siraku15

siraku cp-50902a5a

சிறகு 15

பொழுது புலர்ந்திருந்தது. படுக்கையின் வித்தியாசத்தை உணர்ந்த அஞ்சனா மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். கை இயல்பாக வயிற்றைத் தடவிக்கொடுத்தது. முகம் முழுவதும் புன்னகையால் மலர்ந்து போக அருகிலிருந்த ஃபைலை எடுத்து அதிலிருந்த படத்திற்கு முத்தம் வைத்தாள். வாஷ் ரூம் போகவேண்டும். அதிகம் சிரமப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று நர்ஸ் சொல்லியிருந்ததால் மெதுவாகக் காலை நிலத்தில் வைத்தவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அந்த ரூமில் கிடந்த சோஃபாவில் கால்நீட்டிச் சுகமாகப் படுத்திருந்தான் ஷியாம். 
 
‘இரவு முழுவதும் இவன் இங்கேயாப் படுத்திருந்தான்?!’ எண்ணமிட்டபடி அவனருகே சத்தமின்றிப் போய் நின்றாள் பெண். தலையணையில் முகம் புதைத்துக் குழந்தைப் போலப் படுத்திருந்தான். படுத்திருந்த கட்டிலை அவள் திரும்பிப் பார்க்க அங்கிருந்த தலையணைகளில் ஒன்றைக் காணவில்லை. 
ஒரு காலத்தில், அதாவது அவர்கள் படிக்கும் காலத்தில் பாடசாலையின் ஹீரோ அவன். தேசிய பாடசாலை என்பதால் எல்லா வகையிலும் அவர்கள் பள்ளிக்கூடம் சிறந்ததாகவே இருக்கும். நன்றாகப் படிக்கும் மாணவன் இவன். படிப்பு மட்டுமல்ல, கவிதை எழுதுவதிலும் அவன் சிறந்தவன். எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொள்வான். சாதாரண தரத்தில் அதிசிறந்த முடிவுகளைப் பெற்றிருந்தான். பாடசாலையின் நம்பிக்கை நட்சத்திரமே அவன்தான். உயர்தரத்திற்கென விஞ்ஞானத் துறையைத் தெரிவுசெய்திருந்தான். அப்போதிருந்தே அவனைச் சாதாரண மாணவனாக யாரும் பார்த்ததில்லை. ஆசிரியர்கள் அனைவரும் அவனை ஒரு டாக்டராகத்தான் பார்த்தார்கள். அனைவரது மனதிலும் அப்படியொரு நிச்சயம்.
ஷியாமின் அபாரத் திறமையின் மேல் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. 
 
ஆனால் உயர்தரத்தின் முதல் முயற்சியில் ஷியாம் சறுக்கியிருந்தான். ஒட்டுமொத்தப் பாடசாலையே அதிர்ந்து போனது. இன்றுவரை அஞ்சனாவிற்குமே அது புரியாத புதிர்தான். ஆனால் அவன் வாழ்க்கையில் சந்தித்த முதற் தோல்விக்கு முழுமுதற் காரணம் அவள்தான் என்பதை அவள் அறியமாட்டாள். ஷியாமின் கவனம் அந்த அழகுப் பதுமையால் படிப்பிலிருந்து சிதறிப்போயிருந்தது. அத்தனைப் பெரிய பின்புலம் கொண்டவனல்ல அவன்.
சாதாரண குடும்பம். படிப்புத்தான் அவர்களின் சொத்து. பெண்ணின் நினைவுகளைக் கொஞ்சம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு இம்முறை இவன் படிப்பில் சிரத்தைக் காட்டினான். இரண்டாம் முறை அவன் தோற்றுப்போகவில்லை. மிகமிக அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவபீடத்திற்குத் தெரிவாகி இருந்தான். அத்தனைப் பேரும் அவனைக் கொண்டாடினார்கள். ஆனால் கொண்டாடவேண்டியவள் அவனைவிட்டுத் தூரப்போனதுதான் விதியின் விளையாட்டு. 
 
இருவர் மனதிலும் ஆசை இருந்தது. ஷியாம் ஓரளவு தன் எண்ணத்தை வெளிப்படையாகக் காட்டியிருந்தான். ஆனால் பெண் அவனை நிமிர்ந்தும் பார்த்ததில்லை. யூனிவர்ஸிட்டி படிப்பு என்று அவன் பிஸியாக இவள் உயர்தரப் படிப்பில் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தாள். ஷியாமளவு இல்லையென்றாலும் அஞ்சனாவும் படிப்பில் ஆர்வமான பெண்தான். காமர்ஸ் பிரிவில் இருந்தாள். முதல் முறையிலேயே அவளும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி இருந்தாள். படிப்பு படிப்பென்று ஓடிக்கொண்டிருந்தாலும் மனதின் ஓர் மூலையில் அந்தக் காதல் ஒளிந்து கொண்டுதான் இருந்தது.
 
வெளிப்படையாக அதைக்காட்டித் தன் படிப்பிற்கு வேட்டு வைத்துக்கொள்ளப் பெண் தயாரில்லை. அமைதிகாத்தாள். பேச வேண்டியவனும் பேசவில்லை.
பேசும் நிலைமையிலும் அவன் அப்போது இருக்கவில்லை. தங்களைவிடப் பொருளாதார ரீதியில் மேலேயிருந்த அவள் வீட்டில் பேச அவனுக்குத் தெம்பிருக்கவில்லை. 
 
இன்றைக்கு நடந்தவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது அஞ்சனாவிற்கு முட்டாள்தனமாக இருந்தது. ஆனால் அவர்களது அன்றைய வயதும் மனநிலையும் அவர்களை இப்படித்தான் வழிநடத்தியது. எல்லாம் சரியாக நடந்திருக்கும், இவன் எல்லாவற்றையும் மறந்து ஒரு கல்யாணம் பண்ணி வாழ்ந்திருந்தால். அங்கேதான் எல்லாம் பிழைத்துப் போனது. ஒரு பெருமூச்சோடு குளியலறைக்குள் நுழைந்தாள் பெண். நேற்றே அவள் வீட்டிலிருந்து அவளுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் வந்திருந்தன.
தன்னை அதிகம் சிரமப்படுத்திக் கொள்ளாமல் உடம்பு கழுவி மெல்லிய மஞ்சள் வண்ண ஷிஃபான் சேலையொன்றை‌ அணிந்து கொண்டாள். இவள் காலைக்கடன்களை முடித்து வெளியே வரவும் ட்யூட்டி நர்ஸ் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
 
இரவு பணியிலிருந்த அதே நர்ஸ். இன்னும் அவரது பணிநேரம் முடிவடையாததால் இப்போதும் அவளுக்கான இன்ஜெக்ஷனை எடுத்துக்கொண்டு அவரே வந்திருந்தார். டாக்டர் அதே ரூமில் இருப்பதைப் பார்த்து முதலில் அவர் திடுக்கிட்டாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. இவர்களது உறவில் ஏதோவொரு ஆழம் இருக்கின்றது என்று புரிந்தவர் போலத் தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். மருந்து மாத்திரைகளோடு அவளுக்கான காலைத் தேநீரும் வந்திருந்தது.
 
“சிஸ்டர்…”
 
“சொல்லுங்க மேடம்.”
 
“டாக்டருக்கும் டீ…”
 
“கேன்டீன்ல சொல்றேன், அவங்க அனுப்பி வெப்பாங்க.”
 
“தேன்க் யூ, எத்தனை மணிக்கு எந்திரிப்பாங்கன்னுத் தெரியாது, ஃப்ளாஸ்க்ல அனுப்பச் சொல்றீங்களா?” 
 
“சரி மேடம்.”
 
“உங்களை அடிக்கடித் தொல்லைப் பண்ணுறேனில்லை?” ஒருவித சங்கடத்தோடு கேட்டாள் பெண்.
 
“ம்ஹூம்… நீங்க சொல்லலைன்னாலும் நான் இதையெல்லாம் செய்வேன், ஏன்னா… அவர் எங்க டாக்டர்.” அந்த உரிமையான பேச்சில் அஞ்சனாவின் முகம் ஆச்சரியத்தைக் காட்டியது. நர்ஸ் மேலே பேசினார்.
 
“எங்க சொந்தத்துல ஒரு பொண்ணுக்குக் கல்யாணமாகி ரொம்ப நாளாக் குழந்தைங்க இல்லாம இருந்தா.”
 
“ஓ…”
 
“பார்க்காத வைத்தியமில்லை, வசதியானவங்கதான், வெளிநாட்டுக்குப் போகலாம்னு முடிவு பண்ணியிருந்தாங்க.”
 
“அப்புறம்?!”
 
“அப்பதான் டாக்டர் இந்த ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ணியிருந்தாங்க, ஒரு தடவைதான் க்ளினிக் வந்தா, அடுத்த மாசமே கர்ப்பமாகிட்டா.”
 
“நிஜமாவா?!” அஞ்சனா வாயைப் பிளந்தாள். அப்படியென்ன மாயம் செய்தான் இவன்?!
 
“ஆமா, அவ ப்ராப்ளம் என்னன்னு கண்டுப்புடிச்சு சின்னதா ஒரு ஆப்பரேஷன் பண்ணினாங்க, அவ்வளவுதான், இப்போ குழந்தையும் பொறந்திடுச்சு.”
 
“வாவ்!”
 
“ம்… கல்யாணம் பண்ணின கையோட இந்த டாக்டர்கிட்டப் போயிருந்தா இந்நேரம் எனக்கு அஞ்சு வயசுல ஒரு குழந்தை இருந்திருக்கும்னு சொல்லுவா.”
 
“ஆமால்லை!” சொல்லிவிட்டு ஷியாமை திரும்பிப் பார்த்தாள் அஞ்சனா. அவனைச் சுற்றி நடக்கும் எதுவும் அவனைப் பாதிக்காதது போல உலகை மறந்து தூங்கிக் கொண்டிருந்தான். இவள் பார்வையைப் பார்த்த நர்ஸின் முகத்தில் புன்சிரிப்பு.
 
“டாக்டர் உங்க சொந்தக்காரங்களா மேடம்?”
 
“ஆங்… இல்லையில்லை… ஒன்னாப் படிச்சவங்க.”
 
“ஓ… ரொம்ப நல்லவங்க மேடம்.” என்ன நினைத்தாளோ, சொன்னாள் நர்ஸ். அவள் வேலைகள் நிறைவுபெறவும் இவளுக்கு அறிவுறுத்த வேண்டிய ஒன்றிரண்டு விஷயங்களை ஞாபகப்படுத்திவிட்டு வெளியேறிவிட்டாள்.
 
“டீயை மறந்திடாதீங்க சிஸ்டர்.”
 
“சரி மேடம்.” நர்ஸ் சென்ற பிற்பாடு மிகவும் முக்கியமான ஒரு நபரைத் தன் அறையில் அன்றைக்குச் சந்தித்தாள் பெண். எதிர்பாராத சந்திப்பு அது. அஞ்சனா தனது டீயை குடித்து முடித்தபோது அவளது அறைக்குள் நுழைந்தார் சுந்தர்ராம். நுழைந்தவர் பார்த்ததெல்லாம் சோஃபாவில் உறங்கிக் கொண்டிருந்த தன் மகனையும் அவனை வைத்த கண் வாங்காமல் கட்டிலில் கால்நீட்டி அமர்ந்திருந்த பெண்ணையும்தான்.
 
“வாங்க…” திடுதிப்பென்று வந்து நின்ற மனிதரைப் பார்த்துப் பெண் திடுக்கிட்டுப் போனாள். ஆனால் அவளது கலக்கம் அவசியமே இல்லை என்பது போல அழகான புன்முறுவலோடு வந்து நின்றார் பெரியவர்.
 
“எப்பிடிம்மா இருக்கே? இப்போப் பரவாயில்லையா?” நான் ஷியாமின் தந்தை என்று அந்தப் புன்முறுவல் அழகாகச் சொன்னது. அதே சிரிப்பு!
 
“ம்… நல்லாருக்கேன் சார்.” அந்த ‘சார்’ரில் சுந்தர்ராமின் மனம் கொஞ்சம் வருந்தினாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
 
“இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்க ரொம்பக் கவனமா இருக்கணும்னு பெரியவங்கச் சொல்லுவாங்க, நல்லதை மட்டுந்தான் பார்க்கணும், கேட்கணும்… இதெல்லாம் சும்மா சொல்லலைம்மா, எல்லாத்துக்கும் காரணம் இருக்கு.” அவர் பேச்சை ஆமோதிப்பவள் போல பெண் எதுவும் பேசாமல் அமைதியாகப் புன்னகைத்தாள்.
 
“சாரிம்மா, தப்பு எங்கமேலதான்.”
 
“நான் அப்பிடியெல்லாம் நினைக்கலை சார்.”
 
“நீ நினைக்கலைன்னாலும் உண்மை அதுதானே? நேத்து கண்மணி பண்ணினது ரொம்பப் பெரிய தப்பு, அதுக்காக நான் உங்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேம்மா.”
 
“ஐயையோ! பரவாயில்லை சார்.”
 
“இல்லைம்மா, நேத்து ஏதாவது ஆகியிருந்தா எங்கப் புள்ளையே எங்களை மன்னிச்சிருக்கமாட்டான், ஆண்டவன் எல்லாரையும் காப்பாத்திட்டான்.” உணர்ந்து அவர் சொல்லத் தனக்குப் பக்கத்தில் இருந்த ஃபைலை எடுத்து அவரிடம் நீட்டினாள் பெண். காட்டவேண்டும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. ஆனால் இயல்பாக அவளுக்கு அப்படித் தோன்றியது. முதலில் லேசாக ஆச்சரியப்பட்டாலும் சுந்தர்ராம் சட்டென்று அவளருகே வந்து அந்த ஃபைலை வாங்கிக் கொண்டார். கண்மணி புலம்பித் தீர்த்த அவர்கள் வீட்டு வாரிசு. 
 
ஒரு தந்தையாக அந்த நொடி அவர் மனம் கனிந்துபோக அந்த ஃபைலை புரட்டினார் சுந்தர்ராம். உள்ளே சின்னச் சின்னதாக நிறையப் படங்கள். முழுதாக வளராத இளம் கரு. அவர்களின் பேரக்குழந்தை. யார் வயிற்றில் பிறந்தால் என்ன? இதுதானே உண்மை!
 
“ட்வின்ஸ்ஸாம், சீனியர் சொன்னாங்க.” இது அஞ்சனா. சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தார் பெரியவர். கண்கள் கலங்கிப் போயின. அவளருகே வந்தவர் அந்தச் சின்னப் பெண்ணின் தலையை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தார்.
 
“உன்னோட காத்திருப்பு வீண்போகலைம்மா! கடவுள் ரொம்பவே கருணைக் காட்டியிருக்கார்.” 
 
“ஆமா சார்.” அவளும் அதை மனதார ஏற்றுக்கொண்டாள்.
 
“இன்னும் எத்தனை நாளைக்கு ஹாஸ்பிடல்ல இருக்கணுமாம்? ஷியாம் என்ன சொல்றான்?”
 
“ஹாஸ்பிடல்லதான் இருக்கணும்னு இல்லை, பத்து நாள் கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கணும், ஆனா சீனியர் வீட்டுக்குப் போக விடமாட்டேங்கிறாங்க.”
 
“ஏன்?” கேட்ட பின்புதான் கேட்கக்கூடாத கேள்வி அது என்று அவருக்குப் புரிந்தது. 
 
“ஷியாம் சொன்னா‌ கரெக்ட்டாத்தான் இருக்கும்மா, அவன் சொல்றபடி கேளு.” மகனின் மனது என்னவென்று அப்பாவுக்குப் புரிந்தது. தேவையில்லாத பிரச்சனைகளிலிருந்து அவளைக் காப்பது மட்டும்தான் அவனது நோக்கமென்றால் அவன் நேற்றிரவு வீட்டுக்கு வந்திருப்பான். வீட்டுக்கு வர இஷ்டமில்லாவிட்டால் பக்கத்திலிருக்கும் ஏதாவது ஒரு நல்ல ஹோட்டலில் ரூம் போட்டிருக்கலாம். இப்படி சோஃபாவில் படுத்துத் தூங்க வேண்டிய அவசியம் அவனுக்கில்லை. இந்த அறையிலேயே இருக்கின்றான் என்றால்… இந்தப் பத்து நாட்களையும் அவளோடு அவன் கழிக்க விரும்புகிறான். 
 
இவர்கள் பேச்சைக் குலைத்தபடி கதவைத் திறந்து கொண்டு நர்ஸ் மீண்டும் உள்ளே வந்தாள். கையில் இப்போது ட்ரேயும் கப்புகளும் இருந்தன. சுந்தர்ராமை அவள் பார்த்தப் பார்வையில் ஒரு ஸ்னேகம் தெரிந்தது.
 
“இது டாக்டரோட அப்பா.” அறிமுகம் செய்து வைத்தாள் அஞ்சனா.
 
“தெரியும் மேடம், ரெண்டு பேருக்கும் சேர்த்துத்தான் டீ கொண்டு வந்தேன், டாக்டர் இன்னும் எந்திரிக்கலையா?” நர்ஸ் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவர்கள் மூவரது சத்தத்திலும் மெதுவாக அசைந்தான் ஷியாம்.
 
“குட்மார்னிங் ஷியாம்.” அப்பாவின் குரலை அங்கே எதிர்பார்க்காத மகன் படுத்தபடியே திரும்பிப் பார்த்தான்.
 
“ப்பா… நீங்களா?” தந்தையின் வருகையை உறுதிப்படுத்திக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான் மகன்.
 
“ஏம்மா, இதுதான் எம் புள்ளையை நீங்க கவனிச்சுக்கிற அழகா? சோஃபாவுல தூங்குறான்?” கேலி போல நர்ஸை கேட்டார் பெரியவர்.
 
“ஐயையோ சார்! டாக்டர் இந்த ரூம்லயே தங்குவாங்கன்னு எங்க யாருக்குமே தெரியாது, லதா மேடம்கிட்ட ஒரு வார்த்தைச் சொன்னா இன்னைக்கே இன்னொரு பெட் இங்க வந்திடும்.”
 
“அதைச் செய்யுங்க முதல்ல, உங்க டாக்டர் கொஞ்ச நாளைக்கு இந்த ரூம்லதான் தங்குவாரு.” அப்பாவின் வார்த்தைகளின் அர்த்தம் வியப்பைக் கொடுக்க ஷியாம் குளியலறைக்குள் போய்விட்டான். 
 
“நைட் ட்யூட்டியாம்மா?” 
 
“ஆமா சார்.” அங்கிருந்த ஊழியர்களுக்கு டாக்டரின் அப்பாவோடு நல்ல உறவு இருந்தது.
 
“எத்தனை மணிக்கு முடியுது ட்யூட்டி?”
 
“பத்து மணிக்கு சார்.” சொல்லியபடி இரண்டு கப்புகளில் டீயை ஊற்றினாள் அந்த நர்ஸ். ஷியாமும் பல் துலக்கி விட்டு வந்துவிட இருவரிடமும் டீயை நீட்டினாள்.
 
“இன்ஜெக்ஷன் போட்டாச்சா?” இது ஷியாம்.
 
“போட்டாச்சு டாக்டர்.”
 
“ப்ரெஷர் எப்பிடியிருக்கு?” 
 
“நார்மல் டாக்டர்.” நர்ஸ் நீட்டிய ஃபைலை வாங்கியவன் டீயை குடித்தபடி அதைப் பார்வையிட்டான். எல்லாம் திருப்திகரமாக இருந்தது. அத்தோடு நர்ஸ் கிளம்பிவிட்டாள். 
 
“என்னப்பா திடீர்னு?” 
 
“சும்மாதான் ஷியாமா, அஞ்சனாவை பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.” மகனின் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டுப் பெண்ணைப் பார்த்துப் புன்னகைத்தார் அப்பா. அஞ்சனாவின் நிலைமை இப்போது தர்மசங்கடமாக இருந்தது. 
 
“இன்னும் கொஞ்சம் ட்ரெஸ் அனுப்பி வெக்கட்டுமாப்பா?”
 
“ம்…” தலையை ஆட்டினான் மகன்.
 
“கேன்டீன் சாப்பாடு இங்க நல்லாருக்குமில்லை? இல்லைன்னாச் சொல்லு, வீட்டுல இருந்து ரெண்டு பேருக்கும் அனுப்புறேன்.”
 
“இல்லைப்பா, இங்கேயே நல்லாருக்கும்.”
 
“ம்… லதா மேடம் இப்போ ஃப்ரீயா இருப்பாங்களான்னுத் தெரியலை, வந்ததோட அவங்களையும் ஒரு எட்டுப் பார்த்துட்டுப் போயிடுறேன், நான் கிளம்பட்டுமாம்மா?” ஏதோ பலகாலம் பழகியவர் போல அஞ்சனாவிடம் பேசினார் மனிதர். பதில் சொல்லத் தெரியாமல் தலையை மட்டும் ஆட்டிவைத்தது பெண். 
 
“வர்றேன் ப்பா.” சுந்தர்ராம் கிளம்பிப் போய்விட்டார். பெண்ணைத் திரும்பிப் பார்த்தான் ஷியாம். மஞ்சள் நிறப் புடவையில் ஃப்ரெஷ்ஷாக இருந்தாள். அந்தக் காலை நேரத்து தரிசனத்தில் டாக்டரின் கண்கள் குளிர்ந்து போயின.
 
“சாரி அஞ்சு, அப்பா இப்பிடி வந்து நிற்பாங்கன்னு நான் எதிர்பார்க்கலை.”
 
“பரவாயில்லை சீனியர்.”
 
“ஏதாவது பேசினாரா? எதுக்கு வந்தாராம்?”
 
“சும்மாப் பார்த்துட்டுப் போக வந்தாங்களாம், நான் இங்க இருக்கேன்னு நீங்க சொன்னீங்களா?”
 
“ம்… நைட் பேசும்போது சொன்னேன்.” 
 
“இன்னைக்கு ட்யூட்டி இல்லையா?”
 
“மதியத்துக்கு மேலதான், உனக்கு எல்லாம் இங்க சௌகர்யமா இருக்கா?”
 
“ம்…”
 
“கவலைப்படாதே, நான் தூங்கிறதுக்கு மட்டுந்தான் இங்க வருவேன்.”
 
“ஐயையோ! அது பரவாயில்லை சீனியர், ஆனா சோஃபாவுல…” அதற்கு மேல் அவள் பேசவில்லை. அத்தனைக் கரிசனம் இருப்பவள் உன் படுக்கையில் கொஞ்சம் இடம் கொடேன் என்று கேட்க நினைத்த மனதை அடக்கிக் கொண்டான் ஷியாம். 
 
“பரவாயில்லை, அதான் இப்போ மேடமை சந்திக்கப் போறேன்னு போனாரில்லை? வேற எதுக்குன்னு நினைக்கிறே? இங்க நடக்கிறது அத்தனையையும் அவங்கக்கிட்ட ஒப்புவிக்கத்தான், இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இன்னொரு பெட் வந்திடும், அவங்க இவருக்கு மேல!” கடகடவெனச் சொல்லிவிட்டு அங்கிருந்த டேபிளில் வைத்திருந்த வாலட்டை எடுத்துக்கொண்டு ஷியாம் வெளியே போய்விட்டான். 
 
அஞ்சனா சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டாள். அவளைச் சுற்றியிருந்த உலகம் லேசாக அவளைப் பயமுறுத்தியது. ஷியாமின் எண்ணம் என்னவென்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. அதற்கு அபி முதற்கொண்டு அவளது அண்ணி, இதோ… இப்போது வந்துபோன ஷியாமின் அப்பா வரை அனைவரும் உடந்தை. ஆனால் இதில் சம்பந்தப்பட்டிருக்கும் தன்னுடைய மனநிலை என்ன? இவர்கள் எல்லாம் நினைப்பது போல இன்னொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
 
வாழ்ந்தாகிவிட்டது. பிடித்ததோ, பிடிக்கவில்லையோ… ஒரு மனிதனோடு வாழ்ந்தாகிவிட்டது. இதன்பிறகு இன்னொரு வாழ்க்கையை அவளால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அவள் மீது சுமத்தப்பட்ட பழிச்சொல்லையும் தாண்டி வாழ்க்கையில் தனக்கென ஒரு சொந்தம் வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். எல்லாப் பெண்களையும் போலத் தானும் அந்த இன்பமான அனுபவத்தை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள். ஆனால் அந்த ஆசைக்குள் ஷியாமும் வந்து இணைந்து கொள்வான் என்று அவள் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. அத்தோடு மட்டுமல்லாது ஒரு கைதேர்ந்த டாக்டராக அவனது சகாயம் அவளுக்கு இப்போது மிகவும் தேவைப்பட்டது. சுயநலமான சிந்தனைதான். ஆனால் அந்தச் சுயநலத்தைத் தடுக்க அவளால் இயலவில்லை. 
 
ஷியாமிடமிருந்து விலகி நிற்கவே அஞ்சனா ஆசைப்பட்டாள். ஒரு டாக்டர் என்பதைத் தாண்டி அவனை நெருங்க அவள் ஆசைப்படவில்லை. அவனை அவளிடம் நெருங்கவிடவும் அவள் பிரியப்படவில்லை. அது நியாயமுமில்லை. அப்படியொரு தவறைத் தான் செய்தால் அதைவிட ஷியாமிற்கு அவள் செய்யும் அநியாயம் வேறொன்றுமில்லை. ஆண்மையின் உறைவிடமாக இருக்கும் அவனெங்கே? வாழ்ந்து முடித்துத் தூக்கியெறியப்பட்ட நானெங்கே? சிந்தனையின் வசம் இருந்தவள் கதவு திறக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். ஷியாம்தான் உள்ளே வந்துகொண்டிருந்தான். இவளருகே வந்தவன் கையிலிருந்ததை அவளிடம் நீட்டினான்.
 
“என்னது?”
 
“பூ.”
 
“எதுக்கு சீனியர்?!”
 
“பூ எதுக்கும்மா வாங்குவாங்க? தலையில வெச்சுக்கத்தான்.”
 
“நானா?!” அஞ்சனாவிற்கு ஒன்றுமேப் புரியவில்லை.
 
“அன்னைக்கு அபி வீட்டுக்கு வந்தப்போ தலை நிறைய வெச்சிருந்தே, ரொம்ப அழகா இருந்துது, இப்ப இல்லையா… பார்க்க ஒரு மாதிரியா இருந்துச்சு, அதான் வாங்கிட்டு வந்தேன்.”
 
“ஹாஸ்பிடல்ல உட்கார்ந்துக்கிட்டுப் பூ வெச்சுக்கிற பொண்ணு நானாத்தான் இருப்பேன்.”
 
“ஏன்? ஹாஸ்பிடல்ல பூ வெச்சுக்கக் கூடாதுன்னு சட்டம் ஏதும் இருக்கா என்ன?” 
 
“இல்லைதான்… ஆனாலும்…” தயங்கியபடி அவன் நீட்டியதை வாங்கிக் கொண்டாள்.
 
“எனக்குத் தோணிச்சு, வாங்கிட்டு வந்தேன், புடிச்சிருந்தா வை, இல்லைன்னா அங்க இருக்கிற குப்பைத் தொட்டியில போடு.” கோபமாகச் சொல்லிவிட்டு ஷியாம் போய்விட்டான். சற்று நேரத்திலெல்லாம் அந்தப் பூ அவள் தலையை அலங்கரித்திருந்தது.