அதையும் தாண்டிக் குடும்பம் இருக்கு, உங்களோட கவலை அவசியமில்லாதது.” வாழ்க்கையில் ஒரு குறுகிய காலம் ரணப்பட்டுக்கிடந்த அனுபவம் அஞ்சனாவை தெளிவாகப் பேச வைத்தது. தன் எதிரிலிருக்கும் பெண்மணியின் எண்ணம் தவறு என்று விளக்கிவிடும் நோக்கத்தில் பேசினாள் பெண்.
 
“அஞ்சும்மா! இங்க என்ன நடக்குது?!” பதறினார் வெண்பா.
 
“அத்தை, நீங்கக் கொஞ்சம் உள்ள வாங்க, அவங்கப் பேசிக்கட்டும்.” படபடத்த மாமியாரை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள் ரம்யா. ஹாலில் இப்போது இருவரும் தனியாக விடப்பட்டிருந்தார்கள். கண்மணி அந்தச் சின்னப்பெண்ணைச் சிறிது நேரம் பார்வையிட்டார். மனது கொஞ்சம் கனக்கத்தான் செய்தது. சிறுவயதிலேயே அனைத்தையும் தொலைத்துவிட்டு நிற்கிறாள். இனி அவள் வாழப்போகும் அவளது வாழ்க்கைக்கான ஆதாரம் அவள் குழந்தைதான். அதாகப்பட்டது… கண்மணியின் குடும்ப வாரிசு! 
 
“நான் பேசுறது, நடந்துக்கிறது எல்லாம் உனக்கு வினோதமா இருக்கலாம்மா, ஆனா என்னோட இடத்துல இருந்து நீ யோசிச்சுப் பாரு, உள்ளதும் ஒரே ஒரு பையன், அவனுக்கு ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிப் பார்க்க நான் ஆசைப்படுறது தப்பில்லையே!”
 
“நீங்க எந்தத் தப்பும் பண்ணலை.” நிர்மலமான முகத்தோடு தெளிவாக வந்தது பதில்.
 
“ஆனா இந்தக் கொழந்தை…”
 
“அதுக்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை…”
 
“அப்பிடி நீயே உன்னை ஏமாத்திக்கலாம், ஆனா உண்மைத் தெரிஞ்சதுக்கு அப்புறம் என்னால சும்மா இருக்க முடியாதே!” அவளை மீறிக்கொண்டு பேசினார் கண்மணி.
 
“அதுக்காக?! என்னப் பண்ணுறதா உத்தேசம்?!” அவள் குரலில் உஷ்ணம்.
 
“அது எங்க வீட்டு வாரிசு.” பெரியவரின் வார்த்தைகளை வைத்து அவர் மனதைப் படித்துவிட்டாள் அஞ்சனா. ஏற்கனவே திருமணமானப் பெண் அவருக்குத் தேவையில்லை. ஆனால் அவள் வயிற்றில் வளரும் அவர்களின் குடும்பவாரிசு அவருக்குத் தேவைப்படுகிறது.
 
“இங்கப்பாருங்கம்மா, இது என்னோடக் கொழந்தை, இதுக்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, இதை நீங்க நல்லாப் புரிஞ்சுக்கோங்க, இதை நல்லா வளர்க்க என்னால முடியும்.”
 
“யாரோ ஒரு கொழந்தை எப்பிடி வளர்ந்தாலும் எனக்கு அதைப்பத்திக் கவலையில்லை, ஆனா இது எங்க வீட்டு வாரிசு.”
 
“அப்பிடியொரு எண்ணம் உங்க மனசுல இருந்ததுன்னா அதை இப்பவே விட்டிருங்கம்மா, இது என்னோட கொழந்தை.” இந்த ஐந்து வருடங்களில் அவள் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போன சொர்க்கம் இது. அதைப் பொக்கிஷம் போலக் காத்து வளர்க்க நினைத்திருந்தாள் அஞ்சனா. அதை இன்னொருவர் சொந்தம் கொண்டாடுவதை அவள் கிஞ்சித்தும் விரும்பவில்லை. அதுபோன்ற பேச்சுக்கள் தன் காதில் விழுவதையே அவள் விரும்பவில்லை. கண்மணியின் பேச்சு அந்தத் திக்கில் பயணித்துக் கொண்டிருக்க அதை இயன்ற மட்டும் முறையடிக்க நினைத்தது பெண். 
 
இயல்பில் அஞ்சனா இதுபோலெல்லாம் பேசும் பெண்ணல்ல. மிகவும் அமைதியாகத்தான் இருப்பாள். ஆனால் தன் சொர்க்கத்தை இன்னொருவர் சொந்தம் கொண்டாட நினைத்த போது அவளால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அவள் இயல்பு அங்கே தொலைந்து போனது. அப்போது சர்ரென்று அந்த ப்ளாக் ஆடி அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கப் பெண்கள் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். காரிலிருந்து இறங்கிய ஷியாம் வேகமாக வீட்டினுள் வந்து கொண்டிருந்தான். இப்போது கண்மணியின் பார்வை இளையவளைக் குற்றம்சாட்டியது. 
 
“அம்மா, நீங்க இங்க என்னப் பண்ணுறீங்க?” அடக்கிய கோபம் அவன் குரலில். ஷியாமை பார்த்த மாத்திரத்தில் அஞ்சனாவின் கோபம் கரைபுரண்டது.
 
“என்ன நடக்குது சீனியர் இங்க? நீங்க உங்க மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?” இதுவரைத் தன்னோடு ஒரு வார்த்தைப் பேச ஆயிரம் முறை யோசிக்கும் பெண் சரளமாகப் பேசவும் ஷியாம் முதலில் திகைத்துப் போனான்.
 
“அவ எங்க உங்களோட ஃப்ரெண்ட்? அவ எனக்கு ஃப்ரெண்டா இல்லை உங்களோட ஸ்பையா? எனக்குச் சகாயம் பண்ணுடீன்னு சொன்னா வில்லங்கத்தைக் கூட்டி வெச்சிருக்கா?!” அஞ்சனா கொதித்துக் கொண்டிருந்தாள். அவளின் பேச்சு கண்மணியை கோபப்படுத்திய போதும் அமைதியாக நின்றிருத்தார். மகனின் முன்பாக வார்த்தையாட அவர் விரும்பவில்லைப் போலும்.
 
“அஞ்சு, நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா.” தன்னிடம் சீறிய மகன் அந்தப் பெண்ணிடம் தழைந்து போவதை ஆச்சரியமாகப் பார்த்தார் கண்மணி. இதுவரை உள்ளே தன் அத்தையை அமைதிப் படுத்திவிட்டு நின்றிருந்த ரம்யா வெளியே வந்தாள். கூடவே வெண்பாவும் வந்துவிட்டார். அப்போது அபிநயாவின் காரும் வீட்டின் முன்பாக வந்து நிற்க அவளும் இறங்கி வேகமாக உள்ளே ஓடி வந்தாள்.
 
“அஞ்சு, நீ இப்பிடி உட்காரு.” ரம்யா தன் நாத்தனாரிடம் பேசிக் கொண்டிருக்க,
 
“அபிம்மா! இங்க என்ன நடக்குது? யாரும்மா இவங்கெல்லாம்?” என்று கண்ணீர் வடித்தார் வெண்பா.
 
“ஒன்னுமில்லை ஆன்ட்டி, நீங்கக் கொஞ்சம் அமைதியா இருங்க.” இது அபிநயா. ஓடி வந்ததில் அவளுக்கு மூச்சு வாங்கியது. 
 
“எல்லாரும் என்னை அமைதியா இருக்கச் சொல்றீங்களே தவிர என்ன நடந்ததுன்னுச் சொல்ல மாட்டேங்கிறீங்க! இவங்க யாரு? எதுக்கு அபி நம்ம அஞ்சுவை இவங்கப் பார்க்க வந்திருக்காங்க? எதுக்கு எம் பொண்ணு இவ்வளவு டென்ஷன் ஆகுறா? இந்நேரத்துல அவளுக்கு ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது? ஆண்டவா! ஏன் எம் பொண்ணை மேல மேல சோதிக்கிறே?” தன் மகளின் கர்ப்பகாலத்தை நினைத்து ஒரு தாயாக வெண்பா அழ ஆரம்பித்துவிட்டார். இப்போது ஷியாமின் பார்வை தன் தாயின் மீது உஷ்ணமாக இறங்கியது. 
 
“பேபி, நீ ஓகேவா? டென்ஷனை ஏத்திக்காதே ப்ளீஸ்.”
 
“என்ன அபி இதெல்லாம்? நான் என்னப் பண்ணச் சொன்னா நீ என்னப் பண்ணி வெச்சிருக்கே?!” இதுவரை கண்மணியோடு மல்லுக்கு நின்ற பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. 
 
“பேபி, எல்லாம் உன்னோட நன்மையை நினைச்சுத்தான் பண்ணினேன், உன்னோட நன்மை மட்டுமில்லை, இதுல நிறையப் பேருக்கு நல்லது இருக்கு.”
 
“யாரைப் பத்தியும் நான் கவலைப்படலை, எனக்கு அந்தத் தகுதியும் இல்லை, ஒரு கொழந்தையைப் பெத்துக்கணும்னு ஆசைப்பட்டேன், எல்லாப் பொண்ணுங்களுக்கும் இருக்கிற சாதாரண ஆசைதானே இது? அதுல ஏன் அபி இவ்வளவு சிக்கலை உருவாக்கி வெச்சிருக்கே?”
 
“அப்பிடியில்லை பேபி.”
 
“அப்பிடியில்லைன்னா எதுக்கு இவங்க இங்க வந்து நிற்கிறாங்க? எங்க வீட்டு வாரிசு, எங்க வீட்டு வாரிசுன்னு எதுக்கு அபி சொல்றாங்க? எதுக்கு இப்பிடியொரு சிக்கலை உருவாக்கி வெச்சிருக்கே அபி?” கேள்விகளின் கனம் தாங்க முடியாமல் அபிநயா தன் சீனியரை இப்போது பார்த்தாள். அடுத்த நொடி அஞ்சனாவின் அருகில் வந்தான் ஷியாம்.
 
“அஞ்சு, சில உண்மைகளை நீ ஏத்துக்கிறது நல்லது, உன்னோட வயித்துல வளர்றது நம்மக் கொழந்தை.” ஆணித்தரமாக வந்து வீழ்ந்தன வார்த்தைகள். இப்போது வெண்பா மலைத்துப் போனார். ரம்யாவை அவர் திரும்பிப் பார்க்க ஆமென்பது போலத் தலையாட்டினாள் பெண்.
 
“இல்லை! இது என்னோட கொழந்தை!” சத்தத்தை அதிகரித்துத் தன் பிடியிலேயே உறுதியாக நின்றாள் அஞ்சனா. சட்டென்று அவள் முகத்தில் ஒரு அசௌகரியம் தோன்றியது. அதை ஷியாம் கவனித்தான். ஆனால் அபி தன் தோழியைச் சமாதானம் செய்வதிலேயே குறியாக இருந்தாள்.
 
“ஓகே பேபி, இது உன்னோடக் கொழந்தைதான், வீணா நீ டென்ஷனை ஏத்திக்காதே, அது உனக்கு நல்லதில்லை, வா, உள்ள வந்து நீ ரெஸ்ட் எடு.” ஆறுதல் வார்த்தைகள் சொன்னபடி தன் தோழியின் கரம் பிடித்தாள் அபிநயா.
 
“அபி…” அதற்கு மேலும் பேச முடியாமல் அவளோடு கூட நடந்தாள் அஞ்சனா. ஆனால் அவளின் நடையில் தெரிந்த மாற்றத்தை ஒரு சிறந்த அனுபவம் வாய்ந்த டாக்டரான ஷியாமால் உணர முடிந்தது.
 
“அபி நில்லு!” அஞ்சனாவோடு உள்ளே போகவிருந்த பெண்ணை நிறுத்தினான் ஷியாம். 
 
“சீனியர், மேல மேலப் பேச வேணாம், நீங்க ஆன்ட்டியை கூட்டிக்கிட்டுக் கிளம்புங்க.” அபியின் வார்த்தைகளை அவன் காதில் வாங்கவில்லை. அவன் கண்கள் அஞ்சனாவையே ஆராய்ந்தன.
 
“அஞ்சு, உனக்கு என்னப் பண்ணுது?” அவன் வார்த்தைகளில் இப்போது அபிநயா தன் தோழியைப் பார்த்தாள். 
 
“பேபி! ஏன் உன்னோட முகம் ஒருமாதிரியா‌ இருக்கு?!” அபிக்கும் தோழியின் முகபாவம் அத்தனை நல்லதாகத் தெரியவில்லை. ஷியாமின் வலது கரம் இப்போது அஞ்சனாவின் வயிற்றில் படிந்தது. இதுவரைப் பிடிவாதத்தோடு அவனுடன் விவாதம் செய்துகொண்டிருந்த பெண்ணின் கண்களில் இப்போது சரசரவென்று நீர் கோர்த்தது.
 
“ஒன்னுமில்லை, நீ பயப்படாதே! அபி, நீ சீக்கிரமா ஆம்புலன்ஸ் கால் பண்ணு, லதா மேடமோட ஹாஸ்பிடல்லுக்கு ஃபோனை போட்டுச் சீக்கிரமா ஸ்கேனுக்கு ரெடி பண்ணச் சொல்லு.” ஆணைகள் பயங்கர வேகத்தில் வந்து கொண்டிருந்தன. இருந்தாலும் அவன் கரம் அவள் வயிற்றை விட்டு நீங்கவில்லை. ஆம்புலன்ஸ் என்று சொன்ன பிற்பாடுதான் அங்கிருந்த மற்றைய பெண்களுக்கு நிலைமையின் வீரியம் உறைத்தது.
 
“என்னாச்சு?!” ரம்யா ஓடிவந்தாள்.
 
“ஐயையோ! எம் பொண்ணுக்கு என்னாச்சு?!” வெண்பாவும் பதறியபடி மகளின் அருகில் ஓடிவந்தார். கண்மணியின் முகத்திலும் பதட்டம் ஏற்பட்டது.
 
“ஒன்னுமில்லைம்மா, நீங்கப் பதறாதீங்க, நான் என்னன்னுப் பார்க்கிறேன்.” 
 
“தம்பி நீங்க டாக்டரா? அபிம்மா, இந்தத் தம்பி டாக்டரா?” வெண்பாவின் கேள்விக்குப் பதில் சொல்லும் நிலைமையில் அபி அப்போது இல்லை. அவள் அலைபேசியோடு போராடிக் கொண்டிருந்தாள்.
 
“ரொம்பப் பிரபலமான டாக்டர்.” தன் அத்தையின் காதில் முணுமுணுத்தாள் ரம்யா. 
 
“சீனியர், ஆம்புலன்ஸ் வருது, லதா மேடம்கிட்டயும் நான் பேசிட்டேன்.”
 
“குட், நீ அஞ்சுவோட ஹாஸ்பிடலுக்கு போ அபி, நான் அம்மாவை ட்ராப் பண்ணிட்டு நேரா அங்க வந்திடுறேன்.”
 
“ஐயையோ! சீனியர்!” அலறினாள் அபிநயா.
 
“நீங்க பேபிகூடப் போங்க, நான் ஆன்ட்டியை ட்ராப் பண்ணிடுறேன், இந்த உலகத்துல என்னோட அம்மா அப்பாக்கு ஏதாவது நோய் வந்தாக்கூட‌ என்னைப் பொறுத்தவரைக்கும் அவங்க வெறும் பேஷண்ட்தான், ஆனா என்னால பேபியை…” அதற்கு மேல் அஞ்சனாவை பார்க்கவே மறுத்தாள் அபி.
 
“சீனியர்…” அந்தக் கலங்கிய குரலில் ஷியாம் நொறுங்கிப் போனான். அவள் உயிரானவளின் உருக்கம் நிறைந்த குரல்.
 
“ஒன்னுமில்லை, அதான் நான் கூடவே இருக்கேனில்லை, நீ பயப்படாதே, எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.” அவன் ஆறுதல் மொழிகள் அவளிடம் எடுபடவில்லை. 
 
“ரொம்ப நாளா ஆசைப்பட்டது சீனியர்… எனக்கு இல்லைன்னு ஆகிடுமா?” அவள் கண்கள் கரையுடைந்து பெருகியது.
 
“இங்கப்பாரு அஞ்சு, நிறைய லேடீஸுக்கு இது மாதிரி ஆகிறதுண்டு, முக்கியமா வேலைக்குப் போற லேடீஸுக்கு, ஸ்ட்ரெஸ் ஜாஸ்தியாகும் போது இது மாதிரி ப்ளீட் ஆகிறது சகஜந்தான், நீ எதை நினைச்சும் வொர்ரி பண்ணிக்காதே.” அப்போதுதான் அங்கு நின்றிருந்த பெண்களுக்கு அஞ்சனாவின் பிரச்சனை என்னவென்றுப் புரிந்தது. திடுக்கிட்டுப் போனார்கள். வெண்பா அருகிலிருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்துவிட்டார். 
 
“அட ஆண்டவா! எம் பொண்ணுக்கு ஏம்பா இவ்வளவு கஷ்டங்களைக் குடுக்கிறே? அப்பிடி என்னைய்யா நாங்கப் பாவம் பண்ணிட்டோம்?” 
 
“ஆன்ட்டி ப்ளீஸ்… இப்பிடியெல்லாம் அழாதீங்க, பேபிக்கு ஒன்னும் ஆகாது.” வாய் பேசினாலும் அபியின் குரல் நடுங்கியது. அப்போது வெளியே ஆம்புலன்ஸ் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
 
“அஞ்சு, என்னைப் பாரு! பாஸிட்டிவ்வா மட்டுந்தான் தின்க் பண்ணணும், ஒன்னுமாகாது, என்னைத் தாண்டி உனக்கு ஒன்னுமே ஆகாது, நம்பிக்கையை விட்டுடக் கூடாது.” குழந்தைக்குச் சொல்வது போலச் சொல்லிக் கொண்டிருந்தான் டாக்டர். அந்த வார்த்தைகள் சிறிதே நம்பிக்கையைக் கொடுக்க அவன் முகத்தைப் பார்த்துத் தலையாட்டியது பெண்.
 
“குட்! இப்போ மெள்ள உன்னால நடக்க முடியுமா?” அள்ளிக்கொள்ளத் துடித்த கைகளுக்கு விலங்கிட்டுக் கொண்டே கேட்டான். இரண்டெட்டு நடந்தது பெண். கூடவே அவனும் நடந்தான். அவன் கை இன்னும் அவள் வயிற்றிலேயே இருந்தது.
 
“சீனியர்…” உதடு பிதுங்கச் சட்டென்று கேவினாள் அஞ்சனா. நடக்கும் போது இன்னுமே அவளால் ஈரலிப்பை உணர முடிந்தது. அவள் வயிற்றிலிருந்த அவன் கரத்தை எடுத்துவிட்டு முழுதாக அவளைப் பார்த்தபடி அவள் முன்னால் வந்து நின்றான் ஷியாம்.
 
“அஞ்சனா, என்னைப் பாரு, என்னோட முகத்தைப் பாரு, நான் இப்போ உன்னோட டாக்டர், உனக்கு அது தெளிவாப் புரியுதில்லை?”
 
“ம்…” கண்ணீரோடு தலையாட்டியது பெண்.
 
“குட், இப்போ நாம ரெண்டு பேரும் டாக்டர் லதாவோட ஹாஸ்பிடலுக்கு போகப் போறோம், அங்கப் போயி நான் சின்னதா ஒரு ஸ்கேன் உனக்குப் பண்ணப் போறேன், உனக்கு அது ஓகேவா?”
 
“ம்…” மீண்டும் ஆமோதிப்பு. அதற்கு மேலும் தாமதிக்காமல் பெண்ணை அலாக்காகத் தன் கைகளில் ஏந்திக்கொண்டான் ஷியாம். இந்த நொடிக்காக அவன் வாழ்க்கையில் பலநாட்கள் ஏங்கியதுண்டு. ஆனால் அந்த நொடி தன் வாழ்க்கையில் இப்படியொரு நாளில் வந்திருக்கவே வேண்டாம் என்று தோன்றியது. ஆம்புலன்ஸ் ஊழியர்களின் உதவியோடு உள்ளே அவளை வாகாகப் படுக்க வைத்த ஷியாம் வெளியே வந்தான்.
 
“அபி, அம்மாவை வீட்டுல விட்டுட்டு ஹாஸ்பிடல் வா.” ஒரு மகனாக அவன் கடமையைச் செய்தானே தவிர அம்மாவை அவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
 
“இந்த வீட்டுல இருந்து யாராவது அஞ்சுவை பார்க்க வர்றதா இருந்தா உங்கப் பிரச்சினைகளை மூட்டைக் கட்டி வெச்சிட்டுச் சிரிச்ச முகமாச் சந்தோஷமா வாங்க.” இது ரம்யாவுக்கான செய்தி.
 
“டாக்டர் தம்பி, எம் பொண்ணுக்கு எதுவும் ஆகிடாதே?” வெண்பா ஓடிவந்து ஷியாமிடம் கேட்டார்.
 
“ஆகாது… ஆகக்கூடாது, நீங்களும் கடவுளை வேண்டிக்கங்க.” அதற்கு மேல் ஆம்புலன்ஸ் அங்கே நிற்கவில்லை. ஷியாம் அவள் அருகில் அமர்ந்திருந்தான்.  ஆம்புலன்ஸில் இருந்த நர்ஸ் கொடுத்த அவளது ரத்த அழுத்தப் பதிவு அதிகமாக இருந்தது. 
 
“என்னாச்சு?”
 
“ப்ரஷர் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு.” அவன் அவளிடம் எதையும் மறைக்கவில்லை. ஏதோ ஞாபகம் வந்தவன் போல தனது அலைபேசியை எடுத்தவன் அதிலிருந்த காணொளி ஒன்றை ஓட விட்டான்.
 
“இதைப் பாரு அஞ்சு.” திரையை அவள் புறமாக அவன் திருப்ப அதில் அழகானதொரு குழந்தையை ஏந்தியபடி ஒரு தம்பதியினர் ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த மாத்திரத்தில் பெண்ணின் முகத்தில் புன்னகைத் தோன்றியது.
 
“ஐவிஎஃப் ல பொறந்தக் கொழந்தை இது, அந்தப் பொண்ணுக்கு ஒரு சின்ன ப்ராப்ளம் இருந்தது.”
 
“ஓ…”
 
“பொறக்காதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்திருக்காங்க, இந்தக் கொழந்தைப் பொறந்ததுல இருந்து நல்ல நாள் பண்டிகைன்னா எனக்கு மறக்காம கால் பண்ணிடுவாங்க, அப்பப்ப ஸ்வீட், பழம்னு ஏதாவது வந்துக்கிட்டே இருக்கும்.” சொல்லிவிட்டு அவன் சிரித்தான். அவள் சிந்தனையின் போக்கை மாற்ற நினைக்கும் முயற்சி இது.
 
“கொழந்தை ரொம்ப அழகா இருக்கு.” அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. சூழ்நிலை கொஞ்சம் இதமாக மாறிக் கொண்டிருந்தது.
 
“ம்… இந்த வீடியோ பாரு.” அவன் இன்னொரு காணொளியைக் காட்ட அதில் இரட்டைக் குழந்தைகள் இருந்தன. குழந்தைகளை மாத்திரம் வீடியோ எடுத்து அனுப்பி வைத்திருந்தார்கள். இரண்டு குழந்தைகளும் ஒன்றோடொன்று சண்டைப் போட்டுக் கொண்டிருந்தன.
 
“டுவின்ஸா?!” அவள் வாயைப் பிளந்தாள்.
 
“ம்… ஆமா, ரெண்டும் சரியான வாலுங்க, சண்டைப் போட்டுக்கிறதைப் பார்த்தியா? போன வாரங்கூட வீட்டுக்கு வந்துட்டுப் போனாங்க.” 
 
“பேஷண்ட்ஸ் இந்தளவு டாக்டர்ஸோட தொடர்புல இருப்பாங்களா?”
 
“ம்… இல்லைன்னு ஆனதுக்கு அப்புறமாத்தானே நம்மக்கிட்ட வர்றாங்க, ஒருகட்டத்துல அவங்க ஆசைப்பட்டது நடக்கும் போது அவங்களால நம்மளை மறக்க முடியாது, அதுலயும்… ஒன்னுமே இல்லைன்னு இருந்தவங்க கைல ரெண்டாக் கிடைக்கும் போது எப்பிடி இருக்கும்?”
 
“ஆமால்லை!” ஆனந்தப்பட்ட பெண்ணின் முகத்தையே பார்த்திருந்தான் ஷியாம். உன் கைகளிலும் இரண்டாகக் கிடைக்கும் போது என்னை நீயும் மறக்கமாட்டாய் என்ற சேதி அதில் இருந்தது.